அறிவைக் கற்றுக்கொள்ளல்

knowledge_in_islam_by_mogaheda-d5qgvut

மனிதன் உடல், அறிவு, ஆன்மா என முப்பாகங்களை உள்ளடக்கிப் படைக்கப்பட்டிருக்கிறான். உடல் பகுதியைக் கவனிக்காத அறிவும் ஆன்மாவும் பிரயோஜனமற்றது; அறிவு பகுதியைக் கவனிக்காத உடலும் ஆன்மாவும் மடமை நிரம்பியிருக்கும்; ஆன்மீக பகுதி கவனிக்கப்படாத உடலும் அறிவும் வெற்று முண்டம்தான்.

இவ்வகையில் மனிதன் தன்னை அல்லாஹ் படைத்த பிரதிநிதித்துவ நோக்கத்தைப் பூர்த்தியாக்குவதற்கு தன்னை முழுமையாகத் தயார் செய்யவேண்டிய கடமை அவனுக்கிருக்கிறது. அதற்காக ஒன்றோடொன்று தொடர்பான தொடர்பான மேற்கூறப்பட்ட மூன்றையும் ஏற்ற விகிதத்தில் கவனிக்க வேண்டிய தேவையும் அவனுக்கிருக்கிறது.

இவற்றுள் முற்படுத்தி மனிதன் கவனித்து வளர்க்க வேண்டிய பகுதி அறிவுப் பகுதியாகும். அப்போது ஏனையவற்றுக்கும் ஏற்ற விதத்தில் இடமளித்து ஒரு முழு ஆளுமையாகப் பரிணமிப்பான். அறிவுதான் ஆன்மீகத்தை மேம்படுத்த வழி; அறிவுதான் உடலுக்குரிய பங்கை சரியான அளவில் கொடுக்க உணர்வூட்டும்.

* * * * * * *

அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாகிவிட மாட்டார்கள். நிச்சயமாக அடியார்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சி நடப்போர் அறிஞர்களே… குர்ஆனிய போதனைகள் எமக்கு இவ்வாறு இறையச்சத்துக்காக அறிவினை முதலீடாக்க அழைப்புவிடுக்கின்றது.

 اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا

இதனையே தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவினால் அல்லாஹ்வினால் நலவு நாடப்பெற்றவர்கள் என அடையாளம் செய்கிறார்கள். ஆம்… யாருக்கு அல்லாஹ் நலவினை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவைக் கொடுக்கிறான்.

(من يرد الله به خيرا يفقهه في الدين” (الحديث

எவர், தான் பெற்ற அறிவின் மூலம், செயல்படுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அறியாதவற்றையெல்லாம் அனந்தரமாக அளிக்கிறான்.

அறிவுஞானம், சிந்திக்கும் திறன் பெற்ற மனிதனுக்கு அதனை படிப்படியாக அதிகரித்துக் கொள்வது கடமையாகின்றது. சிந்தனைச் சறுக்கல்கள், அல்லாஹ்வை விட்டும் தூரமாதல் என அடிக்கடி பாதிக்கப்படும் மனித மனத்துக்குப் பல்வேறு விதங்களில் அறிவூட்டல் அவசியப்படுகின்றது.

இது கூட்டான அமைப்பிலும் இடம்பெற முடியும்… தனித்தனியே சுயமாகவும் இடம்பெறலாம். ஆனால், கட்டாயம் இது தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கவேண்டியதாகும்.

இதுவே அல்லாஹ்வால் தூய்மை உத்தரவாதப்படுத்தப்பட்ட நபிமார்களும் அறிவினைப் பெருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நின்றமையின் இரகசியமாகும். இதுவே அல்குர்ஆனில் அல்லாஹ், நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அறிவுரை பகரும் போது பிரார்த்திக்கக் காட்டிக்கொடுத்த வழிமுறையுமாகும்:

 “وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!” (தாஹா:114)

ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ்விடத்திலிருக்கும் அந்தஸ்து தனியானதாகும். அவ்வாறு ஈமான் கொண்டவர்களுக்குரியது போன்றே அல்லாஹ் சம அந்தஸ்தை அல்லாஹ் கல்வி ஞானம் உடையோருக்கும் வழங்குகின்றான். இன்னொரு வகையில் பார்த்தால் ஈமான் பூரணமடைவது அறிவு இணைவதன் மூலமாகத்தான் எனலாம்.

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ‌

“அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.” (முஜாதலா: 11)

கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் பற்றி தனது கருத்தொன்றை ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கிறார்கள்:

வழிகேட்டிலிருந்தும் சிந்திப்பவர்கள் பற்றி நான் அச்சமடையவில்லை… ஏனெனில் அவர்கள் சத்தியத்தின்பால் மீண்டுவிடுவார்கள். ஆனாலும் நான் நேர்வழியிலிருந்து கொண்டும் சிந்திக்காமலிருக்கும் மனிதன் குறித்துத் தான் அச்சப்படுகிறேன்… ஏனெனில் அவர்கள் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகுகள் போல் ஆகிவிடுவார்கள்.”

சிந்தனை தரும் கல்வியே நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. அது இல்லாத போது நமது அன்றாட செயற்பாடுகள் முதல் நேரடியாக நன்மைகளைப் பெற்றுத் தரும் வணக்க வழிபாடுகள் வரைக்கும் வீணாகிப் போய்விடலாம்.

கல்வி ஞானம் பெறுதலே இஸ்லாமின் முதல் அம்சமாக இருக்க முடியும். ‘இக்ரஃ’ என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாம் அத்திவாரமிடப்பட்டது. இஸ்லாமில் அறிவின் சிறப்புக்கள் பற்றி அதிகம் கூறித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அறிவே இஸ்லாமாக இருந்துகொண்டிருக்கிறது; இஸ்லாமே அறிவாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

பல நபிமொழிகள் அறிவைப் பெறுவது இபாதத்துக்களை விடவும், நபிலான வணக்கங்களை விடவும், ஜிஹாதைவிடவும் மேலோங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் பலதையும் சுட்டிக்காட்டுகின்றன. அறிவு மறுமைப் பயனோடு இணைத்து இம்மையிலேயே பயன்தரும் என்பது அதன் சிறப்பம்சமாகும்.

‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன்’ எனும் பிரபலமான குர்ஆனிய வசனத்துக்கு விளக்கம் சொன்ன இமாம் ஹஸனுள் பஸரி(ரஹ்) அவர்கள்: ‘அது இல்ம்-அறிவு மற்றும் இபாதா-வணக்கமும் ஆகும்’ என்கிறார்.

* * * * * * *

ஒரு முஸ்லிம் என்ற வகையில், அறிவைப் பெரும் ஒருவர் திட்டமிட்டுக் கற்பதும் கற்றலுக்குரிய பண்பாடுகளைப் பேணுவதும் உணர்வோடு கற்றலும் அவற்றை வாழ்வில் அழகிய முறையில் நடைமுறைப்படுத்துவதும் அதற்குரிய ஒழுங்குகளைப் பேணி நடப்பதும் அவர் மீது கடமையாகிறது. கற்றலை வினைத்திறனாக்க நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவற்றை இபாதத்தாகவும் மறுமைப் பயன் மிக்கதாகவும் ஆக்கிக் கொள்ள உதவும்:

  • அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமை என்ற உணர்வோடு இருப்பது கூடிய வினைத்திரனைத் தரும். இது நபியவர்கள் தமது பொன் மொழியொன்றிலும் ஏவியுள்ள அம்சமொன்றாகும்.

(طلب العلم فريضة على كل مسلم” (الحديث”

  • காலத்துகேற்ற வகையில் பல கலைகளைக் கற்பது பர்ளு கிபாயாவாக மாறியுள்ளது. அத்தகைய கலைகளை கற்றுக்கொண்டு சமூகத்துக்கான எமது பங்கை உரிய முறையில் நிறைவேற்றல்.

(فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ” (التوبة :122″

  • அல்லாஹ்வுக்காகக் கற்றல் என்ற எண்ணத்தை அடிக்கடி வரவழைத்துக் கொள்வது என்பது அறிவைத் தேடும் ஒவ்வொருவரும் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ள மேற்கொள்ளவேண்டிய செயற்பாடாகும்.
  • அறிவைத் தேடுதல் என்பது இடையில் நின்றுபோவதல்ல. அது முடிவின்றி இறுதிவரைக்கும் தொடர்ந்துகொண்டிருக்க வேண்டிய செயற்பாடாகும். இதுவே அல்லாஹ்வால் ஸுரத்து தாஹாவில் ‘ரப்பி ஸித்னி இல்மா’ எனும் பிரார்த்தனையூடாக சொல்ல வரும் செய்தியாகும்.
  • அறிவைத் தேடும் பனி பலமடங்கு பொறுமைகளை வேண்டி நிற்பதாகும். அதன் விளைவு மறுமை நாள்வரை தாமதிக்கக் கூடியதாகும். பொருளாதார முன்னேற்றம் என்பது அறிவைத் தேடலின் இலக்கல்ல போன்ற அடிப்படை உண்மைகள் ஒரு முஸ்லிம் அறிவை கற்றுக் கொள்ளும் போது ஆழமாக மனத்தில் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • ஆசிரியரை மதிப்பதும் உரிய கண்ணியத்தை இறுதிவரையும் கொடுப்பதும் அறிவை கற்றுக் கொள்பவன் முக்கியமாகக் கவனம்கொள்ள வேண்டிய விடயமாகும். ஆசிரியர் இன்றிய அறிவுதேடலும், ஆசிரியரை மதிக்காத அறிவுதீடலும் பெரும் மனித இழிவுக்கு இட்டுஸ் செல்லும் என்பது கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வரும் விடயம்.

அல்லாஹ் நம் அனைவரையும் நல் அருள் பெற்றோர் கூட்டத்தில் சேர்த்தருள் புரிய வேண்டும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s