இஸ்லாம் மருத்துவத்தை ஊக்குவிக்கின்றது; ஆனால்…

arab-spring11

அன்புக்குரியவர்களே!!!

நீங்கள் தொடர்ந்து வாசிக்கப் போகின்ற இந்தச் சிறிய ஆக்கத்தை நான் நேசிக்கும் வெலிகாமத்து மக்களின் நன்மைக்காக எழுதுகிறேன்… நமது எதிர்காலத் தலைமுறையினரான நமது குழந்தைகளின் சுகவாழ்வு, ஆரோக்கியத்தில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்ற நன்னோக்கில் எழுதுகிறேன்.

 

நமது வெலிகாமத்தின் சகோதர, சகோதரிகள் குறிப்பாக கண்ணியத்துக்குரிய தாய்மார்கள் தம் குழந்தைகளின் சுக நலன் தொடர்பில் அண்மைக் காலமாக ஒரு சிலரால் குழப்பிவிடப்பட்ட பின்னணியில் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டும்; அறிவுபூர்வமற்று சிலர் முன்வைத்துச் சென்ற கருத்துக்களால் நமது அடுத்த சந்ததியின் ஆரோக்கியம் கெட்டுவிடக் கூடாது; அடுத்த பரம்பரை நோஞ்சானும் நோயாளியுமாகிவிடக் கூடாது என்ற அடிப்படையில் கீழ்வரும் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

 

ஆம். இந்த ஆக்கம் கடந்த திங்கள் (14ம் தேதி) சில மௌலவிமார்களால் இஸ்லாமிய மருத்துவ மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆறேழு பயான்களின் பின்னால் குறிப்பாக சில கண்ணியத்துக்குரிய தாய்மார்கள் தெளிவு வேண்டிய அம்சங்களுக்கான சந்தேக நிவர்த்திகளான எழுத்துக்களாகும்.

 

இஸ்லாமிய மருத்துவ முறை என்று ஒன்றிருக்கிறதா? கருஞ் சீரகம் மருந்தா? தேனில் நிவாரணி இருக்கிறதா? ஸம் ஸம் நீரில் ஆரோக்கியத்தைப் பெற முடியுமா? என்றெல்லாம் நாம் தேடினால் ஆம் நிச்சயமாக அவையெல்லாம் உண்டு. அல்குர்ஆன் வசனங்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வந்த துஆக்களையும் கொண்டு ஓதியும் நாம் நிச்சயம் நிவாரணம் தேட முடியும்.

 

ஆனால் அந்த பயான் அன்று பலவாறு வலியுறுத்தப்பட்ட குழந்தைகள் நோய்த் தடுப்பு ஊசிகள் (உதாரணம்:BCG) எல்லாம் பயங்கரமானவை; குழந்தைகளை நோயாளியாக்கக் கூடியவை போன்ற அனைத்துக் கருத்துக்களுமே பயங்கரமான போலிக் கருத்துக்களாகும்.

 

இவ்வகைக் கருத்துக்கள் எல்லாம் அந்த மௌலவிகள் எங்கிருந்து பெற்றிருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்தால் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர் என்பவர் பேசிய உரைகள் அடங்கிய ஏழெட்டு சீடிக்களில் இருந்தாகும் என்பது தெளிவாகப் புலப்படும். குறித்த ஹீலர் பாஸ்கரின் உரைகளில் யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டவற்றில் சிலதின் லிங்க் களைக் கீழே தருகிறேன். இவற்றைக் கிளிக் செய்து வீடியோக்களைப் பார்ப்பதனூடாக அவரது உரைகளை கொப்பி பண்ணியே நமது மௌலவிகள் பயான் செய்தனர் என்பது இலகுவாக விளங்கிவிடும்.

வக்சீன் (தடுப்பூசி) சம்பந்தமான இந்த ஹீலர் பாஸ்கரின் வீடியோ அனைத்தும் அவரது கப்ஸாக் கதைகள்தான். உண்மையோ, ஆய்வு முடிவுகளோ எதுவுமே இல்லை. இவைதான் சில நாட்களுக்கு முன்னால் பயான் என்ற பேரில் நாம் கேட்டவை:

( https://m.youtube.com/watch?v=rCk3dC8HkoQ&itct=CBAQpDAYBiITCPTBwYPmrdACFciXHAod3JoMX1IVaGVhbGVyIGJhc2thciB2YWNjaW5l&client=mv-google&gl=LK&hl=en )

( https://m.youtube.com/watch?v=FYXizlOnKl8&itct=CBUQpDAYASITCPTBwYPmrdACFciXHAod3JoMX1IVaGVhbGVyIGJhc2thciB2YWNjaW5l&client=mv-google&gl=LK&hl=en )

( https://m.youtube.com/watch?v=daQa-gY-b_Q&itct=CBQQpDAYAiITCPT )

( https://m.youtube.com/watch?v=ZJsIGQK-zD0&itct=CBYQpDAYACITCPTBwYPmrdACFciXHAod3JoMX1IVaGVhbGVyIGJhc2thciB2YWNjaW5l&client=mv-google&gl=LK&hl=en )

 

உண்மையில் மேலுள்ள வீடியோக்களாக இருக்கலாம் அல்லது அந்த பயான்களில் கூறப்பட்ட விடயங்களாக இருக்கலாம் அனைத்தும் வெறும் கற்பனையாக ஊகமாகக் கூறப்பட்டதே தவிர அறிவுபூர்வமாக ஆதாரத்துடனும் உதாரணங்களுடனும் நிறுவப்பட்டவையல்ல. குறிப்பாக குழந்தைப் பிறப்பு, தடுப்பூசி சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்கள் கூறுவது பின்பற்றப்பட்டால் அடுத்த சந்ததியில் பெரும் அழிவு ஏற்படுவதைத் தடுக்க அல்லாஹ்வே போதுமானவன்.

 

ஆம்… அடுத்து சிறுவர் நோய்த் தடுப்பூசிகளில் BCG குறித்து மருத்துவமும் அறிவியலும் என்ன சொல்கிறது என்று மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்:

BCG என்றால் என்ன?

குழந்தைகள் பிறந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறும் முன் அடிக்கப்படும் தடுப்பூசியே BCG.

இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

இது பசுக்களில் தொற்று நோயை ஏற்படுத்தும் Mycobacterium bovis என்ற பக்டீரியாவை வலு இழக்கச் செய்து தயாரிக்கப்படுகின்றது. Mycobacterium bovis மனிதனில் தொற்று நோயை ஏற்படுத்தாது.

BCG எந்த வகையில் குழந்தைகளுக்கு முக்கியமானது?

BCG தடுப்பூசி மனிதனில் Mycobacterium tubrculosis (காச நோய்க்குரிய பக்டீரியா) தொற்று ஏற்படுவதை 20% தடுக்கும், காச நோய் ஏற்படுவதை 60% தடுக்கும், (5 வயதிற்குக் குறைந்த) சிறு குழந்தைகளில் மாத்திரம் ஏறபடக்கூடிய மூளைக் காசம் (Cerebral TB) என்ற நோய் நிலைமையை 100% தடுக்கும்.

இலங்கையில் இத்தடுப்பூசி எந்தளவு முக்கியத்துவமுடையது?

இலங்கை சூழலில் காச நோய்க்குரிய பக்டீரியா பரவலாக இருப்பதால், குழந்தைக்கு BCG அடிக்காமல் வைத்திருப்பது உயிராபத்தை ஏற்படுத்தலாம்.

அண்மை இறந்தகாலத்தில் இலங்கையில் Cerebral TB காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்பட்டது கிடையாது. எனினும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரத்தின் வலிமை காரணமாக BCG அடிக்கப்படுவது தவறவிடப்பட்டால் அண்மை எதிர்காலத்தில் ஏற்படலாம். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாக்கட்டும்.

தகவலுக்கு நன்றி: Doctor Husni

 

நிலைமைகள் இப்படியிருக்க குறித்த பயானொன்றில் BCG தடுப்பூசி போட்டால் 14 வகை நோய் வருமென்றும் அதில் முதலாவது காச நோய் என்றும் தலைகீழ் தகவலொன்று சொல்லப்பட்டது. அது WHO எனும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை என்று கூட சொல்லப்பட்டது. நான் உடனடியாக WHO வின் இணையதளத்துக்கு சென்று தேடிப் பார்த்தேன் அப்படி எந்த அறிக்கையையுமே அங்கு காணமுடியவில்லை. இதோ அவர்களது இணையதளச் சுட்டியின் BCG தடுப்பூசி குறித்த அறிக்கை –  http://www.who.int/biologicals/areas/vaccines/bcg/en/ – நீங்களும் சென்று கிளிக் பண்ணிப் பாருங்கள்… அவ்வாறு BCG பயங்கரமானது என்று எந்தக் குறிப்புமே அங்கு இல்லவே இல்லை. மாற்றமாக BCG காச நோயை விட்டும் குழந்தைகளைப் பாதுகாக்க அத்தியாவசியமானது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மருத்துவம் என்பது பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய துறை. இன்று நமக்கே நன்றாகத் தெரியும் மருத்துவத் துறைக்குப் படிப்பதுதான் மிகக் கடினமானது. நமது குடும்பங்களிலே இருக்கும் மிகத் திறமையான மாணவர்கள் தான் A/L இல் Science படித்து மருத்துவத் துறைக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். பல காலங்களுக்கு முன்னாள் நமது உம்மும்மா மாரின் காலத்தில் எத்தனை எத்தனை குழந்தை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையெத்தனை போலியோ, மலேரியா போன்ற நோய்கள் வந்தோரைக் கண்டிருப்போம். நமது உம்மும்மா மாரிடம் கேட்டால் சொல்வார்கள். இன்று மருத்துவம் வளர்ச்சியடைந்து குழந்தை மரணங்கள் அரிதாகி மேற்குறித்த நோய்களும் இல்லாது போய்விட்டன. மருத்துவம் வளர்ந்ததனால் முன்பு கஷ்டமான பல சிகிச்சைகளும் இன்று இலகுவாக்கப்பட்டுள்ளன. அல்ஹம்து லில்லாஹ்…

 

சற்று நிற்க! நம் நாட்டின் கல்பிட்டி மற்றும் சில பகுதிகளில் மருத்துவம் வேண்டாம் நாம் வீட்டிலேயே இஸ்லாமிய வைத்தியம் செய்வோம் என முரண்டு பிடித்து கடைசியில் தாயும் பிள்ளையும் மௌத்தாகிப் போன நெஞ்சைப் பதறச் செய்த நிகழ்ச்சிகளும் நடந்தன. பயான் கேட்டு மாதாந்த மருத்துவப் பதிவுகளோ தாய்-சேய் நலப் பதிவுகளோ இன்றி சுயமாகப் பிரசவம் பார்த்து BCG யும் வேண்டாம் என்ற முட்டாள் கணவன் இன்று கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார். அக்கணவர் இக்கொலைக்கு நிச்சயம் மறுமையில் அல்லாஹ்விடத்திலும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். (அவற்றுள் ஒரு செய்திக் குறிப்பின் லிங்க்: http://vidivelli.lk/article/2881-மருத்துவ-சிகிச்சையின்றி-குழந்தை-பிரசவித்த-தாய்-எட்டு-நாட்களின்-பின்னர்-மரணம்-.html )

 

அவ்வாறாயின் ‘மருத்துவத் துறையில் தவறுகளே இல்லையா?’ என்று கேட்டால் ‘Never’. மனிதன் தனக்கு அல்லாஹ் தந்த அறிவால் இத்துறையை வளர்த்துக் கொண்டு செல்கிறான்… ஆனால் மருத்துவத் துறையிலும் போலி டாக்டர்களும் மருந்துத் திருடர்களும் உள்ளனர்தான். இலங்கையில் இருக்கின்ற 20,000 க்கும் அதிகமான டாக்டர்களில் ஆயிரத்துக்கும் அதிக அளவில் போலி டாக்டர்கள் இருப்பதாக அறிக்கைகள் உண்டு. (நல்லா பாருங்க எல்லாரும் பொது மக்கள ஏமாற்றி பிழைக்கத்தான் பாக்கிறாங்க. மக்களே கவனம்!) போலி டாக்டர்களிடம் போய் மாட்டிக் கொண்டு விட்டு முழு மருத்துவமுமே போலி, அதெல்லாம் யூத சதி என்று மைக் பிடித்து அன்னவுன்ஸ் பண்ணுவது எல்லாமே ஓவர் பில்டப்பு.

அடுத்து பாருங்கள் நம் மத்தியில் (நம் வெலிகாமத்திலும் தான்) இஸ்ம்-அஸ்மா, ஓதியெறக்குற, தேன் மருத்துவம், கலப்படக் கருஞ்சீரகம், ஜின் வைத்தியம் என்ற பல பெயர்களில் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆசாமிகள் பலர் உள்ளனர் தானே… அதற்காக ஓதிப் பார்க்கிறதெல்லாம் பொய் என்று நாம் எப்போதாவது சொல்லுவோமா? இஸ்லாமிய மருத்துவம் பொய்யானது என்போமா? இல்லை தானே…

 

உண்மைக் கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கும் போது சிலர் பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் இன்பொக்ஸுக்கு வந்து அடிப்பேன், உதைப்பேன் என்றெல்லாம் மிரட்டப் பார்க்கின்றனர். எனினும் நாம் நன்கறிவோம் ‘அநியாயத்துக்கும் பொய்க்கும் எதிராகக் குரல் கொடுப்பது உயர்ந்த ஜிஹாதாகும்’. என்னுடைய மக்களின் நன்மைக்காக இதனை எழுதுகிறேன். இதைத் தவிர வேறு வகையில் மிம்பர்கள், உரைகள், வகுப்புகள் என எந்த வகையில் வாய்ப்புக் கிடைத்தாலும் உங்களுக்கு நல்ல விடயங்களை அடையசெய்வேன். இன்ஷா அல்லாஹ்…

 

நமது வெலிகாமத்தின் வெலிப்பிட்டி, கப்புவத்தை முனைகளிலிருந்து துவங்கி பாலத்தடி, மதுராப்புர, தெனிப்பிட்டி, அரூஸியா மாவத்தை, மலப்பலாவ, பூத்தெருவு, கொஹுனுகமுவ வீதி, கல்பொக்க, கோட்டகொட என ரவுண்டு கட்டி பழையதெரு, கொரட்டுவ எண்டு சுத்தி வந்து நின்டோம் என்றால் எஙட ரெண்டு கையிலயும் இருக்கும் விரல்களால் இங்குள்ள வைத்தியர்களை எண்ணிப் பார்க்கலாம்; இன்ஜினியர்கள், மெனேஜர்கள், லோயர்கள் எல்லாமே மிக மிகக் குறைவு. சமூகத்தின் பிரச்சினைகளை சிந்தித்து ஆய்வு ரீதியான தீர்வுகளை முன்வைக்கும் சமூக விஞ்ஞானிகள் எவருமே இல்லை.

ஆனால் அதே கப்புவத்த, வெலிப்பிட்டி தொடங்கி கொரட்டுவ, பழையதெரு வரைக்கும் இன்டர்நெஷனல் லெவல்ல ‘சோறு’ ஆக்கிப் போடக் கூடிய தரம் மிக்க கோக்கிமார் 200 க்கும் மேல ஈக்கிறாங்க என்பதை யோசிச்சிப் பார்த்தாலே நமது படிப்பு மட்டம், கல்வி மட்டம் எல்லாம் எந்த நிலையில் இருக்குது என்ற கண்ணீர்க் கதை பிரதிபலிக்கின்றது.

 

இத்தகையதொரு சமூகத்தின் மத்தியிலேயே நாம் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறோம். ஏச்சுப் பேச்சுக்கள் நிறைய வரும் என்பது தெரியும். அதைவிடவும் அந்த பயானில் கூறப்பட்ட போலி அம்சங்களைக் கண்மூடி நம்புவோர் எதிர்காலத்தில் எவ்வித அபாயங்களுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவரது நன்மைக்காகவும் அனைத்தையும் ஆய்வு செய்து ஆதாரத்துடன் தகவல்களை இங்கு பதிகிறோம். உலகமே முன்னேறிக் கொண்டிருக்க நமது வெலிகாமம் தூங்குவதா? நம் அனைவரது முன்னேற்றத்துக்கும் ஈருலக ஈடேற்றத்துக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

 

மற்றபடி எனக்கு எந்த யாருடனும் பிரச்சினையும் இல்லை. எனக்கு வம்பளக்கவோ வம்பு வளர்க்கவோ எந்தத் தேவையுமே இல்லை. சிந்திப்போம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

அல்லாஹ் கூறுகிறான்: “எந்த ஒரு சமூகத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை” (அர்ரஃத்:11)

 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்” (அல்இஸ்ரா: 82)

ஆம். அல்குர்ஆன் மனிதர்களுக்கு ஓர் அருளும்தான்; அனைத்து வகைப் பிரச்சினைகளுக்கும் நிவாரணத்தைத் தரும் அருமருந்தும்தான். அடுத்த வீட்டுப் பிரச்சினை முதல் சர்வதேச முறுகல் வரைக்கும் அது தீர்வு தருகிறது. அன்றாடக் கடன் பிரச்சினை முதல் உலகளாவிய பொருளாதார நெருக்கடி வரை அது நிவாரணம் சொல்கிறது. மாறாக அது பஸுந்து பஸுந்தாக எழுதி நம் வீட்டுச் சுவர்களில் தொங்கவிடும் அழகுப் பொருள் அல்ல. அது மனிதனை சிந்திக்கவும் செயற்படவும் தூண்டும் ஆய்வுப் பொருள்.

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாதவர்களாக இருந்தால். அறிந்தவர்களிடம் கேட்டு(ப்பெற்று)க் கொள்ளுங்கள்” (அந்நஹ்ல்: 43)

நமது ஊரில் நிறையவே டாக்டர்கள் இருக்கின்றனர். நமது ஊரிலேயே நம்மோடு இருக்கும் டாக்டர் இயாஸ், டாக்டர் இப்லால், டாக்டர் ரணில் வர்ணக்கசிங்க போன்ற அனைவரிடமும் இவை தொடர்பான மேலதிக விளக்கங்களை நீங்கள் பெறலாம். அல்லது உங்களது நம்பிக்கைக்குரிய குடும்ப வைத்தியரிடம் கேட்டுப் பாருங்கள். வல்லவன் அல்லாஹ் நமக்கு ஆரோக்கியமான சந்ததியொன்றைக் கட்டியெழுப்ப அருள்புரிவானாக!!!

 

அன்புடன், ஸியாப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s