குத்ஸையும் பலஸ்தீனையும் இடம் மாற்றும் சதி…

 

al_aqsa_moschee_2

உஸ்மானிய ஃகிலாபத் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பலவந்தமாக உருவாக்கப்பட்ட யூத ஆக்கிரமிப்பு தேசத்தை வாழ வைத்து பலஸ்தீன பூமியை துடைத்தெறிவதற்காக பலவகைப்பட்ட நேரடி, மறைமுக நிகழ்ச்சித் திட்டங்கள் சியோனிஸ பின்னணியோடு மேற்கொள்ளப்படுவது கடந்த பல தசாப்தங்களாக சர்வதேச அரசியல் நிகழ்ச்சிகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியம் பெற்ற விடயங்களாக இருந்துவருகின்றன.

காலனித்துவத்துக்குப் பிந்திய உலகில் ஏகாதிபத்திய சக்திகள் தமக்கேற்ற உலக ஒழுங்கொன்றைப் பேணுவதற்கு ராஜதந்திர நகர்வுகளைக் கச்சிதமாக மேற்கொள்வர். வெகு மக்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காரியம் சாதிக்கும் அரசியலை முன்னெடுப்பதற்கு அவ்வரசுகள் எப்போதும் பின்னிற்பதில்லை.

இத்தொடரில் பலஸ்தீனை உலக வரைபடத்திலிருந்து பிடுங்கிவிடும் பல முயற்சிகளில் குத்ஸ் மற்றும் பலஸ்தீனின் அமைவிடங்கள் குறித்த சந்தேகப் புரளியைக் கிளப்பி விடும் பழைய கருத்துக்கள் தற்போது மீளவும் எழத் துவங்கியிருக்கின்றன.

மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீனிலுள்ள குத்ஸ் நகரில் அல்லாமல் மக்காவை அண்மித்த வேறொரு (தாஇப்) நகரில் தான் அமைந்திருக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை வரலாற்று நிபுணர் என தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் யூஸுப் ஸைதான் என்பவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் பலஸ்தீனுக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்பைக் கருவறுத்து விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவர்களது தெளிவான இலக்காக உள்ளது. அவ்வாறு கூறுபவர்கள் முஸ்லிம்களது அகீதாவின் ஒரு பகுதியைப் பிய்த்து எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

இதனை பலஸ்தீனர்களின் இஸ்லாமிய உயர் சபைத் தலைவர் ஷெய்க் இக்ரிமா ஸப்ரி வன்மையாகக் கண்டித்திருந்ததோடு மஸ்ஜிதுல் அக்ஸாவில் நிகழ்த்திய ஃகுத்பாப் பேருரையிலும் அதனை மறுத்து காரசாரமாகப் பேசியிருந்தார். அல்குர்ஆனில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அக்ஸா பற்றி கேள்வியெழுப்ப எவருக்கும் அதிகாரம் கிடையாது என்பதை அவர் கடுமையாக வலியுறுத்தியிருந்தார்.

ஸஹாபாக்கள், தாபிஊன்கள் என 15 நூற்றாண்டுகளாக எந்த முஸ்லிமும் கொள்ளாத சந்தேகத்தை தற்போது கிளப்பி விடுவது மேற்கின் நரித் தந்திர அரசியல் நகர்வுகளை ஞாபகப்படுத்துகிறது. ஷெய்க் இக்ரிமா ஸப்ரி மஸ்ஜிதுல் அக்ஸா இருக்கும் தொடர்ந்தேர்ச்சியான அபாய நிலைகளை உலகிற்கு எடுத்துக் கூறி வருவதோடு மறுமை நாள்வரையான போராட்டம் குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறார்.

கீழைத்தேய ஆய்வாளர்கள் உட்பட எந்த வரலாற்றாய்வாளரும் கூறியிருக்காத இக்கருத்தை யூஸுப் ஸைதான் என்ற தனிநபர் திணிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்ற கருத்தை இஸ்லாமிய சிந்தனையாளரான கலாநிதி முஹம்மத் இமாரா அவர்களும் கூட தெரிவித்திருந்தார்கள். ஆரம்பத்தில் 1999ம் ஆண்டு ஏப்ரல் 18இல் குறித்த ஆய்வாளரினால் அல்அஹ்ராம் என்ற எகிப்திய பத்திரிகையில் மேற்குறித்த சந்தேகம் எழுப்பபட்டிருந்த போது கலாநிதி இமாரா அதே பத்திரிகையில் மே 15ம் நாள் இதழில் மறுப்பு எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதி இமாரா அப்போது அளித்திருந்த பதில்களைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்:

  • மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த அல்இஸ்ரா அத்தியாயத்தின் முதல் வசனம் குறிப்பிடுவது போன்று ‘மஸ்ஜித்’ என்ற கட்டமைப்பு எதுவும் அப்போதைய (கி.வ. 621) பலஸ்தீனில் இருக்கவில்லை என ஸைதான் வாதிக்கிறார். எனினும் ‘மஸ்ஜித்’ என்ற பிரயோகம் கட்டடங்களையோ சுவர்களையோ குறிப்பிடவில்லை. மாறாக முழு அக்ஸா பிராந்தியத்தையுமே குறிப்பிடுகிறது. அது முழு மக்கா பிரதேசத்திலிருந்து முழுமையான குத்ஸ் பிரதேசத்தையும் குறித்துதான் இறங்கியுள்ளது. (மினல் மஸ்ஜிதில் ஹராமி… இலல் மஸ்ஜிதில் அக்ஸா)
  • அடுத்து ஸைதான் குறிப்பிட்டது போன்று மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீனில் அன்றி ஸவூதியில் தான் உள்ளது என்ற கருத்து கலாநிதி மோர்தோகா கிதார் என்ற யூதர் தெரிவித்த கருத்துக்களே ஆகும். அவர் பாரீலான் சியோனிஸ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தீவிரவாத சியோனிஸ சிந்தனையுடைய பேராசிரியராவார். வேண்டுமானால் ‘குப்பத்துஸ் ஸஃக்ரா’ வை முஸ்லிம்கள் கொண்டுபோய் ‘ஜுஃரானா’ (மக்காவுக்கும் தாஇபுக்கும் இடையில் உள்ளது) என்ற ஊரில் கொண்டு போய் வைத்து தொழுகை நடத்தட்டும். அங்கு ரஸூலுல்லாஹ்வும் தொழுகை நடத்தியுள்ளார் என அவர் 2009 ஜூலையில் கருத்து வெளியிட்டிருந்தார். இவையனைத்தும் அறிவுபூர்வமாக நிரூபிக்க முடியாத ஆதாரமற்ற வெற்று வாதங்களாகும்.
  • கட்டமைப்பு ரீதியான முதல் மஸ்ஜித் ‘குபா’ பள்ளிவாசல்தான். எனவே அல்அக்ஸா எனப்படுவது முழு புனித குத்ஸ் பிராந்தியத்தையும் தான் குறிப்பிடுகிறது என்பது நிதர்சனமானது.

 

அல்குர்ஆனும் ஆரம்ப இஸ்லாமியத் தலைமுறைகளும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த இந்த உண்மையை மறுக்க முயன்று சந்தேகம் எழுப்பப்படுவது குறித்து இமாரா அவர்கள் 1999ம் ஆண்டில் எழுதிய ‘இஸ்லாமுக்கும் யூதமுக்கும் மத்தியில் அல்குத்ஸ்’ என்ற நூலிலும் பின்பு 2011ம் ஆண்டில் எழுதிய நூலொன்றிலும் விலாவாரியாகப் பதிலளித்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தகுந்தது.

மஸ்ஜிதுல் அக்ஸா மீது சந்தேகப் புரளியை உண்டுபண்ண முயற்சிப்பதானது அபூபக்ர் சித்தீக்(ரழி) அவர்கள் உண்மைப்படுத்திய இஸ்ரா-மிஃராஜ் பயணங்கள் மீதே ஐயம் தெரிவிப்பது போலாகும். இது ஒரு முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாட்டையே ஆட்டங்காணச் செய்துவிடும்.

அக்ஸாவை இடம்மாற்றும் கைங்கர்யம் ஒருபுறமிருக்க இன்னொரு புறமாக எகிப்திய சர்வதிகாரி பலஸ்தீன தேசத்தை எகிப்து சர்வதிகாரி சீசியினூடாக முழுமையாக சினாய் பாலைவனப் பிரதேசத்துள் மீளமைக்கும் புதிய படுபயங்கரத் திட்டமொன்று குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் படி முழு பலஸ்தீனும் இஸ்ரேலாக மாறுவதோடு 1600 சதுரகிலோ மீட்டரை உள்ளடக்கிய சினாய் பிரதேசம் பலஸ்தீனமாக மாற்றப்படும் என குறிப்பிடப்படுகிறது.

லெபனான், சிரியாவிலுள்ள அகதிகளை இங்கு குடியேற்றி ஆயுதமற்ற தேசமாக இது பிரகடனப்படுத்தப்படும் என்று வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஸாவை விட மும்மடங்கு பாரிய நிலப்பரப்பில் பலஸ்தீனர்களைக் குடியமர்த்துவதன் மூலம் ‘ஹமாஸ்’ இயக்கத்தை வாய்மூடச் செய்ய சியோனிஸ மற்றும் சீசி தரப்புகள் முயல்வதாக மத்தியகிழக்கு அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு மஹ்மூத் அப்பாஸின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய முன்னாள் படைவீரரும் அரசியல் ஆய்வாளருமான மேட் டேவிட் கூறியுள்ளமை கவனிக்கத்தகது.

1948 இலிருந்து பலஸ்தீனர்கள் மீது உத்தியோகபூர்வமாக அட்டூழியங்கள் புரிந்துவரும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் 1967க்குப் பின்னரான காலத்திலிருந்து இரு நாட்டுத் தீர்வினைப் பேசிக் காலம்கடத்தி வந்தது. இதற்கு சோரம் போன அரபு நாட்டு மன்னர்களும் அரபு தேசியவாத தலைமைகளான சர்வாதிகாரிகளும் இன்று முழுமையாக பலஸ்தீனைத் துடைத்தெடுக்கும் பொறுப்பை சுமக்க முற்படுகின்றனர். இஸ்ரேல் என்ற சட்டவிரோத அரசு இதுவரை காலமும் தாக்குப் பிடித்து நிற்பதே சியோனிஸம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியாகும். ஹமாஸ் மிகத் தெளிவாகக் கூறுகின்றவாறு 1948க்கு முன்னர் இருந்தவாறு பலஸ்தீன் என்ற ஒற்றைத் தேச தீர்வே மிகச் சரியானதும் நீதியானதுமான தீர்வாகும். இல்லாத போது ஒரு போதும் மத்தியகிழக்கில் எரிந்துகொண்டிருக்கும் தீ அணைக்கப்படப் போவதில்லை.

 

மூலம்: முன்ததி அல்உலமா, அல்ஜஸீரா நெட்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s