ஐ.எஸ்.ஐ.எஸ் : பயங்கரவாதத்தின் பங்காளிகளும் பயனாளிகளும்

d0a70-coachtosyriachoicetruthfb

அல்காயிதா வலையமைப்புக்கு எதிரான உலக யுத்தம் முடிவடைவதற்கு முன்பே ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கெதிரான உலக மகா யுத்தம் அதனது கொடிய கரங்களை விரித்துக் கொண்டு விட்டது. அதற்கென இப்போரை வழிநடத்தும் மேற்குலகு திட்டங்களைத் தீட்டி தேவையான சாதனங்களைத் தயார் செய்துவிட்டதோடு இப்போரில் தமக்கிடையேயான ஒத்துழைப்புக்களையும் பங்களிப்புக்களையும் வரையறை செய்தும் விட்டன. அவ்வாறே அவை தமக்கிடையில் உடனடி மற்றும் காலந்தாழ்த்திக் கிடைக்கக் கூடிய இலாபங்களையும் கொள்ளைப் பொருட்களையும் பங்கு பிரித்துவிட மறந்து விடவில்லை.

அமெரிக்காவும் அதனுடைய மேற்குலகத் சகோதரிகளும் தம்முடைய யுத்த தளபாடங்களையும் தளபதிகளின் அனுபவங்களையும் இராணுவ அனுபவங்களையும் விலைபேசி விற்கப்போகின்றன. இவர்கள் தாம் கற்றவற்றையும் பெற்ற பயிற்சிகளையும் அமுல்படுத்திப் பார்க்கப் போகின்றார்கள். இதன் மூலம் அவர்களுடைய அனுபவங்களும் நடைமுறைப் பயிற்சிகளும் பட்டைதீட்டப்படப் போகின்றன. இறுதியில் அவர்களேதான் கற்பனைக்கெட்டாத கூலிகளையும் நஷ்டஈடுகளையும் பெறவும்போகிறார்கள்.

ஈராக்கிய அரச படைகளும் மிலேச்சத்தனமான ஷீஆக்களும் குர்தியர்களும் மிதவாத சிரிய அரச எதிர்ப்புப் படைகளும் தரைவழியான தாக்குதலைப் பொறுப்பேற்பார்கள். அறபுத் தலைமைகளைப் பொறுத்தளவில்… குறிப்பாக அவர்களிலுள்ள பணக்கார முட்டாள்கள் நினைத்துப் பார்க்காத தொகையைச் செலுத்துவதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.அவர்கள்தான் சிறுமைப்பட்டவர்களாக இந்த யுத்தத்திற்காக ஜிஸ்யா வரியை அளிக்கப் போகிறார்கள். அதன் பின்பு மீண்டும் மேற்கு நாடுகளும் அவர்களின் சிறப்புத் தேர்ச்சியும் எண்ணெய் உறிஞ்சும் தன்மையும் கொண்ட நிறுவனங்களும் பொறுப்பேற்கப் போகின்ற கட்டடங்கள் கட்டும் வேலைகள் தொடங்கிவிடும். இறுதியில் அதற்குரிய ‘பில்’களை வழமை போலவே நமது அதிமேன்மைக்குரிய பணக்கார முட்டாள்களான அறபு ஷேக்மார்கள் வழங்குவார்கள்.

 

இந்த ‘பயங்கரவாதிகளாலோ அல்லது பயங்கரவாத இயக்கங்கள்’ மூலமாகவோ வரும் உலக ஸ்திரத்துக்கும் சமாதானத்துக்கும் ஆபத்துக்களை எதிர்கொண்டு அவர்களுக்கெதிராகப் போராடுவதற்கான திட்டங்களைத் தீட்டித் தயார் செய்து புதிய தலைமுறையொன்றை உருவாக்கும் பணிகள் மேற்குலகால் தொடங்கப்பட்டு விட்டனவா? அல்லது கிட்டிய காலத்துள் தொடங்குமா??? என்பதை நான் அறியேன்.

இறுதியில் போர்ச்செலவினங்கள் எப்போதும்போல் ட்ரில்லியன்களாகவே பெறப்படும். உண்மையிலேயே அரபு இஸ்லாமிய நடுகளின் வெகுமக்கள் தான் அனைத்து கஷ்டங்களுக்கும் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள்.பயங்கரவாதத்திற்கெதிரான போர், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்காயிதாவுக்கெதிரான போர் என்பவற்றின் இறுதி முடிவும் அதுவாகத்தான் இருக்கும். முடிவாக எதேச்சாதிகாரத்தை மேன்மைப்படுத்தி; சுதந்திரங்களைக் கொன்று புதைத்து; மக்களை அச்சுறுத்தி; மதத்தின் மீதும் இஸ்லாமியப் பெறுமானங்கள் மீதும் இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் மீதும் அரபு மொழியின் மீதும் இஸ்லாமிய நலன்புரி அமைப்புக்கள் மீதும் போர் தொடுத்து… இவை அனைத்தும் மட்டுமல்லாது இவற்றுக்கு அப்பாலும் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்துக்கெதிரான போரின் பெயரால் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஐயும் அதன் சிந்தனையையும் சமாதானபூர்வமாக எதிர்கொள்வதற்கு சர்வதேசத்தால் முடியாதா? இது மிக வினைமையுடன்-சீரியஸாகக் கட்டாயம் சிந்திக்கப்பட வேண்டிய மிகப் பெரிய அதேநேரம் அபாயம் மிகுந்த கேள்வி…அதற்கு மிகத் தெளிவாக விடையும் தரப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்காயிதாவின் சிந்தனைகள் பெருமளவில் வழிதவறிய, மடத்தனமான, ஊகங்களுடன், கனவு வயப்பட்டு எழுந்தவைகளே… அவை பரப்பப்படும் முறைமைகளும் பலவீனம் கொண்டதோடு நவீனமடையாது இருப்பவை. அத்தோடு அவை ஓர் எல்லைக்குள்ளால் கட்டுண்டு சுருங்கியவை. நிலைமைகள் இவ்வாறிருக்க சர்வதேச நாடுகளால் எவ்வாறு இதனை அழிக்க முடியாமல் போனது? இதன் திடீர் வளர்ச்சியை சமாதானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தனாரீதியாகவும் பெறுமானங்கள் வழியாகவும் ஏன் கட்டுப்படுத்த முடியாமல் போனது???

அவர்களிடம் தானே சகல வகைப்பட்ட சாதனங்களும் குவிந்து கிடக்கின்றன. அவர்களிடம் கல்லூரிகள், கற்கை நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றனவே… ஆய்வு நிலையங்களும் நவீன ஊடக சாதனங்களும் மிதமிஞ்சிப் போயிருக்கின்றனவே… மத அமைப்புக்களும் உயர் அறிவு படைத்தவர்களும் நிறைந்திருக்கின்றனரே…குழந்தைகளுக்கான சங்கங்கள் முதற்கொண்டு வாலிபர்களுக்கான சங்கங்கள் வரைக்கும் அவர்களிடம் தானே இருக்கின்றன. அத்தோடு பணமும் பின்தொடர்ந்து வரக்கூடியவர்களும் பெரும் ஆதரவாளர் வட்டமும் அவர்களுக்கிருக்கின்றது தானே… அங்கு பெரும் சிந்தனையாளர்கள் இல்லையா? பெரும் தத்துவஞானிகள் இல்லையா?பெரும் திட்ட வரைஞர்கள் இல்லையா? பெரும் கலைஞர்கள் இல்லையா? ஊடகவியலாளர்கள் இல்லையா?

நவீன அறிவொளியினதும் சுதந்திரத்தினதும் அறிவுச் சாதனங்களினதும் உலகமயத்தினதும் காலத்துக்கு ஆரம்பகால பின்னடைந்த ஒரு சிந்தனையை வெற்றிகொள்ள முடியாது போய்விட்டதா? அதன் தாக்கத்தை; அதன் பரவலை; அதன் அபாயம் மிகுந்த செயற்பாடுகளை வெற்றிகொள்ள முடியாமல் போய்விட்டதா? அவ்வாறாயின் இது யாரிடம் சிந்தனையும் கொள்கையும் உள்ளதோ அவர்கள் நிச்சயம் சந்தேகம் ஏற்படக்கூடிய ஓர் இயலாமை தான். மட்டுமல்லாது இந்த சந்தேகம் என்னிடத்தில் இல்லாது போக சாத்தியமேயற்றது.

இதனை விடுத்து வினவப்பட வேண்டிய கேள்விகள் இங்கு இன்னும் பல உள்ளன. அவற்றுக்கான விடைகள் அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்தும் அவதானித்து வருவோருக்கு மறைவான விடயம் அல்லாத போதிலும் அவை வினவப்பட வேண்டியவைதான்…

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது இராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் விளைவான பிரசவமா? அல்லது குறித்த ஆக்கிரமிப்புக்காரர்கள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை வளர்ந்து அதன் வெற்றிகளுக்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி வைத்தவர்களா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படையிலேயே அனைத்தையும் விட்டும் பரிசுத்தமானதா?அவ்வாறாயின் அதனால் இவ்வாறான அடைவுகளை ஆக்கிரமிப்பாளர்களின் உதவியும் ஒத்துழைப்புக்களும் இன்றி எவ்வாறு அடைய முடிந்தது??? அது உள்நோக்கங்கள் கொண்டதாகவோ அல்லது அவ்வாறு உள்நோக்கங்கள் இல்லாமல் இருந்தாலும் சரியே…

அமெரிக்காவும் இராக்கிய ஷீஆக்களும் குர்தியர்களும் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கெதிராக யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் சில வருடங்களுக்கு முன்னால் இராக்கிய அரசையும் அந்த நாட்டையுமே துவம்சம் செய்யப் புறப்பட்டவர்கள். இந்த தாஇஷ்-ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புக்களை உள்ளீர்த்து அனர்த்தங்களை ஏற்படுத்த முற்பட்டவர்களும் அவர்கள்தான்.

பயங்கரவாதத்திற்கு உதவும் அறபு நாடுகளின் அரசியலைக் குறித்து அரபுலகிலும்தான் மேற்குலகிலும்தான் அதிகமான நிபுணர்கள் மற்றும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் உடன்பாடான கருத்திலே உள்ளார்கள். அதுதான் இங்கு பயங்கரவாதம் எனப் பெயர்சூட்டப்படும் பயங்கரவாதங்கள் அதனைவிடவும் கடும்போக்குக் கொண்ட அதனுடைய தோற்றத்திலும் விசாலத்திலும் வேர்விட்டுப் பரந்திருக்கும் அமைப்பிலும் அடக்குமுறை மிக்க எதேச்சாதிகார அறபு அரசுகளிலிருந்துதான் கடன்வாங்கப்பட்டிருக்கின்றன.

நிகழும் யதார்த்தம் உண்மையை பொதுமக்களுக்கும்தான்  துறை சார்ந்தவர்களுக்கும்தான் வெளிப்படுத்திவிடுகின்றன. தீவிரவாத சிந்தனைகள் எப்போதும் அநீதியிலும் அநியாயத்திலும் திளைத்த வகையறாக்களோடு தான் ஒப்பீடு செய்து நோக்கப்படும்.அவ்வகையில் இங்கு நாம் உதாரணத்திற்கு அதிகமான மனிதர்கள் விளங்கி வைத்துள்ளதற்கு மாறாக விளங்குகிறோம். அதாவது சஊதி அரேபியாதான் எல்லோருமே அறிந்த ஒரு மதக் கட்டமைப்பையுடைய ஆட்சி ஒழுங்கு கொண்ட ஒரு நாடு. அதுதான் பொதுவில் அனைத்து முஸ்லிம்களுமே வேறுபாடின்றி நேசிக்கின்ற புனிதத்தலங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாடும் கூட… மக்களது வாழ்க்கைத் தரமும் மிக உயர்ந்த தரத்தில் இருக்கின்ற நாடும் கூட….

மேலும் அங்கு தான் தீவிரவாதத்தின் உற்பத்திக் கூடங்களையும் விநியோக மையங்களையும் நாம் காண்கின்றோம்.அவ்வகையில் சஊதியின் முதல் அனுபவமாக இருப்பதே இருப்பதே வாளின் மீதும் வன்முறையின் மீதும் கட்டியெழுப்பப்பட்டது தான். அடிப்படைகளும் அதில்தான் இடப்படுகின்றன… நடைமுறைப்படுத்தப்படுவதும் அதன் மீதுதான்.

உண்மையில் ஆயுதங்களினதும் வன்முறையினதும் தீவிரவாதத்தினதும் அரசியலானது… அது சத்தியத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினாலும்… அது விட்டுச் செல்லப் போவது வேதனைகள் மிகுந்த காயங்களையும் ஆறாத வடுக்களையும் தான்.

அவ்வாறாயின், அநியாயத்தையும் கொடூரத்தையும் எதேச்சாதிகாரத்தையும் அடக்குமுறையையும் சத்திய வார்த்தைகளையும் வார்த்தைகளின் சத்தியத்தைத் தடுப்பதற்கும் பயன்படுத்தினால் எவ்வாறிருக்கும்? ஆயுதம் உங்களுக்கு ஆதரவாக இருப்பது போலவே, சற்றுக் காலம் தாழ்த்தியேனும் உங்களுக்கு எதிராகவும் இருக்கும்.

சவூதி முடியரசிடமிருந்தும் அதன் அநியாய அரசியலிலிருந்தும் கடைசியாக தாஇஷ் பெற்ற இலாபம் தான் சஊதின் குடும்பத்தினர் இஃக்வானுல் முஸ்லிமூன் (முஸ்லிம் சகோதரத்துவ அன்மைப்பு)இயக்கத்துக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ததாகும். மேலும் அதன் கிளையமைப்புக்களையும் தடை செய்து பயங்கரவாத இயக்கமாகவும் அறிவித்துவிட்டிருக்கின்றதும் தான். சஊதியின் அதிபுத்திசாலித்தனம் மிகுந்த இந்த நிலைப்பாட்டினால் தாஇஷ் பெற்றுக்கொண்ட இன்னொரு இலாபகரமான கனீமத் தான் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தன்பால் ஈர்த்துக்கொண்டதாகும். அவர்கள் அனைவரும் அரசியல் இஸ்லாம் என்ற கருத்திலிருந்து இராணுவ இஸ்லாம் எனும் கருத்து நோக்கி உருமாற்றப்பட்டவர்கள்.

எனது இந்திய நண்பர் ஒருவர் எனக்கு சொன்ன தகவல் முக்கியமானது. சஊதிய அரசின் இஃக்வான்கள் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கெதிரான இத்தகைய நிலைப்பாடுகளால் இந்திய உலமாக்களுள் பெரியதொரு சாரார் சஊதிக்குரிய ஆதரவு நிலையிலிருந்து தாஇஷ் அறிவித்த “இஸ்லாமிய ஃகிலாபத்” ஆதரவு நிலைக்குத் மாறியிருக்கிறார்கள். இஃவானுல் முஸ்லிமூனையும் ஹமாஸையும் பயங்கரவாத இயக்கங்களாக சஊதி அறிவித்ததன் காரணத்தினால் சஊதி தூதுக் குழுவொன்றினை வரவேற்பதற்கு நத்வதுல் உலமா கலாபீடம் மறுப்புத் தெரிவித்திருந்த தகவலை கொஞ்சம் காலத்துக்கு முன்பு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

வருமுன் பாதுகாப்பதற்கான கிரயம் ஒவ்வொரு மனிதனும் அறிந்து புரிந்து வைத்திருக்கும் விடயம் தான் ‘தங்கப் பாளங்களால் செய்யும் சிகிச்சையை விட ஒரு திர்ஹம் கொடுத்துப் பாதுகாப்பது மிகச் சிறந்தது’. ஆனாலும் மிகச் சிறிய தொகையினர்தான் அதனை நன்குணர்ந்து செயற்படுபவர்கள்.

அறபுத் தேசங்களின் நோயுற்று சீர்கெட்டுப் போயிருக்கும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்த அறிவுபூர்வமான கருத்துக்களை விரும்புவதுமில்லை. அதன்படி செயல்படுவதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அவர்களிடம் சிகிச்சைக்கான கிரயம் இன்னும் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு போதும் அவர்களது சட்டைப் பைகளுக்குள்ளோ அல்லது அவர்களது நலன்களுக்குள்ளோ இருக்கவே மாட்டாது. அப்படியாயின் ஏன் அவர்கள் பாதுகாப்பின் களைப்பைச் சுமக்க வேண்டும்?

பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்குமான உத்தரவாதமானது மக்கள் மீது ஆயுதத்தை நீட்டுவதற்குப் பதிலாக அவர்களை விட்டும் ஆயுதத்தை எடுத்துவிடுவதுதான். அவர்களது கழுத்துக்களில் ஆயுதங்களைத் தொங்க விடுவதற்குப் பதிலாக அதனை எடுத்துவிடுவதுதான். இங்கு ஆயுதம் என்பது அநியாயமும் அத்துமீறலும்தான்… அந்த ஆயுதம் சிறையிலடைத்தலும் சித்திரவதைக்குட்படுத்தலும் அச்சுறுத்தலும்தான். எந்தக் காரண காரியமும் இன்றி அது மனிதர்களை அநியாயத்தில் மூழ்கடித்து விடுவதும்தான்.

பாதுகாப்புச் செலவு என்பது மக்களது விடயங்களில் நீதி செலுத்துவதை விட அதிகமானதல்ல. அவர்களுக்கிடையில் சமத்துவம் பேணுவதை விடவும் கடினமானதல்ல. சமாதானம் பேணுவதற்குரிய செலவு அதற்கான செலவை விடவும்மிகவும் இலகுவான சலுகைகள் உள்ளதைத் தான் வேண்டிநிற்கின்றது. அதுதான் உண்மையான தூய்மையான அறிஞர்களை அவர்களது பணிகளை மேற்கொள்வதற்கு விட்டுவிடுவதாகும். அது குறித்து அவர்கள் தான் மிக அறிந்தவர்கள். என்றாலும் அநீதியினதும் எதேச்சாதிகாரத்தினதும் ஆட்சியாளார்கள் எப்போதும் போல் உண்மையின்பாற்பட்ட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைமைகளுக்கும் முஸ்லிம் வெகுமக்களுக்கும் விசுவாசமானஅறிஞர்களைத் தடுத்துவைத்து; சிறையிலடைத்துக் கொடுமை செய்கிறார்கள்.

பின்னர் அந்த முடி மன்னர்களும் அவர்களது நிறுவனங்களும் தமக்குத் துதிபாடும் திருப்திகரமானவர்களை நியமித்துக் கொள்கிறார்கள். இதனால் மக்களும் இத்தகைய அறிஞர்களை மதிக்காது அவர்களது பேச்சுக்களையோ ஃபத்வாக்களையோ நம்பாத நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி அவர்களைப் போஷாக்கற்ற, உண்மைத்தன்மையற்ற வெற்றுப் பிண்டமாகவே கருதுகிறார்கள். தூய எண்ணமுள்ள அறிஞர்களுக்கும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளான அறிஞர்கள் பற்றிய நம்பகத்தன்மை இன்றிய நிலைக்கும் மத்தியில் இவ்வாறுதான் அறிஞர்களுக்குரிய இடமும் அவர்களது தூதும் இல்லாமலாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ஊடகங்கள் அதிகமாக மூத்த உலமாக்களின் அமைப்பொன்றின் ஒன்று கூடல் குறித்துப் பேசின. அந்த ஒன்றுகூடலில் ‘அல்அராழீ அல்பய்ழாஉ’ (நகரங்களுக்குள்ளே கட்டடங்கள் கட்டப்படாது விடப்பட்டிருக்கும் நிலங்கள்) குறித்துக்  கலந்துரையாடப்பட்டன. ஆனாலும் சஊதி பொதுமக்கள் தமக்குள்ளே எள்ளி நகையாடிக்கொண்டவர்களாகக் கேட்டுக் கொண்டிருந்த கேள்விதான் “ஏன் இந்த உலமாக்கள் ‘அல்அராழீ அஸ்ஸவ்தாஉ’ குறித்துக் கலந்துரையாடுவதில்லை?” அதாவது, அரச குடும்பத்தினர் தாமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் தவிர வேறு காரணமே இல்லாமல் கபளீகரம் செய்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான சதுரகிலோமீட்டர் நிலப்பரப்புக்கள் குறித்து அவர்கள் பேசுவதில்லையா?

 

கலாநிதி அஹ்மத் அர்ரய்ஸூனி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s