பலஸ்தீனத்துக்கான தலைமைத்துவம்

palistine1
தொடர்ந்து கொண்டிருக்கும் அரபு வசந்தம், இறுதியில் அரபு, இஸ்லாமிய உலகில் நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தை நோக்கி நம்மைக் கொண்டு செல்லும் என்பது களத்திலே உழைக்கும் பலரும் அவாவுகின்ற, பூர்த்தி செய்யப்பட வேண்டிய எதிர்பார்ப்பாகும். உலக அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் காரணியாக மத்திய கிழக்கு நிலவரங்கள் இருந்து கொண்டிருக்க, எரிந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கின் பிரச்சினைகளின் அச்சாணியாக பலஸ்தீனப் பிரச்சினை காணப்படுகின்றது. இங்கு மிக விரைவாக பலஸ்தீன் விடுவிக்கப்பட வேண்டும்; குத்ஸ் மீட்டெடுக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய உம்மத் விரும்புகிறது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்ரா மேற்கொண்ட மகோன்னத பூமி; ஈஸா(அலை) பிறந்த பூமி; முதல் கிப்லா, மூன்றாவது புனிதஸ்தலம். இன்று அது அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் தீர்க்கப்பட வேண்டிய மையப் பிரச்சினை அது; முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விவகாரம் அது. ஒவ்வொரு இஸ்லாமிய மற்றும் உலகளவிலான விவகாரங்களிலும் ‘குத்ஸ் விவகாரம்’ தாக்கம் செலுத்திகொண்டிருக்கிறது. இதுவே இன்று உலக முஸ்லிம் சகோதரன் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விதைக்கப்பட வேண்டிய விவகாரமாகும்.
சமகால பலஸ்தீனின் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பிரதிநிதித்துவத்தை வழங்கிவரும் ஹமாஸ் அமைப்பின் ஆளுகைக்குள்ளால் இருக்கும் காஸா பிராந்தியம் தொடர்ந்தேர்ச்சியான பத்து வருடங்கள் மிகக் கடுமையான முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. மறுபுறம் இன்னொரு முக்கிய பிரதிநிதியாகக் கொள்ளத்தக்க ஃபதாஹ் அமைப்பின் ஆளுகையில் இருக்கும் மேற்குக் கரைப் பிரதேசத்தினுள் இரட்டை எண் கணக்கான மடங்குகளில் இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு தொடர்ந்தும் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
1930 களில் ஷெய்க் இஸ்ஸுத் தீன் அல்கஸ்ஸாம் போன்ற ஆன்மீகத் தலைமைகளின் முன்னிலையோடு, பலஸ்தீன் மீதான யூத ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஆயுத வடிவெடுத்துத் துவங்கின.
இதன் பின் பலஸ்தீனம் முழுதாக ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு 1948 இல் உருவாக்கப்பட்ட பின் பலஸ்தீனமும் அரபு, இஸ்லாமிய உலகமும் முழுமையாக சுதாகரித்து எழுவதற்கு இடையில், இயக்க முறைப்படுத்தப்பட்ட ஒரு போராட்டக் குழுவாக யாஸிர் அரபாத் தலைமையில் முன்னோடியாகத் துவக்கப்பட்ட ஃபதாஹ் இயக்கம் குறிப்பிடப்படுகிறது. அன்று பலஸ்தீன விடுதலைக்கென வேறு எந்த தளமும் இல்லாத சூழ்நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ சிந்தனைப் பின்புலம் கொண்ட பலரும் அதனோடு இணைந்து போராடினர். யாஸிர் அரபாத் உள்ளிட்ட அதன் ஸ்தாபக உறுப்பினர்களான ஃகலீல் வஸீர், ஸலாஹ் ஃகலப் போன்றோரும் சகோதரத்துவ அமைப்புடன் மாணவப் பருவத்திலிருந்தே தொடர்புகொண்ட அதன் சிந்தனையை உள்வாங்கியிருந்தவர்களாவர். 1950கள் மற்றும் 60களின் கடினமான நாட்களில் பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டமானது உத்வேகம்பெற்ற கட்டத்திலே ஃபதாஹ் உட்பட பல பலஸ்தீனிய இயக்கங்கள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்கொண்டு சென்றன.
பின்னாட்களில், அரபு-இஸ்ரேல் யுத்தம் என்ற ஆறு நாள் தோல்விப் படலத்திலே அரபு நாடுகள் எந்த ‘அரபு தேசியவாதம்’ என்ற செல்லாக் காசுக் கொள்கையை அடிப்படையாக வைத்துப் போராட்டத்தை முன்னெடுத்ததோ அந்தத் தோல்விச் சித்தாந்தத்துக்குள் 1967இன் பின்னர் ஃபதாஹ் அமைப்பும் அதன் தலைமையில் உருவான பலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) படிப்படியாக மூழ்கித் தம்மைக் கரைத்துக் கொண்டனர். இதற்குப் பரிசாக பலஸ்தீனத்தின் பிரதிநிதியாக யாஸிர் அரபாத் உலக அரங்கில்(!) அங்கீகரிக்கப்பட்டு PLO வின் தலைமைப் பீடத்திலும் அமர்த்தி வைக்கப்பட்டார். உச்சகட்டமாக 1974ம் ஆண்டின் நவம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. பலஸ்தீன் என்ற இறையாண்மை மிக்க சுதந்திர தேசத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்க வேண்டிய இடத்தில் ஐ.நா. வில் முதன் முதலாக உரையாற்றிய அரசு சாராத ஒருவர் என்ற அவலமும் அங்கு நடந்தேறியது.
ஃபதாஹ் முன்னோடி அமைப்பொன்றாக இருந்த போதும் படிப்படியே அதன் செயல்பாடுகள் வீரியம் குன்றிக் கொண்டே வந்திருப்பதை பலஸ்தீன ஆக்கிரமிப்பு வரலாற்றை அவதானிக்கும் எவரும் கண்டுகொள்ள முடியும். 1967இன் பின் முற்றாக அரபு தேசியவாதத்திடம் தஞ்சம் புகுந்தது முதல் 1988 பலஸ்தீன தேச பிரகடனம், 1993 ஒஸ்லோ உடன்படிக்கைகள் என ஒவ்வொரு முக்கிய நகர்விலும் பலஸ்தீனத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற வங்குரோத்து அரசியலை ஃபதாஹ் மேற்கொண்டு வந்ததை நாம் காண முடியும்.
இன்றைய தேதியில், ஸ்தாபகத் தலைமைகள் மறைந்து அப்பாஸ், தஹ்லான் போன்றோரின் பிடியில் இருக்கும் ஃபதாஹ் அமைப்பின் கோஷங்களாக தோல்வியடைந்து போன தேசியவாதம், மதச்சார்பின்மை, இரு நாட்டுத் தீர்வுக் கொள்கை என்பன காணப்படுகின்றன. அதே வேளை தமது ஆள் வளங்களை வைத்தே பலஸ்தீன மீட்புப் போரில் செயற்படும் ஏனைய குழுக்களை நசுக்கும் முதிர்ச்சியற்ற கைங்கர்யங்களையும் ஃபதாஹ் அமைப்பின் பிற்கால வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.
அரபு தேசியவாதத்தின் பக்கம் ஒதுங்கி நீர்த்துப் போகத் துவங்கியிருந்த பலஸ்தீன விடுதலைப் போரில், புதிய இரத்தமாக உள்நுழைந்த ஹமாஸ் இயக்கம், அதன் சிந்தனை வீரியம் குறித்து அறிவது அப்போராட்டத்தை மீட்டெடுக்க மாற்றாகத் தோன்றிய புதிய தலைமை மற்றும் அதன் அணுகுமுறைகளை நாம் தெரிந்துகொள்வது அவசியமானது.
மக்கள் மயப்பட்டதாக வெடித்த முதலாவது இன்திபாழா, 2000ம் ஆண்டில் இரண்டாம் இன்திபாழா என்பன; கேம்டேவிட் உடன்படிக்கை, ஒஸ்லோ உடன்படிக்கையோடு பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றமளித்தது. இப்பின்னணியில் 1980 களின் இரண்டாம் பாதியில் ஹமாஸின் போராட்டம் வெறும் கற்கள், கவண்களுடன் துவங்கியது. அது இன்று நவீன ஆயுதக் கண்டுபிடிப்புக்கள், நவீனமான சுரங்க அமைப்புக்கள் என பிரமாண்ட பரிணாமத்தை எட்டியுள்ளது.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்தீனுக்கான பிரிவாகக் கருதப்படும் ஹமாஸ் அமைப்பு அரசியல் இஸ்லாத்தின் இக்காலத்தின் முக்கிய அடையாளமாகும். அதன் அரசியல் துறைத் தலைவர் காலித் மிஷ்அலின் நுணுக்கமான நகர்வுகள் அரசியல் இஸ்லாமின் முக்கிய பாடங்களாகப் பிற்காலத்தில் கொள்ளப்படுவது நிச்சயம். இன்றைய ஹமாஸ் அரசியல் போராட்ட இயக்கமாக மாத்திரமன்றி பாரிய மக்கள் திரளை ஆதரவாகப் பெற்றுள்ளதோடு பலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமிய உலகின் மையப் பிரச்சினையாக முன்வைத்து பலஸ்தீனருக்கான போராட்டமாக மட்டும் இதனைப் பார்க்காது முழு உம்மத்தினதும் போராட்டமாக இதனை முன் கொண்டு செல்வதில் பெரும் வெற்றிபெற்று வருகிறது. 1948 க்கு முந்தைய ஒற்றை தேசமான பலஸ்தீனத் தீர்வினையே அது தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
ஃபதாஹ் போன்ற அமைப்புக்கள் தேசியவாதம், மதச்சார்பின்மையை வைத்து நிலத்துக்கான போராட்டமாக முன்னெடுத்து பெறாத வெற்றி ஹமாஸ் முன்னெடுக்கும் போராட்டத்துக்குக் கிடைத்து வருகிறது. அரசியல், ஆயுதம், சிந்தனை, மக்கள் திரள் என பல முனைகளிலும் பலஸ்தீன நிலத்துக்கான போராட்டமாக அல்லாமல் இஸ்லாமிய அகீதாவை முன்னிறுத்தி முஸ்லிம்களது முதலாவது கிப்லாவை; மூன்றாவது புனிதஸ்தலத்தை மீட்கும் போராட்டமாகவே ஹமாஸ் முன்கொண்டு செல்கிறது.
ஹமாஸின் அனுபவம்:
இப்பாதையில் ஹமாஸ் எதிர்கொண்டுவரும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பலஸ்தீனை ஆள்வதற்கான சந்தர்ப்பமொன்று 2006ம் ஆண்டில் வழங்கப்பட்டதிலிருந்து காஸா பிரதேசத்தை நிர்வகித்துவரும் ஹமாஸ், தொடர்ந்த மூன்று போர்களை காஸா பள்ளத்தாக்கில் மீது சந்தித்துள்ளது. அவை ஒவ்வொன்றுமே வெவ்வேறான காலப் பகுதிகளில் சிறந்த சூழலோ அல்லது பாதகமான சூழலோ எதிலும் ஹமாஸ் மற்றும் காஸா மக்கள் போராடத் திறன்பெற்றவர்கள் என்ற செய்தியை உலகுக்கு சொன்னது.
2008/09 முதல் போர் தொடுக்கப்பட்ட போது ஹமாஸ் எவ்வித உதவியும் இல்லாமலே எல்லாப் புறமும் எதிர்ப்புகளாக இருந்த காலப்பகுதியில் கடினத்துடன் எதிர்கொண்டது. பின்பு 2012இல் இரண்டாவது யுத்தம் தொடுக்கப்பட்ட போது அரபு வசந்தம் அதன் ஆரம்பகட்ட சுபசோபனங்களுடன் இருந்தது. எகிப்து முழுமையான ஆதரவை வழங்கியது.
அடுத்ததாக 2014 யுத்தம் வந்தது. அரபு வசந்தத்தின் எதிர்ப் புரட்சிகள் நிகழ்ந்த சூழல் அது. அப்போது பலரும் ‘ஹமாஸ் அதன் பழைய தோழமைகளை இழந்துவிட்டது; அது புதிய தோழமைகளை அடைந்துகொள்ளவில்லை’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனாலும் நாம் எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது.
இவை, அரசியல்-ஆயுத ரீதிகளாக ஆதரித்துப் பலப்படுத்துவதற்கு தம்மை சூழ ஆதரவாளர்கள் இருந்தபோதிலும் இல்லாத சூழ்நிலைகளிலும் பலஸ்தீன மக்கள் சாத்தியமற்றவைகளையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகிறது.
அரபு வசந்தம் சாதகமான கட்டத்தில் இருந்த 2012ல் இரண்டாவது யுத்தத்தின் போது, எகிப்து, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் மூலம் சிறந்த தலைமை வழங்கப்பட்டது. 2012 போரின் போது அரபு லீக் செயலாளர் காஸாவுக்கு சென்றார்; எகிப்து பிரதமர் காஸாவுக்கு சென்றார்; துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் காஸாவுக்கு சென்றார்.
அப்போது எல்லோரும் பலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு என்ன நிபந்தனைகளை இடுகின்றனர் என்றே கேட்டனர். இஸ்ரேல் மீதுதான் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது; ஹமாஸ் மீது அல்ல; இதுவொரு பெரிய மாற்றம். அப்போது இலக்குகளை அடைந்துகொள்வதில் அந்த குறுகிய கால போர், பெரு வெற்றிபெற்றது. முழு அரபு-இஸ்லாமிய சமூகங்களும் ஒன்றிணைந்து நிற்கும் போது பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் எந்த வடிவம் பெற்று இருக்கும் என்பதற்கான சிறு உதாரணமாக அது காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட பந்திகள் ஹமாஸின் அனுபவமாக அரசியல் போராட்டக் களத்திலும் ஹமாஸின் முதிர்ச்சி மிக்க அணுகுமுறைகளாக உஸ்தாத் காலித் மிஷ்அல் பகிர்ந்துகொண்ட அம்சங்களாகும். ஹமாஸ் தன்னை எப்போதும் மீள்பரிசீலனை செய்துகொண்டே இருக்கிறது.
ஹமாஸ் தற்போதைய நிலையில் கவனமாகத் தன்னை வரையறுத்துப் போராடும் பரப்பை காலித் மிஷ்அலின் வார்த்தைகளை இவ்வாறு வழங்கலாம்:
(1) நாம் பலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கம். பலஸ்தீனை அதனை ஆக்கிரமித்திருப்போரிடம் இருந்து மீட்கப் போராடுகிறோம்.
(2) பலஸ்தீன விவகாரத்தை, குத்ஸ் விடயத்தை இஸ்லாமிய உம்மத்தின் முதன்மைப் பிரச்சினையாக உம்மத்திடம் முன்வைத்து அதனைப் பேணுதல். இதனை அயலகப் பிரச்சினைகளுக்குள் உள்நுழைக்காதிருத்தல்.
(3) அடுத்து பிராந்தியத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்குள் உள்நுழையாமல் இருக்கும் அதே நேரம் அவ்விடயம் குறித்த பொறுப்பான, பண்பான நிலைப்பாடொன்றை அடிப்படையில் கொண்டிருப்போம். மக்களுடன் அவர்களது உரிமைக்காக இருப்போம்; அவர்களது வேதனைகளை அறிந்தவர்களாக இருப்போம். உம்மத்தின் ஒற்றுமையில், நலன்களில் கவனத்துடன் இருப்போம். இவை இயல்பானவை; இவை ஹமாஸினதும் பலஸ்தீன மக்களினதும் நிலைப்பபாடுகள்; ஹமாஸ் ஒரு மக்கள் இயக்கம்; அது மக்களது எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; நாம் ஒரு நீதியான விவகாரத்துக்காகப் போராடுகின்றவர்கள். நாம் அநியாயத்துடன் கைகோர்க்கக் கூடாது. சிலர் இதன் போது மக்களுக்கு எதிராக இருக்கும் படி கோரிய போது நாம் மறுத்தோம்.
(4) அடுத்து பிராந்தியத்தின் நாடுகள் மற்றும் சக்திகளோடு அரசியல் ராஜதந்திர உறவுகளைப் பேணும் போது, நமது நலன்கள் மற்றும் அத்தியாவசியங்களுக்கிடையே சமநிலை பேண முயற்சிப்போம். அதன் போது நலன்களுடன் நமது அடிப்படைகள் முரண்படும் போது நமது அடிப்படை பண்பாட்டுப் பெறுமானங்கள் மீதே திரும்புவோம். சிலர் தமது மக்களுக்கெதிராக நம்மை நிற்குமாறு கோரிய பொழுதில் நாம் நமது நிலைப்பாட்டை எடுத்து, இவற்றுக்கான விலைகளை கடந்த காலங்களில் செலுத்தியுமிருக்கிறோம். அவை குறித்து கடந்த காலங்களில் ஆழமான வாதங்கள் பல எழுந்தும் உள்ளன.
இந்த சுருக்கமான வரையறைகள் ஹமாஸ் பலஸ்தீனத்துக்குக் கொடுக்கும் பெறுமானம் மிகுந்த தலைமைத்துவத்தை புரியக் கூடியதாக இருக்கும். மாற்றீடு என்பது தாம் மட்டுமல்ல தாம் பலஸ்தீனுக்கான தலைமையைக் கொடுக்கும் பல தரப்பினருடன் தாமும் ஒரு பங்கேற்புக் குழு; முக்கியமான பங்கேற்புக் குழு என்ற அடையாளத்துடன் ஹமாஸ் பலஸ்தீனத்துக்கான தலைமையைக் கொடுத்து வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. ஹமாஸ் அதன் இலக்கை அடைந்துகொள்ளும் நாள் தொலைவிலில்லை.
“அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபமாகவே இருக்கின்றது”
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s