இஸ்ரேலின் தீ அரசியலில் கருகிப்போனது எது?

2a399f5d-7bcc-4cd4-b86d-4faebc7fabaa

 

உலக அரசியலின் மையமாக மத்தியகிழக்கு எப்போதுமே எரிந்து கொண்டு வருவதை முழு உலகுமே அவதானித்து வருகின்றது. இறுதி இஸ்லாமியத் தூதை சுமந்து வந்த நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அன்னவர்களைத் துயர்ந்தவர்கள் மீதும் தொடுக்கப்பட்ட போர் இன்று முழு அரபுப் பிராந்தியத்தையும் எரிக்கும் அளவுக்கு உக்கிரம் பெற்று எரிந்துகொண்டிருக்கிறது. இது இந்தியா, இலங்கை, பர்மா என ஆசியாவில் துவங்கி, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் பெற்று வருவதை நிலைமைகளை அவதானிக்கும் எவரும் இலகுவில் காண்பர்.

 

மத்திய கிழக்கு தொடர்ந்தும் உக்கிரமாக எரிந்துகொண்டிருக்கும் பின்னணியில் இஸ்லாமிய உலகின் முதன்மையாகத் தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினையாக பலஸ்தீன விவகாரமே இருந்து வருகின்றது. பலஸ்தீனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு முடிவு காணப்படுமாக இருந்தால் முஸ்லிம்களது பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடும் என அரசியல் நிபுணர்களும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும் கூறுவர். முஸ்லிம்களின் முதலாவது கிப்லா, யாத்திரை செய்யத்தகு மூன்றாவது புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனோடு இணைத்து பலஸ்தீன பூமியும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாகக் காட்சிதருகிறது இன்று. பலஸ்தீனப் பூமியை நம்மிடமிருந்து பிடுங்கி விடுவதானது நமது அகீதாவிலிருந்து ஒரு பகுதியைப் பிடுங்கிக் கொள்வதற்கு ஒப்பானது என்று நமது அறிஞர்கள் விளங்கப்படுத்துவர். இதனால்தான் பலஸ்தீனப் போராட்டம் வெறும் நிலத்துக்கான போராட்டமாக அன்றி நமது அகீதாவுக்கான போராட்டமாகவே கொள்ளப்பட்டு இஸ்லாமிய உலகின் முதன்மை விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.

 

பலஸ்தீனப் பிரச்சினையை வெறும் காணிப் பிரச்சினையாகக் கடந்துபோக விட்டுவிடாது இஸ்லாமிய உலகில் தீர்க்கப்ப்பட வேண்டிய முதன்மைப் பிரச்சினையாகக் காட்டுவதில் சர்வதேச இஸ்லாமிய இயக்கம் கூடிய சிரத்தை எடுத்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமி பூரணமாக ஓர் அங்குலம் கூட விட்டுக்கொடுக்கப்படாமல் மீட்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து அங்கு குடியேறியிருக்கும் ஆக்கிரமிப்பு யூதர்கள் ஒவ்வொருவருமே இராணுவப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவதில் அநியாயம் காண முடியாது என்ற கோணத்திலேயே பலஸ்தீனிய எதிர்ப்புப் போராட்டம் குறித்த தனது நிலைப்பாட்டில் இஸ்லாமிய இயக்கம் இருந்துவருகிறது. அவ்வகையிலேயே ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன விடுதலைப் போராட்டக் குழுக்கள் நிகழ்த்திவந்த ‘ஷஹாதத்’ தாக்குதல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் சரிகாண்கின்றனர்.

 

இத்தனை அறிமுகமும் எதற்கெனில் கடந்த வாரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் குறிப்பாக இஸ்ரேலிய ஹைபா நகரம் உள்ளிட்ட பல பாகங்களில் பற்றியெரிந்த இஸ்ரேல் குறித்த நமது நிலைப்பாடு எவ்வாறு அமைதல் வேண்டும் என முக்கியமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த வாதப் பிரதிவாதங்களினடியாக என்பதேயாகும். பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூதர்கள் அனைவரும் நமது எதிரிகள் என்ற வகையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் நாம் மகிழ்ச்சி கொள்ளத்தக்கவையே என்ற வகையில் ஒரு சாரார் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இவர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என சில கருத்துக் கணிப்புக்கள் வெளியாகியும் இருந்தன. சிலர் ஒரு படி முன் சென்று இது இஸ்ரேலுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தண்டனை என்ற கருத்தையும் சொல்லியிருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

 

இஸ்லாமிய உலகின் புகழ்பூத்த அறிஞர் கலாநிதி அலி கரதாகி தனது ட்விட்டர் பதிவில் “தீ என்பது அல்லாஹ்வின் படைகளில் ஒன்று. அது அறியாத காலம் முதல் கியாம நாள் வரைக்கும் அநியாயக்கார சமூகங்களை வதம் செய்யும். -உமது இரட்சகனின் படையை அவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்-” எனத் தெரிவித்திருந்தார்.

 

அடுத்து இந்நிகழ்வுகள் மனிதாபிமானப் பார்வையுடன் நோக்க வேண்டிய நிகழ்வுகள் என்று வர்ணித்தோரும் பெருமளவு உளர். இது குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் மௌனம் காத்திருந்தனர். அல்லது மறைமுகமான செய்திகளையே வழங்கியிருந்தனர். மனிதனது உளவியல் தனக்கு எதிரான ஒன்றுக்கு சேதம் நிகழும் போது அதனை பொசிடிவ்வான உவகைத் தன்மையுடன் நோக்கும் தன்மை வாய்ந்தது. எனவே இந்த உணர்ச்சிபூர்வமான விடயத்தில் கருத்துக்களை முழுமையாக வெளியிடாது மௌனம் காத்திருக்க முடியும் என அனுமானிக்க முடிகிறது.

 

குறிப்பாக இந்நிகழ்வுகளை துருக்கியின் அர்துகான் அரசாங்கம் அணுகிய விதம் மூலம் அர்துகானைச் சாடுவதற்கு அவரது அரசியலை எதிர்ப்போர் பயன்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. அர்துகானின் அரசியலை அவரது ஆதரவாளர்கள் கூட முற்று முழுதாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக நியாயப்படுத்தாத நிலையில் அவரை எதிர்ப்பவர்கள் விமர்சனம் என்ற பெயரில் அர்துகானை சாடுவதற்கு முயன்றமை மிகுந்த பாரபட்சம் நிரம்பியது.

 

மக்காக் காலத்திலும் மதீனாக் காலத்திலும் தூதரது அவர்களது ஸீராவில் ஏராளம் உதாரணங்கள் நபி(ஸல்) அன்னவர்கள் இஸ்லாத்தை எதிர்த்தவர்களோடு எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைக் காட்டி விரவிக் காணப்படுவதைக் காணலாம். தினந்தோறும் தன் மீது குப்பை கொட்டிய பெண்மணியின் உதாரணமும் தான் உதவிக்கு சுமைகளை சுமந்து சென்ற மூதாட்டியுடன் அவரது ஏசும் வார்த்தைகளுக்கு மத்தியிலும் இறுதி வரைக்கும் கனிவுடன் உரையாடிச் சென்றமை எல்லாமே நபிகளாரையொட்டி நமது மூலாதாரங்கள் தரும் செய்திகள்.

 

யூதனது ஜனாஸாவுக்கு எழுந்து நின்றமை, யூதர்களோடு ஒப்பந்தம் செய்து ஒன்றிணைந்த வாழ்வுக்காக இறுதி வரைக்கும் முயற்சி செய்து முன்னுதாரணமாக விளங்கியமை, மரணிக்கும் காலப் பகுதியிலும் யூதன் ஒருத்தனிடம் தனது கேடயத்தை அடகு வைத்து கொடுக்கல்-வாங்கல் செய்தமை என இன்னும் நீண்ட முன்னுதாரண பட்டியலை நமது மூலாதாரங்கள் தம்மிடத்தே வைத்திருப்பதை நாம் இலகுவாகக் காணலாம்.

 

அர்துகான் முதல் நமது அயல் வீட்டு உறவுகள் வரைக்கும் நமது கொடுக்கல்-வாங்கல்களில், பிணைந்து பழகுவதில் ஒரே ஒரு நிகழ்வு அல்லது ஒரே ஒரு ஒப்பந்தம், ஒரே ஒரு சரத்து, ஒரே ஒரு தத்துவம் மட்டுமே தாக்கம் செலுத்துவதில்லை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சர்வதேச உறவுகள், ஒப்பந்தங்கள், அரசியல்-இராஜதந்திரம், பொருளாதார இலாப-நட்டங்கள் என இன்னுமுள்ள அனைத்துக் காரணிகளுடனும் குறித்த சந்தர்ப்ப சூழலும் இணைந்துதான் முடிவுகளும் நகர்வுகளும் தீர்மானிக்கப்படும்.

 

‘யூதர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்’ என்ற ஒரே ஒரு அம்சம் மட்டுமே அர்துகானை இஸ்ரேலிய காட்டுத் தீ அனர்த்தத்தின் போது எந்த நகர்வை எடுப்பது என்ற முடிவெடுப்பதில் தங்கியிருக்கச் செய்திராது. அது குறைந்த பட்சம் ஒன்பது தசாப்தங்கள் பின்சென்று முஸ்தபா கமால் பாஷா என்ற துருக்கியின் முதலாவது மத எதிர்ப்புத் தலைமை வரைக்கும் செல்லும் என்பது மிகத் தெளிவு. அக்காலத்திலிருந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், நிழல் அரசுகளின் ஊடுருவல்கள் என அனைத்துமே  அர்துகானின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களில் தாக்கம் செலுத்தும் என்பது அரசியலின் அரிவரி அறியாதோருக்கும் கூட புரியும்படியான அம்சமே ஆகும். இந்நிலையில் ஒரு சகோதரர் கூறியது போன்று, சினிமா ஹராம் என்று சொல்வோரெல்லாம், அர்துகான் மட்டும் சினிமா ஹீரோ பாணியில் அதிரடி வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் எங்ஙணமும் புத்திக்குட்பட்டதல்ல.

 

கட்டுரையைத் துவங்கியது முதலே இது அர்துகானது அரசியல் குறித்த கட்டுரையாகவோ அல்லது ஒரு ஃபத்வாக் கட்டுரையாகவோ ஆகிவிடக் கூடாது என்பதில் கூடிய சிரத்தை எடுக்கிறேன். இஸ்ரேலில் காட்டுத் தீ ஆரம்பித்த கடந்த (நவம்பர்) 23, புதன் காலை முதல் இஸ்ரேல் பொதுவான உதவிக் கோரிக்கைகளை இத்தாலி, சைப்ரஸ், துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிடம் விடுத்திருந்தது. இந்நாடுகளோடு மேலதிகமாக இன்னும் பல நாடுகளும் தீயணைப்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டன. கூறத்தக்கது என்னவெனில் பலஸ்தீனமும் இவ்வுதவிப் பணிகளில் இணைந்திருந்தது.

 

பிராந்தியத்தில் பல இஸ்ரேலின் அரபு நட்பு நாடுகளில் சிலதின் கருத்துக்கள் இதன் போது சியோனிஸத்துக்கு பிரார்த்திப்பதைப் பிரதிபலித்திருந்தன. இது அவர்களது அறிவு வறுமையைக் காட்டுகின்றது. அது அரசியல் இஸ்லாத்தை எதிர்க்கும் அரபு ஆட்சியாளர்களில் குறிப்பிட்ட ஒரு சாராரின் கருத்தாகும். இத்தகையோர் தான் பலஸ்தீனப் பிரச்சினையை வெறும் நிலப் பிரச்சினையாயாக கடந்த காலங்களில் பேசியோராவர். இத்தகைய இன்னொரு பிரிவினரே இந்த அவல சந்தர்ப்பத்தை மனிதநேயப் பார்வையுடன் நோக்குவதையும் ஏதோ யூத ஏஜண்டுகளின் வேலை போன்று பார்த்தவர்களாவர்.

 

எதிரிக்கும் மன்னிப்பையும் மனித நேயத்தையும் போதிக்கும் படி வழிகாட்டும் இஸ்லாத்திடமிருந்து மத்திமமான வழிகாட்டலையே பெறமுடியும். அது இஸ்ரேலுக்குப் பிரார்த்திப்பது போன்ற அறிவு காய்ந்து சருகாகிப் போன நிலைப்பாடாகவோ அல்லது ஒரு மனித அவலத்தில் மகிழ்ந்து பேருவகை கொள்ளுகின்ற இருவிதமான தீவிரப் போக்குகளை விட்டும் தவிர்ந்துதான் இருக்கும்.

 

இறுதி முடிவு எப்போதும் சத்தியக்கானதாகத் தான் இருக்கும். அதனை அல்லாஹ்வே கூறுகிறான்: “மேலும் குற்றமிழைத்தோர் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை – நிலைநாட்டவே (நாடுகிறான்)” (அல்அன்ஃபால்) ‘நமக்குப் பிரயோசமானதன்பால் கவனம் செலுத்தி, அல்லாஹ்வின்பால் உதவி தேடுவதும், நாம் இவ்வாறு செய்ததாலே இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது என்று கூறக்கூடாது என்பதும், அல்லாஹ்வின் சக்தியாலே அவன் நாடியது நடந்தது என்றே முஸ்லிம்கள் கூற வேண்டுமென்பதும்’ நபிமொழிகள் தரும் உபதேசங்களாகும். ஒரு விவகாரத்திலே ஒருவரது நிலைப்பாடுகள், அவரது கல்வித் தரம், வாசிப்பு என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமடைவது என்பதே அவர் சிந்தனை சுதந்திரம் பெற்றவர், மேலும் வெறித்தனம், தேக்க நிலையை விட்டும் விடுபட்டவர் என்பதன் அடையாளமாகும். இது எல்லா விடயங்களிலும் பொருந்தி வரக்கூடியதே.

 

கடந்த 23 அன்று இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் காட்டுத் தீ பரவத்துவங்கியது தொட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் #இஸ்ரேல்_எரிகிறது என்ற அரபு வாசகம் அடங்கிய ஹேஷ் டெக்குகள் ட்விட்டரில் மூன்று இலட்சத்துக்கும் அதிகளவில் பகிரப்பட்டிருந்தன. அதன் போது இஸ்ரேலிய அரசின் உத்தியோகபூர்வ அரபுமொழி ட்விட்டர் கணக்கில் இவ்வாறு தமது செய்தியைப் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது:

இஸ்ரேலுக்கு தீமை நாடுவோர் ஒவ்வொருவருக்கும்- “விசுவாசம் கொண்டோரே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்…” (அல்ஹுஜுராத்:11)

 

இந்தத் தூததை சுமந்தும றுமை நாள் வரைக்கும் அல்லாஹ் அளித்த பிரதிநிதித்துத்தை சுமக்கப் போகும் இந்த உம்மத்தின் பார்வை எப்போதும் விசாலமாகவே இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s