இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் -1

download
(இந்தப் புதிய தொடர் டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி அவர்களது “அத்தகாஃபுல் அல்இஜ்திமாஇ ஃபி ழவ்இஷ் ஷரீஆ அல்இஸ்லாமிய்யா” என்ற அவரது விரிவுரைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பாகும். இத்தொடரில் இஸ்லாம் முன்வைக்கும் கட்டாய சமுதாய பாதுகாப்பு திட்டங்கள், ஜகாத், இறைபாதையில் திட்டமிட்டு செலவளித்தல் போன்ற தலைப்புக்களில், நவீன உலக மாற்றங்களையும் கவனத்திற் கொண்டு ரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறார். இத்தொடர் நமது சமுதாய நல நிதித் திட்டங்களில் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கிறோம்.)
இஸ்லாம் முன்வைக்கும் சமுதாய பாதுகாப்புத் திட்டமானது, தகாஃபுல் என்ற பதத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கருத்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாளராக, பொறுப்பாளராக இருப்பதாகும். இது அவரவர்க்கு இயன்ற சக்திக்குட்பட்டதாக, இயலுமைக்குட்பட்டதாக இருக்கும்.
இதன் கருத்து என்னவெனில் ஒரு மனிதன் ஏனையோரிடமிருந்தும் விலகி, தனித்து வாழமுடியாது என்பதாகும். நான் மட்டும், தான் மட்டும் என எல்லோரும் கூவத் துவங்கினால் உலகம் பாழடைந்துவிடும். இந்த சுயப்பிரலாபம், தன்னைப் பற்றி மட்டுமேயான எண்ணம் இருக்கக் கூடாது; அதனை இஸ்லாம் விரும்பவும் இல்லை.
>முதலாளித்துவத்தின் அடிப்படை:
முதலாளித்துவ ஒழுங்கானது தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்; தனி மனித இலாபங்களை கருத்திற்கொண்டே அது எழுந்தது. தனிமனிதனே சமூகத்தின் அடிப்படை; அவனே அனைத்துக்கும் அடிப்படை; எனவே வாழ்வு முழுதையும் தனி மனிதனின் நலன்களை வைத்துத் தான் அணுகுவர். அது உடனடியாகக் கிடைக்கக் கூடிய சடரீதியான உலக ஆதாய நலன் மட்டுமே; ஒருவர் மூலம் தமக்குப் பயன் ஏதும் கிடைக்கும் அளவுக்கே தவிர மற்றவர்கள் எவர் குறித்தும் அங்கு கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு பயன், பிரயோசனம் ஏதும் இல்லாதபோது அந்த ‘மற்றவர்கள்’ பெறுமானம் கொடுக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் கருத்திற் கொள்ளப்படவோ, அவர்களது உரிமைகள் குறித்து சிந்திக்கவோ மாட்டார்கள்.
மாற்றமாக அத்தகையோர் காலுக்குக் கீழால் மிதிக்கப்படுவதும் அவர்களை வேட்டைப் பற்கள் கொண்டு குதறுவதுமே நடக்கும். மனிதனுக்கென ஒரு மாளிகை கட்டமாட்டார்கள்; இருப்பதை மனித இரத்தத்தால் அலங்கரிப்பார்கள். இதுவே முதலாளித்துவ ஒழுங்கு; சடரீதியான சுயநல இலாபங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழும் ஒழுங்குதான் அது. நான் மட்டுமே; என்னைத் தவிர வேறேதும் இல்லை என்பதே அது.
காரூனின் சமுதாயம் அவனுக்கு உபதேசித்த போது இந்த சிந்தனைதான் அவனது மூளைக்குள்ளும் குடிகொண்டிருந்தது. அல்குர்ஆன் அதனை விவரிக்கிறது: “அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள். “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் (உனக்கு விதித்திருக்கப்பட்டுள்ள) உனது பங்கையும் மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).” (ஸூரத்துல் கஸஸ்:76-77)
>செல்வந்தர்களுக்கு ஐந்து உபதேசங்கள்:
காரூனுக்கு அவனது சமுதாயம் ஐந்து வகை உபதேசங்களை செய்தது. அவை மிகப் பெறுமதியான உபதேசங்கள். தன்னிடமிருப்பது கொண்டு மட்டுமீறிய ஆணவம் கொள்ளக் கூடாது என்பதில் அந்த உபதேசங்கள் துவங்குகின்றன. அவன் இவ்வுலகின் மீது தனக்குள்ள பங்கை மறந்துவிடக் கூடாது. பூமியில் சீர்கேட்டை உண்டுபண்ணக் கூடாது. அல்லாஹ் அவனை மேம்படுத்தியதற்கொப்ப அவனும் மற்றோருடைய மேம்பாடுகளில் ஈடுபாடு காட்டவேண்டும்.
இந்த உபதேசங்களுக்கு வரம்புமீறிய காரூனின் பதில்கள் எவ்வாறு இருந்தன என்பதை நாம் நோக்க வேண்டும். “என்னிடமுள்ள அறிவினாலேயே தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” என அவன் பதில் தந்தான் என்கிறது அல்கஸஸின் 78வது வசனம். பெரும் பலம் கொண்டவர்களால் சுமந்துசெல்லப்படும் அளவு பெரும் பொக்கிஷமான செல்வங்கள் தனது திறமையின் காரணத்தினாலேயே தான் சம்பாதித்துக் கொண்டதாக அவன் வாதித்தான். தான் தன்னுடைய மதிநுட்பம், அனுபவம், தன்னிடமுள்ள அறிவினாலேயே இவற்றைப் பெற்றுக்கொண்டதாக அவன் கூறினான்; தனக்கு உபதேசிக்க எவருக்கும் அருகதையில்லை; நல்லமுறையில் நடக்குமாறு கூற, பூமியில் குழப்பம் விளைவிக்காதிருக்கும்படி கூற தகுதியில்லை; நான் விரும்புவது போன்றே நான் நடந்துகொள்வேன்’ என்றான் அவன்.
இத்தகைய காரூனிய சிந்தனை கொண்டவர்கள் தமக்கு ஏனையோர் மீது பொறுப்புள்ளது என்றோ அல்லது மற்றவர்களுக்கு தன் மீது உரிமை உள்ளது என்றோ எண்ணுவது சாத்தியமற்றது. அடுத்து எளியவர்களைப் பராமரிக்க வேண்டுமென்றோ, வறியவர்களைக் கைதூக்கி விடவேண்டுமென்றோ எண்ணுவதும் சாத்தியமற்றது. ஏனெனில் காரூனிய சிந்தனை இத்தகு மனிதநேயப் பார்வையை விட்டும் முற்றுமுழுதாக மாறுபட்டது.
இதே சிந்தனைதான் மத்யன்வாசிகளிடமும் காணப்பட்டது. நபி ஷுஐப்(அலை) அவர்கள் தனது சமுதாயத்துக்குக் கூறியதை அல்குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது: ” அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். (என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். “நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார். (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது?” (ஸூரத்து ஹூத்: 84-87)
அவர்களே செல்வங்களுக்கு பூரண உரித்துடையவர்கள் தாம் மட்டுமே போன்று தம்மைக் கருதிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்; செல்வம் தொடர்பில், அதன் உரிமை பற்றி, அதன் வளர்ச்சி குறித்து, அதன் அழிவு, விநியோகம் என எவரும் தம்மிடம் எதுவும் கேட்கலாகாது எனும் மனப்பாங்கிலிருந்தனர். அது விடயத்தில் அவர்கள் பரிபூரண சுதந்திரவான்களாகத் தம்மைக் கருதிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஷுஐப்(அலை) அவர்களுக்குக் கூறியதைப் பாருங்கள்: “ஷுஐபே! சிலவேளை நீர் தொழும் அத்தொழுகைதானா உனக்கு இவற்றைக் கூறச் செய்தது? நமது செல்வங்களில் நாம் விரும்பியவாறு செய்வதைத் தடுப்பதைத் தூண்டியது”
இவ்வகையான சிந்தனை உள்ளவர்களால் சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது; அத்தகையோரிடத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு தடைகளே இருக்கும். இதுவே காரூனிய ஒழுங்கமைப்பு; தொன்மையான மத்யன் வாசிகளது ஒழுங்கும் இதுவே; நவீன காலத்தின் முதலாளித்துவ ஒழுங்கும் இதுதான். எல்லோரும்  சமூக பாதுகாப்புத் திட்டங்களை மறுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பார்வையில் (அவ்வாறு பார்ப்பார்களாயின்!!!)  சமூக பாதுகாப்புத் திட்டங்கள் என்பது மேலதிகமாக இருப்பதில் ஏதோ சிலதை சிற்சில ஏழைகள், தேவையுடையோருக்கு அவ்வப்போது கொஞ்சமாகக் கொடுப்பது போன்றுதான் நோக்குவார்கள். சிறு நன்கொடையாக அன்றி அது அவர்களிடம் கட்டாயமானதாகவோ அவசியமானதாகவோ இருக்காது.
தகாஃபுல் – சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் அரபு இணைவைப்பாளர்களிடத்தில் இன்னுமொரு சிந்தனை இருந்தது. அது ஏழைகள், பலவீனர்களுக்கு தம் செல்வத்தில் எந்த வகையிலாவது உரிமை உள்ளது எனக் கூறுவார்கள். அதோடு அவர்கள், ‘அல்லாஹ்தான் நாம் பணக்காரர்களாக இருக்கும்படி நாடியவன்; அவனே மற்றோரை ஏழையாக இருக்கவும் நாடியவன். அவர்களை செல்வந்தர்களாக்கி உணவளிக்கவும் அவன் நாடினால் அவ்வாறு வசதியளித்து உணவும் அளித்திருப்பான். ஆனால் அவ்வாறு அவன் செய்யவில்லை; அது அவர்கள் அவ்வாறு இருப்பதையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதைக் காட்டுகிறது. இப்படியிருக்க நாம் எவ்வாறு அல்லாஹ் விதித்ததை மீறுவது? அவர்களை இந்த நிலையிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிப்பது? அவர்களை அந்நிலையில் வைத்திருக்க நாடியவன் தான் அவ்வாறு வைத்திருக்கிறான்’ என்பார்கள்.
இதே அவர்களது வாதமாகவும் இருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அவர்களைக் கண்டித்து அவர்களை தெளிவான வழிகேட்டில் இருப்பதாக வர்ணிக்கிறது: “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால்…” அதாவது ஏழைகளுக்கும் தேவையுடையோர்க்கும் அளிப்பதற்கு வேண்டப்பட்டால் “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள் என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்” (ஸூரத்து யாஸீன்: 47)
இவ்வகைக் கோணல்மானல் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இஸ்லாம் தகாஃபுல் எனும் சமுதாய பாதுகாப்புத் திட்டத்தை கட்டாயக் கடமைகளுள் ஒன்றாக ஆக்கிவைத்துள்ளது. இஸ்லாம் ஏவும் அடிப்படைக் கடமையாக சமுதாய பாதுகாப்புத் திட்டம் அமைந்துள்ளது.
டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்
(தொடரும்… இன்ஷா அல்லாஹ்)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s