வேதனையின் குரல்கள்…

13178_483795804990386_1679876376_n

 

நேற்று மாலை கூட நான் அவ்விட‌த்தில்தான் நின்றேனே… என்னையே நம்ப முடியவில்லை… என் கண்களையும் என்னால் நம்பிக்கை கொள்ளவே முடியவில்லை. நான் காண்பதெல்லாம் என்ன??? வெறுமனே கட்டாந்தரை உள்ளத்தோடு நடைப்பிணமாகவே தொடர்ந்தும் தொடர்ந்தும் அலைந்து கொண்டிருக்கிறேன்

நேற்று இரவு, 10.30 தாண்டிச்சென்று 11.30 என அப்போது காட்டிக்கொண்டிருந்த நேரமாய்ப் பார்த்து எல்லோருமாய்க் கடலை நோக்கி பேய்த்தனமாக‌வே ஓடுகின்றனர். அக்கணங்க‌ள் கல்பு பதைத்து, நெஞ்சு விம்ம, இதயம் குமுற…. அக்கணங்கள் அவ்வாறுதான் இருந்தன. அப்போது பேய்த்தனமாக‌ ஓடுவதைத் தவிர‌ ஒருவருக்கும் ஒன்றுமே விளங்கப்போவதில்லையே… எனக்கும் கூடத்தான்… எங்கும் அல்லோலகல்லோலலம் “அங்க‌ல பாருடா கையொண்டு வெள‌ங்குது” பல குரல்கள்… நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் கரை நிரம்பவே ஆட்கள்…

எனக்கும், ஏன் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம்தான்… நாம் எதிர்பார்த்து சென்ற விடயம்தான் கிடைக்கவில்லையே… ஏமாற்றத்தோடு கரை நோக்கித் திரும்புகிறேன். வழியிலேயே பல வாய்வீச்சுக் குரல்கள்; ஒருவர், “அடேய் ஒன்னர மணிக்கி ஒரு அலையொன்டு அடிக்கியடா அந்த டைமுக்கு தான்டா மையித்து வெளிய வாற… இவங்க‌ சும்ம பொய்க்கி தடமாறுவ… அங்க‌ ஒண்டும் நடக்கப் போறல்ல” தன் கருத்துகூளங்களை அள்ளி வீசினார். இன்னொருவர், “எங்க‌ட சோன‌வண்டா கடல்ல பெய்த்தீக்கி, நாங்க‌ கடசி வர‌ங்காட்டீம் இவடத்தில நிக்கோண‌ம்டா” தன் சமூகப்பற்றின் வார்த்தைகளை அவர் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தெரிந்த மொழி அதுவல்லவா…

நான் மனமாற நேசிக்கும் கடலன்னையின் காற்றுக்களைக் கூட நேற்று முழு மனதோடு வெறுத்தே விட்டேன். வெறுப்பின் உச்சத்தில் இருந்தவாறே கரையை மீளவும் அடைகின்றேன்.

அங்கு… மாலையில் கண்டுவிட்டுப் போன அதே காட்சி… ஆனால் அது இப்போது என் மனதை உருக்கி எடுக்கின்றது.. கழற்றி வைத்துவிட்ட நிலையில் சைக்கிளிலேயே இருந்த சின்னஞ் சிறு அரைக்கை சேர்ட்டும் அதற்கு மேலால் போடப்பட்டிருந்த அடுத்தவனின், கறுப்பும் வெள்ளையுமாய்ப் பக்கவாட்டில் கோடிடப்பட்ட‌ சிறிய டீ-சேர்ட்டும்… காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதன் வாசம் என்னை அடைவது போலவே ஓர் எண்ணம். அனைத்தயும் திரும்பத் திரும்பப் பார்க்க பார்க்க என்நெஞ்சின் விம்மல்களை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. துக்கம் பொத்துக்கொண்டு வந்தது. பதறலும் பதட்டமுமாய்க் கண‌ங்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன.

ஒவ்வொருவரும் ‘அந்தப்பிள்ளை தாண்டீக்காதுவா… தாராவது கடத்திக்கொண்டு பெய்த்தீக்கும்’ , ‘ஊட்டுக்கு பயந்து எங்கயாவது ஒளிச்சீக்கும்’ பொசிட்டிவ்வாக யோசிச்சி தம்மையே தேற்றிக்கொள்ளப் பார்த்தனர். என் மனதும் அவ்வாறுதான் தொடர்ந்தும் பொய் சொல்லிக்கொண்டேயிருந்தது.

மணி 1.30 எனக் காட்டியது. அலைகளின் ஆர்ப்பரிக்கும் சப்தங்களின் நடுவே மையித்துக்களைத் தேடிக்கொன்டிருந்த சகோதரர்கள் ஆக்ரோசமாய்க் கத்தும் குரல் அலைகளை ஊடறுத்து என்னைய‌டைந்து கொண்டிருந்தது… சற்று அத்திசை நோக்க அனைவரும் மீளவும் கடல் நோக்கி விரைவாய் ஓடுவது தெரிகிறது. அக்கடல் ஞானி சொன்னது சரியாகிவிட்டதே என்றெண்ணியவ‌னாகவே நானும் விரைகின்றேன்…

போன கணம், சிங்க‌ள சகோதரர் ஒருவர் கத்திக் கொண்டிருக்கிறார். “அப்பி சிங்ஹல அப்பி ஓகொல்லன்ட உதவ் கரனவா. கவுருத் என்ட‌ எப்பா. ஹெல்ப் மீ… மம முஸ்லீம் பாஷாவ த‌ன்னெ.” விசாரித்ததில் அங்கு சோனக வாதம் பேசிய ஒரு மேதாவி மையித்துக்களைத் தேடிக்கொண்டிருந்த‌ சிங்கள சகோதரர்களை வெறுப்பேற்றியது தெரியவர‌ மனம் வெதும்பியவ‌னாகவே மீளத்திரும்புகிறேன்.

நேரம் நள்ளிரவுகளைக் கடந்து கொண்டிருந்தது. நினைவுகளும் வந்து வந்து வாட்டிக் கொண்டேயிருந்தன. அவன், இல்லை இருவரும்தான் அடிக்கடி பண்ணும் குறும்புகள், சேட்டைகள், கள்ளச்சிரிப்புகள்… எல்லாமே… அனைத்தும் நான் ரசித்தவையே… இப்போது என் மனம் ரசனையற்று சோம்பிக்கிடக்கிறது. ‘ஐயோ நான் கண்டிருக்கக்கூடாதா? காப்பாற்றியிருக்கலாமே?’ தொடர்ந்தும் வீண் வேதங்களைத்தான் பிதற்றிக் கொண்டிருக்க வேண்டியிருந்த‌து.

ஐந்து வருடங்களாய் ஊரில் இல்லை என்ற போதும், எப்போதும் ஒட்டித்திரியும் அந்த இரு பிஞ்சு முகங்களும் என்னுள்ளே ஆழமாகவே பதிந்திருக்கின்றன. அது ஏற்படுத்தி விட்டிருக்கும் வடுக்களும் ஆழச்சென்று விட்டன.

9 வருடங்களுக்கு முன் ஜெஸ்லியயும் முன்ஷிதையுமிழந்தோம். இப்போது இன்னுமிருவரா? நினைக்கவே மனம் பதைக்கிறதே… துக்கம் மிகைக்கிறது. மனது தொடர்ந்தும் அழுது கொண்டேயிருக்கிறது.

மணி நள்ளிரவு தாண்டி 3.30 ஐ நெருங்குகிறது. தேடலும் தொடர்ந்து நடக்கிறது. அந்த நள்ளிரவிலும் இருநூறுக்கும் மேல் எமது இளைஞர்கள்; அவர்களை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. ஊர்ப் பெருசுகள் எப்போதும் எம் இளைஞர்களை மட்டந்தட்டத் தவறுவதே இல்லை. அதே நேரம் அவர்களை வழிகாட்டிக் கொண்டு செல்ல நினைப்பதும் இல்லை.

இறுதியில், தூக்கம் மேலிட வீட்டுக்கு வந்து சிறிது உறங்கி; காலை 7 மணிக்கு மீண்டும் கடல் செல்ல நினைக்கையில் பேரிடியாய் அந்த sms வந்திறங்குகிறது. ஒரு மையித்தை எடுத்து விட்டார்களாம். மீண்டும் கடல் செல்கிறேன். அதே கூட்டம் உறக்கமின்றி மனிதாபிமானத்துக்காய் கடுமையாய் உழைத்துக் கொண்டிருந்தது. பகல் நெருங்கி 10.30 தாண்டிக் கொண்டிருக்கிறது. கடும் சோகங்களுக்கும் உள்ளங்களின் ஓலங்களுக்கும் மத்தியில் அடுத்த மையித்தும் வெளியே கண்டெடுக்கப்படுகிறது. முழு ஊரும் பாலத்தடியிலே திரள்கிறது.

அந்த இரு பிஞ்சு உள்ளங்களும் முழு ஊரினதும் கவனங்களை தம்முள்ளே ஈர்த்தெடுத்திருந்தன. முழு ஊருமே அவர்களுக்காய்க் கூடியதே… அதன் மூலம் அவர்கள் எமக்குச் சொல்ல வந்த‌ செய்திதான் என்ன…? நான் எழுத வந்ததை எழுதி முடிக்காமலேயே… சொல்ல நினைத்த‌தை சொல்லி முடிக்காமலேயே மைக்குப்பியை மூடுகிறேன். இனிமேல் இவ்வாறானதொன்று நடக்கவே கூடாதென்ற பிரார்த்தனையுடன்… ஆனால், அது நம் கையில் இல்லையே…

2013 பெப்ருவரி 4

திங்கள், மாலை 6.00

இறுதியாய் ஒரு குறிப்பு: அக்குழந்தைகளின் பெற்றோருக்கு இவ்விழப்பை எதன் மூலமும் ஈடு செய்து விட முடியாது. அவர்கள் மட்டுமல்ல எல்லோருமே அல்லாஹ்வின் நாட்ட சக்திக்கு முன்னால் தம் இயலாமையை ஏற்றுப் பணிந்து செல்ல வேண்டியதுதான். ஆனால் இறைவன் அனைத்திலும் எமக்கு ஒரு நலவை வைத்திருக்கிறான் எனும் எண்ணம் தான் எவருக்கும் ஓர் ஆழ்ந்த விடுதலையைத் தம் மனத்தவிப்புகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s