கம்போடிய முஸ்லிம்கள்

IMG_8846

கம்போடிய முடியரசு

தலைநகரம்: நொம் பென்

சனத்தொகை: 14.8 மில்லியன் (உலக சனத்தொகையில் 69வது இடம்)

இனக்குழுக்கள்: ஃக்மெர் (90%), வியட்நாமியர்(5%), சீனர்(1%), ஏனையோர்(4%) இங்கு 30க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடிகள் வசிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ மொழிகள்: ஃக்மெர் (அவுஸ்திரோ-ஆசிய மொழிக்குடும்பம்), ஃப்ரென்ச் மொழி

மதங்கள்: உத்தியோகபூர்வ மதம் தேரவாத பவுத்தம் (96.9%), இஸ்லாம் (1.9%), கிறிஸ்தவம் (0.4%), ஏனையவை (0.8%)

நாணயம்: ரியெல் (KHR)

வருமானம்: சுற்றுலாத்துறை, பழ உற்பத்தி, அரிசி உற்பத்தி

நாட்டின் பரப்பளவு: 181,035 சது.கி.மீ (சது.கி.மீட்டருக்கு 81.8 பேர்)

ஆட்சி முறைமை: யாப்புக்குட்பட்ட முடியரசு

அரசுத் தலைவர் பிரதமர்: ஹுன் சென்

மன்னர்: நரொடொம் சிஹாமொனி

 

கம்போடியா என்றும் கம்பூச்சியா என்றும் அழைக்கப்படும் தென்கிழக்காசிய பவுத்த பெரும்பான்மை நாடு குறித்து நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை தான். ஒரு காலத்தில் பெரும் இந்து சாம்ராஜ்ஜியமாகவும் அண்மைய நூற்றாண்டுகளில் தேரவாத பவுத்தத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இத்தென்கிழக்காசிய நாடு வடமேற்கு மற்றும் வடக்கே தாய்லாந்தையும் வடக்கு மற்றும் வடகிழக்கே லாவோஸையும் கிழக்கே வியட்நாமையும் தெற்கு மற்றும் தென்கிழக்கே தாய்லாந்து விரிகுடாக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

இப்போதும் கூட நாம் கம்போடியாவில் அதன் தொன்மம் நிறைந்த இந்துப் பாரம்பரியத்தை நினைவூட்டும் சான்றுகளாக பாரிய, பிரமாண்ட கோவில்கள் மற்றும் கட்டடக் கலை வடிவங்களைக் காணலாம். அவற்றைக் காண்பதற்காகவே வருடந்தோறும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கம்போடியா  நோக்கிப் படையெடுக்கின்றனர். இப்பாரம்பரியங்களிலும் பண்டைய மன்னர்களின் பெயர்களிலும் தென்னிந்திய வாசம் அச்சொட்டாகத் தெரிவதை நாம் காண முடியும்.

இத்தேசத்துக்குக் கம்போடியாவுக்கு முன்னோடியாக அமைந்த ‘கம்பூஜா’ எனும் பெயரை முதன்முதலில் பயன்படுத்தியவர் அங்கர் வம்ச மன்னரான கி.வ. 802 ஐச் சேர்ந்த இரண்டாம் ஜயவர்மன் என அறியப்படுகிறார். இவர்கள் காலத்தில்தான் புகழ்பெற்ற உலக சுற்றுலாத் தலமான ‘அங்கர்வாத்’ கட்டப்பட்டது; இந்து மதம் கோலோச்சியது. இறுதியில் அயுத்தயா வம்சத்திடம் ஆட்சி வீழ்ந்த்தும் பவுத்தம் எழுச்சி கண்டது. பிற்காலங்களில் கி.வ. 1683 முதல் பிரான்சின் காலனித்துவத்துக்குட்பட்டிருந்த கம்போடியா கி.வ. 1953 இல் அரசியல் சுதந்திரம் பெற்றது.

பிரான்சிய ஆட்சிக்காலங்களில் கம்போடியாவுடன் இணைத்து லாவோஸ் மற்றும் வியட்நாமும் பிரான்சின் கீழ் காலனித்துவப்படுத்தப்பட்டிருந்தது. அக்காலங்களில் இம்மூன்று நாடுகளும் இணைத்து இந்தோசீனா என்றே உலக அரங்கில் பிரபல்யம் பெற்றிருந்தது.

சுதந்திரத்தின் பின்னரும் தொடர்ந்தேச்சையாகப் பல சவால்களை நாடு எதிர்கொண்டது. அயல் நாடான வியட்நாமில் இடம்பெற்ற நீண்ட யுத்தம், கம்போடிய அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து வந்த படுகொலைகள் (1975-1979), இறுதியாக கம்போடிய-வியட்நாம் யுத்தம் (1979-1991) என ஸ்திரத்தன்மை இன்றிய தேசமாகவே தொடர்ந்தும் இருந்து வந்தது. இப்போதும் கூட ஓர் எல்லை நாடான தாய்லாந்துடன் தொடர்ந்தும் எல்லை தொடர்பான தகராறு இருந்தே வருகிறது.

இப்போது நாட்டை ஆட்சி செய்யும் ஹுன் சென்னின் 25 வருட நீண்ட ஆட்சிக் காலமே தென்கிழக்காசியாவில் அரச குடும்பம் அல்லாது நீண்ட கால ஆட்சியாகவும் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கம்போடியா தொடர்ந்தும் பட்டினியிலும் வறுமையிலும் முன்னணியில் இருக்கும் நாடாகவே இருக்கிறது. ஹுன் சென்னின் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், சுதந்திரம் எள்ளளவும் பொருட்படுத்தப்படுவதில்லை என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

 

 

கம்போடியாவில் இஸ்லாம் அறிமுகமாகிறது

கம்போடியா நாட்டில் இஸ்லாமின் அறிமுகம் எம் நாட்டுடன் ஒப்பிடும் போது மிகக்குறுகிய வரலாற்றைக் கொண்டது கி.வ. 1837ம் ஆண்டுகளில் சாமியர்களின் (மத்தியகிழக்கு ஷாம் அல்ல) வருகையோடு இஸ்லாமின் பரவல் ஆரம்பித்தது. இவர்களின் பூர்வீக நிலம் வியட்நாமின் தென்கிழக்குக் கோடியாகும். இவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதற்குப் பின்னணியில் இந்திய, மலேசிய, இந்தோனேசிய முஸ்லிம்களின் பங்கு இருந்ததெனக் கூறுகிறார் நொம் பென் அல்அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதான இமாம் ஹாஜி யூஸுஃப்.

இந்த சாம் இனத்தவர்கள் தம்மை தூதர்(ஸல்) அவர்களின் அருமை மனைவியர்களுள் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களுடைய தந்தை ஜஹ்ஷ் அவர்களைத் தமது பரம்பரையில் முன்னோர் எனக் கூறுகிறார்கள். எவ்வாறிருப்பினும் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்கள் இப்பிரதேசங்களில் காலடியெடுத்து வைத்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த ஸஹாபாக்கள் கி.வ. 617-618 களில் அபிசீனியாவிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இந்த சாமிய இனம் தென் கிழக்காசியாவில் உள்ள விஷேடமான இனக்குழுவாகும். இவர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 எனக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களுள் 300,000 க்கும் அதிகமானோர் கம்போடியாவில் வசிக்கின்றனர். வியட்நாமில் 150,000 பேரும் ஏனையோர் மலேசியா, சீனா, தாய்லாந்து என மிகச் சிறிய தொகையினராக சிதறி இருக்கின்றனர். சீனாவிலுள்ளவர்கள் ஷீஆக்களின் இமாமிய்யா பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 5000 தான். சாம் இனத்தவர்களில் அதி-பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லிம்களாவர். எனினும் இந்து, பவுத்த மதங்களைப் பின்பற்றுவோரும் சொற்பத் தொகையினர் உண்டு.

கம்போடிய சமூகத்தில் முஸ்லிம்கள்:

அரச தரவுகளின் படி சுமார் 3 இலட்ச முஸ்லிம்கள் சாம் எனப்படும் இனக்குழுவினராவர். இவர்கள் 1.9% சனத்தொகை எனக்காட்டப்பட்ட போதும் 15% அளவான தொகையினர் இருக்கலாமென நம்பப்படுகிறது. இவர்கள் சாம் எனப்பட்ட இராச்சியம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றவர்களாவர். சாம் என்ற பெயரில் இன்றும் கம்போடியாவில் ஒரு மாகாணம் காணப்படுகின்றது. சாம் இனத்தைச் சார்ந்தோர் நாட்டின் ஏனைய பாகங்களிலும் இப்போது சிதறி வாழ்கின்றனர். சாமியர்களைப் பொறுத்தமட்டில் நாட்டிலுள்ள ஏனையோரை விடவும் மதம், மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்களில் தனித்துவப்பட்டு நிற்கின்றனர். சாம் கிராமங்கள் நகரை விட்டும் ஒதுங்கியிருக்கும். ஒவ்வொரு கிராமமும் ஒரு மஸ்ஜிதை மையம் கொண்டதாக இருக்கும்.

பொதுவாகக் கம்போடிய முஸ்லிம்களுள் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்கின்றனர். கல்வியிலும் மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரம் பெருமளவு நெல்லுற்பத்தியைச் சார்ந்து தான் இருக்கிறது. இது தவிர தானியங்கள், பருத்தி, புகையிலை, தாவர எண்ணெய் வகைகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோரும் உள்ளனர். அன்றாடம் ஆறுகளிலும், குளங்களிலும் மீன்பிடிப்பது மூலமாக வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ளவேண்டிய பரிதாப நிலையிலும் அநேகர் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்காக ஹலால் உணவகங்கள் நடத்துவோரும் உள்ளனர்.

சிவில் அமைப்புக்களும் நிறுவனங்களும்

சாம் முஸ்லிம்கள் ஒரு போதும் தமது பிரச்சினைகளை வெளியே கொண்டு செல்வதில்லை. மாறாக தமது ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்துக்கும் இருக்கும் தலைவரே இவையனைத்துக்கும் பொறுப்புக் கூறி முடிவுகளை எடுப்பார். கிராமங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்போடிய முஸ்லிம்களை ஒழுங்குபடுத்தும் உயர் அமைப்பாக Highest Council for Islamic Religious Affairs in Cambodia (HCIRAC) காணப்படுகிறது.

கி.வ. 1970ம் ஆண்டுகளில் கம்போடிய முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய இரு அமைப்புக்களைக் கம்போடிய முஸ்லிம்களின் புத்தெழுச்சியாக நோக்க முடியும். அவ்விரு அமைப்புக்களும்தான்…

  1. The Central Islamic Association of Cambodia

இவ்வமைப்பு கம்போடிய முஸ்லிம்களின் கலாசார சமூகக் கட்டுக்கோப்புக்களைப் பேணுவதைத் தனது இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

  1. Cambodia Islamic Youth Association (CIYA)

இது கம்போடிய முஸ்லிம்களின் கல்வி, சமூக, மாணவர்களது மத விவகாரங்கள் மற்றும் மாணவர்களுக்கான உயர்கல்விப் புலமைப்பரிசில்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இவ்வமைப்புத்தான் போர்க்காலங்களில் முஸ்லிம்களுக்காகக் கடுமையாகப் பாடுபட்டு நிவாரண வேலைகளில் ஈடுபட்டது.

கல்வி நிலையைப் பொறுத்தளவிலும் பின் தங்கிய நிலை தான் இன்னும் நிலவுகிறது. அவர்களது மொழிக்கு இன்னும் அரிச்சுவடி கூட இல்லை. அல்குர் ஆன் கூட இன்னும் சாமிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படாத நிலையிலுள்ளது. சொற்ப அளவானோர் வெளிநாடுகளில் கற்றுவிட்டு வருகின்றனர். கல்வி, முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் இன்னும் பல மடங்குகள் எழுச்சி பெறவேண்டியிருக்கிறது.

கம்போடிய அரசியலில் முஸ்லிம்கள்

70களின் பின்னர் அரசியலமைப்பு மாற்றத்தின் பின்பு முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு அங்கு அதிகரித்து வந்ததைக் காணலாம். அதன் பின்பு முஸ்லிம்களுக்கு செனட்டில் ஒரு உறுப்பினர் தொடர்ந்து இருந்துவருகிறார். பிரதிநிதிகள் சபையில் நால்வர் உறுப்பினர்களாக உள்ளனர். முஸ்லிம் ஒருவர் பிரதி உள்விவகார அமைச்சராகக் கடமையாற்றியும் இருக்கிறார். ஐவர் வெளிநாட்டமைச்சில் முக்கியப் பணிகளில் உத்தியோகம் புரிகின்றனர்.

வியட்நாமிய கம்யூனிச ஆக்கிரமிப்புப் பிரச்சினையின் போது முஸ்லிம்கள் கம்போடியாவுக்காக நின்றனர். அதனால் முஸ்லிம்கள் உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரங்களும் நிகழ்ந்தேறின. இன்னும் பலர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு பலர் படுகொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. கற்றவர்கள் கிராமங்கள் தோறும் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். இதன் போது கல்வியறிவுள்ளவர்களாகக் கருதப்பட்ட 113 பேரில் 20 பேர் மட்டுமே எஞ்சினர். கி.வ. 1975 இன் பின் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்ததும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் சூறையாடப்பட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்கள் கவ்வியதாக கம்யூனிச ஆட்சிக் காலம் கம்போடிய முஸ்லிம்களுக்கு மாறியது.

இறுதியாக…

கம்போடிய முஸ்லிம்கள் முன்னேற வேண்டிய மட்டங்கள் கண்ணுக்கெட்டாத தொலைவிலே இருக்கின்றது. அவர்கள் கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக மட்டங்களில் கம்போடிய தேசிய அளவில் இன்னுமின்னும் எவ்வளவோ போக வேண்டியுள்ளது. அவர்கள் மத்தியில் கற்றவர்கள் அதிகரித்து எழுச்சி ஏற்பட வேண்டும். இத்தனைக்கும் மத்தியில் கிறிஸ்தவ மிஷனரிப் பிரசாரகர்களின் கழுகுப் பார்வை அவர்கள் மீது பதிந்து தான் இருக்கிறது. எமது உம்மத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் அவர்களது முன்னேற்றத்துக்காக நாம் எம் பிரார்த்தனைகளில் முதலில் இணைத்துக் கொள்வோம்.

 

Advertisements