இஸ்லாம் நடுநிலையான மார்க்கம் என்பது…

CommunityModeration

1

“எமது மார்க்கம் நடுநிலையின் (வஸதிய்யா) மார்க்கமாகும்… நடுநிலை என்பது இரண்டு அசத்தியங்களுக்கிடைப்பட்ட சத்தியமாகும்; இரு அநியாயங்களுக்கிடைப்பட்ட நீதியாகும்; இரு அத்துமீறல்களுக்கிடைப்பட்ட சமநிலையாகும்; அது சத்தியத்தின் பகுதிகளுக்கிடையிலான இணைப்பாகும்; அது நியாயமாகும்; அது அத்துமீறுவதிலும் அலட்சியப்போக்கில் அளவுகடந்துசெல்வதைத் தடுப்பதுமாகும்” இவ்வாறு சொல்பவர் சர்வதேசப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரான கலாநிதி அலி முஹியுத்தீன் அல்கரதாகி அவர்கள்.

அவர்  இஸ்லாம் சொல்லும் நடுநிலையை அழகாக விளங்கப்படுத்துகிறார். நடுநிலை சிந்தனையின் வழிமுறைகளானது இஜ்திஹாத் செய்வதற்கென அறிவின் பெரும்பகுதிக்கு வாய்ப்பளித்து இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்களையும் அது அடியார்களிடம் நாடும் விடயங்களையும் பேணியவாறும் முதன்மைப்படுத்தலுக்குரிய அம்சங்களைக் கவனத்திற்கொண்டவாறும் தீங்குகள் தவிர்க்கப்படுவதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டும் வஹியின் நிழலில் அமைவதாகும்.

அத்தோடு நடுநிலையென்பது நோக்கங்கள் மற்றும் கிளையம்சங்களுக்கிடையில் சமநிலை பேணியும் சட்டவசனங்களுக்கும் மார்க்கத்தீர்ப்புக்களைப் பெறுவதில் அடியார்களின் நலன்களுக்குமிடையிலான பலமான தொடர்புடனும் அமையவேண்டும். அதிலே முரண்பாடுகளோ எதிரும்புதிருமான நிலைப்பாடுகளோ இருக்கமுடியாது.

நடுநிலைமைதான் முஹம்மதிய தூதின் கருப்பொருள் ஆகும். அதனால்தான் அது ஜாஹிலிய்யக் காலம் கொண்டிருந்த போற்றத்தக்க பண்புகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டது. அதேநேரம் மனித நலன்களை நாறடிக்கும் வெறிகளையும் சிசுப் புதைத்தல்களையும் அடியோடு இல்லாதொழித்தது.

முஹம்மதிய சமூகத்தை நடுநிலை சமூகமென அல்லாஹ் வர்ணிக்கும் விதமே அலாதியானது:

“மேலும் அவ்வாறே நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆவதற்காகவும் நமது தூதர் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடுநிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்” (அல்பகரா:143)

இவ்வசனத்தைப் பாருங்கள்… சூரத்துல் பகராவின் 143வது வசனம். அல்குர்ஆனின் மிகப்பெரிய சூராவிலுள்ள 286வசனங்களிலும் மத்தியிலே அமைந்திருக்கின்ற வசனமாக இது அமைந்திருக்கின்றது. அதிலும் கூட அல்குர்ஆனின் கணக்கியல் அற்புதத்தையும் ஒரு நிலையான செய்தியையும் எம்மைப் படைத்தவன் எமக்குத் தந்துவிட்டான்.

இஸ்லாமின் அற்புதக் கோட்பாடான நடுநிலைத் தன்மை குறித்து அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி அவர்கள் பின்வரும் வார்த்தைகளில் விளக்குகிறார்கள்:

“இஸ்லாமின் அலாதியான சிறப்புக்களுள் ஒன்றுதான் நடுநிலை பேணலாகும். அதனை சமநிலை பேணுதல் எனவும் நாம் அழைக்கலாம்.அதன்மூலம் நாம் கருதுவது இருவேறுபட்ட முரண்பாடான கருத்துநிலைகளுக்கு மத்தியில் நடுநிலையை அனுசரிப்பதாகும். அது எவ்வாறெனில் எமது நிலைப்பாட்டின் மூலம் ஒரு பகுதிக்கு அழுத்தம் கூடி மற்றப்பகுதி புறக்கணிக்கப்படும் நிலை உருவாகாமல் அந்தந்தப் பகுதிகளுக்கு அதற்குரிய அளவைக் கொடுப்பதாகும்… நடுநிலை பேணுவதுதான் நாம் பாதுகாப்பான எல்லைக்குள் இருக்கிறோம் என்பதற்குஅடையாளமாகும். அதுதான் அபாயங்களைவிட்டும் தூரமாக்கக்கூடியது. விளிம்புகளுக்கே செல்வது எப்போதும் நடுநிலைக்கு மாறாக அபாயங்களையும் சீர்குலைவுகளையுமே ஏற்படுத்தும். எனவே அதுதான் எம்மைப் பாதுகாத்து வைக்கும் காவலாளியாகும்.”

சூரத்துல் மாஇதாவில் பின்வருமாறு ஒரு வசனம் வருகிறது: “வேதத்தையுடையவர்களே நீங்கள் உங்கள் மார்க்கத்திலே உண்மையல்லாத்தைக் கூறுவதன் மூலம் வரம்பு மீறாதீர்கள். தவிரவும் முன்பு தெளிவாகவே வழிகெட்டுவிட்ட கூட்டத்தாரின் மனோ இச்சைகளையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனெனில் அவர்களும் வழிகெட்டு) மேலும் அநேகரையும் வழிதவறவும் செய்துவிட்டனர். மேலும் அவர்கள் முற்றிலும் நேரான வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டனர்.” (அல்மாஇதா:77)

வரலாற்றிலிருந்து தீவிரவாத சிந்தனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உலகை சமநிலை குழம்பச் செய்தோர்க்கு உதாரணமாக அல்குர்ஆனால் இஸ்லாமுக்கு முன்னர் வேதத்தைப் பெற்றவர்களான யூதர்களும் கிறிஸ்தவர்களுமே கூறப்படுகின்றனர். யூதர்கள் உலகை அனுபவிப்பதில் அளவு கடந்து சென்றனர். கிறிஸ்தவர்கள் ஆன்மாவைப் பலப்படுத்தல் என்ற போர்வையில் மனிதனின் உடல் தேவைகளை முற்றாகப் புறக்கணித்து இறுதியில் மேற்கில் மனித மூளைகள் தோற்றுவித்துக்கொண்ட சிந்தனைகள் மதத்தையே வேண்டாமென ஒதுக்கி தேவாலயங்களுக்குள் பூட்டி வைக்கும் நிலையளவுக்கு சென்றன. இதுதான் கடும்போக்கினதும் பொடுபோக்கினதும் இருதுருவ நிலைகளாகும்.

வேதம் வழங்கப்பட்டவர்கள் அத்துமீறிச் சென்றமை குறித்து இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கீழ்வரும் வார்த்தைகளை வழங்குகிறார்கள்:

மார்க்கத்திலே வரம்பு மீறுவதென்பது மதத்தைப் பின்பற்றும் ஒருவன் அவனுக்கு மார்க்கம் வகுத்திருக்கும் எல்லைகளைத் தாண்டுவதாகும். ஆனாலும் மதம் அவர்களை எல்லை மீறுவதைவிட்டும் தடுத்திருக்கிறது.ஏனெனில் அவர்களில் அதிகமானோரின் வழிகேட்டுக்குக் காரணம் அளவுகடந்து சென்றமையும் தூதர்மார்களைப் பொய்ப்படுத்தியதுமேயாகும்… அவ்வகையில்தான் வேதம் வழங்கப்பட்டோரும் வரம்பு மீறிச் செயற்படுவதென்பது அவர்களுக்கு அவர்களது மதம் வேண்டியதை விட்டும் கடந்து செல்வதாகும். அவ்வகையில்தான் யூதர்கள் தவ்ராத்திலும் அவர்தம் தூதர்மாரிலும் வைத்த அதீத நேசம் ஈஸா(அலை) மற்றும் முஹம்மத்(ஸல்) போன்றோர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. அவ்வாறுதான் கிறிஸ்தவர்களும் ஈஸா(அலை) அவர்களைப் புனிதப்படுத்துவதில் அளவுகடந்து அவரைக் கடவுளென்றோ அல்லது கடவுளின் மகன் என்றோ ஆக்கும் அளவுக்கு வரம்பு மீறினர்.

2

மனிதனின் இயல்பு நிலையே நடுநிலை சிந்தனையாகத் தான் இருக்கிறது. நடுநிலை சிந்தனையின் அரசியல் முகம் என்றுஒன்றும் இருக்கிறது. இராக் மற்றும் சிரிய தேசங்களில் கடந்த ஜூன் மாதங்களளவில் ஒருதலைப்பட்சமான ஃகிலாபத்பிரகடனம் மேற்கொண்ட தீவிரவாத இயக்கமான ISIS இன் அறிவிப்பை கலாநிதி அஹ்மத் அர்ரய்ஸூனி அவர்கள் ”இது ஒரு சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை” என வர்ணித்திருந்தார்கள். இதனை விடவும் கலாநிதி யூசுஃப் அல்கர்ளாவிஅவர்கள், ஷெய்ஃக் ராஷித் அல்கன்னூசி அவர்கள் எனப் பலரும் இந்தக் கோமாளித்தனத்திலிருந்து இஸ்லாமைப்பாதுகாக்கும் நோக்கில் ISIS ஐயும் அதன் கருத்துக்கள் குறித்துமான இஸ்லாமிய நிலைப்பாடுகள் பற்றி மிக ஆழமாகவும்காரசாரமாகவும் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

உண்மையில் வரலாறு நெடுகிலும் பார்த்தால் உலக வரலாறு எழுதப்படுவதென்பது அரசியல் வரலாறு எழுதப்படுவது மாத்திரம்தானோ என எண்ணும் அளவுக்கு அரசியலும் அரசியல் சார்ந்தோரினது சரிதங்களும் சம்பவங்களும் மிதமிஞ்சியதாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் உலகம் படிப்பினை பெறுவதற்கும் ஒன்று குறித்த அளவீட்டைப் பெறுவதற்கும் அதன் அரசியல் வரலாறையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. உலகத்தின் சுகண்டிகளை மிதமிஞ்சி சுரண்டிக்கொள்ளும் யூத மதமோ அல்லது மத்தியகாலக் கிறிஸ்தவமோ அல்லது பழம்பெருமை பேசும் இந்துத்துவமோசாதாரண நடுத்தர வாசகனால்கூட கீழ்நிலையில் வைத்து நோக்கப்பட அவை விட்டுச் சென்ற அரசியல் சிதிலங்களும்வடுக்களுமே காரணமாய் அமைந்திருக்கின்றன. இங்கு இஸ்லாமிய வரலாறென்பதும் பெருமளவில் அரசியல் வரலாறாகமட்டுமே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

அவ்வகையில்தான் இஸ்லாம் கூறும் நடுநிலை சிந்தனையை அது கூறும் அரசியல் சித்தாந்தத்தின் நிழலில் வழங்கவேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம். இஸ்லாம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் எவரும் அதன் நீதித்தன்மையைச்சான்றுபகரும் விதத்தில் மகோன்னதம் மிகுந்த தலைவர்களின் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறது.

மேலும் தற்கால சூழலைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்படும்முஸ்லிம்களுக்காய்க் குரல் கொடுக்கும் மாற்றுச்சித்தாந்தங்களின் சிந்தனையாளர்கள் மற்றும்செயற்பாட்டாளர்கள் கூட நாம் களத்துக்குக் கொண்டுவரநினைக்கும் அரசியல் இஸ்லாம் குறித்த போதியதெளிவின்றியோ அல்லது ஒருவகைப்பட்ட அச்சநிலைப்பாட்டிலோ தான் இருக்கின்றனர். எனவே அரசியல்கண்ணோட்டத்தில் இஸ்லாமின் நடுநிலைக் கோட்பாட்டைக் கட்டாயம் வழங்க நாம் வேண்டப்பட்டிருக்கின்றோம்.

இஸ்லாம் கூறும் வாழ்வியல் பண்பாடுகள் மற்றும் விழுமியங்கள், இஸ்லாம் கூறும் நம்பிக்கைக் கோட்பாடு, இஸ்லாம்கூறும் விஞ்ஞானம்… என அனைத்தும் விமர்சனங்களை வென்று அந்தந்தத் தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் பல்வேறுபட்ட தளங்களிலும் மக்களின் விடிவுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களுக்கு இன்னும் இஸ்லாமின் நடுநிலைக் கோட்பாடு சென்றடையவில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. அவ்வாறாயின் நாம் அரசியல் இஸ்லாம் குறித்த முழுமையான விம்பத்தை வழங்கவேண்டுமாயின் இக்காலத்தின் மொழியில் அதனைக் கொடுக்கவேண்டும். மனித மூளைகள் உருவாக்கிக் கொண்ட ஜனநாயகம் என்ற முடம் மிக்க தத்துவத்தை விடவும் இஸ்லாம் கூறும் ஷூரா அரசியல் சிறப்பு மிக்கது என்பதைத் தகுந்த வகைமாதிரியில் முன்வைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் ஒடுக்கப்படும் மக்களுக்காய் அரசியல் செய்யும் பரந்துபட்ட உலக வலையமைப்புக்களுடன் இணைந்து காத்திரமான பங்களிப்புக்களைச் செய்யவேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்தப் பங்களிப்புக்கள்தான் நிச்சயம் இஸ்லாமின் நடுநிலைத் தன்மையை சான்றுபகர்வதாய் அமைந்து அரசியல் இஸ்லாம் அதிகாரத்துக்கு வரக் கால்கோளாய் அமையும்.

மக்களைப் படைத்து மக்களுக்கான சட்டங்களை வகுத்தும் கொடுத்து உலகிலே சுபீட்சங்களை நோக்கி மக்களை அழைக்குமாறும் அவலங்களை விட்டும் பாதுகாக்குமாறும் முஹம்மது நபியின் சமுதாயத்துக்கு ஏவி அதனை வெற்றிபெற்ற சமூகமாகவும் வர்ணித்த வல்லநாயன் அல்லாஹ் இவ்வாறு அச்சமூகத்தை அடையாளப்படுத்துகிறான்:

“மேலும் அவ்வாறே நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆவதற்காகவும் நமது தூதர் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடுநிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்” (அல்பகரா:143)

எனவே நாம் நடுநிலை வழியிலான போராட்டத்தை மேலும் மேலும் மெருகேற்றவேண்டியிருக்கிறது. கலாநிதி முஹம்மத் இமாரா அவர்களது வார்த்தைகளில் சொல்வதானால் எமது மார்க்கத்தின் அடிப்படைகளை சிந்தனைகளிலும் வாழ்க்கையிலும்; கோட்பாட்டிலும் பயிற்சியிலும் நடைமுறையிலும் வஸதிய்யா (நடுநிலை) சிந்தனைகளால் வடிவமைக்கவேண்டியிருக்கிறது.

உலகிற்கு சுபீட்சமான சூழலொன்று தேவைப்படும் இச்சந்தர்ப்பத்திலே 160 கோடி உறுப்பினர்களுக்கும் மேற்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட பேரியக்கமாக ஏன் எம்மால் உலக சுபீட்சத்துக்காகப் போராட முடியாதுள்ளது. அதன் தேவை உலகிற்கு மிக அவசியப்படும் நேரத்தில் இந்நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. எமக்குத் தரப்பட்டிருக்கும் மனிதவளம் என்ற அமானிதத்துக்கான துரோகமாகக் கூட அது அமைந்துவிடும்.

தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் கூட பல்வேறுபட்ட பிராந்தியங்களுக்கும் மார்க்கத்தைச் சுமந்து சென்றனர். ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு வகையான முதுசங்களைச் சுமந்ததாயிருந்தது.அனைவரையும் ஒரே கருத்தில் எடுப்போமென அவர்கள் எண்ணியிருந்தால் அங்கே குழப்பங்கள்தான் மிஞ்சியிருந்திருக்கும். கருத்து வேறுபாடுகள் இருப்பதென்பது கோளாறல்ல. மாறாக ஒரு கருத்திலே வெறிகொண்டு மனிதர்களின் அறிவையும் அவர்களது கருத்துக்களையும் ஆக்கிரமிக்க முனைவதுதான் கோளாறாகும். எனவே எமது பன்முகப்பட்ட சிந்தனைப் பின்புலங்களுக்கு மத்தியிலும் நாம் உலகின் சுபீட்சத்துக்காக முன்னே செல்ல வேண்டியிருக்கிறது. அது நிச்சயம் இஸ்லாமின் நடுநிலை சிந்தனையை விளங்கியோரால்தான் பெற்றுக்கொடுக்க முடியுமான இலக்காகும் என்பது பொய்யாக மாட்டாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s