(டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி அவர்களது கீழ்வரும் ஆக்கம் “இஸ்லாமிய உம்மத்தின் சமகால நிலை மீது ஒரு வாசிப்பு” என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்துள்ள அவரது எண்ணற்ற விரிவுரைகளி ன்தொகுப்புகளில் ஒன்றிலிருந்து தரப்படுகின்றது. அவரது விரிவுரைகள் என்பது அவரது சிந்தனைகளினதும் நூல்களினதும் கூட்டு மொத்தத் தொகுப்புக்களாககக் கருதப்படக் கூடியவை. இந்த பகுதியில் அவ்விரிவுரையின் கடைசிப் பகுதி இடம்பெறுகிறது. கடந்த பகுதிகளில் உம்மத், அதன்ச மகால நிலை மற்றும் அதனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம், நவீனகால இஸ்லாமிய எழுச்சியலைகள் குறித்துப் பேசிய டாக்டர் கர்ளாவி இப்பகுதியில் செப்.11 நிகழ்வுகளுக்கு பிந்தைய உலகம், பயங்கரவாதம் ஒழிக்கப்படுவது எவ்வாறு, உலகில் நிலவும் அநீதியை இல்லாமலாக்குது ஆகியன குறித்து ஆழமாக அலசுகிறார்.)
> இஸ்லாமிய எழுச்சியிலிருந்து…
நாம் ஆர்ப்பரித்து எழுந்து நிற்கும் இஸ்லாமிய எழுச்சியை மிகச் சரியாக வாசிக்க வேண்டும். நான் இவ்வெழுச்சியை கால் நூற்றாண்டுக்கும் மேலால் நன்கு அவதானம் செலுத்தி வருகிறேன். அதனை ஊக்கமூட்டியும் விமர்சனம் செய்தும் கிழக்குலகிலும் மேற்குலகிலும் நான் அதனை நன்கு அவதானித்து வருகிறேன். நமது உலமாக்கள்-அறிஞர்கள், தாஈக்கள்-அழைப்பாளர்கள், ஃபுகஹாக்கள்-சட்டவியலாளர்கள், முரப்பிகள்-பயிற்றுவிப்பாளர்கள் உட்பட்ட அனைவரும் இந்த எழுச்சியை வழி தவறுதல்களிலிருந்து பாதுகாக்கவும் இந்த எழுச்சி பிறரால் திருடிக் கொள்ளப்படாதிருக்கவும் என சரியான வழிகாட்டல்கள் நெறிப்படுத்தல்கள் என்பவற்றை வழங்க வேண்டும்.
இதனாலே இப்பகுதியில் நான் சில புத்தகங்களை வெளியிட்டேன். மறுப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி, சட்டபூர்வ வேறுபாடுகளுக்கும் போற்றத்தகாத பிளவுகளுக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி, இஸ்லாமிய எழுச்சியும் அரபு-இஸ்லாமிய தேசங்களின் முனைப்புகளும், நேரிய எழுச்சிக்காக, கோளாறு எங்கே? உள்ளிட்ட நூல்கள் அத்துறையில் நான் எழுதியதாகும். இவை அல்உம்மா சஞ்சிகையில் எழுதிவந்த கட்டுரைத் தொடர்களே.
நம்மிடத்தில் நிச்சயம் கோளாறுகள்-தவறுகள் இருக்கும். நாம் மிகப்பெரும் எட்டுக்கள் வைப்போம்; ஆனால் சிறிய விளைவையே அடைந்திருப்போம். எனவே நாம் நமது கோளாறுகள் குறித்துத் தெளிவாகப் பேசவேண்டும். இறுதியாகக் குறிப்பிட்ட நூலில் பல வகைக் கோளாறுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். நமது நலவுகள்-சிறப்புகளை நாம் அறிந்திருப்பது போன்றே நம் பாதை நேர்வழியில் ஆவதற்கும், நம் குறைகளை நாம் அறிவதற்காகவும் இது குறித்துப் பேசியிருக்கிறேன். இது நமது கடமை; இஸ்லாமிய எழுச்சி குறித்த வேகமான வாசிப்பு இது.
> செப்டம்பர் 11 நிகழ்வுகள்:
மேலே நான் பல நிகழ்வுகள் குறித்துப் பேசினேன். அவற்றுள் தலையாய நிகழ்வான செப்.11 நிகழ்வுகள் உலகை உலுக்கியவை; உலகின் பெரும் வல்லரசைக் கதிகலங்கச் செய்தவை. தாம் பாதுகாப்பில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மிதந்துகொண்டு எல்லோரையும் மேய்க்க முயன்ற வல்லரசுக்கு நேர்ந்த கதி அது. அந்நிகழ்வை நாம் அது நிகழ்ந்த ஆரம்பத்திலேயே நிராகரித்தோம். யாரொருவனோ, எம்மதமோ, எத்தேசமோ, எவ்வினமோ… எவர் நிகழ்த்தினாலும் அதனை நாம் நிராகரிக்கிறோம்.
>செப்.11 நிகழ்வுகளும் வீரமரண (ஷஹாதத்) தாக்குதல்களும் வேறு வேறானவை:
இந்நிகழ்வின் போது நாம் ஓர் அமைச்சு மாநாட்டிலிருந்தோம். முடிந்ததும் சில அமெரிக்க, மேற்குலகப் பத்திரிகையாளர்கள் நம்மிடம் வந்து அத்தாக்குதல் குறித்து நம்மிடம் கேட்டார்கள். அவர்களது நோக்கம் இத்தாக்குதலையும் நான் பலஸ்தீனில் இடம்பெறும் ஷஹாதத்-வீரமரணத் தாக்குதல் போலக் காட்டி இதனையும் நான் ஆதரித்து ஆகுமாக்க வேண்டும் என்பதே. அப்போது நான் “இரண்டுக்கும் இடையில் இங்கு பெருத்த வேறுபாடு உண்டு” என அவர்களிடம் கூறினேன். அவர்கள் வித்தியாசம் என்னவென வினவ, “முதலாவது பலஸ்தீனுக்குள் நடக்கும் நிகழ்வு; அவர்கள் தமது தேசத்தைப் பாதுகாக்கவெனப் போராடுபவர்கள்; எங்கிருந்தோ வந்த ஆக்கிரமிப்பாளர்களை தமது பூமியை விட்டும் விரட்டுவதற்காக அவர்களை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்; இது அவர்களது உரிமை; தன்னுயிரைத் தியாகம் செய்தாவது பெறவேண்டிய விடயம் அது. தேசத்தைப் பாதுகாப்பதென்பது சட்டபூர்வமான அம்சம்; இறை சட்டங்களும் அதனைக் உறுதிப்படுத்தியுள்ளன; மனித சட்டங்களும் அதனைக் கூறியுள்ளன; சர்வதேச நடைமுறைகள், பண்பாட்டுப் பெறுமானங்களும் அதனை உறுதிசெய்கின்றன.” எனக் கூறினேன்.
>எதிர்ப்பு மனப்பாங்கு மனித இயல்பு:
மனித உடல் கூட உடலினுல் ‘வைரஸ்’கள் புகுந்தால் திருப்பித் தாக்கி விரட்ட முனையும் இயல்பு நமக்குத் தெரிந்ததுதானே.
எனவே தம் நிலத்தை ஆக்கிரமிக்க முனைபவர்களை நாம் காண்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆணும் பெண்ணும் அனைவரும் இராணுவப் பயிற்சி பெற்ற ஒரு ஆக்கிரமிப்புக் கூட்டத்தினை எதிர்த்து தனது தேசத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பதற்காக தன்னையே வெடிக்கச் செய்கிறான்; தன்னையே அர்ப்பணிக்கிறான். ஆனால் செப்.11 தாக்குதல்கள் அவ்வாறல்ல; அந்த 4 விமானங்களிலும் இருந்த எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிப் பயணிகள் தம்மையும் அர்ப்பணிப்பதற்கு ஒப்புக் கொண்டா சென்றார்கள்? அவர்களுக்கு அந்த தாக்குதலின் அரசியல் தெரியுமா என்ன? அதில் அரபுகள் இருந்தனர்; முஸ்லிம்கள், ஆபிரிக்கர்கள், ஆசியர்கள் என அனைத்து இனத்தினருமே இருந்தனர்.
எனவே இதுபோன்ற தாக்குதலை நாம் நிராகரிக்கிறோம். அவ்வாறு நாம் நிராகரிப்பது என்பது அவர்கள் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அழைத்துக் கொண்டு புரியும் போரை ஆகுமானதெனக் கூறுகிறோம் என்ற அர்த்தமல்ல. அதாவது ஆப்கானிஸ்தானிலிருந்து துவங்கினார்களே.. அந்தப் பைத்தியக்காரத்தன யுத்தம்தான். பசி,பட்டினியால் வாடிக் கொண்டு இருபதுக்கும் மேலான வருடங்களாக காயத்திற்கு மேல் காயம்பட்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன..?
அவர்கள் சொன்னார்கள்: “அம்மக்கள் செய்த பாவம், அவர்களிடம் தான் உஸாமா பின் லேடன் இருக்கிறார்” ஆனால், உஸாமா அத்தாக்குதலை செய்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதனையே கட்டார் நாட்டு வெளியுறவு அமைச்சரும் வலியுறுத்தியிருந்தார். ஆப்கானும் உரிய ஆதாரம் தருமாறும் அப்போது உஸாமாவை இஸ்லாமிய நீதிமன்றில் நிறுத்தத் தயார் என்றும் அதன் மூலம் உரிய தண்டனை வழங்கப்படுமெனவும் சொன்னார்கள். வெறும் சந்தேகம், ஊகத்தைக் கிளப்பிவிட்டு மக்கள் தண்டிக்கப்படுவது ஆகுமானதல்ல. எவ்வித ஆதாரமுமற்ற அபாண்டங்கள் மீது எழுப்பப்பட்ட நடவடிக்கைகளே இவை.
இஸ்லாம் எந்தவொன்றுக்கும் ஆதாரத்தைக் கோரும் மார்க்கமாகும். குற்றச்சாட்டு ஒன்றை முன்வைப்பவர்தான் தெளிவான ஆதாரத்தைக் காட்டவேண்டுமென அது கோருகின்றது. செப்.11 குறித்து முஸ்லிம்களை சாட்டி அவர்கள் முன்வைத்த அனைத்து சான்றுகளும் போலி என நிரூபிக்கப்பட்டது.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஏகாதிபத்தியத்தின் பல நலன்களுக்காக, இத்தாக்குதல் திட்டமிடப்பட்டதே அமெரிக்கப் பின்னணியோடுதான் என்பது பல வழிகளில் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஷெய்க் கர்ளாவியின் உரை பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்டது என்பதைக் கவனிக்க.)
ஒக்லஹோமா தாக்குதல்கள் உங்களுக்குத் தெரியும். முதலிலேயே அங்கு முஸ்லிம்களும் அரபுக்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர். பின்னர் அமெரிக்கன் ஒருவனே தாக்குதல்தாரியாக கண்டறியப்பட்டான். ஏன் அமெரிக்கனோ, ஜப்பானியனோ, ஸெர்பியனோ அல்லது மனித இனத்தின் ஏதோவொரு பிரஜையோ தாக்குதல்தாரியாக இருக்க முடியாது? அதற்கு ஏதும் தடைகள் உண்டா?
இங்கு எவ்வித ஆதாரமுமற்ற அடிப்படைகள் மீது ஆப்கான் மக்கள் மீது போர்தொடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் அவர்கள் கற்காலத்திற்கே திரும்பும் அளவுக்கு அவர்களது சொத்துக்களும் கட்டுமானங்களும் வகைதொகையற்று அழிக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் ‘பயங்கரவாதத்துக்கெதிரான போர்’ என்ற பெயர் வேறு சூட்டிக் கொண்டனர்.
>பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற பெயரால்…
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதற்கு அவர்களிடம் எந்த வரையறையும் இல்லை; பயங்கரவாதத்திற்கே அவர்களிடம் எந்த வரையறையும் இல்லை. அது குறித்து மக்களை தொடர்ந்தும் மயக்கத்திலே வைக்கிறார்கள். பலஸ்தீனின் ஹமாஸ், மற்றும் ஜிஹாத் அமைப்புக்கள், கஷ்மீரின் முஜாஹிதீன்கள் அனைவரையும் அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் இட்டு பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற பெயரால் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.
மேலும், பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற பெயரால் இஸ்லாமிய நலன்புரி வேலைத் திட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள். நலன்புரி வேலைகள் பல நல்ல விளைவுகளைத் தருகையில் அதனை இன்று குறிப்பாக வளைகுடா நாடுகளில் தடைசெய்து முடக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
நான் குவைத்தில் ஒரு இஸ்லாமிய நலன்புரி வேலைத் திட்டங்கள் குறித்த மாநாடொன்றுக்குப் போயிருந்தேன். அங்கு குவைத் ஜம்இய்யத்துல் இஸ்லாஹ் அமைப்பு முன்னாள் தலைவர் அபூ பத்ர்(ரஹ்) வந்திருந்தார். அவர், தாம் உலகம் முழுதும் கடந்த முப்பது வருடங்களில் மேற்கொண்ட பணிகளை புள்ளிவிபரங்களாக சமர்ப்பித்தார். ஆயிரக் கணக்கான பள்ளிவாசல்கள், பாடசாலைகள், பயிற்சி நிலையங்கள், குர்ஆன் மனன மையங்கள், அநாதை இல்லங்கள் அமைத்திருந்தார்கள். மில்லியன் கணக்கானோர் கற்கிறார்கள்; பயன்பெறுகிறார்கள். இதுதவிர்த்து மக்களுக்கு நீர்புகட்டும் கிணறுகள், விவசாயத்துக்கான நீர்ப்பாசனம் என ஏராளம் செய்திருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய நலன்புரித் திட்டங்களை மதச்சார்பற்றோர் எதிர்க்கிறார்கள். இதற்கு பயங்கரவாதம் எனப் பெயரிட்டு குற்றஞ்சாட்டுகிறார்கள். எந்த இஸ்லாமிய வேலைத் திட்டத்தையும், எல்லா இஸ்லாமிய தஃவாவையும், எல்லா இஸ்லாமிய இயக்கத்தையும் தாக்கி முடக்குவதற்கே ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லை வைத்திருக்கிறார்கள்.
கவலைக்குரிய விதமாக அதிகமான முஸ்லிம் ஆட்சியாளர்கள் அவர்களோடு(அமெரிக்கா, மேற்குலகு) இசைந்து போகிறார்கள். ‘ஏன்?’ – ‘முடியாது’ – ‘எதுவரை?’ என அவர்களால் சொல்லவும் முடியாமல் இருக்கின்றது. உண்மையில் இவர்கள் இவ்வாறு இசைந்து இசைந்து செல்வதன் மூலம் மேற்குலகு பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தை ஒழித்தல் என்றெல்லாம் பெயரிட்டு இஸ்லாமிய தஃவாவுக்கும் இஸ்லாமிய வேலைத் திட்டங்களுக்கும் தொடுத்துக் கொண்டிருப்பதற்கே இசைந்துகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
>தீவிரவாதத்துக்கான காரணிகளை எதிர்த்து போராடவேண்டும்:
ஒரு முறை அமெரிக்கத் தூதரகமொன்றில் பணியாற்றும் ஒருவர், என்னை சந்தித்த போது, அவரிடம் “நீங்கள் பயங்கரவாதத்துக்கெதிராக செலவிடும் பில்லியன் கணக்கு டாலர்களுக்கான இறுதிப் பயன் பூச்சியமாகவே இருக்கப் போகிறது. நீங்கள் ஒரு ஒசாமாவை அழிக்கலாம். ஆனால் இன்னும் பல நூறு ஒசாமாக்கள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அழிக்கப்பட வேண்டியது பயங்கரவாதத்தை உருவாக்கும் காரணிகள்தான். அவையே இன்று உலகில் நிலை கொண்டிருக்கும் அநியாயமும் அநீதியுமாகும்; அதனை உங்கள் சுயநலன்களுக்காக நீங்களே செய்துகொண்டிருக்கிறீர்கள்.” எனக் கூறினேன்.
பயங்கரவாத தேசமான இஸ்ரேல், பலஸ்தீனை ஆக்கிரமித்து அதன் மைந்தர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதமே உலகின் மிகப்பெரும் அநீதியாகும். அவர்களது பலஸ்தீன் மீதான தாக்குதல், தீவைப்பு, கொலை, கொள்ளை என ஒவ்வொன்றிலும் அதனோடு கவலைக்குரிய விதத்தில் அமெரிக்காவும் உள்ளது. நான் அவரிடம் மீண்டும் சொன்னேன்: “அமெரிக்காவின் செல்வம், ஆயுதம், வீட்டோ அதிகாரம் ஆகியன துணையின்றி இஸ்ரேலால் எதுவும் செய்யமுடியாது. நீங்கள் உண்மையான பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பினால் இந்த தீங்குமிக்க அநீதிகளை நீக்கிவிட வாருங்கள்.”
பயங்கரவாதத்துக்கெதிராக முழு அளவிலான போர் வெற்றியைத் தர மாட்டாது. மாறாக அது குற்றங்கள் ஏதுமற்ற நிரபராதிகளைத்தான் பாதிக்கும். இது நாம் காணும் உண்மை. நீங்கள் தேடும் பயங்கரவாதிகள் தப்பிக் கொள்வதற்கென ஆயிரம் வழிகள் வைத்திருப்பார்கள்.
>சிந்தனையை, சிந்தனையைக் கொண்டுதான் எதிர்த்துப் போராட வேண்டும்; பயங்கரவாதத்தால் அல்ல:
பயங்கரவாதி என்பவன் வழமைக்குப் புறம்பான ஒரு ஆள். அவனுடன் நாம் போராட முன்பு அவனது உளவியலைக் கற்றுக் கொள்ளவேண்டும். அவனுக்கென்று ஒரு சிந்தனை இருக்கும். அதற்கென போராடுபவன் அவன். அவன் தன் சிந்தனை மீது தீவிர வெறிகொண்டிருப்பான். தன்னோடு மூடுண்டிருப்பான். அவன் சீரான ஆள் அல்ல. ஆனால் அடிப்படையொன்றைக் கொண்டிருப்பான். தான் கொண்ட கருத்துக்காக தன்னையே தியாகம் செய்யத் தயாரோடு இருப்பான்.
ஒரு தீவிரவாதத்தை, அதற்கெதிரான இன்னொரு தீவிரவாதத்தால் வெற்றிகொள்ள முடியாது. அது அவனை அதே தீவிரவாத நிலைப்பாட்டில் மேலும் உறுதிப்படுத்தும். சிந்தனையை சிந்தனை கொண்டுதான் போராட முடியும். அவனை இதற்கு உடன்பட வைத்து, அவன் பிழையான கருத்தில் இருப்பதை விளக்க வேண்டும். இவை உங்களுக்குரிய வேலை அல்ல. இது நமது உலமாக்கள், சிந்தனையாளர்கள், அழைப்பாளர்கள், வஸத்திய்யா மன்ஹஜின் (நடுநிலை சிந்தனை செயல்திட்டம்) படி தீவிரக் கருத்துக்கள், தீவிர சிந்தனைகளுக்கு எதிராகப் போராடுவோர் செய்ய வேண்டிய வேலையாகும்.
இதன்போது மட்டுமே நாம் இலக்கை அடைவோம். இது ஓரிரவு பகலுக்குள் வந்துவிடக் கூடியது அல்ல. தொடர்ந்தேர்ச்சியான உழைப்பு இங்கு தேவை. இது சிந்தனா ரீதியான வேலை மூலமே சாத்தியம். அதன்போது குறித்த அதிகாரி ‘அவ்வாறாயின் சிந்தனை யுத்தமா?’ என்றார். “ஆம். சிந்தனையோடு சிந்தனா ரீதியாகவே போராட வேண்டும்…” என்றேன் நான்.
>நீதி உறுதிப்படுத்தப்படுவதே பயங்கரவாதத்தைத் தடுக்க வழி:
அவரிடம் மேலும் நான் கூறினேன்: “முதலில் அநீதிகளுக்கெதிராக நாம் போராட வேண்டும். பூமியில் நாம் நீதியை நிலை நாட்டவேண்டும். நீதியே அனைத்துக்கும் அடிப்படை.”
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்” (அல்ஹதீத்:25)
பூமியில் நீதி நிலைநாட்டப்பட தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். பூமியில் மனிதர்களிடையே நீதி நிலைநாட்டப்பட்டால் நாம் இன்று காணும் அகோரங்கள் நிறைவுக்கு வரும். தீவிரவாதம், பயங்கரவாதம் முடிவுறும். ஆனால் இது வேறு சில காரணிகளால் பிறந்த தீவிரவாதம் என்பதை அறிவது முக்கியம். அது இம்மக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களின் விளைவுதான் என்பது தெரிந்திருக்க வேண்டும். அதிக அழுத்தம் பெரு வெடிப்பை நிகழ்த்தும் என்பது இயற்பியல் நமக்கு சொல்லித் தருவதுதானே… மக்கள் மீது அழுத்தங்கள் இருக்கக் கூடாது. அது கொதித்துக் கொதித்து இறுதியில் வெடித்துப் பாதக விளைவுகளைத் தரும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையைக் காட்டி அருள்புரிய வேண்டும்!!!
(முற்றும்)
டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி