மாற்றம் எப்போது? எப்படி?

 

goldfish-jumping-out-of-bowl

நாம் எப்போதும் மாற்றம் குறித்துப் பேசுகின்றோம்; ஓர் அழகிய சுபீட்சமான உலகு குறித்து நாம் காணும் கனவுகளை அடைவதற்காக நாளுக்குப் பல முறை சிந்திக்கிறோம்; நிறைய எழுதுகிறோம்; இந்த இறுதி உம்மத்தின் விடிவுக்கும் மாற்றத்துக்கும் பல வழிகளிலும் உழைக்கிறோம்… நாம் அவாவும் அந்த மாற்றத்துக்கான மையப் புள்ளி எங்கிருக்கின்றது? நம்மிலா…? அல்லது இறை நாட்டத்திலா…? இதனை அல்குர்ஆன் சொல்லும் பாணி மிக அலாதியானது.

இன்றைய தினங்களில் இஸ்லாமிய உம்மத்தை எந்த நாள் தான் காயங்களின்றிக் கடந்து செல்கின்றது…! வருடக் கணக்காகத் தொடரும் துயரம் இஸ்லாமிய உம்மத்தைப் பீடித்திருக்கின்றது. ஒருவருடம் ஆப்கானிஸ்தானில்…! இன்னொரு வருடம் செச்சன்யாவில்…! மற்றொரு வருடம் இராக்கில்…! பலஸ்தீனிலோ வருடக் கணக்கில் தொடரும் துயரம் இஸ்லாமிய உம்மத்தின் உடம்பில் ஆழப்பதியும் வடுக்களைத் தினம் தினம் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது.

தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் இஸ்லாமிய உம்மத் ஓர் உடம்பைப் போன்றது. அதன் ஒரு பகுதியில் நோவினை ஏற்பட்டால் மற்றப் பகுதிகளுக்கும் வலியைத் தரக்கூடியது

கடந்த காலங்களில் இத்தகைய காயங்கள் உம்மத்தின் மீது ஏற்படுத்தப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவோர் மாத்திரமோ அல்லது ஒரு சிலரோ மாத்திரம் அதனை உணர்ந்துவிட்டுப் போய்விடுவர். இன்று தொலைத்தொடர்பு சாதனங்களின் வளார்ச்சியினாலும் சமூக ஊடகங்களின் விரைவினாலும் பூமிப்பந்தின் எந்தவொரு முனையிலும் உம்மத்தின் ஒவ்வொரு நகர்வும்; உம்மத் எதிர்நோக்கும் ஒவ்வொரு நெருக்கடியும் சகோதர முஸ்லிமை நம்ப முடியாத கணத்தில் எட்டிவிடுகின்றது.

முஸ்லிம் உம்மத் கொல்லப்படுகிறது; சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறது; அதன் புனிதங்கள் அசூசியாக்கப்படுகிறது;  இரத்தங்கள் ஓட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன… ஒவ்வொரு முஸ்லிமின் கரங்களும் வானை நோக்கி உயர்ந்திருக்கின்றது… உனது உதவி எப்போதுயா அல்லாஹ்! விடிவு எப்போது ஏற்படும்யா அல்லாஹ்!” என்ற பிரார்த்தனை எங்கும் ஒலித்துக்கொண்டே இருகின்றது. பார்வைகள் வானத்தோடும்… நாவுகள் பிரார்த்தனையோடும் பிணைந்திருக்கின்றன.

இவ்வளவு பிரார்த்தனைகளுக்கும் உதவி தேடல்களுக்கும் மத்தியில் துயரங்களும் தொடர்ந்துகொண்டே இருக்க; சில இடங்களில் துயரங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்க; அல்லாஹ் எம்மைக் கைவிட்டுவிட்டானா? எமது பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பதில்லையா? எம்மை ஏன் இந்தத் துயரத்திலும் ஆறாக் காயங்களிலும் தொடர்ந்தும் இருக்க விட்டிருக்கிறான்? பாரம் மிகுந்த எம் பிரார்த்தனைகளுக்கான விளைவுகள் எங்கே? இப்போது இல்லையென்றால் எப்போது அல்லாஹ் பதிலளிக்கப் போகிறான்?

இவ்வாறு எண்ணற்ற வினாக்கள் உம்மத்தின் மனத்தைக் குடைந்து கொண்டே இருக்க… அல்லாஹ்தானே எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் ஆக்க்கிவிடச் சக்தி படைத்தவன் என்ற எண்ணமும் மேலெழும்புகிறது. அவனே கூறுகிறான்: அவனது விடயம் எவ்வாறெனில் ஒன்றை (ஆக்குவதற்கு) நாடினால் அவன்ஆகுகஎன்றதும் அது ஆகிவிடும்” (யாஸீன்: 82)

அதேவேளை அவனேதான் ஃபிர்அவ்னை மூழ்கடித்தவன்; ஆத், ஸமூத் கூட்டங்களை அழித்தொழித்தவன். உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்(அல்ஃபஜ்ர்: 6-14)

நூஹ்(அலை) அவர்களது பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்து; உதவியளித்தது அவனில்லையா? ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்)கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது(அல்கமர்: 11-14)

அவ்வாறாயின் ஏன் அல்லாஹ் எமக்கு உதவியளிக்கவில்லை? எமது குரல்கள் அவனை அடையவில்லையா? அவன்பால் எம் தேவைகள் அதிகமாக இருக்க அவனுக்கும் எமக்குமான தொடர்புகள் ஏன் தாமதிக்கின்றன? சிலர் சொல்வது போல் ‘அவன் அருள் அதற்குத் தகுதியானோருக்குத் தான் கிடைக்கும்’ என்பது சரியெனின், அத்தகைய தகுதிகள்தான் என்ன? எந்த இடத்திலிருந்து நாம் வெற்றிப்படிகளைத் துவங்குவது? எவ்வாறு துவங்குவது? எப்படித் துவங்குவது?

இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு நேரிய வழியில் பயணிக்க ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெரும் பொறுப்புள்ளது. இது மனிதன் பொறுப்பேற்ற அல்லாஹ்வின் பிரதிநிதித்துவத்தை சரியாக நிறைவேற்ற அவனுக்கு உத்வேகம் தரும்: “அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள் (அல்பகறா: 32)

அல்லாஹ்தான் அனைத்துக்கும் சக்தி பெற்றவன்…. அவனை மீறி எந்த சக்தியும் இல்லை… அவனே அனைத்தையும் அறிந்தவன்… அவதானித்துக்கொண்டிருப்பவன்… தெய்வீக சக்தி அவன் மட்டுமே… அவன் நாடியவை நிச்சயம் நடந்துவிடும்.

ஆனால் மாற்றம் என்பது துவங்க வேண்டியது நம்மிலிருந்துதான்… மாற்றத்தின் தூண்டல் வசனமான ஸூரத்துர் ரஃதின் 11ம் வசனம் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் மாற்றங்களை ஏற்படுத்திவிடப் போவதில்லை என நமக்குச் சொல்லித் தருகிறது.

அந்த வசனத்தைக் கூர்ந்து அவதானித்துப் பாருங்கள்… ஸூரத்துர் ரஃதை தொடர்ந்து திலாவத் செய்கையில் அல்லாஹ்வின் வல்லமைகள் மீள மீளக் கூறப்படுகிறது. அவனது பூரண தெய்வீக சக்தியின் வெளிப்பாடுகள் அங்கே வசனங்களாக ஓதப்படுகிறது. அல்லாஹ் எத்தகையவனெனில் நீங்கள் பார்க்கும் வானத்தை தூண்கள் இன்றி உயர்த்திவைத்திருப்பவன்-2ம் வசனம். மேலும் அவன் எத்தகையவனெனில் பூமியை விரித்து அதிலே மலைகளை நட்டி; நதிகளை ஓடச் செய்பவன் -3ம் வசனம்…

இறுதியாக பத்தாவது வசனத்தோடுஅல்லாஹ்வின் சக்திகளை நினைவுபடுத்தி அத்தொடர் நிறைவுக்கு வருகிறது. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே)

பின்னர் 11ம் வசனத்தில் மாற்றம் குறித்த வசனம்  இவ்வாறு துவங்குகிறது: மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்

பின்னரும் ஸூரா ஆரம்பத்தில் எடுத்துக் காட்டிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்காட்டிய ஆரம்ப வசனங்களை உறுதிப்படுத்தும் பாணியிலேயே செல்கிறது. “இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான். மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்” (அர்ரஃத் :11-13)

மாற்ற வசனத்தின் அமைவிடம் குறித்து நாம் சிந்திக்கையில் நமக்கான சில விடைகள் கிடைக்கின்றன. இவ்வசனம் அல்லாஹ்வின் வல்லமைகளைக் குறித்துப் பேசும் வசனங்களின் சரி மத்தியில் வருகின்றதை அவதானிக்கலாம். ஆம்… அவன் எம் உள்ளங்களையும் கணப் பொழுதில் மாற்றிவிடும் சக்திபடைத்தவன் தான்… ஆனால் அவன் அவ்வாறு செய்வதேயில்லை… மாற்றத்தை எம்மிலே விட்டிருக்கிறான்… நாம் நலவுகளால் அதிகரிக்கும் போது நலவுகள் பக்கம் சாய்வோம்… தீமைகளினதும் கேடுகளினதும் பக்கம் சாயும் போது அவற்றின் பக்கம் சாய்ந்துவிடுவோம்… எமது மீட்சிக்கும் கண்ணியத்துக்குமான மாற்றம் எம்மிடமே உள்ளது.

அந்த மாற்றங்கள் நிகழும் போது பௌதிக சமன்பாடுகள், சமநிலைகள் அர்த்தமற்றுப் போய்விடும்… பல படைகள் இஸ்லாமிய வரலாற்றில் குறைந்த பௌதிகப் பலத்தோடும் நிறைந்த ஆன்மீகப் பலத்தோடும் வெற்றியைத் தம்வசப்படுத்தியிருக்கின்றன. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார். அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்(கமர்-9-10)

நாம் அவாவுகின்ற உலகளாவிய மாற்றத்துக்கான அந்த அடிப்படை மாற்றம் எங்கிருந்து? எப்படி? என்பது இங்கு தெளிவாகின்றது. அல்லாஹ்விடம் பாரஞ்சாட்டிவிட்டு பௌதிக விதிகளைக் கைவிட்டுவிட்டோர் உண்மையில் மாற்றச் செயற்பாட்டில் அறிவற்றவர்களாகவே கணிக்கப்படுவர். “அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அல்லாஹ் அவர்களை அறிவான்” (அன்ஃபால் :60)

அத்தோடு நமது முயற்சிகளும் பௌதிகக் காரணிகளும் மட்டுமே வெற்றியைத் தரப் போதுமானதல்ல. அங்கு ஆன்மீகப் பலம் ஒன்று தேவை; அங்கு அல்லாஹ்வின் நெருக்கம் நிச்சயம் தேவை; நல்ல மாற்றங்களின் உலகளாவிய விளைவுகள் குறுகிய காலமே நிலைத்திருந்ததை வரலாறு நமக்குச் சொல்கிறது. ஃகுலபாஉர் ராஷிதீன்களின் காலம் முப்பத்து சொச்சம் வருடங்கள்தான்; உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் தந்த சுபீட்சமான காலம் இரண்டரை வருடங்கள்தான்… அந்தப் பாரிய உழைப்பின் மூலமான மாற்றமும் அல்லாஹ் தருவதே… உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ்விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்” (ஆல இம்ரான் :126)

ஒரு பயணம் மேற்கொள்வதாயின் நாம் நிச்சயம் வாகனமொன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் வாகனம் இருப்பதனால் பயண இலக்கை நிச்சயம் அடைவோம் என்றும் சொல்ல முடியாது. இதுதான் பௌதிகக் காரணிகளோடு இறை நாட்டமும் ஆன்மீகப் பலமும் குறித்த யதார்த்தம் புலப்படும் புள்ளியாகும். இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிரப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது” (யாஸீன் :41), “நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம் (இஸ்ரா :70), “அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது” (கமர் -13,14)

இறை அழுத்தமின்றி பௌதிக விதியில் மட்டும் எவ்விதப் பெறுமானமும் இல்லை. அதே நேரம் இறை அழுத்தத்தின் விளைவான பௌதிகக் காரணியும் அத்தியாவசியமானது. பௌதிகக் காரணியில் மட்டும் தங்கியிருப்பது மாற்றத்துக்கான செயற்பாட்டாளனான முஃமின் ஒருவனது பண்பு அல்ல. இவ்விடத்திலிருந்து நாம் எமது மாற்றத்தின் யதார்த்தத்தை உணர்ந்து எம் பயணத்தைத் தொடங்க வேண்டும்; தொடர வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s