இவர் தான் கர்ளாவி…

10559677_880368715336527_8266170595164680539_n

மூலஆக்கம்: இஸ்மாஈல் இப்ராஹீம் (ஷெய்ஃக் கர்ளாவியின் மாணவர்களுள் ஒருவர். மற்றும் அவரது அலுவலக உத்தியோகத்தர்)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

இமாம்களின் சூரியன்; ஒளி பொருந்திய அறிஞர்; ரப்பானிய ஆசான்; சத்தியத்தின் உதவியாளர்; நற்பண்பாடுகளின் வழிகாட்டி; இக்காலத்தின் தன்னிகரற்ற தனித்துவ ஆளுமை; நடுநிலைமையின் சிகரம்; அழைப்பாளர்களின் இமாம்…அவர்.

இவையெல்லாவற்றையும் புகழ்வதில் அளவு கடந்து செல்வதாகவோ அல்லது பெரும் ஷெய்ஃக்மார்களை நேசிப்பதில் வார்த்தைகளை வீணடிப்பதாக நாம் கருதக்கூடும். ஆனாலும் நான் யதார்த்தத்தில் இவ்வாறெல்லாம் தத்தமது ஷெய்ஃக்மார்களை வர்ணிப்போரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் எனது ஷெய்ஃக் அவர்களைக் கண்ட போது அவர்தான் இவ்வாறு வர்ணிக்கப்படத் தகுதியானவராக நான் கருதினேன். அவர்தான் இத்தகைய புகழ் வார்த்தைகளுக்கு சாலப் பொருத்தமானவர். இத்தகையவர்தான் கர்ளாவி…

இதே கர்ளாவிதான் அறிவுத்துறை ஆக்கங்களையாக்கியும் தஃவா-உபதேச உரைகள் நிகழ்த்தியும் ஃபிக்ஹ்-ஃபத்வாக்கள் வழங்கியும் மாநாடுகள்-அறிவு மன்றங்களில் பங்கெடுத்தும் ஆய்வுரைகள்-விரிவுரைத் தொடர்கள் நிகழ்த்தியும் அறிவமைப்புக்கள்-நிறுவனங்கள்-ஃபிக்ஹு மன்றங்களில் பங்கெடுத்தும் இஸ்லாமுக்குப் பணிபுரிவதற்காகத் தன்னுடைய முயற்சியைச் செலவளிப்பவர். இதே கர்ளாவிதான் சிறிதாகவும் நடுத்தர அளவிலும் மட்டுமல்லாமல் கலைக்களஞ்சிய அளவுகளிலும் என இருநூறை அண்மித்த நூல்களின் சொந்தக்காரர். இவர்தான் தன் 32வது வயதில் ‘அல்ஹலால் வல்ஹராம்’ எனும் நூலைத் தொகுத்தவர்.அன்றிலிருந்து இன்று வரைக்கும் 56 வருடங்களாக ஓயாது எழுதிக் கொண்டேயிருக்கின்றார். இமாம் ஷல்தூதுடைய காலத்தில் அஸ்ஹரில் ஆசிரியராக இருந்தார்.பின் அஸ்ஹர் பல்கலையில் கலாநிதி முஹம்மத் அல்பஹியுடைய காலத்தில் கல்விப் பிரிவில் பணியாற்றினார். அவரது நூல்கள் மக்களது தேவைக்காக பல்வேறுபட்ட மொழிகளிலும் மேற்கு நாடுகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

 

ஷெய்ஃக் அல்கஸ்ஸாலி கூறுவது போன்று இதற்கு முன்பு எப்போதுமே இஸ்லாமிய வரலாற்றில் தொகுக்கப்படாத ஃபிக்ஹுஸ் ஸகாத் களஞ்சியத்தின் ஆசிரியர் அவர். அவ்வாறுதான் பெரும் கலைக்களஞ்சியமான ஃபிக்ஹுல் ஜிஹாதின் சொந்தக்காரர் அவர். இவ்வாறே உலகம் பூராகக் கிழக்கு மேற்கெங்கும் பரவிவிட்டிருக்கும் பல தொகுப்புக்களின் சொந்தக்காரர் அவர்.

இமாம் கர்ளாவி அவர்கள் மென்மையான அமைதி சுபாவமுள்ள மனிதர். மெல்லிய இதயம்; நெருங்கிய உள்ளம்; தூய ஆத்மா; இனிய உணர்வுகள்; கண்ணியமிக்க நடத்தைகள்; மலர்ச்சியான முகம்… அனைத்தும் கொண்டவர்.

இதே கர்ளாவி பற்றி; அவரது சிந்தனைகள் குறித்து; அவரது ஃபிக்ஹ் பற்றி; அவரது தஃவா, இஸ்லாஹ் பணி குறித்து; அவரது அறிவாக்கங்கள், முயற்சிகள் பற்றி என நூற்றுக்கணக்கான முதுமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அவை எகிப்திய பல்கலைக்கழகங்களான அஸ்ஹரிலும்தான் கெய்ரோவிலும்தான் ஐன் ஷம்ஸிலும் ஏனைய சர்வதேச அளவிலான இராக், மொரோக்கோ, லெபனான், பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சீனா,இந்தோனேசியா மற்றும் அதற்கப்பாலும் தான்…

அறிவு மன்றங்களும் ஃபிக்ஹு மஜ்லிஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு அவருக்கு அங்கத்துவம் வழங்கி அவரது பங்கேற்பை அவாவி நிற்கும்.

இதே கர்ளாவி அவர்களைத்தான் அவரது ஆசான்மார்களும் சகபாடிகளும் மாணவர்களும் போற்றுகின்றனர். ஹஸனுல் பன்னா, மஹ்மூத் ஷல்தூத், முஹம்மத் அல்பஹி, அப்துல் ஹலீம் மஹ்முத், முஹம்மத் அல்கஸ்ஸாலி, அபுல்ஹஸன் நத்வி, அபுல் அஃலா மவ்தூதி, முஸ்தபா சிபாயி, முஸ்தபா ஸர்க்கா, அலி தன்தாவி,முஹம்மத் அல்முபாரக், உமர் அல்அமீரி, மஃரூப் அத்துவாலீபி, அப்துல் அஸீஸ் பின் பாஸ், அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷெய்ஃக், அப்துல்லாஹ் பின் மனீஃ, அப்துல்லாஹ் பின் ஸைத் ஆலு மஹ்மூத், அப்துல்லாஹ் அல் அன்ஸாரி, அப்துல்லாஹ் பின் துர்க்கி, நிழாம் யஃகூபி, அப்துஸ் ஸத்தார் அபூ குத்தா,அப்துல் ஃபத்தாஹ் அபூ குத்தா, முஹம்மத் அவாமா, அதீப் ஸாலிஹ், பைஸல் மவ்லவி, முஹம்மத் ஃபத்ஹி உஸ்மான், முஹம்மத் இமாரா, அஹ்மத் அஸ்ஸால்,தாரிக் அல்பிஷ்ரி, பஹ்மி ஹுவைதி… உட்பட இன்னும் ஏராளமானோர்.

இதே கர்ளாவிதான் தனது மார்க்கத்திற்காகவும் தன் தாய்நாட்டூக்காகவும் தியாகங்கள் புரிந்தவர். தன் இளமைப் பராயத்திலேயே தவுர் சிறைச்சாலையில் மன்னர் பாரூக்கின் காலத்தில் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டவர். பின் அப்துல் நாஸரின் காலத்தில் அரசியல் கைதியாகப் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின் அல்லாஹ்வுடைய பாதையில் அவனது மார்க்கத்தின் பணியாளராக அவரது வீட்டை விட்டும் புறப்பட்டவர். சற்றுச் சில தினங்களுக்கு முன்னால் சர்வதேசப் பொலிஸான இண்டர்போல் அமைப்பு சர்வதேசக் குற்றவாளிகளுடன் இணைத்து அவரையும் இன்னும் சில அறிஞர்களையும் தனது தேடப்படுவோர் பட்டியலில் இணைத்துள்ளது. அப்படியாயின் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும், உயிருடன் கொளுத்தப்பட்டும் சித்திரவதைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதெல்லாம் இந்த இண்டர்போல் எங்கே இருந்தது..? குழதைகள், பெரியவர்கள் என்று பாராது கொல்லப்பட்ட போதெல்லாம் இண்டர்போல் எங்கிருந்தது???

முதலில் இண்டர்போல் முபாரக்கின் ஆட்சியின் களவாணிகள் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும். அவர்கள் தான் 30 வருடங்களாக நாட்டை சீர்குலைத்து அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்கள். இறுதியில் மோசடியிலும் இஸ்ரேலுக்கு எண்ணெய் விற்பதிலும் திளைத்திருந்த ஹுஸ்னி முபாரக் நிரபராதியாக்கப்பட்டு விட்டான். அவன் பட்டப் பகலிலே ஆயிரக்கணக்கானோரை அநியாயமாகப் படுகொலை செய்தவன். இதேநேரம் எகிப்திய நீதித் துறை(!) வினைத்திறன் மிக்க வயதுகளில் உள்ள இளைஞர்களையும் யுவதிகளையும் கொடுந்தண்டனைகள் வழங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் ‘ராபிஆ’ சின்னத்தைக் காண்பித்ததாம். அல்லது முர்ஸியின் படத்தையோ ஷரீஆ சுலோகங்களையோ வைத்துக் கொண்டிருந்தார்களாம். 78 குழந்தைகளையும்கூட 5 வருடம் – 10 வருடம் என கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறார்கள். சும்மா வெறும் ஒரே நொடியில் நூற்றுக்கு மேலால் நூறு என எவ்வித சான்றும் இல்லாது அவர்களுக்கும் பேசுவதற்கோ தம் பக்க நியாயங்களை எடுத்துவைப்பதற்கோ சில சொற்ப அவகாசங்களையாவது வழங்காது மரண தண்டனைத் தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொடுங்கரம் கொண்ட இந்த நீதிமன்றங்களுக்கு சித்திரவதைப்படும் அப்பாவிகளின் ஓலங்கள் கேட்பதேயில்லை. எமக்கென அல்லாஹ்வையன்றி வேறு துணையோ பலமோ வேறேதுமில்லை.

இது அபாண்டங்களை சித்து விளையாட்டுக்களையும் கொண்ட தீர்ப்பு; இது உலகம் முழுதும் போற்றப்படும் சர்வதேச உரிமைச் சட்டங்களை எள்ளிநகையாடும் தீர்ப்பு; இது அச்சட்டங்களை உலகின் பார்வைக்குக் கேலிக்கூத்தாக்கிவிட்ட தீர்ப்பு; இது நீதியின் தீர்ப்பல்ல… இது இராணுவக்கெடுபிடிகள் நிறைந்த ஓர் அமைப்பின் தீர்ப்பு. இவ்வகையான தீர்ப்புக்கள் குறித்து கண்ணியமிக்க நிறுவனங்கள் பதில் கூற முடியுமா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s