இஃக்வான்கள் புரட்சியை விட்டு ஒதுங்கினால்…

a1439753240

இஃக்வான்கள் அரசியலை விட்டும் ஒதுங்குகிறார்கள்… எகிப்து புரட்சியை அவர்கள் இனி ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை… இனி அவர்கள் வழமை போன்றே மக்களைப் ஆன்மீகப் பயிற்றுவிப்பில் ஈடுபடுத்தும் தர்பிய்யா வேலைகளில் மட்டும் ஈடுபடப் போகிறார்கள்… அவர்களுக்கு தம் உறுப்பினர்கள் அனைவரையும் சிறைகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்… ஷஹீதான மற்றும் காயமடைந்த தம் குடும்பத்தாருக்கு இனி உதவ வேண்டும்… தஃவா மட்டுமே இனி இலக்கு… (யாரோ கூறுவது போன்று) மக்கள்தான் புரட்சிக்கு சொந்தக்காரர்கள்… அவர்களே அதிகாரத்துக்குரியவர்கள்… எனவே புரட்சியைப் பூரணப்படுத்த விரும்பின் அவர்கள்தான் இனி புரட்சியை சுமப்பார்கள்.. என்றெல்லாம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலிருந்து அறிவிப்புக்கள் வருமாயின்…

இவ்வாறு இஃக்வான்கள் அறிவிப்பார்களாயிருந்தால், அவர்களது எதிர் முகாம்களை முந்திக் கொண்டு இஃக்வான்களது ஆதரவாளர்களே களத்தில் குதித்து இயக்கத்தின் முடிவுகளுக்கு எதிராகப் பாரிய புரட்சியொன்றை மேற்கொள்வார்கள். கண்ணுக்குத் தெரியாத புறத்தில் இயக்கம் சரிந்து வீழ்ந்துவிடும். ஓரிரவுக்குள் பலரின் மனத்திலிருந்து இயக்கம் அகன்றுவிடும். தலைமைகள் மட்டுமே இறுதியில் எஞ்சி நிற்பார்கள். அனைவரையும் இவ்வறிவிப்பு நிச்சயம் கோபத்துக்குள்ளாக்கும். தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து குவியும். கோரிக்கை விடுப்பவர்கள் இஃக்வான்களோடு கருத்தொற்றுமை கொண்டவர்கள் மட்டுமல்லாது; ஜனவரி புரட்சியில் பங்கேற்ற பல முகாம்களையும் சேர்ந்தவர்களாயிருப்பர். ஏனெனில் இஃக்வான்கள் இன்றி புரட்சி முழுமை பெறாதென்று அவர்கள் நன்கறிவார்கள். இஃக்வான்கள் இவ்வாறு இடைவிலகிச் செல்வார்களாயின் இருக்கும் இராணுவச் சர்வாதிகாரம் நிலைக்க அத்திவாரமாக அமைவதோடு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற மனநிலையில் மக்களை ஏதும் செய்யாத செயலற்ற மனோநிலைக்கு இட்டுச் சென்றுவிடுவது உறுதி.

இவ்வாறு அறிவிப்பொன்று வருமாயின் களத்தில் இஃக்வான்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், லிபரல்வாதிகள், கம்யூனிஸ்டுக்கள், கலைஞர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். மேற்கு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இந்தத் தீர்மானத்தை வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டுத் தள்ளும். ஏன்..! ஐ.நா. செயலாளர் நாயகமே ஓர் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் 1928ம் ஆண்டில் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் அது பல்வேறு சோதனைக் கட்டங்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றது. அவற்றிலெல்லாம் மிகப் பெரும் சோதனை எதுவெனில் 2013-07-03 அன்று எதிர்கொண்ட சோதனைதான்… அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்; ஆயிரக்கணக்கானோர் காயப்படுத்தப்பட்டார்கள்; இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் சிறை பிடிக்கப்பட்டார்கள்; அவர்களது கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி தடைசெய்யப்பட்டுக் கலைக்கப்பட்டது; அவர்களுக்குச் சொந்தமான வானொலி நிறுவனங்களும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களும் முடக்கப்பட்டன; சகோதரத்துவ உறுப்பினர்கள் எவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் காணப்படவில்லை; இஃக்வான்களோடு எவருக்கும் உறவாடுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை… இவ்வாறு எண்ணற்ற கொடுமைகள் இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சோதனைக் காலம் சிலர் இயக்கத்தை விட்டும் தூரமாகக் காரணமாக அமைந்தது. இச்சந்தர்ப்பத்தில் பலர் இயக்கத்தின் முடிவுகளை விமர்சித்திருந்தனர். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க எடுக்கப்பட்ட முடிவு பலராலும் விமர்சிக்கப்பட்டது. இஃக்வான்கள் இச்சந்தர்ப்பத்தில் புரட்சியை விட்டும் விலகுவதைப் பலர் விரும்பினர். இவ்வாறு நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் விரக்தி மனப்பாங்குகள் எவ்வித தீர்மானம் எடுத்தாலும் ஒன்றுதான் எனப் பலரையும் எண்ண வைத்திருக்கலாம்.

இஃக்வான்கள் புரட்சியை விட்டொதுங்குவதே நிரந்தரத் தீர்வு என அநேகர் எண்ணினர். அதைவிட நல்ல தீர்வு எவருக்கும் தோன்றவில்லை. ஆனால், அவர்கள் எல்லோரும் எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பதை வசதியாக மறந்துவிட்டனர். அவற்றைப் புரிந்துகொள்ள ஆழ்ந்த சிந்தனை வேண்டும். இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை நோக்குபவர்கள் அது இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் புனர்நிர்மாணச் செயற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் இமாம் ஹஸனுல் பன்னாவினால் நிறுவப்பட்டது என்பதை நன்கறிவார்கள். அன்றிலிருந்து அதன் மீது தொடுக்கப்பட்ட யுத்தங்கள் இன்றுவரைக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அரசாங்கங்களும் ராஜமாளிகைகளும் இங்கிலாந்திலிருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் யுத்தங்களைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த யுத்தங்கள் ஜமால் அப்துல் நாஸரினாலும் அவனது வாரிசுகளாலும் கொலை, சிறை, சித்திரவதை, நாடுகடத்தல் என மீள மீள புது வடிவங்கள் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

ஆனால், மக்களுக்குத் தொண்டு புரிவதிலும்… தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும்… பலஸ்தீன மண்ணை மீட்பதற்கான புனிதப் போராட்டத்திலும்… தம்மை ஈடுபடுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். பின்னர் எழுபதுகளின் மத்தியில் அன்வர் ஸாதாத்தின் காலப்பிரிவில் அவர்களுக்கு சிறிய நிம்மதிக் காலப் பிரிவொன்றை அல்லாஹ் நாடினான். பின்னர் ஆட்சி செய்த ஹுஸ்னி முபாரக்கின் காலமும் சமாதானம் ஏதுமற்ற போராட்டக் காலப்பகுதியாகவே அமைந்தது. இக்காலப்பகுதிக்குள் இயக்கம் உலகின் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி விசாலமடைந்தது.

இஃக்வான்கள் இக்காலப் பகுதிக்குள்ளால் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்த போதும், தம் சிந்தனையை வெற்றிகரமாகப் பல்வேறு பரப்புகளுக்குள்ளால் கொண்டு சென்ற காலப் பகுதியாகவும் இது அமைந்தது. தம் சிந்தனையைச் சுமந்த பல்வேறு துறைசார் நிபுணர்கள், வல்லுனர்களை அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கினர். பண்பாடுகளும் சிறந்த சமூகத் தொடர்புகளும் கொண்ட தலைமுறையொன்றை உருவாக்குவதில் அவர்கள் வெற்றிகண்டனர். கிராமங்கள்-நகரங்களென எகிப்து எங்கும் இவர்கள் பரவினர். இஸ்லாமுக்கு முரணான பல்வேறு பித்ஆக்கள், பழக்கவழக்கங்களை இல்லதொழிப்பதில் வெற்றிகண்டனர். தஃவா, அரசியல் களங்களுக்கு அப்பால் பொருளாதார ரீதியாக பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகண்ட நிறுவனச் செயற்பாடுகளுக்கு இஸ்லாமிய முன்னுதாரணமாகினர். தொழிற்சங்கங்கள் போன்ற ஏராளமான சமூகத்தின் முக்கியக் கூறுகளை வெற்றிகரமாக வழிநடத்தினர். பல்வேறு கெடுபிடிகளுக்கும் மத்தியில் பாராளுமன்றத் தேர்தல்களில் களமிறங்கி பாரிய வெற்றியும் பெற்றுக் காட்டினர். இவ்வாறு எகிப்து மக்களின் சிவில் மற்றும் அரசியல் ரீதியில் பல்வேறு சாதகமான மாற்றங்களுக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் வித்திட்டனர்.

அவர்களை வெறுப்பவர்கள் கூட அவர்களது இந்தப் பாரிய வெற்றிகளை மறுக்கமாட்டார்கள். அந்தளவுக்கு சிலாகித்துப் பேசப்படக் கூடிய சாதனைகளை தஃவா களத்தில் அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். இனி இஃக்வான்கள் மீண்டு எழப் போவதில்லை என பலரும் எண்ணிய பொழுதுகளிலெல்லாம் அவர்கள் மீண்டு வந்து முன்னை விடப் பலமாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். எந்த சந்தர்ப்பமும் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கானதாக அமையமாட்டாது. இதனைக் கலாநிதி முஹம்மத் அல்ஃபகி தனது ஹுஸைன் பஹ்மியுடனான அமெரிக்கப் பயண அனுபவப் பகிர்வுகளின் போது சிலாகித்துக் கூறியிருக்கிறார். அங்குள்ள முஸ்லிம்களில் இஃக்வானிய உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பண்புகளை அவர் விவரித்திருக்கிறார். முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் எவரும் எந்தக் கஷ்ட சந்தர்ப்பங்களிலும் விரண்டோடிவிடவில்லை. அவர்கள் எப்போது வீதிகளில் இறங்கிக் களப்பணியாற்ரிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடுப்புக்களுக்கு உரிமைப் பதிவு செய்த கண்டுபிடிப்பாளர்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தோமஸ் அல்வா எடிசன் மின்குமிழைக் கண்டுபிடிக்க ஆயிரம் பரிசோதனைகளுக்கு மேல் செய்தார்கள் என்பதை இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் படிமுறை ரீதியான முன்னேற்றத்தை நோக்குபவர்கள் வசதியாக மறந்தே போய்விடுகிறார்கள். ஒரு தோல்விக்கு முகங்கொடுப்பதென்பது பயணத்தின் முடிவல்லவே??! என்பது எமக்குத் தெரியாததல்ல. ஆனால், அது வெற்றியை நோக்கிய படிகளில் மிக முக்கியமானதொன்று என்பதை நினைவில் கொள்க. ஏற்கனவே ஒருமுறை எல்லோருக்கும் தெரிய இஃக்வான்கள் ஆட்சிக் கட்டிலைத் தொட்டிருக்கிறார்கள். எனவே நுணுகி அவதானிக்கும் ஒருவருக்கு, இயக்கம் முன்பு விட்ட தவறுகளிலிருந்து பாடங்கள்-படிப்பினைகள் பெற்று மீண்டும் அவ்விடத்தை அடையும் என்பது இலகுவாகப் புரியக்கூடிய ஒன்றே ஆகும்.

“(பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!” (இஸ்ராஃ :51)

கட்டுரையாளர்: ஷவ்கத் அல்மலத் (அரசியல் பத்தியாளர் மற்றும் சிறுகதையாசிரியர்)
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s