முன்மாதிரி மிகுந்த பொறுப்பாளர்

sbnamer

 

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பொறுப்புக்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்

 

அது உமர்(ரழி) அவர்களது ஆட்சிக் காலம்… இஸ்லாம் பல பிரதேசங்களுக்கும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஒருமுறை ஃகலீபா அவர்கள் தமது ஆட்சியின் கீழ் சிரியாவின் ஹிம்ஸ் பிரதேசத்துக்கு மக்களின் குறை கேட்பதற்காகப் பயணிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் தமக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் கவர்ணர் குறித்து முறைப்படத் துவங்குகிறார்கள்.

ஹிம்ஸ் வாசிகள்: அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் அவர் குறித்து நான்கு முறைப்பாடுகளை வைத்திருக்கிறோம்.

ஃகலீபா உமர்: உங்கள் முறைப்பாடுகளைக் கூறுங்கள்..!

ஹிம்ஸ் வாசிகள்: கவர்ணர் அவர்கள் சூரியன் உச்சமடைந்து பகல் பொழுது ஆகும்வரைக்கும் மக்களாகிய எங்களிடம் வருவதில்லை.

ஃகலீபா உமர்: அடுத்து..

ஹிம்ஸ் வாசிகள்: நாம் இரவில் ஏதும் தேவைகளுக்கு அழைத்தால் எமக்கு செவிசாய்ப்பதில்லை.

ஃகலீபா உமர்: இன்னும் இருக்கிறதா?

ஹிம்ஸ் வாசிகள்: ஆம். அவருக்கு மாதத்தில் ஒரு நாளில் அவர் வீட்டை விட்டு வெளியேறவே மாட்டார். எம்மால் அவரைப் பார்க்கவும் முடியாது.

ஃகலீபா உமர்: அடுத்து என்ன குறை?

ஹிம்ஸ் வாசிகள்: அவ்வப்போது இவர் மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார்.

ஃகலீபா உமர் (தனக்குள் முணுமுணுத்தவராக): யா அல்லாஹ்! நான் அவரைப் பற்றி நலவுகளைத்தானே அறிந்துவைத்திருக்கிறேன். அல்லாஹ்வே! உனது நல்லடியானாகத்தான் அவரைக் பார்க்கிறேன்.

ஃகலீபா உமர் உடனே கவர்ணரை அழைக்கிறார்கள். அப்போது ஹிம்ஸ் கவர்ணர் ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அங்கே ஆஜராகிறார்கள்.

ஃகலீபா உமர்: ஸஈதே! மக்கள் உன்னைப் பற்றி இவ்வாறெல்லாம் முறைப்படுகிறார்களே… இதன் உண்மைத் தன்மை என்ன?

ஸஈத் இப்னு ஆமிர்: அமீருல் முஃமினீன் அவர்களே! நான் இவற்றுக்கான காரணங்களைக் கூற சங்கடப்படுகிறேன். நிச்சயமாக எனது வீட்டு வேலைகளுக்காக பணியாட்கள் எவருமே இல்லை. நான்தான் மாவு அரைத்து புளிக்கச் செய்து ரொட்டியை சுட்டு சாப்பிட்டு விட்டு ழுஹா தொழுதுவிட்டு வருவதற்கிடையில் பகல் பொழுதாகிவிடுகின்றது.

ஃகலீபா உமர்: புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! இரண்டாவது காரணி என்ன?

ஸஈத் இப்னு ஆமிர்: எனது பகல் பொழுது முழுவதும் மக்களுக்குச் சொந்தமானது. அதனால் எனது ரப்புக்கு என் இரவுப் பொழுதுகளை ஒப்படைத்து விடுகிறேன். அப்போது எனது நேரத்தை மக்களுக்கு அளிக்க நான் விரும்புவதில்லை.

ஃகலீபா உமர்: மூன்றாவதாக உமக்குக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உமது பதில் என்ன ஸஈத்!?

ஸஈத் இப்னு ஆமிர்: எனக்கு அணிவதற்கு ஒரே ஒரு ஆடைதான் உள்ளது. மாதத்தில் ஒருநாள் அதனை நான் கழுவிவிட்டு உலரும் வரைக்கும் காத்திருக்கவேண்டி ஏற்படுகிறது. அதனால் எனக்கு அந்நாளில் வெளியிறங்கி வர முடிவதில்லை.

ஃகலீபா உமர்: அப்படியாயின், அவ்வப்போது நீர் மயக்கமடைந்து வீழ்வதாக மக்கள் கூறுகின்றனரே…

ஸஈத் இப்னு ஆமிர்: ஆம்… உண்மைதான். நான் இஸ்லாமைத் தழுவும் முன்பு ஃகுபைப் பின் அதி(ரழி) அவர்கள் கொல்லப்படுவதை என் கண்களால் பார்த்தேன். குறைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிராக ஆக்கிவிட்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கையில் காபிர்கள் அவரிடம் ‘ஃகுபைபே! இவ்விடத்தில் உனக்குப் பதிலாக முஹம்மத் இருந்திருக்கலாமே என நினைக்கிறாய்தானே..’ எனக் கேட்க ‘இங்கு நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முஹம்மத் மீது ஒரு முள் குத்துவதற்குக் கூட விடமாட்டேன்.’ என ஃகுபைப் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறார்கள். கோபமடைந்த காபிர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக இருந்து அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன் என்ற எண்ணமும் கைசேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது. என்னை அறியாமல் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துவிடுவேன்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஃகலீபா உமர் “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நான் ஸஈத் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை.” எனக் கூறுகிறார்கள்.

* * * * *

ஸஈத் இப்னு ஆமிர் அவர்கள் கலீபா உமரின் ஃகிலாபத்தின் போது நியமிக்கப்பட்ட கவர்ணர்களில் மிகுந்த உலகப் பற்றற்ற வாழ்க்கையைத் பின்பற்றி வந்தவர் ஆவார். அவர் கவர்ணராக நியமனம் செய்யப்பட்ட நிகழ்வும் சுவாரஷ்யமும் இறை நினைவும் தரக்கூடியது.

ஒரு முறை உமரவர்கள் ஹிம்ஸ் பகுதியிலிருக்கும் வசதியற்றவர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்கிறார். அங்கே ஸஈத் என்ற பெயரும் இடம்பெறுகிறது. திகைப்படைந்த ஃகலீபா உமர் மக்களிடம் விசாரிக்கிறார்கள். ”யார் இந்த ஸஈத்?” என மக்களிடம் கேட்கிறார்கள். மக்கள் “அவர்தான் எங்களது அமீர்.” என்றனர். “என்ன? உங்கள் அமீர் ஏழையா?” என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது. “ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்.” என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர். உமர் அழுதார். மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்.

பின் அவரது செலவுத் தொகைக்கு ஆயிரம் தீனார்களை ஃகலீபா உமர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கொடுக்கிறார்கள். அதனை மறுத்து தன்னைவிடத் தேவையுடையோருக்கு அளிக்குமாறு வேண்ட, ஸஈதுக்கு உமர்(ரழி) அவர்கள் தூதர்(ஸல்) அவர்களது ஹதீஸொன்றை உரைக்கிறார்கள்: “எவரொருவர், தான் கேட்காமலும் மனது விருப்பப்படாமலும் ஏதோவொன்று கிடைக்கப்பெறுகிறாரோ; அவ்விடயம் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட ரிஸ்க்காகும். எனவே, அதனை அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.”

பின்பு அந்த ஆயிரம் தீனார்களைப் பெற்றுக்கொண்டு ஹிம்ஸ் வந்து சேர்ந்ததும், மனைவியிடம் “நாமிருக்கும் நகரில் வர்த்தகத்தில் நல்ல இலாபம் கிடைக்கிறது. பணத்தை நல்லதொரு வியாபாரத்தில் முதலீடு செய்யலாமே… பின்பு அதன் இலாபத்தை நமக்கு அனுபவிக்கலாம் தானே…” என ஆலோசனை கேட்கிறார். மனைவியும் உடன்பட தன்னிடமிருந்த தீனார்கள் முழுவதையும் ஹிம்ஸிலிருந்த ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் பிரித்துப் பகிர்ந்தளித்துவிடுகிறார்.

அவரின் மனைவி வியாபாரத்தின் இலாபம் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “அதற்கொரு குறைவும் இல்லை? அது பிரமாதமாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் இலாபமும் பெருகி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறிவிடுவார்.

ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) பற்றி சில குறிப்புக்கள்:

  • முழுப்பெயர்: ஸஈத் இப்னு ஆமிர் இப்னு ஹுஸைம் இப்னு ஸுலாமான் இப்னு ரபீஆ அல்குர்ஷி அல்ஜுமஹி.
  • முக்கிய நபித்தோழர்களில் ஒருவர். பல சிறப்புக்கள் நிறைந்தவர். உலகப் பற்றற்ற வாழ்க்கைக்குப் பெயர் போனவர்.
  • ஃகைபர் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டவர்.
  • சொந்த வீடு கூட இல்லாமல் வாழ்ந்துவந்தவர் எனக் கூறப்படுகிறது.
  • தூதர்(ஸல்) அவர்களின் தர்பிய்யத்-ஆன்மீகப் பயிற்றுவிப்புக்களால் அதிகம் தாக்கம்பெற்றவர்.
  • உலகப் பற்றற்ற, பேணுதலான வாழ்வுகொண்டவர். அதேநேரம் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவர்.
  • இவர் ஹிஜ்ரி 18 அல்லது 19 இல் வபாத்தானதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் சில:

நபியவர்கள் கூறியதாக ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஏழைகள் மறுமையில் புறாக்கள் போன்று விரைந்து வருவார்கள். அவர்களிடம் ‘விசாரணைக்காக நில்லுங்கள்!’ எனக் கூறப்படும். அவர்கள் அதற்குக் கூறுவார்கள் ‘அல்லாஹ் எம்மை விசாரிக்கும் அளவுக்கு எதுவும் தரவில்லையே…’ அப்போது அல்லாஹ் கூறுவான்: ‘எனது அடியார்கள் உண்மை உரைத்தனர்.’ உடனடியாக ஏனைய மக்களுக்கு எழுபது ஆண்டுகள் முன்னரே சுவனத்தில் நுழைந்துவிடுவார்கள்.”

நபியவர்கள் கூறியதாக ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “சுவனவாசிகளில் ஒரு பெண் பூமியிலுள்ளோருக்குக் காட்சியளிப்பாளாயின் முழுப் பூமியும் கஸ்தூரி வாசணையால் நிரம்பி சூரிய, சந்திர ஒளிகளும் போக்கப்பட்டுவிடும்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s