ஸவூதி ‘இஃக்வான்’களை அணுகும் முறை சரியானதா?

saudi-arabia-and-region-map-hr

(இஃக்வான்கள், அவர்களது அரசியல், குறிப்பாக எகிப்து இராணு சதிப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் கள யதார்த்தங்கள் குறித்த சில கட்டுரைகளை மொழிபெயர்ப்பு, தழுவல், தொகுப்பு, மற்றும் நேரடியாக எழுதியும் இருக்கிறேன். அவற்றுள் இங்கு தரப்படும் ஆக்கம் வெகு வித்தியாசமானது. ஸவூதி புறத்திலிருந்து தாம் இஃக்வான்கள் தொடர்பில் விட்ட பிழைகள். ஸுன்னிக்கள் வட்டத்திலிருந்து ஸவூதியைத் தனிமைப்படுத்தி ஒதுக்கும் மறைகரங்கள் குறித்து பேசுகின்ற கட்டுரை, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பான அல்இஃக்வானுல் முஸ்லிமூனுடனான ஸவூதியின் அணுகுமுறை முற்றாக மாற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறது. அடுத்து வாசகர்கள், இவ்வாக்கம் செச்னியாவில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் இடம்பெற்ற ஸூபி மாநாட்டின் அரசியல் அஜண்டா, அதன் மறைகரங்களின் திட்டங்கள் என்ன என்பவற்றின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்க. -ஸியாப்)

 

கட்டுரையாளர் அப்துல்லாஹ் நாஸிரி ஸவூதியைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி. இக்கட்டுரையில் ஸவூதி அரேபியா இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்புக்கு இழைத்த அநீதிகள், அதன் மீதான அரசியல் தவறுகளை அதன் மூலோபாய ஆழத்துடன் பக்கசார்பின்றி விளக்குகிறார். மேலும் இன்று ஸவூதியும் இஃக்வான்களும் பயங்கரவாதத்தினதும் கடும் போக்கினதும் பெயரால் அஹ்லுஸ் ஸுன்னா அல்லாதவர்கள் என்ற வட்டத்துக்குள் ஒதுக்கப்படப் போகின்றதை எடுத்துக் கூறுகின்றார். இதுவே அண்மையில் ரஷ்யா மற்றும் மேற்குலகின் பலத்த ஆதரவுப் பின்னணியில் நிகழ்ந்த செச்னிய ஸூபி மாநாட்டின் எதிர்பார்க்கப்படும் விளைவுமாகும். கட்டுரையை ஆழ்ந்து வாசியுங்கள் நிலைமைகள் குறித்த யதார்த்தம் புரியும்.

 

1. ஒவ்வொரு முறை நான் இஃக்வான்கள் குறித்துப் பேசும் போதும், நான் இஃக்வான்களோடு அரசியல் தொடர்புள்ளவன் அல்ல என்பதைக் கவனத்திற் கொள்க. அதேநேரம் ‘அரபுவாதம்’ மார்க்கத்தோடு முரண்படும் புள்ளிகளில் நான் மார்க்கத்தையே முற்படுத்துவேன் என்பதையும் கவனிக்க.

 

2. மற்றும் இஃக்வான்கள் குறித்துப் பேசும் போது அவர்கள் தாம் பைஅத் செய்த வழிகாட்டியின் கீழான இயக்கக் கட்டமைப்பை அல்லாமல், இஃக்வானுல் முஸ்லிமூன்களே வளர்த்தெடுத்த சமகாலத்தின் நடுநிலைச் சிந்தனை முறைமையினையே நாடுகிறேன் என்பதையும் கவனிக்க. அவர்களே அந்த சிந்தனையை வளர்த்தெடுத்து மானுடத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்ப இம்மார்க்கத்துக்கு ஒரு வேலைத் திட்டம் உண்டு என்பதை முன்வைத்தவர்கள். அவர்களே மார்க்கம் மற்றும் தனிமனிதனுக்கிடையிலான பிரிகோடுகளை காட்டித் தந்தவர்கள். அவர்களே இஸ்லாமை அரசியல், பொருளாதார, சமூகவியல் ஒழுங்குகளாக, ஒரு பிரமாண்ட சமநிலைக் கோட்பாடாக முன்வைத்தனர். அது பிரபஞ்சத்தை வெற்றிகொண்டு அதிலே இமாரத் செய்து ஏராளம் மானிடக் கலைகளை உருவாக்கிய முதலாளித்துவத்தையும் கடந்து சென்றது.

 

ஏனெனில் இஃக்வான்கள்தாம் மூலக் கிரந்தங்களையும் தொன்மையான உசாத்துணைகளையும் புரட்டியெடுத்து இஸ்லாமியத் திட்டமாக அறிமுகப்படுத்தி இந்த சிந்தனையை வெளிக்கொணர்ந்தவர்கள். ஏனெனில் அத்திட்டம் காலோசிதமானது, இயல்பானது, மனித உணர்வுமயப்பட்டது. அவர்களது திட்டமொன்றும் அகீதா ரீதியாகவோ, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவின் உஸூல்களிலோ மார்க்கத்தில் புதிதே தோன்றிய பித்ஆ அல்ல. அதுவே இஸ்லாமிய உம்மத்தின் கனன்று கொண்டிருக்கும் ஒளி… மரணத்தையும் மறுத்து வாழும் ஒளி அது; அது  அத்திட்டம் அல்லாஹ் தவிர்த்து வேறெவரையும் வணக்கத்துக்குரியதாக எடுத்துக் கொள்ளாத தூய ஏகத்துவத் தவ்ஹீதை கொள்கையாகக் கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தையே பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் தமது பல்வேறுபட்ட காலங்களிலும் கடந்துவந்து எம்மிடம் வந்து சேர்ப்பித்திருக்கிறார்கள். அது இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ஊடாகவே இஃக்வான்கள் வரைக்கும் வந்து சேர்ந்தது.

 

நாம் கட்டுரையில் தொடர்ச்சியாக பார்க்கப் போவது:

1. சவூதி முடியரசு அதன் வரலாற்றில் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது. முதன் முறையாக சவூதியின் ‘இஸ்லாமிய உலகின் தலைமை மத்திய ஸ்தலம்’ என்ற ஸ்தானத்திலிருந்து நீக்கப்படும் வண்ணம் சவால் விடுக்கப்பட்டிருக்கின்றது. அடுத்து சவூதியை ‘அஹ்லுஸ் ஸுன்னா’ என்ற பிரிவுக்குள் இருந்து கழற்றியெறிந்து ஒதுக்கிவிடுவதற்கான அதீத முயற்சிகள் நிகழ்ந்துவருகின்றன. அது போன்று ISIS மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தின் பொறுப்பை சவூதியின் தலையில் கட்டிவிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. செச்னியாவில் அண்மையில் இடம் பெற்ற மாநாடும் இந்த சர்வதேச நோக்குடனேயே பார்க்கப்பட வேண்டும். இந்த அபாயகரம் மிக்க திட்டத்துக்கு அவ்வளவு சீரியஸ் நாம் கொடுக்காவிட்டாலும் நாம் தற்போது அதனை எதிர்கொள்ளும் பாணியை விட வேறு வித்தியாசமான பாணியில் எதிர்கொள்வதற்கான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். இந்த மாநாடு ஒன்றும் இறுதியானதாக இருக்கப் போவதுமில்லை. அத்தோடு இது ஈரானியப் பரிவாரங்கள், அதன் ஸூபித்துவப் பின்பற்றுனர்களை விடவும் அபாயகரமானதாக இருக்கப் போகின்றது.

 

2. நிகழ்வுகளை நேரடியாக அவதானிப்பின், இப்போது நம்மை யார் எல்லாம் அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் கழற்றியெறியப் பார்க்கின்றனரோ அவர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை நாமே நமது முன்னைய அரசியலின்படி வழங்கியிருக்கிறோம். இவ்வாறு எம்மை அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் தூரப்படுத்துவதற்கான முயற்சிகள் நாம் இஃக்வான்களது விரோதத்தை சுவைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே துவங்கிவிட்டது எனக் கூறிவிட முடியும்.

ஸலபி அழைப்பாளர்கள், ஷெய்க் ஜாமியின் பின்பற்றாளர்கள் போன்றோருக்கு நாம் இஃக்வான்களது அகீதாவில் சந்தேகத்தைத் தோற்றுவிக்கவும் அவர்களை வீழ்த்த முயற்சிக்கவும் அனுமதித்தோம். அப்போதே அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் நம்மை கழற்றிவிடும் முதல் எட்டினை எடுத்துவைத்தோம். அப்போது நாங்கள் தவ்ஹீதை நிலைநாட்டுகின்ற, அஹ்லுஸ் ஸுன்னாவைப் பிரதிபலிக்கின்ற இஃக்வான்களது தஃவா ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தஃவாவின் நீட்சிதான் என்ற பொசிட்டிவ் அம்சத்தை நோக்கவே இல்லை.

அடுத்த விடயம் நாங்களும் இஃக்வான்களும் அகீதாவிலும் வேலைத்திட்டத்திலும் பங்காளர்கள் என்பதையும் நாம் நோக்கவே இல்லை. அரபு வசந்தத்தைத் தொடர்ந்த எதிர்ப் புரட்சிகளின் போது நாம் இஃக்வான்களுக்கு ஆதரவாக இருந்திருந்தாலேயே அந்த ஒவ்வொரு தேசமுமே இன்று நம்மோடு உளப்பூர்வத்தோடு இருந்திருக்கும். அவ்வாறிருந்திருப்பின் நம்மோடு பெரும்பான்மை அரபு நாடுகள் இருந்திருக்கும். எந்தக் கொடிய ஆயுதத்தையும் வெல்லும் ஆற்றலை நாம் பெற்றிருப்போம்.

 

3. அடுத்த முறை நாம் அதனை சுவைத்தது, இஃக்வான்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது. உண்மையில் அந்த நிலைகளை நம்மால் கிரகிக்கவே முடியாது. ஏனெனில் நம்மிடம்தான் அரசியல் கட்சி முறைமைகள் இல்லையே. நாம் அல்குர்ஆன்-அஸ்ஸுன்னா தான் ஆட்சி முறைமைகள் என்கிறோம். அப்படியாயின் அதாவது நமது முறைமைகள் அல்குர்ஆன்-அஸ்ஸுன்னாவுக்கு உட்பட்டிருந்தால் சரி. இதுதான் அரபு, இஸ்லாமிய சமூகம் உவந்து தேர்ந்தெடுத்துக் கொண்ட நடுநிலை அரசியல் இஸ்லாம் நம்மிடம் வேண்டிக் கொள்வதன் முழுமொத்தமாகும். அதே சிந்தனைக்கு எதிராகத்தான் ‘இது இஃக்வான்களின் வேலைத்திட்டம்’ என்ற வர்னணையோடு இன்று போர் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

4. ஏனெனில் நாம் இஃக்வான்களை கூடாதவர்களாகவும் எதிரிகளாகவும் கருதியபோது இஸ்லாமிய உலக மக்களுக்கென பிரதியீடொன்றை முன்வைக்கவுமில்லை. மட்டுமன்று சவூதிக்குள்ளாவது அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் இல்லை. நாம் முன்வைத்ததெல்லாம் நான் ஸலபிய்யா என பெயரிடுகின்ற புதிய நோக்கினை மட்டுமே. அதற்கு ஷெய்க் அல்ஜாமி பெயரிட்டு கட்டியெழுப்பினார். பின்பு மக்களே ‘அல்ஜாமிய்யா’ என்றும் ‘ஸலபிய்ய அழைப்பாளர்கள்’ என்றும் பெயரிட்டனர். அவர்கள் தம்மைத் தாமே சவூதியினுள் தாம் மட்டுமே வெற்றிபெற்ற கூட்டத்தினர் போல் நமக்கு வெளிப்படுத்தினர். அவர்கள்தான், அஹ்லுஸ் ஸுன்னாவினரின் மிகப் பெரும் ஜமாஅத்தான இஃக்வான்களை ஸூபி, ஃகவாரிஜ் போன்ற வகையறாக்களுக்குள் இட்டனர். அவர்கள் அவ்வாறு செய்ததற்கு பிராந்திய, சர்வதேச இஸ்லாமியர்கள் எவரும் கண்ணியமாக நோக்கும் குறைந்தபட்ச ஆதாரமும் இல்லை. அதன் மூலம் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொடியை உயர்த்திவிடவும் முடியாது. ஸவூதிக் குள்ளே நாம் போகும் இந்தப் போக்குதான் நமக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் அனர்த்தமாகும். அதற்குக் கிடைக்கவுள்ள பரிசுதான் நம்மை அஹ்லுஸ் ஸுன்னா என்ற பெரும் சமுத்திரத்திலிருந்து கழற்றியெறிவதாகும்.

 

5. இஃக்வான்களோடு ஒன்றிணைந்து, ஒன்றுகலந்து சவூதி இயங்குவதன் மூலம், இஃக்வான்களைப் பலப்படுத்துவதன் மூலம், அவர்களை நடுநிலையான இஸ்லாமியக் கோட்பாட்டினைப் பின்பற்றுவோர் என்ற வகையில் ஆதரவளிப்பதன் மூலம் சவூதியானது தன்னை அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் ஒதுக்கி வைக்கும் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியுமாக இருக்கும். சவூதியை எதிர்ப்போரில் குறிப்பிட்டுக் கூறினால், ஈரானால் வழிநடாத்தப்படும் அணியை எதிர்கொள்ளலாம். அதன் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மட்டுமல்ல, இஸ்லாமிய உம்மத்துக்கு அவசியப்பட்ட திட்டம் கொண்ட ஒரு பெரும் நடுநிலை சுன்னி இஸ்லாமியக் கூட்டமைப்பொன்றை நிறுவவும் அதனால் முடியுமாக இருக்கும். இந்த இஸ்லாமியப் போக்குக் கொண்டோர்தான் பெரும்பான்மையினராக உள்ளனர்.

 

6. வரலாறு மீண்டும் மீண்டும் வரும். நாம் தற்போது முகங்கொடுப்பவை முன்னையவற்றைக் காட்டிலும் அதிக துயரம் மிகுந்தவை. மன்னர் பைஸல்(ரஹ்) அவர்களது காலத்தில் ஸவூதி வாழ்வா, சாவா என்ற பாரிய சவாலை எகிப்தின் அப்துல் நாஸர் புறமிருந்து முகங்கொண்டது. அதனை மன்னர் பைஸல் இஃக்வான்களின் தியாகத்தினால் எதிர்கொண்டார். அதன் பின்பு இஸ்லாமிய உலகம் மன்னரின் அழைப்புக்கு பதிலளித்து 1962ம் ஆண்டு மக்காவில் உலக இஸ்லாமிய மாநாட்டுக்காகத் திரண்டது. பின்பு, அங்கு வஸத்திய்யா மன்ஹஜின் (நடுநிலை இஸ்லாமியக் கோட்பாடு) படி ‘ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமி’ (உலக முஸ்லிம் லீக்) உருவாக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக உலக இஸ்லாமிய உதவி அமைப்பு (முஸ்லிம் எய்ட்), இஸ்லாமிய ஃபிக்ஹ் ஒன்றியம் (மஜ்மஉல் ஃபிக்ஹில் இஸ்லாமி) உள்ளிட்ட இன்ன பிற பெரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இது ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமி போன்ற ஐ.நா. சபையை ஒத்த பெரும் அமைப்புக்களை உருவாக்கி வழிநடாத்தும், முஸ்லிம்களை இயல்பான வாழ்வு முறைக்கு மீளச் செய்யும் இயலுமை ஸவூதிக்கு உள்ளது என்ற பெரும் உண்மையை சொல்லிச் சென்றது.

 

7. மன்னர் பைஸல் இஃக்வான்களோடு இணைந்து செயற்பட்டு அவர்களது அறிஞர்களைக் கண்ணியப்படுத்தி, அவர்களது தாஈக்களை வரவேற்று, அவர்களது வேலைத் திட்டத்தைக் கட்டியெழுப்பிய போது அப்துல் நாஸர், தனக்கிருக்கும் செல்வாக்கு இஸ்லாமிய உம்மத்தின் இதயத்தில் பெரும் இடம் பிடித்திருக்கும் எகிப்தின் பெருமை மிகு அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் உலமாக்களின் செல்வாக்கையும் பயன்படுத்தி எம்மை அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் ஒதுக்கிவிடுவதற்கு துணியவில்லை. நாம் அஹ்லுஸ் ஸுன்னாவிலே இருந்தோம். நம்மோடு இந்த உம்மத்தின் உலமாக்களும் கூடவே இருந்தார்கள்.

 

8. இஃக்வான்களது வேலைத் திட்டத்துக்கு நாம் எப்போது விரோதம் காட்டி, அவர்களோடு சண்டைபோடத் துவங்கினோமோ அப்போதே நம்மிடமிருந்த மிகப் பெரும் சொத்தை நாம் இழந்துவிட்டோம். அநேக சந்தர்ப்பங்களை நழுவ விட்டு இழிவடைந்தோம். யெமன், லெபனன், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் நமது பலத்தை-தாக்கத்தை விரைவாகவே இழந்துவிட்டோம். அந்தந்த நாடுகளிலே ஈரானிய செல்வாக்குக்கான விசாலமான வாயிலைத் திறந்துவிட்டோம். அங்கங்கு எல்லாம் இஃக்வான்கள் தமது காலோசிதமான நடுநிலைமையான வஸத்திய்யா சிந்தனையின் பின்னால் மில்லியன் கணக்கான முஸ்லிம்களை திரட்டியிருந்தனர். அதனடியாக மில்லியன்கள் முஸ்லிம்கள் கொண்ட அறிவுச் செழுமை, இலக்கியப் பாரம்பரியத்தையும் உருவாக்கியிருந்தனர்.

 

9. நாம் இன்று உருவாக்கி வைத்திருக்கும் ஒடுங்கிய, மற்றதை ஒதுக்கிப் போகும் கொள்கையின்படி, அதாவது நம்மை நாமே ஸலபிக்கள் என அழைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையானது; அவர்களிடம் எதுவுமே இல்லை; ஒரு தெளிவான திட்டமில்லை; இந்த மிகப் பெரும் ஸுன்னி பிரிவினரை அடித்து, உதைத்து, வீழ்த்தி விடுகின்ற வேலை தவிர வேறெதுவுமே இல்லை. அவர்களது ஒவ்வொரு பொழுதும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நம்மை ஒதுக்கி விடுவதற்கான ஆதாரங்களைத் தான் அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இக்கொள்கைப் போக்கானது ஒரு போதும் நமது வெளிநாட்டு ராஜதந்திரங்களில் எதுவித உதவியையும் தந்திடாது. நம் உள்நாட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாது.

 

10. இவ்வகை சவால்களை எதிர்கொள்ள ஸவூதியின் பலமோ, அது வாங்கி வைத்துள்ள ஆயுதங்களோ ஒரு போதும் உதவிடாது. அல்லது அதன் பெற்றோலோ, பொருளாதாரமோ ஒரு பொழுதும் உதவிடாது. மட்டுமல்ல நாம் மக்கா, மதீனா என்பவற்றுக்குரிய கண்ணியத்தினால் அவற்றுக்கு நாம் செய்யும் பணிகள் காரணமாக நமக்கு இஸ்லாமிய உலகுக்கான தலைமையை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை மட்டுமே தரும். இந்தத் தலைமைப் பாத்திரமும் நாம் மிகப் பெரும் ஸுன்னிகளின் குழுவை (இஃக்வான்களை) விட்டும் பகைத்துத் தூரமாகி இருக்கும் போது அதுவும் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. மன்னர் பைஸல்(ரஹ்) அவர்கள் முன்னெடுத்த அரசியலிலே நமக்குப் பெரும் படிப்பினைகள் உள்ளன.

 

11. இப்போதெல்லாம் அஹ்லுஸ் ஸுன்னா மாநாடு என்று உலக இஸ்லாமியர் அனைவரையும் வெற்றிகரமாக, வினைத்திறனாக நம்மால் ஒன்றிணைக்க முடியாது. இஃக்வான்களின் பங்குபற்றலின்றி அது முடியாது. அவர்களை நாம் பயங்கரவாதிகளென்று நாம் பட்டியலிட்டு வைத்திருக்கும் வரையில் நம்மால் முடியவே முடியாது.

 

12. இப்பகுதியினை, எவர்கள் எம்மை அஹ்லுஸ் ஸுன்னாவினரை விட்டும் ஒதுக்கப் பார்க்கின்றனர் என்பதைக் கூறி முடிக்கிறேன். அவர்கள்தான் இஃக்வான்களை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் திட்டுவதிலேயே குறியாக இருக்கின்றவர்கள். அவர்களிடம் இஃக்வான்களை வீழ்த்துவது என்பது தவிர்த்து வேறெந்த வேலைத் திட்டமுமே இல்லை.

அதில் சிலர் செய்தியாளர்கள், சிலர் கருத்து சுதந்திரம் பேசுவோர், இன்னும் சிலர் இஸ்லாமிய அமைப்புகளுக்குள் நுழைந்திருக்கும் ஆய்வனுபவஸ்தர்கள் என தம்மைக் கூறிக் கொள்வோர். அவர்கள் எந்த சிந்தனைச் சாரமும் அற்று அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து இஃக்வான்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ், அல்காஇதாவுடன் தொடர்பு என்றெல்லாம் பத்திரிகைகளில் வெறுமனே எழுதித் தொலைக்கிறார்கள். இவர்கள்தான் ஏதோவொன்று நடந்துவிட்டாலும் அடித்துப் பிடித்து ஓடிவந்து தொலைக்காட்சித் திரைகளில் தோன்றி இஃக்வான்களுக்கு இன்ன இன்ன தொடர்புகளுண்டு என ஏதுமற்ற கருத்துக்களை மீட்டி மீட்டிப் புலம்புபவர்கள். அத்தகையோர், தாம் இஃக்வான்களையும் அவர்களது திட்டத்தையும் அடியோடு மக்கள் மனத்தை விட்டும் பிடுங்கிக் கொண்டிருப்பதாக வீணே நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யதார்த்தத்தில் அவர்கள்தான் மக்கள் மனத்தை விட்டும் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு நமது ஸவூதியையும் ஸுன்னிகள் என்ற பெரும் வட்டத்தை விட்டும் தூரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் நமது ஸவூதி முடியரசுக்கு மிகத் தெளிவான இழிவுகள்.

 

ஸவூதி, இஃக்வான்களோடு இணைவதைத் யார் எதிர்ப்பார்கள்?

1. இப்பட்டியலில் முதலில் இருப்பவர்கள் ஸவூதியின் பணியாளர்கள் என்ற பெயரில் இருக்கின்ற தமது வேலைகளை இழக்கப் போகின்றவர்கள் ஆவர். அவர்கள்தான் இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம், யுத்தங்கள், கடும் போக்குவாத இயக்கங்களான அல்காஇதா, ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்லாது போகோ ஹராமையும் கூட சம்பந்தா சம்பந்தமில்லாமல் எவ்வித ஆதாரமும் இன்றி எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணி இஃக்வான்களே என்று சும்மா சாட்டிக் கொண்டிருப்பவர்கள். இத்தகையோர்தான் இஸ்லாமிய ஜமாஅத்துக்களுக்களில் தம்மை அனுபவசாலிகள், ஆய்வாளர்கள் என தமக்குத் தாமே நாமம் சூட்டிக் கொண்டிருப்பவர்களாவர். இந்த ஆய்வாளர்களை நீங்கள் பாருங்கள்… அவர்கள் எல்லாப் புறங்களிலும் இருந்தும் இஃக்வான்கள் குறித்த குரோத எண்ணத்தைப் பரப்பிக் கொண்டிருப்பர். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி. சமூக ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் நீங்கள் இவர்களைக் காண்பீர்கள். அவர்கள் எல்லோரும் ஒரே பணியைத் தான் சிரமேற்கொண்டு செய்வார்கள். அவர்களது பணி தான் எங்குமே இஃக்வான்களைக் கொத்திக் குதறிக் கொண்டிருப்பது. இஃக்வான்களை எங்கும் கடும்போக்குவாதிகளாகக் காட்ட முயன்றுகொண்டிருப்பார்கள். இந்த ஆய்வாளர்களுக்கு(!) அனுபவசாலிகளுக்கு(!) எவரும் இவ்வாறு கருத்துக் கூற அனுமதி கொடுத்தும் இல்லை. ஆனால் அவர்களாகவே மூக்கை நுழைத்து கருத்தும் சொல்வார்கள். இவ்வாறு கருத்துச் சொல்வதற்கு அவர்களுக்குக் கல்வி, புலமை ரீதியாக எந்தத் தகுதிகளும் இருக்க வேண்டியதில்லை. அநீதிக்கும் அநியாயத்துக்கும் சொந்தக்காரர்களாக மட்டும் இருந்தால் போதும். அகம்பாவம் பிடித்த இவர்கள் எவ்வித ஆதாரமும் இன்றி மற்றோரை இழிவுசெய்துகொண்டிருப்பர். இவர்கள் அவ்வாறு செய்வது தமது பதவிகளைக் காத்துக் கொள்ளவும் தமது எஜமானர்களிடமிருந்து தமக்குக் கிடைத்துக் கொண்டிருப்பவற்றை தொடந்தும் பெற்றுக் கொள்ளவும்தான்.

 

2. அடுத்ததாக, மறைமுகமாக வழிநடாத்தப்படும் டிவி சானல்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்கள் இஃக்வான்கள்-ஸவூதி இணைப்பை விரும்பாதவர்களாக உள்ளனர்.

 

3. அடுத்து சில மனித ஷைத்தான்களை இது பாதிக்கும். அவர்கள் ஸவூதி அரசுக்கு இஃக்வான்களை எதிரிகளாகக் காட்டுவதன் மூலம் தினம் தினம் கொள்ளை லாபம் உழைப்போர் உள்ளனர். அவர்கள் இப்பிளவை ஸவூதியை ஸுன்னிக்களை விட்டும் ஒதுக்கும் ஆயுதமாகப் பாவிக்கின்றனர்.

 

அரசியல் யாப்பின் புறத்திலிருந்து…

1. இந்த அபாய கட்டத்திலிருந்து ஸவூதி முடிந்தளவு வெகு சீக்கிரம் வெளிவர வேண்டும். எமது எதிரிகள் மிகத் திறம்படவே எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியவேண்டும். இதற்கென உறுதியான கொள்கைகள் வகுக்கப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பழைய, புதிய பிரச்சினைகளை விட்டும் ஸவூதி அரேபியா, அரசியல்-கலாசார-சமூக ரீதியாக விடுபடுவதை நோக்கி விரைய வேண்டும். இதனை நமது யாப்பின் 1-6-7 ம் ஷரத்துக்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம்.

 

2. அல்குர்ஆன்-அஸ்ஸுன்னாவில் மட்டுமே பின்பற்றல் என்பது ஒரு குறுகிய மனப்பாங்கு அன்றி, பல்வேறு மத்ஹப்கள், வித்தியாசப்பட்ட இஜ்திஹாதுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இஸ்லாமிய ஷரீஆவின் விசாலத்தன்மையோடு ஏற்றுக்கொள்வதையே குறிக்கும். இங்கு ஷீஆக்கள் தமக்கிடையே வெவ்வேறான மத்ஹப் பேதங்களை ஒதுக்கி இணைந்து செயற்படுவதைக் கவனிக்க.

 

3. நம் பழைய பக்கங்கள் முடிவுறுத்தப்பட்டு, பல இஜ்திஹாதுகளுக்கும் இடம்பாடானவற்றை மனமுவந்து ஏற்கும் விசாலமான புதிய விதிகளுடனான யாப்பு அறிமுகமாக்கப்படல் வேண்டும். அது வஸத்திய்யா மன்ஹஜ் (நடுநிலைக் கோட்பாடு) கொண்ட மில்லியன் கணக்கான இஃக்வான்களோடு நம்மை இணைத்துவிடும். மேலும் இது பல ஃபிக்ஹு இஜ்திஹாதுகள் மூலம் தோன்றும் சமூக முரண்பாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். ஒரே கொள்கை வகுக்கப்படாத நிலையில், பலவகைப்பட்ட ஃபிக்ஹ் இஜ்திஹாதுகள் தோன்றி, அவற்றில் ஒன்றுக்கு மட்டும் மக்களை எம்மால் நிர்ப்பந்திக்க முடியாது.

 

4. அடுத்து நான் தனிப்பட்ட ரீதியில் கருதுவது என்னவெனில், ஸவூதியின் இந்த நான்காம் கட்டத்திலே, தேர்தல் மூலமாக மக்கள் பங்கேற்பு தோற்றுவிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட வேண்டும். இது அனைத்து மாநிலங்களிலும் படிப்படியே அமுலாக வேண்டும். அடுத்தடுத்த சீர்திருத்தங்களில் அரசியல் கைதிகள் விடுவிப்பு, பத்திரிகை-ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் என அடுத்த கட்டங்களை நோக்கி ஸவூதி நகர வேண்டும். இதுதான் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஸவூதி அரேபியாவுக்கு அதன் புதிய பாய்ச்சலை செய்வதற்கான எட்டுக்களாகும்.

 

மூலம்: சட்டத்தரணி அப்துல்லாஹ் நாஸிரி,

ரியாத்.

30-08-2016/1437-11-27

தமிழில் தழுவல்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s