துருக்கிய இராணுவ சதி முயற்சி – சில புலனாய்வுக் குறிப்புக்கள்

 

Screenshot_2016-07-23-13-03-10

 

பகுதி-01

இருள் சூழ்ந்த கடினமான இரவொன்றுக்குப் பின் துருக்கிய வீதிகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. துருக்கி இராணுவத்தினரின் ஒரு பிரிவினரின் மிகப் பலமான திட்மிடலுடனும் அமெரிக்கா-இஸ்ரேல்-யூஏஈ-பத்ஹ் கூலன் கூட்டுச் சதிப் பின்னணியுடனும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முயற்சிகள் கிட்டத்தட்ட முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அங்காரா வான் பரப்புக்களில் பறந்துகொண்டிருந்த சதிகாரர்கள் கட்டுப்படுத்திய F-16 ரக விமானங்கள் மூன்றும் ஹெலிகப்டர் ஒன்றினதும் இரைச்சல் சப்தங்கள் முற்றாக அடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக களமிறங்கியதாகக் கூறிக் கொண்டே எல்லோருக்கும் தெரிந்த சில பினாமிகளின் பிரதிநிதிகளான இராணுவக் கும்பல் அந்தப் பொதுமக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் துவங்கியமை யாருடைய தேவைக்கு இவர்கள் ஆட்டம் போட முயல்கிறார்கள் என்பதற்கான பதிலாகும்.

அர்துகானின் ஒரு ஸ்கைப் அழைப்புக்கு செவியேற்று அந்த நள்ளிரவில் வீதிக்கு இறங்கி வந்த மில்லியன் கணக்கான துருக்கிய மக்கள், அர்துகானின் அபரிமித மக்கள் செல்வாக்குக்கு சான்றாகியது. இதுவரைக்கும் வீதிகளில் திரண்டு மக்கள் தமது அரசினை அவர்களாகவே பாதுகாக்கும் பிரயத்தனத்தில் இருப்பது உளப் பூரிப்பைத் தருகிறது. வீடியோக்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மக்கள் திரளும் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் பிரார்த்தனைகளும் எத்தனையோ செய்திகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இறுதியில் பத்ஹ் கூலனும் ஒபாமாவும் நெட்டன்யாஹுவும் டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியானும் மூக்குடைபட்டு திரைமறைந்து நின்றுகொண்டிருக்கின்றனர்.

அர்துகான் விடுமுறையில் இஸ்தான்பூலுக்கு வெளியே மர்மரா பகுதியில் ஓய்வெடுக்கையில் சதி நடவடிக்கைகள் துவங்குகின்றன. அர்துகானுக்குத் தகவல் பறக்க உடனடியாக இஸ்தான்பூலுக்குப் பறந்து துருக்கிய அரசின் உத்தியோகபூர்வ TRT தொலைக்காட்சி சேவை முடக்கப்பட்டிருந்ததால் ஹபர் துர்க்கியா மூலமாக முதன் முதலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அவ்வுரை பென்சில்வேனியாவிலிருக்கும் பத்ஹ் கூலனுடன் மேற்கு, அரபு சியோனிஸ்டுகளை சாடியிருந்ததோடு சதிகாரர்கள் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பாரிய பின்விளைவுகள் பற்றியும் எச்சரித்திருந்தது. மேலும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவ ஆயுதங்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பக் கூடாது என்ற காட்டமான எச்சரிக்கையையும் முன்வைத்திருந்தார். அதற்கிடையில் மர்மரா ஹோட்டலுக்குள் அர்துகானை சிறைப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அவர் பயணிக்க இருந்த விமானத்தை முடக்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டிருந்தன.

கேர்ணல் முஹாரம் கோஷா என்பவர் சதிக்கான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரைக்கும் ஜெனரல், கேர்ணல் தர தளபதிகள் உட்பட 800 வரையான இராணுவத்தினர் கைதாக்கப்பட்டுள்ளனர். சதிகாரர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் ஆலோசகரும் பொலிஸாரின் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்.

முழுமையான பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு புரட்சியை முறியடிப்பதில் பங்காற்றியது. இராணுவத்தின் கணிசமான பகுதி மற்றும் கடற்படை என்பன சதிப் புரட்சியை புறக்கணித்திருந்தன. இராணுவத் தளபதியும் தான் புரட்சியில் பங்கெடுக்கவில்லை என அறிவித்திருந்தார். அத்தோடு எதிர்க்கட்சிகளும் புரட்சியை தாம் ஏற்பதில்லை என அறிவித்திருந்தது ஆரோக்கியமான ஜனநாயகத்தைப் பிரதிபலித்திருந்தது. எனினும் இச்சதி நடவடிக்கையை முற்கூட்டியே அறிந்திருந்தவர்கள் யாவர்? மற்றும் சதி வெற்றி பெறுமிடத்து இணைந்துகொள்ளச் சித்தமாயிருந்த துரோகத் தரப்புக்கள் எவை போன்ற புலனாய்வுத் தகவல்கள் எதிர்காலத் துருக்கியின் அமைதிக்கு மிகுந்த முக்கியமானவை.

சதி நடவடிக்கைகள் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குள்ளேயே பாதுகாப்புத் தரப்புகள், ராஜதந்திர நடவடிக்கைகள், நேரடியாகவே மக்களை வழிநடாத்துதல் என துருக்கிய அதிபர் ரஜப் தையிப் அர்துகான் மிக்க செயலாற்றலுடன் களத்திலிருந்தார். மக்கள் முன் 5 தடவைகளுக்கும் மேலால் தோன்றி சதியை முறியடிக்கும் பணியை நேரடியாகவே மேற்கொண்டார். ஃபஜ்ர் அதானுக்கு 3 மணி நேரங்கள் முன்பதாக அதான் மற்றும் தக்பீர் மூலம் மக்கள் வீதிகளில் திரண்டிருந்தனர். ஃபஜ்ர் அதானுடன் பெருநாள் தக்பீர்கள் துருக்கி முழுதும் ஓங்கி ஒலித்து சதிப் முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. காஸா உட்பட பல பிரதேசங்களில் கொண்டாடப்பட்ட சதிப் புரட்சி முறியடிப்பின் வெற்றியானது முஸ்லிம் உலகுக்கு துருக்கியின் ஸ்திரத் தன்மை எவ்வளவு முக்கியமானது என்பதனைக் குறிக்கின்றது.

இச்சதி முயற்சிகளின் பின்னணிகள் குறித்து அரபுலகின் அல்முஜ்தமஃ சஞ்சிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர்ரஹ்மான் சில தகவல்களைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அவை:

1. துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரகங்கள் இரண்டும் (இஸ்தான்பூல்/அங்காரா) மூடப்படுவதாக கடந்த வியாழனன்று பிரெஞ்சு அதிபர் அறிவித்திருந்தார். இவ்விரண்டு கட்டடங்களும் சதி முயற்சிகளின் முக்கிய தளங்களாக செயற்பட வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இங்கு, பிரான்ஸ் இதுவரைக்கும் சதி முயற்சி குறித்து மௌனம் காக்கின்றமை கவனிக்கத்தக்கது. இதன் மூலம் துருக்கிக்கும் தமக்கும் இடையில் எவ்விதக் கொடுக்கல்-வாங்கல்களும் இல்லாதது போல் காட்ட முயற்சிக்கிறது.

2. அடுத்து நேற்றைய தினம் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜோன் கெரி ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் இறுதியில் துருக்கிய சதி நடவடிக்கைகளுக்கு சிலமணிநேரங்கள் முன்பு தாம் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு தரப்புக்களுக்கு இடையிலும் யுத்தங்களை ஏற்படுத்தி சிரிய மக்களைக் கொலை செய்து பஷர் அல்அஸதைப் பாதுகாப்பது தவிர வேறு எந்த அஜண்டா அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இருக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்பும் ஷஃபான் அப்துர் ரஹ்மான், நிச்சயமாக நேற்று நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் துருக்கிய இராணுவ சதிப் புரட்சி வெற்றிபெறுமிடத்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளே அங்கு நிகழ்ந்திருக்கும் என அடித்துக் கூறுகிறார்.

உலகில் எந்த அநியாயம்-அக்கிரமம்-குள்ளநரித்தனம் நிகழ்ந்தாலும் அங்கு அமெரிக்காவுக்கு நிச்சயம் ஒரு கை இருக்கும் என்பது பொது விதியாகவே உலக வரலாறு உள்ளெடுத்துக் கொண்டுவிட்டது. இப்பின்னணியில் அமெரிக்காவும் ஐரோப்பியப் பெருச்சாளிகளும் துருக்கிய சதி தோல்வியடையப் போகிறது என்றவுடன் அரசுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவு என்ற தொனியில் பச்சோந்தி ஸ்டேட்டஸ்மன்ட் ஒன்றைத் தெறிக்கவிட்டது.

நிகழ்வுகளுக்கெல்லாம் அப்பால் தோன்றிக் கொண்டிருக்கும் புதிய உலக ஒழுங்கொன்றுக்கான முக்கிய மைல் கல்லாக நிச்சயம் நள்ளிரவுடன் நிகழ்ந்து முடிந்த துருக்கிய நிகழ்வுகள் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்… இன்ஷா அல்லாஹ்.

அத்தோடு துருக்கியின் தேசிய நீரோட்டம், முஸ்லிம் உலக அரசியல், சர்வதேச அரசியலில் முதலாளித்துவக் கார்ப்பரேட்டுகள், கம்யூனிஸ இடதுசாரிகள், ஸலபிப் போக்குகள் கொண்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வுகளோடு எத்தகைய கொடுக்கல்-வாங்கல் செய்தனர் என்பதிலும் எதிர்கால இஸ்லாமின் எழுச்சிக்கு நிறையவே பாடங்கள் படிப்பினைகள் இருக்கின்றன. அதற்கென பிறிதொரு பத்தியை ஒதுக்குவோம்… இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவரது பணிகளையும் ஏற்று அருள்புரியட்டும்.

16072016 – 11.30 AM

 

பகுதி-02

 

துருக்கிய தலைநகர் இஸ்தான்பூலிலிருந்து எழுதுகிறேன் என தொடர்ந்தும் தன் முகநூலை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார் அரபுலக பிரபல அல்முஜ்தமஃ சஞ்சிகை ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் அவர்கள்.

நேரடியாகக் களத்திலிருந்தே அவர் தரும் தகவல்கள் அல்ஜஸீரா உட்பட அனைத்து ஊடகங்களையும் விட விரைந்து செய்திகளையும் தகவல்களையும் புலனாய்வு நோக்கிலான பார்வைகளையும் தந்துகொண்டே இருக்கிறது.

நேற்று காலை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியது போன்று 10,000 சொற்களுக்கு கட்டுரை எழுதலாம் என்பது நேரம் செல்லச் செல்ல 40,000-50,000 என ஆய்வுக் கட்டுரைகளே எழுதலாம் எனும் அளவுக்கு திடுக்கிடும் பின்னணிகள் நிறைந்தும் முக்கிய பல தலைகளின் சதி முகங்கள் அம்பலப்பட்டும் வருகின்றன. கட்டுரை எழுதத் துவங்கி தட்டச்சு செய்துவிடுவதற்கிடையில் பலப்பல புது விடயங்கள் கட்டுரையைக் காலாவதியாக்கிடும் என்ற அளவு வீச்சுக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

உண்மைத் தகவல் எதுவெனில் இன்னும் சதிப் புரட்சி முழுமையாக முறியடிக்கப்படவே இல்லை. Plan-B யாக மீள் சதியொன்று நிகழ்வதற்கான சாத்தியப்பாடுள்ள நிகழ்வுகள் பற்றியும் துருக்கிய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கையோடு கருமமாற்றுகின்றனர். மக்கள் இப்போது வரைக்கும் வீதிகளில் இருக்குமாறு வேண்டப்பட்டிருக்கின்றனர்.

மக்களில் சுமார் 161 பேர் இரத்தம் சிந்தி ஷஹீதுகளாகவும், 1440 க்கும் மேற்பட்டோர் காயம்பட்டும் தம் தேசத்திற்குத் தாங்கள் தெரிவு செய்த அரசைப் பாதுகாத்தனர்.

இதுவரைக்கும் சதித்திட்டத்தில் பங்கேற்ற, துணைபோன இராணுவத் தலைகள் 8,000 க்கும் மேல் நேற்றிரவு வரைக்கும் கைதாக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் கைதுகள் பல மடங்காவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

நீதிபதிகள் 2,745 பேர் துருக்கிய நீதித் துறை நீக்கியுள்ளது. இவர்களில் இருவர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் மற்றவர்களில் பத்து பேர் துருக்கியின் உச்ச நீதித் துறை அமைப்பான HSYK (Supreme Board of Judges and Prosecutors) ஐச் சேர்ந்தவர்களாவர். பல்வேறு துறைகளையும் சார்ந்து மொத்தமான பதவி நீக்கங்கள் 20,000 வரை அதிகரிக்குமென தகவல்கள் கூறுகின்றன.

இது இன்னும் பாரிய ‘கிளீனிங்’ திட்டமொன்று இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. துருக்கியை நாசகாரிகளிடமிருந்து இன்னும் சுத்தப்படுத்த பாரிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கிறது என அடித்துச் சொல்லலாம்.

தொடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டங்கள் இந்த வெற்றி மக்களுக்கேயானது என்பதை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மறுபுறமாக ஏற்கனவே நான்கு (1960-1971-1980-1997) பிரதான இராணுவப் புரட்சிகளுக்கு முகம்கொடுத்து பலமுறை பலவீனப்பட்ட துருக்கிய மக்கள் இம்முறை இராணுவக் கேடிகளுக்கு இடம் வைத்துவிடவில்லை.

இன்னொரு பார்வைக் கோணத்தில் சொல்வதாயின் துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தொடரும் தனது பதினான்கு வருட (2002-இன்றுவரை) சுபீட்ச ஆட்சிக் காலப் பகுதியில் மக்களை நன்றாகவே பலப்படுத்தியிருக்கிறார். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் ரவுடித்தனம் மிக்க இராணுவம் அதன் நச்சுப் பற்கள் பலவும் பிடுங்கப்பட்டே இருக்கின்றது. மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் ஷஹீதுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் மக்களிடத்தில் பேசிய துருக்கிய பிரதமர் பினாலி யில்திரிம் துருக்கிய மக்களின் வீரத்தை மெச்சியதோடு சதிகாரர்களின் சொதப்பல் திட்டத்தையும் சாடினார்.

அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ போன்ற இணையப் பக்கங்களின் கருத்துக்களின்படி பிரதான சூத்திரதாரியாக துருக்கியக் கார்ப்பரேட் மதகுரு பத்ஹ் குலான் மற்றும் அவரது ஹிஸ்மத் நோக்கி ஏகோபித்த பார்வை நீள்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டோர் அதன் இரகசிய இயக்க உறுப்பினர்களாகவே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்குப் பின்னணியில் திட்டம் வகுத்து சதியை சர்வதேச வல்லூறு அமெரிக்காவே முற்றாக இயக்கியது. அதன் பிரதான பாத்திரத்தை கனவான் ஜோன் கெர்ரி சதியின் தோல்விப் படலம் வரைக்கும் ஏற்று வழிநடாத்தியுள்ளான்.

தக்க நேரத்தில் ரஷ்யாவுடன் சதிக்கூட்டு ஆலோசனை செய்தமை, அமெரிக்க தூதரக (துருக்கியில் மக்கள் புரட்சி நடப்பதாக வெளியிட்டுப் பின் வாபஸ் பெற்ற) அறிக்கை, காலம் தாழ்த்தி அர்துகான் அரசுக்கு அங்கீகாரமளித்து வெளியாகும் அறிக்கைகள் என்பன அந்த அதிகார ஆணவங்களை கேட்டு வாங்கிக் குட்டுப்பட்டுத் தலை குனிந்து விடச் செய்துவிட்டன.

அமெரிக்கக் குறுமதியாளன் ஜோன் கெரி சதி தோல்வியடைந்த விரக்தியில் வெட்கமின்றிப் பிதற்றித் திரிகிறான். இராக்கிலும், சிரியாவிலும் நரித்தனங்கள் செய்துவிட்டு ‘சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்’ என்று அர்துகானுக்கே பாடமெடுக்கப் புறப்பட்டிருக்கிறான்.

அமெரிக்கப் பின்னணியோடு பத்ஹ் குலானின் இயக்கத்தவரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த மெகா சதி ப்ராஜக்டுக்கென சுமார் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் வரைக்கும் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி தினத்தன்று மேலும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதன் பெரும்பகுதியை டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியான் தான் சுரண்டும் பணத்திலிருந்து வகைதொகையின்றிக் கொடுத்து மறுமைக்கான தனது ஏட்டில் பெருந்தொகையை வரவு வைத்துப் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறார். (இது அல்முஜ்தமஃ முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் கலாநிதி முஹம்மத் ஜவாதியை மற்றும், agelpost இணையம் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸியையும் மேற்கோள் காட்டி நம்பகத்தன்மையோடு பதிவு செய்திருந்த தகவல்)

துருக்கியில் இருக்கும் சுபீட்ச ஆட்சி பிடுங்கப்படுவதனூடாக முஸ்லிம் உலகு மேலும் மீட்சி பெறாது தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பதே துருக்கியில் நிகழ்ந்த களேபரங்களின் மொத்த இலக்காகும். அதற்காகவே அந்த நான்கு ட்ரில்லியன் என்ற மெகா பட்ஜட் ஒதுக்கப்பட்டது.

எனவே பத்ஹ் குலான் என்ற கார்ப்பரேட் மதகுருவைப் பொறுத்தவரைக்கும் அர்துகானின் அதிருப்தியாளர் என்ற வகையிலான துருப்புச் சீட்டோ அல்லது பகடைக் காயோ மாத்திரம்தான்.

இதற்குப் பின்னால் அமெரிக்காவின் மெகா பங்கு இருப்பது போலவே தனது வீழ்ச்சிப்படிகளை எண்ணத் துவங்கியிருக்கும் இஸ்ரேலியப் பயங்கரவாதக் கும்பலும் இருக்கின்றது. இஸ்ரேலை இராணுவ-அரசியல்-ராஜதந்திர ரீதியில் பலவீனப்படுத்துவதில் அண்மைக் காலத்தில் துருக்கி பெற்ற வெற்றிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

அதுபோன்றே நீண்ட காலத்தில் தம் மன்னராட்சியைத் தமக்கும் தம் பரம்பரைகளுக்கும் பாதுகாக்கவும் தாம் வாக்களித்துள்ள படி சியோனிஸத்தைப் பாதுகாக்கவுமே டுபாய் அரசன் ட்ரில்லியன் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா-இஸ்ரேல்-யுஏஈ கூட்டுக் குறித்த இன்னும் பல புலனாய்வுத் தகவல்களை காலம் தன்னுள் வைத்திருக்காது நிச்சயம் வெளித்தள்ளிவிடும்.

துருக்கிய தேசத்தைப் பொறுத்தமட்டில் முஸ்தபா கமால் பாஷா என்ற இயற்பெயர் கொண்ட அத்தா துர்க் மூலமாக நயவஞ்சகத்தனமாக கிலாபத் வீழ்த்தப்பட்டதன் பிற்பாடு இராணுவத்தின் கரம் எப்போதும் மேலோங்கி இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது.

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு நலன்களுக்கு பாதகம் விளையப் பார்த்த போதெல்லாம் அங்கு இராணுவப் புரட்சிகள் நிகழ்ந்தன.

ரஜப் தையிப் அர்துகான் ஆட்சிக் காலம் ஆரம்பம் தொட்டு இந்த அபாயம் இருந்த போதும் அவர் கவனமாகத் திட்டமிட்டு இராணுவ ஆதிக்கம்-அதிகாரம்-பலத்தை விட்டும் தேசத்தையும் மக்களையும் விடுவித்தார்.

கடைசியாக 2013ம் ஆண்டளவில் இராணுவ சதியொன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்த போது பல அதிரடிக் கைதுகள் நிகழ்ந்து பாரிய களையெடுப்புகள் இடம் பெற்றன.

2014ம் ஆண்டு இறுதியாகும் போது பத்ஹ் குலான் இயக்கத்தின் அதிகார ருசிகள் அம்பலப்பட்டதிலிருந்து மீளவும் சதிகளுக்கான சாத்தியங்கள் தோன்றின.

இந்த ஆண்டு(2016) ஜனவரியில் குவைத் இஸ்லாமிய அறிஞர் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸி தனது ட்விட்டரில் ரஷ்யா-ஈரான் கூட்டுச் சதியுடனும் வளைகுடா நாடொன்றின் நிதியளிப்பில் எகிப்திய பாணியில் சதியொன்றுக்குத் திட்டமிடல்கள் இருப்பதாக முதன்முதலில் அறிவித்திருந்தார்.

எகிப்திய சதிக்கும் வாரி வழங்கிய யூஏஈதான் அந்த வளைகுடா நாடு என்பதும் டுபாய் டுபாக்கூர் ராஜா கலீபா ஆலு நாஹியான் தான் அந்த அற்புதப் பிறவி என்பதும் வெட்டவெளிச்சமான உண்மை.

இவ்விடத்தில் சிலர் அர்துகான் சதிப் புரட்சிக்கு எதிராகப் பெற்ற வெற்றியையும் எகிப்தில் கலாநிதி முர்ஸியின் பதவி கவிழ்ப்பையும் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.

14 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியான ஆளும் வாய்ப்புப் பெற்றுப் பல மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டிய அர்துகானின் சூழலும் அணுகுமுறைகளும் கலாநிதி முர்ஸி எகிப்தில் எதிர்கொண்ட சூழலும் வெவ்வேறானவை.

துருக்கியில் மதச்சார்பற்றோர், எதிர்க்கட்சிகளும் அர்துகானுடன் ஒன்றாக கைகோர்த்திருக்கும் சூழல் இருந்தது. அத்தோடு அங்கே எகிப்து ஹிஸ்புந்நூர் போன்று ஸலபி, வஹாபிகளும் இல்லை. கிலாபத் உடைப்பை பிரிட்டனுடன் இணைந்து செய்த துரோகம் துருக்கியில் வஹாபிஸ வெறுப்பை விதைத்து அங்கு அதன் பரவலைத் தடுத்திருக்கின்றது.

கலாநிதி முர்ஸியின் ஒரு வருட கடினப் பயணத்தில் அவரைச் சூழ இருந்த அரசு நிர்வாகத் துறையினர், இராணுவம் என முழுதும் முபாரக் யுகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் போக்குக் கொண்டவர்கள். அடுத்து மதச்சார்பற்றோருடன் இணைந்து அரசியல் ஞானசூனியங்களான ஹிஸ்புந்நூர் ஸலபி, வஹாபிகளும் கலாநிதி முர்ஸிக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்திருந்தனர். எகிப்திலே முஹம்மத் முர்ஸிக்கும் இஃக்வான்களுக்கும் எதிராக நின்றது போல் துருக்கி தொடர்பில் உலகளாவிய ஸலபிக்கள் எதிர் நிலைப்பாட்டை எடுக்காமைக்கு பல்வேறு அரசியல் நலக் காரணிகள் உள்ளன என்பது முக்கியமானது.

துருக்கிய சதிப் புரட்சியின் தோல்விக்குப் பின்பாக இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள் பலரும் துருக்கிய அதிபர் அர்துகானைப் பலப்படுத்தும் உறுதிமிக்க வாசகங்கள் கொண்ட கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பேரவைத் தலைவர் ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி ‘அல்லாஹ்வின் உதவியும் உலக முஸ்லிம்களின் பேராதரவும் எப்போதும் உண்டு’ என்ற கருத்தை மிக வலியுறுத்தியிருந்தார். ஷெய்க் அலி கரதாகியின் கடிதம் பிரார்த்தனைகளால் நிரம்பியிருந்தது. கடிதத்தின் இறுதியில் அவர் “மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!” என்ற அல்குர்ஆனிய வசனத்தை இணைத்திருந்தமை மெய் கூச்செறியச் செய்தது. ஆம்… சதிப் புரட்சிக்கான திட்டமிடல்கள் பலரும் நினைப்பது போலன்றி மிகப் பாரியதாக, நுணுக்கமானதாக, ஆழமானதாக, முழுமையானதாக, நேர்த்தியானதாக இருந்தன.

பௌதிக ரீதியில் மிகத் திறம்பட திட்டமிடப்பட்ட இச்சதி தோல்வியடைவது சாத்தியம் குறைந்ததாக கருதப்பட்டது.

எனவே மக்கள் இதனை வெற்றி கொண்டமை ஒரு வகை அற்புதம் என்றே கொள்ளப் படவேண்டும்.

முழு இஸ்லாமிய உலகும் அர்துகானோடும் அர்துகானுக்காகவும் துருக்கியோடும் துருக்கிக்காகவும் எழுந்து நிற்கின்றது. வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகளில் ஒன்று சேர்த்து விடட்டும்!!!

 

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

19072016 – 08.00 AM

(கட்டுரையை வரைய அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ, agelpost இணைய தளங்களையும் உசாவினேன். மேலும் அல்முஜ்தமஃ பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான், ஷெய்க் முஹம்மத் பகிஹுத்தீன், ஷெய்க் பைரூஸ் மஹாத், சகோ. அஷ்கர் தஸ்லீம் ஆகியோரின் முகநூல் தகவல்கள் உதவின; அத்தோடு துருக்கிய நண்பர் ஒர்ஹான் கராகிஸ் களத்திலிருந்து நேரடியாகவே தகவல் பரிமாற்றம் செய்தார். அனைவருக்கும் நன்றிகள்.)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s