இமாம் ஹஸன் அல்பன்னா – வாழ்வும் சிந்தனையும்

image

ஒரு முறை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உஸ்ரா கட்டமைப்புக்கள் குறித்து ஒரு சகோதரருக்குக் கூறி முடித்ததும், மலைத்தவராக ‘எவ்வாறு தனி மனிதனாக நின்று இத்தகைய அற்புதமான திட்டத்தை வகுத்து மீளவும் உலகில் இஸ்லாமை நிலைநாட்டத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அவருக்கு எந்தளவு அரிய அறிவுப் பின்னணி இருந்திருக்கவேண்டும்! அவருக்கு எந்தளவுக்கு அல்லாஹ்வின் உதவியும் வழிகாட்டலும் இருந்திருக்கிறது! ஸுப்ஹானல்லாஹ்’ என வியந்தார் அவர்.

இமாமவர்கள் பற்றி “இஸ்லாமிய உலகம் வேண்டிநின்ற தக்கதொரு தருணத்தில் வந்து வழிகாட்டி முழு உலகும் இழந்துவிட்ட ஓர் அற்புதத் தலைவர் அவர்.” என்கிறார் ஹகீமுல் இஸ்லாம் என்ற சிறப்புப் பெயர்கொண்ட ஷெய்க் ஜவ்ஹர் அல்தந்தாவி அவர்கள். எமது இமாம் அஷ்ஷஹீத் ஹஸன் அல்பன்னா யூத, அமெரிக்கக் கூலிகளால் கெய்ரோ வீதியொன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் பெப்ரவரி 12. உலகில் மீளவும் இஸ்லாம் எழுந்து நிற்பது கண்ட பயந்தாங்கொள்ளிகள் அதன் நிறுவனர் ஒருவரைப் படுகொலை செய்துவிட்டதும் முழு இஸ்லாமிய சிந்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாய்க் கொண்டாடிக் கூத்தாடினார்கள். ஆனால் ஒரு நிறுவனரை அழித்து விடுவது சிந்தனையை அழித்துவிடுவதாகாது என்பதற்கு இன்றைய உலகு கண்டுகொண்டிருக்கும் அற்புத பண்பாடுகொண்ட அமைப்பான உலக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஒன்றே சான்று.

இமாம் பன்னா வாழ்ந்த 42 வருட வாழ்க்கைக்குள்ளால் அவர் இவ்வுலகுக்குத் தந்து சென்றவை ஏராளம். ஒரு முறை இமாம் பன்னாவுக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அப்போதைய மாணவர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த உஸ்தாத் மன்னாஉல் கத்தானுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் பிரசித்தமானது. மன்னாஉல் கத்தான் அவர்கள் இமாம் பன்னாவுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் குறித்து அறிவுறுத்தி சற்று பணியிலிருந்து ஒதுங்கி, சமூகத்தை விட்டும் மறைந்திருக்குமாறு வேண்டுகிறார். அப்போது அதனை மறுத்துவிட்டு இமாமவர்கள் “இல்லை…! நான் மக்களை விட்டும் ஒதுங்கி மரணத்தைக் கண்டு ஓடிவிட மாட்டேன். எனது பணி இத்தோடு முடிந்து விட்டதென்றால் அல்லாஹ் என்னை எடுத்துக் கொள்வான். இனிமேல் நான் வாழ்வதால் உலகிற்குப் புதிதாக எதுவும் கிடைத்துவிட மாட்டாது.” என உறுதிபடத் தெரிவித்து விடுகிறார்கள். அதற்கு அடுத்தநாளே இமாம் அவர்கள் ஷஹீத் ஆக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது.

கி.வ. 1906 ஆம் ஆண்டு எகிப்தின் இஸ்மாஈலிய்யா பிராந்தியத்தில் மஹ்மூதிய்யா எனும் கிராமத்தில் பிறக்கும் இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் சிறுவயதிலேயே அல்குர்ஆனை மனனம் செய்துவிடுகிறார்கள். பால்ய பருவத்திலேயே தலைமைத்துவப் பண்புகளோடு இருக்கும் அவர்கள் தனது 10 வது வயதில் தன் வயது நண்பர்களுடன் இணைந்து ‘ஜம்இய்யத்து மன்இல் முஹர்ரமாத்’ (ஹராமானவற்றைத் தடுக்கும் சங்கம்) எனும் இயக்கம் ஒன்றைத் தொடங்குகிறார். அதன் மூலமாக மக்களுக்கு ஹராம்கள் குறித்து அறிவுறுத்தத் தொடங்குகிறார். கடிதங்கள் அனுப்பி அவர்களை நேர்வழிப்படுத்தும் முயற்சிக்கிறார். ஆனால் மக்கள் எங்கிருந்து கடிதம் வருகிறது என அறிந்திருக்கவே இல்லை.

இதன்போது நடந்த சம்பவமொன்று சுவாரஷியமானது. இமாம் பன்னா அவர்கள் சிறுவயதில் தரீக்கா ஷெய்க் ஒருவரிடம் பயிற்சி பெற்று வந்தார்கள். அவரது பெயர் ஷெய்க் முஹம்மத் ஸஹ்ரான்; அவர் ஒருமுறை தொழுகையிலே சிறு தவறொன்றை விட்டுவிடுகிறார். அவருக்கும் கடிதம் வருகிறது. கடிதத்தில் ஷெய்க் ஒருவராக இருக்கும் நீங்கள் இத்தவற்றைக் கூட செய்துவிடக்கூடாது என எழுதப்பட்டிருக்கிறது. அப்போது அவர் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் குறித்து ஃபிக்ஹு ரீதியாக அறிந்திருக்கவில்லை. எனவே அவர் மாணவர்களிடத்தில் வினவுகிறார். அப்போது சிறுவர் பன்னா அவர்கள் குறித்த மஸ்அலா தொடர்பில் பெரும் கலைக் களஞ்சியக் கருவூலமான ஃபத்ஹுல் பாரியின் விளக்கவுரையிலிருந்து தனது ஷெய்கிற்கு வாசித்துக் காட்டுகிறார்கள். இவ்வாறு சிறு வயதிலேயே அபார ஆற்றலும் ஆழ்ந்த வாசிப்பும் தலைமைத்துவப் பண்புகளும் கொண்டவராக இமாம் பன்னா இருந்து வந்தார்கள்.

இமாம் அவர்களுக்கு இப்பின்னணிகள் கிடைக்க அவரது வீட்டு அறிவுச் சூழலும் வாய்ப்பாயிற்று. அவரது தந்தை ஷெய்க் அப்துர் ரஹ்மான் அல்பன்னா அவ்ர்கள் ஒரு முஹத்திஸாகவும் தேர்ந்த வாசிப்பாளராகவும் இருந்தார்கள். அன்னவர்கள் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்) அவர்களின் முஸ்னதுக்கு விளக்கவுரையெழுதி ஃபிக்ஹுத் தலைப்புகள் வாரியாகப் பிரித்து 40,000 நபிமொழிகள் கொண்ட அக்களஞ்சியத்தைப் பயனாளர்களுக்கு மேலும் இலகுவாக்கினார்கள். இதைவிடவும் இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அபூஹனீபா ஆகியோரின் முஸ்னதுகளையும் இணைத்துத் தொகுத்தும் இருக்கிறார்கள்.

கடிகாரம் திருத்தும் தொழில் செய்யும் அவர் நுணுக்கமான ஆற்றல் கொண்டவராக இருந்தார். அவர் தன் மகன் ஹஸன் அல்பன்னாவிற்கு புத்தகங்களை மனனம் செய்யுமாறும்; அது அறிவின் கலைகளில் ஆழ்ந்த ஞானத்தைத் தருமெனவும் அடிக்கடி உபதேசம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இமாம் பன்னா பற்றி எழுதுவோர் அவர் மனனம் செய்து வைத்திருந்த நூல்களை இவ்வாறு பதிவு செய்கிறார்கள்: மொழி இலக்கணத்தில் ‘மில்ஹதுல் இஃறாப்’ – அகீதாவில் ‘அல்ஜவ்ஹராத்’ – ஹதீஸில் ‘அல்யாகூதிய்யா’ – ஹனபி ஃபிக்ஹிலே ‘ஃபத்ஹுல் கத்தூரா’ – ஷாபிஈ ஃபிக்ஹிலே ‘மத்னுல் ஃகாயா வத்தக்ரீப்’ – வாரிசுரிமைச் சட்டங்களில் ‘அர்ரஹ்பிய்யா’ உட்பட 18,000 க்கும் மேற்பட்ட அரபுக் கவிதைகள் எனப் பெரும் களஞ்சியமொன்றையே தனது மனன சக்திக்குள் உள்வாங்கியிருந்தார்கள்.

இமாம் பன்னா அவர்கள் அதிகம் நூல்களை எழுதவில்லை. இது குறித்து வினவப்பட்ட போது தான் புத்தகம் எழுதுபவர்களை உருவாக்குவதாகச் சொன்ன கூற்றுப் பிரபலமானது. இஃக்வான்களது பணிகளுள் தனிமனித உருவாக்கம் அடிப்படையானது. அத்தோடு இமாம் பன்னா அவர்களின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்த மஜ்மூஅது ரஸாஇல், முதக்கிராதுத் தஃவா வத் தாஇயா ஆகியவையும் உரைகளின் தொகுப்பான ஹதீஸுஸ் ஸுலஸாவும் அவர்களது ஆக்கங்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை.

மஜ்மூஅது ரஸாஇல் தொகுப்பே அவர்களது பட்டறிவைப் பறைசாற்றப் போதுமானது. அந்நூலை ஆராயும் இக்கால அறிஞர்கள் அந்நூலின் மூல வேர்களான மஸாதிர்கள் பற்றி விளக்குகையில் 4000 க்கும் மேற்பட்ட உசாத்துணைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களின் 30 க்கும் மேல் பாகங்கள் கொண்ட ‘மஜ்மூஉ ஃபதாவா’ தொடக்கம் இமாம் ஷாதிபி(ரஹ்) அவர்களின் களஞ்சியமான ‘முவாஃபகாத்’ வரைக்கும் பரந்து விரிந்து செல்கிறது. இதுவே போதும் இமாம் ஹஸன் அல்பன்னா(ரஹ்) அவர்களின் இமாலய வாசிப்பையும் சிந்தனை வீச்சையும் விளங்குவதற்கு… அதனை அறிமுகமட்ட வாசகர்களும் புரிந்துகொள்ளக் குறைந்தளவு அவரது ‘உஸூல் இஷ்ரூன்’ இருபது விதிகளையும் வாசிப்பதே போதுமானது.

இமாம் அவர்கள் பற்றிக் குறிப்பிடும் ஷெய்க் அல்கஸ்ஸாலி அவர்கள் இமாமவர்களிடத்தில் பொதிந்திருந்த மூன்று முக்கிய பண்புகளை அடையாளப்படுத்துகிறார்கள்:
ஆழமான அறிவு.
தான் சூழ்ந்திருக்கும் சமூகம் பற்றிய சமூகம் குறித்த மிகச் சரியான கணிப்பீடு.
கள அனுபவம்.

அவர்களது வாசிப்புப் பின்னணி, தினம் தினம் மேற்கொள்ளும் தஃவா பயணங்கள் போன்றன அவரது இத்தகைய ஆளுமைப் பின்னணியாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பின்படி அன்றைய எகிப்தில் காணப்பட்ட 4000 கிராமங்களுள் 3000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இமாம் பன்னா அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னொரு குறிப்பின்படி அவர்களுக்கு 50 இலட்சங்களுக்கும் மேற்பட்டவர்களது பெயர்கள் மனனமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பல இலட்சம்பேரது முகவரிகள் கூட மனனமாகியிருந்தன அவருக்கு.

ஷெய்க் ஜவ்ஹர் அல்தந்தாவி அவர்கள் இமாம் பன்னாவைப் பற்றிக் கூறும் போது, “ஹஸன் அல்பன்னா என்னிடத்தில் ஜமாலுத்தீன் ஆப்கானி மற்றும் முஹம்மத் அப்துஹுவை விடவும் விஷேடமானவர். உண்மையில் அவர்  தக்வா, நுண்ணறிவு, அரசியல் சாணக்கியம் என அனைத்தையும் கொண்டிருந்த அற்புதமான கலவை அவர். அலியின் இதயம் அவரிடம் இருந்தது. முஆவியாவின் விவேகமும் அவரிடம் இருந்தது.” என்கிறார்.

கலாநிதி இமாரா “இஸ்லாமை உயிர்ப்பித்து நகர்த்துவதிலும் இந்த யுகத்திக்கேற்ற திட்டத்தை வழங்குவதில் இச்சமூகத்தின் மார்க்கத்துக்கும் உலகிற்குமான புத்துயிர்ப்பான திட்டமிடலை ஆழ்ந்த தெளிவுடன் வினைத்திறனான செயற்றிறனுடன் வழங்குவதில் நடைமுறைக்கு நெருங்கிய செயற்பாட்டுத் திறனோடு வழங்குவதில் ஹஸன் அல்பன்னாவின் வரலாற்றுப் பாத்திரம் முக்கியமானது. அவரது பணி கால மாற்றங்களை உள்வாங்கியது; அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய காலத்திற்குப் பொருத்தமான செயல்திட்டம் இது.” என்கிறார்.

இமாம் ஹஸன் அல்பன்னா இதுபோல் ஒரு தினம் 1949 பெப்ரவரி 12ம் திகதி கெய்ரோவில் ராம்ஸஸ் சதுக்கமருகில் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அப்போது அவரது வயது 42 மட்டுமே… ஜம்இய்யத்து மன்இல் முஹர்ரமாத் அமைப்பைத் துவங்கும் போது அன்னாரது வயது பத்து மட்டுமே; முஸ்லிம் சகோதரத்துவ (இஃக்வானுல் முஸ்லிமீன்) அமைப்பை ஆரம்பம் செய்த போது வயது இருபத்திரண்டு தான். 42 வயதுள் ஷஹீதாகும் போது இவ்வுலகில் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க அன்னவர்கள் செய்துவிட்டுச் சென்ற பணிகள் மகத்தானவை.

இமாமுஷ் ஷஹீத் ஹஸன் அல்பன்னா அவர்கள் இஃக்வான்களின் பணி பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்: “உலக சுபீட்சம்தான் இஃக்வான்களின் பணி; மானிடம் முழுதையுமே சீரான இஸ்லாமிய ஒழுங்கின்பால் வழிகாட்டுவதும் அதனை நோக்கி மக்களை அறைகூவுவதும் இஃக்வான்களின் பணியாகும். இஸ்லாம் தவிர வேறொன்றால் மானிட சுபீட்சத்தைக் கொண்டுவந்திட முடியாது.” இதன் மூலம் இஃக்வான்களது தஃவா இலக்கு புவியியலால் முழு உலகு தழுவியது என்பதையும்; முழு மானிட சமுதாயத்தையும் இலக்கு வைக்கும் தஃவா என்பதையும்; இஸ்லாமே ஒரே தீர்வுத் திட்டம் என்பதையும் தெளிவாக முன்வைத்துவிட்டார்கள்.

அல்லாஹ் அன்னவர்களுடைய பணிகளை அங்கீகரித்து அவருக்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துப் பெற்றவர்களில் ஆக்கியருள வேண்டும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s