– மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இறை நியதிகளது ஒழுங்கின் வழி – பலஸ்தீனர்களின் மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம்

images (7)

 

அரபு மூலம்: உஸ்தாத் வஸ்பி ஆஷூர் அபூ ஸைத்

-பேராசிரியர், மகாஸிதுஷ் ஷரீஆ இஸ்லாமிய்யா-

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)

 

 

பலஸ்தீனத்தின் உள்ளேயிருக்கும் மக்கள் வெளியே இருக்கும் தமது பலஸ்தீன மற்றும் பலஸ்தீனரல்லாத முஸ்லிம் சகோதரர்களின் உறுதியான ஆதரவுடன் பலஸ்தீன ஆதரவுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் எடுத்திருக்கின்றனர்.

 

பலஸ்தீனர்கள் தாயக தினம் (யவ்முல் அர்ழ்) என்று நினைவுகூரும் ஆர்ப்பாட்டங்கள் மார்ச் 30 (2018) இல் ஆரம்பித்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் நக்பா நினைவு நாளான மே மாதம் 15ம் திகதியன்று முடிவுக்கு வரும். பெரும் மக்கள் திரளில் அது பற்றி அறிவிக்கப்பட்டுத் துவங்கியது. அதற்கு அவர்கள் “மாபெரும் மீளத்திரும்புதல்” எனப் பெயரிட்டார்கள். அது பலஸ்தீனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அகதிகளுக்கு தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான உரிமையைக் குறிக்கின்றது. இதுவொரு விஷேடமான செயற்பாடாகும்.

 

இது குறித்த செயலுக்கான பதிலாக இல்லாத போதும், அது பலஸ்தீனர்களுக்காக மாற்றுத் தேசமொன்றை உருவாக்கும் துரோகத் திட்டத்தோடு தொடர்பானது. மட்டுமல்லாது அவ்வாறு மீளத் திரும்புவதுதான் களத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் சுக்கான் ஆகும். அதுவே சமகால நிகழ்வுகளில் தாக்கம் நிகழ்த்தி இலக்கை சாத்தியமாக்கிவிடக் கூடிய பக்கத்திற்கு அவர்களை மாற்றிவிடும்.

 

 

இந்த மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணத்தின் இலக்குகள்:

 

உலக ஒழுங்கு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சியோனிஸத்தின் தலைநகராக குத்ஸ் புனித நகரைப் பிரகடனம் செய்யும் தீர்மானம் என்பவற்றுக்கு எதிரான பலஸ்தீன வெகுமக்களின் எதிர்ப்பாக இந்த நடைப்பயணம் உருவெடுத்தது. பலஸ்தீனர்கள் விவரிப்பவாறு சர்வதேச சதியினடியாக விரைந்து பலஸ்தீன விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான தொடந்தேர்ச்சியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நடைமுறை ரீதியான முதலாவது எட்டாக இந்த மீளத்திரும்பும் நடைப்பயணம் உள்ளது.

 

காஸாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் இருந்து எல்லைப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைப்பயணம் தாயக தினம் (யவ்முல் அர்ழ்) அன்று துவங்கும் என உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது. அப்பயணம் எல்லைகளை ஊடுருவிச் செல்ல முயற்சிக்கும். இந்த வெகுமக்கள் செயற்பாடு எவ்வாறு எந்த இயல்போடு அமைந்து காணப்படும் என்ற கட்டமைப்புக்கள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

அங்கே எல்லை நெடுகிலும் அகதிகளுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சியோனிஸப் படைகளுடனான முறுகல்கள் சமாதானபூர்வமான வழிமுறைகள் மூலமாகத் தீர்க்கப்படும். எல்லையைத் தாண்டிச் செல்லுதல் என்பதே ஆர்ப்பாட்டம் செய்வோரின் முதலாவது இலக்காகும். மற்றது சர்வதேச சட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கோருவதாகும். அதில் தலையாயது ஐ.நா. வின் பொதுச் சபை வெளியிட்ட 194 ம் இலக்கத் தீர்மானமாகும்.

 

அந்தத் தீர்மானத்தின் 11வது பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “இந்தப் பொதுச் சபை, தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடும் விருப்பமுள்ள அகதிகள் கூடியளவு சீக்கிரமான காலகதியில் மீளத்திரும்புவது அத்தியாவசியமானது என தீர்மானம் செய்கின்றது. அவர்கள் தமது அண்டை அயலாருடன் சமாதானப் பூர்வமாக வாழலாம். தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தடையான இழந்து போயிருக்கும் சொத்துக்களுக்கான நஷ்டஈடுகள் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறே சொத்துக்களுக்குத் தீங்கு ஏற்படுத்தியிருக்கும் அனைத்து இழப்புக்கள், நஷ்டங்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்கள், நீதியின் அடிப்படையில் இழப்பதற்கு முன்பு இருந்தவாறே வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் அனைத்து இழப்புக்கள், நஷ்டங்கள், தீங்குகளும் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரத்திலுள்ளவர்கள் புறமிருந்து ஈடுசெய்யப்பட வேண்டும்.

 

 

ஷரீஆவின் உயர் பொது இலக்குகளுடன் (மகாஸிதுல் ஆம்மா லிஷ்ஷரீஆ) இம்மாபெரும் மீளத்திரும்பல் நெருங்கிய தொடர்புடையது:

 

நீதியை நிலைநாட்டுதல், உரியவர்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்தல், நிலத்தையும் பூமியையும் பாதுகாத்தல், செல்வத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்தல் என்ற வகைகளில் இஸ்லாமிய ஷரீஆவின் பொது உயர் இலக்குகளுடன் இவ்விடயம் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. உரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலும், அதனை உரியவர்களுக்கு அளிப்பதிலும் உறுதியோடு செயலாற்றுவது நீதியை நிலைநாட்டி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதில் வந்துள்ள இஸ்லாமிய ஷரீஆ மற்றும் அதன் உயர் இலக்குகளில் உள்ள மகத்துவம் மிக்க விடயங்களாகும். ஒத்துழைப்பு, சகோதரத்துவத்தின் கட்டாயக் கடமையை மேன்மைப்படுத்துவது, நீதியை நிலைநாட்டுவது என்பன அனைத்து இறைத் தூதுகளினதும் இலக்காக இருந்துள்ளது.

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) தராசையும் இறக்கினோம்” (அல்ஹதீத்:25)

 

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த செல்வம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற கண்ணியம்மிகு ஷரீஆ பாதுகாக்க ஏவியவற்றோடு உடன்படுகிறது. மட்டுமன்றி அதற்கென மரணிப்பதையும் ஆகுமாக்கியுள்ளது. அவ்வாறு மரணிப்பதை இறைபாதையில் வீரமரணத்தைத் தழுவுவதாகக் கருதுகிறது. “எவர் தனது செல்வத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது மார்க்கத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது உயிரைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்; எவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்” (திர்மிதி, அபூதாவூத்)

 

முஸ்லிம்கள் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் அது சகோதரத்துவத்தின் உயிரோட்டத்தைப் பேணியதில், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வுகளை மகத்துவப்படுத்தியதில் உட்படும். இவையெல்லாமே இஸ்லாத்தின் பெரும் உயர் இலக்குகளாகும். “நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!” (அல்ஹுஜுராத் :10)

 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான். அவன் மற்றவனுக்கு அநியாயம் இழைக்கவும் மாட்டான். அநியாயம் இழைப்பவனுக்கு உதவவும் மாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

 

ஒரு முஸ்லிம் மீது தனக்கு உள்ளவாறே தனது சகோதர முஸ்லிமுக்கு உள்ள உரிமைகளைப் பேசுகிறது. இமாம் இப்னு ஹஸ்ம் கூறுகிறார். “ஒரு முஸ்லிமை எவர் உணவளிக்கவும் ஆடையணிவிக்கவும் சக்தியிருந்தும் பசியோடும் நிர்வாணத்தோடும் விட்டுவிடுகிறவர் அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டார்.”

 

பட்டினிக்கும் உடுத்த ஆடையின்மைக்கும் இவ்வாறு எனின், தாய்மண்ணை சீர்குலைத்திருக்கும், பயிர்களையும் அடுத்த தலைமுறையையும் அழித்துப் போட்டிருக்கும், பூமியையும் மானத்தையும் சிதைத்துவிட்டிருக்கும் கொடிய எதிரியை எப்படி விட்டுவைத்திருப்பது?

 

எனவே இந்தச் செயற்பாடு மனித இயல்புடன், அறிவுடன், தர்க்க நியாயத்துடன் நெருங்கிவருகிறது. மானிட உணர்வுக்குக் கீழ்ப்படிபவற்றுடன் இசைந்து செல்கிறது. காலத்தின் எல்லாப் புறத்திலும் மானுடம் அதற்கு ஒத்துச்செல்கிறது. உரிமையுடையவர்கள் அதற்கு மிகவும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். கோரிக்கைகள் இருக்கையில் உரிமை ஒரு போதும் மரணித்துப் போய்விடாது.

 

 

மகாஸிதுல் ஜிஹாதை (ஜிஹாதின் உயர் இலக்குகளை) மேன்மைப்படுத்தும் செயல்:

 

அல்லாஹுத் தஆலா அவனது பாதையில் போராடுவதை விதியாக்கியுள்ளான். இஸ்லாத்தின் ஆரம்பம் தொட்டு மறுமை வரைக்கும் அதனைத் தெளிவான கடமையாக ஆக்கி வைத்துள்ளான். அதன் மூலம் முஸ்லிம்களது மேன்மை, கண்ணியத்தை அவன் உத்தரவாதம் செய்கிறான். “நீங்கள் மறைமுகமாக வட்டியை ஆகுமாக்கிக் கொண்டு வேளாண்மைக் கால்நடைகளைப் பற்றிக்கொண்டு பயிர்ச்செய்கைகளில் மூழ்கிக் கொண்டும் இருந்து ஜிஹாதையும் விட்டுவிட்டால் அல்லாஹ் உங்கள் மீது இழிவைச் சாட்டிவிடுவான். நீங்கள் உங்களது மார்க்கத்தின் பக்கம் மீளும் வரைக்கும் உங்களை விட்டும் அதனை அகலச் செய்யமாட்டான்” என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். (அபூதாவூத்)

 

ஜிஹாதுடைய மகாஸிதுகளில் எதிரிகளைத் தடுத்து நிறுத்தல், நிலத்தை விடுவித்தல், மானத்தைப் பாதுகாத்தல், குழப்பத்தையும் சீர்குலைவையும் தடுத்தல் எல்லாம் உள்ளடங்கும்.

“ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.” (அல்பகறா: 193)

 

இங்கு இமாம் இப்னு தைமியா அவர்களது நிலைப்பாடு எதிரி மார்க்கத்தையும் உலகையும் சீர்குலைக்கிறான் என்பதற்காக அவனை எதிர்க்க வேண்டுமென்பது ஈமானுக்குப் பின்பு அத்தியாவசியக் கடமையாகும். “தற்பாதுகாத்துக் கொள்ளப் போராடுவது என்பது புனிதமானவை, மார்க்கம் ஆகியவற்றைத் தாக்கியழிக்கும் எதிரியைத் தடுப்பது என்பது கடினம் மிகுந்த வழிமுறையொன்றாகும். அது வாஜிப் என்பது இஜ்மாவான கருத்தாகும். மார்க்கத்தையும் உலகையும் சீர்குலைத்துத் தாக்கியழிக்கும் எதிரியை எதிர்ப்பது, ஈமானுக்குப் பின்பு அத்தியாவசியக் கடமை இதுவன்றி வேறு இல்லை. அதற்கு வேறு எந்த நிபந்தனையொன்றும் இருக்கத் தேவையில்லை. மாறாக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு எதிர்த்து நிற்க வேண்டும். (அல்ஃபதாவா அல்குப்ரா: 5/538)

 

 

எதிரியை எதிர்த்து நிற்காமல் ஜிஹாதின் மகாஸித் நிலைநிறுத்தப்பட மாட்டாது. எனவேதான் ஷரீஆ சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்த்து நிற்பதைக் கடமையாக்கியிருக்கின்றது. ஒரு சாராருக்குப் போதியளவுக்கு நிலைநிறுத்தப்பட்டு விட்டால், அவர்கள் தமது அண்டை அயலைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பது கடமையாகும். “எதிரிகள் இஸ்லாமிய நாட்க்குள் புகுந்துவிட்டால் அயலில் இருப்போர் அவர்களைப் பாதுகாப்பது கடமை என்பதில் சந்தேகமில்லை.  இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒரே நிலையில் இருந்தால் தந்தையுடைய, கடன் கொடுத்தவருடைய அனுமதியின்றியே விரைந்து சென்று இணைவது கடமையாகும்.” என இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்.  (அல்ஃபதாவா அல்குப்ரா: 5/539)

 

இந்த உம்மத்தினர் அனைவருமே இம்மாபெரும் மீளத் திரும்பும் நடைப்பயண நிகழ்வில் கரிசனை காட்டவேண்டும். பதாகைகளை உயர்த்தி நிற்கவேண்டும். ஏனெனில் சியோனிஸ்டுகள் தான் இந்த உம்மத்தினருக்கு மிக அபாயகரமானவர்கள். இந்த ஆக்கிரமிப்புப் புற்றுநோய் அகற்றப்பட்டுவிட்டால் இந்த உம்மத்தினரைப் பீடித்திருக்கும் பலப்பல நோய்கள் குணப்படுத்தப்பட்டுவிடும். அதிகமான கோளாறுகளை விட்டும் தூய்மை பெற்றுக்கொள்ளும். அதன் மூலம் நாம் நமது உதிரங்களையும் புனிதங்களையும் எண்ணற்ற உயிர்களையும் காத்துக்கொள்ளலாம்.

 

இதனால் தான் இமாம் இப்னு குதாமா அவர்கள் “ஒவ்வொரு சமூகமும் தமக்கு அயலிலிருக்கும் எதிரியுடன் போர்புரிவர். இதன் அடிப்படை ஒரு குர்ஆன் வசனமாகும்.

“நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திரு(ந்து தொல்லை விளைவி)க்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்” (அத்தவ்பா: 123) ஏனெனில் அருகிலிருப்போர் தான் அதிகம் தீங்கு விளைவிக்கக் கூடியோர். போரில் பின்னர் எதிர்கொள்ள வேண்டியோருக்கு முன்பே அவர்களை எதிர்கொள்ளும் தீங்கைத் தடுத்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடும். ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிடைக்காது போயிருந்த வாய்ப்புக்கள் பின்பு அவர்களுக்குக் கிடைக்க முடியும்” என்கிறார். (அல்முஃங்னி: 9/202)

 

இந்த சியோனிஸப் புற்றுநோய் இஸ்லாமிய உம்மத்தைப் பீடித்திருப்பது மிகப் பெரும் தீங்கு என்பது உறுதியான விடயமாகும்.

 

 

தெய்வீக நியதிகளோடு ஒத்துச் செல்லும் செயல்:

 

இச்செயற்பாடு தெய்வீக நியதிகளோடு ஒத்துச் செல்கிறது. அல்லாஹ் இப்பிரபஞ்சத்தையும் அதில் வாழ்தலையும் சில நியதிகள், உறுதியான தொடர்ந்தேர்ச்சியான விதிகள் மூலமும் ஆக்கிவைத்திருக்கிறான். அது மாறாது; மாற்றப்படாது; மாறிவிடவும் மாட்டாது.

“அப்படியாயின் அல்லாஹ்வின் நியதியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.” (ஃபாத்திர்: 43)

 

சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையேயான போராட்டமும் இந்த நியதிகளுக்குள் அடங்குவதுதான். அவ்வாறு இல்லாதுவிட்டால் தான் பூமியில் குழப்பம் மலிந்து வாழ்க்கை தேங்கிவிடும்.

“(இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.” (அல்பகறா: 251)

 

 

 

இவ்வகை நியதி இல்லாது விட்டால் வேறு விதமான அனர்த்தங்களும் நேர்ந்திருக்கும்.

“மனிதர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 40)

 

இந்த வசனத்தை விளக்கும் ஷெய்க் ஸஃதி அவர்கள் கூறுகிறார். “மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின், நிராகரிப்போர் முஸ்லிம்களை ஆக்கிரமித்துவிட்டிருப்பர். அவர்களது வணக்கத்தலங்களை பாழ்படுத்தியிருப்பர். அவர்களது மார்க்கத்தை விட்டும் புரளச்செய்திருப்பர். இது, தன்னைத் தவிர மற்றவர் தாக்கப்பட்டு, வேதனைப்படுவதை விட்டும் பாதுகாக்கப்படுவதற்கான ஜிஹாத் ஷரீஅத் ரீதியானது என்பதைக் காட்டுகின்றது. (தப்ஸீருஸ் ஸஅதி: 539)

 

இது இன்னொரு இறை நியதியின் பாற்பட்ட நியதியொன்றாகும். அது தான் மாறி மாறி நிகழும் சுழற்சி நியதி. அல்லாஹ் கூறுகிறான்.

“இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.

(ஆல இம்ரான்: 140)

 

தடுத்துப் போராடுவதன் மூலமன்றி மாறும் சுழற்சி விதி நிகழ மாட்டாது. அரசுகள் மாற மாட்டாது. சட்டங்கள் மாற மாட்டாது. நிலைகள் மாற மாட்டாது. தடுத்துப் போராடுவதன் மூலம்தான் எதிரி இல்லாது போவான். தீங்குகளும் சீர்கேடுகளும் குழப்பங்களும் தடுக்கப்படும்.

 

மாறி மாறிச் சுழலும் நியதியின் இன்னொரு விளைவுதான் மேற்குறித்த அல்குர்ஆனியத் திரு வசனம் சொன்னவாறு “ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.” என்பதாகும். இதன் மூலம் தெய்வீக நியதிகள் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பவை என்பது விளங்குகின்றது.

 

இறுதியாக, கடந்த மார்ச் 30 வெள்ளியுடன் துவங்கிய இம்மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம் 2018 மே மாதம் நிறைவுக்கு வர இருக்கின்றது. நிச்சயமாக அதுவொரு அருள் பொருந்திய வேலைத் திட்டம். ஷரீஅத் ரீதியான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால் அதுவொரு வாஜிப். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து அதற்கென அழைப்புக் கொடுப்பது உரிமை என்பதையும் தாண்டி ஒரு ஃபர்ழ் ஆகும். அது ஒரு தனித்துவமான செயற்பாடு. வரப் போகும் நாட்கள் பெரும் நிகழ்வுகளுக்கும் மிகப் பெரும் வெற்றிகளுக்குமான அடையாளங்கள் துலங்கும் என நான் நம்புகிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s