இஃக்வான்கள் தோல்வியடைந்து விட்டனரா? இயக்கம் காலாவதியாகிவிட்டதா?

313411f5cd514103a9277ba17fb97ccc_19

 

 

நல்லெண்ணத்திலோ அல்லது பிழையான சிந்தனைகளாலோ 2013ம்ம் ஆண்டு நிகழ்வுகளோடு இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் பக்கங்கள் மூடப்பட்டு விட்டதாக சிலர் கருத்துச் சொல்கின்றனர். இயக்கம் காலாவதியாகிவிட்டது என்கின்றனர். ஏனெனில் அத்தகையோர் சொல்லிக் கொண்டிருப்பது போல் இஃக்வான்கள் முற்றிலுமே தோல்வியடைந்து விட்டார்கள்; இனி அவர்கள் மீளப் போவதில்லை… என்றெல்லாம் சொல்கின்றனர்.

அதில் சிலர் தம்மை இஃக்வான்கள் என்றோ அல்லது இஃக்வான்களின் இளைஞர்களைச் சார்ந்தோர் என்றோ சொல்பவர்கள். மற்றும் சிலர் இஃக்வான்களின் தலைமை மட்டங்களில் முன்னொரு காலத்தில் இருந்தவர்கள்.

உண்மையில் நான் இஃக்வான்கள் 1954ம் ஆண்டில் சோதனையின் முதல் கட்டத்தை அனுபவித்த போது நான் பிறந்திருக்கவுமில்லை. அப்போது அவர்களுள் சில பிரதானிகள் தூக்குக் கயிறுகளில் மாட்டப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டனர்; சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

நான் பத்து வயதுகளில் இருந்த போது இரண்டாம் சோதனைக் கட்டத்தை 1965ம் ஆண்டில் எதிர்கொண்டனர். இன்னும் ஜமாஅத்தின் முக்கியமானோர் பலர் தூக்குக் கயிறுகளில் மாட்டப்பட்டனர்; மீளவும் நூற்றுக் கணக்கானோர் சிறைச்சாலைகளில் தூக்கியெறியப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் மீது சித்திரவதைகள் கட்டுக்கடங்காது அவர்களது வாழ்வு நிர்மூலமாக்கப்பட்டது.

அப்போது நிகழ்ந்தவற்றை, எனது குடும்பத்தினர் சிலர் நினைத்துக் கொண்டிருந்தவாறு தன்னை ஒரு தீய மனிதராகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த, இஃக்வான்களை வதைகளால் கொண்டாடிக் கொண்டிருந்த ஜமால் அப்துல் நாஸரை இந்த சமூகத்தின் மீட்பராகவும் பலஸ்தீனத்தை விடுவிப்பவராகவும் நானும் உணர்ந்தது பற்றி நான் எதுவும் இங்கு கூறப்போவதில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்லமுடிகிறது; அப்போது அந்தக் கடுமையான சோதனைகள் குறித்து சிலர் எவ்வாறு இஃக்வான்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனரோ அவற்றுக்கும் இன்று இஃக்வான்கள் குறித்து சிலர் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதனையும் நான் காணவில்லை. ஒரே வகையான புலம்பல்கள் தான்; ஒரே வகையான விமர்சனங்கள் தான்; ஒரே வகையான வேண்டுகோள்கள் தான்… இந்தத் தீராத விமர்சகர்கள் இஃக்வான்களுக்கும் அவர்களோடு இருந்தவர்களுக்கும் நேர்ந்த அநீதிகளுக்கான பொறுப்பை இஃக்வான்கள் மீதே சாட்டிவிடுகின்றனர்.

அத்தகையோர் ‘காலாவதி’ எனச் சொல்வதை விடுத்து அவர்களுக்கும் இயங்குவதற்கும் போராடுவதற்கும் முயர்சிப்பதற்குமான பாதை திறந்தே உள்ளது என்பதைக் காண்பதற்கு மறந்துவிடுகின்றனர். என்பது வருடங்கள் ஆயுளைக் கடந்துவிட்ட இந்த ஜமாஅத் அதனுடைய இயலுமைக்குள் இந்த உம்மத்துக்கென அடைய முடியாத அடைவுகள், வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க அத்தகையோருக்கு தமது புலப்படாத புதுமைகளை அமுல்படுத்த இஃக்வான்கள் களத்தை விட்டுவிடவும் வேண்டும்.

நான் மனிதர்கள் தம்மை மீள்பரிசீலனை செய்யவேண்டும்; சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும்; விமர்சிக்கப்படவேண்டும்; போன்ற கருத்துக்கு எதிரானவன் அல்ல. அதேநேரம் இஃக்வான்களோ அல்லது ஏனைய மனிதர்களோ கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பரிசுத்தவான்கள் என்று கருதுபவனும் அல்ல. இதுதவிரவும் நான் எகிப்திலே கடந்த எதிர்ப்புரட்சியிலிருந்து இஃக்வான்கள் குறித்துச் சொல்லப்படுபவை அனைத்தையும் அறிவுபூர்வமான விமர்சனங்கள் என்றோ ஆய்வுரீதியான மதிப்பீடுகள் என்றோ நீதிமிக்க முடிவுகள் என்றோ கூறமாட்டேன்.

இஃக்வான்கள் தோல்வியுற்றதாகத் தீர்ப்புக் கூறுபவர்கள் சாத்தியமாகாத பிரதிபலன்களையே அவர்கள் தந்துவிட்டதாகக் குறிப்பிட்டே இவ்வாறு கூறுகின்றனர். தாம் அவாவிய கனவை சாத்தியமாக்கிக் கொள்வது இயலாததாகி விட்டமைக்கு இஃக்வான்கள் மட்டுமே பொறுப்பு சுமக்க வேண்டும் என அவர்கள் கருதுவது எவ்வாறு என நான் அறியேன்! இஃக்வான்கள் மக்களை பூவுலக சொர்க்கத்துக்காக அழைக்கவும் இல்லை. அவர்கள் மக்களை அழைத்ததெல்லாம் இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மை தரக்கூடியதாக அவர்கள் விசுவாசித்ததன் பக்கம் நோக்கி மட்டுமே… தம் எதிரிகளை மிகைத்து வெற்றியை எதிர்பார்த்த போராட்டத்துக்கெனவும் தம் வாழ்வை சீர்படுத்தும் உள்ப்போராட்டத்துக்காகவுமே அவர்களை உணர்வூட்டப் பிரயத்தனம் மேற்கொண்டது.

இஃக்வான்கள் தமது நோக்கம் ‘படைப்புக்களை’ திருப்திப்படுத்துவதுதான் என ஒரு நாளும் கூறவில்லை. மாறாக அவர்கள் மீட்டி மீட்டி ‘அல்லாஹு ஃகாயதுனா; வர்ரஸூலு குத்வதுனா! வல்ஜிஹாது ஸபீலுனா! வல் மவ்து ஃபி ஸபீலில்லாஹ் அஸ்மா அமானீனா!’ (அல்லாஹ்வே எங்கள் இலக்கு! அவன் தூதரே எம் முன்மாதிரி! ஜிஹாத் எமது பாதை! இறைபாதையில் மரணிப்பது எமதுயர்ந்த ஆசை) என உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.

இஃக்வான்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என ஒரே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரது நிலைப்பாட்டைச் செவியுறும் போதெல்லாம் என் சிந்தையில் ஸூரத்துல் புரூஜ் வர்ணிக்கும் காட்சிகள் தான் வருகிறது. அங்கு மன்னன் தன் காவலாளிகளை நோக்கி ஏகத்துவத்தை விட்டும் இணைவைப்பை நோக்கி வர மறுப்போரை நெருப்புக் கிடங்கினுள் துக்கிப் போட்டுவிடும்படி ஏவுகிறான். அப்போது அல்லாஹ் அல்லாதோருக்கு முகம்காட்ட மறுத்து நெருப்பிலே கருகி மாண்டவர்கள் உண்மையில் தோல்வியடைந்தவர்களா? மிகக் கொடுமையான முறையில் கொடூரக் கொலை நிகழ்த்திய அந்த இறைமறுப்பாளர்களான தாகூத்கள் வெற்றி பெற்றுவிட்டார்களா? மக்கள் நேர்வழி பெறவேண்டும்; அவர்கள் சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அசத்தியமாகவும் கண்டுணர வேண்டும்; சிறுவனின் இறைவனான அல்லாஹ்வே வணங்கப்படத் தகுதியான ஒரே இரட்சகன் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக அம்புகளுக்குள் தன்னையே தியாகம் கொண்ட அந்த சிறுவன் தோல்வியடைந்துவிட்டானா?

சிலபோது அங்கு சிலர் மன்னனுக்கும் தீச்சுவாலைகளுக்கும் பயந்து ஏக அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் ஒதுங்கியிருந்தால்; யாராவது அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள் மரணித்தவர்கள் எல்லாம் தோல்வியுற்றுவிட்டார்கள்; கேவலமாகிவிட்டார்கள் என சொல்லியிருப்பார்களா? விமர்சகர்களே! எந்தக் குழு சத்தியத்தின்பால் இருந்திருக்கும்… கூறுங்கள்!

அடுத்து கூறுங்கள்! இஃக்வான்கள் எப்போது தஃவாவையும் அரசியலையும் தங்கள் வீட்டுச் சொத்தாக்கிக் கொண்டார்கள்? எப்போது அவர்கள் களம் தம்மைத் தவிர வேறெவருக்கும் திறந்திருக்கவில்லை எனக் கூறினார்கள்! தம்மிடமிருந்து மட்டுமே தீர்வு வரவேண்டும் என எப்போது கூறினார்கள்! இங்கே எவருக்கெல்லாம் இயலுமை இருக்கிறது எனக் கருதுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் களம் திறந்துதான் இருக்கிறது… அவர்கள் வரலாம். இந்த உம்மத் எல்லாப் புறங்களிலுமிருந்தான முயற்சிகளினதும்பால் தேவையோடிருக்கின்றது. இங்கு ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டு இலக்கை அடைய முயற்சிப்பார்களாயின் நிச்சயம் அது தமது முயற்சிகளுக்கும் வேட்டு வைத்துக் கொண்டதாகவே அமையும்.

சில இளைஞர்கள் தாம் வயோதிபர்களை ஆட்சிக் கதிரையில் பார்த்துச் சலித்துவிட்டதாகவும் தலைமை அவர்களிடமிருந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூத்தோரிடம் ஓய்வுபெற்றுச் செல்லுமாறும் தமக்குக் களத்தைத் தந்துவிடுமாரும் கோரிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோர் தாம் சொகுசாக உட்கார்ந்து கொண்டிருக்க இயக்கம் எதிர்கொண்ட எதிர்க்கணைகளை மூத்தோர்களே எதிர்கொண்டார்கள்; அவர்களே உறுதியோடும் தியாகத்தோடும் சிறைசென்றார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். அவர்கள் தமக்கான சோதனை சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டத்தில் அல்லாஹ்வின் இயல்பான நியதிகளில் ஒன்று என்பதை அறிந்துவைத்துள்ளார்கள். மாற்றச் செயற்பாடுகளின் போது தலைமுறை தலைமுறையாக சீர்திருத்தவாதிகள் இத்தகைய எதிர்புக்களைக் கடந்துசென்றுள்ளனர் என்பதை நன்கறிவார்கள்.

இப்போது இன்னும் சிலர் கஷ்டத்தில் இருப்போரையும் சிறைகளில் வாடுவோரையும் பார்த்து அவர்களது முடிவுகள், தெரிவுகள், நகர்வுகள் என அவர்கள் விட்ட பிழைகள் பற்றி வாதப்பிரதிவாதங்களுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர் முர்சிக்குப் பதிலாக ஷாத்திர் இருந்திருக்க வேண்டுமே! அவர் இவ்வாறு இவ்வாறெல்லாம் செயற்பட்டிருக்க வேண்டுமே என கூறித்திரிகின்றனர். இவ்வாறுதான் எப்பெறுமானமும் அற்ற எதற்கும் தீனியாகாத சில விடயங்களைப் பேசுகின்றனர். அவர்கள் அந்தந்த நேரத்தில் சூழ்நிலைகள் நிலவியமைக்கு ஏற்ப இஜ்திஹாத்களை மேற்கொண்டு முன்னோக்கி நகர்ந்து சென்றனர். இதை வைத்துக் கொண்டு எவ்வாறு ஒரு மனிதனுக்கு அவர்களது இஜ்திஹாத் பற்றி இது பிழை… அதுதான் சரி என்றவாறான தீர்ப்புக்களை கூவித் திரிய முடியும்!? மனிதன் மறைவான விடயங்கள் பற்றி அறிந்தவனா என்ன!? அந்தந்த சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாத்களுக்கு அவை பிழையாக இருந்தபோதும் கூலி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டிருப்பதை அத்தகையவர்கள் அறியமாட்டார்களா?

இஃக்வான்களது செயற்பாடுகள் எவருக்கெல்லாம் சரியாகப்படவில்லையோ அவர்களுக்கு நான் கூறிவைக்க விரும்பும் உபதேசம் இதுதான்… குறிப்பாக இதனை ஒருகாலத்தில் அவர்களோடு இருந்துவிட்டு அவர்களோடு இணைந்து போராட முடியவில்லையோ அவர்களுக்கு சொல்கிறேன் செயற்பாட்டுக்கான களம் விரிந்தது; அல்லாஹ்வுடைய அருளால் தாராளமாக செயலாற்றுங்கள்; உங்களுக்கு சரியெனப்பட்டதை முடிவெடுத்து செயலாற்றுங்கள்; மற்றவர்கள் தோல்வியுற்றுக் கொண்டிருப்பதாக நீங்கள் கருதிக் கொண்டிருக்கும் இடங்களில் நீங்கள் வெற்றிபெற தாராளமாக இடமிருக்கின்றது.இஃக்வான்களின் வரலாறு நெடுகிலும் அவர்களது அணியை விட்டும் வெளியேறிச் சென்றவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்; பல குழுக்களாக அவர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் சிலர் நன்றாகவே இருந்திருக்கிறார்கள்; இன்னும் சிலர் வழிதவறியும் இருக்கிறார்கள்; நன்றாக இருந்தோர் அவர்களுக்கான கட்டுச்சாதனங்களை தயார்செய்து கொண்டார்கள்; வழிதவறியோர் தமக்கான சுமைகளை சம்பாதித்துக் கொண்டனர். இஃக்வான்கள் மட்டும் தான் இஸ்லாம் அல்ல; அவர்கள் மட்டும்தான் ஜமாஅதுல் முஸ்லிமீன் அல்ல; மாறாக அவர்கள் முஸ்லிம்களில் ஒரு ஜமாஅத்; அவர்களிடம் ஒரு சிந்தனை இருக்கிறது; அதனை இஜ்திஹாத் அடிப்படையில் செயலாற்றுகின்றனர்; அவர்களது அணியை விட்டும் வெளியேறுவது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு மாறான வகையில் நடக்காத வரைக்கும் பாவம் செய்வதும் அல்ல…

இஃக்வான்களது கதை முடிந்துவிட்டது என முடிவுகட்டிவிட்டவர்களைப் பொறுத்தமட்டில்; இயக்கம் காலாவதியடைந்துவிட்டது என்போரைப் பொறுத்தமட்டில் அதற்கு மேல் அவர்களால் எதுவும் இயங்க முடியாது… அது வெறும் நேரத்தைப் போக்கடிக்கும் வெற்று வாதம். இஃக்வான்கள் சர்வதேச வலைப்பின்னல் என்பதற்கு முன்னால் அவர்கள் ஒரு சிந்தனை; சிந்தனை மரணித்துவிடாது. அவர்கள் ஓர் எதிர்பார்ப்பு; எதிர்பார்ப்பு சிதறிடாது. அவர்கள் ஒரு சீர்திருத்த செயற்றிட்டம்; அந்த செயற்றிட்டம் முஸ்லிமின் அகீதாவை மையம் கொண்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டுவரக் கூடியது.

அவசரப்படுவோரே! செயலற்றவர்களே! நம்பிக்கையிழந்தோரே! இங்கு எப்போது ஓர் இஃக்வான் இருப்பாரோ… அப்போது இஃக்வான்களுக்கான ஜமாஅத் இருக்கும். அப்போதெல்லாம் அவர்களுக்கு அல்லாஹ் அனுமதியளித்த பிரகாரம் தொடர்ந்தேர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு முன்பைப் போலவே தியாகம் நிரம்பிச் செயற்படுவார்கள். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்துச் செயலாற்றும் ஓர் படையணி தொடர்ந்தும் இருக்கும். இதனை இதன்பின்னர் எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் வாழப்போவோர் நிச்சயம் கஷ்டத்தின் பின்னரான இலேசு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வார்கள். இந்தக் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பின்னர் நிச்சயம் அல்லாஹ்வின் விசாலமான நிம்மதி இருக்கிறது. சோதனையானது பொறுமையாலும் அர்ப்பணிப்பாலும் விரைவில் மாறிவிடும்… சோதனையிலும் பொறுமையாளர்களாக இருப்போருக்கு வாழ்த்துக்களும் சுபசோபனங்களும்..!!!

-கலாநிதி அஸாம் தமீமி

(கட்டுரையாளர் பலஸ்தீனைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் பிரஜை. முஸ்லிம் சகோதரத்துவ சமூக செயற்பாட்டாளர். நீண்டகாலம் துனிஷிய அரசியல் மேதை கலாநிதி ராஷித் அல்கன்னூஷி அவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி தொடர்ந்த அனுபவமும் களப் பரிச்சயமும் மிக்கவர்.)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

Advertisements

One thought on “இஃக்வான்கள் தோல்வியடைந்து விட்டனரா? இயக்கம் காலாவதியாகிவிட்டதா?

  1. மாஷா அல்லாஹ்.. அல்லாஹ்வே அனைத்திற்கும் போதுமானவன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s