கானக சவாரி…

50beautifulexamplesofwildlifephotogr

பயணம் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக அவன் பூமிக்கு வந்ததிலிருந்தே மாறிவிட்டது… ஆதமும் ஹவ்வாவும் ஒருவரை ஒருவர் தேடிப் போன கணம் முதல் மனிதன் பயணிக்கத் தொடங்கிவிட்டான்.

 

இன்று பயணங்கள் பல்பரிமாணப்பட்டு விட்டன… மனிதன் உறவுகளைத் தேடிப் போகிறான்; தன் பிழைப்புக்காக, வாழ்வாதாரத்துக்காகப் பயணிக்கிறான்; இயற்கையின் வனப்புகளைப் பருகுவதற்கென பூமியெங்கும் பரந்து செல்கிறான்; புனித யாத்திரைகளும் மேற்கொள்கிறான்; தான் விசுவாசிக்கும் கொள்கையை வாழச் செய்வதற்காக விரைகிறான். விரைந்த உலகும் நவீன வாகனாதிகளும் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் விரும்பிய பயணம் செல்ல நமக்கு அனுமதி தருகிறது.

 

இதோ இக்கட்டுரை எழுதும் இக்கணமும் நான் ருஹுணுகுமாரியில் கொழும்புக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்… வாழ்க்கை எவ்வளவு இலகுவாக்கப்பட்டிருக்கிறது! உலகம் முழுதும் மனத்துக்கும் விழிகளுக்கும் மிக அருகாக்கப்பட்டு விட்டன. பயணங்கள் பலபோது மனிதனுக்கு, டஜன் கணக்கான புத்தகங்கள் வாசிப்பதனை விடவும் அறிவையும் அனுபவத்தையும் அள்ளித் தருகின்றன.

 

இயற்கையை ஊடறுத்துச் சென்று அதனை அனுபவிக்கும் பயண வகைகள் பலதில் வனாந்திரங்களூடே சென்று அடர் மரக் காடுகள், பறவைகள், மிருகங்கள், நீரேந்துப் பகுதிகள், நீர்வாழ் உயிரிகள் என இயற்கையைப் பருகும் குதூகலமும் த்ரில் அனுபவங்களும் நிறைந்த பயணங்களில் நமக்குக் குறைந்தளவான பரிச்சயமே இருக்கும்.

 

இந்த வகை Adventure Safari பயணங்களில் நம்மை விடவும் மேற்கு நாட்டவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவர். பயணங்கள் ஆறேழு மணித்தியாலங்கள் துவக்கம் வாரக் கணக்கில் நீடிக்கும் அளவு பல்வேறு வகையறாக்களில் இருக்கும்.

 

கூடாரங்கள் அடித்து இரவுகளில் தங்கியிருந்து வாரக் கணக்கில் மேற்கொள்ளப்படும் பயணம் வித்தியாச அனுபவமாக இருக்கும். குறைவான உணவு, காட்டுக் கனிவர்க்கங்கள், இலகு ஆடைகள் போன்றன பயணத்தை மெருகேற்றும்…

 

உலகளவில் Adventure Safari க்கு ஆபிரிக்க நாடுகளும் அமேசன் காட்டுப் பிரதேசங்ளும் பிரபல்யமானவை. குறிப்பாக ஆபிரிக்காவின் தான்சானிய, செரங்கெற்றி தேசிய வனப் பிராந்தியத்தின் எல்லையற்ற நீண்ட வனாந்திரங்களில் நிகழும் கானக சவாரிகள் த்ரில்லிங்கும் வர்ணனைக்கப்பாற்பட்ட அனுபவங்களும் தரவல்லவை; மேனி புல்லரிப்பவை… சிங்கம், புலி, அதிவேக சிறுத்தை சீட்டா, கழுத்தைப் புலிகள் என கொடூர மிருகங்கள் மத்தியில் பல்லாயிரம் மைல்கள் செல்லும் பயணம் அது… மான் கூட்டங்களும் காட்டெருதுகளும் வரிக்குதிரைகளும் வேட்டையாடப்படும் காட்சிகள் வழி நெடுகிலும் நிகழும்; சிங்கங்களும் புலிகளும் உறுமும் ஓசை கிலோ மீட்டர்கள் பல கடந்து மனத்தை நடுக்கும்; சீட்டாக்களின் அதிவேக ஓட்டம் பதற வைக்கும்; நீர் நிலைகளில் கிளர்ந்தெழுந்து மூர்க்கமாய்த் தாக்கி தனதிரைகளைக் கௌவும் முதலைகள் மனத்தை உறையச் செய்யும்.

 

டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சிச் சானல்களில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட இத்தகைய காட்சி அனுபவங்களை செரங்கெற்றியில் பயணிப்பதன் மூலம் நேரடியாகவே பெறலாம். தான்சானியா நாட்டின் செரங்கெற்றி தேசிய வனம் தவிர்த்து உகண்டா, கென்யா, எதியோப்பியா, ருவாண்டா, ட்ஜிபூட்டி, சிம்பாப்வே, ஸாம்பியா, பொட்ஸ்வானா, கொங்கோ நாடுகளிலும் ங்ரோங்கோரோ, மசாய் மாரா போன்ற புகழ்பெற்ற கானக சவாரிகள் உண்டு.

 

அமேசன் காடுகளைப் பொறுத்தமட்டில், அமேசன் நதியூடே படகுகளில் செல்லும் பயணங்கள் திகில் நிறைந்தவை… பயமுறுத்தும் அனகொண்டா பாம்புகள் வழிநெடுகும் கொல்லக் காத்திருக்கும் உயிரைக் கையிற்பிடித்த பயணங்கள் அவை.

 

இன்று சுற்றுலாக் கைத்தொழிலின் ஒரு பகுதியாக உலகளவில் Adventure Safari க்கள்  பெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக கானக சவாரிகள் விலங்கு வேட்டைகாரர்களுக்கும், வைல்ட்லைஃப் புகைப்படக் கலைஞர்களுக்கும் முக்கியமானது.

 

இங்கு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் Safari என்ற ஆங்கிலச் சொல் அரபு, ஸ்வாஹிலி மொழி வேர்களைக் கொண்ட பயணத்தைக் குறிக்கும் ‘ஸஃபர்’ என்ற சொல்லினடியாகவே ஆங்கிலத்துக்குள் உள்வாங்கப்படுகிறது. இச்சொல் கி.வ. 1850 வாக்கில் ஆங்கில மயப்பட ஆரம்பித்த காலமே Adventure Safari பிரயாணங்கள் தோற்றம் பெற்ற காலமாகும். ஆங்கில ராணுவ பொறியியலாளரும் விலங்கு வேட்டைக்காரருமான William Cornwallis Harris என்பவரே முதன் முதலில் கி.வ. 1836 ஆம் ஆண்டில் Adventure Safari வகைப் பயணமொன்றை தன் நண்பர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார். அது ஒரு மாலை நேரத்துப் பிரயாணமாக இரவுணவையும் களிப்பு நிகழ்ச்சிகள் சிலதையும் உள்ளடக்கி இருந்ததாக வரலாறு பதிகிறது.

 

Adventure Safari க்களை சிறியளவில் அனுபவிக்கும் வாய்ப்பு இலங்கையிலும் இருக்கின்றது. யால தேசிய வனம், உடவளவ, வில்பத்து, ஹபரண போன்ற வனப் பகுதிகளில் கானக சவாரிகளை அனுபவிக்கலாம். இலங்கையில் அண்மையில் திறக்கப்பட்ட ‘ரிதியகம ஸஃபாரி பார்க்’ செயற்கைத் தன்மைகளுடன் தான் அந்த அனுபவத்தைத் தருகிறது.

 

அதிகாலையில் துவங்கும் பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்த களிமண் தரையூடே மணித்தியாலக் கணக்கில் நீடிக்கும். பிரமாண்ட யானைகள் அருகே நெருக்கமாய் வந்து பயமுறுத்தும், இலங்கைக்கே உரித்தான சிறுத்தைகள் மயிர் கூச்செறியச் செய்யும் வண்ணம் வண்டியைச் சூழ வலம் வரும்., கருங் கரடிகள் ஒளிந்து திரியும், மானினங்கள் நம் அருகால் வந்து செல்லும்… செயற்கை ஏதுமற்ற இயல்பான பச்சை மரங்களின் காட்சியையும் அது தரும் தூய காற்றையும் அந்த சில மணி நேரங்களுக்கு மாத்திரம் பஞ்சமின்றி அனுபவிக்கலாம்.

 

சவாரியை அனுபவிக்க விரும்புவோர் தொடர்ந்த பயணத்தின் அசதியையும், வண்டியின் அதீத அசைவுகளையும் பொறுமையோடு சகித்துப் பயணிக்கத் தயாராகிக் கொண்டே செல்ல வேண்டும். நினைத்த மாத்திரத்தில் ஓய்வெடுக்க வாகனத்தை நிறுத்தி வைக்க அவகாசம் கிடைக்காப் பயணம் அது; இயற்கைத் தேவைகளுக்கு உடனடிப் பதிலளிக்கவும் முடியாது… அதிகரித்த உணவுகள், உடற் சுமைகள் பயணத்தை சுவாரஷியமாக்காது சலிக்கச் செய்துவிடும். இவற்றுக்கெல்லாம் நாம் தயாரெனின் அற்புதமான கானகச் சவாரி அனுபவமொன்றை நம்மாலும் பெற்றிட முடியும்.

 

Adventure Safari க்களை மையப்படுத்தி ஏராளம் இலக்கியங்களும் சினிமாக்களும் வெளிவந்திருக்கின்றன. திகிலும் பிரமிப்பும் மொத்தமாய்க் கொண்ட அனுபவங்களை இவை தரும். எழுத்தாக்கங்களில் 1863 இல் வெளிவந்த  Jules Verne என்பவரின் Five Weeks in a Balloon மற்றும் H. Rider Haggard இன் King Solomon’s Mines புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. பின்னையது தமிழில் ‘சுலைமான் அரசரின் வைரச் சுரங்கம்’ என்ற பெயரில் தமிழிலும் திகிலூட்டிக் கொண்டிருக்கிறது. இந்நாவல் ஹொலிவூட்டில் சினிமாவாகத் தயாரிக்கப்பட்ட போதும் மிகப் பெரும் வெற்றி பெற்றது.

 

Trader Horn (1931), Road to Zanzibar, Call Me Bwana என ஏராளம் திரைப்படங்கள் Adventure Safari க்களைக் கதைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளன. நாம் சிறு வயதுகளில் பார்த்து ரசித்த Tarzan, Jungle Jim போன்ற படங்களும் இவ்வகைத் திரைப்படங்களாகவே கணிக்கப்படுகிறது.

 

இத்தகைய சவாரிகள் தொடர்பில் ஏராளம் ஆவணப் படங்கள் யூட்யூபிலும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் Serengeti – The Adventure (Full Documentary), Great Migration and River Crossing Serengeti 2013 போன்ற வீடியோக்கள் நேரடியான துல்லிய பயண அனுபவத்தைத் தர வல்லவை. இவ் ஆவணப் படங்களில் மிருகங்களின் பருவகால இடப் பெயர்வுகள் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அற்புதமானவை. மிருகங்களோடு அசையும் நவீன கமராக்கள் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் படம் பிடித்திருக்கிறது. ஆங்காங்கே இயற்கையோடு கலந்த இசையும் பயன்படுத்தப்பட்டிருப்பது பார்வையாளனின் ஆர்வத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்கின்றது.

 

பறவைகள் தொடர்பாக மாத்திரம் வெளிவந்த ஆவணப் படமான ஒஸ்கார் விருது வென்ற Winged Migration படம் பறவைகளுடன் நாம் நேரடியாக வாழும் அனுபவத்தைத் தரக் கூடியது. நான்கு வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த ஆவணப் படம் பறவைகளின் வாழ்க்கை முறைமை தொடர்பான உலகின் மிகச் சிறந்த ஆவணப் படமாகக் கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s