கட்டார் ரிப்போர்ட்

saudi-qatar-confict

– குழப்பகரமிக்க காலத்தில் சத்தியவாதிகளை எவ்வாறு இனங்கண்டுகொள்வது என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடத்தில் வினவப்பட்ட போது “எதிரிகளின் அம்புகளைப் பின்தொடர்ந்து செல்! அவை சத்தியவாதிகளை நோக்கிப் பாய்வதை நீ கண்டுகொள்வாய்.” எனப் பதிலளித்தார்கள். –

By: எம்.எஸ்.எம். ஸியாப்

கடந்த இரு வாரங்களாக மத்திய கிழக்கின் அரசியல் நிகழ்வுகள் மிகுந்த சூடாக பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டது; விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியேற்பின் பின்பு முதலாவதாக மேற்கொண்டிருந்த வெளிநாட்டு விஜயம் சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்குமென இருந்தது. மே மாத இறுதிப் பத்தில் நிகழ்ந்த இவ்விஜயத்தைத் தொடர்ந்து காட்சிகள் தடல்புடலாக மாற்றம் பெற்றன. சவூதியோடு யூ.ஏ.ஈ, எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தடாலடியாக கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடையை அறிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து யெமன், லிபியாவின் ஹப்தர் அரசு, மாலைத் தீவுகள் போன்ற நாடுகளும் தாம் கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்திருந்தன.

அதற்குள் ஜூன் முதல் வாரத்தில் தான் எமிரேட்ஸின் அமெரிக்காவுக்கான தூதுவர் யூஸுப் உத்தைபாவுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புக் கொள்கை வகுப்பு அமைப்பான Foundation of Defense of Democracies (FDD) என்ற நிறுவனத்துடன் வைத்திருந்த ஈ-மெயில் தொடர்புகள் ஹேக்கர்களால் இடைமறிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன. இதில் யூ.ஏ.ஈ. க்கும் எகிப்திய இராணுவ சதி, துருக்கிய இராணுவ சதியில் எமிரேட்ஸின் பங்கு, கட்டாரின் பிராந்திய செல்வாக்கை வலுவற்றதாக்குவது, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை முடங்கச் செய்வது என்பவை முக்கியமாக அந்த ஈ-மெயில்களில் பரிமாறப்பட்டிருந்தமை கசிந்திருந்தது. குறித்த நிகழ்வுகளின் உண்மைத் தன்மை வாஷிங்டனிலுள்ள எமிரேட்ஸ் தூதரக உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்பட்டுமிருந்தது. மொத்தத்தில் அமெரிக்கா-இஸ்ரேலியக் கூட்டுக்கு எது தேவையோ அவையனைத்தையும் கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொடுப்பதில் அமெரிக்காவின் பிரதான வர்த்தகப் பங்காளியான யூஸுப் உத்தைபா முன்னின்று உழைத்திருந்தார்.

சமநேரத்தில் ஹேக் செய்யப்பட்ட அல்ஜஸீரா ஊடகத்தின் இணையத் தளங்களில் நிலையை இன்னும் சிக்கலாக்கும் வகையில் கட்டார் அமீர் தெரிவித்ததாக ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் ஆதரவுச் செய்திகள் புனைந்து வெளியிடப்பட்டிருந்தன. இதன் போது எண்ணற்ற பல இணையதள மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு முறுகல்கள் ஏற்படுத்துவதற்கான நிலைகள் தோற்றுவிக்கப்படுவதை phys.org, cnn, nytimes, mofa.gov.qa ஆகிய இணைய செய்திகளூடாக அறியப்பட்டது.

இங்கு உத்தைபா விவகாரத்தை பரவலாகக் கவன ஈர்ப்பு செய்யும் விதத்தில் சர்வதேச ஊடகத் தளத்தில் கட்டாரின் அல்ஜஸீரா ஊடகம் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புகைச்சல்கள் வெளித்தெரிய ஆரம்பித்து எமிரேட்ஸின் கடும் அழுத்தத்தில் சவூதியின் லெட்டர்பேடில் மன்னர் ஸல்மானின் கையெழுத்தோடு பொருளாதாரத் தடை அறிவிப்புக்கள் ஜூன் 6 வைகறைப் பொழுதிலேயே அறிவிக்கப்பட்டன. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கட்டார் பங்கம் விளைவிப்பதாகவும் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் உடனடி தன்னிலை விளக்கத்தில் சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் தெரிவித்திருந்தன. தம் நாடுகளிலுள்ள கட்டார் இராஜதந்திரிகளை 48 மணிநேரங்களுக்குள் வெளியேறுமாறும் கட்டார் பிரஜைகள் தம் நாடுகளை விட்டும் வெளியேறுவதற்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்தோடு கட்டாருக்கான தரை மார்க்க, ஆகாய மார்க்க, கடல் மார்க்க போக்குவரத்துப் பாதைகளும் துண்டிக்கப்படுவதாக மேற்கண்ட நாடுகள் அறிவித்தன. இதனால் கட்டாரினுள் உணவுத் தட்டுப்பாடு நிகழுமோ என்ற அச்சம் ஏற்பட்டு அங்குள்ள அனைத்து அங்காடிகள், சந்தைகளிலும் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக நுகரப்பட்டு களஞ்சியங்கள் வெறுமையாகி ஒரு வித செயற்கைப் பதற்றம் உருவாக்கப்பட்டது. எனினும் உடனடியாக துருக்கி மற்றும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் கட்டாரின் சந்தைகளை நிரப்பின.

இப்போது கடல்வழி மார்க்கத்தை சீர்செய்வதற்காக கட்டாரில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச தரத்திலான ஹமத் துறைமுகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டிருக்கின்றன. சவூதி, எமிரேட்ஸ் வான் பரப்புக்களுக்கூடாகப் பறப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகாய மார்க்க வழியும் சுமார் 20 நிமிட தாமதத்தை மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நிலைமை நிலவுகின்றது. எனவே குறித்த நான்கு நாடுகளும் எதிர்பார்த்த படியான அழுத்தங்களை கட்டார் இலகுவாகக் கடந்து சென்றது. பங்குச் சந்தை நிலவரங்களும் கூட தோஹாவில் அதிகரிப்பையும் ரியாத், துபாயின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியையும் சந்தித்திருந்தன.

கட்டார் மீதான தடையைத் தொடர்ந்து வளைகுடா நெருக்கடி பற்றி எழுந்த விவாதங்களில் முக்கியமானது அரசியல், பொருளாதாரம் சார்ந்த ஆதிக்கப் போட்டியின் காரணத்தினாலா? அல்லது உண்மையிலேயே சவூதி அறிவித்தது போன்று கட்டார் தீவிரவாதத்துக்கு சார்பாகவும் ஈரானோடும் நெருக்கமானதாலா? அல்லது வஹாபிஸம், சூபிஸம், ஷீஆயிஸம் போன்ற மதவாதப் பிரிவினைப் போக்குகளைக் காரணம் காட்டி மத்திய கிழக்கின் அதிகாரப் போட்டிகள், மன்னராட்சிக் கார்ப்பரேட்டுகளின் சகதிகளை மறைக்கும் தந்திரமா? எனப் பல கேள்விகள் அரசியல் அவதானிகளிடையே எழுந்திருந்தன.

பல திசை திருப்பல்கள், காய் நகர்த்தல்களைத் தொடர்ந்து குவைத் மன்னர் ஷெய்க் ஸபாஹின் மத்தியஸ்த முயற்சிகளின் பலனாக சவூதி முன்வைத்த பத்து நிபந்தனைகளும் சவூதிக்கு எங்கு பிரச்சினை என்ற கோணத்தைத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டியது. மிகத் தெளிவாக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள், ஹமாஸ் தலைமைகளை நாட்டை விட்டும் வெளியேற்றுவது; அத்தோடு அல்ஜஸீரா ஊடகத்தைத் தமக்கான ஊதுகுழலாக மாற்றுவது இவையிரண்டுமே சவூதியின் அந்தப் பத்துக் கட்டளைகளின் சாரம். மொத்தத்தில் இஸ்லாமிய எழுச்சியை முற்றாகக் காயடித்து விடவேண்டும் என்ற சியோனிஸ-அமெரிக்க பயங்கரப் பசியினை சவூதி தனது நாவுகளால் வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி, ஷெய்க் அலி ஸல்லாபி போன்ற பெரும் அறிஞர்களையும் தாஈக்களையும் உள்ளடக்கிய 59 இஸ்லாமிய ஆளுமைகளையும் கட்டாரை விட்டும் வெளியேற்றக் கோரியிருப்பது மேற்குலகுக்கும் சியோனிஸத்துக்கும் அரபு ஆட்சியாளர்கள் எந்தளவு முதுகு சொறிந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கான சான்று. இதையே நெட்டன்யாஹு குறித்த தினத்தில் வெளியிட்ட “கட்டார் தனிமைப்படுத்தப்படுவதன் மூலமாக வளைகுடா நாடுகளுடனான எமது ஒத்துழைப்பு இன்னும் விசாலமடையப் போகின்றது” என்ற நச்சு அம்புகள் தடவிய கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த இராஜதந்திர முறுகல்களைத் தொடர்ந்து வளைகுடாவில் கட்டார் மீதான அனுதாப அலைகள் அதிகரித்திருந்த நிலையில் சமூக ஊடகங்களூடாக அரபு மக்கள் தம் எண்ணங்களைப் பதிவுசெய்யத் தலைப்பட்டனர். #StandWithQatar போன்ற ஹேஷ்டெக்குகள் வெளிப்படத் துவங்கிய பொழுதில் சவூதி, எமிரேட்ஸ் அரசுகள் சமூக ஊடகங்களில் கட்டாருக்கு அனுதாபம் தெரிவிப்போருக்கு எதிராக சிறைத் தண்டனை மற்றும் பாரிய தொகை அபராதத்தினை அறிவித்து மீண்டும் தனது கோழைத்தனத்தை நிரூபித்தது. சவூதி அரசின் கோமாளித்தனத்தின் உச்சமாக மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் டீ-ஷேர்ட்டுக்கள் அணியவும் அங்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னணி என்னவெனில் அவ்வணிக்கு அனுசரணை வழங்கும் கட்டார் ஏர்வைஸின் லோகோ அவ்வாடையில் இருப்பதே.

இவ்வாறான அறிவிப்புக்கள் மத்திய கிழக்கின் கார்ட்டூனிஸ்டுகளுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நிறையத் தீனியைப் போட்டிருந்தன. இதற்குத் தோதாக சவூதிய அரசின் எல்லா அசைவுகளுக்கும் அங்கிருக்கும் அரச அணுசரனை பெற்ற ஷெய்குமார்கள் பத்வாக்களையும் அள்ளிவீசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கட்டத்தில் வெளிவந்த ‘உம்ராவுக்கென வருகை தரும் கட்டார் பிரஜைகளை மக்காவுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை’ என்ற செய்திகளை சவூதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் சவூதி, எமிரேட்ஸ் புறமிருந்து பாதகமான சமிக்ஞைகளும் கோமாளித்தனம் மிக்க அறிவிப்புக்களும் வந்து கொண்டிருந்த நிலையில் கட்டார் இவற்றை எதிர்கொள்ளத் தேர்ந்தெடுத்த அணுகுமுறைகள் வெகு ஸ்மார்ட்டான தோற்றத்தை அத்தேசத்துக்கு அளித்ததோடு சர்வதேச சமூகத்தின் மத்தியில் கட்டார் மீதான நன்மதிப்பையும் பல மடங்கு அதிகரித்திருந்தது. நிகழ்வுகள் வெகு உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கட்டார் தேச மக்களுக்கும் சமூக ஊடக பாவனையாளர்களுக்கும் அந்நாடு தெளிவான வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்தது. ‘நிகழும் இராஜதந்திர முறுகல்களைக் காரணமாக வைத்து எவரும் குறிப்பிட்ட நாடுகளை தூற்றிப் பதிவிட வேண்டாம்’ என்பதுதான் அந்த வேண்டுகோளாகும். அத்தோடு எமிரேட்ஸின் மொத்த எரிபொருள் மற்றும் மின்சக்தித் தேவையில் பாதிக்கும் மேற்பட்டதைப் பூர்த்தி செய்ய தனது நாட்டிலிருந்து செல்லும் 364 கிலோமீட்டர் நீளமான எரிபொருள் வழங்கும் குழாய்களைத் தடை செய்யவும் இல்லை. அவ்வாறு செய்திருப்பின் ஒரு நாளுக்குள் எமிரேட்ஸை ஸ்தம்பிக்க செய்து பழிக்குப் பழி அரசியலொன்றைச் செய்திருக்க முடியும்.

இதனை விடுத்து கட்டார் குறித்த நான்கு நாடுகள் மற்றும் நிகழும் இராஜதந்திர முறுகல் தொடர்பில் தனது தெளிந்த நிலைப்பாட்டைக் கூறி அனைத்து நாடுகளுடனும் பூச்சிய முரண்பாடுகளைக் கைக் கொள்வதன் பாலான தனது ஆர்வத்தையே வெளிப்படுத்தியிருந்தது.

கட்டுரை எழுதப்படும் வரைக்குமான தருணம் வரைக்கும் முறுகல் நிலையின் சூடு தணிந்திருந்தாலும் துண்டிக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றங்கள் இன்றியே இருக்கின்றது. குவைத்தின் மத்தியஸ்த முயற்சிகளோடு துருக்கி அதிபர் மேற்கொண்டு வரும் முயற்சிகளும் பிராந்திய அமைதி குறித்த நம்பிக்கைகளை விதைக்கின்றன.

சுன்னி முஸ்லிம் உலகுக்குள்ளால் யெமன் பிரச்சினையைத் தொடர்ந்து ஏற்பட்ட ஓர் இராணுவக் கூட்டு ஒத்துழைப்பை அறுத்துவிடும் மேற்கின் முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. சவூதி அமெரிக்காவின் அடிமையாக இருந்து தொடர்ந்தும் பிழையான முடிவுகளிலேயே பயணிக்க முயற்சிக்கும் காலமெல்லாம் அபாயத்தின் எல்லை அதிகரித்துக் கொண்டே செல்லும். இந்நிலை சுன்னி முஸ்லிம் நாடுகளுக்கிடையிலான இராணுவ மோதலொன்றாக உருமாற்றப்படுமாக இருந்தால் அந்த அழிவின் தன்மை கற்பனைக்கெட்டாத விகாரமான தோற்றமொன்றைத் தருகிறது.

சவூதி தனது பிழையான நிலைப்பாடுகளை விட்டும் மீண்டு சுன்னி முஸ்லிம் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்வது ஒன்றே சமகாலத்தில் இந்த உம்மத்துக்குச் செய்யும் பாரிய பங்களிப்பாக இருக்கும். அப்பணி தனது மன்னராட்சியின் நலன்களைப் பேணிக் கொள்வதற்கும் அதனைப் பேணுவதற்கான கருவியாக வஹாபிஸத்தை கேடயமாகப் பயன்படுத்தும் அயோக்கியத்தனங்களுக்கு அப்பாலானது. அப்பணி மன்னர் பைஸல் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ‘ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமி’ போன்ற அமைப்புக்களூடாக முன்னெடுத்து வந்த தூர நோக்குடனான பணி. அப்பணி மன்னர் பைசலுக்குக் கொண்டு வந்தது போன்ற உயிர்த் தியாகத்தையும் உங்களிடம் கேட்கக் கூடியது. அப்பணி எமிரேட்ஸினதும் அமெரிக்காவினதும் சியோனிஸத்தினதும் நலன் பேணி உங்கள் மன்னராட்சியைப் பாதுகாப்பதற்கு அப்பால் மறுமையில் சுவனத்தில் உங்கள் இருப்புக்களைப் பாதுகாக்கக் கூடிய பணி என்பதையும் கூறிவைக்கிறோம்.

இறுதியாக இன்னுமொரு முறை கூறுகிறோம்; குழப்பகரமிக்க காலத்தில் சத்தியவாதிகளை எவ்வாறு இனங்கண்டுகொள்வது என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடத்தில் வினவப்பட்ட போது “எதிரிகளின் அம்புகளைப் பின்தொடர்ந்து செல்! அவை சத்தியவாதிகளை நோக்கிப் பாய்வதை நீ கண்டுகொள்வாய்.” எனப் பதிலளித்தார்கள்.

எதிரிகளது அம்புகள் எங்கே பாய்ந்துகொண்டிருக்கின்றன?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s