சிரியா தேசம் அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் ஆயுதங்களினதும் பரிசோதனைக் கூடமாக மாறி அத்தேசத்தின் மக்கள், பரிசோதனைப் பிண்டங்களாக ஆக்கிவிடப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஐ.நா. சபையில் கடந்த வெள்ளியன்று(18) நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அமெரிக்கா-ரஷ்யா இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளும் முக்கியத்துவம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளன.
சர்வாதிகாரி பஷர் அல்அஸதின் இறுதி முடிவு குறித்த எதிர்பார்ப்புக்கள் கடந்த வெள்ளியன்று, போர் நிறுத்தத்துக்கும் சமாதானத்துக்குமான அழைப்புக்களை விடுத்திருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏகமனதாக வெளியிடப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து பொசுங்கிப் போயுள்ளன என்றே கூறவேண்டியுள்ளது. இத்தீர்மானம் அமெரிக்கப் படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரே முரண்பாட்டுப் புள்ளியையும் இல்லாமல் செய்து ரஷ்யாவுக்கு வெற்றியைத் தந்துவிட்டது. இதுவே அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரி இறுதியாக சிரியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய இலக்குகளை இணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த போது அவர் கவனம் செலுத்திய விடயங்களாகும்.
குறிப்பாக ஜோன் கெரி ரஷ்யாவின் ரஷ்யா_1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் “நாங்கள் விரும்புவது போன்றே நீங்களும்(ரஷ்யா) சிரியாவில் யுத்தம் நிறுத்தப்படுவதற்கு விரும்பினால்; ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் போராட விரும்பினால் நிச்சயம் அங்கு அஸதின் பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட முடியும். நாம் சிரியாவின் அரசு விவகாரங்கள் அனைத்தையும் மொத்தமாக மாற்றிவிடவேண்டும் என்பவர்கள் அல்லர். மாற்றமாக சிரிய அரச நிறுவனங்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். அதனை ஒரே தேசமாகப் பாதுகாக்க விரும்புகிறோம். ரஷ்யா கூட இவ்விடயத்தில் உறுதியோடு இருக்கும்.” என்றார்.
இதன் போது கெரி தமது சமரச முயற்சிகள் அனைத்தும் ரஷ்யா-அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகள் அனைத்தும் சிரியப் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு மாத்திரமே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக சுட்டிக் காட்டியிருந்தார். சிரியர்களுக்கு மாத்திரமே தமக்கான தீர்வை முடிவு செய்யும் அதிகாரம் இருப்பதாகவும், வெளிச் சக்திகளுக்கோ அல்லது தீவிரவாதிகளுக்கோ அல்ல… அவ்வழியிலேயே தமது நிலைப்பாடுகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். மற்றும் ஐ.எஸ். க்கு எதிரான இராணுவ நடவடிக்கையினை சிரியப் படைகள் பொறுப்பேற்பதனைத் தம்முடைய நாடு எதிர்க்காது எனவும் கூறியிருந்தார். மக்கள் ஏற்கின்ற வகையில் எதிரணிகளையும் உள்ளடக்கிய எதிர்கால அரசு அமைக்கப்படவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
சிரியாவின் அரச படைகளும் எதிரணிகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டுமென்று தாம் கருதுவதாகவும் கெரி இதன் போது குறிப்பிட்டிருந்தார். அஸத் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பாராயின் அது எதிரணிப் போராளிகளையும் சிரியப் படைகளையும் ஓரணியில் அன்றி பிளவிற்கே இட்டுச் செல்லும் என்பதையும் அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். “அது இரு சாராருக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை இன்னும் நீளச் செய்யும். அதனை ரஷ்யாவும் அமெரிக்காவும் விரும்பாது. அஸத் எடுக்கும் முடிவுகள் எமக்கெதிரானவை அல்ல. மாறாக அவை அவரது மக்களுக்கு எதிரானவையே. அவைதான் அவரது சட்டபூர்வத் தன்மையை இல்லாது செய்த விடயங்கள். எனவே அவர் தனது முடிவுகளை மீள் பரிசீலிக்க வேண்டும்.” எனவும் தனது ராஜதந்திரக் கருத்துக்களை அள்ளி வீசியிருந்தார் அவர்.
இதன் போது ரஷ்ய அதிபர் விளடிமிர் புட்டின் மொஸ்கோ சிரிய நெருக்கடிக்கான தீர்வைப் பெறுவதில் முயற்சியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். சிரிய அதிபர் பஷர் அல்அஸதுடனோ அல்லது அமெரிக்காவுடனோ இணைந்து பணியாற்றுவதில் தமக்கு எந்தக் கடினமும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் இக்கருத்துக்களைத் தெரிவித்திருந்த அவர் “எமக்கு சிரிய நெருக்கடியோடு தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் எந்தக் கடினத்தன்மையும் இருக்கப் போவதில்லை. அதிபர் அஸதுடன் எமக்கு வேலை செய்ய முடியும். அதே நேரம் அமெரிக்காவுடனும் பணியாற்ற முடியும். இதுவே நான் இறுதியாக ஒபாமாவுடன் பேசியபோதும் எமது நட்பு நாடான ஸவூதியோடு பேசிய போதும் தெரிவித்தவையாகும். இதற்குக் காரணம் நாம் இரட்டை நிலைப்பாடு இன்றி இருப்பதும் எம் நிலைப்பாட்டை நாம் மாற்றாமல் இருப்பதுமாகும்.” என அவர் கூறியிருந்தார்.
சிரிய நெருக்கடிகள் 5 வருடத்தை எட்டியிருக்கும் இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையூடாக சிரிய விவகாரம் தொடர்பில் ஒரு சாதகமான அணுகுமுறை தோன்றியிருக்கும் இச்சூழலில் இம்முடிவை நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகத்தால் எந்தளவுக்கு இயலுமை உள்ளது என்றதொரு சந்தேகமும் இங்கு இருக்கிறது. இதுவே ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஃப்ரான்க் வோல்ட்டர் எழுப்பும் கேள்வியுமாகும். “சிரியாவில் சமாதானத்தை நிலைநாட்டும் பாதையில் தொடர்ந்தும் தடைகள் இருந்துகொண்டுதான் இருக்கப் போகின்றது. அங்கே போரை நிறுத்துவதற்காக நிறைய விட்டுக்கொடுப்புக்களும் தியாகங்களும் தேவைப்படுகின்றன” என்கிறார் அவர். பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் பின் நாடு திரும்பிய அவர் பெர்லின் நகரில் சீனாவின் பிரதிநிதி வோங் யீ உடன் இணைந்து பங்கேற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போதே இதனைத் தெரிவித்தார். வாங் யீ கூட முடிவை எட்டுவதில் கஷ்டங்களும் கரடுமுரடுகளும் குறைந்துவிடாது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். வாங் யீ கருத்துத் தெரிவிக்கும் போது “சிரிய அரசுக்கும் எதிரணிகளுக்கும் இடையில் ஒரு கால அட்டவணை அடிப்படையில் இரண்டு வருட காலத்தில் தேர்தலொன்றை நடாத்துவதற்கும் ஒன்றுபட்ட அரசை அமைப்பதற்குமான யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு அழைத்திருப்பது ஐ.நா. சபைக்குப் பெருமை தேடித் தரும் விடயமாகும்” என்றார்.
எனினும் சிரிய எதிரணிகள் சர்வதேச தீர்மானமொன்றை எட்டுவதற்காக ஒன்று கூடிய போது சிரிய அரசு குறித்த எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை. வளைகுடா மற்றும் தூரகிழக்குக்கான இராணுவ புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் ரியாட் கஹுஜி “இந்த ஆரம்ப எட்டு சிரியாவின் அனைத்துத் தரப்புக்களையும் ஒரே பாதையில் பயணிக்கச் செய்யும் பாதை வரைபடமாக இருக்கும். இந்தத் திட்டம் இலகுவாக நடைமுறையாகும் என நாங்கள் சொல்ல மாட்டோம். இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை எடுக்கும்” என அவர் அஷ்ஷர்க் அல்அவ்ஸத் இணையத்தளத்திடம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பாதுகாப்புச் சபையின் தீர்மான வாசகங்களை வாசித்துப் பார்க்குமாறு வேண்டிய அவர் அவை சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான எட்டுக்களை தெளிவுபடுத்துவதாகவும் அடுத்து சர்வதேசப் படைகள் நிலைகொள்ளச் செய்யப்படுவது குறித்தும் கூறப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். எதிரணிகள் ஒன்றிணைய வேண்டியது எப்போதும் இல்லாத வகையில் அத்தியாவசயமானதாக மாறியுள்ளதை வலியுறுத்திக் கூறிய அவர், இல்லாவிட்டால் அதற்கு மாறாக அஸதின் பக்கத்தைப் பலப்படுத்தும் நிலையாகவே இது அமைந்துவிடும் எனவும் எச்சரித்திருந்தார். குறிப்பாக ஜெனீவா தீர்மானத்துக்கு அமைய அஸதின் ஆட்சியை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் உறுதியோடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானம் நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமா என்ற கேள்வியுடன் சர்வதேச நிலைமைகள் இருக்கையில் இதன் பிறகான சிரியாவின் நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து சிரியாவின் உள்ளிருந்து பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. புரட்சியைக் களவாடி முழுமையாகவே நிலைமைகளைத் தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளத் துடிக்கும் அமெரிக்க-மேற்கு நாடுகள், ஈரான்-ரஷ்யா போன்ற நாடுகளின் நரித்தனமான ராஜதந்திர நடவடிக்கைகளை விஞ்சி எதிர்பார்க்கப்படும் சுபீட்சமான தீர்வொன்றுக்கான பல்வேறு முட்டுக்கட்டைகள் குறித்து களத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகின்றன.
எதிரணிகளின் அரசியல் குழு உறுப்பினர் பாயிஸ் ஸாரா இணையத்தில் இது தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார். சிரியாவின் எதிர்கால நிலவரங்கள் புரட்சிப் போராளிகளுக்கு சுபசோபனமாக அமைய மாட்டாது. அத்தோடு சிரிய மக்கள் ஒரு பொய்யான எதிர்பார்ப்பில் மிதக்கவிடப்படுவர். இன்றிருக்கும் சிரியக் கள நிலவரங்களில் பெரும்பாலானவை சிரியாவின் உள்ளோடு மட்டும் தொடர்பானதல்ல. மாறாக ஒவ்வொரு நகர்வும் பிராந்தியத்தின் மூலமாக கிடைக்கும் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நலன்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன.
மேற்கூறப்பட்டவாறு சிரியாவின் உள்ளிருந்து அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் சமகாலத்தில் நிலவும் கள யதார்த்தங்கள் இரண்டினை முக்கியமாக அவர் அடையாளப்படுத்துகிறார். அவற்றுள் முதலாவது சிரியாவின் உள்நிலவரங்களோடு தொடர்பானது. அதனை இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்: அஸதின் படைகள் தற்போது மிக மோசமான ராணுவத் தோல்விக்கு முகங்கொடுத்து சின்னாபின்னப்பட்டுப் போயிருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் தெற்குப் பகுதியில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வோடு இணைந்து பெருந்தோல்விக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள். வடக்கிலும் எதிர்கொள்ள முடியாத் தோல்வி நிலைமை; இந்நிலையில் அஸத் அரசின் ஜெனரல்களுக்கிடையில் உட்கட்சி மோதல் வலுத்திருக்கிறது. புலனாய்வுத்துறையும் பலவீனப்பட்டிருக்கிறது. அவர்களது முக்கிய புலனாய்வு அதிகாரி ருஸ்தும் ஃஙஸாலி கொல்லப்பட்டிருக்கிறார். அத்தோடு அஸதுடன் நிலவும் அதிகாரப் போட்டியினால் ஷீஆ அலவியக் குடும்பங்கள் பிளவுபடத் துவங்கியுள்ளன; அவர்கள் மத்தியில் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இவை இன்னொரு புறமாக அஸதுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன. இதே நேரத்தில் பலம் பெற்றுவரும் எதிரணிகளை தூரப்படுத்தி விடவும் ஐக்கியத்தை சீர்குலைத்துவிடவும் அநேக முயற்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது யதார்த்தமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அஸத் ஆட்சியில் நீடிப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்த வெளிநாட்டுச் சக்திகள் தற்போது எந்த சமநிலையையும் சிரியாவில் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளதோடு தமது நலன்களைக் காப்பதற்கோ போரிலிருந்து பின்வாங்கவோ முடியாத திரிசங்கு நிலைக்கு ஆளாகி நிற்கின்றன. அத்தோடு வரையரையற்ற உதவிகளை சிறுபான்மையினரைக் காப்பாற்றல் என்ற பெயரில் அள்ளி வழங்கியும் சர்வதேச சமூகத்திடம் கூட நற்பெயரொன்றை அவர்களால் சம்பாதிக்க முடியாது போய்விட்டது.
இந்த முக்கிய இரு யதார்த்தங்களுக்கும் மத்தியிலேயே சிரியா தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை நோக்க வேண்டியுள்ளது. தமது நலன்களுக்காக எதையும் செய்யத் துடிக்கும் கலாசாரம் கொண்ட மேற்கு அரசுகளுக்கு சிரியாவில் சுபீட்சம் நிலவுவது ஒன்றும் மிக அவசியமானதல்ல. சுபீட்சமும் குழப்பமும் அவர்களே தம் தேவைக்கேற்ப ஏற்படுத்திவிடும் போக்கு, கடந்த நூற்றாண்டு தாண்டி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் உலக ஒழுங்குதான் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் சிரியாவின் அயலவர்கள் என்ற வகையிலும் முதலிரு புனிதஸ்தலங்களும் உள்ளடங்கியிருக்கும் சவூதி அரேபியாவும் பலமிக்க தேசமாக மாறிவரும் துருக்கியும் எடுக்கும் தீர்மானங்கள் முக்கியத்துவமும் பொறுப்பும் நிறைந்ததாகும். அவற்றின் நகர்வுகள் மத்தியகிழக்கில் இன்னொரு அவலத்துக்கு ஒருபோதும் வித்திடாதிருக்கட்டும்.