சூடான் இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் அத்துராபி

06qpt999

 

மார்ச் மாதம் ஈடு செய்ய முடியாத இரு அறிவுத்துறை ஜாம்பவான்களை இஸ்லாமிய உலகம் அடுத்தடுத்து இழந்து நின்றது. மார்ச் நான்கில் பேரறிஞர் கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி அவர்களது மரணச் செய்தியின் அதிர்ச்சி தணியத் துவங்கும் முன்பே சூடான் பேரறிஞர் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் ஹஸன் அத்துராபி அவர்களது மரணச் செய்தி மார்ச் 5 அன்று நம்மை வந்தடைகின்றது.

நளீமிய்யாவில் கற்கும் காலத்தில் கலாநிதி ஹஸன் துராபி குறித்து அரசியல் செய்திகள், நிலவரங்களூடாகத் தெரிந்திருந்த போதும் அவரது புத்தகங்களோ அல்லது சிந்தனைகளோ பெரியளவு எமக்கு அறிமுகமாயிருக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது நூல்கள் கூட இலங்கை சூழல்களில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு இருக்கவில்லை. எனினும் நளீமிய்யாவிலிருந்து பட்டம் பெற்ற பின் ஒரு தேவைக்காக சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் வரலாறு குறித்து தொகுத்தெழுத வேண்டியிருந்ததால் குறுகிய காலத்தினுள் துராபி அவர்கள் குறித்த பெரியதொரு அறிமுகம் கிடைத்தது. அந்தளவுக்கு சூடான் இஸ்லாமிய இயக்க வரலாற்றில் பிரித்துப் பார்க்கவே முடியாத தன்னிகரற்றதோர் ஆளுமையாக மிளிர்ந்தார்கள்.

சர்ச்சைக்குரிய புரட்சிகர சிந்தனையாளர், இடையறாத அரசியல் செயற்பாட்டாளர், சூடானின் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்க நிறுவனர்களுள் ஒருவர், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவர், கார்ட்டூம் பல்கலைக்கழக வேந்தர், சூடான் சட்டமா அதிபர், பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர் என நிறைய அடையாளங்கள் கலாநிதி ஹஸன் துராபி அவர்களுக்கு இருக்கின்றது.

1932 ஆம் ஆண்டில் பலமான தரீக்கா பின்புலம் கொண்ட குடும்பமொன்றில் பிறந்த துராபி அவர்கள் சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டதொடு பல கிராஅத் முறைமைகளையும் கற்றுக் கொண்டார். அதேநேரம் இஸ்லாமிய கலைகளைக் கற்கின்ற, கற்றுக்கொடுக்கின்ற ஒரு சூழல் வாய்த்தமை இஸ்லாமியக் கலைகளில் ஆழ்ந்த பரிச்சயம் ஏற்படுவதற்கான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. சூடானின் பாரம்பரியக் கல்வி முறைகளின் பின்னர் M.A. பட்டப்பின் படிப்பை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும்(1957), பாரிசின் ஸோபோர்ன் பல்கலையில் முனைவர் பட்டத்தையும்(1964) நிறைவு செய்தார்.

அரபு மொழி மட்டுமல்லாது பன்மொழிப் புலமை அவர் பெற்றிருந்த விஷேட திறமையாகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளில் அவர் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். ஆரம்ப காலத்தில் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் இணைந்து அதன் தலைமைப் பீடம் வரைக்கும் செயற்பட்ட துராபி பின்னர் 1970 தோடு அதிலிருந்து விலகி தனது பாணியிலான வித்தியாசமான செயற்பாட்டாளராக விளங்கினார். 1989 உமர் பஷீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் அவருக்கு உறுதுணையோடு இருந்தார். பிற்பட்ட காலங்களில் அவரோடும் முரண்பட்டு ஓரிரு வாரங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.

இஸ்லாமிய விவகாரங்கள், வணக்க வழிபாடுகள், பெண்கள் குறித்து, சமூக விவகாரங்கள் தொடர்பில், புத்துயிர்ப்பு, அரசியலமைப்பு, ஆட்சி, இஸ்லாமிய விவகாரங்கள், அரசியல் என இன்னோரன்ன  தலைப்புக்கள் தொடர்பில் ஏராளமான நூல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

கலாநிதி துராபி அவர்களுடைய பல இஜ்திஹாதுகள், கருத்துக்கள் இஸ்லாமிய அறிஞர்களது கருத்துக்களுக்கு முரண்பட்டமையானது; குறிப்பாக கலாநிதி துராபி விமர்சிக்கப்படவும் பொதுவாக இயக்கத்தின் சிந்தனைகள் விமர்சிக்கப்படவும் ஏதுவாயிற்று. அவரது உரைகள், நூல்கள், சிந்தனைகள் பல அமைப்புக்களில் வெளிவந்துள்ளன. அவரது முக்கிய நூல்களைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்:

  • தஜ்தீதுல் ஃபிக்ரில் இஸ்லாமி -1982 (இஸ்லாமிய சிந்தனையைப் புனரமைத்தல்)
  • தஜ்தீதுத் தீன் -1984 (மார்க்கத்தைப் புனரமைத்தல்)
  • மன்ஹஜிய்யது தஷ்ரீஃ -1987 (சட்டவாக்க முறைமை)
  • அல் முஸ்தலஹாத் அஸ்ஸியாஸிய்யா ஃபில் இஸ்லாம் -2000 (இஸ்லாமில் அரசியல் கலைச் சொற்கள்)
  • அஷ்ஷஆஇர் அத்தீனிய்யா வஸ்ஸலாத் (மார்க்க கிரியைகளும் தொழுகையும்)
  • அத்தப்ஸீர் அத்தவ்ஹீதி (ஸூரா அன்கபூத் வரை எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை)
  • அஸ்ஸியாஸா வல்ஹுக்ம் (அரசியலும் ஆட்சியும்)
  • அல்மர்அ பைன தகாலீதில் முஜ்தமஃ வ தஆலீமித் தீன் (சமூக சம்பிரதாயங்களுக்கும் மார்க்க போதனைகளுக்கும் இடையில் பெண்)
  • ழரூறதுன் நக்த் அத்தாத்தி லில் ஹரக்கா இஸ்லாமிய்யா (இஸ்லாமிய இயக்கத்தின் சுய விமர்சனத்துக்கான அவசியம்)

கலாநிதி ஹஸன் துராபி அவர்கள் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் அதிகம் விமர்சனத்துக் காட்பட்டவர்களில் ஒருவராவார். கமால் முஸ்தபா என்பவர் எழுதிய நவீனகால முஃதஸிலாக்கள் எனும் நூலில் அவரும் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஹஸன் துராபி ஒருபோதும் விமர்சனத்துக்கு அப்பாட்பட்டவராக முடியாது. என்றபோதிலும் அவரது சிந்தனை, செயற்பாட்டு வேகம் போன்றன அவரை ஒரு மிளிர்ந்த ஆளுமையாக நமக்குக் காண்பிக்கின்றன.

அவரது எழுத்துக்கள் அனைத்தையும் தாண்டி இன்னும் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட வேண்டிய வகையறா என்றே நாம் அணுக வேண்டும். விமர்சனங்களைக் கண்டு முற்றிலும் புறக்கணித்து விடுவது அவரது அர்ப்பணிப்புக்களுக்குக் கொடுக்கும் மரியாதையாக அமைந்துவிடாது; அது அறிவுபூர்வமான அணுகுமுறையும் அல்ல. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ளவேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s