நம் தொழுகைகளின் விளைவைக் கொஞ்சம் உரசிப் பார்க்க…

salath

நாம் தொழுகிறோம். அதன் சிறப்புக்களை, அதன் முக்கியத்துவங்களை அறிந்து தொழுகிறோம். தொழுகையின் பிக்ஹ் சட்டங்களை அதன் மிகச் சிறு கருத்து வேறுபாடுகள் முதற்கொண்டு அறிந்துகொள்ள விழைகிறோம்… எனினும் நாம் நமது தொழுகைகள் எத்தகைய விளைவுகளை நம்முள் ஏற்படுத்தியிருக்கின்றது? தொழுகையின் நோக்கங்கள் அடையப் பெற்றிருக்கின்றனவா? என்பவற்றை மதிப்பிட்டு அல்லாஹ்வுடன் நம் தொடர்புகளை இன்னும் வலுவாக்கிக் கொள்வதில் பின்தங்கியிருக்கிறோம்.

இது பற்றி, சில சகோதரர்களுடன் உரையாடி நாம் எமக்குள் மதிப்பிட்ட சிலதை இங்கு பகிர்ந்துகொள்கிறோம். அல்லாஹ், அல்குர்ஆனிலும் அவனது தூதர்(ஸல்) அவர்கள்தம் பொன்மொழிகளிலும் கூறியுள்ள பல அம்சங்களோடு நமது அறிவும் நம் தொழுகைகளின் விளைவுகள் சரியாக உள்ளனவா என்பதைக் காட்டித்தர உதவுகின்றன.

1. அல்குர்ஆன் கூறுகிறது: “நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் (வெறுக்கத்தக்க) தீமையையும் விட்டும் தடுக்கும்.” -அன்கபூத்:45

மானக்கேடான வெறுக்கத்தக்கதை விட்டும் தவிர்ந்து சீரிய நற்குணங்களோடு வாழ்வது தொழுகையின் முழு முதல் விளைவாக அல்குர்ஆன் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. நாம் நற்குணங்களை விட்டும் வழுவுகின்றமை நமது தொழுகைகளை மீள்பரிசீலித்து சீரமைத்துக் கொள்வதற்கான முதலாவது உரைகல்லாகும்.

2. மேலும் அல்குர்ஆன் சொல்கிறது: “நிச்சயமாக தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு நேரங்குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.” -அந்நிஸா:103

முஃமின் மிகச் சிறப்பான முறையில் நேரத்துக்கு இயங்க பயிற்றுவிக்கப்படுகின்றான். அதில் அவனது நாளாந்த நேரம் குறிக்கப்பட்ட கடமையான தொழுகை காத்திரமான பங்கினை வகிக்கும். இதனையே இமாம் ஹஸன் அல்பன்னா(ரஹ்) ஒரு முழுமையான, சிறந்த முஸ்லிமுக்குரிய பத்துப் பண்புகளை அடையாளப்படுத்துகையில் ‘தனது நேரத்தை வேட்கையோடு பயன்படுத்திக் கொள்பவன்’ என்றார்கள். நேரத்துக்கு இயங்குவது தொழுகை விளைவுகாட்டும் அடுத்த உரைகல்லாகும்.

3. அல்லாஹ்வுக்கு பூரணமாக அடிமைப்பட்ட மனநிலையை உருவாக்குவதில் ஸுஜூத் என்ற செயற்பாடு பெரும் பங்கு வகிக்கும். ஸுஜூத் அல்லாஹ் தவிர்த்து வேறு எவருக்கும் செய்ய முடியாத வணக்கமாகும். அந்த வணக்க நிலை அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான நிலை. அது பூரணமாக அவனுக்கு அடிமைப்பட்டதை பறைசாற்றும் நிலையாகும்.

“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.” -அந்நஜ்ம்:62

4. தொழுகை ஒவ்வொன்றின் போதும் வுழூ முக்கியம் பெறுகிறது. உடல் சுத்தம் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் அங்கு உருவாக்கிவிடப்படுகிறது. அத்தோடு ஒவ்வொரு முறை பள்ளிவாசல் செல்லும் போதும் ஆடைகளாலும் நறுமணப் பொருட்களாலும் நாம் நம்மை அழகாக்கிக் கொள்வது நபிகளாரது ஏவலாகும். எனவே நமது தூய்மை, சுகாதாரம், நேர்த்தி என ஒவ்வொன்றிலும் நம் தொழுகையின் விளைவு வெளிப்படும்.

அவ்வாறே, நபியவர்களது திருமொழிகளின் பிரகாரம் ஒவ்வொரு தொழுகையின் போதும் பற்கள் சுத்தம் செய்யப்படுவது அத்தியாவசியம் என்றளவுக்கு பற்சுகாதாரம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அங்கு ‘அஸ்ஸிவாக்/அல்மிஸ்வாக்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது, பற்களை எந்தவித உபகரணம் கொண்டு சரி சுத்தம் செய்து கொள்வதாகும். நமது சூழல்களில் தவறாக விளங்கப்பட்டுள்ளவாறு ‘மிஸ்வாக்’ என்ற பெயர் சொல்லப்படும் குறித்த ஒருவகைக் குச்சியை வாயினுள் இட்டு விட்டு அதனைக் கழுவாமல் சுகாதாரமற்ற, அசுத்தமான முறையில் பாக்கெட்டினுள் இட்டுக் கொள்வது அல்ல.

5. தொடர்ந்தேர்ச்சியாக இருத்தல். ஒருவரது நன்மைகள் ஏற்கப்பட்டுவிட்டன என்பதற்கான பிரதான அடையாளம் என்பது ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பலரும் வலியுறுத்திக் கூறியுள்ள கருத்தாகும்.

“குறைவாக இருப்பினும் தொடர்ந்தேர்ச்சியாகச் செய்வதனை அல்லாஹ் விரும்புகிறான்.” என்பது நபிமொழியாகும்.

இவ்வாறு, நாம் எம்மை தினமும் நம்- நற்குணப் பகுதிகள், நேரத்துக்கு இயங்குதல், அல்லாஹ்வுக்குப் பூரணமான அடிமைப்பட்ட மனநிலையோடு இருத்தல், சுகாதாரம்/அழகியல் பகுதிகளில் கவனமெடுத்தல் -போன்றவற்றில் சுயவிசாரணை செய்து கொள்வதன் மூலம் நம் தொழுகை பலனைத் தருகிறதா என்பதை நம்மில் உரசிப் பார்ப்பவர்களாக இருக்கவேண்டும்.

தொழுகை இஸ்லாத்தின் தூண்; இரண்டாம் கடமை; முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையான பிரிகோடு; மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவது; சுவனத்தின் திறவுகோல்; அமல்களில் சிறந்தது எனப் பல்வேறு கோணங்களில் சிறப்புப் பெறுகிறது. அது நம்மை உடல், அறிவு, ஆன்மா என முழுமையாகப் பயிற்றுவிக்கும் உள்ளீடுகள் கொண்டது. தொழுகையில் ஃகுஷூஃ என்ற பண்பு இருந்தாலே முஃமின்கள் வெற்றிபெறுவார்கள் என்கிறது ஸூரத்துல் முஃமினூன்.

அல்லாஹ் நம் தொழுகைகளை ஏற்று அருள்புரிவானாக! நம் தொழுகைகள் இன்னும் இறைநெருக்கத்தை நமக்குத் தருபவையாக ஆகிட நமது முயற்சிகளை இன்னும் அதிகப்படுத்திடுவோம்!

M.S.M. Siaaf Naleemi

siaafmq@gmail.com

28072016 – 10.00 PM

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s