காதலும் வாழ்வும்…

1541

காதல் என்பது அதன் தூய கருத்தின் படி உயர்ந்ததோர் உணர்வு. மென்மையானதோர் உணர்வு. தாக்கம் மிகுந்ததோர் நடத்தைக் கோலம். மகத்துவமிக்க உணர்வுகளாலும் பண்புகளாலும் காதல் உடலுக்கும் ஆத்மாவுக்கும் அணிகலன். எனவே இப்பிரபஞ்சத்தின் இரகசியம் அதுவே… அதுதான் வாழ்வின் உயிர்நாடி…

களைப்புக்கள், நோவிணைகள், போராட்டங்களின் வெளிகளில் அது புத்துணர்வு மிகுந்த மென்மையான மூச்சுக்காற்று. இவையெல்லாம் எமது பெற்றோரின் கண்களில், களங்கமற்ற சின்னஞ் சிறுசுகளின் பிஞ்சு முகங்களில், ஏன் சிறு மிருகங்களின் அங்கலட்சணங்களில் என நாம் எம் அன்றாட வாழ்வில் காணும் ஆயிரக்கணக்கான தத்ரூபமான காட்சிகள் அனைத்திலுமே தெளிவாகின்றது.

காதல் என்றொன்று இல்லையேல் வாழ்வின் அனைத்து நல் அர்த்தங்களும் பாழாகியே போயிருக்கும். பூமிப்பந்தில் அருளினதும் நலவுகளினதும் ஊற்றுக்கள் வரண்டே போயிருக்கும். உலகு தாக்குப்பிடிக்க முடியாது நரகாகியிருக்கும். பூமியின் உட்பகுதி அதன் வெளிப்பகுதியை விடவும் நல்லதாயிருந்திருக்கும்.

மூடர்கள்தாம் இப்பூமியில் காதலுக்கான பாதையைச் சிதைத்தவர்கள். அவர்கள்தாம் அதனுடைய மதுரமான ஊற்றை நாசப்படுத்தியவர்கள். அவர்கள் குழப்பங்களுடன் வாழ்ந்தார்கள். பயம் அவர்களை சின்னாபின்னப்படுத்திவிட்டது. சுயநலம் அவர்களை சாப்பிட்டுவிட்டது. ஓய்வும் தனிமையும் சோம்பலும் அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக்கிவிட்டது.

காதல் உணர்வுகளை வருடிவிடக்கூடிய இனிமையான சப்தம். அது எதிர்பார்ப்புக்களை அபரிதமான சந்தோசத்தை மனித உள்ளங்களை தூண்டிவிடக் கூடியது. அது மனிதர்களில் வாழ்வு குறித்த, போராடுதல் குறித்த, தியாகங்கள் குறித்த, சுதந்திரம் குறித்த ஆசைகளைப் பொசுக்கிவிடக்கூடியது.

கொள்கைகளும் சித்தார்ந்தங்களும் மக்களது வெற்றிக்கும் சந்தோசத்துக்குமான வழியை “காதல் கொள்ளல்” என்பதனைக் கருவியாகக் கொண்டாலேயன்றி வரைந்து தந்துவிட முடியாது. ஒரே உயர் நோக்கத்திலே உள்ளங்களையும் அறிவு நுட்பங்களையும் ஒன்றிணைந்ததொரு புனிதமான பிணைப்பினை அதன் மூலம் ஆக்கிவிடலாம்.

சமுதாயங்களுக்குள்ளே கவிழ்ந்திருக்கும் துயரத்தின் இரகசியத்தைத் தேடினோமானால் காதலின் இனிமையும், அதன் அடையாளமாவது இல்லாதிருப்பதுமே அதற்கான மறை காரனியாக இருக்கும். குரோதத்தையும் வெறுப்புணர்வையும் தம்மில் எடுத்துக்கொண்டவர்கள் உண்மையில் தமது வாழ்வின் உயர்ந்த அர்த்தத்தையும் மானிட சகோதரத்துவத்தையும் இழந்துவிட்டவர்கள். காதலின் அர்த்தமானது நிற-இன-மார்க்க-வர்க்க பேதங்களின் மாற்றங்களுக்கு உட்பட்டு மாற்றமுற்றுவிடாது.

என்றாலும் கவலைக்குறிய விதத்திலே எமது காலத்தில் காதல் என்பது ஒரு வகை அந்நியமான அசுத்த தோற்றத்திற்கு மாறிவிட்டது. குறுகிய எல்லைகளோடும் சுருங்கிய பார்வைகளோடும் உலகியல் மனோ இச்சைகளாலும் அற்பமான ஆசைகளாலும் தவறான வியாக்கியானங்களாலும் அசூசையாக்கப்பட்டுவிட்டது. தன்னுடைய அர்த்தத்தை அது மூடிக்கொண்டு விட்டது. வெறுமனே எதுவித புரிதலுமில்லாது மனிதர்கள் மடக்கி மடக்கி உச்சரிக்கும் வார்த்தையாக அது மாறிவிட்டது. அதனுடைய உண்மையான அரிய கருத்தை அது பிரதிபலிக்காமல் விட்டுவிட்டது.

காதலின் அர்த்தமானது குறுகிய பாலியல் இன்பங்களோடு மட்டும் சுருக்கப்பட்டுவிட்டது. அது சுதந்திரத்தினதும் சீர்கேடுகளினதும் குறியீடாக மாற்றப்பட்டுவிட்டது. சில வேளைகளில் காதல் என்பது குறைபாடுள்ள ஆன்மாவைக்கொண்ட மனித உள்ளத்தின் நோயுற்ற இச்சைகளுக்கான வடிகாலாக அமைந்துவிட்டது. இச்சைகளை திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வின் அடியார்களை இழிவுபடுத்தி உயர்ந்த மனிதப் பெறுமானங்களை மிதித்துப்போடும் கருவியாக மாறிவிட்டது. தேசப்பற்றானது சந்தர்ப்பவாதமாகவும் மாற்றப்படலாம். அல்லது கண்மூடித்தனமான வெறியாகவும் மாற்றப்படலாம். அவை மனிதனைப் படு மோசமான நிலைக்குத் தள்ளிவிடும்.

காதல் தன் உருமாற்றப்பட்ட சீர்கெட்ட தோற்றத்துடனும் அற்பமான கோமாளித்தனங்களுடனும் சினிமாவினுள்ளே புகுந்துவிட்டது. பின் இளம் பராயத்தினர் உள்ளங்களிலே காதல் என்பது வெறுமனே பாலியல் எண்ணங்களும் சடவாத நோக்கங்களும் கொண்டதாக நிரந்தரமாகவே பதிந்துவிட்டது.

வான் தூதுகள் கூட காதலின் உண்மைக் கருத்தை உறுதிப்படுத்த விழைந்தன. இம்மகத்துவமிக்க காதலின் நிழலில் தான் தஃவா எத்திவைக்கப்பட்டது. தியாகங்கள் பல பலாராலும் புரியப்பட்டது. அனைவரும் சுதந்திரம், நலவுகள், தூய்மை என்பவற்றின் நிழலை அனுபவித்தனர்.

“உங்கள் ஒருவருக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் அனைத்தை விடவும் மிகவும் விருப்பத்திற்குறியதாக ஆகும் வரை ஈமான் கொண்டவராகி விடமாட்டீர் என தூதர் (ஸல்) அவர்கள் எப்போது கூறினார்களோ அப்போதே அவர்கள் காதலுக்கான உயர்ந்த கருத்தை அளித்துவிட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கழா-கத்ர் களில் திருப்திகண்டு; தூயவன் அவனது ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றியொழுகி  தனிமனிதனதும் சமூகத்தினதும் சந்தோசத்திற்கான அடித்தளமாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ள பண்பொழுக்கங்களுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பதுதான் உயர்ந்த காதலாகும். “நபியே நீர் கூறுவீராக..! நீங்கள் என்னைப் பின்பற்றியொழுகுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (அல்-குர்ஆன்)

அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வழியில் நடப்பதுதான் இறைக்காதலுக்கான செயலியல் விளக்கமாகும். அதுவே பூரணமிகுந்த மகத்தான காதலின் காட்சிப்பிம்பமாகவும் இருக்கும். இவ்வெல்லையற்ற காதலின் விளைவு குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுவான் என்று ஹதீஸுல் குத்ஸி ஒன்று கூறுகிறது: “எனக்காக நேசம் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழல் தவிர்ந்த வேறு நிழலில்லாத இந்த நாளில் நான் அவர்களுக்கு நிழலளிப்பேன்.”

இஸ்லாமிய நேசமானது விருட்சமாக வளார்ந்து பூமி தொட்டு வானம் வரைக்கும் அதன் கிளைகள் பரந்து விரிந்தன. அதன் நிழலை காதலின் பலவித வர்ணங்கள் போர்த்திக்கொண்டது. அது மானிட எல்லைகள் கடந்து ஏனைய ஜீவன்கள் மீது காருன்யம் காட்டி பரிவுடன் நடந்து கொள்ளல் வரைக்கும் பரந்துபட்டதாக அமைந்தது. “வணக்கவாளியாக இருந்ததொரு பெண் பூனையொன்றுக்கு உணவளிக்காது கொடுமைப்படுத்தியதனால் நரகம் நுழைகிறாள். பாவியான ஒரு பெண் தாகித்திருந்த நாய்க்கு நீர் புகட்டியதால் சுவனம் போகிறாள்.”

காதல் கொள்வதென்பது ஒரு முஸ்லிமிடத்தில் விசுவாசக் கோட்பாடு, பண்பாடு, நடத்தைக் கோலம், வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் அதுவே…. இப்புனிதமான பிணைப்புத்தான் ஸல்மான் பாரிஸையும் பிலாலையும் ஸுஹைல் ரூமியையும் அபூதர் அல்கிபாரியையும் இணைத்துவிட்டது. இதுதான் காலத்தால் அழியாத இஸ்லாமிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதில் ஆழ்ந்த அடிப்படைகளாய் இருந்தது. மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். இதன் முன்னால் சுரண்டலின் அடிப்பாடையிலும் அல்லாஹ் அல்லாதவற்றிற்கு அடிமைப்பட்டும் எழுந்த ரோமானிய கோபுரங்களும் பாரசீகத்தின் மாளிகைகளும் வீழ்ந்தன. இஸ்லாமிய நாகரிகமானது “மகத்தான நேசத்தின்  பூரண கருத்தை உள்வாங்கிய நாகரிகமாக அமைந்தது.

அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்குமிடையில் பரிமாறப்படும் அன்பானது தனித்துவமிக்கது. தூய்மைமிக்கது. அனைத்து வேறு நோக்கங்களையும் விட்டும் தூரமானது. ஒரு ஹதீஸில் குறிப்பிடப்படுவது போன்று அல்லாஹ் ஓர் அடியானை விரும்பினால் சோதிப்பான். சோதனை என்பது அல்லாஹ்விடமிருந்தான பரீட்சையாகும். சிலவேளை அது அவனது பாவங்களுக்கான பரிகாரமாகவும் அமையலாம். அல்லது அவனைப் பீடிக்கப்போகின்ற பெருந்துன்பமொன்றைக் குறைப்பதாகவும் இருக்கலாம். ஒரு முஸ்லிம் இவ்வாறுதான் காலத்தின் கோலங்களைப் புரிந்துகொள்வான். காலத்தின் ஏற்ற இறக்கங்கள் அல்லாஹ்வின் சோதனைகளே… எந்த அனர்த்தமோ எந்தத் துன்பமோ அவனுடனான அன்பைப் பீடித்துவிடாது… அடியானுக்கு ஒரு முள் குத்துவதாயினும்… அதற்கும் அவனுக்கு நன்மை உண்டு.

காதலின் சக்தியும் வலிமையும்தான் முஃமின்களை சந்தேகத்துக்குரிய எந்த நடத்தைகளை விட்டும் விடுபடச் செய்தது. அதுதான் உமர் (ரழி) அவர்களை இவ்வாறு கூறவும் வைத்தது: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இராக் வீதியிலே ஒரு கழுதை பாதிக்கப்பட்டாலும் அதற்கென பாதையை சீர்செய்து வைக்கவில்லையா…? என நான் வினவப்படுவேன்.”

இன்றும் நாம் எமது உலகிலே எதனைக் காண்கிறோம்? பழாய்ப்போன குழு வாதங்களிலும் இனவாதங்களினதும் வெளிப்பாடுகளாக என்றுமே என்றைக்குமான போராட்டங்கள். அவை இன்றைய காலத்தின் நோய்களின் விளைவுகள் அன்றி வேறென்ன? அந்நோய்தான் குரோதம். அதன் மூலம் அநியாயமும் அட்டூழியங்களும்தான் வெளிப்படுகின்றன. எங்கும் யுத்தம்; வாள் முனையில் யுத்தம், துப்பாக்கிமுனையில் யுத்தம், பேனா முனையிலும் யுத்தம்… அமெரிக்காவிலும் யுத்தம், ஐரோப்பாவிலும் யுத்தம், ஆபிரிக்காவிலும் யுத்தம், ஆசியாவிலும் யுத்தம்… முன்னேற்றமடைந்த சமூகங்களும் போராடுகின்றன. பின்னடைந்த சமூகங்களும் போராடுகின்றன. மனிதர்கள் மூடத்தனமான அனாச்சாரங்களுக்காகவும் பேராசைகளுக்காகவும் அற்பமான குரோதங்களுக்காகவும் துவம்சம் செய்துகொள்கிறார்கள்.

காதலானது அதன் உணமையான அர்த்தத்திலே எமது சமகாலத்தில் இல்லாதிருப்பதுதான் இக்காலத்தின் துரதிஷ்டமும் அவலமுமாகும். நாம் காண்பவை ஏடுகளில் பதியப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ காதல் மட்டும் தான். உலகம் காதலின் வழியை அறிந்துகொள்ளுமானால் ஒழுங்கினதும் சட்டத்தினதும் சகோதரத்துவத்தினதும் வழியை அறிந்துகொண்டுவிடும்.

வெறும் ரொட்டித்துண்டால் மாத்திரம் மனிதனை உயிர்பெறச் செய்ய முடியாது…

நோயுற்று நொந்து போயிருக்கும் இன்றைய உலகுக்கு மருந்துச் சீட்டு எழுதிக்கொடுப்பதென்றால் “காதல் என்ற மருந்துக்கு அப்பால் எதனையுமே எழுதிவிட முடியாது.

குறிப்பு: இவ்வாக்கம் நஜீப் அல் கைலானியின் அல்ஹயாத் வல்ஹுப் என்ற ஆக்கத்தினைத் தழுவி எழுதப்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s