உஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப் -தஃவாவும் ஜிஹாதும் ஒன்று சேர்ந்த செயல் வீரர்-

FB_IMG_1506213937729

இந்தக் கட்டுரை உஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப், அவரது ஆளுமை, இயக்க வாழ்வு, சிந்தனை, செயற் பரப்பு, அவர் எடுத்த முடிவுகள், அவரது அரசியல் செயற்பாடுகள் போன்ற விடயங்களை மதிப்பீடு செய்யும் கட்டுரையல்ல. நம் முன்னால் சத்தியத்துக்காக தனது முழு ஆயுளையும் அர்ப்பணித்து வாழ்ந்த அந்த ஆளுமை குறித்த ஒரு பொதுவான அறிமுகமே இது.

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை, மயக்கத்தை அளிக்கக் கூடிய (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.” (ஆல இம்ரான் : 3:185)

இஸ்லாத்தின் உயர் தூதை உலகெங்கும் ஒலிக்கச் செய்வதற்கு ஆண்டாண்டு காலமாக ஓயாமல் உழைத்த மிகப் பெரும் ஆளுமையின் ஆத்மா கடந்த செப்டம்பர் 22ம் தேதியோடு தனது ரப்பின்பால் மீண்டு விட்டது. உலக இஸ்லாமிய இயக்கங்களின் தாய் இயக்கமாகக் கருதப்படும் அல்இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் ஏழாவது சர்வதேசப் பொது வழிகாட்டி உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்கள் தனது 89வது வயதில் அல்லாஹ்வின்பால் மீண்டு சென்றுவிட்டார்கள். ரஹிமஹுல்லாஹ்; வல்ல அல்லாஹ் தனது மிகப் பெரும் கருணையை அவர் மீது பொழிவானாக!

எகிப்தின் சர்வாதிகாரச் சிறைகளில் அப்துல் பத்தாஹ் சீசியின் அரசால் தொடர்ந்தும் மருத்துவச் சிகிச்சைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் உஸ்தாத் மஹ்தி ஆகிப் கடந்த இரு வருடங்களுக்குள் பல முறைகள் கவலைக்கிடமான முறையில் மரணத்தின் வாசலைத் தொட்டு விட்டு மீண்டதை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சார்ந்த செய்தித் தளங்களூடாக அறிந்து வந்திருக்கிறோம். இந்நிலையில் சுகயீனக் கோரிக்கை மூலமாக சிறையை விட்டும் சீசி அரசிடம் மன்னிப்புப் பெற்று வரக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டும், இறை பாதையில் திடவுறுதி பூண்ட அந்த ஆளுமை எந்த வகை சமரசத்தையும் எதிர்பார்க்காது இறுதிவரைக்கும் கொண்ட கொள்கையில் உறுதியோடு வாழ்ந்து மரணத்தை சுவைத்தது.

ஆணவம் மிகுந்த அதிகாரத்தின் கொடுங்கோல் சிறைக்குள் சித்திரவதைகளுக்கு மத்தியில் மரணித்த அவரது முடிவை இறை பாதையில் நிகழ்ந்த ஷஹாதத் மரணமாக வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும்.

இஃக்வானிய வரலாற்றுக்கே உரித்தான தியாகங்களும் சிறைச் சித்திரவதைகளும் இவரது வாழ்வின் இறுதிக் கட்டங்கள் வரைக்கும் தொடர்ந்து வந்தது. தனது வாழ்வில் எகிப்தின் ஆட்சியாளர்களாக வாய்த்த அப்துல் நாஸர் துவங்கி அன்வர் ஸாதாத், ஹுஸ்னி முபாரக் என கடைசியாக அப்துல் பத்தாஹ் சீசி வரைக்கும் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாகியே வந்திருக்கின்றார். அவரது 89 வருட இவ்வுலக ஆயுளில் சுமார் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தை கொடூர சர்வாதிகாரக் கறைகள் படிந்த சிறைக்குள் கழித்திருக்கிறார்.

இக்கொடுமைகளின் உச்ச கட்டமே அன்னாரது ஜனாஸாத் தொழுகைக்கும் முழு எகிப்திலும் தடை விதிக்கப்பட்டமையாகும். அவரது ஜனாஸாவை சுமப்பதற்கும் அடக்கம் செய்வதற்கும் அவரது மனைவி மற்றும் பிளைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டமை அவர் மீது பிரயோகிக்கப்பட்ட அதீத அடக்குமுறைக்கு சான்றாகும். மீண்டும் மீண்டும் சிறைவாசமும் சித்திரவதைகளுமாக இறுதிக் காலத்தில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளோடு உலகின் வயது முதிர்ந்த அரசியல் கைதியாக மருத்துவச் சிகிச்சைகள் முற்றாக மறுக்கப்பட்டு இறுதியாக ஜனாஸாத் தொழுகையும் கூட எகிப்திலே தடை செய்யப்பட்ட நிலையில் உலகெங்கிலும் எண்ணற்ற நாடுகளிலே கோடிக்கணக்கான மக்கள் அவருக்கான மறைவான ஜனாஸா தொழுகை நடாத்தியமை அவருக்கு அல்லாஹ் இவ்வுலகில் நமது கண்கள் காணப் பொழிந்த பேரருளாகும்.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்கள் இஃக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு நிறுவப்பட்ட அதே 1928ம் ஆண்டில் ஜூலை மாதம் 12ம் தேதி எகிப்தின் திக்ஹலியா பிராந்தியத்தில் உள்ள கஃப்ர்இவழ் ஸனீத்தா என்ற ஊரில் பிறக்கிறார். சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்பு இடைநிலைக் கல்விக்காக இஃக்வான்களது கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் மன்ஸூரா பிராந்தியத்துக்கு 1940இல் குடும்ப சகிதம் இடம்பெயர்கிறார். அங்கு சென்ற அதே ஆண்டு அவருக்கு இஃக்வான்களோடு தொடர்புகள் ஏற்படுகின்றது. அங்கே இஃக்வான்களது ஆரம்பகால தஃவா பாசறைகளில் சிறப்பாக வார்த்தெடுக்கப்படுகிறார்.

இமாம் ஹஸன் அல்பன்னாவின் தாக்கம் அவரில் அதிகமாக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவர். அவரது மரணமும் நல்லடக்க நிகழ்வும் கூட இமாம் பன்னாவை பெரிதும் ஒத்திருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். அன்னவர்களது பலஸ்தீனப் போராட்டத்தின் மீதான தணியாத தாகத்துக்கு இஸ்லாமிய அறிஞரும் பலஸ்தீனத்தின் ஆரம்ப காலப் போராளியுமான ஷெய்க் முஹிப்புத் தீன் அல்கதீப் அவர்களது சிந்தனைகள் இவரில் செலுத்திய தாக்கமே காரணமாகும்.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் சமகாலத்தைய இஸ்லாமிய தஃவாப் பரப்பில் பன்முக ஆளுமைகளைத் தன்னில் வெளிப்படுத்தியவர்; அதற்கேற்றால் போல் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் கள வாய்ப்புக்களும் அமைந்தன. 1948 இல் பலஸ்தீனத்தின் யூத ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜிஹாதியப் போராட்ட களங்களில் முன்னணிப் பங்கெடுத்தார். சுயெஸ் கால்வாய்ப் போராட்டத்தை வழிநடாத்துவதிலும் பெரும் பங்காற்றினார். இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் நேரடியாக நிர்வகித்த இஃக்வான்களது மாணவர் பிரிவுப் பொறுப்பையும் இயக்கம் மிகக் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த 1952-54 காலப் பகுதிகளில் வகித்திருந்தார். தவிரவும் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா, மாலி,  ஜெர்மனி, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் தஃவாவை வலுவூட்டுவதிலும் தஃவா நிறுவனங்களை அமைப்பதிலும் குறிப்பாக மாணவர் அணியை வழிநடாத்துவதில் முழுத் திறனுடன் செயல்பட்டிருக்கிறார்.

ஆரம்ப காலம் தொட்டே தஃவா பயிற்சி முகாம்களில் முன்மாதிரி மிகுந்த சிறந்த பயிற்றுவிப்பாளராகத் தொழிற்பட்டிருக்கிறார். இதனாலே இவர் ஜமாஅத்துல் இஃக்வானுல் முஸ்லிமீனின் உடற் பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். உடல் திறன் விருத்தியில் சிறப்புத் தகுதி பெற்றவராகத் திகழ்ந்த உஸ்தாத் மஹ்தி ஆகிப் பலஸ்தீனப் போராட்டம், சுயெஸ் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று பின்நாட்களில் பலஸ்தீன ஆயுத எதிர்ப்புப் போராட்டத்தினை நிறுவுவதில் மிக முக்கிய பங்கெடுத்திருக்கிறார். ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸ்ஸுத்தீன் அல்கஸ்ஸாமின் தலைமைகளுள் அநேகர் உஸ்தாத் மஹ்தி ஆகிப் அவர்களது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் எனக் கூறப்படுகிறது. 85 வயதுகளைத் தாண்டிய பின்னரும் நாளாந்தம் சுமார் 10 km க்கும் மேலால் ஓட்டப் பயிற்சி பெற்று வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதிலிருந்து அத்துறையில் இறுதி வரைக்கும் தணியாத தாகத்தோடு செயற்பட்டிருக்கிறார் என்பதை விளங்கமுடிகின்றது.

உஸ்தாத் மஹ்தி ஆகிப் பெரும் நூல்களையும் சிந்தனைப் பொக்கிஷங்களையும் தந்துவிட்டுச் செல்லவில்லை. மாறாக அவர் ஒரு களச் செயற்பாட்டாளர்; புத்தகம் எழுதுபவர்களை உருவாக்கிய ஒரு பயிற்றுவிப்பாளர் என்ற அடையாளமே அவருக்குரியது. 1940 இல் இஃக்வான்களோடு இணைந்து கொண்டது தொடக்கம் இறுதி மூச்சு வரைக்கும் சுமார் 77 க்கும் அதிகமான வருடங்கள் தஃவாப் பாதையில் அவரது உழைப்பு, அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொடர்ந்தேர்ச்சைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இஃக்வானிய இயக்க வரலாற்றில் முதன் முறையாக உயிர் வாழும் போதே அமைப்பின் தலைமை வழிகாட்டிப் பொறுப்பை அடுத்த தலைமைக்கு வழங்கி புதிய முன்மாதிரிக்கு வித்திட்டவராகவும் அவர் காணப்படுகிறார்.

அவர் சத்தியத்தின் பாதையில் திடவுறுதி கொண்ட ஆளுமை; வயது முதிர்வுகளால் ஏற்படும் இயல்பான தளர்வுகள் எதுவும் சத்தியம் குறித்த அவரது நோக்கை எவ்விதத்திலும் பாதித்துவிடவில்லை. 90 வயதை அண்மித்திருந்தும் அசத்தியத்தின் முன்பு இளைஞனாய்ச் செயற்பட்ட அவர் சத்தியத்தை சுமப்பதில் இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரும் முன்மாதிரி. அவருக்கு நெருக்கமான மூத்த இயக்க உறுப்பினர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது “ஸஹாபாக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற முன்மாதிரிகளைத் தம் கண் முன்னே காட்டிவிட்டுச் சென்றவர்.” என உணர்வு ததும்பக் கூறுகின்றனர்.

அவரது இறுதிக் கணப் பொழுதுகள் அமைந்தது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் எழுதியவை சியோனிஸமும் அவர்களது அடியாட்களான எகிப்தின் சர்வாதிகார அரசும் அந்த மாபெரும் போராளியை இவ்வுலகில் எவ்வாறெல்லாம் முடக்கி வைக்கப் பார்த்ததது என்பது தெளிவாக்குகின்றது.

அவர் இறுதி நாட்களில் கடுமையாக சுகயீனமுற்றிருந்தார். எனினும் அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதோ தொடர்ந்தும் தடுக்கப்பட்டிருந்தது. மரணமுற்ற பின்பும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரமே ஜனாஸாவுக்குரிய கடமைகளை செய்து தொழுது, அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அவர் மரணத்தை அண்மித்துக் கொண்டிருந்த கணத்திலும் கூட அவர்களது குடும்ப நண்பர் வழக்கறிஞர் முஹம்மத் ஸாலிமுக்கு மாத்திரம் காவல் துறைக் கெடுபிடிகளுக்கு மத்தியில் வழங்கப்படிருந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து வெறும் ஒன்பது பேர் மாத்திரமே அவரது ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்ற போதிலும் முழு உலகிலும் அன்னாருக்காக மறைவான ஜனாஸாத் தொழுகைக்கும் கோடிக்கணக்கான உள்ளங்களின் பிரார்த்தனைக்கும் உரியவராக அல்லாஹ் அவரை ஆக்கினான்.

அவரது வாழ்க்கைக் குறிப்புக்களில் இன்னும் சில:
-1951 இல் தனது சட்டத் துறைப் பட்டத்தை கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
-1951 இல் ஆங்கிலேயருக்கு எதிரான சுயெஸ் கால்வாய் போரில் ஒரு தளபதியாகப் பங்கேற்றார்.
-1954 இல் மூத்த இஃக்வான்கள் பலருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 20 வருட சிறை வாழ்வின் பின்பு அன்வர் ஸாதாத்தின் காலப்பிரிவில் விடுதலை செய்யப்படுகிறார்.
-அதே ஆண்டில் வாமி எனைப்படும் இஸ்லாமிய இளைஞர்களுக்கான உலக அமைப்புக்கு ஆலோசகராக சவூதி பயணம்.
-80 களில் ஜெர்மனியின் மியூனிச் நகரில் உள்ள இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார்.
-1987 இல் எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் தெரிவாகி மக்கள் பிரதிநியாகப் பாராளுமன்றம் நுழைகிறார்.
-1987 இல் இஃக்வான்களது உயர் வழிகாட்டல் சபையான மக்தபுல் இர்ஷாதின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு 2009 வரை பணியாற்றினார்.
-1992 இல் கம்பியூட்டர், எலக்ட்ராணிக் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்து இஸ்லாமிய நிறுவனம் துவங்கப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டுடன் கைரத் ஷாத்திர், ஹஸன் மாலிக் போன்றோரோடு மீண்டும் சிறை செல்கிறார்.
-2004 இல் இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் பொது வழிகாட்டியாகத் தேர்வு செய்யப்பட்டு 2010 வரைக்கும் அப்பொறுப்பில் இருந்தார்.
-2009 இல் ஜோர்தானின் இஸ்லாமிய மூலோபாயக் கற்கைகள் நிறுவனத்தின் கணிப்பீட்டில் அவர் முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிக்க 50 பேரில் 12வது ஆளுமையாகத் தெரிவானார்.

வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்கட்டும்.

“நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.” (புஸ்ஸிலத்: 30)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s