அஹ்மதின் வாப்பா நோன்பு துறப்பதற்காக அஹ்மதுக்கும் அவனது சகோதரர்களான பிலால், ஹனா, ஹயா மற்றும் அயல் வீட்டு நண்பர்களுக்கும் என பத்து இனிப்புப் பண்டங்களை வாங்கி வந்திருந்தார். அனைத்து இனிப்புப் பண்டங்களையும் எடுத்துச் சென்ற அஹ்மத், அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியினுள் வைத்தான்.
நோன்பு துறக்கும் நேரமும் வந்தது. வாப்பா அஹ்மதிடம், அனைவருக்கும் இனிப்புக்களைப் பரிமாறுமாறு கூறினார். பின், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்த அஹ்மதுக்கு ஒரே அதிர்ச்சி… அங்கே ஆறு இனிப்புக்கள் குறைவாக இருந்தன.
கவலையோடு எஞ்சியிருந்த நான்கு இனிப்புக்களையும் கொண்டு வந்து வாப்பாவிடம் கொடுத்தான். வாப்பாவும் கவலையோடு அவற்றைப் பிரித்து எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கினார். அஹ்மத் தனது இனிப்பை தன் சின்னத் தங்கை ஹயாவுடன் பாதியாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டான்.
மீண்டும் மறுநாள் வாப்பா அனைவருக்கும் பத்து இனிப்புக்களை வாங்கி வந்து அஹ்மதிடம் கொடுத்தார். இஃப்தார் நேரமாகியது. வாப்பாவும் அஹ்மதிடம் இனிப்புக்களைப் பரிமாறுமாறு கேட்க, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அன்றும் முன்னைய நாள் போலவே இனிப்புக்கள் குறைவடைந்திருந்தன. வாப்பாவும் அவற்றை முடிந்த வரையில் பகிர்ந்து கொடுத்தார்.
அடுத்த நாள் இனிப்புக்களைக் கொண்டு வந்த வாப்பா அஹ்மதிடம் கொடுத்துவிட்டு, உம்மாவிடம் என்ன நடக்கிறது என பார்க்குமாறு வேண்டினார். உம்மாவும் அவதானித்துக் கொண்டிருக்கையில் ஹயாவும் பக்கத்து வீட்டு நண்பி ஆயிஷாவும் வந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஓர் இனிப்பை எடுத்தனர். உம்மா, “எடுக்க வேண்டாம்.” எனக் கூறிய போது, “நாங்கள் ஒரு இனிப்பைத் தானே எடுக்கிறோம்.” என்று விட்டு எடுத்துச் சென்றனர். பின்னர் பிலாலும் அவனது நண்பர்களான காலிதுடனும் இர்ஷாதுடனும் வந்து “ஒரு இனிப்பு தானே உம்மா..” எனக் கூறிவிட்டு இனிப்புக்களை எடுத்துச் சென்றனர்.
சிறிது நேரத்தின் பின் இஃப்தாருக்காக அனைவரும் ஓரிடத்தில் வந்தமர்ந்தனர். வாப்பாவும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருமாறு அஹ்மதிடம் கூறினார். அன்றும் இனிப்புக்கள் குறைந்திருந்தன. உம்மா நடந்த விடயங்களை வாப்பாவிடம் கூறினார்.
அனைவரையும் அழைத்த வாப்பா “நீங்க ஒவ்வொருவரும் ஒரு இனிப்புத் தானே என ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போறீங்க. எல்லாம் சேர்ந்து கடைசியில் நோன்பு துறக்குற நேரத்தில எல்லோருக்கும் இனிப்பு போதாமல் போயிடுது. எனவே நாங்க இனிமேல் இஃப்தாருக்கு மட்டும் இனிப்புக்களை எடுப்போமா?” எனக் கேட்டார். பிள்ளைகள் எல்லோரும் தம் தவற்றை உணர்ந்து இனிமேல் எடுப்பதில்லை என முடிவு செய்தனர்.
உம்மாவும் வாப்பாவும் தம் பிள்ளைகளை எண்ணி மகிழ்ந்தனர். அடுத்த நாளிலிருந்து எல்லோருக்கும் இஃப்தார் நேரத்தில் இனிப்புக்கள் போதுமானதாக இருந்தது. பிள்ளைகள் அனைவரும் தம் அயல் வீட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்து மகிழ்ந்தனர்.