பல்கேரியாவில் இஸ்லாம்

P07-140223-304

பல்கேரியா குடியரசு

தலைநகரம்: ஸோஃபியா

சனத்தொகை: 7,364,720 (சது.கி.மீட்டருக்கு 66.2 பேர்)

இனக்குழுமங்கள்: பல்கேரியர் 84.6% , துருக்கியர் 8.9%, ரோமானியர் 4.8%, ஏனையோர் 1.7%

மொழிகள்: பல்கேரியன் (உத்தியோகபூர்வ மொழி), துருக்கிய மொழி

சமய நம்பிக்கைகள்: ஒர்த்தொடக்ஸ் கிறிஸ்தவம் 82.2%, இஸ்லாம் 12.2%,  நாத்திகம் 3.9%, கத்தோலிக்கம் 0.6%, புரட்டஸ்தாந்து 0.2%, ஏனையவை 0.1%

நாணயம்: லிவ் (BGN)

பொருளாதாரம்: கனரக தொழிற்சாலைகள்,  சக்திவள உற்பத்தி, விவசாயம்,

நாட்டின் பரப்பளவு: 110,994 சது.கி.மீ

ஆட்சி முறைமை: பல்கட்சிப் பாராளுமன்றக் குடியரசு

பாராளுமன்றம்: நெஷனல் அசெம்பிளி

அரசுத் தலைவர் பிரதமர்: ரோஸன் ப்ளிவ்னிலீவ்

ஜனாதிபதி: பொய்க்கோ பொரிஸொவ்

 

பல நாடுகள் விதவிதமான முறைகளில் எமக்கு அறிமுகமாகின்றன. அந்தந்த நாடுகள் சிற்சில துறைகளில் இருக்கும் அபரிமித ஆற்றல்களூடாகப் பெறும் பிரபல்யங்கள் அந்தத் தேசங்கள் குறித்த செய்திகளை எம்மை அடையச் செய்கின்றன. இலங்கைக்குத் தேயிலையும் கிரிக்கெட்டும் போல… இவற்றையெல்லாம் தாண்டி உலகில் பல நாடுகள் எம்மத்தியில் பேசப்படாமலேயே இருந்துவிட்டுப் போகின்றன. அவ்வகையில் எமக்கு மத்தியில் பேசப்படாது போனாலும் இஸ்லாமிய உலக வரலாற்றிலே உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் காலங்களில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்கிய பல்கேரியா நாட்டிலே வீசும் இஸ்லாமிய சுவாசங்களை நுகர்வோம்.

பல்கேரியா நாடு தென்கிழக்கு அயிரோப்பாவிலே அமைந்திருக்கும் மத்திய அளவு பருமன்கொண்ட நாடாகும். இதன் வடக்கில் ரோமானியாவும் மேற்கில் சேர்பியா மற்றும் மஸிடோனியாவும் தெற்கில் கிரேக்கம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் கிழக்கிலே 110,994 கி.மீட்டர் நீண்ட நீளத்தில் கருங்கடலையும் தனது எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது. அயிரோப்பியா நாடுகளில் 16வது அளவு பருமன் கொண்டதாக பல்கேரியா காணப்படுகிறது.

வரலாற்றுவெளியிலே காலாகாலமாக பல்கேரியாவை கிரேக்கர்கள், ரோமானியர், உதுமானியர் எனப் பல்வேறு அரசவம்சங்கள் ஆட்சிசெய்துவந்திருக்கின்றன. அவ்வகையில் முதல் பல்கேரியா பேரரசு கி.வ. 681-1018 காலப்பகுதிகளிலும் இரண்டாவது பல்கேரியா பேரரசு கி.வ. 1185-1396 காலப்பகுதிகளிலும் நிகழ்ந்ததென அடையாளப்படுத்துவர். இறுதியாக தொடர்ந்துவந்த அயிந்து நூற்றாண்டுகள் உதுமானிய ஆட்சியின் கீழ் பல்கேரியா இருந்தது. பின்னர் கி.வ. 1877-78 காலப்பிரிவில் இடம்பெற்ற துருக்கி-ரஷ்ய யுத்தத்தின் காரணமாக வித்திடப்பட்டு கி.வ. 1908 ஒக்டோபர் 5 இல் உதுமானியரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நவீன பல்கேரியா உருவாகியது.

தனிநாட்டு உருவாக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளில் பல்கேரியா விழுந்தெழுந்து வந்திருக்கின்றது. குறிப்பாக இரு உலக மகா யுத்தங்களிலும் ஜெர்மனியை எதிர்த்து நின்றது. 1946 களோடு பல்கேரியா தனிக்கட்சி ஆட்சிகொண்ட சோஷலிஸ தேசமாக உருவெடுத்தது. இது அன்றைய சோவியத்தின் கிழக்கு அயிரோப்பா கிளையின் ஓர் அங்கமாகவே இருந்தது. இறுதியில் 1989ம் ஆண்டு டிசம்பரில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பல்கட்சித் தேர்தல் முறைமைகளுக்கு அங்கீகாரம் அளித்தது. அதன் பின்பு பல்கேரியா மெதுமெதுவாக முதலாளித்துவ தேசமாக மாற்றமடைந்தது.

இன்றைய பல்கேரியா 28 நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும் தலைநகரைச் சூழவுள்ள மாகாணங்களே மக்களின் கேந்திரக் குடியேற்றங்களாக அமைந்திருக்கின்றன. வர்த்தக, கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் தலைநகர் ஸோஃபியாவை மையம் கொண்டே சுழல்கின்றன.

1991 இல் உருவாக்கப்பட்ட புதிய யாப்பின்படி அங்கு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலவுகிறது. அயிரோப்பிய யூனியன், நேட்டோ, அயிரோப்பிய கவுன்சில் என்பவற்றில் அங்கத்துவம் வகிப்பதோடு அயிரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமையத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் காணப்படுகிறது. அயிக்கிய நாடுகள் அமையத்தின் பாதுகாப்பு வாரியத்தில் மும்முறைகள் தற்காலிக உறுப்பினராகவும் இருந்தது.

பல்கேரியாவில் இஸ்லாமின் பரவல்:

பல்கேரியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினராக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மொத்த சனத்தொகையில் 12.2% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்களின் மொத்த தொகை ஒரு மில்லியனை நெருங்குகின்றது. பல்கேரியா முஸ்லிம்கள் பிரதானமாக மூன்று இனக்குழுக்களில் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களுள் பிரதானமாக துருக்கியர் 700,000 ஐத் தாண்டியும் 130,000 க்குச் சற்று அதிகரித்த போமாக்ஸ் எனப்படும் பல்கேரிய இனத்தவரும் 103,000 அளவில் ரோமானிய இனத்தவரும் உள்ளனர். பெரும்பாலும் பல்கேரியா முஸ்லிம்கள் சுன்னி இஸ்லாமைப் பின்பற்றுவோராக இருக்கின்றனர். அண்ணளவாக 25,000 எண்ணிக்கையில் ஷீஆக்களும் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. அதேநேரம் காதியானிக்களது பரவலுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவில் ஏனைய கிழக்கு அயிரோப்பிய நாடுகள் போன்றே இருப்பது போன்றே பல்கேரியா முஸ்லிம்கள் ஃபிக்ஹிலே ஹனபி சட்ட மரபையும் அகீதாவில் மாதுரீதிகளாகவும் காணாப்படுகின்றனர்.

பல்கேரியாவில் இஸ்லாமின் பிரவேசத்தைப் பொறுத்தவரையில் முதற் தடவையாக பல்கேரியாவினுள் முஸ்லிம்களின் பிரவேசம் கி.வ. 9ம் நூற்றாண்டுகளின் நடுக்கூறுகளில் இடம்பெற்றதென அப்போதைய போப், பல்கேரியா ஆட்சியாளருக்கு அனுப்பிய கடிதங்கள் போன்ற ஆவன்ங்கள் வழியாக அறியமுடிகிறது. பின்னர் 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் துருக்கிய கோத்திரங்களின் இடப்பெயர்வோடு இத்தொகை இன்னும் அதிகரித்தது. இறுதியிம் 14ம் நூற்றாண்டுன் நடுப்பகுதியில் நிகழ்ந்த துருக்கியப் படையெடுப்புக்கள் கி.வ. 1390 ஆகும் போது முழு பல்கேரியாவையும் உதுமானிய ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தது. உதுமானிய ஆட்சியாளர்களும் சுன்னி இஸ்லாமின் பரவலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர்.

பல்கேரிய விடுதலை சிந்தனைகள் தொடங்கும் முன்னர் 19ம் நூற்றாண்டிலே 2356 பள்ளிவாசல்களும் 174 தக்கியாக்கள், 142 மத்ரஸாக்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்கள் பதியப்பட்டிருந்த்தாக ஆவாங்கள் சொல்கின்றன. எனினும் ரஷ்ய-துருக்கிய யுத்தம் முடிவடைந்த்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இப்போதைய கணக்கெடுப்புக்கள் அங்கு 1458 மஸ்ஜிதுகள் இருப்பதாகக் கூறுகின்றன.

குறிப்பாக உதுமானிய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த தீவிர கிறிஸ்தவ மதவாத ஆட்சிகளும் அதனடியாக வந்த மதவிரோத கம்யூனிஸ ஆட்சிக் காலங்களும் முஸ்லிம் வெகுமக்களை வெகுவாகப் பாதித்தன. கம்யூனிஸ்டான ஸிவ்கவ் என்பவரது ஆட்சியிலே முஸ்லிம் வெகுமக்களின் சுதந்திரங்கள் முற்றாகப் பறிக்கப்பட்டன. நாத்திகமே தேசத்தின் உத்தியோகபூர்வக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; கொள்கைகள் கொளுத்தப்பட்டன. இஸ்லாமிய அடையாளம் தாங்கிய பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பதுகூடத் தடைசெய்யப்பட்டது. பல்கேரியா தேசியப் பெயர்களச் சூட்டிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துருக்கிய மொழிப் பயன்பாடே தடுக்கப்பட்டது. இதன் விளைவாக 310,00 க்கும் மேற்பட்ட துருக்கிய இனத்தவர்கள் நாட்டை விட்டும் விரண்டோடினார்கள். கம்யூனிஸ்டுக்களின் வீழ்ச்சியின் பிறகே மீளவும் முஸ்லிம்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. அதன் பின்பு ஆரம்பகட்டமாக இளம்பராயத்தினருக்கு அல்குர்ஆனைப் போதிப்பதற்கான நிலையங்களைக் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தினார்கள். இன்று தம்மிடையே சொந்தமாகப் தினசரிப் பத்திரிகை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில் துருக்கிய, பல்கேரிய மொழிகளில் வெளியாகும் ‘முசல்மானி’ என்ற பத்திரிகை குறிப்பிடத்தக்கது.

பல்கேரியா முஸ்லிம்கள் இன்று:

பல்கேரியாவில் கடுமையாக மதச் சார்பின்மை நடைமுறைப்படுத்தப்பட்டதால் மார்க்கத்துடன் தொடர்புள்ள முஸ்லிம்களைக் காண்பதும் அண்மைக்காலம் வரை குறைவாகத்தான் இருந்தது. 2011ம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஒன்றின்படி பாரம்பரிய முஸ்லிம்களில் 3.2% வர்கள் தம்மை மதச் சார்பற்றவர்களாகத் தான் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இத்தகையோரது தொகை 25,000 ஐயும் தாண்டுகின்றது.

மேலும் இதுவரையும் 48.6% ஆன முஸ்லிம்களே தம்மை முழுமையாக மதத்துடன் பிணைத்து அடையாளப்படுத்த விரும்புகின்றனர். 28.5% ஆனவர்கள் ஓரளவு மத விழுமியங்களைப் பேண முயல்கின்றனர். 41% ஆனவர்கள் இதுவரைக்கும் பள்ளிவாசல் சென்றதில்லை. அவர்களில் 59.3% ஆனவர்களுக்குத் தொழுகையென்றால்என்னவென்றே தெரியாது. அத்தோடு 39.8% ஆனவர்கள் போதைப்ப் பொருள் பாவனையிலுள்ளோர் என்பதோடு 43.3% முஸ்லிம்கள் மதுபாவனைக்கு அடிமைகள் என்பதும் பல்கேரியா முஸ்லிம்கள் குறித்த பாதக தரவுகளாகும்.

சிவில், சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள்

கடந்த 130 வருடங்களாகவே பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் பல்கேரியா முஸ்லிம்களை வழிகாட்டி நெறிப்படுத்தி விடுவதில் அங்கு செயற்படும் பல முஸ்லிம் இயக்கங்களும் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. துருக்கிய-போமக்-ரோமானிய என வித்தியாசமான இனக் குழுமங்களான முஸ்லிம்களை ஒழுங்குபடுத்துவதில் இந்த இயக்கங்கள் முழுக் கரிசனை காட்டுகின்றன.

அனைத்து அமைப்புக்களினதும் உயர் அமைப்பாக Higher Islamic Council காணப்படுகின்றது. ஒட்டுமொத்த பல்கேரியா முஸ்லிம் சமூகத்தினதும் தலைவராக பல்கேரியாவின் தலைமை முஃப்தியே காணப்படுகிறார். இவர் அயிந்து வருடங்களுக்கொரு தடவை இடம்பெறும் அமைப்புக்களின் பொது மாநாட்டு மேஜையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குக் கீழால் ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொறுப்பான முஃப்திகளும் காணப்படுவர்,

பிரதான முஃப்தியின் மேற்பார்வையின் கீழேயே வக்ஃப் சொத்துக்கள் உட்பட முஸ்லிம்களின் சகல விவகாரங்களும் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

சுமார் 500 கிராமங்களில் அல்குர்ஆனை சிறார்களுக்குப் போதிப்பதற்கான நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 2000 பொதுப் பாடசாலைகளில் இஸ்லாமைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கேரியா முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதன் பிரதான அரசியல் முகமாக The Movement for Rights and Freedoms (MRF) என்ற அமைப்புத் தான் அங்கு செயல்பட்டு வருகிறது. இதுவே துருக்கிய, போமாக்ஸ், ரோமானிய இன முஸ்லிம்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. எனினும் இதுவரைக்கும் இக்கட்சி இனத்துவக் கட்சியாக அடையாளப்படுத்தப்படவில்லை. இக்கட்சி பல்கேரியா முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதோடு இக்கட்சி பெற்றிருக்கும் 34 பாராளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் துருக்கியர் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இக்கட்சி தற்போது பல்கேரியா ஆளும் அரசில் முக்கிய பங்கை வகித்து வருகின்றது. மத்திய, மாகாண அரசுகளிலும் மற்றும் உள்ளூராட்சித் தலைவர்களாகவும் தற்போது முஸ்லிம்கள் முக்கிய பங்கெடுத்து வருகின்றனர். அயிரோப்பியப் பாராளுமன்றத்தில் பல்கேரியா பெற்றுள்ள 18 உறுப்பினர்களில் மூவர் MRF இன் பிரதிநிதிகளாவர்.

பல்கேரியா முஸ்லிம்கள் பொருளாதார நிலைகளிலும் இன்னும் பாரிய முன்னேற்றத்தை வேண்டி நிற்கின்ரனர். அரசியல், சட்ட கெடுபிடிகள் அவர்களைத் தொடர்ந்தும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதென்பது அங்கு வெறும் சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படும் அளவுக்கு இஸ்லாமிற்குப் பெறுமானம் வழங்கப்படா நிலைமை அங்கு இருந்தது; இப்போதும் இருக்கிறது. அதற்கு தீவிர கிறிஸ்தவ மத வாதமும் மத விரோதக் கம்யூனிஸ சிந்தனைகளும் ஆழமாக வேர்விட்டிருந்தமையையே காரண்மஎனலாம்.

பல்கேரியா முஸ்லிம்களின் எதிர்காலம்:

பல்கேரியா அரசாங்கம் அந்த நாட்டு முஸ்லிம்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலக்கச் செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உலகிலே மிகக் கடுமையாக மத வன்முறைக்குட்படுத்தப் பட்ட சிறுபான்மையினராக பல்கேரியா முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அவர்களுள் இளைய சமுதாயத்தினரிடையே தற்போது கம்யூனிஸ காலத்தை விடவும் அதிக இஸ்லாமிய விழிப்புணர்வுள்ள சமூகமாக உருப்பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அவர்களுக்கான இஸ்லாமிய வகுப்புக்கள் முதற்கொண்டு இஸ்லாமைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் பரவலாக செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரம் பல சுதேச பல்கேரியர்களும் இஸ்லாமில் ஆர்வம்கொண்டு அது குறித்துத் தேடத்தொடங்கியிருக்கிறார்கள். பலர் இஸ்லாமைத் தழுவும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

Advertisements