நம் கால ரமழான் காட்சிகள்

 

இரவுகள் விழாக்கோலம் பூண்டுவிட்டன.
சமையலறைகளும் நிரம்பிவழிகின்றன.
மூன்று வேளை சாப்பிடும் நாட்களிலும்
நான்கு பாத்திரங்களே இருக்கும்
என் வீட்டு சமையலறையில்,
இருவேளைக்கு மட்டுமே
பதிநான்கு பாத்திரங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.

ரமழானென்றும் நோன்பென்றும்
கூகுளில் தேடல் செய்தபோதெல்லாம்
உணவுப் பாத்திரங்களே
திரும்பத் திரும்ப வந்து
என்னை விரக்தியடையச் செய்துவிட்டன.

மின் கட்டணம் அதிகமாய்
வருமென்று  நச்சரிப்புக்களும் தொடங்கிவிட்டன.
சமையலறையில் இரண்டு ரைஸ்குக்கர்கள் எரிகின்றன
வயிறை முட்டச்செய்வதற்காய்.
பள்ளிவாசல்களும் கஞ்சியை வாளிவாளியாய்
ஊற்றுவதனையும் மறந்தே விட்டிருக்கிறோம்

ஒவ்வொரு குட்டிக்கடைக்காரனும்
ரமழான் எனக்குரியது நான் சம்பாதித்துவிட்டேன்
பெருநாள் இனி களைகட்டும்
எனக் கூக்குரலிடுகிறான்…

எட்டுகளும் இருபதுகளும் பேசுவோர்
இல்லாமல் போனது மட்டும் நெஞ்சைக் குளிர்விக்கிறது.

Advertisements