அன்றும் இன்றும் – இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சியில் இஃக்வானுல் முஸ்லிமூன்

download (2)

எழுச்சிக்காலத் தத்துவஞானியான அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின்நபி அவர்கள் “இஸ்லாமிய உலக நோக்கு” என்ற தனது நூலில் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை, இஸ்லாத்தின் நம் சமகால நிலைமைகளை புரிந்துகொள்ளும் வண்ணமாக ஒரு விமர்சகராக ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்தப் பகுப்பாய்வின் மூலம் அவர் எழுச்சியின் பலதரப்பட்ட சிந்தனைப் பாரம்பரியங்களைக் குறித்து ஒப்பீடொன்றை மேற்கொண்டுள்ளார். அதனை மூன்று விதமான சிந்தனைப் பாரம்பரியங்களாக அவர் வகுத்துள்ளார்.

 

அதில் முதலாவது:

நவீனத்துவ இயக்கம், அதாவது தேசியவாத இயக்கம் என்பதை அவர் இதன் மூலம் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வியக்கத்துக்கென இலக்குகளிலோ அல்லது அதன் வழிமுறைகளிலோ வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் எதுவும் கிடையாதென அவர் கருதுகிறார். இதற்கடுத்து அவர்களிடமிருந்த அம்சம் எதுவெனில் புதிதாக உருவாக்குவதில் ஓர் ஆசை மட்டுமேயாகும். அதற்கான ஒரே வழி முஸ்லிம்களை அவர்களது கண்மூடிய வாடிக்கையாளராக ஆக்கிக்கொள்வதாகும். இதற்குக் காரணம் ஏதெனில் அவ்வியக்கம் மேற்கு நாகரிகத்தை நன்கு ஆழமாகக் கற்றிருக்கவில்லை. அத்தோடு அதன் அறிவையும் சார்ந்துகொண்டது. மேலும் தம் விழிகளிலே திரையையும் இட்டுக் கொண்டது. அதாவது அந்த நாகரிகத்தை ஒரு பக்கப் பார்வையாக அல்லது தேவையற்ற விடயங்களிலேயே முன்னுதாரணமாக நோக்கியது.

 

இரண்டாவது சிந்தனைப் பாரம்பரியம்:

சீர்திருத்த இயக்கம். இதன் மூலம் இஸ்லாமிய சீர்திருத்தப் பள்ளியின் முதற் பரம்பரையினரை அவர் நாடுகிறார். ஆப்கானியின் சிந்தனைப் பள்ளியும் அவரது மாணவரான அப்துஹுவும் இதனைச் சார்ந்தவர்கள் தாம். இவ்வியக்கித்தினை பின்நபி விமர்சிக்கும் போது ‘இல்முல் கலாம்’ -இறையியல்- ஐ புதிதாக மீள உற்பத்தி செய்துகொண்டுவந்தவர்கள் என்கிறார். மேலும் இச்சிந்தனைப் பாரம்பரியத்தினர் தூயதொரு பரம்பரை உருவாக்கத்தை விடவும் துறைசார்ந்த சிறப்புத் தேர்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினர். மற்ற விடயம், அதன் மூலம் இஸ்லாத்தின் பிரச்சினையின் மையப் புள்ளி இனங்காணப்படவுமில்லை. முஸ்லிமுக்கு அவன் கொண்டுள்ள அகீதாவினைக் கற்றுக் கொடுப்பதல்ல பிரச்சினை. இந்த அகீதாவினை நோக்கி அதன் செயற்றிறன், அதன் சாதகமான பலம், சமூக ரீதியான அதன் தாக்கம் நோக்கித் திருப்பிவிடுவதுதான் முக்கியமானதெனலாம்.

 

மூன்றாம் சிந்தனைப் பாரம்பரியம்:

இதற்கு மாலிக் பின்நபி அவர்கள் ‘புத்துயிர்ப்புப் பாதை’ எனப் பெயரிட்டு அழைப்பார். அதன் மூலம் அவர் கருதியது “இஃக்வானுல் முஸ்லிமூன்” அமைப்பைத் தான். அவ்வமைப்பினர் தான் இந்திய உபகண்டத்துத் தத்துவஞானி மகாகவி முஹம்மத் இக்பால் கனவு கண்டது போல இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள். அல்லாமா இக்பால் கூறுவதைக் கேளுங்கள்: “தேவையான தீர்வு அல்லாஹ் பற்றிய அறிவு அல்ல. அதை விடவும் பிரமாண்டமாக, நுணுக்கமாகக் கருத்துக் கொண்ட அல்லாஹ்வுடனான தொடர்புதான் வேண்டப்படுகிறது.” அவர்கள் -இஃக்வான்கள்- முஸ்லிமுடைய இதயத்தைப் புதிதாகத் தொட்டார்கள். அவர்கள் தமது இலக்கினை சுமந்திருந்த செயல்பூர்வ சகோதரத்துவம் மூலம் தமது கருத்தில் சிறந்து விளங்கிய இயக்கத்தவர். இங்குள்ள இரகசியம் என்னவெனில் இவ்வியக்கத்தின் நிறுவனர் தனிநபர்களை மாற்றுவதற்கு குர்ஆன் வசனங்களைத் தவிர எதனையும் பயன்படுத்திடவில்லை. அந்தந்த மனநிலைகளுக்கேற்ப அல்லாஹ்வின் தூதரும் (ஸல்) அவர்களுக்குப் பின்பு அன்னாரது தோழர்களும் பயன்படுத்திய விதத்திலே பயன்படுத்தினார். அதாவது அந்த இரகசியம் முழுமையும் இதுதான் எனக் கூற முடியும். குர்ஆன் ஆயத்துக்கள் தெய்வீக வஹி சிந்தனையாகவே பயன்படுத்தப்பட்டது. எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஏட்டுச் சிந்தனையாக அல்ல.

பின்நபியின் வார்த்தைகளின் படி இமாம் ஹஸனுல் பன்னா அல்லது அந்த மானிட ஆளுமை (அதாவது பின்நபி பன்னா என்ற பெயரை தனது எழுத்துக்களில் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டு மானிட ஆளுமை எனக் குறிப்பிட்டுள்ளார்.) அவர்சார்ந்த தலைமுறையின் மிகப் பெரும் அறிவாளியாக இருந்தவரல்ல. ஆனாலும் அவரது தலைமுறையிலே தேர்ச்சிபெற்ற அறிஞர்களில் பெருந்தொகையினர் தோன்றினர். அவர்கள் இறைவேதத்துக்கு கண்ணியம் மிகு விளக்கவுரைகளை எழுதியுமுள்ளனர். ஆனால் இமாம் பன்னாவோ இறைவேதத்தை நடைமுறைப்படுத்துகின்ற, அன்றாட வாழ்வில் குர்ஆனின் போதனைகளுக்கு வடிவம் கொடுக்கின்ற மகத்தான போராட்ட அணியை அமைத்தார். இதனைத் தான் அவரைப் பற்றி உண்மைப்படுத்திக் கூறியவர்கள் ‘புத்தகங்களை உருவாக்குவதை விடுத்து மானிட ஆளுமைகளை உருவாக்குவதில் ஈடுபட்டவர்’ என வர்ணிக்கின்றனர்.

இந்த விடயம் தான், எமது தத்துவவியலாளரும் பெரும் புத்திஜீவியுமாகிய கலாநிதி முஹம்மது ஆபித் அல்ஜாபிரி அவர்களுக்கு தவறி விட்டது. அல்லது கோட்பாட்டுத் தத்துவ அறிவும் இறையியல் மீதான அவரது ஈடுபாடும் அவரை மிகைத்து விட்டது. இதனால் தான் “முஹம்மது அப்துஹு அவர்களது சிந்தனை, ஆரம்பமாக றஷீத் றிழாவுடனும் அடுத்ததாக ஹஸனுல் பன்னாவுடனும் பின்னடைவைச் சந்தித்ததாகக் கூறுகிறார். (பார்க்க: நவீனகால அரபு சிந்தனையின் பிரச்சினைகள், ப-176)

ஆம். இங்கு பன்னாவின் சிந்தனைக்கும் அப்துஹுவின் சிந்தனைக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனினும் அது ஒரு பின்னடைவா? எனது பார்வையில் அப்துஹுவை விட்டும் பன்னாவின் சிந்தனைகள் மாறுபட தலைப்புக்குட்பட்ட சில காரணிகள் இருந்தன. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய உலகம் நாகரிகத் தேக்கமொன்றில் வீழ்ந்திருந்தது. அதனது தனித்தன்மையும் கலாசாரமும் முகங்கொடுத்த அச்சுறுத்தலில் அது பிரதிபலித்தது. எனவே இறையியலின் பக்கம் அல்லது கோட்பாட்டு சிந்தனையின் பக்கம் தேவையிருக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட செயல்வாத சிந்தனை மீது தேவையிருந்தது. அதுவே ஹஸனுல் பன்னாவின் கருத்துக்களிலும் வடிவெடுத்திருந்தது. அதுவே கீழைத்தேயவாதிகளது படுமோசமான தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்த உம்மத்தின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறையைப் பிரதிபலித்தது. “வெற்றிபெற்றவன், வெற்றிகொள்ளப்பட்டவன் மீது ஆதிக்கம் செலுத்துதல்” என்ற இப்னு கல்தூனினது பிரபல்யம் மிகு கூற்றுக்கு ஏற்ப நவீனத்துவ இயக்கத்தின் உளவியல் நெருக்கடியை எதிர்கொள்வதிலும் சிறந்த வழிமுறையைப் பிரதிபலித்தது. அவ்வகையில் இமாம் அப்துஹு வடிவமைத்த சீர்திருத்தப் பாதையை சரிசெய்து பூரணப்படுத்துவது இயல்பானதாக இருந்தது. இங்கு அப்துஹுவினை இஸ்லாத்தினது பிரச்சினையின் மூல ஊற்றைக் காட்டித் தராதவர் என பின்நபி அபிப்ராயப்படுகிறார்.

அப்துஹுவின் பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் அவரது விழிப்புணர்வுக் கருத்துக்கள் அனைத்துமே அவரது காலத்துக்கு முற்போக்கானவை. அவற்றுக்குரிய காலசூழலும் கூட சரியானதொன்றல்ல. அக்காலை இஸ்லாமிய உலகு அதனது தனித்துவ நாகரிகத்தின் மீதும் மார்க்க அடிப்படைகள் மீதும் செறிவான தாக்குதல்களைக் கண்டுகொண்டிருந்தது. எனவே ஃபிக்ஹை புதுப்பிப்பதும் பகுத்தறிவுக் கோட்பாட்டு இறையியலும் இச்சவால்களையும் இந்த நாகரிகத் தேக்கத்தையும் முகங்கொடுப்பதற்கான சிறந்த வழிமுறைகளாக இருக்கவில்லை. மேலும் அக்கால வேளையில் அது சீர்திருத்த இயக்கங்கள் ஈடுபாடு காட்டிய சிறந்த பணியாக இருக்கவுமில்லை. மாற்றமாக செயல்வாத சிந்தனையே அக்காலகட்டத்துக்குரிய முதன்மை அம்சமாக இருந்தது. இதுவே ஹஸனுல் பன்னாவின் சிந்தனை அப்துஹுவின் சிந்தனையை விட்டும் வேறுபடுவதற்கான காரணியாகும்.

ஸய்யித் குதுப், முஹம்மத் குதுப், அப்துல் காதர் அவ்தா, நத்வி, மவ்தூதி, முஸ்தபா ஸிபாஇ போன்ற இஸ்லாமிய இயக்கத்தின் அறிஞர்களதும் சிந்தனையாளர்களதும் எழுத்துக்களும் கூட இந்த சவாலுக்கான பதில்களாகவன்றி வேறாக இருக்கவில்லை. இந்த உம்மத்தின் வரலாற்றில் அக்காலப் பிரிவில் அந்த நாகரிகப் பங்களிப்பு அவசியப்பட்டது. இஸ்லாத்தின் மீதான படுமோசமான தாக்குதலை அதுவே உடைத்தது. இவ்வகை எழுத்துக்கள் முன்னெடுத்த சிந்தனை தொடர்ந்தும் இருக்கப் பொருத்தமானது என்பது இதன் கருத்தல்ல. மாற்றமாக இது இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் ஒரு தொகையினரது உடன்பாட்டின் படி அவர்களது காலத்துக்குப் பொருத்தமாக இருந்ததோடு அதற்குரித்தான நாகரிகப் பங்களிப்பையும் நிறைவேற்றியது.

இந்த சிந்தனைப் பாரம்பரியத்துக்கு இஸ்லாமிய இயக்க சிந்தனையின் வளர்ச்சியில் பெரும் தாக்கம் உண்டு என்பது சரியானது. அதற்குப் பின் அதனது வளர்ச்சி இலகுவான இடத்தில் உள்ளதொன்றல்ல. என்றாலும் அது சிலர் விவரித்தது போன்று குறித்ததொரு வடிவத்தில் இருக்கவில்லை. இஸ்லாமிய இயக்க சிந்தனையின் போக்கை ஒவ்வொருவரும் அறிவர். அதுவொரு பாரிய முன்னேற்றத்தைக் காட்டியது என்பதையும் அறிவர். அதில் கஸ்ஸாலி, கர்ளாவி, துராபி, கன்னூஷி, அப்துல் மஜீத் நஜ்ஜார், மேலும் மொரோக்கோவின் சிந்தனை அணியினர், அதன் தலைமகன் ரய்ஸூனி போன்ற நடுநிலை இயக்க சிந்தனையாளர்களின் தலைமுறையுடனான ஸ்தாபக சிந்தனையையும் தாண்டி திருத்தங்கள், மீள்பார்வைகளும் இடம்பெற்றன. அத்தோடு இஃக்வான்களோடு தொடர்புபட்ட, அவர்களுக்கு நெருக்கமான சுயாதீன சிந்தனையாளர்களான முஹம்மத் இமாரா, ஸலீம் அல்உவா, ஃபஹ்மி ஹுவைதி, தாரிக் அல்பிஷ்ரி, அப்துல் வஹாப் மிஸைரி உள்ளிட்டோரும் உள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளுக்குள்ளிருந்து கொண்டு எழுதிவந்த முஸ்லிம் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகள் போன்றவற்றின் ஆதரவோடு எழுந்த வெளிச்சக்திகளது சவால்களை எதிர்கொள்வதற்கு இஸ்லாமிய இயக்கத்துக்கான வாய்ப்பை இந்த செயல்வாத சிந்தனையே வழங்கியது. மேலும் இந்த உம்மத்தின் தனித்துவ அடையாளத்தைப் பேணுதல், முஸ்லிம்களது மைய விவகாரமாக பலஸ்தீன விடயத்தை உயிரோட்டமாக வைத்திருக்கவும் இதனாலேயே வாய்த்திருந்தது. மாற்றாக, நடைமுறையில் ஒற்றுமையின் அடையாளமாகக் காணப்பட்ட உஸ்மானிய ஃகிலாபத்தினது வீழ்ச்சியின் பின்னர் உம்மத்தினது மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த உணர்வொன்று முகிழ்த்திருந்தது. இஸ்லாமிய இயக்கங்கள், அதில் குறிப்பாக முதன்மையான இஸ்லாமியப் பேரியக்கம் இஃக்வானுல் முஸ்லிமூன் இல்லாதிருந்திருந்தால் உம்மத்தின் தனித்துவம் இல்லாது போயிருக்கும். பலஸ்தீனும் இழக்கப்பட்டு அதன் முடிவு அந்தலுஸிற்கு -முஸ்லிம் ஸ்பெயினிற்கு- ஏற்பட்டது போல ஆகியிருக்க முடியும். இதுவும் குறுகிய பிரதேச, தேசியவாத அலைகளுக்கு முன்னால் இஸ்லாமிய ஒற்றுமைக் கனவை சுக்குநூறாக்கிப்போட்டது.

இஸ்லாமியவாதிகள் ஆரம்பத்தில் “இஃக்வானுல் முஸ்லிமூன்” ஆக வடிவெடுத்தார்கள். அவர்கள்தான் அரபு-இஸ்லாமிய மக்களின் மிக உண்மையான குரல். அதனைத்தான் அனைத்து அரபு-இஸ்லாமிய நாடுகளதும் முஸ்லிம் மக்கள் தமக்கு ஒவ்வொரு முறையும் சுதந்திரமான தூய தெரிவுக்கான வாய்ப்பொன்று வழங்கப்படுகையில் இஸ்லாமியவாதிகளைத் தெரிவுசெய்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். துருக்கியில் இது நிரூபணமாகியது; எகிப்திலே அரசியலமைப்பு வாக்கெடுப்பு, பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என மூன்று முறை நிரூபணமாகியது; டியூனீசியாவிலும் நிரூபணமாகியது; லிபியாவில் ஒரு தடவை நிகழ்ந்ததும் இதுவே; மொரோக்கோவிலும் இது நிரூபணமாகியது; இன்னும் யெமனில், ஜோர்தானில், குவைத்தில், மொரித்தானியாவிலும் இதன் அடையாளங்கள் தெளிவாகவே தென்பட்டன.

இதனால்தான் கலாநிதி ரிழ்வான் ஸய்யித் போன்ற உயர்ந்த நவீன எழுத்தாளர்கள் இந்த உண்மையை உரத்துக் கூறுவதை நாம் காண்கிறோம். அதாவது, “இந்த இயக்கங்களின் அடிப்படையானது மாசுகள் ஏதுமற்ற வரலாற்றை கடந்த காலத்திலும் தற்போதும் இஸ்லாமிய சமூகத்தில் பெற்றுள்ளது.” அதாவது இஸ்லாமிய இயக்கங்களை அவர் குறித்துக் காட்டுகிறார். (பார்க்க: சமகால இஸ்லாம்… தற்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த பார்வைகள், ப-31.) இதுதான் புத்திஜீவிகளின் அபிப்ராயங்களுக்கும் வரலாற்று உண்மைகளை மறுத்து கண்களுக்குத் திரையிட்டு அதன் விளைவுகளை மூடி மறைக்கப்பார்க்கும் கருத்தியலாளர்களது அபிப்ராயங்களுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.

உண்மையில் இஸ்லாமியவாதிகளை மைய நீரோட்டத்தை விட்டும் தூரமாக்க அல்லது அப்புறப்படுத்த யார் உடன்படுவாரோ அவர் முஸ்லிம் மக்களையே மைய நீரோட்டத்தை விட்டும் தூரமாக்க அல்லது அப்புறப்படுத்த உடன்படுவது போலாவார். அதுதான் சாத்தியப்படுத்த முடியாதவற்றில் முதன்மையானதாகும்.

 

மூல ஆக்கம்: ஃகல்லிஹின் முஹம்மத் அமீன் (மொரித்தானியா)

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)

 

நன்றி: அல்ஜஸீரா ப்ளாக்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s