அல்லாஹ்வை நெருங்க துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து…

10-1

 

மனிதனின் இரத்தம் ஓட்டும் இயல்பினால் பாவங்களிலும் குழப்பங்களிலும் சீர்குலைவுகளிலும் மூழ்கிப் போகும் இவ்வுலகிலே தன்னைவிசுவாசிப்போருக்கு மீட்சிக் காலமாக அல்லாஹுத் தஆலா சில காலப்பகுதிகளை அவனை மேலும் நெருங்கிக் கொள்வதற்கான வாய்ப்புக் காலமாகக் கொடுக்கிறான். அதனை அவனை விசுவாசிப்போருள் புத்திசாலிகளான அடியார்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வர்.

 

அவ்வகையில்தான் இரு மாதங்களுக்கு முன்னால் ரமழான் எனும் அருட்பேறு பெற்ற மாதத்தை நாம் பெற்றோம். அதிலும் குறிப்பாக அதன்கடைசிப் பத்து இரவுகளை எம்மைப் படைத்த ரப்போடு மிக நெருக்கத்தைப் பெறுவதற்காகவும் லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவை அடைந்து கொள்ளவும் இரவு வணக்கங்களிலும் இஃதிகாப் அமர்வுகளிலும் அதிகம் பயன்படுத்தியிருப்போம்.

 

அதன் தொடர்ச்சியாக நாம் கிட்டிய காலத்தில் அது போன்ற சிறப்பு வாய்ந்த இன்னும் பத்து இரவுகளை அல்லாஹ்விடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்போகின்றோம். ஆம்… இன்னும் ஒரு சில நாட்களுக்குள்ளால் இஸ்லாம் எமக்குத் தந்திருக்கும் இருபெரும் பெருநாட்களில் மற்றொன்றாகிய ஈதுல் அழ்ஹாவை உள்ளடக்கியிருக்கும் துல்ஹிஜ்ஜா மாதத்தை அடையப்போகின்றோம். அதிலேதான் இஸ்லாம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஐந்தாவது தூணான ஹஜ் இருக்கின்றது. தஃவாவை உலகமயப்படுத்திய இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படும் மாதம் இது. உழ்ஹிய்யா கடமை நிறைவேற்றப்பட்டு பல்லாயிரம் தேவையுடையோரின் தேவைகள் மனம் நிரம்பப் பூர்த்தி செய்யப்படும் மாதமும் இதுவே.

 

இத்தகைய சிறப்புக்கள் மிக்க துல்ஹிஜ்ஜா மாதத்தின் அறுவடையை ஓர் இறைவிசுவாசி அடைந்துகொள்வதற்கான மிகச் சிறப்பான காலம் அதன் முதல் பத்து நாட்களிலேயே இருக்கின்றது. ஆனாலும் அது பற்றிய அறிவுப் பரவல் நம்மிடத்தில் வெகு குறைவாகவே இருந்து கொண்டிருக்கின்றது. ரமழானின் இறுதிப் பத்தினைப் போன்றே நன்மைகளைக் கொள்ளையடிக்கக் கூடியதாகவே துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களும் அல்லாஹ்வால் எமக்குத் தரப்பட்டிருக்கின்றன.

 

துல்ஹிஜ்ஜா முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்:

இப்னு அப்பாஸ்(ரழி) தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: “நல்லமல்கள் புரியக் கூடிய நாட்களில் இந்தப் பத்து நாட்கள் போன்று அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்கள் எதுவும் இல்லை.” அப்போது, ‘யாரஸூலுல்லாஹ்… அல்லாஹ்வின் பாதையில் போரடுவதைவிடவுமா?’எனக் கேட்கப்படுகிறது. அதற்கு தூதரவர்கள் “அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவும்தான்… எனினும் தனது உயிரையும் உடமைகளையும்அல்லாஹ்வின் பாதையில் கொண்டுசென்று அவற்றில் எதனையும் மீளக்கொண்டுவராத ஒரு மனிதரைத் தவிர…” எனப் பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

 

பைஹக்கியில் வந்துள்ள அறிவிப்பொன்றின்படி “செய்யப்படும் நல்லமல்களில் அல்லாஹ்விடத்தில் மிகத் தூய்மையானதும் மகத்தானதுமான அமலாக அழ்ஹாவுடைய பத்து நாட்களைப் போன்று இல்லை.”

 

பஸ்ஸாரில் வருகின்ற அறிவிப்பொன்றின்படி “உலகின் நாட்களிலே சிறந்த நாட்கள் இவையாகும்.” என தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 

அல்லாஹ் தன் திருமறையில் ஸூரத்துல் ஃபஜ்ரின் ஆரம்ப வசனங்களில் வைகறைப் பொழுதின் மீது சத்தியம் செய்துவிட்டு பத்து இரவுகள் மீதுசத்தியம் செய்கிறான்.

( وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ ) [الفجر:2]

பெரும்பாலான தப்ஸீர் ஆசிரியர்களின் கருத்துப்படி மேற்கூறப்பட்ட பத்து இரவுகளும் துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்களின் இரவுகளாகும்.

 

இந்தப் பத்து நாட்களுக்குள்ளே தான் அறபாவுடைய நாள் வருகின்றது. “அல்லாஹ்விடத்தில் அறபா தினத்தைவிடவும் நாட்களில் சிறந்த நாள் எதுவும் இல்லை. அந்நாளில் அல்லாஹ் கீழ்வானத்துக்கு இறங்கிவந்துமலக்குமார்களிடம் இதோ எனக்காக ஒன்றுகூடியிருக்கும் எனதுஅடியார்களைப் பாருங்கள் என தன் அடியார்களைப் பெருமையோடுகாட்டுகிறான்.” என்பது நபிமொழியாகும்.

 

மேலும் இப்பத்து நாட்களுக்குள்ளேதான் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினமும்உள்ளடங்குகிறது. யவ்முந் நஹ்ர் என்றும் அழைக்கப்படும் குர்பான் துவங்கும் தினமும் அதுதான்.

 

எம் முன் சென்ற நல்லடியார்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும் இப்பத்துநாட்களையும் கண்ணியமாகப் பயன்படுத்தி அல்லாஹ்வை நெருங்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். லதாஇஃபுல் மஆரிஃப் நூலிலே அபூஉஸ்மான் நஹ்தி என்பவர் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் பற்றி இவ்வாறுகூறுகிறார்: ‘ஸலபுஸ் ஸாலிஹீன்கள் மூன்று பத்து இரவுப் பொழுதுகளைக்கண்ணியப்படுத்தினார்கள். ரமழானின் இறுதிப் பத்து, துல்ஹிஜ்ஜாவின் முதல்பத்து, முஹர்ரம் மாத்த்தின் முதல் பத்துநாட்களே அவையாகும்.’ நபித் தோழர்அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் ‘துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்துதின்ங்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாட்களின் சிறப்புக் கொண்ட்தாகும்.அறபா தினம் பத்தாயிரம் நாட்கள் சிறப்புக் கொண்ட்தாகும்.” எனஅறிவிக்கிறார்.

 

இமாம் அவ்ஸாஈ அவர்களும் மேற்குறித்த பத்து தினங்களிலும் நோன்பு நோற்று இரவுகளில் விழித்திருந்து நல்லமல்களிலும் ஈடுபடுவது இறைபாதையில் போராடுவதற்கொப்பானது என்கிறார்.

அபூதாவூத் மற்றும் நஸாஈயில் வருகின்ற ஹுனைதா பின் காலித்(ரழி) அவர்களது அறிவிப்பொன்றின் பிரகாரம் ரஸூல்(ஸல்) அவர்கள் துல்ஹிஜ்ஜாவின் ஓன்பது ஆரம்ப நாட்களிலும் நோன்பு நோற்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தொடரும் அந்த அறிவிப்பிலே ஆஷூரா மற்றும் ஒவ்வொரு மாத்த்திலும் மூன்று நாட்களும் தூதரவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னுடையதென உரிமையுடன் கூறும் நோன்பினை அவனுக்காக நோற்று அவனை நெருங்க முயற்சிக்கவேண்டும்.

 

இந்தச் சிறப்பு மிக்க பத்து நாட்களையும் பயன்மிக்கதாக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1.  நன்மை செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இந்நாட்களை ரமழானின் இறுதிப் பத்தில் செயற்படுவதைப் போன்று மும்முரமாகச் செயற்படுங்கள்.

2.  எம்மைத் தூய்மைப்படுத்தி; அவனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளத் அல்லாஹ் தந்திருக்கும் இன்னொரு அவகாசம் இது என்பதை மனத்தில் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

3.  அல்லாஹ்வின் பாதையில் போராடிவிட்டுத் திரும்புவதை விடவும் சிறப்பானவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு இது என்பதை மறந்துவிடாதீர்கள்.

4.  இந்தப் பத்து நாட்களும் முடிகின்ற போது அல்லாஹ் அளித்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளாக நீங்கள் மாறுவதற்கான மிகச் சரியான திட்டமிடல்கள் எவ்வாறு உங்களிடம் இருக்கின்றன என்பதை ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

5.  அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கான அழகிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் நாம் பெரும்பாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியவர்களாக இல்லை. எனவே இதுமுதல் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தத் தேவையான திட்டமிடல்களை மேற்கொள்ளுங்கள். அதிலே உங்கள் இலக்கினை மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ளுங்கள்.

6.  தொழுகைகளை ஜமாஅத்தோடு முழுமையாகத் தொழுவதற்கு முயற்சியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஒவ்வொரு தொழுகைக்கும் வலீமா ஒன்றைத் தயார்படுத்துவதாக தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவாதம் தந்திருக்கிறார்கள்.

7.  தூதர்(ஸல்) அவர்களது சுன்னாவைப் பின்பற்றி ஒழுகி அல்லாஹ்விடமிருந்து நேரடியாகவே கூலிகளைப் பெற்றுக் கொள்ள உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

8.   இப்பத்து நாட்களிலும் அல்குர்ஆனை ஒரு முறையோ அல்லது அதற்கு மேலதிகமாகவோ முழுமையாக ஓதிவிடத் திட்டமிடுங்கள். அல்லாஹுத் தஆலா நீங்கள் ஓதும் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகளைத் தந்திடப் போதுமானவன். ஒரு நாளுக்கு மூன்று ஜுஸ்உக்கள் ஓத முடியுமாயின் உங்களால் ஒரு குர்ஆனை முழுமையாக ஓதிமுடிக்கலாம். அப்போது அல்குர்ஆனின் மூலம் மாத்திரம் ஒரு நாளைக்கு அரை மில்லியனுக்கு மேலால் நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

9.  இந்நாட்களில் தக்பீரை சத்தமாக வீடுகளிலும் பாதைகளிலும் சொல்வது ஸுன்னாவாகும். அதனையும் முடிந்தளவு நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.

10.மேலும் திக்ருகளை – அவ்ராதுகளை – பிரார்த்தனைகளை – ஸுன்னத்துத் தொழுகைகளை – ரஸூல்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுவதை – ஈமானிய அமர்வுகளை – இஸ்லாமிய அறிவுப் பரிமாற்ற அமர்வுகளை இந்த நாட்களில் திட்டமிட்டு அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

 

அல்லாஹ் நம் அனைவரையும் நல்லருள்பெற்றோர் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s