அற்புத மனிதர் ஷெய்ஃக் யூஸுப் அல்கர்ளாவி

1908161_890781667621565_5098629369667684524_n

இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலும்தான் அறிமுகம் தேவையற்றவர் அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவியவர்கள். இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் அறிவாளுமை அவர்கள்; பல நூற்றுக்கணக்கான நூல்கள்,ஆயிரக்கணக்கான ஃகுத்பாக்கள், ஆய்வு மாநாடுகள், கட்டுரைகள் என நவீன காலத்தில் இஸ்லாமுக்கு, இஸ்லாமிய சிந்தனைக்கு மிகப்பெரும் பங்களித்தவர்; அவர் விட்டுவைத்த துறையேதுமில்லை எனுமளவுக்கு இஸ்லாமியக் கலைகள் ஒவ்வொன்றிலும் துறைபோந்தவர்; முஜ்தஹித் முத்லக் எனும் தரத்தை எட்டியவர்; சமகாலத்திலேயே அவரது மாணவர்களால் இமாம் என அழைக்கப்படும் அளவுக்கு இஸ்லாமியக் கலைகளில் பன்முக வல்லுநர் அவர்; இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையின் தலைவர் அவர்.

அத்தகைய மிகப்பெரும் இஸ்லாமிய ஆளுமையை கடந்த வாரம் சர்வதேசப் பொலீஸ் என அறியப்படும் ‘இண்டர்போல்’இனால் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு அவர் தலைவராக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையும் சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க அடிவருடி டுபாய் மன்னர்க் கும்பலினால் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. முழு உலகமும் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் இவை. இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேசப் பேரவையின் முகநூல் பக்கத்திலே ஷெய்ஃக் அல்கர்ளாவி அவர்களது அலுவலகப் பணியாளர் இஸ்மாஈல் இப்ராஹீம் இமாம் கர்ளாவி அவர்களது உயர்ந்த மனிதப் பண்புகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை கண்களில் நீர் பொசியச் செய்யும் ஆக்கம் அது. இஸ்லாமிய அறிஞராகவும் இஸ்லாமிய சிந்தனையாளராகவும் எம்மத்தியில் அறியப்பட்டிருக்கும் அல்லாமா கர்ளாவியின் இன்னொரு அழகிய பக்கத்தை தமிழ் பேசும் உலகு அறிவதற்காகவேண்டி அந்த ஆக்கத்தினை மொழி பெயர்த்து வழங்குகிறோம்.

 

இது அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே அளிக்கப்படும் சத்தியத்தின் வாக்குமூலம். இதனை என்னிடம் ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் இதனை எழுதித் தருமாறு அவர் என்னிடம் வேண்டவும் இல்லை. நான் அவருக்கு இதனைக் கொடுத்த பின்பே தவிர அவர் இது பற்றி அறிந்திருக்கவுமில்லை. பின்பு அவர் அவரதுகண்களிலிருந்து நீர்த்துளிகள் கொட்டக் கொட்ட இதனை வாசித்தார்.

யூஸுஃப் அல்கர்ளாவி அவர்கள் இக்காலத்தின் ஃபகீஹ். முஜாஹித்களுக்கெல்லாம் அடையாளப் புருஷர். முரப்பிகளுக்கு அவர் ஒரு முன்மாதிரி. தாஈக்களின்தலைவர். ஃபுகஹாக்களின் தாஈ. நடுநிலைமையின் சிகரம். பல்துறைவயப்பட்ட திறமைகளுக்குச் சொந்தக்காரர். பல் பரிமாணம் கொண்ட ஆற்றல்களுடையவர். மிகஅலாதியாக ஃகுத்பாக்களை மேற்கொள்ளக் கூடிய அற்புத ஃகதீப் அவர். எந்தத் துறையையும் விட்டுவைக்காது நூல்களை எழுதியவர். அற்புதமான புதுமைக் கவிஞர்அவர். உலகம் முழுமைக்குமான ஆளுமையை உள்ளடக்கியிருக்கும் ஜாம்பவான் அவர்.

ஃபகீஹுக்குரிய அறிவுப்பார்வை அவரிடம் உண்டு. ஒரு தத்துவஞானிக்குரிய சிந்தனையும் அவரிடம் உண்டு. கவிதையுள்ளமும் அவரிடம் உண்டு. ஓர்இலக்கியவாதியின் புலமையும் அவரிடம் இருக்கிறது. ஒரு முஃமினுக்கு வேண்டிய பெருமிதமும் அவரிடத்தில் இருக்கிறது. ஒரு யுத்த வீரனுக்குரிய ஆத்மார்த்தமும்அவரிடம் இருக்கிறது. விரிந்த பார்வை கொண்டவர். இம்மார்க்கத்தினதும் இந்த உம்மத்தினதும் தேட்டங்களைத் தன்னிலே சுமந்தவர் அவர். ஈமானிலேபலமிக்கவர். தனது வேலைகளிலே கடின சிரத்தை எடுப்பவர். உம்மத்தினால் மிகுந்த நேசம் பாராட்டப்படுபவர். மனிதர்களை சம்பாதிது வைத்திருப்பவர்.அவர்களுக்குரிய இடத்தைக் கொடுத்து நெருங்கி இதமாகப் பழகுபவர்; அவர்களும் அவரோடு இதமாகப் பழகுவர். மக்களை அவர் விரும்புவார்; மக்களும் அவரைவிரும்புகின்றனர். அவர் செயற்களத்திலுள்ள உலகப்பற்றற்ற ஓர் அறிவாளுமை.

நான் ஒருபோதும் சட்டத்துறை அல்ஃபகீஹ் அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி குறித்தோ அல்லது சிந்தனையாளர் அல்கர்ளாவி குறித்தோ பேசப்போவதில்லை. நான்பேசப்போவதைப் பொறுத்தளவில் அது மக்களில் அதிகமானோரிடம் ஒரு ஆளுமை குறித்து மறைக்கப்பட்டிருக்கும், அல்லது மக்களுக்குத் தெரியாத பக்கங்களுள்ஒரு பக்கம் குறித்துத் தான். அதுதான் யூஸுஃப் அல்கர்ளாவி அவர்களை ஒரு மனிதன் என்ற வகையில் அறிந்துகொள்வதுதான்.

கர்ளாவியவர்கள் தன்னுடன் பழகுபவர்களுடன் எவ்வாறு பழகுவார் என்பதைத்தான் நான் பேசப் போகிறேன். ஒரு முறை கர்ளாவி அவர்கள் தனது அலுவலகத்தின்முன்னாள் பொறுப்பாளருடன் கடுமையாகக் கோப்பட்டுவிட்டார். அவர்தான் சகோதரர் வலீத் அபூ நஜா பின்பு நாம் அஸர் தொழச் சென்றோம். எமது ஷெய்ஃக்அவர்கள் அஸ்ரைத் தொழுது முடித்த்தும் சகோதரர் வலீதிடம் மன்னிப்புக் கோரினார். பின்பு அவரது நெற்றியை முத்தமிட நாடினார். (அரபுகளித்தில் தம்மை விடஉயர்ந்த அந்தஸ்திலுள்ளோரின் நெற்றியை முத்தமிடும் வழக்கம் உள்ளது. இங்கு ஷெய்ஃக் கர்ளாவி அவர்களின் பணிவைத் தான் குறிக்கிறது. –மொழிபெயர்ப்பாளர்) என்றாலும் சகோதரர் வலீத் அதற்கு உடன்படவில்லை. அப்போது எமது ஷெய்கவர்கள் அவரது நெற்றியை முத்தமிட்டே ஆக வேண்டுமெனவிடாப்பிடியாக அவர் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தார். அவரும் மறுத்துக் கொண்டேயிருந்தார்.

அப்போது அங்கே ஷெய்ஃக் மஜித் மக்கி அவர்களும் உடனிருந்தார். அப்போது அவர் “அவர் கேட்பதனைப் போலச் செய்து விடுவது நீங்கள் பெரியோரை மதித்தல் என்பதற்காக செய்வதை விட சிறந்தது” என வலீத் அவர்களுக்கு அறிவுரை கூறினார். உடனடியாக வலீத் அவர்களோ “நான் அல்லாஹ் மீது சத்தியம் செய்துசொல்கிறேன்… நீங்கள் என் நெற்றியை முத்தமிட்டால் நான் உங்களது காலை நிச்சயம் முத்தமிடுவேன். நாம் உங்களது மாணவர்கள்; உங்களது குழந்தைகள் தானேநாங்கள்” என்றுவிட்டார்கள். அப்போதுதான் ஷெய்ஃகவர்களின் பணிவினை நீங்கள் பார்க்க வேண்டும். அவர் எவ்வாறு தனக்கு நெருக்கமானவர்களுடன்உள்ளத்தைப் பிணைத்திருந்தார்கள்?

யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்பதில் எந்த சங்கடமும் அவருக்கு இருந்ததில்லை.  ஆனால் அவர் அதற்கும் மேலால் மன்னிப்புக் கேட்பதில் சற்று அளவு கடந்து விட்டார். இது பணிவுள்ள மனிதனிடத்திலிருந்தே அன்றி வேறு யாரிடமிருந்தும் வெளிவராத செயல்பாடுதான். இது மட்டுமல்லாது அவர் ஒரு போதும்தன்னைச் சூழவிருப்பவர்களை விட தன்னை மேன்மையாகக் கருதியதேயில்லை.

இன்னொரு சம்பவம் அவரது வாகன ஓட்டுநருடன் இடம்பெற்றது. ஒரு முறை உமர் இப்னுல் ஃகத்தாப் பள்ளிவாசலுக்கு ஃகுத்பாவுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம்… இடையில் ஃகுத்பாவுக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகப் போகுமாறு கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டார். முடிவாக ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் ஃகுத்பாவை முடித்துக்கொண்டு திரும்பி வந்தார். அப்போது வாகன ஓட்டுநரின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவரது நெற்றியையும் முகர்ந்தார்; மன்னித்துக் கொள்ளுமாறு வேண்டியதோடு தன் மேல் கோபப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறெல்லாம் நடந்து கொள்வதற்கு அழகிய பண்பாடுகளும் திட எண்ணமும் கொண்ட மனிதர்களாலேயே அன்றி வேறு யாராலும் முடியாது.

உங்களுடன் ஷெய்ஃக் கர்ளாவியவர்கள் ஏதும் தேவைக்குத் தொடர்பு கொண்டார்கள் எனின் ஒரு போதும் ஸலாம் சொல்லாமல் தனது தேவையைக் கூற மாட்டார்.மேலும் அவரது தேவையை நிறைவேற்ற முன்னால் உங்கள் குடும்பம் குறித்தும் விசாரித்துக் கொள்ளத் தவற மாட்டார். அவரது அலுவலகப் பணியாளர்களோ மாணவர்களுள் ஒருவரோ நோய்வாய்ப்பட்டு விட்டால் அவர்களோடு உடனடியாகவே தொடர்பு கொண்டு நோய் விசாரிப்பார். தொடர்ந்தும் குணமடையும் வரைக்கும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டேதான் இருப்பார். நோயாளி வைத்தியசாலையில் என்றால் அங்கு சென்று பார்த்துவிட்டுத் தான் வருவார்.இவ்வாறான ஒரு சம்பவம் அவரது அலுவலகப் பணியாளரின் விடயத்திலும் நிகழ்ந்திருக்கிறது. அதே போல் அவர் அறிந்தவர்கள் பலருக்கும் அவரது மாணாவர்களில் அநேகருக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.

அவர் தன் சகபாடிகளின் அனைத்து சந்தோசங்களிலும் பங்கெடுப்பார். ஒரு முறை எம் அலுவலக சகாவான ஷெய்ஃக் முஹம்மத் முர்ஸி அவர்கள் தன் மகளின் திருமணத்துக்காக ஷெய்ஃக் கர்ளாவி அவர்களை அழைத்திருந்தார். ஆனாலும் ஷெய்ஃக் முர்ஸி திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததனால் நேரடியாகவே ஷெய்ஃக் கர்ளாவி அவர்களுக்கு திருமண அழைப்பைக் கொடுக்க முடியவில்லை. அதனால் அலுவலகப் பொறுப்பாளர் மூலமாகவே அழைப்பை விடுத்திருந்தார்கள். ஷெய்ஃக் கர்ளாவி அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். திருமணாத்துக்கும் சென்றார்கள். தானே முன்னின்று திருமணத்தை நடாத்தியும் வைத்தார்கள். சகஜமாக அவர்களோடு நடந்துகொண்டார்கள்.

ஏதாவது ஒரு பிரயாணத்தில் உங்களுக்கு அவரோடு பயணிக்கக் கிடைத்தால் அதற்கு மேலால் ஒன்றுமில்லையென நீங்கள் எண்ணும் அளவுக்கு உங்களை முற்றாகவே அவர் பொறுப்பேற்று பயணிப்பதாக நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் சாப்பிடும் வரைக்கும் அவர் சாப்பிடவும் மாட்டார். உங்களுக்கு முன்னாலேயே அவரது வேலை முடிந்து விட்டால் உங்களுக்காகக் காத்திருப்பார். அவர் உங்களுக்கு ஆலோசனைகளை  வழங்குவார். அவர் கண்களை விட்டும் நீங்கள் மறைந்திருந்தால் உங்களை ‘ஷெய்ஃக்… ஷெய்ஃக்…’ என்று மதிப்பு மிக்க வார்த்தைகளைக் கூறி அழைத்தவராகத்தான் தேடுவார். உங்களைப் பற்றித் தான் சுற்றியுள்ளவர்களிடம் வினவுவார். மக்களில் நீங்கள் தான் அவருக்கு நெருக்கமானவராக இருப்பீர்கள்.

ஒவ்வொரு முறையும் நான் அவரோடு நாட்டுக்கு நாடு பயணங்கள் செல்லும் போது ஒவ்வொரு நாட்டை அடைந்த பின்னரும் அவர் இவ்வாறு தான் எனக்குக் கூறுவார்: “நான் உங்களைக் கோபப்படுத்தி இருந்தாலோ நோவித்திருந்தாலோ தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!”

ஒரு முறை நான் அவரோடு மதீனா நகரிலே புனித ரவ்ழா ஷரீஃபுக்கு அருகிலிருக்கும் போது அவருக்காகப் பிரார்த்திக்குமாறு என்னை வேண்டினார், அதேநேரம் அவர் எனக்காகவும்தான் அவர் அறிந்திருந்த குடும்பத்தவர்கள், நண்பர்கள், மாணவர்கள், அயலவர்கள், பணியாளர்கள், வாகன ஓட்டுநர் வரைக்கும் மட்டுமல்லாமல் மரணித்தவர்கள் உயிருடன் இருப்பவர்கள் என அனைவருக்காகவும் தான் பிரார்த்தனை செய்தவராக இருந்தார்.

ஒருமுறை நாம் உம்ராவுக்குச் சென்றிருந்தோம். உம்ரா கிரியைகளை நிறைவேற்றியதன் பின்பு ஒரு ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்தோம். அப்போது அவர்“இப்போது நீங்கள் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் இணைந்து கொள்ளுங்கள்” என என்னிடம் கூறினார். அப்போது நான் “இல்லை… நான் உங்களோடேயே தங்கியிருந்து பிறகு வீட்டுக்குச் செல்கிறேனே” எனக் கூறினேன். அதற்கவர் “இல்லையில்லை… நீங்கள் போகத்தான் வேண்டும். போய் வீட்டாரைத் தரிசிக்கத் தான் வேண்டும். நீங்கள் இளைஞர் தானே… வீட்டாரைப் போய் சந்தித்துக் குதூகலாமாக இருங்கள்” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இன்னொரு முறையும் அவரோடு உம்ராவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடேயே தொடர்ந்தும் இருந்தேன். அதன் போது நாம் கடந்த உம்ராவின் போது சந்தித்த ஃபிக்ஹுப் பிரச்சினையொன்று தொடர்பாக நாம் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். உடனடியாகவே அவ்விட்த்தில் அது தொடர்பான தன்னுடைய ஃபிக்ஹு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். நான் கூறிய கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார். கர்ளாவி அவர்களது மாணவர்களுள் ஒருவரான சகோதரர் ஷெய்ஃக் ஸாலிஹை ஒரு முறை ஜித்தாவில் சந்தித்த போது அவர் குறித்த ஃபிக்ஹுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என வினவிவிட்டார். அதற்கு ஷெய்ஃகவர்களோ “நான் இஸ்மாஈலுடைய நிலைப்பாட்டை சரிகண்டு ஏற்றிருக்கிறேன்” என்றார்கள்.

இன்னொரு முறை எனது மனைவி ஷெய்ஃக் கர்ளாவி அவர்களை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் சொல்லியிருந்தார். நானும் ஷெய்ஃக் அவர்களிடம் இதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கித் தருமாறு அவரிடம் கோரினேன். அவர்களும் இதனை வரவேற்று முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.அத்தோடு எமக்கு எந்த நேரத்தில் வர முடியுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். எனவே நானும் மனைவியும் அலுவலகத்துக்குச் சென்றோம். அவர் என்னையும் என் மனைவியையும் விருந்துபசாரத்துடனேயே அவரது வேலைப் பளு மிகுந்த நேரத்திலும் வரவேற்கத் தயாராகினார்கள். நான் ஒவ்வொரு முறையும் விடை பெற்றுப் போக முயற்சித்த போதிலும் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்கள்.  அத்தோடு “இங்கு உட்காருங்கள்” எனக் கூறியதோடு எனது மனைவியிடம் “இவர் உங்களுக்கு ஏதேனும் சொன்னால் என்னிடமே நேரடியாகக் கூறிவிடுங்கள். நான் உங்களது தந்தையின் ஸ்தானத்திலிருக்கிறேன்” என்றுவிட்டார்கள். எனது மனைவி அவரது வார்த்தைகளினால் அளப்பரிய சந்தோசம் அடைந்தார்.

இவர்தான் ஷெய்ஃக் அல்கர்ளாவி. அறிவு மன்றங்கள் ஒவ்வொரு விவகாரத்திலும் அவரது கருத்தை அறிவதற்காகப் போட்டிபோட்டுக் கொள்ளும். அவரது செய்திகளைப் பத்திரிகைகள் முன்பக்கத்திலேயே பிரசுரிக்கும். ஓர் அற்புத மனிதர்; மென்மையானவர்; மக்களால் விரும்பப்படுபவர். தனது மாணவர்களிடமே மன்னிப்புக் கேட்கிறார்; தனது வாகன ஓட்டுநரின் நெற்றியை முகர்கிறார்; நோயாளிகளைத் தேடிச் சென்று நலம் விசாரிக்கிறார்; நண்பர்களுக்காக, நண்பர்களின் குழந்தைகளுக்காகப் பிரார்த்திக்கிறார்; தன்னோடு பணிபுரிபவர்களுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காகப் பிரார்த்திக்கிறார்.

எங்களுடைய ஷெய்ஃக் அவர்களே! உங்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ளவேண்டும்; உங்களது ஆயுளை அல்லாஹ் நீடித்து வைக்கவேண்டும்; உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்தப் பிரிவையும் அல்லாஹ் ஏற்படுத்தாமலிருக்க வேண்டும்.

மூல ஆக்கம்: இஸ்மாஈல் இப்ராஹீம் (ஷெய்ஃக் கர்ளாவியின் மாணவர்களுள் ஒருவர். மற்றும் அவரது அலுவலக உத்தியோகத்தர்)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s