அர்துகான் – குலான் முரண்பாடுகள்

 

BUSINESS-GULEN-ERDOGAN

துருக்கிய சதி முயற்சிகள் நிகழ்ந்து ஒரு வாரம் கடந்து விட்டது. சதி முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டன. எனினும் ஜூலை 20 அன்று துருக்கிய அரசியலமைப்பின் 120வது உறுப்புரைக்கமைய பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் மூன்று மாதங்களுக்கான அவசர காலநிலைச் சட்டமானது இன்னும் பாரிய களையெடுப்பு, சுத்தப்படுத்தல் வேலையொன்று காத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

இச்சதி முயற்சிகள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே பிரதான சூத்திரதாரியாக பத்ஹுல்லாஹ் குலான் விரல் நீட்டப்படுகிறார்.

இவர் அமெரிக்கா, பென்சில்வேனியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் துருக்கிய மதகுரு ஆவார். துருக்கிய இஸ்லாமிய மறுமலர்ச்சியின் பிதாமகரான பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி வழிவந்த ஸூபித்துவ முகாமின், ஹனபி மத்ஹப் சார்ந்தவராகத் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் பத்ஹுல்லாஹ் குலான் மதத் தலைவர் தவிர்த்து மிகப் பெரும் வர்த்தக ஜாம்பவான், கல்விக் கூடங்களின் சர்வதேச வலைப்பின்னல், பெரும் ஊடக சாம்ராஜ்ஜியம் என பல்வேறு முகங்கள் கொண்ட உலகின் டாப் வரிசை பில்லியனர்களுள் ஒருவர்.

இத்தனைக்கும் அவர் ஸஈத் நூர்ஸியின் இயக்கத்தின் வழிவந்த ‘நூர்ஜு’ பாரம்பரிய மதப் பிரசாரகராக அடையாளம் செய்யப்படுகிறார். இத்தகையோர் திருமணம் புரியாமல் மார்க்க சேவைக்காகவே தம்மை அர்ப்பணம் செய்துகொள்பவர்களாவர். உலகின் முதல்தர வரிசைக் கோடீஸ்வரர்களில் ஒருவரான பத்ஹுல்லாஹ் குலான் கூட திருமணம் செய்யாத குடும்பம், குழந்தைகள் ஏதும் அற்றவர் என்பது வியப்பளிக்கிறது.

துருக்கிய சதிப் புரட்சி முயற்சிகளுக்குப் பின்பு அதிபர் அர்துகான் அளித்த முதல் பேட்டியிலேயே குலான் இச்சதிக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். பிரதமர் பின் அலி யில்திரிம் “யாரும் பென்சில்வேனியாவிலிருந்து துருக்கிய இராணுவத்துக்குக் கட்டளையிட முடியாது.” என்று சாடியிருந்தார். துருக்கி சார்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ‘குலானை துருக்கியிடம், அமெரிக்கா ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

எவ்வாறு இருப்பினும் எகிப்து அரசியல் பத்தி எழுத்தாளர் பஹ்மி ஹுவைதி போன்றோரின் நிதானமான எழுத்துக்கள் உட்பட கணிசமானவர்களது எழுத்துக்கள் பத்ஹுல்லாஹ் குலானை நோக்கி அடிப்படை வலுவான ஆதாரங்கள் இன்றி குற்றம் சாட்ட முடியாது என்றே குறிப்பிடுகின்றன.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரி “இந்த சதிப் புரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலானுக்கு தொடர்பிருக்கிறது தொடர்பில் துருக்கி வலுவான ஆதாரங்களை முன்வைக்கும் பட்சத்திலேயே அமெரிக்கா அவரை துருக்கியிடம் ஒப்படைக்கும்” எனத் தெரிவித்திருந்தார். (ஜோன் கெரிதான் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் சதித் திட்ட ப்ராஜக்டை முன்னின்று ஒருங்கிணைப்புச் செய்தவர் என்ற புலனாய்வுத் தகவல் இங்கு இன்னொரு தலைப்பு.)

முன்னணி அரசியல் எழுத்தாளர்களது கருத்துக்கள், ஜோன் கெரியின் மேற்போந்த அறிவிப்பு போன்றன துருக்கி அரசாங்கம் பத்ஹுல்லாஹ் குலான் தான் தலைமைச் சூத்திரதாரி என்பதை நிரூபிக்கும்படியான ஆதாரங்களை இன்னும் முன்வைக்கவில்லை என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. அடுத்து, அதை விடவும் முக்கியமாக துருக்கிய களநிலவரங்கள் மற்றும் மக்கள் மனோநிலையை பரிசீலிக்குமிடத்து துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அர்துகான் தலைமையிலான பலம் மிக்க அரசுக்கே சவால் விடுக்கும் அளவு சக்தி மிக்க குழுவொன்று இருக்குமாயின் அது பத்ஹுல்லாஹ் குலானினது அமைப்பினர்தான் என்பது மறுக்க முடியாத யதார்த்தமாகிறது. இக்கருத்தையே அல்முஜ்தமஃ போன்ற சஞ்சிகைகளின் பத்தி எழுத்தாளரான ஷஃபான் அப்துர் ரஹ்மான் போன்றவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

பெருமளவு இராணுவ வீரர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள், அரச உயரதிகாரிகள் எனப் பலரும் குலானின் இயக்கத்தினால் கவரப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கும் மேலால் தற்போது கைது செய்யப்பட்டிருப்போரின் வாக்குமூலங்களாகக் கசிந்திருக்கும் தகவல்களின்படி குலான் இயக்கத்தவர்கள் திட்டமிட்டு அரச பரீட்சை வினாத்தாள்கள் முற்கூட்டியே வழங்கப்பட்டு அரச பதவிகளுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வகையில் அரசாங்கத்துக்குள் இன்னொரு நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டு போகுமளவு வலுவுள்ள கட்டமைப்பொன்றை குலான் நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதனைத்தான் அர்துகான், குலானுடனான பிரச்சினைகளின் ஆரம்ப கட்டத்தில் இரு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

இப்பின்னணியில் குலானுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தன்மை, குலானுக்கு இருப்பதாகக் கூறப்படும் இரகசிய அஜண்டா என்ன?, தனித்து வாழ்ந்து தனக்கென பெரும் உலகளாவிய சாம்ராஜ்ஜியமொன்றை நிறுவியிருக்கும் குலானின் உளவியலைப் புரிந்து கொள்ளலோடு இணைத்து அர்துகான்-குலான் இடையிலான உறவுகள்-முரண்கள் பற்றி அறிய முற்படல் வேண்டும்.

– ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ – ★ –

இன்றைய தேதிக்கு அர்துகான் மற்றும் அவரது அரசியல் முகாமை சேர்ந்தவர்கள் குலானிய இயக்கத்தை FETO (FEthullah Terrorist Organization – பத்ஹுல்லாஹ் பயங்கரவாத அமைப்பு) என்றுதான் விளித்து, விமர்சித்து வருகின்றனர். இந்நிலை தோன்ற முன்னால் அர்துகான் அணியினருக்கும் குலான் அணியினருக்கும் இடையில் நீண்டகால நல்லுறவே இருந்துவந்தது.

துருக்கியில் நிலவிய இராணுவ அதிகார மேலாதிக்கத்தைப் போக்கி விடுவதில் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக குலான் இயக்கம் அர்துகானுடனும் அவரது ஏ.கே.பி. கட்சியுடனும் இணைந்து பங்களித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை விடவும் துருக்கிய இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தில் அர்துகான், குலான் இருவருக்கும் தலைமகனாக பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி கருதப்படுகிறார். அரசியல் பாசறையில் அர்துகான் நஜ்முத்தீன் அர்பகானின் மாணவராவார். நூர்ஸியின் சிந்தனைகளில் வித்திட்டு எழுந்த எண்ணற்ற இயக்க வழிமுறைகளில் முக்கியமானது நஜ்முத்தீன் அர்பகான் தோற்றுவித்த அரசியல், மத இயக்கமான மில்லி கோரஸ் ஆகும். இதன் வழியாகவே ஆரம்பத்தில் ரஃபாஹ் கட்சி, ஸஆதா கட்சி எனத்துவங்கியதன் இன்றைய வடிவமே அர்துகானின் AKP எனப்படும் நீதிக்கும் அபிவிருத்துக்குமான கட்சியாகும்.

சம நேரத்தில் நூர்ஸி வழியில் பிரசாரங்களை செய்து வந்த குலான் பின்னர் தனக்கென தனிப் பாதையொன்றை வகுத்துக் கொண்டார் அவர் நூர்ஸி இயக்கத்தில் ஒரு ‘நூர்ஜு’ ஊழியராக ரிஸாலா-ஏ-நூர் சிந்தனைகளைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார். மேற்கு துருக்கிய மஸ்ஜித்கள் எண்ணற்றவற்றில் இமாமாகப் பணியாற்றியிருக்கிறார். 1971 புரட்சி காலப்பகுதியிலும் இஸ்லாமியக் கருத்துக்களைப் பரப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

என்பதுகளின் இறுதிப் பகுதியில் தனக்கான பாதையை வகுத்துக்கொள்ளத் துவங்கிய குலான் கிராமப் புறங்களிலிருந்து மேற்குத் துருக்கிய நகர்களில் கற்ற மாணவர்களைத் தன் வசம் ஈர்த்தெடுத்தார். அதன் மூலம் எதிர்கால துருக்கியின் எண்ணற்ற அரச உயரதிகாரிகள் அவரது அணிக்குள் வந்தனர். அவரது மாணவர்களது கிராமங்களுக்கும் சென்று ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் தான் முன்னெடுத்த சிந்தனையை உரைகளாகப் பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பெருக்கிக் கொண்டார். அவரது சிந்தனைகள் மதச்சார்பற்ற பின்னணியில் இஸ்லாமிய விழுமியங்களைப் பிரயோகித்து வாழ்தல் என்ற அடிப்படையைக் கொண்டிருந்ததாக லோப்லொக் இணையத்தில் உமர் பாரூக் என்பவர் எழுதுகிறார்.

தம்மையே உண்மையான நூர்ஸி இயக்கத்தவர்களாக அடையாளப்படுத்த எத்தனிக்கும் குலான் அணியினருக்கு இன்றைய தேதியில் அர்துகானின் ஏ.கே.பி, உண்மையான நூர்ஸி இயக்கத்தவராகக் கருதப்படும் ஜமாஅத்துந் நூர் உட்பட துருக்கியில் செயல்படும் எந்த இஸ்லாமியப் போக்கினருடனும் நல்லுறவு இல்லை. அத்தோடு குலான் அணியினரின் மீது சியோனிஸம், மேற்குலகு உட்பட பல விவகாரங்களில் அவர்களது நிலைபாடுகள் காரணமாக பலத்த விமர்சனம் இருப்பதோடு, அவர்கள் மீது சந்தேகக் கண்கள் விழவும் காரணமாகின்றது.

அடிப்படையில் இஸ்லாமிஸ்ட்டுகளாக அடையாளப்படுத்தப்படும் அர்துகான் – குலான் இருவரும் துருக்கியின் இஸ்லாமிய அடையாளம், துருக்கியின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த தமது பார்வையில் வித்தியாசப்படுகின்றனர். அர்துகான் இஸ்தான்புல் மேயராக இருந்த போது 1997ம் ஆண்டளவில் “எமது மினாராக்கள் எமது ஆயுதங்கள், எமது குப்பாக்கள் எமது கவசங்கள், எமது பள்ளிவாயில்கள் எமக்கு வீடுகள்” என அறிவித்திருந்தார். இந்தப் புள்ளிகள் அர்துகான் – குலான் இடையேயான பிரிகோட்டை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

அர்துகான் இஸ்தான்புல்லுக்கு மேயராகத் தேர்வு செய்யப்படல், அவரது கட்சி 2002இல் ஆட்சிக்கு வருதல் போன்ற பல விடயங்களில் குலானின் அமைப்புக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவற்றுக்கு நன்றிக் கடனாக அவரது இயக்கத்தினைப் பல்வேறு அரச கெடுபிடிகளிலிருந்து அர்துகான் விடுவித்திருந்தார். இவ்வாறே 2006-07 களில் அர்துகானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எர்கொனிக்கன் சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து முறியடிக்க உதவியதும் குலான் அணியினர்தான்.

காலப் போக்கில் அர்துகானினது அஜண்டா தனது அஜண்டாவுடன் முரண்படுவதை குலான் அவதானித்திருக்கிறார். குறிப்பாக 2008 காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது துருக்கிய அரசாங்கத்தின் நிலைப்பாடு, 2010 காஸா உதவிக் கப்பலான மாவி மர்மரா விவகாரம் என்பவற்றின் போது குலான் அர்துகானை வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கினார்.

துருக்கி அரசியல் பத்தி எழுத்தாளர் முஸ்தபா அக்யொல் முன்வைக்கும் கருத்துப்படி அர்துகானின் சிந்தனையை பரவலாக இஸ்லாமிய உலகில் பேசப்படும் ‘அரசியல் இஸ்லாம்’ எனும் பிரதான வகைப்பாட்டுக்குள் உள்ளடக்க முடியும். தொடர்ந்து அவர், குலான் முன்வைக்கும் இஸ்லாத்தை ‘கலாசார இஸ்லாம்’ என அடையாளம் செய்கிறார். இப்பின்னணியிலேயே குலானுக்கென இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் அதற்கென அவர் தனது ஆட்களை அரசு நிர்வாகம், சட்டத்துறை, இராணுவம், பொலிஸ் பகுதிகளுக்குள் நுழைவித்திருப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிறார்.

இவ்வாறு எண்ணற்ற விடயங்கள் அர்துகான் – குலான் முரண்பாட்டில் பேசப்பட வேண்டியிருக்கிறது. இதில் குலான், மற்றும் அவரது பக்கங்கள் குறித்த செய்திகள் மிக மங்கலாகவே கிடைக்கின்றன. பெரும் ஊடக சாம்ராஜ்ஜியமொன்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவருக்கு இது அசாத்தியமானதுமல்ல. இவ்வாறான வேளையொன்றில் தீர்க்கமான நிலைப்பாடுகளை வெளியிடாது இருக்கும் குலான் தரப்பினர் மீது விடுக்கப்படும் குற்றக்கணைகள் நியாயமானவை என்ற கருத்தும் தோன்ற ஏதுவாகின்றது. 17 வருடங்களாக அமெரிக்காவில் இருந்துகொண்டு எவ்வித குடும்ப, உறவினர் பின்னணிகளும் இன்றி துருக்கியில் பாரிய இயக்கக் கட்டமைப்பொன்றையும் உலகளாவிய கல்வி, வர்த்தக, ஊடக சாம்ராஜ்ஜியங்களையும் கட்டிக் காத்து வருகின்ற அசாத்தியப் பின்னணி அவர் மீதும் அவரோடு இருக்கும் குழுவினர் யார் என்றும் கேள்விகளை எழுப்புகின்றது. அவ்வாறு அவர் அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவராக இருப்பின் நிச்சயம் அவரது ஆளுமை அசாத்திய ஆற்றல் கொண்டதுதான்.

இறுதியாக அர்துகான் – குலான் முரண்பாடுகள் குறித்து பரவலாக எழும்பும் சில கேள்விகள் உள்ளன:

1. அர்துகானுக்கு முன்பே துருக்கியை ஆட்சி செய்த சியோனிஸ ஆதரவு ஆட்சியாளர்கள் காலம் தொட்டு அரசுக்குள் நுழைந்து நிழல் அரசொன்றை நடாத்த முற்படுவதன் நோக்கம் என்ன?

2. குலான், அமரிக்க-இஸ்ரேலிய கூட்டுடன் சேர்ந்து அடைய விரும்பும் இலக்கு என்ன?

3. எர்கொனிக்கன் சதித் திட்டம் அர்துகான் அரசுக்கு எதிராக தீட்டப்பட்டபோது, அதனை வெளிக்கொணர்ந்து சதியை முறியடிக்க குலான் அணியினர் உதவியது ஏன்?

4. துருக்கி அரசுதான் இலக்கு என்றால் உலகளாவிய அளவில் குலானின் அமைப்பை விரிவாக்கம் செய்வதால் அவர்கள் எந்த அரசியல் இலக்கை அடைய நினைக்கிறார்கள்?

பரவலான அரசியல் மர்மங்களுக்குக் காலம்தான் பதில் சொல்லக்கூடியது. துருக்கிய அர்துகான் – குலான் விவகாரத்திலும் இவ்விடயம் பொருந்திவரும் எனலாம்.

வல்லவன் அல்லாஹ் நம்மை நல்ல விடயங்களில் நிலைத்திருக்கச் செய்வானாக!

 

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

23072016 – 09.00 PM

(கட்டுரை வரைவதற்கென சொடுக்கிய அனடொலு ஏஜன்ஸி, அஸர்பைஜான் பொலிட்டிக்ஸ், அல்ஜஸீரா, அல்மொனிட்டர், சர்வதேச விவகாரங்களுக்கான லோப்லொக் இணையம், அல்வஃங்த் உட்பட்ட இணையதளங்கள் அனைத்துக்கும் நன்றிகள். முகநூல் சகோதரர் இம்ரான் ஹுஸைன் அவர்களுக்கு விஷேடமான நன்றிகள்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s