இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் -2

charity

இஸ்லாம் தகாஃபுல் எனும் சமுதாய பாதுகாப்புத் திட்டத்தை கட்டாயக் கடமைகளுள் ஒன்றாக ஆக்கிவைத்துள்ளது. இஸ்லாம் ஏவும் அடிப்படைக் கடமையாகவும் சமுதாய பாதுகாப்புத் திட்டம் காணப்படுகின்றது. அது இரண்டு அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்படுகின்றது.

>முதலாவது: பிரதிநிதித்துவம்:

உண்மையில் இஸ்லாம் மார்க்கம் சமுதாய பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்த போது ஒரு புதிய பார்வையோடு அதனைக் கொண்டுவந்தது. அந்தக் கண்ணோட்டம் தான் செல்வத்துக்கு மனிதன் பிரதிநிதியாவான் என்பதாகும். அதாவது செல்வம் என்பது அவனுடைய செல்வமல்ல. அது அல்லாஹ்வுடைய செல்வமே இவனது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த செல்வத்துக்கு இவன் பிரதிநிதியே. இதுவே இஸ்லாமிய பொருளாதாரத்தின் பொதுப்படையான மைய சிந்தனையாகும்.

செல்வம், ஒருவரிடத்தில் சொத்தாக இருந்தால் அதனை மாற்றுவதற்கோ உரித்தாக்குவதற்கோ அவருக்கு உடன்படிக்கை என்ற பரிமாணத்திலேயே இடம்பெற முடியும். செல்வத்தின் உண்மையானை சொத்துரிமை அதனைப் படைத்தவனுக்கே உண்டு. தூய்மையானவன் அல்லாஹுத் தஆலாவே அவற்றைப் படைத்து அவற்றை சம்பாதித்துக் கொள்வதை இலகுவாக்கி வைத்திருக்கிறான். இதுவே உண்மையான கருத்தாகும்.

ஒரு மனிதன் விவசாயம் செய்யும் போது… அவனுக்கு இந்த விவசாயத்தில் என்ன இருக்கின்றது? அதிலே அல்லாஹ்வுக்கு என்ன இருக்கிறது? உண்மையில் அவன் விவசாயம் செய்கின்ற போது, விதைகளைக் கொண்டுவருவானாயின் அந்த விதையை அவன் படைக்கவில்லை. அல்லாஹ்தான் படைத்தான்; அவனே அதனை நிலத்தில் முளைப்பிக்கிறான். இந்த நிலத்தையும் அவன்உருவாக்கி விடவில்லை; அல்லாஹ்தான் உருவாக்கினான். அவன்தான் பூமியைப் படைத்தவன்; அதனை வாழ்வதற்கு வசதியாக ஆக்கியவன். இந்த விதைகளே குறித்த காலத்தின் பின் உணவாக உட்கொள்ளும் பதார்த்தங்களாக வளர்ச்சியடைகிறது. இந்த உணவுப் பதார்த்தங்களையும் உருவாக்கியது அவனல்ல; அந்த விதைக்கு இன்ன அளவில் கனியுப்புக்களை அகத்துறிஞ்ச வேண்டும்; இன்ன அளவு நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்; கல்சியம் இவ்வளவு வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொடுத்தவனும் அவனல்லன். இவற்றையெல்லாம் செய்துவரவேண்டும் என்று அந்தத் தானிய விதைகளுக்குக் கற்றுக் கொடுத்தவன் யார் எனில் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே…

பின் அந்த விதைகளுக்கு ஊற்றப்படும் நீர், முளைகளுக்கு விசிறப்படும் நீர்; அதன் உரிமையாளன் யார்? அதனைப் படைத்தவன் யார்? நாம் காற்றை சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளெடுத்து காபன் ஆக்சைட்டை வெளியிடுகிறோம். அதேவேளை தாவர உலகைப் பொறுத்தமட்டில் மறுதலையாக காபன் ஆக்சைட்டை உள்ளெடுத்து ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இவ்வகையான பரஸ்பர பரிமாற்றச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திவிட்டவன் யார்? அது விவசாயி அல்லன்; அவன் இவை குறித்து அறிந்திருக்கவும் மாட்டான். ஆனால் இவற்றை செய்தவன் அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் தான்.

இந்த தாவரங்களை வந்தடையும் சூரிய வெப்பத்தை தயார் செய்வதும் மனிதன் அல்லவே… எனவே உண்மையான அரசன் யார்? நிச்சயமாக அவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அதனை அவன் இவ்வாறு உண்மைப்படுத்துகிறான்:

“(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?” (அல்வாகிஆ: 63-70)

ஸூரா யாஸீனிலே அவன் கூறுவதை அவதானித்துப் பாருங்கள்: “அன்றியும், இறந்து (தரிசாகக்) கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை – ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?” (யாஸீன்: 33-35)

“அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை” என்ற யாஸீனின் 35வது வசனத்தை நாம் உற்று நோக்கினால், அவர்கள் உண்கின்ற பூமியில் விளையும் பயிர்கள் மனிதனின் செயல் அல்ல என அல்லாஹ் வஹி அறிவிக்கிறான். மட்டுமல்லாது அது தூயவன் அல்லாஹ்வின் வல்லமையினது செயலேயாகும். அதே ஸூராவின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

“நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.

மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?” (யாஸீன்: 71-73)

இது விவசாயத்தின் கதை; இது போலவேதான் தொழிற் துறைகள், வியாபாரங்கள், என ஒவ்வொரு விடயத்திலுமே கூறப்படுகின்றது.

அல்லாஹ்தான் செல்வங்களின் உண்மையான அதிபதி; மனிதன் ஒரு பிரதிநிதி, பணியாளன், திறைசேரிச் செயலர், ஒரு பொறுப்பாளன் அவ்வளவே… தூயவன் அல்லாஹ் அவனை இந்த செல்வங்களின் பிரதிநிதியாக்கியிருக்கிறான். எனவே இந்தப் பிரதிநிதிக்கு பிரதிநிதித்துவத்துக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டளைகளை ஏற்று நடப்பது கடமையாகின்றது. இதுவே சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்களின் அடிப்படையாகும். இதனாலேயே அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும் அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் செல்வத்திலிருந்துலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக” (ஸூரத்துந் நூர்: 33)

அல்லாஹ்வுடைய செல்வத்திலிருந்து அடியார்களுக்கு அளிப்பதிலிருந்தும் கஞ்சத்தனம் காட்ட ஒரு மனிதனுக்கு உரித்து இல்லை. படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகளே… அவனே அவையனைத்தையும் போஷித்து உணவளிக்கிறான். முஸ்லிம் பொதுஜனங்களிடம் ஒரு ஹதீஸ் குத்ஸி பரவிவிட்டிருக்கிறது. அதன் அறிவிப்பாளர் வரிசை காணப்படவில்லை; அதன் கருத்து சரியானது. அதன் கருத்து செல்வத்தில் பிரதிநிதித்துவத்தைக் கூறுகிறது: “செல்வம் என்னுடைய செல்வமாகும்… ஏழைகள் எனது சொந்தங்கள்… எனது சொந்தங்களுக்கு எனது பிரதிநிதிகள் கஞ்சத்தனம் காட்டினால்… அவர்கள் எனது வேதனையை சுவைப்பார்கள்… நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்”.

இந்த உண்மையை அறிந்த முஸ்லிம்களில் செல்வமுடையோர் ‘அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து’ என்றே கூறுவார்கள்.

தனது ஆடுகளை மேய்ந்து கொண்டிருந்த நாட்டுப்புற அரபியொருவன் ஒரு முறை “நாட்டுப் புறத்து அரபியே! இந்த ஆடுகள் யாருடையவை?” எனக் கேட்கப்பட்டான். “அல்லாஹ்வுக்குரிய இவை என்னிடம் இருக்கின்றன” என அவன் அளித்த பதில் எவ்வளவு ஆழமான… எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ‘அல்லாஹ்வுக்குரிய இவை என்னிடம் இருக்கின்றன’. அது “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” (ஸூரத்துல் கஸஸ்: 78) என வேறு சிலர் கூறிக்கொண்டிருந்தது போன்றதல்ல. ‘அல்லாஹ்வுக்குரிய இவை என்னிடம் இருக்கின்றன’. ஆம் அதுவே சரியானது. எனினும் அதன் உண்மையான உரிமையாளன் அல்லாஹ் தான். இதுவே இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையாக முன்வைக்கும் மைய சிந்தனையாகும்.

>இரண்டாவது: ஈமானிய சகோதரத்துவத் தத்துவம்:

அல்லாஹ் கூறுகிறான்: “விசுவாசங் கொண்டவர்கள் அனைவரும் சகோதரர்களே” (அல்ஹுஜராத்: 10)

இதன் கருத்து முஸ்லிமான ஒருவன் முஸ்லிமான மற்றொருவனுக்கு சகோதரனாவான். இந்த சகோதரத்துவமானது மற்ற சகோதரனின் கைத்தாங்கிக் கொள்வதாகும்; அவன் பலவீனப்பட்டால் பலப்படுத்தி விடுவதாகும்; அவன் சோர்வுற்றால் உற்சாகப்படுத்தி விடுவதாகும்; அவன் அறியாதிருந்தால் கற்றுக் கொடுப்பதாகும்; அவன் பசித்திருந்தால் உணவூட்டுவதாகும்; அவன் நோயுற்றால் சிகிச்சையளிப்பதாகும்… இவையே சகோதரத்துவத்தின் அடிப்படைகள். ஒரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை கைவிட்டு விடவும் மாட்டான்”. (புகாரி- 2442, முஸ்லிம்-2580)) கைவிட்டு விடவும் மாட்டான் என்பதன் கருத்து பிறரது அநீதிக்கு ஆளாகும் படி அவனைத் தனித்து விட்டு விடமாட்டான் என்பதாகும். அதாவது தன்னால் உணவளிக்க முடியுமான நிலையில் பசித்திருக்க விடுவது; தன்னால் ஆடை அணிவிக்க முடியுமான நிலையில் நிர்வாணமாக இருக்கவிடுவது; தன்னால் சிகிச்சை அளிக்க முடியுமான நிலையில் நோயில் வாட விடுவது என்பனவே ‘கைவிட்டுவிடுதல்’ என்ற கருத்தைத் தரும்.

அவ்வாறு விட்டுவிடுவது இஸ்லாமிய சகோதரத்துவம் ஆகமாட்டாது. சகோதரத்துவம் என்பது ஒன்றிணைவு, ஒத்துழைப்பு, ஒத்தாசை ஆகியன உள்ளடங்கியதாகும். இந்த ஹதீஸ்களைப் பாருங்கள்: “எவர் தன்னுடைய சகோதரனுடைய தேவையின் போது அவருடன் இருக்கிறாரோ… அவருடைய தேவையின் போது அல்லாஹ் அவருடன் இருப்பான்”. இன்னொரு நபிமொழியில்: “ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசிக்கு கட்டடமொன்றைப் போலாவான். அது ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும்” என தனது விரல்களைப் பிணைத்துக் காட்டினார்கள். (புகாரி-2446, முஸ்லிம்-2585). இன்னொரு நபிமொழி: “தம்மிடையே அன்போடு இருப்பதிலும் வாஞ்சையோடு நடந்து கொள்வதிலும் கருணையோடு இருப்பதிலும் ஒரே உடம்பைப் போன்று நீங்கள் முஸ்லிம்களைக் காண்பீர்கள். உடம்பின் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் முழு உடலும் அதன் வலியை உணரும், அதனைப் பாதுகாக்கும்; அதற்கென விழித்திருக்கும்”.

பாருங்கள்! உடம்பின் ஒரு பாகம் மட்டும் தனித்து உயிர்வாழ முடியாது. உடம்பின் ஓர் அங்கம் மாத்திரம் ‘எனக்கு என்னைத் தவிர மற்ற உறுப்புக்களுடன் சம்பந்தம் கிடையாது’ எனக் கூறினால் உதாரணத்திற்கு கரங்கள் ‘எனக்கு இதயத்துடன் சம்பந்தம் கிடையாது’ அல்லது ‘எனக்கு சுவாசப் பையுடன் சம்பந்தம் கிடையாது’ என்றெல்லாம் கூறத் துவங்கினால் உடலின் இயக்கம் ஒரு போதும் ஒழுங்குக்கு வரமாட்டாது. அடிப்படையில் ஒவ்வோர் உடலுறுப்புமே ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை, பின்னிப் பிணைந்தவை, சார்ந்திருப்பவை, தங்கியிருப்பவையாகும்; அவை ஒன்றுக்கொன்று பணிசெய்து கொண்டிருப்பவையாகும். உணவுத் தொகுதி உணவைச் சீரணமாக்குகிறது; அதிலிருந்து தேவையான ஊட்டச் சத்தைப் பெற்று அதனை இரத்தச் சுற்றோட்டமாகவும் சுவாசச் சுற்றோட்டமாகவும் மாற்றுகிறது. ஒவ்வோர் உறுப்பும் மற்றதற்குப் பணிசெய்கிறது; மற்றதைப் பூரணப்படுத்துகிறது; இங்கு அங்கங்களிடையே ஓர் ஒருமைப்பாடு காணப்படுகிறது. உடலிலிருக்கும் தொகுதிகளும் கலங்களும் உறுப்புக்களும் பலதரப்பட்டவை. ஆனாலும் ஒன்றுக்கொன்று பணியாற்றுபவை; ஒன்றைவிட்டும் மற்றது தேவையற்றதல்ல; ஒன்றை மற்றது கவனிக்கக் கூடியது. இவ்வாறே முஸ்லிம்கள் இருக்க வேண்டும். இஸ்லாமிய சமூக பாதுகாப்புத் திட்டம் ஒரு புறத்தில் பிரதிநிதித்துவத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்னொரு புறத்தில் சகோதரத்துவப் பிணைப்பால் முஸ்லிம்களை இணைக்கும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த சகோதரத்துவம் என்பது ஈமானோடு ஒன்றிப் பிறப்பதாகும்.

மகத்துவம் பொருந்திய திருக் குர்ஆன் கூறுகிறது: “விசுவாசங் கொண்டவர்கள் அனைவரும் சகோதரர்களே” (அல்ஹுஜராத்: 10)

இதன் கருத்து ஈமான் இருந்தால் அங்கு சகோதரத்துவம் காணப்படும் என்பதாகும். சகோதரத்துவம் என்பது வெறுமனே வெற்றுணர்வு அல்ல; அல்லது சும்மா சகோதரர் என்று கூறிக் கொள்வதல்ல; அல்லது உள்ளீடின்றி உயர்த்திப் பிடிக்கும் கோஷமும் அல்ல; அல்ல…

நீ என் சகோதரன், நான் உன் சகோதரன்… நீ எனக்கென இல்லாவிட்டாலும் நான் உனக்கென இருப்பேன். என்னை நீ பொறுப்பேற்கா விட்டாலும் நான் ஏற்பேன். என்னை நீ சுமக்கா விட்டாலும் நான் சுமப்பேன். இதனால் தான் சகோதரத்துவம் என்பதன் கருத்து அனைவருமே அனைத்துப் பரப்புக்களிலும் பொறுப்பார்களாவர். இதில் சமுதாய நலன் பகுதி குறிப்பிடத்தக்கது. யதார்த்தத்தில் செல்வம், பொருள், வாழ்வாதாரம் ஆகிய பகுதிகள் மட்டுமே நாடப்படும் ‘தகாஃபுல்’ என்பதன் கருத்து சமுதாய பாதுகாப்பு என்பதை விடவும் இஸ்லாத்தில் விசாலமானது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s