கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி

hqdefault

 

இம்மாதம் நான்காம் தேதி இஸ்லாமிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரும் சிந்தனையாளருமான கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி அவர்களை இஸ்லாமிய உலகம் இழந்தமை அதிர்ச்சியையும் செய்வதறியா திகைப்பொன்றையும் உடனடியாகத் தோற்றுவித்தது.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வாணி அவர்கள் அறிவுப் பாரம்பரியம் மிகுந்த குடும்பமொன்றிலே இது போன்றதொரு மார்ச் மாதம் 4ம் தேதி இராக்கின் ஃபலூஜா நகரிலே 1935ம் ஆண்டில் பிறந்தார்கள். அவ்வாறான தினமொன்றிலேயே கெய்றோவிலிருந்து வாஷிங்டன் நோக்கித் திரும்புகையில் கடந்த வாரம் வபாத்தானார்கள்.

இஸ்லாமிய உலகிலே அடுத்தடுத்து தோன்றப்போகும் தலைமுறைகள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகளுள் ஒருவராக கலாநிதி அவர்கள் விளங்குகிறார்கள். 1940களில் கல்வி பெறத் துவங்கிய தாஹா ஜாபிர் அல்வானி இராக்கின் முக்கிய அறிஞர்களிடம் ஆரம்ப, இடைநிலைக் கல்விகளைக் கற்றார்கள். பின்னர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அல்அஸ்ஹர் கலாபீடத்திலே இணைந்து உஸூலுல் ஃபிக்ஹிலே கலாநிதிப் பட்டம் பெறும்வரைக்கும் தம் கல்வியை அங்கு தொடர்ந்தார்கள்.

அவரது கல்வி நடவடிக்கைகளின் வெளிப்பாடுகள் 1950களிலிருந்தே எழுத்துக்களாகவும் பேச்சுக்களாகவும் வெளிப்பட்டன. இக்காலப்பிரிவுகளில் சதாமுக்கும் அவரது பாத் கட்சிக்கும் எதிரான துணிகர செயல்பாடுகளினால் 1969 காலப்பிரிவில் இராக்கை விட்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பின்பு தொடர்ந்து 10 ஆண்டுகள் சவூதி ரியாதில் உள்ள இப்னு சுஊத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமை புரிந்தார்கள். பின்பு அமெரிக்காவில் குடியேறத் தீர்மானித்த கலாநிதியவர்கள் அங்கு இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஸ்தாபிதத்தில் முக்கிய பங்காற்றினார்கள். 1988 முதல் 1996 வரை அதனை தலைமையேற்று வழிநடாத்தியும் சென்றார்கள். அவ்வாறே ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமி அமைப்பை நிறுவுவதிலும் அவரது பங்களிப்பு காத்திரமானது. இது தவிரவும் பல சர்வதேச மற்றும் பிராந்திய மட்டங்களிலான அமைப்புக்களை நிறுவுவதிலும் வழிநடாத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி அவர்கள் காலஞ் சென்ற சமயம் அறிஞரொருவர் தனது செய்தியில் அமெரிக்காவின் உஸூலுல் ஃபிக்ஹ் தூண் வீழ்ந்துவிட்டதென்று கருத்துத் தெரிவித்திருந்தார். உண்மையில் தாஹா ஜாபிர் அல்வானி அவர்களது உஸூல் ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டவாக்க முறைமைகள்) துறையில் இக்காலத்தின் ஜாம்பவானாகவே வாழ்ந்தார். அவரது கலாநிதிப் பட்ட ஆய்வும் கூட இமாம் ஃபக்ருத்தீன் ராஸி அவர்களது உஸூல் ஃபிக்ஹ் களஞ்சியமான ‘மஹ்ஸூல்’க்கான திறனாய்வாகவே இருந்தது. உஸூல் ஃபிக்ஹ்க்கு அப்பால் ஃபிக்ஹுல் அகல்லிய்யாத், முகாரனதுல் அத்யான், ஸுன்னா குறித்த புதிய சிந்தனைகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினார். இறுதிக் காலப்பகுதியில் அல்குர்ஆன் மற்றும் அதன் சிந்தனைகள் பற்றிய ஆய்வுகளிலேயே தன் நேரத்தை செலவழித்தார்; அத்துறையிலேயே 10 புத்தகங்கள் வரைக்கும் எழுதினார்; அத்தொடரில் இன்னும் 8 புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை முக்கிய தகவலாகும். மேலும் அவரது விரிவுரைத்தொடர்கள் பலவும் பதிப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட  சிறப்பான புத்தகங்களில் முக்கியமான சிலதை கீழ்வரும் பட்டியளில் உள்ளடக்கலாம்:

  1. இமாம் ராஸியின் அல்மஹ்ஸூல் ஃபி உஸூலில் ஃபிக்ஹ் புத்தகத்தைத் திறனாய்வு செய்து வெளியிட்டார்கள். ( இதுவே அவரது கலாநிதிப் பட்ட ஆய்வும் கூட)
  2. அல்அஸ்மா அல்ஃபிக்ரிய்யா வ மனாஹிஜுத் தஃங்யீர் – சிந்தனைச் நெருக்கடியும், மாற்றத்திற்கான வழிமுறைகளும்.
  3. அதபுல் இஃக்திலாஃப் ஃபில் இஸ்லாம் – இஸ்லாமில் கருத்து வேருபாட்டுக்கான ஒழுங்குவிதிகள்.
  4. லா இக்ராஹ ஃபித் தீன் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்ற இப்புத்தகம் ரித்தத் குறித்துப் பேசும் புத்தகமாகும்.

அடுத்து மிக முக்கியமாக அவர் முன்னெடுத்த சிந்தனைப் போராட்டமாக IIIT (இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம்) இன் அடிநாதமான அறிவை இஸ்லாமிய மயப்படுத்தும் செயற்றிட்டத்துக்காக அவர் முக்கிய பங்காற்றினார். இதற்கான நிறுவன வெளியீடான ‘இஸ்லாமிய்யத்துல் மஃரிஃபா’ (இஸ்லாமிய மயப்படுத்தல்) சஞ்சிகைக்கு ஆசிரியராக நின்று வழிநடாத்தினார்.

அவரது முக்கிய கருத்துக்கள் – சிந்தனைகள் – ஆக்கங்களில் ஸூரத்துல் அன்ஆமுக்கான தஃப்ஸீர் பரவலான கவனயீர்ப்பைப் பெற்றதோடு தஃப்ஸீர் குறித்த புதிய பார்வையையும் சிந்தனைகளையும் கொடுத்தது. உம்மத்தின் சுய விமர்சனத்துக்கான அழைப்பும் நோய்களுக்கான நிவாரணிகளை முன்வைத்தமையும் அவரது முக்கிய சிறப்பம்சமாகும். அவரது அதபுல் இஃக்திலாஃப் நூலில் நுபுவ்வத் காலம், ஃகிலாபா ராஷிதா தொட்டு தாபிஈன்கள் என கருத்து வேறுபாடுகள் பற்றியும் அவற்றுக்கான காரணிகள் பற்றியும் பேசுவது அலாதியானது. அவர் அல்குர்ஆனின் மையக்கருத்துக்களை விளக்கும் போது மூன்று தலைப்புகளாக (தவ்ஹீத்-தஸ்கியா-சமூகம்) பகுத்து நோக்குவார்.

அவர் எப்போதும் தன்னை அறிவைத் தேடும் மாணவனாகவே அறிமுகப்படுத்துவதற்கு மிகுந்த விருப்புக் கொண்டவராகக் காணப்பட்டதாக அவருக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர். அவருக்குக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் அறிவைத் தேடுவதற்கான வாய்ப்புக்களாக வரையறையின்றிப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பிரியமுடன் இருந்தார். அத்தோடு அமெரிக்காவில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைக் கட்டியெழுப்புவதிலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டார்.

கலாநிதி தாஹா ஜாபிர் அல்வானி தனது குடும்பம் முழுதையும் அறிவுத்துறையில் ஈடுபடுத்தியவர்; இவரது மனைவி முனா அபுல் ஃபல்ழ் ஒரு கலாநிதி. அவ்வாறே பிள்ளைகளான ஸீனத், ருக்கையா, அஹ்மத் உள்ளிட்ட அனைவருமே கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்து இன்று புலமைத்துவ வட்டாரங்களில் அதிக பங்களிப்பு செய்வோராக தந்தை வழியில் முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.

அல்லாஹ் அன்னாரது பணிகளை அங்கீகரித்து அவரது மறுவுலக வாழ்வை அவனது திருப்தியைப் பெற்றதாக ஆக்கியருள வேண்டும்!!!

 

தகவல்கள்: www.yanabeea.com, www.sadaalahdas.com, www.alwasatnews.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s