வெலிகாமம் எங்கும் மீலாதுந் நபி…

eid

 

வருடாந்தம் ரபீஉல் அவ்வல் வந்து விட்டால் வெலிகாமம் கந்தூரிகளாலும் இன்னும் பல விழாக்களாலும் களைகட்டி விடும். நமது முந்தைய பரம்பரையினர் ‘அந்நாட்களில் மாதத்தின் 30 நாளும் கந்திரிதான்’ என்று சொல்வார்கள். ரபீஉல் அவ்வலை அவர்கள் ‘கந்திரி மாசம்’ என அழைக்கும் அளவுக்கு நமதூரில் கந்தூரிகள் களைகட்டிவிடும். பொருளாதார நிலை மாற்றங்கள், கந்தூரி மறுப்புப் பிரசாரங்கள் என பல்வேறு காரணிகளின் பின்னணியில் கந்தூரிகள் குறைந்திருந்த போதிலும் அவற்றின் வீரியம் குறைந்து விடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தவ்ஹீதின் வருகை தோல்வியடைந்து விட்டதா என எண்ணும் அளவுக்கு அண்மைக் கால மீலாதுந் நபி நிகழ்வுகள் களைகட்டத் தொடுங்கியுள்ளன. வீடுகளெங்கும் அலங்காரம் செய்யப்பட்டும், பைத்துகள் வீடுகள் தோறும் பாடப்பட்டும், போட்டிகளும் விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டும் மீலாது நிகழ்வுகள் மீண்டும் புத்துணர்வு பெற்று வருகின்றன.

 

📚 பித்அத் எது?

ஒவ்வொரு வருடமும் ரபீஉல் அவ்வல் வந்ததுமே நமது வெலிகாமத்தில் மட்டுமன்றி உலகம் முழுதும் ‘ஆ… மீலாதுந் நபி கூடாது… அது ஃபாத்திமி ஷீஆ ஆட்சியாளர்கள் தொடக்கி வைத்த நூதனம்’ என்றவாறான கோஷத்தை எழுப்பிக் கொண்டு ஒரு தரப்பார் கிளம்பி விடுவர். மறு தரப்பினர் பித்அத்துக்கள் குறித்தோ, இஸ்லாமிய ஷரீஆவின் வரையறைகள் பற்றியோ எந்தக் கவலைகளும் இன்றி கொண்டாட்டங்களில் மூழ்கிப் போய்விடுவர்.

நபிகளார் பிறந்த தினத்தைப் பொறுத்தமட்டில் இந்நாள் முஸ்லிம்களுக்குரிய பெருநாள் தினமல்ல; அல்லாஹ் அதனை வஹி மூலம் அறிவித்து சட்டமாக்கவுமில்லை. என்றாலும் நம் வழிகாட்டி தூதர்(ஸல்) அவர்கள் பிறந்த வரலாற்று நாள் என்ற வகையில் முக்கியத்துவமானது.

நபியவர்களது பிறந்த நாள் என்பது வருடாந்தம் நம்மைக் கடந்து செல்லும் நன்நாள். அந்நாள் அகிலத்தாருக்கு அருட்கொடையான நபியவர்களை அனைவருக்கும் அடையச் செய்ய நமக்குக் கிடைத்திருக்கும் பொன்நாள். விஷேடமாக இலங்கையரான நமக்கு அந்நாள் விடுமுறை நாளாக அரசாங்கத்தாலேயே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனவே -ரஹ்மத்துன் லில் ஆலமீன்- அகிலத்துக்கே அருட்கொடையான நபியவர்களை அனைத்துத் தரப்பினருக்கும் அடைய செய்வதில் நாம் தடையாக இருந்துவிடக் கூடாது.

இந்த நாள் மட்டும் தான் நபியவர்களையும் அவர்களது போதனைகளையும் நினைவுபடுத்தும் நாள் என்பது இவற்றின் அர்த்தம் அல்ல. இந்நாள் அதற்கான குறிப்பான ஒரு தருணம் மட்டுமே. ஸஹீஹான அறிவிப்புக்களின்படி அன்னவர்கள் பிறந்த நாள் என்பதற்காகவே திங்கட் கிழமைகளில் நோன்பு நோற்றும் வந்திருக்கிறார்கள்.

நாம் அருட்கொடைகளை நினைவுகூர்பவர்களாக இருக்க வேண்டும். இது அல்லாஹ்வே தன் திருமறையில் நமக்கு சொல்லித் தரும் செய்தியாகும். இதனை நாம் மறந்துவிடக் கூடாது:

“முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் – ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.” (மாஇதா:11)

இப்பின்னணியில் நாம் நபியவர்களை நினைவுகூரும் வகையில் போட்டி நிகழ்ச்சிகள், கஸீதாக்கள், பொது அறிவு, பேச்சு, விவாதம், நாடகம், உரையாடல், கவிதை, கட்டுரை, சிறுகதை என எந்த வடிவிலும் ஏற்பாடுகள் செய்யலாம். நவீன உலகின் பதற்றம் மிகு வாழ்க்கை முறையால் நமது சிறுவர்களிடமும் பெரியவர்களிடமும் மறக்கடிக்கப்படும் தூதரையும் ஸீராவையும் அவர்களது உள்ளங்களுக்குள் பசுமையாக விதைத்து விடும் ஒரு ஆரம்ப முயற்சியாகும். இதுவொன்றும் பித்அத் ஆகிவிடாது.

பித்அத் என்று அனைத்துக்கும் முத்திரை குத்தி சமூகத்திலிருந்து நல்ல விடயங்களை அகற்றி விடுவது இன்று பாரதூரமான விளைவுகளை கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படைக் காரணம் பித்அத் குறித்த தெளிவின்மையே ஆகும். ரத்தின சுருக்கமாக பித்அத்தை விளங்கப்படுத்துவது எவ்வாறெனில் *’பித்அத் என்பது இபாதத்களில் அதாவது வணக்கவழிபாடுகளில் மட்டுமே இருக்கும். அதாவது மூலாதாரங்களில் அடிப்படைகள் எதுவுமின்றி வணக்க வழிபாடுகளாகப் பின்பற்றப்படும் அனுஷ்டானங்களே பித்அத் ஆகும்.’*

அவ்வகையில் நபியவர்களது வாழ்வையும் பணியையும் உலகம் முழுமைக்கும் அடையச் செய்யும் எந்த நிகழ்ச்சி நிரலையும் தட்டையாக பித்அத் எனக் கூறி ஒதுக்கிவிட முடியாது. மாறாக ஒவ்வொன்றுமே ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிவிட வேண்டிய பாராட்டுக்குரிய விடயங்களாகும். இவையே நமது கலைக்கும் கலாசாரத்துக்கும் செழுமை கூட்டும் அம்சங்களாகும். மார்க்கத்தை அடுத்த பரம்பரைக்கும் தூய்மையாக அடையச் செய்வதாகும்.

ஆனால் இவற்றிலே மார்க்கத்தின் வரையறைகள் மீறி பித்அத்துக்களில் மூழ்கி விடுவது பற்றியும் முஸ்லிம்களாகிய நாம் மிகக் கரிசனையுடன் இருக்க வேண்டும். ஸலவாத் மஜ்லிஸ், மௌலித் மஜ்லிஸ் என இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி *’இபாதத்களாக’* கொள்ளப்படுபவை அனைத்துமே பித்அத்துக்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. அதிலும் மௌலிதுகளில் வருவதாகக் கூறப்படும் மார்க்கத்துக்கு முரணான வசனப் பிரயோகங்கள் அவற்றை ஓதுபவர்களே முன்வந்து விளக்க வேண்டிய தனி சப்ஜெக்ட்.

 

📚 மீலாதுந் நபி போர்வையில்… வஹ்தத்துல் வுஜூத் பேசுவோர்…

வஹ்தத்துல் வுஜூத் என்ற அகீதாக் கொள்கையைக் கோஷமாக எழுப்பும் ஒரு சிறு குழுவினர் இங்கு நமது வெலிகாமம் சிறு மக்கத்திலே அண்மைக் காலமாக மீலாதுந் நபிப் போர்வையில் கந்தூரிகளை நடத்துவது வழமையாகிவிட்டது. ஆனால், நம்மில் அநேகர் வஹ்தத்துல் வுஜூத் என்ற வழிகெட்ட கொள்கை கொண்டவர்களைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.

வஹ்தத்துல் வுஜூத் என்பது நமக்கு மத்தியில் உள்ள தரீக்காக்கள், தப்லீக், தவ்ஹீத் அமைப்புக்கள், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துஸ் ஸலாமா போன்று அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த அமைப்புக்கள் போல அல்லாமல் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வழிபிறழ்ந்த கொள்கை கொண்ட அமைப்பாகும். இது ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய மார்க்கத் தீர்ப்புமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 20-05-2015 அன்று வெளியிட்ட மாநாட்டுத் தீர்மானத்தின் முதலாவது தீர்மானம் கீழ்வருமாறு அமைந்துள்ளது:

“எல்லாம் அவனே எனும் ‘வஹ்ததுல் வுஜூத்’ சிந்தனையும் அல்லாஹுத் தஆலா தனது படைப்பினங்களில் இறங்கினான் என்ற ஹுலூல் கொள்கையும் அவன் அவற்றில் ஒன்றித்து விட்டான் என்ற இத்திஹாத் சிந்தனையும் தூய இஸ்லாமிய சிந்தனைக்கு முற்றிலும் முரணான, குப்ரை ஏற்படுத்தும் சிந்தனைகளாகும் என்பதையும், அல்லாஹு தஆலா ஒருவனாகவும் வணக்கத்துக்கு தகுதியான ஒரே இறைவனாகவும் சகல படைப்பினங்களினதும் படைப்பாளனாகவும் இருப்பது போலவே அவன் வேறானவனாகவும் அவனால் படைக்கப்பட்ட சிருஷ்டிகள் வேறானவையாகவும் இருப்பதை நம்புவது அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் அகீதாவின் ஓர் அடிப்படைக் கொள்கையாகும் என்பதை மாநாடு மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றது.” ( http://www.acju.lk/ta/press-release-ta/resolutions-of-the-conference/http://www.arankamnews.com/2015/05/20-acju.html?m=1 )

எனவே இக்கொள்கை உடையவர்கள் தொடர்பில் நமது இஸ்லாமிய அகீதாவை விட்டுக் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது நமது கடமையாகும். “அவர்கள் வஹாபிகளை எதிர்க்கிறார்கள். அதனால் நாம் அவர்களை ஆதரிக்கிறோம்.” என்ற முட்டாள்த்தனமான வாதத்தில் நாம் சிக்கியிருக்கக் கூடாது. ஏனெனில் வஹ்தத்துல் வுஜூத் என்பது இஸ்லாத்துக்கு வெளியே போன அகீதாக் குழுவாகும். வஹ்தத்துல் வுஜூத் என்பது இந்து மதத்திலிருந்து முஸ்லிம்களிடையே பரவிய வழிதவறிய கொள்கை என்பது வெலிகாமத்து முஸ்லிம்கள் அனைவரும் அறிய வேண்டிய முக்கிய அம்சமாகும்.

 

📚 நபிகளாரைத் தூய்மையாக அறிந்து கொண்டு பரப்புவோம்

ஹிஜ்ரத் சென்ற போது மதீனாவில் யூதர்கள் மூஸா (அலை) அவர்கள் ஃபிர் அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டதற்காக ஆஷூரா நோன்பு நோற்றதைக் கண்ணுற்ற போது அதற்குத் தகுதியுடையோர் தாமே எனக் கூறி தாமும் நோன்பு நோற்று முஃமின்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். நாம் இங்கு பித்அத்களாக மறுக்கும் அம்சங்கள் எதுவெனில் தடுக்கப்பட்ட விடயங்கள், ஷரீஆவுக்கு முரணான விடயங்கள், அல்லாஹ் இறக்கியருளாத அம்சங்கள் கலந்துவிட்ட விழாக்களையே ஆகும். அதாவது இன்று சில நாடுகளில் மீலாதுந் நபி தினங்கள், அவ்லியாக்கள், நல்ல மனிதர்களின் பேரில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளையே ஆகும்.

அபூ லஹப் பற்றி வந்துள்ள ஒரு சம்பவத்தைப் பாருங்கள். நபியவர்களது பிறப்பு பற்றிய செய்தியை சுவைபா எனும் அடிமைப்பெண் வந்து சொன்ன போது, அந்த சந்தோஷத்தின் காரணமாக அபூ லஹப் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்தான். இதன் காரணமாக அபூ லஹபுக்கான வேதனை கொஞ்சம் தளர்த்தப்பட்டதாக அந்த சம்பவம் கூறுகிறது. (புஹாரி)

அபூ லஹபை விடவும் நமது வழிகாட்டியான கண்மணி நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த நாளைக் குறித்து மகிழ்ச்சியடையத் தகுதி படைத்தவர்கள் நாமே என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

அடுத்து, ஃபாத்திமீக்கள் தான் மீலாதுந் நபியை அறிமுகம் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த ஷீஆ வழிகேடர்களை விடவும் நாமே தூதரை சரியான அமைப்பில் ஷரீஆவுக்கு உட்பட்டு அறிமுகம் செய்ய அருகதையுடையவர்களாவோம்.

இறுதியாக, கொண்டாடுகிறவர்களும் பித்அத்துதுக்களில் ஒருபுறம் மூழ்கியிருக்கிறார்கள் என்றால், நினைவுபடுத்த வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட இஸ்லாமிய அடிப்படையிலல்லாத பித்அத்தைத் தான் கூறுகிறார்கள் என்பது வெளிச்சமானது.

 

அன்புடன், ஸியாப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s