இஃக்வான்களை விமர்சிப்பவர்கள் யார்?

711

காலத்துக்குக் காலம் கொஞ்சம் கூடியோ குறைந்தோ இஃக்வானுல் முஸ்மூன் இயக்கம் பற்றி தூற்றியும் இகழ்ந்துமோ, அல்லது விமர்சனத்தின் உச்சகட்டத்திற்குச் சென்று இனி இல்லை எனும் அளவுக்கு வெட்டித் துண்டாடி என சமயா சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்கள் எனப்படுவோர் கீறிக் கிழிப்பதுண்டு.

அவர்கள் சிலவேளைகளில் இஸ்லாமிய இயக்க விவகாரங்களில் பிரத்தியேகத் தேர்ச்சியுடைய எழுத்தாளர்களாயிருப்பர். அல்லது நடைமுறை விவகாரங்கள் குறித்த அறிவனுபவம் அல்லது சிந்தனா ரீதியான பார்வை கொண்டவர்களாக இருப்பர். அவ்வகையில் அவர்களது எழுத்துக்கள் தாக்கம் மிகுந்த வீச்செல்லையைக் கொண்டதாக இருக்கும்.

இரண்டாவது வகையினராக, அரசியல் செயற்பாட்டாளர்களைக் கூறலாம். அவர்களது எழுத்துக்களில் சொந்த அரசியல் பேராசைகள் மிகைத்திருக்கும். இத்தகையோர் கற்பனைகள் பண்ணிப் பண்ணி என்னவோ ஏதோவெல்லாமோ எழுதித் தள்ளுவார்கள்.

மூன்றாவது வகையினராக சும்மா ஏதோ எழுத வேண்டுமென்பதற்காக நல்லதாகவோ கெட்டதாகவோ எழுதுபவர்கள். அது அவர்களுக்கு அவர்களது புகழ் பரவவோ பிரபல்யம் அடையவோ காரணியாக அமையலாம்.

சிலபொழுதுகளில் நான்காவது வகையினரொன்றும் இருப்பர். அத்தகையோர் மூன்றாவது தரப்பொன்றால் தூண்டப்பட்டு எழுதிக் கொண்டிருப்பவர்கள். அத்தரப்பினர் பெரும்ப்பாலும் சில நாடுகளின் பாதுகாப்புத் துறையினராகவோ, புலனாய்வுத் துறைகளாகவோ, அரசியல் சக்திகளாகவோ இருப்பர். அவர்களது எழுத்துக்களுக்கு உண்மையில்  எவ்விதப் பெறுமானமும் இருக்காது. ஏனெனில் அவர்கள் ஒன்றை எழுதிவிட்டு மறுகணம் அதற்குத் தலைகீழான மற்றொன்றையும் எழுதுவார்கள். அவர்களுக்குப் பணம் கொடுப்பவர் எவரோ அதற்கேற்ப அவர்களது பேனாவும் நர்த்தனம் ஆடும். இங்கு வேண்டுவோர், வேண்டப்படுவோர் இரு சாராரும் துர்நோக்கம் கொண்டோராகவே இருப்பர்.

மேற்குறிப்பிட்ட எந்த வகையினரது எழுத்துக்களாக இருந்த போதும் எவரோ எழுதிவிட்டுப் போகிறார்கள் தானே என இருந்துவிட முடியாது. ஏனெனில், ஏதோவொரு வகையில் குறிப்பிட்ட அனைத்து எழுத்துக்களும் ஒரு சாராரிடமிருந்து இன்னொரு சாராருக்குக் கருத்துக்களையும் அபிப்ராயங்களையும் ஊடுகடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் முக்கியத்துவம் ஒவ்வொரு சாராருக்குமிடையில் வேறுபடலாம். அல்லது அவ்வெழுத்துக்கள் வெளியாகும் தளங்களைப் பொறுத்தும் வேறுபடலாம். அல்லது அவ்வெழுத்துக்களின் உள்ளடக்கத்துக்கு  ஏற்பவும் வேறுபடலாம்.

இங்கு சில எழுத்துக்களுக்கிடையில் நாம் தராதரங்கள் இருப்பதைக் காண்பதுவும் முக்கியமானது. அவற்றில் முக்கியமானவை சில சந்தர்ப்பங்களில் நல்ல படிப்பினைகளையும் தரக் கூடியது.

மீள்பரிசீலனைக்கான அழைப்பு:

குறிப்பாக ஜனவரி 25 புரட்சிக்குப் பின்னரான நான்கு வருட காலப்பிரிவில்; அதாவது இக்காலப் பிரிவில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி தொடர்பிலான இஃக்வான்களின் செயற்பாடுகள் மீதான விமர்சனங்களை நோக்குமிடத்து, அவர்ளுக்குத் தம் செயற்பாடுகள் மீதான மீள்பரிசீலயை மேற்கொள்ளுமாறும்; மற்ற முகாம்களுடனான விட்டுக் கொடுத்துப் போகும் போக்கிலும் மாற்றங்கள் செய்யுமாறும்; புரட்சிக்குத் தலைமை தாங்கும் இடத்தை விட்டும் நீங்குமாறும்; அவர்கள்தான் எண்ணிக்கையிலும் பரவலிலும் அதிக விளைவினைத் தரும் குழுவினர் என்ற சிந்தனையையும் அதிக மனிதவளம், பௌதிக வளம் கொண்டவர்கள் என்ற எண்ணத்தையும் விட்டுவிடுமாறும்; அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. ஆனாலும் சமவேளையில் இஃக்வான்களும் எவருக்குமே முடியாத நிலையில் தம்மை அனைத்துத் தரப்பினரும் ஏற்றி வைத்திருந்த புரட்சிக்கான தலைமை ஸ்தானத்தின் கொடியை உயர்த்திப் பிடிக்க அழைப்புக்களையும் விடுக்கின்றனர்.

இவ்விடத்தில் இஃக்வான்களைத் தாண்டி புரட்சியை வழிநடத்த விரும்பியோர், தாம்தான் அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெற்றவர்கள் என்றும்; தாமே ஊடகத்துறையில் நிபுணர்கள் போன்றும்; தாமே மனித உரிமை விவகாரங்களில் உச்சபட்ச செயற்பாட்டாளார்கள்  போன்றும்; பொருளாதார ரீதியில் பலமானவர்கள் போன்றும்; ராஜதந்திர ரீதியில் மிகுந்த லாயக்கானவர்கள் போன்றும் கற்பனைகள் பண்ணி வைத்திருந்தனர். எனினும் அவர்கள் எல்லோருக்கும் இஃக்வான்கள் தம்முடனேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவையும் இருந்தது. உண்மை நிலவரத்தை அவதானித்துப் பார்ப்பின் அவர்களுள் எவருக்குமே மேற்கூறிய தகுதிகள் இல்லை. இன்னொரு யதார்த்தம் என்னவெனில் இஃக்வான்கள் தவிர வேறு எவருமே களத்தில் தம் உயிர்களையும், உறவுகளையும், உடமைகளையும் தியாகம் செய்வதற்குத் தயாராயிருக்கவில்லை. அதில் சிலர் தாம் அரியாசணம் ஏறுவதற்கு இஃக்வான்களே களத்தில் இறங்கி தம்மைப் பலியிட்டுக் கொள்ளவேண்டும் என்பதுபோல் நினைத்திருந்தனர்… ‘புதிய தலைமைகளை உருவாக்கல்’-‘புதிய இரத்தம் பாய்ச்சல்’ போன்ற சந்தைக் கேள்வி மிக்க சொற்களையிட்டு அவர்கள் முன்வைத்த வேண்டுக்கோள்களும் அவ்வாறே இருந்தன.

உண்மையில் இஃக்வான்களைத் தவிர்த்து வேறு யாரும் அரசியலிலோ, ஊடகவியலிலோ, மனித உரிமைச் செயற்பாடுகளிலோ, பொருளாதார பலத்திலோ, ராஜதந்திர ரீதியிலோ இஃக்வான்களை விடவும்  மேலானவர்களாக இருந்திருப்பின், அவர்களால் ஏன் முன்சென்று புரட்சியின் தலைமையை ஏற்க முடியாது? அவர்களிடம் இருப்பதாக அவர்களே நம்பிக் கொண்டிருக்கும் மேற்கூறிய பலங்களினால் அவர்கள் கடந்த காலங்களில் சாதித்தது என்ன? அவர்களால் ஏன் கடந்த காலங்களில் இஃக்வான்களோடு இயங்க முடியாதிருந்தது? இஃக்வான்கள் தலைமையேற்பதில் அவர்களுக்கு இத்தகைய தீதான எண்ணங்களும் அவர்களது வலைப்பின்னல், அவர்களது முறைமைகள் தொடர்பிலும் இவ்வளவு மட்டமாக அவர்களது எண்ணங்களில் இருந்திருப்பின்… ஏன் இப்போது மட்டும் இஃக்வான்களில் தங்கியிருக்கவும் அவர்களோடு அணி சேரவும் வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது?

தலைமைகளைக் குறித்த முன்னெச்சரிக்கை:

ஆரம்பத்தில், இங்கு பல சந்தர்ப்பங்களில் இஃக்வான்களின் தலைமைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க  வேண்டிய தேவைகள் ஏற்பட்டன. குறிப்பாக 2011 ஜனவரி 25க்குப் பின்னரான காலப் பகுதிகளிலிருந்து இன்றுவரைக்கும் அது தேவைப்பட்டது. இக்காலப் பகுதிகளில் பல்வேறுபட்ட பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்டனர். அது, பாதகமான விளைவுகள் பலதையும் தந்தது.

அவர்களை விடவும் ஏனையோரது முன்னேச்சரிக்கை அதிகம் என நான் கூறவே மாட்டேன். அவர்கள்தான் புரட்சியின் உயிர்நாடியைக் கையில் வைத்திருந்தார்கள். அதன் கொடியை முன்னே சுமந்து சென்றவர்கள். ஏனெனில் அவர்கள்தான் புரட்சியில் பங்கெடுத்த மிகப் பெரும் குழுவினர். இங்கு முக்கியமானதொரு கேள்வி இருக்கிறது. சகோதரத்துவ உறுப்பினர்கள் தவிர்த்து எவரும் இராணுவத்தின் கொடுங் கரங்களைத் தாங்கிக் கொண்டு புரட்சியை சுமந்துகொண்டு செல்ல சக்தி படைத்தவர்கள் இருக்கின்றனரா? அவ்வாறு வேறு ஏதும் சக்திகள் இருக்கின்றனவா? அவ்வாறான அரசியல் சக்திகள் ஏது?

இந்த விமர்சகர்களை ஏறெடுத்துப் பார்த்து, எது சரியான விமர்சனம், எது தூய நோக்கம் கொண்டது என அறிந்துகொள்வதற்கு இன்று நம்மிடையே நபிமார்களோ ஏனைய புனிதர்களோ என எவருமே இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது, ஆம்… அத்தகையோருள் அநேகர் சுயநலவாதிகள், குரோதம் கொண்டு அலைவோர், சந்தர்ப்பவாதிகள், அனைத்தையும் சீர்குலைத்து சீரழித்துத் திரிவோர்… தம் சுய விருப்பிலோ விருப்பின்றியோ… பிறரின் துண்டலுக்கேற்பவோ இல்லாமலோ… எதுவாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தீங்கு எண்ணம் கொண்டோர் தான்…

இவர்கள் எல்லோரையும்விடக் கேவலமானோர் தான், இஃக்வான்களின் பெறுமானத்தை அறிந்து, அவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து, அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்புக்களையும் மறுத்துக் கொண்டு அலைவோராவர். இவர்கள் மிகக் கேவலமான முறையில் இஃக்வான்களது அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்த சூசகமாகக் காரியம் புரிவோர் ஆவர்.

இவ்வகைப் புதுவித தாஈக்கள் இஃக்வான்களை வளப்படுத்தப் போவதாக கூறித் திரிந்துகொண்டே பிரிவினையை மூட்டப் பார்க்கின்றனர். இவர்களுள் நல்லெண்ணத்துடன் இஃக்வான்களை அணுகுவோரும் உள்ளனர். இன்னுமொரு சாரார் இஃக்வான்களுக்கு அரசியல் முகமொன்று இருக்கக் கூடாதென்ற தீய எண்ணத்தில் அதனை சிதைத்து விடும் நோக்கத்தோடு அணுகுவோரும் இருக்கின்றனர்.

மூன்றாவதாக ஒரு கூட்டம் எந்தப்பக்கம் காற்று வீசுகிறதோ அங்கு போய் ஒட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். எந்தப் பிரக்ஞையும் அற்று அவர்கள் இஃக்வான்களுக்கு. எதிராக எவர்கள் இருப்பரோ அங்கெல்லாம் அவர்களும் இருப்பர். ஒன்றினது பின்னணியோ அறிவோ எதுவும் கிஞ்சித்தும் அவர்களிடம் இருக்காது.

புரட்சித் தரப்பினர்களை ஒன்றிணைக்கும் இஃக்வான்களது முயற்சிகள்:

இராணுவப் புரட்சிக்குப் பிந்திய கடந்த இரு வருடங்களுக்குள்ளால் புரட்சியின் பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கும் நான் நன்கறிவேன். பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்களையும் நான் நன்கறிவேன். அவர்கள் மேற்கொண்ட பல்வேறுபட்ட சிந்தனாரீதியான, அறிவுரீதியான, செயல்பாட்டு ரீதியான பல்வேறுபட்ட முயற்சிகளையும் நான் நன்கறிவேன். அவர்களது முயற்சிகள் எகிப்தையும் தாண்டி சர்வதேச ரீதியானதாக இருந்தது. அவர்கள் எகிப்திய மைந்தர்களின் குருதியைப் பாதுகாக்க வேட்கையோடு மேற்கொண்ட உழைப்புக்களை நான் நன்கறிவேன். எகிப்து அனைவருக்குமானது என்பதில் அவர்கள் உறுதியோடு நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.

ஒரு சிலர் தான் எந்தப் பிரக்ஞையும் இல்லாது, எந்த அறிவும் இல்லாது அவர்கள் மீது அவதூறு சொல்லித் திரிகிறார்கள்; எவ்வித ஆதாரமும் இல்லாது விமர்சிக்கப் பார்க்கிறார்கள்; அதிலே அளவு கடந்து செல்கிறார்கள். மனிதர்கள் என்ற வகையில் தவறுகள் இடம்பெறுவதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்பதை ஏற்கலாம்.

ஆனால், இம்மனித இயல்புகள் பற்றி அறிந்துகொண்டே நாம் இனிச் செய்யவேண்டியது என்ன? இனி நடக்கப் போவதென்ன? எதிர்காலம் எமக்கு எவ்வாறு அமையப்போகிறது? எமக்கெதிரானவற்றை எவ்வாறு மிகைப்பது? முன்வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான பொறிமுறைகள் திட்டமிடல்கள் என்ன? என்பன பற்றியெல்லாம் சிந்திக்கவேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கிறோம்.

இக்கேள்விகளை எழுப்புவதோடு நான் இருந்துவிடுவதில்லை. மட்டுமன்றி அதற்கு மேலால் மேர்குறித்த கேள்விகளுக்கான விடைகளாக ஏராளம் ஆய்வுகளும் களத் தகவல்களும் துறைசார் நிபுணர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை சிந்தனைத் தளத்திலிருந்து இயக்கத் தளத்திற்கு நகர்த்த நான் முன்மொழிவு செய்கிறேன்.

இவற்றுக்கெல்லாம் எவருக்கு சக்தி வாய்த்திருக்கிறதோ அவர்கள் புரட்சியை முன்நகர்த்திச் செல்வர். சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எவரெவெரோ வந்து தமக்கு ஆட்சிக் கட்டிலைத் தயார்படுத்தித் தருவார்கள் என்று; பின்பு தம்மால் சுகபோகமாக ஆட்சிக் கதிரையை சுவைக்கலாம் என்றும்… மற்றவர்கள் எப்போதும் தமக்கு சேவகம் புரிவோராக இருக்கவேண்டுமெனவும் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தகையோர் எவரோ ஒருவருக்குப் பொம்மையாக இருந்துவிட்டுத் தான் போவார்கள். ஏனெனில் இங்கு பெரும் எண்ணிக்கையிலானோர் ஆட்சியைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து காரியம் சாதிக்கத் துடிக்கும் அரசியல் நிபுணர்கள், ஊடக முதலைகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பண முதலைகள், ராஜதந்திர நரிகள் எனப் பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளார்: இஸாம் அப்துஷ் ஷாஃபி (அரசியல் விவகாரங்கள் குறித்த எகிப்திய ஆய்வாளர்)

தமிழ்த் தழுவல்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி

நன்றி: அல்ஜஸீரா முபாஷர் இணையதளம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s