பெருநாள் சல்லி…

file

 

பெருநாள் தொழுகை அப்போதுதான் முடிஞ்சிருந்தது… மெலிதான தூறல் மழை பெருநாளை ரம்மியத்தோடு ஆரம்பம் செய்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குச் சற்று தொலைவிலிருக்கும் மைதானத்தில் ஏற்கனவே தொழுகையும் பெருநாள் ஃகுத்பாவும் நிறைவுற்றுவிட்டது. பள்ளிவாசலில் இப்போதுதான் முடிந்து மக்கள் வீதிகளிலே கோலாகலத்தோடு பரவிக்கொண்டிருந்தார்கள்.

வீதியிலே மழைத் துளிகளுக்கிடையே நடந்துகொண்டே பார்வையைச் செலுத்த… பர்ஹான் நானாவின் சின்னப் பிள்ளைகள் பஸ்மியும் பஸ்லியும் விரல் கோர்த்து வீடு சென்றுகொண்டிருந்தனர்… மௌலானா ஊட்டுக்கு முன்னால் அஹ்மதும் இர்பானும் டீஷேர்ட்டும் டெனிமும் கண்ணைப் பறிக்க தோள் மேல் கைபோட்டு பேசிக் கொண்டிருந்தனர்… வயது போய்த் திருமணம் செய்த நாஸிக் நானா குழந்தைகளின்றி, தன்னோடு பள்ளிக்குக் கூட்டிவந்திருந்த தம்பியின் மூன்றாவது பிள்ளையோடு நடந்துகொண்டிருந்தார்…

பெருநாட்களில் சிறுவர்களது மகிழ்ச்சியை அவர்களது புத்தாடைகள் தீர்மானித்துக் கொண்டிருந்தன. இளைஞர்கள் தம் மகிழ்ச்சியை சிறிது காலமாகவே கொழும்பிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொழிலுக்கெனச் சிதறியிருக்கும் பால்ய கால நட்புக்களின் மீள் சந்திப்பால் பெற்றுக்கொண்டனர். பெரியவர்களுக்கு சிறியவர்களின் குதூகலமே மகிழ்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.

வீட்டை அடையவும் இல்லை… இன்னும் சில பத்து அடிகள் தான்… சின்னஞ் சிறுசுகள் வீதிகளில் குறுக்கும் மறுக்குமாக மாறி மாறிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
அஷ்பாக், ஆதில், இக்ராம், பாசித், யூசுப், அப்ரா, அம்னா, அஸ்ரா, இஷ்கா, ரீமா என ஏகப்பட்ட பெயர்கள் கொண்ட எம் வீடுகளைச் சூழவுமுள்ள முடுக்குகள் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிற சிறார் படையணியினர் அனைவரும் இன்று அண்டை ஆட்சிப் பிரதேசங்களுக்கும் படையெடுத்திருக்கிறார்கள். ஏதோவொரு ஊகத்துடன் எதிர்கால சமுதாயச் சிற்பிகளாக எடைபோட்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் அடையாளம் காண முயற்சித்தேன்.

அங்கே தூரத்தில் ரிபாதும் ரிதானும் புத்தாடைகள் தந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியவர்களாக வீதி வலம் தொடங்கியிருந்தனர்…

அந்த இரண்டு சிறுவர்களும் மிகுந்த கெட்டிக்காரர்கள்… திறமையும் கெட்டித்தனமும் படிப்பில் மட்டுமல்ல என்ற கோட்பாட்டை நம்பி வளர்க்கின்ற ஒரு உம்மா அந்த ரெண்டு பேருக்கும் கிடைத்தது பாக்கியம்தான்… வெளிநாட்டுக்குப் போயும் ஒழுங்காகப் பணம் அனுப்பக் கையாலாகாத கணவன் வாய்த்துவிட்டது அவர்களது உம்மாவுக்கு… பல குடும்பங்களின் கண் குளிர்ச்சி உம்மாமாரின் கண்ணீரிலே தான் தங்கியுள்ளது என்பதை ரிபாத்-ரிதானின் குடும்பத்தைப் பார்த்து ஒன்றுக்குப் பல தடவைகள் ஊர்ஜிதம் செய்துகொள்ளலாம்.
* * *
எங்கள் ஊரிலெல்லாம் பெருநாளாயின் சிறுசுகளுக்கு இரட்டைக் குதூகலம்… பெருநாளில் புத்தாடை தரும் இன்பம் ஒன்று… அடுத்து ஊர் முழுக்க சுற்றியலைந்து சேமிக்கும் பெருநாள் சல்லி தரும் ஒரு நாள் பணக்காரன் பேரானந்தம் இரண்டு…

ஊரிலிருக்கும் பெற்றோர் எல்லோருமே அன்று தம் பிள்ளைகளை பெருநாள் சல்லி சேர்ப்பதற்காக அனுமதி கொடுத்துவிடுவர். வீட்டிலுள்ளோரும் சின்னஞ் சிறுவர்களும் சிறுமியரும் வண்ண ஆடைகளில் சுற்றுப் புறங்களிலிருந்தெல்லாம் தம் வீட்டுக்கு வரும் போது பெருநாள் சல்லி கொடுத்து பேருவகை கொள்வர்.

சிந்தித்துப் பார்க்க, எவருமே பெருநாள் சல்லி என்ற எங்களது பெருநாள் கலாசாரத்தில் பித்அத் என்ற பேராயுதம் கொண்டு நசுக்காமலிருந்தது மனதுக்கு நிம்மதியைத் தந்தது. ஒரு சில ஒற்றைப் புள்ளிகள் நம் கலாசாரத்தை எவ்வித மாற்றீடுகளுமின்றி கொத்திக் கொண்டு போவதை எண்ணி எத்தனை முறை ஆவேசப்பட வேண்டியிருக்கிறது.

நாமெல்லாம் சின்னப் பிள்ளைகளாக இருந்து, பெருநாள் சல்லி சேர்த்துத் திரியும் போது இரண்டு ஏரியாவையாவது சுத்தி முடிச்சிடுவோம். இடைக்கிடையே அகப்படும் வெகு திறமையான கூட்டாளிமார் அஞ்சாறு ஏரியாவை சுத்தி முடிச்சிட்டதா சொன்னதும் பெருமூச்சுவிடுவோம்… அதோடு மனதுக்குள்ளால் எப்படியும் இவன் ஐநூறு ருவா சல்லியாவது சேர்த்திருப்பான் எண்ட மனக் கணக்கோட பொறாமையையும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

அங்கும் ஒரு சவால்; சிலபோது இருவது ருவா, அம்பது ருவா தாள்ச் சல்லிகளை எடுத்துக் கொண்டு நாணயக் குற்றிகளை மாற்றிக் கேட்டு வரும் சின்ன வயசு ரவுடி நானாமார் மாற்றிக் கொடுத்த சல்லிகளையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவர். இது போன்ற வழிப்பறிகளிலிருந்து பாதுகாக்கவே பெரும் கவனத்தை அன்றைய ஒருநாள் செல்வத்தின் மீது ஒன்றுகுவிக்க வேண்டி ஏற்படும். இப்போதும் கூட அத்தகைய முன்னாள் ரவுடி நானாமார், தம்மால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் ஒருவித தார்மீக வெட்கத்தால் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவதுண்டு.

அப்போதெல்லாம் அஞ்சாம் ஆண்டுக்குப் பிறகு… ஒரு சில போது மட்டும் ஆறாம் ஆண்டு வரைக்கும் ஓயாது பெருநாள் சல்லி சேர்க்கக் கிளம்பி விடுவது வழக்கம். அதற்கு மேல் பெருநாள் சல்லி சேர்க்கப் போனால் கூட்டாளிமாரின் கேலிகள்தான்… அந்த நோண்டிக்காகவே பெருநாள் சல்லி சேர்ப்பதை அதோடு நிறுத்திவிடுவோம். ஆனாலும் சொந்தக்காரர்களுக்குள்ளே யாருக்கும் தெரியாது முடியுமட்டும் சேர்த்துக் கலாய்ப்போம்.

வீட்டை நுழையப் பார்க்க… ரிபாத்-ரிதான் பெருநாள்க் களிப்போடு எம் வீட்டுக்குப் பெருநாள்ச் சல்லிக்காய்ப் பிரவேசம் செய்தனர். அழகான புத்தாடைகள் அவர்களை இன்னும் ஹேண்ட்சம்மாகக் காட்டிக் கொண்டிருந்தது. புத்தாடைகள் உடம்பிலே மின்னிக் கொண்டிருந்தாலும், அவர்கள் அணிந்திருந்த பாதணிகள் குறைந்தது இரு வருடங்களுக்கு முன்பு தான் புதிதாக இருந்திருக்க வேண்டும்… அவர்களது உம்மா எது வரைக்கும் தான் சுமப்பது..!

“பெருநாள் சல்லீ… பெருநாள்ச்சல்லீ…” இது ஈதுல் ஃபித்ர் ஈகைப் பெருநாளில் எங்களது ஊர் முழுக்க சின்னவர்களின் ரீங்காரம். இப்போது எங்கள் வீட்டில் ரிபாதும் ரிதானும்.. நான் கொஞ்சம் கதைக்கப் பார்க்க “பெருநாள் சல்லி தாங்க.. நானா… லேட்டாவுது… நெறய எடத்துக்குப் போவோணம்வா…” என பிஸியாகிவிட்டனர். நானும் புன்னகையோடு அஞ்சி ருவா காசி ரெண்ட எடுத்து ரெண்டு பேருக்கும் கொடுத்தேன்… சிட்டாய்ப் பறந்தனர் அடுத்த வீட்டை நோக்கி…

முன்பெல்லாம்… பெரும்பாலும் ஒரு ருவா தான் எங்களுக்கு பெருநாள் சல்லி கிடைக்கும். ஏதாவது ஒரு வீட்டில் ரெண்டு ருவா கெடச்சாலும் அது பெரிய விஷயம் தான். அத பலரிடத்திலும் சொல்லிக்கொள்வோம். அஞ்சு ருவா பெருநாள் சல்லி கொடுக்காங்க என கேள்விப்பட்டா… எப்படிப்பட்ட தூரமாயினும் போய் எடுத்துக் கொள்வோம். சில வீடுகள்ல அம்பது சதக் காசி கூட மாத்தி வெச்சி ரொம்ப சிக்கனமா குடுப்பாங்க… அந்த வீட்டில் எவனாவது சம வயது பொடியன் இருந்தால் அன்டெக்கி செத்தான். அம்பது சதம் கெடச்ச கதய சொல்லிச் சொல்லியே கீறிக் கிழிச்சிடுவாங்க அவன… இன்டெக்கி அம்பது சத காசிட நிலைமை ஒரு ருவா காசிக்கி வந்துட்டு…
* * *
வீட்டுக்குள் முஸ்லிம் சேவையின் பெருநாள் விஷேட ஒலிபரப்புக்கள் இரு தசாப்தம் கடந்து நிற்கும் வானொலிப் பெட்டியின் கரகரப்பு ஓசையினுடே செவிப் பறைகளில் வந்து மோதியது… ஒரு பழம்பெரும் முஸ்லிம் ஊரிலிருந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் நேரலை செய்துகொண்டிருந்தார். ‘எமது ஊரின் பெருநாள் விஷேட கலாசார அம்சங்கள் பொருந்தியது…’ அவர் பேசத் தொடங்கினார். ‘முன்னரெல்லாம் சிறுவர்கள் வீதியிலே களிப்புடன் உறவினர் வீடுகளுக்குச் செல்வர்… அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் வழக்கமும்கூட இருந்தது…’

‘முன்பு நாங்கள் ஊர்க் கோடியிலிருந்து பள்ளிவாசல் வரை பவனியாக வருவோம்… தக்பீர் முழக்கம் வானைப் பிளக்கும்… சிங்கள சகோதரர்களும் எம்மோடு நட்புடன் நடந்துகொள்வர்… நாங்கள் பலகாரங்களையும் பெருநாள் விஷேட சமையல்களையும் செய்து அன்பளிப்போம்…’

‘முன்னர் எங்களது ஊரிலே பெருநாள் மறுதினம் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்வர்… பெரும் கோலாகலமாக இருக்கும்… எங்கள் இளைஞர்கள் அந்த விடயங்களை கனகச்சிதமாக மேற்கொள்வர்.’
என பேசிக் கொண்டே இருந்தார். அவரது பேச்சு முழுவதும் இறந்த காலத்திலும் ‘முன்னர்-முன்பு’ போன்ற அடைமொழிகள் சேர்த்தும் பேசிக் கொண்டிருந்தார்… அவையெல்லாம் இப்போது எங்கு சென்றுவிட்டன எனக் கேட்கத் தோன்றியது மனத்திற்கு… எல்லாம் முடிந்துவிட்டதா? ஒருவேளை ஒலிபரப்பாளர் அக்கேள்வியைக் கேட்டுவிட்டிருந்தால் பிரபல எழுத்தாளர் பாடு படு திண்டாட்டமாய்ப் போயிருக்கும்.

‘…உலகமயம் ஒருபுறம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்க மறுபுறம் தூய்மைவாதப் பேச்சுக்கள் நம் கலாசாரத்தை சில ஒற்றை வார்த்தைகளால் பிடுங்கிக் கொண்டிருப்பதை நிவாரணங்களையும் இலவசங்களையும் நுகர்கின்ற நம் பாமர ஜனங்கள் எப்போது உணரப் போகிறார்கள்…!’

ஏதோ உலகளவிலான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையிலே… வானொலிச் சப்தத்தினதும் மேலால் முனீரா தாத்தாவின் குரலோசை கேட்கத் தொடங்கியது. அவர் எங்களுக்குத் தெரியுமே ரிபாத்-ரிதான்…. அந்த ரெண்டு பேர்டயும் உம்மாதான்.

காதுகொடுத்துக் கேட்க… உம்மாவுடன் வழமையான ஃப்ரெண்ட்ஷிப் பாணியிலே கதைத்துக் கொண்டிருந்தார்… ஊரின் ஒரு மூலை முடுக்கின் தொங்கலில் யாரும் போக வழியறியா முடுக்குகள் பலதைக் கடந்து செல்லவேண்டிய இடத்திலே… ஆனால் எங்கள் வீட்டின் பின்புறம் சற்றுத் தள்ளித் தான் இருக்கிறது அவர்கள் வீடு. பள்ளிவாசலுக்கு சந்தா கட்டிய போதும் வருடாந்தம் அரபு நாட்டிலிருந்து இலவசமாகக் கிடைக்கும் பேரீச்சம் பழப் பைக்கற்றைக் கூட அவட வீட்டுக்குக் கொடுக்க எப்படியும் மறந்து விடுவார்கள். உம்மா இது அறிந்து ஒவ்வொரு முறையும் பள்ளி நிர்வாகத்திடம் என்னைச் சொல்லிப் பேசி இந்த இலவசங்களைப் பெற்றுத் தருவதால் அவவுக்கு உம்மாவோட கொஞ்சம் கூடவே ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது.

முனீரா தாத்தாவும் ஏதோ பெருநாள் சல்லி விஷயம் ஒண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். சந்து பொந்துகளெல்லாம் சிறுவர்-சிறுமியர் பட்டாளங்கள் பெருநாள் சல்லி சேர்த்துத் திரிந்து முனீரா தாத்தாவின் வீட்டுக்கும் வர எந்த ஏற்பாடும் இல்லாமல் வரும் சிறுசுகளைத் திருப்பி அனுப்பவும் மனமில்லாமல் கையில் பணத்துக்கும் வழியில்லாமல்… பத்து கிலோ அரிசிப் பைக்கற்றைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

உம்மாவிடம் வழமையான அதிக உரிமையொடு “தாத்தா… இந்த அரிசிப் பக்கட்ட வெச்சிக்கொண்டு எனக்கு ஐநூறுவா ஒன்டு தாங்களே… பாவம் புள்ளயோல் ஊட்டுக்கு பெருநாள் சல்லி எடுக்க வந்துட்டு திரும்பி போவுதுவோல்” எனக் கேட்டுவைக்க…

“இதெனத்த புடிச்சீக்கி ஒனக்கு… கேட்டா கைமாத்துக்கு ஐநூறுவா தருவன் தானே… அரிசிப் பக்கெட்ட நீ வெச்சிக்கோ…” உம்மாவும் உரிமையும் அன்பும் கலந்து பதிலளித்தார்.

முனீரா தாத்தா, “இல்ல தாத்தா… ஃபித்ரா அரிசி எஙட ஊட்டுல நெறஞ்சிட்டு… வெக்கியத்துக்கு எடமும் இல்ல. இபிடி நாலு பேருக்குக் குடுத்தா ஊட்டுல எடமும் மிஞ்சும்… புள்ளையோலுக்கு பெருநாள் சல்லி குடுக்கோம் ஏலும்…” தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“அரிசி மட்டும் ஈந்து வேல ஈக்கா..? கறீம் வாங்கோணமே… அதுதான் நேரத்தோடயே ஸக்கியாத்தாக்கு பதினஞ்சி கிலோவ குடுத்து எழ்நூத்தம்பவ்ருவா எடுத்துட்டன்… அதுலதான் பகல் சாப்பாட்டுக்கு தேவயானத்த வாங்கின. பெருநாள் அன்டெக்காவது நாக்குக்கு உருசயா புள்ளயோல் தின்னட்டும் எண்டுதான்…”

உம்மா வாய் பொத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்…

“புள்ளயோலுக்கும் எனக்கும் வாங்கின உடுப்புட கடன் சல்லிய கூட அரிச வித்துதான் குடுக்க வேண்டீக்கிது… நானும் அம்பது நூறு கிலோ அரிச ஊட்டுல வெச்சிட்டீந்து என்னத்த செய்ய…”
ஸகாதுல் ஃபித்ரின் நோக்கத்தையே அசைத்துக் கேள்வி கேட்கும் தத்துவங்கள் பல அந்த பாமர தாத்தாவின் பேச்சில் பொதிந்திருந்தன…

முற்பகல் பத்து மணி பிந்திக் கொண்டிருக்க பியாக்கியோ டீசல் ஆட்டோவின் ஹோர்ண் சப்தம் காதைத் துளைத்தது… முஸ்தபா கேட்டரிங்கின் நோன்புப் பெருநாள் விஷேட புரியாணியின் எங்கள் வீட்டு ஓர்டரை இறக்கிக் கொண்டிருந்தார்கள்… ரெண்டாயிரத்து ஐநூறுவா கோழியெறச்சி புரியாணி ஓர்டரோட அதுல வார ஸஹனும் கோப்பையும் இலவசம்.

வீட்டின் முன்னால் சிறுமியர் சிலர் வண்ண ஆடைகளோடு முகாமிட்டிருந்தனர்… “பெருநாள் சல்லீ…” எஞ்சியிருக்கும் அந்த மண்வாசனைச் சொற்களால் உள்ளம் குளிர்கின்றது.
ஆக்கம்: எம்.எஸ்.எம். ஸியாப், வெலிகம.
விடிவெள்ளி ஆசிரியர், நிர்வாகம் மற்றும் அந்த ஓவியத்தை வரைந்த சகோதரருக்கு நன்றிகள்.

Advertisements

நம் கால ரமழான் காட்சிகள்

 

இரவுகள் விழாக்கோலம் பூண்டுவிட்டன.
சமையலறைகளும் நிரம்பிவழிகின்றன.
மூன்று வேளை சாப்பிடும் நாட்களிலும்
நான்கு பாத்திரங்களே இருக்கும்
என் வீட்டு சமையலறையில்,
இருவேளைக்கு மட்டுமே
பதிநான்கு பாத்திரங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.

ரமழானென்றும் நோன்பென்றும்
கூகுளில் தேடல் செய்தபோதெல்லாம்
உணவுப் பாத்திரங்களே
திரும்பத் திரும்ப வந்து
என்னை விரக்தியடையச் செய்துவிட்டன.

மின் கட்டணம் அதிகமாய்
வருமென்று  நச்சரிப்புக்களும் தொடங்கிவிட்டன.
சமையலறையில் இரண்டு ரைஸ்குக்கர்கள் எரிகின்றன
வயிறை முட்டச்செய்வதற்காய்.
பள்ளிவாசல்களும் கஞ்சியை வாளிவாளியாய்
ஊற்றுவதனையும் மறந்தே விட்டிருக்கிறோம்

ஒவ்வொரு குட்டிக்கடைக்காரனும்
ரமழான் எனக்குரியது நான் சம்பாதித்துவிட்டேன்
பெருநாள் இனி களைகட்டும்
எனக் கூக்குரலிடுகிறான்…

எட்டுகளும் இருபதுகளும் பேசுவோர்
இல்லாமல் போனது மட்டும் நெஞ்சைக் குளிர்விக்கிறது.

தென்னாபிரிக்காவில் முஸ்லிம்கள்

maxresdefault

தென்னாபிரிக்கக் குடியரசு

 

தலை நகரங்கள்: Pretoria (executive), Bloemfontein (judicial), Cape Town (legislative)

பெரிய நகரம்: Johannesburg

சனத்தொகை: 54,002,000[4] (25th) – 2014 கணக்கெடுப்பு

நாட்டின் பரப்பளவு: 1,221,037 km2 (25th)

இன க்குழுமங்கள்: 79.2% Black African, 8.9% Coloured, 8.9% White, 2.5% Indian or Asian

மொழிகள்: 11 மொழிகள்

சமய நம்பிக்கைகள்: Christians 79.8%, Muslims 1.5% , Hindus 1.2%, Traditional African religion 0.3%, Judaism 0.2%, சமய நம்பிக்கையற்றோர் 15.1%

நாணயம்: South African Rand (ZAR)

பொருளாதாரம்: சுற்றுலா, விவசாயம், கனிய வளம்

ஆட்சி முறைமை: Unitary Constitutional Parliamentary Republic

பாராளுமன்றம்: Upper House: National Council of Provinces / Lower House: National Assembly

அரசுத் தலைவர் ஜனாதிபதி: Jacob Zuma

 

மௌலானா இல்யாஸ்(ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக தப்லீக் ஜமாஅத் சகோதர்ர்கள் அடிக்கடி மேற்கோள்காட்டும் விடயமொன்று என்னை அதிகம் ஈர்ப்பதுண்டு. அதாவது தஃவா தழைத்தோங்கி வளரக் கூடிய இரண்டு தேசங்களாக அன்னவர்கள் தென்னாபிரிக்காவையும் இலங்கையையும் அடையாளப்படுத்துவார்களாம். அன்னவர்கள் குறிப்பிட்டது தப்லீக் தஃவாவைத்தான் என்பது வெளிப்படை… சொன்னது போலவே இரண்டு தேசங்களிலும் தப்லீக் ஜமாஅத்தின் தஃவா பாரியளவில் வீச்சுக் கண்டுள்ளது. ஆனால் அந்த மேற்கத்தேய, ஆங்கிலம் பேசும் சூழல் கொண்ட அத்தேசத்தில் கண்ட வளர்ச்சி இங்கிலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது.

தலைப்பை விட்டு வெளியே போகாமல் மீளவும் தென்னாபிரிக்காவுக்கு வருவோம். தென்னாபிரிக்கா அழகான நாடு… பெயரைப் போலவே ஆபிரிக்காவின் தென் கரையோரத்திலே நன்னம்பிக்கை முனையில் நம்பிக்கை தரும் தேசமாக இருக்கிறது.

தென்னாபிரிக்காவிலே சில வித்தியாசமான அம்சங்களாக அடையாளம் செய்யக் கூடிய அம்சங்கள் உள… பொது அறிவுப் போட்டிகளில் தென்னாபிரிக்காவின் தலைநகர் எதுவெனக் கேட்டால் பட்டெனப் பதிலளித்திட முடியாது. காரணம் மூன்று தலைநகர்களைப் பெற்ற பாக்கிய நாடு அது. அதுபற்றி நிலைத் தகவலில் தெளிவாய்ச் சொல்லி உள்ளேன்.

அடுத்து தென்னாபிரிக்காவைச் சூழவுள்ள எல்லைகளாக மேற்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் அத்திலாந்திக் பெருங்கடலும் இந்து மா கடலும் வடக்கில் பொட்ஸுவானா, ஸிம்பாப்வே, மொஸாம்பிக்கும் உள்ளன. உலக நாடுகளுக்கு மாற்றாய் தென் ஆபிரிக்க தேசத்தின் உட்பகுதியில் லெசோத்தோவும் சுவாஸிலாந்தும் உள்ளன. அதாவது இந்நாடுகளின் முழு எல்லையுமே தென்னாபிரிக்கா தான். இந்நாடுகளைச் சூழ தென்னாபிரிக்காவே அமைந்திருக்கின்றது.

தென்னாபிரிக்காவில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஆனால் அறிமுகம் தேவையற்ற அடுத்த அதிசயமாக நான் கிரிக்கெட் வீரர் ஹாஷிம் அம்லாவைத் தான் சொல்வேன்…

 

தென்னாபிரிக்காவுக்கு இஸ்லாம் எப்படிச் சென்றது?

வரலாற்றுத் தகவல்கள் படி மூன்று வழிகளில் தென்னாபிரிக்காவுக்குள் இஸ்லாம் காலடியெடுத்து வைத்திருக்கிறது. முதலில் அடிமைகள் வியாபார வழியாகவும் அரசியல் கைதிகள் நாடுகடத்தல்கள் வழியாகவும் (இவர்களில் இந்தோனேசியாவின் அரசியல் கைதிகளே பிரதானமானவர்கள்) குடிப்பெயர்வுகள் நிகழ்ந்தன. இவை கி.வ. 1652-1800 காலங்களின் நிகழ்வுகளாகும். பின் 1800 கள் தாண்டி இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர். அவர்களில் 7-10% முச்லிம்களாக இருந்தனர். இது இரண்டாம் கட்டமாகும்.

மூன்றாவதாக இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளிலிருந்து வியாபார நோக்கில் வந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களின் இன்றைய எண்ணிக்கை 75,000-100,000 இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இவர்கள் முழு தென்னாபிரிக்காவிலும் மதிப்பும் செல்வாக்கும் கொண்டவர்களாக்க் கருதப்படுகின்றனர். ஹாஷிம் அம்லாவும் குஜராத் பின்னணி கொண்டவர்தான். அங்குள்ள முஸ்லிம்களில் அனைவரும் ஸுன்னிக்களே… எனினும் அஹ்மதிக்களின் தீவிர பிரசாரத்துக்குப் பலியாகி மதம் மாறிய சிறு தொகைக் கூட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கேப் டவுன் நகரை மையப்படுத்தி நிகழும் மதமாற்றமாகும்.

இவர்களில் குறிப்பாக இந்தோனேசியாவின் அரசியல் கைதிகளைப் பொறுத்தமட்டில் அன்றைய டச்சு அரசுக்கெதிராக ஜிஹாத் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்களாவர்.

இதற்குமப்பால் நான்காவது வழியொன்றூடாகவும் இஸ்லாம் அங்கு பிரசன்னமாகிக் கொண்டிருக்கிறதென்று துணிந்து கூற முடியும். அங்கு பல கிறிஸ்தவ சமயத்தவர்கள் தொடர்ந்தும் இஸ்லாமைக் கற்று இஸ்லாமைத் தழுவுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் மற்ற நாடுகளை விடவும் காரணம் தான் வித்தியாசமானது. தென்னாபிரிக்காதான் உலகிலேயே அதிகம் எயிட்ஸ் நோயாளர்கள் கொண்ட நாடு. எனவே அவர்களுக்குக் கிறிஸ்தவம் தராத பாலியல் கட்டுப்பாட்டையும் மதுவிலக்கையும் இஸ்லாமிலே கண்டு இஸ்லாமை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். இவர்களுள் அநேகர் பெண்களும் இளைஞர்களுமே… தென்னாபிரிக்காவிலும் வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம்தான் உள்ளது.

 

அரசியல்

தென் ஆபிரிக்காவில் முதல் ஜனநாயகபூர்வமான தேர்தல் நடைபெற்ற போதிலிருந்தே ஆபிரிக்க முஸ்லிம் கட்சி, இஸ்லாமியக் கட்சி ஆகியன செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுபடுத்த முடியாத வளர்ச்சி குன்றிய நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இதுவரைக்கும் தென் ஆபிரிக்க முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதைக் காணலாம்.

அரசியல் முக்கிய புள்ளிகளுள் , Ebrahim Rasool, Imam Hassan Solomon ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவை தவிர இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

பொதுவிலே பிரச்சினைகள் குறைவான போதிலும் தொகையில் சிறுபான்மையான அங்குள்ள முஸ்லிம்கள் இன்னும் ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் மயப்படவில்லை என்பது பெரும் குறையாகும்.

 

சமூக நிறுவனங்கள்

பல சமூக நிறுவனங்கள் தென் ஆபிரிக்க முஸ்லிம்களைப் பிரதிநித்துவப்படுத்தி வேலை செய்கின்றன. அவற்றுள் Muslim Judicial Council குறிப்பிட்த்தக்கது. இதுவே தென்னாபிரிக்காவின் ஹலால் உற்பத்திகளையும் மேற்பார்வை செய்கின்றது. தென்னாபிரிக்கா உலகின் முன்னணி ஹலால் உற்பத்தியாளர் என்பது கூடுதல் தகவல்.

iiFRi [Islamic Interfaith Research Institute] என்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இது இனங்களுக்கு, மதங்களுக்கிடையில் உறவுப்பாலத்தைக் கட்டியெழுப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதோடு இஸ்லாம் குறித்த அறிமுகம் செய்வதையும் தன் தலையாய பணியாகச் செய்துவருகின்றது.

OODISA [Organizing and Orchestrating Da’wah in Southern Africa] என்ற நிறுவனம் தென் ஆபிரிக்கா மற்றும் சூழவுள்ள நாடுகளின் இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்துவருகின்றது.

கல்வி

பெருமளவு முஸ்லிம்கள் அரச கல்விக்கூடங்களையே நம்பியிருக்கின்றனர். சிறிய தொகையினர் வசதி வாய்ப்புக்காகக் கிறிஸ்தவ தனியார்க் கல்விக் கூடங்களை நாடுவோரும் உண்டு.

இலங்கை மத்ரஸா அமைப்பிலான இஸ்லாமியக் கல்வியை வழங்கக் கூடிய பாடசாலைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் தேவ்பந்த் பாரம்பரியத்தைத் தழுவியதாகும். இவற்றுள் சில அரச அங்கீகாரம் பெற்ற கலைத்திட்டத்துடன் கலைமானிப் பட்டப்படிப்பை வழங்கும் நிறுவன்ங்களாகவும் உள்ளன. அவற்றுள் குறிப்பிட்த்தக்க நிறுவனங்களாக Dar al-Ulum Zakariyyah, Dar al-Ulum Azaadville, Dar al-Ulum Pretoria. Dar al-Ulum Cape Town CTIEC. Dar al-Ulum Benoni, Dar al-Ulum Newcastle, Dar al-Ulum Springs, Dar al-Ulum Isipingo, Dar al-Ulum Camperdown, Dar al-Ulum Strand என்பவற்றைக் கூறலாம். இவற்றில் உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து சுமார் 40 நாடுகளின் மாணாவர்கள் கற்பதாகவும் கூறப்படுகிறது.

தற்கால இஸ்லாமிய உலக இளைஞர்களிடையே பிரபலமாக உள்ள மொடெல்களில் கிரிக்கெட் வீரர் ஹாஷிம் அம்லா மற்றும் பாடகர்களான ஸைன் பிகா, ராஷித் பிகா சகோதரர்கள் தென்னாபிரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள முஸ்லிம்கள்…

3463b56bf3044d42b42345dc1193a4cf_18

நேபாள சமஷ்டி ஜனநாயகக் குடியரசு

தலைநகரம்: காத்மண்டு

சனத்தொகை: 26,494,504 (சது.கி.மீட்டருக்கு 180 பேர்)

இனக்குழுமங்கள்: Chhettri 15.5%, Brahman-Hill 12.5%, Magar 7%, Tharu 6.6%, Tamang 5.5%, Newar 5.4%, Muslim 4.2%, Kami 3.9%, Yadav 3.9%

மொழிகள்: Nepali 47.8%, Maithali 12.1%, Bhojpuri 7.4%, Tharu (Dagaura/Rana) 5.8%, Tamang 5.1%, Newar 3.6%, Magar 3.3%, Awadhi 2.4%

சமய நம்பிக்கைகள்: இந்து 81.3%, பௌத்தம் 9%, இஸ்லாம் 4.2%, கிறிஸ்தவம் 1.4%, பாரம்பரிய மத நம்பிக்கைகள் 3.5%

நாணயம்: நேபாள ரூபா (NPR)

பொருளாதாரம்: Agricultural produce including jute, sugarcane, tobacco, and grain

நாட்டின் பரப்பளவு: 147,181 சது.கி.மீ

ஆட்சி முறைமை: சமஷ்டி பாராளுமன்றக் குடியரசு

பாராளுமன்றம்: Constituent Assembly

அரசுத் தலைவர் ஜனாதிபதி: ராம் பாரன் யாதவ்

பிரதமர்: சுஷி கொய்ராலா

 

‘ஸாயு துங்க புல்க ஹாமி…’ எனத் துவங்கும் நேபாள நாட்டுத் தேசிய கீத வரிகளும் அதன் மனம் ஈர்க்கும் இசைகளும் அந்நாட்டின் அழகைப் போலவே அதீதமான ரசனைகள் தரக் கூடியவை. நாம் இலங்கையர் வருடத்துக்கு ஒரு முறையாவது அழகு தேடி மலைநாட்டுக்குப் போவது வழக்கம். ஆனால் நாடு முழுவதுமே மலைகளால் வார்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் அழகை என்னவென்பது…! எவ்வார்த்தைகளால் வர்ணிப்பது…??? போதாமைக்குப் பூலோக சொர்க்கமான கஷ்மீரகமும் நேபாளத்தோடு கூடவே ஒட்டிக் கொண்டு நிற்கிறது. இந்தச் சிறிய நாட்டுக்குள் தான் உலகின் அதியுயரமான உச்சங்கள் பலகொண்ட சிகரங்கள் பலவிருக்கின்றன.

நேபாளம் பரப்பளவில் உலகில் 93 வது இடத்தில் இருக்கிறது. சனத்தொகையில் நேபாள நாட்டுக்கு 41 வது இடம். ஹிமாலயாவின் மலையுச்சிகளில் அமைந்திருக்கும் இந்நாடு உலகின் உயரத்தில் அமைந்திருக்கும் நாடு எனும் சிறப்பை திபெத்துடன் இணைந்து பெற்றுக்கொள்கிறது. இந்நாட்டில் 5000 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்கள் என்பது வெகு சாதாரணம். உலகின் பத்து அதியுயர்ந்த மலையுச்சிகளுள் எவெரெஸ்ட் உட்பட எட்டு உச்சிகள் நேபாளத்தினுள் தான் அமைந்திருக்கின்றன. 20,000 அடிக்கு மேற்பட்ட சிகரங்கள் 240 க்கும் மேற்பட்டு இருக்கின்றன.

இந்நாடு சூழவர வடக்கில் சீனாவும் தெற்கு-கிழக்கு-மேற்கில் இந்தியாவின் உத்தர்கண்ட், உத்தர் பிரதேஷ், பிஹார், கிழக்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைக் கொண்டிருக்கிறது. தலைநகரான காத்மண்டுவே நாட்டின் பெரிய நகராகவும் சனத்தொகை கூடிய நகராகவும் காணப்படுகிறது.

கி.வ. 1768 இல் தொடங்கிய ஷாஹ் வம்சத்து மன்னராட்சி கி.வ. 2008 வரைக்கும் தொடர்ந்தது. இறுதியில் நேபாளக் கம்யூனிஸ்ட் மாவோவாதிகள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் முடிவில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முக்கியக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கி.வ. 2008 மே மாதம் 28 ம் திகதியடன் பாராளுமன்ற முறை அமுல்படுத்தப்பட்டது.

 

நேபாளத்தில் இஸ்லாமின் பிரசன்னம்:

நேபாள நாட்டினுள் முஸ்லிம் பிரசன்னம் குறித்து நாம் யோசித்திருக்க மாட்டோம் தான்… ஏனெனில் நேபாளத்தை நினைத்தாலே அதனை ஓர் இந்து ராஜ்ஜியமாகவும் மாமனிதன் புத்தனின் பிறந்தகமாகவும்தான் கற்பனை பண்ணி வைத்திருந்திருப்போம். ஆனால் தொகையில் சிறிதளவாயினும் குறிப்பிட்டுக் கூறத்தக்க எண்ணிக்கையான முஸ்லிம் சிறுபான்மையொன்று வசிக்கின்றதென்பது சுவாரஷியத்தைக் கிளறிவிடும் அம்சமாகும். அதையும் தாண்டிப் புருவம் உயர்த்த வைக்கிறது அவர்களின் இனப் பன்முகத்தன்மை. நேபாள முஸ்லிம்கள் வித்தியாசமான பல்வேறுபட்ட இனக்குழுமங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் நேபாளம் நோக்கி முஸ்லிம் குடிப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் திபெத்திய பிராந்தியங்களிலிருந்தே மிகப்பெரும்பாலான குடிப்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. நேபாள மொத்த முஸ்லிம் தொகையில் 97% மக்கள் டெராய் வலயத்தில் தான் வசிக்கின்றனர். ஏனெஇய 3% ஆனவர்களும் காத்மண்டு நகர் மற்றும் மேற்கு மலைப்பிராந்தியங்களில் வசிப்பவர்களாவர். 4.2% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேபாள முஸ்லிம்களின் மொத்தத் தொகை 971,056 எனக் கணிப்பிடப்படுகிறது. முஸ்லிம்களில் ரவுடஹட் நகரில் 16%, பாராவில் 11%, பார்ஸாவில் 16% என இந்தியாவின் பிஹாரை அண்டிய மத்திய டெராய் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். மேலும் கிழக்கு டெராய் பகுதியின் சிராஹி 7%, சன்ஸாரி 10% சப்டாரி 10% மக்களும் மேற்கு டெராயின் பான்கே 15% கபிலவஸ்து 15% என முஸ்லிம்களின் வீதாசாரம் இருக்கின்றது.

நேபாள தேசத்து முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுள்…

  • மாதெஸி முஸ்லிம்கள்:

இவர்கள் நேபாள முஸ்லிம் சனத்தொகையில் 74% அளவில் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மையினர். டெராய் பிராந்தியத்தில் வசிப்போரும் இவர்கள் தான். இவர்கள் 19ம் நூற்றாண்டுகளில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அரேபியா தேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த கலப்பினத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வீட்டு மொழியாக உருது மொழியைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் விவசாயம், கூலித்தொழில் போன்ற கீழ்மட்ட வேலைகளிலேயே தொழிலாகக் கொண்டிருப்பதோடு கல்வியிலும் பின் தங்கிக் காணப்படுகின்றனர்.

  • கஷ்மீரி முஸ்லிம்கள்:

இவர்கள் நேபாளத்திற்குக் குடிபெயர்ந்த முதற்தொகுதி முஸ்லிம்களாவர். இவர்கள் கி.வ. 1450 களின் பிற்பாடு அக்கால மன்னராக இருந்த ராம கல்லா என்பவரது முடிவின் பிரகாரம் அக்கால ராஜ்ஜியத்தின் ராஜதந்திர மற்றும் போரியல் உதவிகளுக்காகக் கூட்டிவரப்பட்டனர். இவர்கள் இப்போது வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதோடு சமூக அந்தஸ்திலும் ஓரளவு உயர்வாக இருக்கின்றனர். அரச பதவிகளில் அங்கம் பெற்றிருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களும் இவ்வகையினத்தவராகவே உள்ளனர். இவர்கள் நேபாளி மற்றும் உர்து கலப்பு மொழியொன்றைப் பேசுகின்றனர்.

  • சவுராட்டி முஸ்லிம்கள்:

16ம்  மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் வடக்கு இந்தியப் பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் குழுக்களாவர். இவர்களும் இராணுவ மற்றும் விவசாய உற்பத்திகளின் உதவிக்காக அக்காலத்தில் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நேபாள மொழியையே பேசுகின்றனர். மத ஈடுபாடு குறைந்த குழுவாகவும் இவர்களே உள்ளனர்.

  • திபெத்திய முஸ்லிம்கள்:

இவர்கள் திபெத்தை சீனா ஆக்கிரமித்த கி.வ. 1959 களின் பிற்பாடு நேபாளிற்கு வந்தவர்களாவர். ஏனைய நேபாள முஸ்லிம்களிலிருந்து மிக வித்தியாசமான கலாசாரத்தை இவர்கள் கொண்டிருக்கின்றனர். இவர்கள் திபெத்திய மொழியையே பேசுவதோடு திபெத்தியக் கலாசாரத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் இவ்வாறு வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாசாரக் கூறுகளைக் கொண்டிருப்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் பிரதான தடைக் காரணி என அடையாளப்படுத்தப்படுகிறது.

கல்வி, சமூக, பொருளாதார நிலைகள்:

நேபாள நாட்டில் இந்திய, சீன நாடுகளின் மட்டுமல்லாது யூத பாடசாலைகளும் கூடக் காணப்படுகின்றன. இவை அவர்களவர்களது நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் பல்வேறு மறைமுகத் திட்டங்களோடு செயற்படுத்தப்படுவனவாகும். இவற்றுக்குமப்பால் குறிப்பாக முஸ்லிம்களாஇ இலக்கு வைத்துச் செயல்படும் கிறிஸ்தவ மிஷனரிகளும் காணப்படுகின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஆரமபகட்ட மாணவர்களுக்காக ‘மக்தப்’ எனும் பெயர்களில் பள்ளிக்கூடங்கள் கிராமங்கள் தோறும் இயங்கி வருகின்றன. இவற்றுக்குப் போதியளவான பயிற்சியுடைய ஆசிரியர்களோ, ஆசிரியர்களுக்கான சம்பளங்களோ எதுவும் இல்லை. ஒரு சில கிராமங்களில் மாத்திரம் இதனையும் தாண்டி இடைநிலைக் கல்வியைப் பெறக்கூடிய வசதியுள்ள பாடசாலைகள் காணப்படுகின்றன. அத்தோடு இஸ்லாமியக் கல்வியை வழங்கக் கூடிய மத்ரசாக்களும் விரல் விட்டெண்ணாக்கூடிய அளவிலேயே இருக்கின்றன.

ஒரு சில மாணவர்கள் இந்தியாவுக்கு மார்க்கக் கல்விக்காகப் பயணிப்பதோடு இன்னும் பலர் சவூதி மற்றும் எகிப்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விப் புலமைப் பரிசில்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நேபாள முஸ்லிம்கள் மத சார்பற்ற அரச கல்விக் கூடங்களில் கற்பதில் ஆர்வம் காட்டாதிருப்பதோடு பொருளாதார வசதியின்மைகள் காரணமாக தனியார் கல்விக் கூடங்களை அணுகவும் வசதியற்றிருக்கின்றனர்.

அண்மைக்காலமாக இந்த நிலையிலிருந்து நேபாள முஸ்லிம்களை மீட்கும் நோக்குடன் பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அங்கு கல்வி, மார்க்க விழிப்புணர்வுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுள்  Al-Hira Educational Society, Islamic Development Bank of Jeddah என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பின்னையது மருத்துவ, விவசாய மற்றும் நிர்மாணத் தொழில் நுட்பத்துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குகின்றது. நேபாள முஸ்லிம் சமூகத்தில் 200 க்கும் குறைவான மருத்துவர்களும் அதைவிடக் குறைவான பட்டப்பின்படிப்புப் படித்தோருமே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் முஸ்லிம்கள்

french-muslim-protest

 

இரு வாரங்களுக்கு முந்திய பிரான்ஸ் சஞ்சிகையான சார்ளி ஹெப்டோ மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிற்பாடு பிரான்ஸிய முஸ்லிம்கள் குறித்த நமது கவனம் அதிகரித்தது. இஸ்லாமிய மயமாகி வரும் ஐரோப்பாவில் இருக்கும் பெரிய சிறுபான்மைகளுள் ஒன்றாக பிரான்ஸ் சிறுபான்மை மக்களைக் கண்டு கொள்ள முடியும். அவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 50 இலட்சம் தொட்டு 60 இலட்சங்கள் வரை இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இது மொத்த சனத்தொகையில் 8% ஐ உள்ளடக்கியதாகும். அங்கு இன ரீதியாக மற்றும் மத ரீதியாக சனத்தொகைக் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்வது 1872ம் ஆண்டின் பின்னர் சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளதென்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் முஸ்லிம் சனத்தொகைக் கட்டமைப்பை 1999ம் ஆண்டு மேற்கொள்ளாப்பட்ட சுயாதீனக் கணக்கெடுப்பொன்றின் பிரகாரம் இவ்வாறு நோக்க முடியும்:

Algeria  1,550,000
Morocco  1,000,000
Tunisia  350,000
Turkey  315,000
Sub-Saharan Africa  250,000
Middle East  100,000
Asia (mostly Pakistan and Bangladesh)  100,000
Converts  40,000
illegal immigrants or awaiting regularisation  350,000
Other  100,000
Total  4,155,000

 

இஸ்லாம் பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாகும். அது கத்தோலிக்க மதத்துக்கு அடுத்த ஸ்தானத்திலிருக்கிறது. பக்கத்திலிருக்கும் அட்டவணையூடாக வட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு அடிப்படைக் காரணம் இந்நாடுகள் பிரான்ஸின் காலணித்துவ நாடாக இருந்தமையாகும்.

மிகப் பெரும்பாண்மையான பிரான்ஸிய முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவினராகவே உள்ளனர். மேலும் அண்மைக்காலமாக பிரான்ஸிய சுதேச மக்களும் இஸ்லாமைத் தழுவும் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவர்களின் தற்போதைய தொகை 100,000 ஐத் தாண்டுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இது வருடாந்தம் ஆயிரக்கணக்கில் அதிகரித்துச் செல்கின்றது.

 

பிரான்ஸில் முஸ்லிம் நுழைவு:

முதல் முஸ்லிம் காலடித்தடம் பிரான்ஸினுள் இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே பதிந்துவிட்டது. ஸ்பெயினைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் தென் பிரான்ஸையும் கி.வ. 759 வரைக்கும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பின்பு உஸ்மானிய ஆட்சிக் காலங்களில் கி.வ. 1543-44 ம் ஆண்டு காலப்பகுதியில் உதுமானியர்களின் கடற்படைத் தளமொன்றும் தூளுன் எனுமிடத்தில் இருந்தது. இதற்குத் தளபதியாக கைருத்தீன் பர்பரோஸா என்ற வட ஆபிரிக்க பர்பர் இனத்தவரொருவர் இருந்துள்ளார்.

இறுதியாக கி.வ. 1960 களில் பிரான்ஸின் குடியேற்ற நாடுகளிலிருந்து பாரிய தொழிலாளர் நகர்வுகள் இடம்பெற்றன. இவர்கள் பெருமளவு வட ஆபிரிக்கர்களாகவே இருந்தனர். எனினும் பாரிஸ் நகரில் முதல் முஸ்லிம் பள்ளிவாயல் 1922ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதுவே இன்று பிரான்ஸின் பாரிய முஸ்லிம் வழிபாட்டிடமாகக் காணப்படுகின்றது. இன்றைய தரவுகளின்படி முழு பிரான்ஸிலும் 2000 க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் காணப்படுவதென்பது இஸ்லாமின் துரித வளர்ச்சியைக் காட்டுகின்றது. மேலும் அவர்கள் வருடாந்தம் ரமழான் நோன்பு போன்றவற்றை ஆர்வத்துடன் பிடிப்பதோடு, பன்றியிறைச்சி போன்றவற்றை மிகக் கண்டிப்புடன் தவிர்ந்து வருகின்றனர். பிரான்ஸிய முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பிரதான இரு அமைப்புக்களாக “Federation of the French Muslims” (Fédération des musulmans de France), “Union of Islamic Organisations of France” (Union des organisations islamiques de France) ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். இதில் முதலாவது அமைப்பு மொரோக்கோ முஸ்லிம்களின் ஆதரவு அதிகம் உள்ள அமைப்பாகும்.

 

கல்வி நிலை:

பிரான்ஸ் மதச் சார்பற்ற நாடென்ற வகையில் அங்கு அரச பாடசாலைகளில் அனைவரும் கற்கலாம்… ஆனால் மதம் சார்ந்த எதுவும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் தனியார் பள்ளிகளூடாக மதக் கல்விகளைப் பெற்றுக்கொள்ள எத்தடையும் இல்லை. அவ்வகையில் முதல் முஸ்லிம் பாடசாலை பாரிஸின் வட கிழக்கிலுள்ள  Aubervilliers எனும் நகரில் 2001ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இவை பணம் செலுத்திக் கற்க வேண்டிய பாடசாலைகளாக உள்ளன.

 

ஹிஜாப்:

பிரான்ஸின் ஹிஜாப் பிரச்சினை உலகப் பிரசித்தம் வாய்ந்தது. பிரான்ஸில் ஹிஜாபுக்கான போராட்டம் இஸ்லாம் குறித்த பாரிய கவனயீர்ப்பை ஏற்படுத்தியதென்றால் அது மிகையல்ல. மதச்சார்பற்ற கொள்கை மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் பிரான்ஸில் 1989 இன் பிற்பாடு ஹிஜாப் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறிப்போனது.

படிப்படியாக முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மேலும் இறுக்கமாக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாக பிரான்ஸின் மதச் சார்பற்ற கொள்கையை மேலும் இறுக்கமாக்கி பொது ஸ்தலங்களில் மத அடையாளங்களை அணிய முடியாதென்ற சட்டம் பொதுமக்கள் அங்கீகாரத்துடன் 2003 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

கனடா முஸ்லிம்கள்

dumbass-canadian0imam

கனடா

தலைநகரம்: ஒட்டாவா

முக்கிய நகரங்கள்: டொரண்டோ (பெரிய நகரம்), வான்கூவர், மொன்றியல்

சனத்தொகை: 35,675,834 (2014) – சது.கி.மீட்டருக்கு 3.4 பேர்

இனக்குழுமங்கள்: வெள்ளையர் 76.7%, ஆசியர் 14.2%, சுதேசிகள் 4.3% கறுப்பர் 2.9% லத்தீன் அமெரிக்கர் 1.2%

மொழிகள்: ஆங்கிலம், ஃப்ரென்ச், இவை தவிர Chipewyan, Cree, Gwich’in, Inuinnaqtun, Inuktitut, Inuvialuktun, North Slavey, South Slavey, Tłı̨chǫ எனப் பல சுதேச மொழிகள் உள்ளன

சமய நம்பிக்கைகள்:

நாணயம்: கனேடியன் டொலர்

பொருளாதாரம்: கனிப்பொருள் வளம், கனரக இயந்திரங்கள் உற்பத்தி

நாட்டின் பரப்பளவு: 9,984,670 சது.கி.மீ

ஆட்சி முறைமை: பாராளுமன்ற யாப்புக்குட்பட்ட சமஷ்டி முடியரசு

பாராளுமன்றம்: செனட் மற்றும் மக்கள் சபை எனும் பிரிவுகள் கொண்டது.

பிரதமர்: ஸ்டீபன் ஹார்பர்

கவர்னர் ஜெனரல்: டேவிட் ஜோன்சன்

 

ஆர்ட்டிக் கடல் கொண்ட நாடு… உலகின் ஒரு கோடிப் புறத்திலே பனி சூழப் பெற்றிருக்கும் நாடு தான் கனடா. ஒரு காலத்திலே அபோரிஜின்கள் மற்றும் எஸ்கிமோக்களால் நிரம்பி பனியின் இயற்கை தந்த வாழ்வு முறை ஓங்கியிருந்த நாடு இது. இற்றைக்கு ஐந்து நூறாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயராலும் பிரான்சியராலும் கனடா காலனித்துவத்துக்குட்படுத்தப்பட்டது.

இந்நாடு கிழக்கிலே நெடுகவும் அத்திலாந்திக் கடலோடும் தெற்கிலே மிக நீண்ட அமெரிக்க நில எல்லையோடும் மேற்கிலே  பசிபிக் பிரமாண்ட சமுத்திரத்தையும் வடக்கிலே தீவுகளாகவும் ஏரிகளாகவும் ஆர்ட்டிக் கடலோடு சங்கமிக்கும் எல்லைகளோடும் வரப்பெற்றிருக்கின்றது. நிலப் பரப்பளவில் பார்த்தால் கனடா உலகின் நான்காவது பெரிய நாடாகத் திகழ்கிறது. நிரம்பியிருக்கும் நீர்ப் பரப்புக்களையும் இணைத்துப் பார்ப்பின் உலகில் ரஷ்யாவுக்கு அடுத்துப் பெரும் தேசம் கனடாதான்.

கொமன்வெல்த் உறுப்புரிமை பெற்ற நாடான கனடா உண்மையில் இன்னும் ஐக்கிய இராச்சிய கண்காணிப்பின் கீழ் உள்ள நாடாகவே உள்ளது. அவ்வகையில் இங்கு மகாராணியின் பிரதிநிதியொருவரும் இருக்கின்றார். மேலும் பிரிட்டிஷின் இரண்டாம் எலிஸபத்தே அங்கு அரசுத் தலைவராகவும் கருதப்படுகின்றார். மிகப் பெரும் முன்னேற்றமடைந்த பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள கனடா உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாளராகத் திகழ்கின்றது. மிக மலிவாக உள் நாட்டிலேயே கிடைக்கும் மூலப் பொருட்கள் முக்கிய காரணமாகும். அத்தோடு அமெரிக்காவுடனான பொருளாதாரக் கூட்டுக்களும் குறிப்பிடத்தக்க காரணியே எனலாம்.

உலக தலாவீத வருமான அடிப்படையில் எட்டாவது இடத்திலிருக்கும் கனடா இன்னும் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நாடாகும். அத்தோடு மனித அபிவிருத்திச் சுட்டெண், சுதந்திரம், உரிமைகள் என அனைத்தும் மிக உயர் தரத்தில் காணப்படுகின்றன. உலகில் அதிகூடிய கல்வியறிவுடையோர் கொண்ட நாடாகவும் இது இருக்கின்றது. சுமார் 51% க்கும் மேற்பட்டோர் அங்கு பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்திசெய்திருக்கின்றனர். அத்தோடு நேட்டோவிலும் கனடா மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.

கனடாவில் இஸ்லாம் அறிமுகமாகிறது

பல நூற்றாண்டுகளாக வெளியுலகின் தொடர்பே இல்லாத கண்டமாக வடக்கு மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்கள் இருந்தன. 15ம் நூற்றாண்டின் இறுதிக் கூறுகளில்தான் ஆங்கிலேயர், போர்த்துக்கேயர், ஸ்பானியர் மற்றும் பிரான்சியர் ஆகியோரின் நாடுபிடிக்கும் பேராசியினாலும் பொருளாதார மீவிருப்பங்களாலும் வெளியுலகுடன் தொடர்புபட்டன. அதற்கும் பல தசாப்தங்களுக்குப் பின்னர்தான் முஸ்லிம்களதும் இஸ்லாமினதும் அறிமுகம் முறையாக அந்தக் கண்டத்தினுள் ஊன்றியது.

அவ்வகையில் இங்கிலாந்தியரதும் பிரான்சியரதும் காலனித்துவத்தின் பிற்பாடு முஸ்லிம்களின் பிரசன்னம் 1871 சனத்தொகைக் கணக்கெடுப்பில் உணரப்பட்டது. அப்போது அவர்களின் தொகை வெறும் 13 ஆக இருந்தது. அவர்கள் ஐரோப்பிய முஸ்லிம்களாகக் காணப்பட்டனர். அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட குறிப்பிட்த்தக்க முஸ்லிம் நகர்வு 1ம் உலக மகா யுத்த காலப் பகுதியோடு துவங்கியது. அவர்களில் அநேகர் பொஸ்னியா, அல்பேனியா தேச முஸ்லிம்களாக இருந்தனர். இவர்கள் யுத்த வேலைகளுக்காகவே கொண்டு வரப்பட்டனர்.

கனடாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாயல் 1938 எட்மண்டன் எனும் நகரில் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம் சனத்தொகை 700 அளவில் காணப்பட்டது. அதன் பின்பு மெதுவான குடிப்பெயர்வுகள் நிகழ்ந்த போதிலும் 1960-70 காலப்பகுதிகளில் குடியேற்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டதோடு குறிப்பிட்த்தக்க முஸிம் குடியேற்றங்கள் நிகழ்ந்தன.

கனடாவில் முதலாவது மத்ரசாவாக இந்திய பாரம்பரிய ஹனபி முறையில் அமைந்த தப்லீக் மத்ரசாவொன்று 1983ம் ஆண்டில் ஒன்றோரியோ நகரில் தாபிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு ஹிப்ழ், ஆலிம் பயிற்சிகளாஇ வழங்குகின்றது.

2011 கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின்படி அங்குள்ள முஸ்லிம் சனத்தொகை 1,053,945 ஆக இருந்தது. இது மொத்த சனத்தொகையில் 3.2% ஆகும். அத்தோடு கிறிஸ்தவத்துக்கு அடுத்ததாக பெரிய மதமாகவும் இஸ்லாமே இருக்கின்றது. குறிப்பாக டொரன்றோ பெருநகர்ப் பிரதேசத்தில் சனத்தொகையின் 7.7% ஆனவர்கள் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். அத்தோடு கனடாவில் ஷீயாக்களும் அஹ்மதிக்களும் கணிசமான அளவு காலூன்றிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் அஹ்மதிக்கள் அரச மட்டங்களில் பெரும் ஆதரவைப் பெற்று பாரிய கட்டமைப்போடும் தமக்கென தனியாக பெரும்பெரும் பள்ளிவாசல்களைக் கட்டி அரச ஆதரவோடு இருந்துவருகின்றனர்.

தற்போதைய சனத் தொகையின் படி வரிசைக்கிரமமாக நோக்கினால் கிழக்கு ஐரோப்பா, சோமாலியா, லெபனான், தெற்காசியா, ஈரான், வட ஆபிரிக்கா என முஸ்லிம்களின் பிரசன்னம் இருக்கிறது.

இவர்களின் அண்மைய குடிப்பெயர்வுகள் பல்வேறு காரணிகளால் நிகழ்ந்தன. உயர்கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத மற்றும் அரசியல் சுதந்திரம், சிவில் யுத்தங்கள் என அவற்றைப் பட்டியல்படுத்தலாம். குறிப்பாக பொஸ்னியா மீதான ஆக்கிரமிப்புக்கள், லெபனான் மற்றும் சோமாலியா சிவில் யுத்த்த்தின் போது பிரதான அகதிகள் தஞ்சம் புகிடமாக கனடா இருந்து வந்தது.

 

இஸ்லாம் இன்றைய கனேடிய சமூகத்தில்

உலகளவில் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மைக் குழுமங்களில் ஒன்றாக எம்மால் கனேடிய முஸ்லிம் சிறுபான்மையை நோக்க முடியும். அதற்கு அங்கு அதிகளவில் இடம்பெயர்ந்த முஸ்லிம் புலமைத்துவவாதிகள் முக்கிய காரணமெனலாம்.

இப்போது கனடவின் முஸ்லிம்களில் சுமார் 10% ஆனவர்கள் தான் கனடாவிலேயே பிறந்தவர்களாவர்.

முஸ்லிம்களின் கல்விநிலை மிக உயர்தரத்தில் இருப்பதாகக் கனேடிய தரவுகள் கூறுகின்றன. முஸ்லிம் சனத்தொகையில் 6%க்கும் மேற்பட்டோர் முதுமானிப் பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது மற்ற மதத்தவர்களைவிட பல மடங்குகள் உயர்வீதமாகும். ஆனால் கனடா யூதர்கள் இதில் 8.8% என்பது காவனிக்கத்தக்கது. அத்தோடு முஸ்லிம்கள் மத்தியில் கலாநிதிக் கற்கையை முடித்தவர்கள் 6,310 புலமையாளார்கள் என்பது இலங்கைச் சிறுபான்மையாகிய எமக்கு மலைப்பையும் வியப்பையும் தருகிறது. நாம் செல்ல வேண்டிய இன்னும் நீண்ட பயணத்தையும் எமக்கு உணர்த்துகிறது. இது கனேடிய முஸ்லிம்களின் 1.5% ஆகும்.

கனடாவில் பல்வேறு தேசியப் பங்களிப்புக்களாஇச் செய்த போதிலும் மொத்த ஊழியர்படையில் அதிகம் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சமூகமாக முஸ்லிம்களே காணப்படுகின்றனர். கனடாவில் மொத்த வேலையற்றோர் வீதம் 7.4% வீதமாக இருக்க அது முஸ்லிம் சமூகத்துள்ளே 7.4% ஆக இருக்கிறது. கனேடிய முஸ்லிம்களில் 27% ஆனவர்கள் விற்பனைத் துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அடுத்து 16% ஆனவர்கள் நிதித் துறையிலே பணிபுரிகின்றனர்.

கனடவிலே சமயம் சார்ந்த மற்றும் சாராத பல நிறுவன்ங்கள் முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் சமயம் சாரா நிறுவன்ங்களாக Muslim Canadian Congress, Canadian Muslim Union, Muslims for Progressive Values – Canada, The Coalition for Progressive Canadian Muslim Organizations (CPCMO) என்பன குறிப்பிடத்தக்கவை.

சுன்னி முஸ்லிம்கள்  சார்ந்த நிறுவனங்ககளாக Islamic Society of North America (ISNA), Islamic Circle of North America (ICNA), Muslim Association of Canada (MAC), The Ummah Masjid (Halifax Muslim Community), Islamic Supreme Council of Canada என்பன குறிப்பிட்த்தக்கவை.

இவை தவிர்த்து இஸ்லாமிய அறிவுலகின் பெரும் ஜாம்பவான்கள் பலரும் கனேடிய முஸ்லிம் சமூகத்தில் உள்ளனர். அவர்களுள் கலாநிதி ஜாஸிர் அவ்தா, பேராசிரியை இங்ரித் மெட்சன், பிரபல தாஈ பிலால் பிலிப்ஸ்  மற்றும் பாடகர் தாவூத் வார்ன்ஸ்பி அலி போன்ற ஆளுமைகள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கேரியாவில் இஸ்லாம்

P07-140223-304

பல்கேரியா குடியரசு

தலைநகரம்: ஸோஃபியா

சனத்தொகை: 7,364,720 (சது.கி.மீட்டருக்கு 66.2 பேர்)

இனக்குழுமங்கள்: பல்கேரியர் 84.6% , துருக்கியர் 8.9%, ரோமானியர் 4.8%, ஏனையோர் 1.7%

மொழிகள்: பல்கேரியன் (உத்தியோகபூர்வ மொழி), துருக்கிய மொழி

சமய நம்பிக்கைகள்: ஒர்த்தொடக்ஸ் கிறிஸ்தவம் 82.2%, இஸ்லாம் 12.2%,  நாத்திகம் 3.9%, கத்தோலிக்கம் 0.6%, புரட்டஸ்தாந்து 0.2%, ஏனையவை 0.1%

நாணயம்: லிவ் (BGN)

பொருளாதாரம்: கனரக தொழிற்சாலைகள்,  சக்திவள உற்பத்தி, விவசாயம்,

நாட்டின் பரப்பளவு: 110,994 சது.கி.மீ

ஆட்சி முறைமை: பல்கட்சிப் பாராளுமன்றக் குடியரசு

பாராளுமன்றம்: நெஷனல் அசெம்பிளி

அரசுத் தலைவர் பிரதமர்: ரோஸன் ப்ளிவ்னிலீவ்

ஜனாதிபதி: பொய்க்கோ பொரிஸொவ்

 

பல நாடுகள் விதவிதமான முறைகளில் எமக்கு அறிமுகமாகின்றன. அந்தந்த நாடுகள் சிற்சில துறைகளில் இருக்கும் அபரிமித ஆற்றல்களூடாகப் பெறும் பிரபல்யங்கள் அந்தத் தேசங்கள் குறித்த செய்திகளை எம்மை அடையச் செய்கின்றன. இலங்கைக்குத் தேயிலையும் கிரிக்கெட்டும் போல… இவற்றையெல்லாம் தாண்டி உலகில் பல நாடுகள் எம்மத்தியில் பேசப்படாமலேயே இருந்துவிட்டுப் போகின்றன. அவ்வகையில் எமக்கு மத்தியில் பேசப்படாது போனாலும் இஸ்லாமிய உலக வரலாற்றிலே உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் காலங்களில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்கிய பல்கேரியா நாட்டிலே வீசும் இஸ்லாமிய சுவாசங்களை நுகர்வோம்.

பல்கேரியா நாடு தென்கிழக்கு அயிரோப்பாவிலே அமைந்திருக்கும் மத்திய அளவு பருமன்கொண்ட நாடாகும். இதன் வடக்கில் ரோமானியாவும் மேற்கில் சேர்பியா மற்றும் மஸிடோனியாவும் தெற்கில் கிரேக்கம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் கிழக்கிலே 110,994 கி.மீட்டர் நீண்ட நீளத்தில் கருங்கடலையும் தனது எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது. அயிரோப்பியா நாடுகளில் 16வது அளவு பருமன் கொண்டதாக பல்கேரியா காணப்படுகிறது.

வரலாற்றுவெளியிலே காலாகாலமாக பல்கேரியாவை கிரேக்கர்கள், ரோமானியர், உதுமானியர் எனப் பல்வேறு அரசவம்சங்கள் ஆட்சிசெய்துவந்திருக்கின்றன. அவ்வகையில் முதல் பல்கேரியா பேரரசு கி.வ. 681-1018 காலப்பகுதிகளிலும் இரண்டாவது பல்கேரியா பேரரசு கி.வ. 1185-1396 காலப்பகுதிகளிலும் நிகழ்ந்ததென அடையாளப்படுத்துவர். இறுதியாக தொடர்ந்துவந்த அயிந்து நூற்றாண்டுகள் உதுமானிய ஆட்சியின் கீழ் பல்கேரியா இருந்தது. பின்னர் கி.வ. 1877-78 காலப்பிரிவில் இடம்பெற்ற துருக்கி-ரஷ்ய யுத்தத்தின் காரணமாக வித்திடப்பட்டு கி.வ. 1908 ஒக்டோபர் 5 இல் உதுமானியரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நவீன பல்கேரியா உருவாகியது.

தனிநாட்டு உருவாக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளில் பல்கேரியா விழுந்தெழுந்து வந்திருக்கின்றது. குறிப்பாக இரு உலக மகா யுத்தங்களிலும் ஜெர்மனியை எதிர்த்து நின்றது. 1946 களோடு பல்கேரியா தனிக்கட்சி ஆட்சிகொண்ட சோஷலிஸ தேசமாக உருவெடுத்தது. இது அன்றைய சோவியத்தின் கிழக்கு அயிரோப்பா கிளையின் ஓர் அங்கமாகவே இருந்தது. இறுதியில் 1989ம் ஆண்டு டிசம்பரில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பல்கட்சித் தேர்தல் முறைமைகளுக்கு அங்கீகாரம் அளித்தது. அதன் பின்பு பல்கேரியா மெதுமெதுவாக முதலாளித்துவ தேசமாக மாற்றமடைந்தது.

இன்றைய பல்கேரியா 28 நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும் தலைநகரைச் சூழவுள்ள மாகாணங்களே மக்களின் கேந்திரக் குடியேற்றங்களாக அமைந்திருக்கின்றன. வர்த்தக, கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் தலைநகர் ஸோஃபியாவை மையம் கொண்டே சுழல்கின்றன.

1991 இல் உருவாக்கப்பட்ட புதிய யாப்பின்படி அங்கு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலவுகிறது. அயிரோப்பிய யூனியன், நேட்டோ, அயிரோப்பிய கவுன்சில் என்பவற்றில் அங்கத்துவம் வகிப்பதோடு அயிரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமையத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் காணப்படுகிறது. அயிக்கிய நாடுகள் அமையத்தின் பாதுகாப்பு வாரியத்தில் மும்முறைகள் தற்காலிக உறுப்பினராகவும் இருந்தது.

பல்கேரியாவில் இஸ்லாமின் பரவல்:

பல்கேரியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினராக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மொத்த சனத்தொகையில் 12.2% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்களின் மொத்த தொகை ஒரு மில்லியனை நெருங்குகின்றது. பல்கேரியா முஸ்லிம்கள் பிரதானமாக மூன்று இனக்குழுக்களில் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களுள் பிரதானமாக துருக்கியர் 700,000 ஐத் தாண்டியும் 130,000 க்குச் சற்று அதிகரித்த போமாக்ஸ் எனப்படும் பல்கேரிய இனத்தவரும் 103,000 அளவில் ரோமானிய இனத்தவரும் உள்ளனர். பெரும்பாலும் பல்கேரியா முஸ்லிம்கள் சுன்னி இஸ்லாமைப் பின்பற்றுவோராக இருக்கின்றனர். அண்ணளவாக 25,000 எண்ணிக்கையில் ஷீஆக்களும் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. அதேநேரம் காதியானிக்களது பரவலுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவில் ஏனைய கிழக்கு அயிரோப்பிய நாடுகள் போன்றே இருப்பது போன்றே பல்கேரியா முஸ்லிம்கள் ஃபிக்ஹிலே ஹனபி சட்ட மரபையும் அகீதாவில் மாதுரீதிகளாகவும் காணாப்படுகின்றனர்.

பல்கேரியாவில் இஸ்லாமின் பிரவேசத்தைப் பொறுத்தவரையில் முதற் தடவையாக பல்கேரியாவினுள் முஸ்லிம்களின் பிரவேசம் கி.வ. 9ம் நூற்றாண்டுகளின் நடுக்கூறுகளில் இடம்பெற்றதென அப்போதைய போப், பல்கேரியா ஆட்சியாளருக்கு அனுப்பிய கடிதங்கள் போன்ற ஆவன்ங்கள் வழியாக அறியமுடிகிறது. பின்னர் 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் துருக்கிய கோத்திரங்களின் இடப்பெயர்வோடு இத்தொகை இன்னும் அதிகரித்தது. இறுதியிம் 14ம் நூற்றாண்டுன் நடுப்பகுதியில் நிகழ்ந்த துருக்கியப் படையெடுப்புக்கள் கி.வ. 1390 ஆகும் போது முழு பல்கேரியாவையும் உதுமானிய ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தது. உதுமானிய ஆட்சியாளர்களும் சுன்னி இஸ்லாமின் பரவலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர்.

பல்கேரிய விடுதலை சிந்தனைகள் தொடங்கும் முன்னர் 19ம் நூற்றாண்டிலே 2356 பள்ளிவாசல்களும் 174 தக்கியாக்கள், 142 மத்ரஸாக்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்கள் பதியப்பட்டிருந்த்தாக ஆவாங்கள் சொல்கின்றன. எனினும் ரஷ்ய-துருக்கிய யுத்தம் முடிவடைந்த்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இப்போதைய கணக்கெடுப்புக்கள் அங்கு 1458 மஸ்ஜிதுகள் இருப்பதாகக் கூறுகின்றன.

குறிப்பாக உதுமானிய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த தீவிர கிறிஸ்தவ மதவாத ஆட்சிகளும் அதனடியாக வந்த மதவிரோத கம்யூனிஸ ஆட்சிக் காலங்களும் முஸ்லிம் வெகுமக்களை வெகுவாகப் பாதித்தன. கம்யூனிஸ்டான ஸிவ்கவ் என்பவரது ஆட்சியிலே முஸ்லிம் வெகுமக்களின் சுதந்திரங்கள் முற்றாகப் பறிக்கப்பட்டன. நாத்திகமே தேசத்தின் உத்தியோகபூர்வக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; கொள்கைகள் கொளுத்தப்பட்டன. இஸ்லாமிய அடையாளம் தாங்கிய பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பதுகூடத் தடைசெய்யப்பட்டது. பல்கேரியா தேசியப் பெயர்களச் சூட்டிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துருக்கிய மொழிப் பயன்பாடே தடுக்கப்பட்டது. இதன் விளைவாக 310,00 க்கும் மேற்பட்ட துருக்கிய இனத்தவர்கள் நாட்டை விட்டும் விரண்டோடினார்கள். கம்யூனிஸ்டுக்களின் வீழ்ச்சியின் பிறகே மீளவும் முஸ்லிம்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. அதன் பின்பு ஆரம்பகட்டமாக இளம்பராயத்தினருக்கு அல்குர்ஆனைப் போதிப்பதற்கான நிலையங்களைக் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தினார்கள். இன்று தம்மிடையே சொந்தமாகப் தினசரிப் பத்திரிகை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில் துருக்கிய, பல்கேரிய மொழிகளில் வெளியாகும் ‘முசல்மானி’ என்ற பத்திரிகை குறிப்பிடத்தக்கது.

பல்கேரியா முஸ்லிம்கள் இன்று:

பல்கேரியாவில் கடுமையாக மதச் சார்பின்மை நடைமுறைப்படுத்தப்பட்டதால் மார்க்கத்துடன் தொடர்புள்ள முஸ்லிம்களைக் காண்பதும் அண்மைக்காலம் வரை குறைவாகத்தான் இருந்தது. 2011ம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஒன்றின்படி பாரம்பரிய முஸ்லிம்களில் 3.2% வர்கள் தம்மை மதச் சார்பற்றவர்களாகத் தான் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இத்தகையோரது தொகை 25,000 ஐயும் தாண்டுகின்றது.

மேலும் இதுவரையும் 48.6% ஆன முஸ்லிம்களே தம்மை முழுமையாக மதத்துடன் பிணைத்து அடையாளப்படுத்த விரும்புகின்றனர். 28.5% ஆனவர்கள் ஓரளவு மத விழுமியங்களைப் பேண முயல்கின்றனர். 41% ஆனவர்கள் இதுவரைக்கும் பள்ளிவாசல் சென்றதில்லை. அவர்களில் 59.3% ஆனவர்களுக்குத் தொழுகையென்றால்என்னவென்றே தெரியாது. அத்தோடு 39.8% ஆனவர்கள் போதைப்ப் பொருள் பாவனையிலுள்ளோர் என்பதோடு 43.3% முஸ்லிம்கள் மதுபாவனைக்கு அடிமைகள் என்பதும் பல்கேரியா முஸ்லிம்கள் குறித்த பாதக தரவுகளாகும்.

சிவில், சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள்

கடந்த 130 வருடங்களாகவே பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் பல்கேரியா முஸ்லிம்களை வழிகாட்டி நெறிப்படுத்தி விடுவதில் அங்கு செயற்படும் பல முஸ்லிம் இயக்கங்களும் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. துருக்கிய-போமக்-ரோமானிய என வித்தியாசமான இனக் குழுமங்களான முஸ்லிம்களை ஒழுங்குபடுத்துவதில் இந்த இயக்கங்கள் முழுக் கரிசனை காட்டுகின்றன.

அனைத்து அமைப்புக்களினதும் உயர் அமைப்பாக Higher Islamic Council காணப்படுகின்றது. ஒட்டுமொத்த பல்கேரியா முஸ்லிம் சமூகத்தினதும் தலைவராக பல்கேரியாவின் தலைமை முஃப்தியே காணப்படுகிறார். இவர் அயிந்து வருடங்களுக்கொரு தடவை இடம்பெறும் அமைப்புக்களின் பொது மாநாட்டு மேஜையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குக் கீழால் ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொறுப்பான முஃப்திகளும் காணப்படுவர்,

பிரதான முஃப்தியின் மேற்பார்வையின் கீழேயே வக்ஃப் சொத்துக்கள் உட்பட முஸ்லிம்களின் சகல விவகாரங்களும் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

சுமார் 500 கிராமங்களில் அல்குர்ஆனை சிறார்களுக்குப் போதிப்பதற்கான நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 2000 பொதுப் பாடசாலைகளில் இஸ்லாமைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கேரியா முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதன் பிரதான அரசியல் முகமாக The Movement for Rights and Freedoms (MRF) என்ற அமைப்புத் தான் அங்கு செயல்பட்டு வருகிறது. இதுவே துருக்கிய, போமாக்ஸ், ரோமானிய இன முஸ்லிம்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. எனினும் இதுவரைக்கும் இக்கட்சி இனத்துவக் கட்சியாக அடையாளப்படுத்தப்படவில்லை. இக்கட்சி பல்கேரியா முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதோடு இக்கட்சி பெற்றிருக்கும் 34 பாராளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் துருக்கியர் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இக்கட்சி தற்போது பல்கேரியா ஆளும் அரசில் முக்கிய பங்கை வகித்து வருகின்றது. மத்திய, மாகாண அரசுகளிலும் மற்றும் உள்ளூராட்சித் தலைவர்களாகவும் தற்போது முஸ்லிம்கள் முக்கிய பங்கெடுத்து வருகின்றனர். அயிரோப்பியப் பாராளுமன்றத்தில் பல்கேரியா பெற்றுள்ள 18 உறுப்பினர்களில் மூவர் MRF இன் பிரதிநிதிகளாவர்.

பல்கேரியா முஸ்லிம்கள் பொருளாதார நிலைகளிலும் இன்னும் பாரிய முன்னேற்றத்தை வேண்டி நிற்கின்ரனர். அரசியல், சட்ட கெடுபிடிகள் அவர்களைத் தொடர்ந்தும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதென்பது அங்கு வெறும் சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படும் அளவுக்கு இஸ்லாமிற்குப் பெறுமானம் வழங்கப்படா நிலைமை அங்கு இருந்தது; இப்போதும் இருக்கிறது. அதற்கு தீவிர கிறிஸ்தவ மத வாதமும் மத விரோதக் கம்யூனிஸ சிந்தனைகளும் ஆழமாக வேர்விட்டிருந்தமையையே காரண்மஎனலாம்.

பல்கேரியா முஸ்லிம்களின் எதிர்காலம்:

பல்கேரியா அரசாங்கம் அந்த நாட்டு முஸ்லிம்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலக்கச் செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உலகிலே மிகக் கடுமையாக மத வன்முறைக்குட்படுத்தப் பட்ட சிறுபான்மையினராக பல்கேரியா முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அவர்களுள் இளைய சமுதாயத்தினரிடையே தற்போது கம்யூனிஸ காலத்தை விடவும் அதிக இஸ்லாமிய விழிப்புணர்வுள்ள சமூகமாக உருப்பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அவர்களுக்கான இஸ்லாமிய வகுப்புக்கள் முதற்கொண்டு இஸ்லாமைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் பரவலாக செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரம் பல சுதேச பல்கேரியர்களும் இஸ்லாமில் ஆர்வம்கொண்டு அது குறித்துத் தேடத்தொடங்கியிருக்கிறார்கள். பலர் இஸ்லாமைத் தழுவும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.