பெருநாள் சல்லி…

file

 

பெருநாள் தொழுகை அப்போதுதான் முடிஞ்சிருந்தது… மெலிதான தூறல் மழை பெருநாளை ரம்மியத்தோடு ஆரம்பம் செய்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குச் சற்று தொலைவிலிருக்கும் மைதானத்தில் ஏற்கனவே தொழுகையும் பெருநாள் ஃகுத்பாவும் நிறைவுற்றுவிட்டது. பள்ளிவாசலில் இப்போதுதான் முடிந்து மக்கள் வீதிகளிலே கோலாகலத்தோடு பரவிக்கொண்டிருந்தார்கள்.

வீதியிலே மழைத் துளிகளுக்கிடையே நடந்துகொண்டே பார்வையைச் செலுத்த… பர்ஹான் நானாவின் சின்னப் பிள்ளைகள் பஸ்மியும் பஸ்லியும் விரல் கோர்த்து வீடு சென்றுகொண்டிருந்தனர்… மௌலானா ஊட்டுக்கு முன்னால் அஹ்மதும் இர்பானும் டீஷேர்ட்டும் டெனிமும் கண்ணைப் பறிக்க தோள் மேல் கைபோட்டு பேசிக் கொண்டிருந்தனர்… வயது போய்த் திருமணம் செய்த நாஸிக் நானா குழந்தைகளின்றி, தன்னோடு பள்ளிக்குக் கூட்டிவந்திருந்த தம்பியின் மூன்றாவது பிள்ளையோடு நடந்துகொண்டிருந்தார்…

பெருநாட்களில் சிறுவர்களது மகிழ்ச்சியை அவர்களது புத்தாடைகள் தீர்மானித்துக் கொண்டிருந்தன. இளைஞர்கள் தம் மகிழ்ச்சியை சிறிது காலமாகவே கொழும்பிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொழிலுக்கெனச் சிதறியிருக்கும் பால்ய கால நட்புக்களின் மீள் சந்திப்பால் பெற்றுக்கொண்டனர். பெரியவர்களுக்கு சிறியவர்களின் குதூகலமே மகிழ்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.

வீட்டை அடையவும் இல்லை… இன்னும் சில பத்து அடிகள் தான்… சின்னஞ் சிறுசுகள் வீதிகளில் குறுக்கும் மறுக்குமாக மாறி மாறிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
அஷ்பாக், ஆதில், இக்ராம், பாசித், யூசுப், அப்ரா, அம்னா, அஸ்ரா, இஷ்கா, ரீமா என ஏகப்பட்ட பெயர்கள் கொண்ட எம் வீடுகளைச் சூழவுமுள்ள முடுக்குகள் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிற சிறார் படையணியினர் அனைவரும் இன்று அண்டை ஆட்சிப் பிரதேசங்களுக்கும் படையெடுத்திருக்கிறார்கள். ஏதோவொரு ஊகத்துடன் எதிர்கால சமுதாயச் சிற்பிகளாக எடைபோட்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் அடையாளம் காண முயற்சித்தேன்.

அங்கே தூரத்தில் ரிபாதும் ரிதானும் புத்தாடைகள் தந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியவர்களாக வீதி வலம் தொடங்கியிருந்தனர்…

அந்த இரண்டு சிறுவர்களும் மிகுந்த கெட்டிக்காரர்கள்… திறமையும் கெட்டித்தனமும் படிப்பில் மட்டுமல்ல என்ற கோட்பாட்டை நம்பி வளர்க்கின்ற ஒரு உம்மா அந்த ரெண்டு பேருக்கும் கிடைத்தது பாக்கியம்தான்… வெளிநாட்டுக்குப் போயும் ஒழுங்காகப் பணம் அனுப்பக் கையாலாகாத கணவன் வாய்த்துவிட்டது அவர்களது உம்மாவுக்கு… பல குடும்பங்களின் கண் குளிர்ச்சி உம்மாமாரின் கண்ணீரிலே தான் தங்கியுள்ளது என்பதை ரிபாத்-ரிதானின் குடும்பத்தைப் பார்த்து ஒன்றுக்குப் பல தடவைகள் ஊர்ஜிதம் செய்துகொள்ளலாம்.
* * *
எங்கள் ஊரிலெல்லாம் பெருநாளாயின் சிறுசுகளுக்கு இரட்டைக் குதூகலம்… பெருநாளில் புத்தாடை தரும் இன்பம் ஒன்று… அடுத்து ஊர் முழுக்க சுற்றியலைந்து சேமிக்கும் பெருநாள் சல்லி தரும் ஒரு நாள் பணக்காரன் பேரானந்தம் இரண்டு…

ஊரிலிருக்கும் பெற்றோர் எல்லோருமே அன்று தம் பிள்ளைகளை பெருநாள் சல்லி சேர்ப்பதற்காக அனுமதி கொடுத்துவிடுவர். வீட்டிலுள்ளோரும் சின்னஞ் சிறுவர்களும் சிறுமியரும் வண்ண ஆடைகளில் சுற்றுப் புறங்களிலிருந்தெல்லாம் தம் வீட்டுக்கு வரும் போது பெருநாள் சல்லி கொடுத்து பேருவகை கொள்வர்.

சிந்தித்துப் பார்க்க, எவருமே பெருநாள் சல்லி என்ற எங்களது பெருநாள் கலாசாரத்தில் பித்அத் என்ற பேராயுதம் கொண்டு நசுக்காமலிருந்தது மனதுக்கு நிம்மதியைத் தந்தது. ஒரு சில ஒற்றைப் புள்ளிகள் நம் கலாசாரத்தை எவ்வித மாற்றீடுகளுமின்றி கொத்திக் கொண்டு போவதை எண்ணி எத்தனை முறை ஆவேசப்பட வேண்டியிருக்கிறது.

நாமெல்லாம் சின்னப் பிள்ளைகளாக இருந்து, பெருநாள் சல்லி சேர்த்துத் திரியும் போது இரண்டு ஏரியாவையாவது சுத்தி முடிச்சிடுவோம். இடைக்கிடையே அகப்படும் வெகு திறமையான கூட்டாளிமார் அஞ்சாறு ஏரியாவை சுத்தி முடிச்சிட்டதா சொன்னதும் பெருமூச்சுவிடுவோம்… அதோடு மனதுக்குள்ளால் எப்படியும் இவன் ஐநூறு ருவா சல்லியாவது சேர்த்திருப்பான் எண்ட மனக் கணக்கோட பொறாமையையும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

அங்கும் ஒரு சவால்; சிலபோது இருவது ருவா, அம்பது ருவா தாள்ச் சல்லிகளை எடுத்துக் கொண்டு நாணயக் குற்றிகளை மாற்றிக் கேட்டு வரும் சின்ன வயசு ரவுடி நானாமார் மாற்றிக் கொடுத்த சல்லிகளையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவர். இது போன்ற வழிப்பறிகளிலிருந்து பாதுகாக்கவே பெரும் கவனத்தை அன்றைய ஒருநாள் செல்வத்தின் மீது ஒன்றுகுவிக்க வேண்டி ஏற்படும். இப்போதும் கூட அத்தகைய முன்னாள் ரவுடி நானாமார், தம்மால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் ஒருவித தார்மீக வெட்கத்தால் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவதுண்டு.

அப்போதெல்லாம் அஞ்சாம் ஆண்டுக்குப் பிறகு… ஒரு சில போது மட்டும் ஆறாம் ஆண்டு வரைக்கும் ஓயாது பெருநாள் சல்லி சேர்க்கக் கிளம்பி விடுவது வழக்கம். அதற்கு மேல் பெருநாள் சல்லி சேர்க்கப் போனால் கூட்டாளிமாரின் கேலிகள்தான்… அந்த நோண்டிக்காகவே பெருநாள் சல்லி சேர்ப்பதை அதோடு நிறுத்திவிடுவோம். ஆனாலும் சொந்தக்காரர்களுக்குள்ளே யாருக்கும் தெரியாது முடியுமட்டும் சேர்த்துக் கலாய்ப்போம்.

வீட்டை நுழையப் பார்க்க… ரிபாத்-ரிதான் பெருநாள்க் களிப்போடு எம் வீட்டுக்குப் பெருநாள்ச் சல்லிக்காய்ப் பிரவேசம் செய்தனர். அழகான புத்தாடைகள் அவர்களை இன்னும் ஹேண்ட்சம்மாகக் காட்டிக் கொண்டிருந்தது. புத்தாடைகள் உடம்பிலே மின்னிக் கொண்டிருந்தாலும், அவர்கள் அணிந்திருந்த பாதணிகள் குறைந்தது இரு வருடங்களுக்கு முன்பு தான் புதிதாக இருந்திருக்க வேண்டும்… அவர்களது உம்மா எது வரைக்கும் தான் சுமப்பது..!

“பெருநாள் சல்லீ… பெருநாள்ச்சல்லீ…” இது ஈதுல் ஃபித்ர் ஈகைப் பெருநாளில் எங்களது ஊர் முழுக்க சின்னவர்களின் ரீங்காரம். இப்போது எங்கள் வீட்டில் ரிபாதும் ரிதானும்.. நான் கொஞ்சம் கதைக்கப் பார்க்க “பெருநாள் சல்லி தாங்க.. நானா… லேட்டாவுது… நெறய எடத்துக்குப் போவோணம்வா…” என பிஸியாகிவிட்டனர். நானும் புன்னகையோடு அஞ்சி ருவா காசி ரெண்ட எடுத்து ரெண்டு பேருக்கும் கொடுத்தேன்… சிட்டாய்ப் பறந்தனர் அடுத்த வீட்டை நோக்கி…

முன்பெல்லாம்… பெரும்பாலும் ஒரு ருவா தான் எங்களுக்கு பெருநாள் சல்லி கிடைக்கும். ஏதாவது ஒரு வீட்டில் ரெண்டு ருவா கெடச்சாலும் அது பெரிய விஷயம் தான். அத பலரிடத்திலும் சொல்லிக்கொள்வோம். அஞ்சு ருவா பெருநாள் சல்லி கொடுக்காங்க என கேள்விப்பட்டா… எப்படிப்பட்ட தூரமாயினும் போய் எடுத்துக் கொள்வோம். சில வீடுகள்ல அம்பது சதக் காசி கூட மாத்தி வெச்சி ரொம்ப சிக்கனமா குடுப்பாங்க… அந்த வீட்டில் எவனாவது சம வயது பொடியன் இருந்தால் அன்டெக்கி செத்தான். அம்பது சதம் கெடச்ச கதய சொல்லிச் சொல்லியே கீறிக் கிழிச்சிடுவாங்க அவன… இன்டெக்கி அம்பது சத காசிட நிலைமை ஒரு ருவா காசிக்கி வந்துட்டு…
* * *
வீட்டுக்குள் முஸ்லிம் சேவையின் பெருநாள் விஷேட ஒலிபரப்புக்கள் இரு தசாப்தம் கடந்து நிற்கும் வானொலிப் பெட்டியின் கரகரப்பு ஓசையினுடே செவிப் பறைகளில் வந்து மோதியது… ஒரு பழம்பெரும் முஸ்லிம் ஊரிலிருந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் நேரலை செய்துகொண்டிருந்தார். ‘எமது ஊரின் பெருநாள் விஷேட கலாசார அம்சங்கள் பொருந்தியது…’ அவர் பேசத் தொடங்கினார். ‘முன்னரெல்லாம் சிறுவர்கள் வீதியிலே களிப்புடன் உறவினர் வீடுகளுக்குச் செல்வர்… அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் வழக்கமும்கூட இருந்தது…’

‘முன்பு நாங்கள் ஊர்க் கோடியிலிருந்து பள்ளிவாசல் வரை பவனியாக வருவோம்… தக்பீர் முழக்கம் வானைப் பிளக்கும்… சிங்கள சகோதரர்களும் எம்மோடு நட்புடன் நடந்துகொள்வர்… நாங்கள் பலகாரங்களையும் பெருநாள் விஷேட சமையல்களையும் செய்து அன்பளிப்போம்…’

‘முன்னர் எங்களது ஊரிலே பெருநாள் மறுதினம் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்வர்… பெரும் கோலாகலமாக இருக்கும்… எங்கள் இளைஞர்கள் அந்த விடயங்களை கனகச்சிதமாக மேற்கொள்வர்.’
என பேசிக் கொண்டே இருந்தார். அவரது பேச்சு முழுவதும் இறந்த காலத்திலும் ‘முன்னர்-முன்பு’ போன்ற அடைமொழிகள் சேர்த்தும் பேசிக் கொண்டிருந்தார்… அவையெல்லாம் இப்போது எங்கு சென்றுவிட்டன எனக் கேட்கத் தோன்றியது மனத்திற்கு… எல்லாம் முடிந்துவிட்டதா? ஒருவேளை ஒலிபரப்பாளர் அக்கேள்வியைக் கேட்டுவிட்டிருந்தால் பிரபல எழுத்தாளர் பாடு படு திண்டாட்டமாய்ப் போயிருக்கும்.

‘…உலகமயம் ஒருபுறம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்க மறுபுறம் தூய்மைவாதப் பேச்சுக்கள் நம் கலாசாரத்தை சில ஒற்றை வார்த்தைகளால் பிடுங்கிக் கொண்டிருப்பதை நிவாரணங்களையும் இலவசங்களையும் நுகர்கின்ற நம் பாமர ஜனங்கள் எப்போது உணரப் போகிறார்கள்…!’

ஏதோ உலகளவிலான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையிலே… வானொலிச் சப்தத்தினதும் மேலால் முனீரா தாத்தாவின் குரலோசை கேட்கத் தொடங்கியது. அவர் எங்களுக்குத் தெரியுமே ரிபாத்-ரிதான்…. அந்த ரெண்டு பேர்டயும் உம்மாதான்.

காதுகொடுத்துக் கேட்க… உம்மாவுடன் வழமையான ஃப்ரெண்ட்ஷிப் பாணியிலே கதைத்துக் கொண்டிருந்தார்… ஊரின் ஒரு மூலை முடுக்கின் தொங்கலில் யாரும் போக வழியறியா முடுக்குகள் பலதைக் கடந்து செல்லவேண்டிய இடத்திலே… ஆனால் எங்கள் வீட்டின் பின்புறம் சற்றுத் தள்ளித் தான் இருக்கிறது அவர்கள் வீடு. பள்ளிவாசலுக்கு சந்தா கட்டிய போதும் வருடாந்தம் அரபு நாட்டிலிருந்து இலவசமாகக் கிடைக்கும் பேரீச்சம் பழப் பைக்கற்றைக் கூட அவட வீட்டுக்குக் கொடுக்க எப்படியும் மறந்து விடுவார்கள். உம்மா இது அறிந்து ஒவ்வொரு முறையும் பள்ளி நிர்வாகத்திடம் என்னைச் சொல்லிப் பேசி இந்த இலவசங்களைப் பெற்றுத் தருவதால் அவவுக்கு உம்மாவோட கொஞ்சம் கூடவே ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது.

முனீரா தாத்தாவும் ஏதோ பெருநாள் சல்லி விஷயம் ஒண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். சந்து பொந்துகளெல்லாம் சிறுவர்-சிறுமியர் பட்டாளங்கள் பெருநாள் சல்லி சேர்த்துத் திரிந்து முனீரா தாத்தாவின் வீட்டுக்கும் வர எந்த ஏற்பாடும் இல்லாமல் வரும் சிறுசுகளைத் திருப்பி அனுப்பவும் மனமில்லாமல் கையில் பணத்துக்கும் வழியில்லாமல்… பத்து கிலோ அரிசிப் பைக்கற்றைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

உம்மாவிடம் வழமையான அதிக உரிமையொடு “தாத்தா… இந்த அரிசிப் பக்கட்ட வெச்சிக்கொண்டு எனக்கு ஐநூறுவா ஒன்டு தாங்களே… பாவம் புள்ளயோல் ஊட்டுக்கு பெருநாள் சல்லி எடுக்க வந்துட்டு திரும்பி போவுதுவோல்” எனக் கேட்டுவைக்க…

“இதெனத்த புடிச்சீக்கி ஒனக்கு… கேட்டா கைமாத்துக்கு ஐநூறுவா தருவன் தானே… அரிசிப் பக்கெட்ட நீ வெச்சிக்கோ…” உம்மாவும் உரிமையும் அன்பும் கலந்து பதிலளித்தார்.

முனீரா தாத்தா, “இல்ல தாத்தா… ஃபித்ரா அரிசி எஙட ஊட்டுல நெறஞ்சிட்டு… வெக்கியத்துக்கு எடமும் இல்ல. இபிடி நாலு பேருக்குக் குடுத்தா ஊட்டுல எடமும் மிஞ்சும்… புள்ளையோலுக்கு பெருநாள் சல்லி குடுக்கோம் ஏலும்…” தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“அரிசி மட்டும் ஈந்து வேல ஈக்கா..? கறீம் வாங்கோணமே… அதுதான் நேரத்தோடயே ஸக்கியாத்தாக்கு பதினஞ்சி கிலோவ குடுத்து எழ்நூத்தம்பவ்ருவா எடுத்துட்டன்… அதுலதான் பகல் சாப்பாட்டுக்கு தேவயானத்த வாங்கின. பெருநாள் அன்டெக்காவது நாக்குக்கு உருசயா புள்ளயோல் தின்னட்டும் எண்டுதான்…”

உம்மா வாய் பொத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்…

“புள்ளயோலுக்கும் எனக்கும் வாங்கின உடுப்புட கடன் சல்லிய கூட அரிச வித்துதான் குடுக்க வேண்டீக்கிது… நானும் அம்பது நூறு கிலோ அரிச ஊட்டுல வெச்சிட்டீந்து என்னத்த செய்ய…”
ஸகாதுல் ஃபித்ரின் நோக்கத்தையே அசைத்துக் கேள்வி கேட்கும் தத்துவங்கள் பல அந்த பாமர தாத்தாவின் பேச்சில் பொதிந்திருந்தன…

முற்பகல் பத்து மணி பிந்திக் கொண்டிருக்க பியாக்கியோ டீசல் ஆட்டோவின் ஹோர்ண் சப்தம் காதைத் துளைத்தது… முஸ்தபா கேட்டரிங்கின் நோன்புப் பெருநாள் விஷேட புரியாணியின் எங்கள் வீட்டு ஓர்டரை இறக்கிக் கொண்டிருந்தார்கள்… ரெண்டாயிரத்து ஐநூறுவா கோழியெறச்சி புரியாணி ஓர்டரோட அதுல வார ஸஹனும் கோப்பையும் இலவசம்.

வீட்டின் முன்னால் சிறுமியர் சிலர் வண்ண ஆடைகளோடு முகாமிட்டிருந்தனர்… “பெருநாள் சல்லீ…” எஞ்சியிருக்கும் அந்த மண்வாசனைச் சொற்களால் உள்ளம் குளிர்கின்றது.
ஆக்கம்: எம்.எஸ்.எம். ஸியாப், வெலிகம.
விடிவெள்ளி ஆசிரியர், நிர்வாகம் மற்றும் அந்த ஓவியத்தை வரைந்த சகோதரருக்கு நன்றிகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s