சுன்னி – ஷீஆ இணைப்பில் எப்பயனும் கிடையாது என்கிறார் ஷெய்க் அல்கர்ளாவி

000_par1226405

உலக முஸ்லிம் சனத்தொகையில் 20% ஐ அண்மித்த குறிப்பிடத்தக்க சனத்தொகை கொண்டவர்களாக ஷீஆக்கள் காணப்படுகின்றனர். இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பத்திலேயே ஓர் அரசியல் முரண்பாடாக உருவாகி, தனித்த ஓர் அரசியல் குழுவினராக இயங்கிய ஷீஆக்கள் காலப்போக்கில் அகீதா ரீதியாக வழிகெட்டு, தூய இஸ்லாமை விட்டும் மிகத் தூரமான பிரிவினராகினர். இஸ்லாமுக்குள் புகுந்து அதனை சீர்குலைக்க வழிதேடிக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா போன்ற யூத, நயவஞ்சகப் பின்னணியுடையோரின் பிரசார வலைக்குள் அவர்கள் வீழ்ந்து போனதே முக்கிய காரணமாயிற்று. அத்தோடு பாரம்பரியமாக இருந்துவந்த ‘பாரசீக’ – ‘ஆரிய’ மேலாதிக்க உணர்வு அவர்களுக்குள் இருந்ததால் அரேபியரின் ஆட்சிக்குக் கட்டுப்ப்பட்டு இருப்பதை விரும்பாமை காரணமாக அலியையும் பாரசீகத்தில் பெண்ணெடுத்த ஹுஸைனையும் முன்னிறுத்தி செய்யப்பட்ட நயவஞ்சகப் பிரசாரம் பாரசீகப் பகுதிகளில் பெரும் செல்வாக்குப் பெற அடிப்படைக் காரணமாயிற்று.

வெறும் அரசியல் கோஷமாக உருவெடுத்த ஷீஆக்களின் கூட்டங்களிலிருந்து காலப்போக்கில் இஸ்லாமுக்கு முற்றிலும் முரணான புதிய மதங்களும் தோற்றம்பெற்றன. துரூஸிகள், பஹாயிகள் போன்றோரது ஊற்றுக்கண் ஷீஆக்களிடமிருந்தே என்ற வரலாற்று உண்மை இங்கு ஈண்டு குறிக்கத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு காயங்களை ஏற்படுத்திய சுன்னி-ஷீஆ பிளவுகள் உஸ்மானிய கிலாபத்தைத் தொடர்ந்து இன்னும் பல மடங்கு வீரியம் கொண்ட காயமாக உரு மாற்றப்பட்டு முஸ்லிம்கள் எழ முடியாத சக்தியாக ஆக்கப்படுவதற்கு மேற்கு நாடுகள் மற்றும் சியோனிஸ சக்திகள் கைங்கரியம் செய்வதை இஸ்லாமிய அறிஞர் பெருமக்களும் சிந்தனையாளர்களும் உணர்ந்தனர்.

இதன் விளைவாக சுன்னி-ஷீஆ முரண்பாடுகளை இழிவளவாக்கி முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் பல்வேறு அறிஞர்களும் களமிறங்கினர். இதில் குறிப்பிடத்தக்க பண்ணியாற்றியவர்களாக இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமைக்காக சிந்தனை ஒருமைப்பாட்டுக்காகப் பணியாற்றியவர்களாக எம்மால் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி மற்றும் ஷெய்க் யூஸுஃப் அல்கர்ளாவி ஆக்கியோரைக் குறிபிட முடியும். இரு தரப்பு அறிஞர்களுக்கும் மத்தியில் பல மாநாடுகளை ஒன்றுகூட்டி முரண்பாடுகளைக் களைவதற்கு இவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் விளைவாக ஷெய்க் கஸ்ஸாலி மற்றும் ஷெய்க் கர்ளாவி ஆகியோர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினர். இன்றுவரைக்கும் இதன் எதிரொலியாக அவ்விரு அறிஞர்களையும் ஷீஆக்கள் போன்று சித்தரிக்கும் சிறுபிள்ளைத்தனங்களை சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கிறது.

இன்னும் சிலர் ஒருபடி மேல்சென்று நகைப்புக்கிடமான முறையில் அவ்விரு அறிஞர்களும் பயிற்றப்பட்டு உருவாக்கப்பட்ட இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பைக் கூட ஷீஆக்களாக சித்தரிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோருள் நம் உள்ளூர்ப் பெருந்தாடி முல்லாக்கள் கூட இருக்கிறார்கள். இதற்குப் பின்னால் தம் மன்னராட்சி குறித்து எப்போதும் குலைநடுங்கிக் கொண்டிருக்குப்போரின் ரியால்களும் திர்ஹம்களும் காரணிகள் என்பது பாமரர்களுக்கும் தெரியாததல்ல. இவ்விடத்தில் ஷெய்க் அல்கர்ளாவிக்கு மாற்றமாக பல இஃக்வானிய அறிஞர்கள் சுன்னி-ஷீஆ இணைப்பை எதிர்த்த நிலைப்பாட்டில் இருந்தனர் என்பது முக்கிய செய்தியாகும். இவர்களில் குறிப்பாக இராக் தேச இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் முக்கிய அறிஞரான அபூ அம்மார் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்களது கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இராக்கில் நேரடியாக ஷீஆக்களோடு புழங்கிய அவரது கருத்துக்கள் உண்மையில் யதார்த்தமானவை. ‘ஷெய்க் கர்ளாவி போன்றவர்கள் எவ்வளவுதான் சுன்னி-ஷீஆ இணைப்பு, நெருக்கம் குறித்துப் பேசிய போதிலும் ஷீஆக்கள் ஒருபோதும் மாற்றங்களுக்குள்ளாக மாட்டார்கள்’ என்ற தொனியில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

இப்பின்னணியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையின் தலைவர் பேரறிஞர் யூஸுஃப் அல்கர்ளாவி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. எமது பேராசான் கர்ளாவி அவர்கள் ‘தன் முயற்சிகள் பயனற்றதாகிவிட்டன; இரு பிரிவுகளுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்த முயல்வதானது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவின் தூய்மையைத் தான் அழித்துவிடும்.’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் போது அவர்கள் ஷீஆக்களை வெறித்தனத்தின் உச்சகட்டத்தில் இருப்போராக வர்ணித்தமையும் குறிப்பிடத்தக்கது. ஷீஆக்க்கள் குறித்த ஒரு நூலை ‘தக்ஃபீர் அல்ஜதீத்’ எனும் பெயரில் எழுதுவது குறித்தும் மேற்கூறிய நிகழ்வில் அவர் பிரஸ்தாபித்தார்.

ஷீஆக்களுக்கும் ஸுன்னிக்களுக்கும் இடையில் இருப்பது கிளை விவகாரங்களில் மாத்திரம் சுருங்கிய வேறுபாடுகளல்ல. மாறாக அவை மார்க்கத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்பவை என்பதை அவர் குறிப்பிட்டு வலியுறுத்த மறக்கவில்லை.

இஸ்லாமிய இயக்கம் பற்றிக் கருத்துக் கூறி இமாம் கர்ளாவி அவர்கள், இஸ்லாமிய எழுச்சி என்பது இஸ்லாமிய இயக்கம் என்ற கருத்தியலையும் தாண்டி மிகப் பெரும் கருத்தைத் தரக்கூடியது என்றார். மட்டுமல்லாது இயக்கத்தை விட அது பன்மடங்கு வீரியம் கொண்டு எழ வேண்டியது என்பதையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு முஸ்லிமும் தன்னளவில் தாஈயாவான். அவன் தன்னை ஓர் இஸ்லாமிய இயக்கத்துடன் இணைத்துத் தான் தாஈயாக வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வு ஷெய்க் அல்கர்ளாவியின் நூலான ‘அஸ்ஸஹ்வா அல்இஸ்லாமிய்யா – மினல் முராஹகா இலர் ருஷ்த் நூலைச் சூழ அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலாநிதி பஸ்யூனி, கலாநிதி அஹ்மத் ரய்ஸூனி, கலாநிதி முஹம்மத் ஹஸன் துதூ ஆகியோரும் முனைப்புடன் பங்கெடுத்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s