இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி

aaaaa

 

இஸ்லாமிய உலகு இன்று பல அரசியல் விற்பன்னர்களைக் கண்டுகொண்டிருக்கின்றது. இதே இஸ்லாமிய உலகு பின்னடைவுக்கு உட்பட்டு சின்னாபின்னப்பட்டு தம்மைச் சூழ சதிவலைகள் பின்னப்படுவதை அறியாத காலம் ஒன்றிருந்தது. இவ்வாறான நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட தகுந்த அறிஞர் குலாமொன்று இல்லாதிருந்த சந்தர்ப்பமொன்றில் இஸ்லாமிய உலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாக அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி காணப்படுகிறார்கள். அத்தகைய ஒரு சிந்தனைப் போராளியாக, தலைசிறந்த பத்தி எழுத்தாளராக, இஸ்லாமிய உலகின் நோய்களை மிகச் சரியாக இனங்கண்டு அடையாளப்படுத்துபவராக இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் எகிப்து தேசத்தைச் சேர்ந்த அரசியல் சிந்தனையாளர் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி குறித்துத் தேடி வாசித்தவற்றின் சாரமாகக் கீழ்வரும் எழுத்துக்களை வடிக்கின்றேன்.

பிறப்பும் இளமைக் காலமும்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியவர்கள் கி.வ. 1937ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி எகிப்தின் ‘அல்கிஸா’ மாநிலத்தின் அஸ்ஸப் எனும் பிரதேசத்தில் பிறக்கிறார்கள். ஆரம்பத்திலேயே இவருக்கு இஸ்லாமியப் பின்னணி கிடைக்கிகிறது. இவரது தந்தை அப்துர்ரஸ்ஸாக் ஹுவைதி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆரம்பகட்ட உறுப்பினர்களுள் ஒருவராவார்.

இவர் பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டில்தான் கவர்ணர் முஹம்மத் அலி பாஷாவினால் மதச்சார்பற்ற சிந்தனைகளுக்கான விதைகள் எகிப்திய மண்ணில் தூவப்பட்டிருந்தன. இதன் உச்சகட்ட அறுவடைகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பின் வந்த ஆங்கிலேய காலனித்துவக் காலப்பகுதிகளில் (கி.வ. 18882-1922) இன்னும் ஊன்றிக் கிடைத்தன. இவ்வாறே கி.வ. 1924 இல் நிகழ்ந்த கிலாபத் வீழ்ச்சி எகிப்தோடு சுருங்காமல் முழு இஸ்லாமிய உலகுக்கும் முக்கிய நிகழ்வாகும்.

கல்வி வாழ்வும் தொழில் வாழ்வும்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்களின் ஆரம்பக் கல்விகள் தொடர்பில் போதிய தகவல்கள் கிடைக்கவில்லையாயினும் அவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கி.வ. 1960 இல் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பம் இஃக்வானியப் பின்னணி கொண்டிருந்தமையால் பட்டம்பெற்ற 23 வயதுக்குள்ளாலேயே ஓரிரு தடவைகள் சிறைவாசத்தையும் அனுபவிக்க நேரிடுகிறது. இந்த சிறைவாழ்க்கை தன் பிற்கால வாழ்விலும் சிந்தனைகளிலும் பாரிய தாக்கம் செய்ததாக உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்களே குறிப்பிடுவார்கள்.
தன் இளமையைக் கழித்த அன்றைய நாசரிய எகிப்து சூழலும் பெற்ற சட்டத்துறைக் கல்வியும் இணைந்து சமூக-அரசியல் விவகாரங்களில் முனைப்பான பார்வையுள்ளவராக இவரை ஆக்கியது. தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பத்திகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். சிக்கலான அரசியல் நிலமைகள் பற்றி தொடர்ந்தும் எழுதி வந்த அவர் காலப்போக்கில் தெளிந்த சமூக-அரசியல் பார்வைகொண்டவராக மாறினார். தற்கால இஸ்லாமிய அரசியல் சூழலில் சிறந்த பங்களிப்பை நல்குவதில் இப்பின்னணிகள் களமமைத்துக் கொடுத்தன.

அவர் ஆரம்ப காலங்களில் எழுதிய பத்திரிகைகள் ‘அல்அரப்’ மற்றும் ‘அல்அஹ்ராம்’ என்பனவாகும். கி.வ. 1958 இல் அல்அஹ்ராமின் ஆய்வுப் பிரிவில் இணைந்து எழுதத் துவங்கிய அவர் இன்று வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார். அல்அஹ்ராமின் ஆசிரியர் குழுச் செயலாளராக பதவியுயர்வு பெறும் வரைக்கும் 18 ஆண்டு காலம் அல்அஹ்ராமில் எழுதியிருக்கிறார். பின்பு கி.வ. 1976 இல் குவைத்தின் அல்அரப் சஞ்சிகையில் இணைந்து கொள்கிறார்.

பின்பு கி.வ. 1983 இல் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த ‘அராபியா’ ஆங்கில சஞ்சிகையின் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்துகிறார். பின்பு கி.வ. 1985 இல் மீளவும் எகிப்து திரும்பி அல்அஹ்ராம் பத்திரிகையில் வாராந்தப் பத்திகள் எழுதத் தொடங்கினார்.

சிந்தனைகள்:

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி அவர்கள் பட்டப்பின் படிப்பு, கலாநிதிக் கற்கை எனத் தன்னை மேம்படுத்திக் கொண்ட ஒரு அறிஞரல்லர். மாறாக அவர் தொடர்ந்தேர்ச்சியான எழுத்துக்கள், உரைகள், மாநாடுகள், பட்டறைகள், செயலமர்வுகள் எனத் தன்னை வளர்த்துக் கொண்டவர் எனலாம்.
உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியின் கருத்துக்களுள் சமத்துவம் குறித்து முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. “குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் மனிதர்களிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் அடிப்படையானவை. அவர்களிடையே சிறப்புக்களேற்படும் எனின் அது மறுமையில் வேறொரு அளவுகோளின்படியே தீர்மானிக்கப்படும்.” (முவாதினூன் லா திம்மிய்யூன். ப:99)
இவ்வாறு தான் ‘தாருல் ஹர்ப்’ என்ற கருத்தியலையும் மறுக்கின்றார். முஸ்லிம் நாடுகள், மத நல்லிணக்கம் என்ற வகையில் மாற்று மதங்களுக்கும் வழிபாட்டிடங்கள் அமைக்க இடம்கொடுப்பது குறித்தும் பேசுகிறார். (முவாதினூன் லா திம்மிய்யூன். ப:200)
உஸ்தாத் அவர்களின் தந்தை அப்துர்ரஸ்ஸாக் ஹுவைதி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலே அங்கத்துவம் வகித்த போதிலும்; ஃபஹ்மி ஹுவைதி ஆரம்பத்தில் சிறிது காலம் மாத்திரமே இயக்கத் தொடர்போடு இருந்திருக்கிறார். பின்னர் சிறிது காலம் மேற்கின் சிந்தனைகளைக் கற்று; பின்னர் சுதந்திரமான சிந்தனையாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவர் தன்னை ஓர் இஸ்லாமியவாதியாக அடையாளம் செய்வதை எப்போதும் தவிர்த்தே வருகின்றார்.

அல்அரப் சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகத் தான் நியமிக்கப்பட்டதிலிருந்து அதுகாலவரையிலும் இருந்த சிந்தனைப் போக்கு மேலும் வளம் பெற்ற நவீன சிந்தனையாளராகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவ்வகையில் ஆரம்பமாக இயக்கப் பின்னணி, பின்னர் சட்டக்கல்வி மற்றும் மத்தியகிழக்கின் சிக்கல் மிகுந்த அரசியல் சூழ்நிலை அனுபவங்கள், பின்பு மேற்கத்திய சிந்தனைகளின் வெறுமை மிகுந்த அடிப்படைகளான சடவாதம் மற்றும் மதச்சார்பின்மை எனப் பல்துறைகளையும் நன்கு புரிந்துகொண்ட ஆளுமையாக அவரை அடையாளப்படுத்த முடியும்.

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி ஓர் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர் என்ற வகையில் அவர் முன்வைக்கும் அரசியல் கருத்துக்களில் சுன்னி-ஷீஆ பிளவுகளை இல்லாமல் செய்து அரசியல் ரீதியாக இணைக்கும் புள்ளிகளை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் மிகுந்த தாராளாப் போக்குடனும் தர்க்க ரீதியான நியாயங்களுடனும் எழுதி வெளியிட்ட ‘ஈரான் மினத் தாஃகில்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியிடம் புலம்பெயர் பத்திரிகையாளர் அஹ்மத் பஹாவுத் தீனின் தாக்கம் பரவலாக உள்ளதை அவர் எப்போதும் மறைத்து வைத்ததே இல்லை. அவ்வாறே பத்திரிகையாளர் முஹம்மத் ஹுஸ்னீன் ஹய்கலின் தாக்கத்தையும் அவதானிக்க முடியும்.
இமாம் ஜமாலுத்தீன் ஆப்கானி வழிவந்த இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியின் முக்கிய பிரமுகராக அடையாளம் செய்ய முடியுமானவராக இவர் இருக்கின்றார். அவ்வகையில் பிரதிகளை மாத்திரம் முற்படுத்தும் ஸலபி முகாம் எப்போதும் இவரது விமர்சனத்துக்குட்பட்டே வந்திருக்கின்றது. குறிப்பாக எகிப்திய அரசியல் களத்தில் ஸலபிக்களின் நுழைவை இவர் ஆரம்பம் முதலே கடுமையாகச் சாடி வந்தார்.

உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதியின் அறிவாக்கங்கள்:

உஸ்தாத் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தன் எழுத்துக்களில் சிவில் சமூகத்துக்கான குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார். இதற்கு ‘முவாதினூன் லா திம்மிய்யூன்’ (குடிமக்களே… சிறுபான்மையினர் அல்லர்) போன்ற நூற்கள் சிறந்த சான்றுகளாகும்.

எகிப்தின் முபாரக் யுக சர்வாதிகாரக் கொடுங்கோல் காலப்பிரிவிலும் நீதியான ஆட்சியமைப்பு நோக்கிக் குரல் எழுப்பி ‘மிஸ்ர் துரீது ஹல்லன்’ (எகிப்து தீர்வொன்றை விரும்புகிறது) எனும் நூலை எழுதினார்.

இவை தவிரவும் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் பல்வேறு அங்கங்கள் பற்றி ஆப்கானிஸ்தான், சீனா எனப் பல்வேறு தேச முஸ்லிம்கள் குறித்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.

அவர் எழுதிய நூல்களின் பட்டியல் வருமாறு:
1. அல்குர்ஆன் வஸ்ஸுல்தான். (அல்குர்ஆனும் அதிகாரமும்)
2. அஸ்மதுல் வஃயித் தீனி. (மார்க்க உணார்வின் நெருக்கடி நிலை)
3. முவாதினூன் லா திம்மிய்யூன். (குடிமக்களே… சிறுபான்மையினர் அல்லர்)
4. ஹத்தா லா தகூன ஃபித்னா. (பிரச்சினைகள் இல்லாதிருப்பதற்கு)
5. அல்இஸ்லாம் வத்திமோக்ராதிய்யா. (இஸ்லாமும் ஜனநாயகமும்)
6. அத்ததய்யுன் அல்மன்கூஸ். (அரைகுறை மதமாற்றம்)
7. அல்முஃப்தரூன்: ஃகிதாபுத் ததர்ருப்ஃ அல்அல்மானி ஃபில் மீஸான். (மதச்சார்பற்றோரின் வரம்பு மீறிய வாதங்கள் குறித்த அளவீடு)
8. இஹ்காகுல் ஹக். (சத்தியத்தின் ஸ்திரம்)
9. அல்மகாலாத் அல்மஹ்ளூரா. (தடைசெய்யப்பட்ட ஆக்கங்கள்)
10. மிஸ்ர் துரீது ஹல்லன். (எகிப்து தீர்வொன்றை விரும்புகிறது)
11. தஸ்யீஃபுல் வஃயி. (உணர்வு மோசடி)
12. அனில் ஃபஸாத் வஸனீனிஹி. (சீரழிவுகளும் காரணிகளும்)
13. ஃகுயூலுனா அல்லதீ லா தஸ்ஹுலு. (கனைக்காத குதிரைகள்)
14. தாலிபான்: ஜுன்துல்லாஹ் ஃபில் மஃரகா அல்கலத். (தாலிபான்: பிழையான போராட்ட்த்தில் அல்லாஹ்வின் படை)
15. ஹதஸ் ஃபி ஆப்கானிஸ்தான். (ஆப்கான் நிகழ்வுகள்)
16. அல்இஸ்லாம் ஃபிஸ்ஸீன். (சீனாவில் இஸ்லாம்)
17. ஈரான் மினத் தாஃகில். (ஈரான்: அதன் உள்புறமிருந்து…)

இந்நூல்கள் அனைத்தும் அரசியல் கண்ணோட்டத்தில் மக்கள் பிரச்சினைகளையும் அவற்றின் இஸ்லாமிய நிலைப்பாடுகளையும் ஊடாடிச் செல்கின்றன. இவை தவிர அவரது எழுத்துக்களும் உரைகளும் ஆயிரக்கணக்கில் நூல்வடிவம் பெறாமல் இருக்கின்றன.
அவர் 1958இல் துவங்கி இன்று வரைக்கும் 56 வருடங்களுக்கும் மேலாக எழுதி வரும் முக்கிய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை கீழ்வருமாறு பட்டியல்படுத்தலாம்:
1. அல்அஹ்ராம். (எகிப்து)
2. அல்வதன். (குவைத்)
3. அஷ்ஷர்க் அல்அவ்ஸத்.
4. அல்அரபி. (குவைத்)
5. அல்மஜல்லா.
6. அல்ஹிர்ஸ் அல்வதனி. (ஸவூதி அரேபியா)
7. அந்நூர். (குவைத்)
8. அல்முஸ்லிம் அல்முஆஸிர்.
9. அல்புனூக் அல்இஸ்லாமி.
10. அல்மவ்திப். (லெபனான்)
11. அல்முஃக்தார் அல்இஸ்லாமி.

இவை தவிரவும் எகிப்தின் சமகால சிந்தனை ஜாம்பவான்களான கலாநிதி முஹம்மத் இமாரா, அரசியல் சிந்தனையாளர் தாரிக் அல்பிஷ்ரி போன்றோர் உட்பட இன்னும் பலரோடு இணைந்து கூட்டு முயற்சியாக வெளியிட்டு வரும் ‘அத்தன்வீர் அல்இஸ்லாமி’ நூல் வரிசைகள் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பினூடாக இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் மூளைகளை ஒன்றிணைத்து மேற்குலகின் சிந்தனைகளுக்கு மாற்றாக இஸ்லாமிய மாதிரிகளை முன்வைப்பதில் உஸ்தாத் ஃபஹ்மி ஹுவைதி தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அதேநேரம் சமகால இஸ்லாமிய அறிஞர்களுடனும் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றார். கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி, ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி போன்றோரை மிகவும் மதிப்புடன் நோக்குபவராக ஃபஹ்மி ஹுவைதி அவர்கள் காணப்படுகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s