தன் மாணவர்களுக்காகத் தினமும் பிரார்த்திக்கும் ஓர் ஆசிரியர்…

sssssss

இம்முறை பயணம் சஞ்சிகையின் ஸுஹ்பா ஸாலிஹா பக்கத்துக்கான சான்றோர் சந்திப்பாக திஹாரிய அல்அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் அதிபர் M.H.M. தவ்ஃபீக் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். பழகுவதற்கு இனிமையான, மிகுந்த மென்மையான மனிதரான அவர்கள் பேட்டியைப் பற்றிச் சொன்னதும் இஃக்லாஸ் குன்றிவிடக்கூடாது, பெருமை போன்றன வந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் சற்றுத் தயங்கினார். எனினும் அவரது நல்லனுபவங்களும் பண்புகளும் சமூகத்தைச் சென்றடைந்து அனைவரும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் நம்மோடு நிறைய விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். மஃங்ரிப் தொழுகைக்குப் பின்னரான அமைதியான மாலைப் பொழுதொன்றில் அவரோடு உரையாடியவற்றை இங்கு நம் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

ஏனையோருக்கு முன்மாதிரியான இந்த ஆசிரியர் அவர்களது விஷேடமான பண்பு ஒன்றினை இப்பேட்டியில் நாம் கட்டாயம் அறிமுகப்படுத்தித் தான் ஆக வேண்டும். தனக்கு நெருக்கமானவர்களுக்கென தன் தஹஜ்ஜத் உடைய நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் கூறி பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர் இந்த ஆசான் அவர்கள். அதற்காக விஷேடமாக கொப்பியொன்றினையும் வைத்து அதிலே தான் துஆ கேட்க வேண்டியவர்களின் பெயர்களையும் நீண்ட பட்டியலாக ஆசிரியர் அவர்கள் எழுதி வைத்திருந்ததைக் கண்டதும் மனத்துக்கு நிறைவைத் தரக் கூடிய ஒருவரை வாழ்வில் சந்தித்துவிட்டோமே என்ற உணர்வு ஏற்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்… புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

 

உங்களை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்?

நான் 1944 ஜனவரி 16 இல் திஹாரியில் பிறந்தேன்… எனது உம்மா, வாப்பா எல்லோரும் திஹாரிய பூர்வீகம்தான். ஒன்பது பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் நான் இரண்டாவது பிள்ளை, ஒரு மூத்த சகோதரியும் இளையவர்களாக நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உள்ளனர்.

கல்வியை முழுதுமாக திஹாரியிலேயே கற்றேன். இடையில் தர்கா நகர் அல்ஹம்ரா மற்றும் கம்பளை ஸாஹிரா போன்ற கல்லூரிகளில் ஏழாம், எட்டாம் வகுப்புகள் கற்கும் போது எனது தந்தையார் சேர்த்துவிட்டார். எனினும் இரு கல்லூரிகளிலுமே என்னால் தொடர்ந்து கற்க முடியாது போய்விட்டது. காரணம் என்னால் வீட்டைப் பிரிந்து இருக்க முடியவில்லை. நான் அங்கே விடுதியில் வீட்டு யோசனையில் அழுதுகொண்டிருப்பேன். இதனால் இரு பாடசாலைகளிலும் குறுகிய காலமே கல்வி கற்றேன். பின்பு திஹாரிக்குத் திரும்பி வந்து தொடர்ந்து கற்று க.பொ.த.சா/தரம், உ/தரம் ஆகிய பரீட்சைகளையும் இங்கேயே எழுதினேன்.

பின்னர் 1964 இல் ஆசிரியர் சேவைக்காக நாடாத்தப்பட்ட விஷேட பரீட்சையொன்றை எழுதி அதே ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்றுக் கொண்டு அல்அஸ்ஹரிலேயே ஆசிரியராக இணைந்துகொண்டேன். அப்போது அது மாணவ ஆசிரியர் என அழைக்கப்பட்டது. அந்நேரம் நான் வெகு சிறு வயதினராக இருந்தோம். அந்நேரம் எம்மைப் பார்த்த ஆசிரியர்கள் ‘ஸ்கூல் பொடியன் ஒன்டு வார மாதிரி இருக்குது’ என நகைச்சுவையாகக் கூறுவர்.

எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்து இரு வருடங்களிலேயே (1966ம் ஆண்டு) எனது தந்தையார் வஃபாத்தாகி விட்டார். அதன் பின்பு மூத்த ஆண் பிள்ளை என்ற வகையில் நான் குடும்பச் சுமையைப் பொறுப்பேற்க வேண்டி வந்தது.

அப்போது எனது கடைசித் தங்கைக்கு வயது ஐந்தரை இருக்கும். அன்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது; எமது வாப்பாவின் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுத் திரும்புகையில் என் தங்கை என்னைப் பார்த்து ‘இனி நான் உங்களைத் தான் வாப்பா என அழைப்பேன்.’ எனக் கூறினார். அது எனக்கு என் பொறுப்பை நன்றாக உணர்த்தியது.

பின்பு 1970/71 களில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சிகளைப் பெற்றேன். அப்போது பயிலுனர்களுக்குத் தரப்படும் 225.00 ரூபாய் சம்பளத்தில் பெரும்பகுதியை மிச்சம் பிடித்து வீட்டுக்கே அனுப்பிவிடுவேன். குடும்ப உறுப்பினர் அனைவரும் அதிலேயே தங்கி வாழ்ந்தனர்.

நான் திருமணம் செய்தது குருணாகல் மாவட்டம், தெலியாகொன்னயில்… எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இருவர் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் இருவர். மூத்த மகன் இப்போது திஹாரிய அல்அஸ்ஹரில் அதிபராக இருக்கிறார்.

 

அதன் பின்னர் ஆசிரியர் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டீர்கள்?

ஆசிரியர் பயிற்சியின் பின்பு எமது கம்பஹா மாவட்டத்திலேயே நியமனம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்தேன். எனினும் நியமனம் அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் இருந்த உல்லை பகுதியில்தான் கிடைத்தது. அங்கு அக்காலம் பேருந்து வசதியும் இருக்கவில்லை. இருந்த ஒரு பேருந்தைத் தவறவிட்டால் விவசாயத்துக்குச் செல்லும் ட்ரக்டர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அங்கிருந்த பாடசாலைக்கு சீருடையல்லாமல் ‘சேலை’ அணிந்து வந்த மாணவிகளும் அன்று இருந்தனர். அந்தளவு பின்தங்கிய பிரதேசமாக அது காணப்பட்டது.

பின்பு குளியாப்பிட்டி, மல்வானை என பல இடமாற்றங்களுக்குப் பின்பு 1977இல் திஹாரிய பாடசாலையில் நியமனம் பெற்றேன். இறுதியாக 1996 இலிருந்து 2003ம் ஆண்டில் ஓய்வுபெறும் வரையில் அங்கேயே கற்பித்தல் பணிகளைப் புரிந்துவந்தேன்.

அல்அஸ்ஹரிலே ஆரம்பத்தில் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாகவும் பின்னர் அதிபராகவும் சேவையாற்றினேன். அல்அஸ்ஹரிலே ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த போது ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. அப்போது மிகக் குறைவான சம்பளத்தில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தோரது தியாகங்களைக் கட்டாயம் நினைவுபடுத்த வேண்டும்.

அப்போது இடைவிடாமல் கற்பிக்க வேண்டியிருந்தது. ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் அந்தந்த வகுப்புக்களுக்கும் சென்று கற்பிப்பேன். பல சந்தர்ப்பங்களில் காலை உணவைக் கூட சாப்பிட நேரம் கிடைக்காது அவற்றை மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிடுவேன். இதனால் வீட்டில் என்னைக் கடிந்துகொள்வார்கள்.

 

மாணவர்களுடனான உங்களது அந்யோன்னியம் எவ்வாறு அமைந்தது?

மாணவர்கள் எமக்கான பொறுப்புக்கள். நாம் பணத்தை முதலிட்டு ஹலாலான இலாபத்தை உழைப்பது போல ஆசிரியர்களான எமக்கு முதலீடுகள் மாணவர்கள்தான். அவ்வகையில் நாம் உருவாக்கும் மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினால்தான் எமது வருமானமும் ஹலாலானதாக அமையும். அவ்வாறல்லாமல் இருக்கும் போது எமது வருமானமும் கூடாததாகிவிடும். எனவே இந்த அமானிதத்தைப் பேணி நடந்துகொள்ளவேண்டும்.

எம்மிடம் கற்றலுக்காக வரும் மாணவர்கள் பல சூழல்களிலிருந்தும், பல்வேறுபட்ட பிரச்சினைகளோடும் தான் வருகின்றனர். நாம் ஒரு வியாபாரம் செய்வோமாயின் சிறந்த திட்டமிடல்களோடு செய்வோம். உற்பத்தித் தொழிற்சாலையொன்று வைத்திருப்போமாயின் அதிகபட்ச முயற்சியெடுத்து பூரணமான உற்பத்திகளைக் கொடுக்க முயற்சிப்போம். அவ்வகையில் எமது மாணவர்களைப் பூரணமாக உருவாக்க வேண்டுமாயின் மாணவர்களின் நிறை, குறைகள், பிரச்சினைகள்… என எல்லாவற்றையும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு பூரண ஆளுமை மிக்க கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களை உருவாக்கிட இயலும்.

பிள்ளைகள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் குறும்புத்தனமானவர்கள்தான். எனினும் நாம் அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளவேண்டும். எனக்குத் தெரிந்து பல உதாரணங்கள் இருக்கின்றன. மாணவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் கல்வியைக் கைவிட்ட சம்பவங்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பது மாத்திரம் போதாது. அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பதிலும் அவர்களது விருத்தியைக் குறித்து சிந்திப்பதிலும் கட்டாயம் ஈடுபட வேண்டும். (தான் துஆ கேட்கும் மாணவர்களின் நீண்ட பட்டியலொன்றைச் சொல்கிறார்.)

 

நீங்கள் உங்களது மாணவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் தஹஜ்ஜத்திலே அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது குறித்து சொல்லுங்கள்… அவ்வாறு துஆ கேட்கும் பழக்கம் எவ்வாறு ஏற்பட்டது?

அது உண்மையிலேயே தானாகவே ஏற்பட்ட பழக்கமொன்றுதான். தஹஜ்ஜத் தொழுதுவிட்டு நான் அவர்களுக்காக துஆ கேட்பேன். அவர்களுக்காக பட்டியலொன்றைத் தயார் செய்து எழுதிவைத்திருக்கிறேன். அவர்களது பெயர்களைக் கூறி  அல்லாஹ்விடம் அவர்களுக்காக இறைஞ்சுவேன்.

இப்பட்டியலில் 50-60 வயது தாண்டிய பெரியவர்களில் இருந்து 2-3 வயது குழந்தைகள் வரையும் இருக்கின்றனர்.

(பட்டியலில் 270 க்கும் மேற்பட்ட சகோதரர்களுக்காக ஆசிரியர் அவர்கள் துஆ கேட்பதை அறிய முடிந்தது. எவரது பெயரையும் கூற வேண்டாமென அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். பட்டியலில் சகல பருவ வயதுகளையும் உடையவர்கள் இருந்தனர். இத்தனை வயதிலும் ஒரு நீண்ட பெயர்ப்பட்டியலைத் துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பது உண்மையில் அல்லாஹ்வின் அருளாகவே இருக்கும்.)

2009 அளவில் இருந்துதான் நான் இந்த பழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறேன். அவர்களது பிரச்சினைகள், தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பவற்றுக்காக நான் பிரார்த்திக்கிறேன். சிலர் இப்போது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களாது ஆசிரியர்களுக்குத் தெரியாத பிரச்சினைகளைக் கூட என்னிடம் கூறி ஆறுதலும் பிரார்த்தனையும் வேண்டுபவர்களாக இருக்கின்றனர்.

இது மட்டுமன்றி அல்அஸ்ஹர் பாடசாலை மற்றும் ஃபாதிஹ் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்காகவும் அதன் ஆசிரியர்களுக்காகவும் அதன் கல்வி விருத்திக்காகவும் தஹஜ்ஜத்திலே துஆ கேட்பேன். எனது ஆசிரியர்களையும் எனது துஆக்களில் இணைத்துக் கொள்ள மறப்பதில்லை.

 

இறுதியாகக் கூற விரும்பும் ஏதாவது

பள்ளிவாசலுடனான எமது அன்றாட கொடுக்கல்-வாங்கல்கள் தொழுவதுடனும், பிள்ளைகளை மாலையில் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதோடும், மௌலவிக்கும் முஅத்தினாருக்கும் உணவு கொடுப்பதோடும் முடிந்துவிடுகின்றது. ஆனால் அவ்வாறல்ல முழு சமூகமும் மாறுவதற்கான தளமாக பள்ளிவாசல்கள் இருக்க வேண்டும். ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களது காலத்தில் அவ்வாறுதானே இருந்தது.

ஒரு புறம் நல்ல காரியங்கள் பரவலாகி வந்தாலும் சமூகத்தில் இன்னொரு பக்கம் வீழ்ச்சியும் சீர்கேடுகளும் பரவிக் கொண்டுவருவதையும் அவதானிக்கிறோம். இவற்றையும் இல்லாமல் செய்வதற்கு எமது புத்திஜீவிகள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்.

 

 

Advertisements

இப்லால் ஆசிரியரோடு சில பொழுதுகள்

image-b12860b855c0440e3a03a830873eca31c1aefcfcba26a033a624105647ccc643-V

1944ம் ஆண்டு பிறந்த இஃப்லால் ஆசிரியர் அவர்களது சொந்த ஊர் மாத்தறை மாவட்டத்தில் வெலிகாமம். ஆரம்பத்தில் கப்புவத்தை முஸ்லிம் பாடசாலையில் (தற்போதைய அந்நூர் பாடசாலை) கல்விகற்று பின்னர் சாதாரணதரக் கல்வியை தர்கா நகர் அல்ஹம்ராவிலும் உயர்தரக் கல்வியை வெலிகம அறபா மத்திய கல்லூரியிலும் கற்றார். பட்டப் படிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். பின்பு சிறிது காலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிவிட்டு பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் 1979-1996 வரை விரிவுரையாளராகக் கடமையாற்றினார். கல்வி வாழ்க்கைக்குப் பின்பு சொந்த வியாபாரம் ஆரம்பித்து இன்று பிள்ளைகளுக்கு அவற்றை ஒப்படைத்து விட்டு ஓய்வும் சமூகப் பணிகளுமென தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

சமூகத்தின் உயர் கல்வி நிலைகள் தொடர்பான பல்வேறு ஆதங்கங்களைச் சுமந்துகொண்டு அவற்றை சமூகத்துக்கு எத்திவைக்க வேண்டுமென்றிருந்த அவரிடம், பேட்டியின் நோக்கங்களைக் கூறியதும் தெளிவான பதில்களை நம் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் வழங்கினார்.

 

உங்கள் சிந்தனைப் பின்புலம் பற்றிய சிறு அறிமுகத்தை எங்களது வாசகர்களுக்கு வழங்குங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் சொந்த ஊரிலேயே கல்வி கற்றாலும் தர்கா நகர் அல்ஹம்ரா பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சை வரை கல்வியைத் தொடர்ந்தேன். அக்காலப் பகுதியில் இப்போதைய ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி போன்றோருடன் அறிமுகம் கிடைத்தது. அது பின் நாளில் ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வி வளர்ச்சியை திட்டமிட்டு உருவாக்குவதிலும் பாரிய பங்கு வகித்தது. எமது சீனியரான கலாநிதி சுக்ரி போன்றவர்கள் அன்று ஏற்பாடு செய்து வழங்கும் இஸ்லாமிய மஜ்லிஸ்கள் பெரும் பயனுடையனவாக இருந்தன.

கல்வி பெறுவதைப் பொறுத்த வரையில் வாழ்வில் கற்றுக் கொள்ள முடிந்த சகல கலைகளையும் கற்றேன். துறைகள் வாரியாக பலவற்றைக் கற்றுக் கொண்டேன். எனது அடிப்படைத் துறையான புவியியல் துறையை விடுத்து கவிதை, இலக்கியப் பகுதிகள், இஸ்லாமிய பகுதிகள், விஞ்ஞானம், வானியல், வரலாறு… எனப் பல பகுதிகளில் பரிச்சயம் உண்டு. ஒவ்வொரு துறையிலும் முடிந்தளவு ஆழமாகக் கற்றிருக்கிறேன். அதனால் எதனையும் புறக்கணிக்காது ரசித்துப் போகும் தன்மையும் ஆர்வமும் என்னிடம் இருக்கிறது. என்னால் கவிதைகளையும் ரசிக்க முடியும்; வீட்டுத் தோட்டம் கூட செய்து வருகிறேன்.

1976இல் திருமணம் செய்தேன். அதன் பின்பும் கூட கற்றலுக்கும் தேடலுக்குமான வாய்ப்புக்களைத் தொடர்ந்தும் ஏற்படுத்தி வந்தேன். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா செய்த போது எனது மனைவியையும் மொண்டிசூரி சிறுவர் கல்வி சம்பந்தமான கற்கைகளில் ஈடுபடுத்தினேன். பின்னர் அவராகவே ஒரு சிறுவர் பள்ளியை ஆரம்பித்து இன்று இருபத்தைந்து வருடங்கள் கடந்தும் அதனை நடத்தி வருகின்றார். நான் முடிந்த அளவு அவருக்கு உதவியாக இருந்து வருகின்றேன்.

 

உங்களது மாணவர்களை நீங்கள் உருவாக்கிய அனுபவங்கள் எப்படி? அவர்களை இன்று காணும் போது உங்களது உணர்வுகள் எவ்வாறு அமைகின்றன?

உண்மையில் அது மிக சந்தோசம் தரும்  அனுபவம். பாடசாலைக் காலங்களில் நான் இளவட்டங்களோடே இருந்தேன். பல்கலைக்கழகத்திலும் இளைஞர்களோடே பல பயனுள்ள வேலைகளில் ஈடுபட்டேன். பின் பல்கலைக்கழக விரிவுரையாளரான போதும் இளைஞர்களோடேயே இருந்து அவர்களை நெறிப்படுத்தக் கிடைத்தது.

பின்னர் அந்த அனுபவங்கள் அனைத்தையும் நளீமிய்யாவை அதன் ஆரம்ப காலத்தில் உருவாக்கும் பணியில் பயனைத் தந்தன. நளீமிய்யாவுக்கான கலாசாரம் ஒன்றை வடித்தெடுப்பதில் அவை உறுதுணையாக இருந்தது. அன்று மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக நாம் சிறு சிறு விடயங்களில் கூட கரிசனையோடு இருந்தோம். உதாரணத்திற்கு அவர்களது சட்டைப் பொத்தான்களைக் கூட எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தோடும் இருந்தோம். சிலர் எதிர்த்தார்கள், எனினும் இன்று அவர்கள் கோட் சூட் என்று நாம் சொன்ன பொத்தானுக்கும் மேலால் கழுத்துப் பட்டியும் அணிந்து (நகைச்சுவையோடு கூறுகிறார்) உயர் தொழில்களிலும் முக்கிய சமூகப் பொறுப்புக்களிலும் ஈடுபட்டு வருவதைக் காணும் பொழுது மகிழ்ச்சி மேலிடுகிறது.

உண்மையில் கற்பித்தல் என்பது ஒரு ஸதகா அதனை நாம் உளப்பூர்வமாகச் செய்யவேண்டும். வாழ்க்கைத் தேவைகள் அதிகரிக்கும் போது அதற்கேற்ப பேரம் பேசி கல்வியை வியாபாரமாக்கும் நிலைக்குப் போகக் கூடாது. அவ்வாறான மனநிலையுடன் நான் இருந்தேன். அதனாலேயே வாழ்க்கைத் தேவைகள் அதிகரித்த போது கற்பித்தலைக் கைவிட்டு வியாபாரத் துறைக்குள் நுழைய வேண்டியதாயிற்று.

எனினும் நளீமிய்யாவிலிருந்து வெளிவாரியாக உதவுவதற்கு அன்று நளீம் ஹாஜியாரிடம் உறுதிபூண்டிருந்தேன். அத்தோடு கற்பித்தலிலிருந்து நின்றுவிட்ட போதிலும் அறிவுச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

 

அவ்வாறான அறிவு, தஃவா செயற்பாடுகள் பற்றி

ஆம். குறிப்பாக வானியல் தொடர்பான ஆய்வுகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன். வானியல் தொடர்பான குறிப்புக்களையும் அனுபவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவிலும் அங்கம் வகிக்கிறேன். மேலும் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடனும் நீண்ட காலத் தொடர்பு இருக்கின்றது. சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களும் பிறை விவகாரம் தொடர்பான வழிகாட்டல்களை நாடி வந்திருக்கின்றனர்.

முன்பொரு காலம் இருந்தது; அ.இ.ஜ.உ. மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை விவகாரங்களில் முற்று முழுதாக வளிமண்டலவியல் திணைக்களத்திலேயே தங்கியிருந்தது. பிறையின் இஸ்லாமிய, விஞ்ஞான பரிமாணங்களை அறிந்திருந்தோம் என்ற வகையில் நாம் அவ்விவகாரத்தில் ஈடுபட்டோம்.

பிறையின் திசை, இடம், கோணம்,கால அளவு போன்ற அறிவியல் பகுதிகள் அன்றைய மௌலவிமார்களை அடைந்திருக்கவில்லை. பூமி உருண்டை வடிவுடையது; அவ்வகையில் கோணத் தொடர்புகள் முக்கியமானவை. இத்தகைய அறிவுகளோடு அணுகும் போதுதான் மிகச் சரியாகப் பிறையைக் கண்டடைய முடியும்.

நாம் இதுதொடர்பான அறிவுகளைப் பெற்றிருந்த போதும், அக்கால உலமாக்களை விட வேறுபட்ட சிந்தனைப் போக்கில் நாம் இருந்தோம். எனினும் எம் கருத்தை ஏற்று எம்மை அங்கீகரிக்கும் நிலையில் அவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்பாடுகள் மிக்க அன்றைய சூழலில் இதுவொரு அரிதான நிகழ்வாகும்.

வானியல் தொடர்பான ஆய்வுகள் காரணமாக சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டிக்கான அமைப்பு (International Islamic Calendar Society) நடாத்திய மலேசிய சர்வதேச மாநாட்டிலும் பங்குகொண்டிருக்கிறேன்.

இவ்வகையில் அறிவைப் பரவலாக எடுத்துக் கொள்வது பல வகைகளில் சமூகத்துக்குப் பங்களிக்க உதவும். வாழ்க்கை அநியாயமாகப் போகாது. அறிவோடு தொடர்பாக இருக்கும் போது தான் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. வயது செல்லச் செல்ல எம்மை சமநிலைப்படுத்தி நிதானத்தோடு இருக்க முடிவது அப்போதுதான். நான் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற போதும் என் தொடர்ந்தேர்ச்சியான அறிவுத் தேடல்கள் என்னை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க உதவுகின்றது.

 

உங்களில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள்சம்பவங்கள்நிகழ்வுகளை எங்கள் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளலாமே

அறிஞர்கள், தாக்கம் செலுத்திய ஆளுமைகளுள் அறிஞர் தாஸிம் நத்வி அவர்கள் மிக முக்கியமானவர். நளீமிய்யாவின் முதல் அதிபராக இருந்த அன்னவர்களது ஒவ்வொரு அசைவும் என்னில் தாக்கம் செலுத்தியது எனலாம். நளீமிய்யாவுக்காக ஏராளம் தியாகம் செய்தவர் தாஸிம் நத்வி; நம்மால் நினைக்க முடியாத தியாகங்களையும் செய்தவர்.

தாஸிம் நத்வி தனிப்பட்ட வாழ்விலும், அறிவு வாழ்விலும் நீதம் நிரம்பியவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த அன்றாட உதாரணங்கள் சிலதைக் கூறுகிறேன். நாம் நளீமிய்யாவில் இருக்கும் போது ஒவ்வொரு நாள் மாலையிலும் எமக்காக டீ ஊற்றிக் கொண்டு வருவார். அப்போது நாம் ஆசிரியர்கள் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றாகக் கதைத்துக் கொண்டிருப்போம். அப்போது ஊற்றிய டீயை கோப்பைகளில் ஊற்றுவார். அதன் போது நீண்ட நேரமும் கவனமும் அதற்கென எடுத்துக் கொள்வார். மிகச் சமமான அளவில் டீ எல்லொருக்கும் ஊற்றப்பட்டிருக்கிறதா எனக் கவனத்துடன் அவதானித்து விட்டுத்தான் பரிமாறுவார்.

நளீமிய்யாவிலிருக்கும் சாதாரண கல்விசாரா தொழிலாளிகளோடும் அன்போடு பேசிப் பழகுவார். ஏதும் தவறுகள் தொடர்பாக யாரும், ஏனையோர் பற்றி முறைப்பட்டால் முதலில் அது ஞாபக மறதியாகவோ அல்லது வேறு ஒரு நோக்கத்திலோ தான் அவ்வாரு இடம்பெற்றிருக்கும் என்ற கோணத்திலேயே அதனை அணுகுவார். இவ்வாறு அவரிடம் பல அற்புத குணாதிசயங்களை அவரிடம் கற்றிருக்கிறேன்.

இவ்வாறுதான் மஸ்ஊத் ஆலிம் அவர்களும் என்னில் தாக்கம் செலுத்திய முக்கிய ஆளுமை. என்னைப் பொறுத்தமட்டில் நான் ஒவ்வொரு விடயத்திலும் எனக்கான பாடம் என்ன என்பது குறித்து யோசிப்பேன். ஒரு நபரோ அல்லது நிகழ்வோ நடந்தால் அது எனக்கு தரும் பாடத்தை நிச்சயம் பெற்றுக்கொள்வேன்.

 

அக்கால மாணவர்கள் மற்றும் இன்றைய மாணவர்களின் கல்வி தேடலில் எத்தகைய மாற்றங்களை உணர்கிறீர்கள்.

இன்று விரிவான தேடல் மானவர்களுக்கு அவசியம் தேவை. அதர்கான வாய்ப்புக்களும் நிறைந்திருக்கின்றன. அறிவு பெறுவதற்கான வாய்ப்புக்கள் நவீனமடைந்திருப்பது போலவே பன்முகப்பட்டும் இருக்கின்றது.

முன்னர் சிங்களப் பெற்றோர் இருந்தது போன்றே இன்று முஸ்லிம் பெற்றோரும் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் ஆசிரியருடன் பிள்ளைகளின் கல்வியில் பற்றி விசாரிக்கின்றனர். கல்வியிலும் கல்விச் சூழலிலும் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அறிவு நிறைந்த அளவிற்கு அறிவின் பயன் நிறைந்து விடவில்லை. அதனால் பல பாதகமான விளைவுகளை நாம் காண்கிறோம். அவற்றை நாம் மாற்ற வேண்டும்.

 

உங்களது நாளாந்த செயற்பாடுகள் பற்றி

ஓவ்வொரு நாளும் ஏன் கைத் தொலைபேசியில் 3.45 அலாரம் வைத்து எழும்பி விடுகிறேன். காலையிலேயே ஒரு ஸதகாவோடு வேலைகளை ஆரம்பிக்க விரும்பி… வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸதகாவாக ஒரு கோப்பியை ஊற்றிக் கொடுத்து விடுகிறேன்… அதுவொரு பத்து நிமிட வேலை. இலகுவாக நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது. ஸுபஹ்க்கு பின் ஸலவாத், அவ்ராத்களொடு தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கத்தை வாசித்துவிட்டு மனைவியுடனும் அது பற்றிக் கருத்துப் பரிமாரிக் கொள்வேன்.

6.30 க்கு எல்லாம் பத்திரிகை செய்திகள் வாசிப்பேன். பின்னர் நடைப்பயிற்சி… தோட்டம் சுத்தப்படுத்தல், தோட்ட வேலைகள்… நூல்கள் வாசித்தல்.. பிற்பகலானதும் பேரப்பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்…. பிற்பகலில் கொஞ்சம் தூக்கம்… இரவில் மீண்டும் குர்ஆன் ஓதல்… என ஒவ்வொரு நாளும் செல்கிறது.

இடைக்கிடை வியாபார விடயங்களைக் கவனித்தல், முஸ்லிம் உயர்கல்வி விவகாரங்களிலும் ஈடுபாடு காட்டுகிறேன். கட்டாயம் இரவு 9.30 செய்திகள் பார்த்துவிட்டுத்தான் உடன் படுக்கைக்கு செல்வேன். நான் நாளாந்தம் உலக நிகழ்வுகளை அவதானித்து உலகத்தோடு ஒன்றியிருக்க விரும்புகிறேன்.

 

இறுதியாக கூறிவைக்க விரும்பும் விடயம்...

நான் அடிக்கடி கூறும் விடயம் இதுதான். அறிவுப் பகுதியில் முன்னோக்கிச் செல்வோர் மார்க்கப் பணியில் பின்தங்கி விடுகின்றனர்… இங்கு நாம் எம் அடிப்படைப் பணியை மறந்துவிட்டிருக்கின்றோம். இதற்கு தீர்வு எம்மிடம்தான் இருக்கின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுமளவு செல்வம் எம்மிடம் இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பது போதுமானது. அவ்வாறிருப்பின் தான் தஃவா வெற்றிகரமாகும்.

அன்றாடம் பிழைக்கும் அளவு வருமானம் இருப்போரால் வெற்றிகரமான தஃவாவை மேற்கொள்ள முடியாது. வாழ்வில் அதற்கான திட்டமிடல் இருக்கவேண்டும். தஃவா என்பது பிறருக்கு அறிவூட்டல் மட்டும் அல்ல. பல்வேறு வழிகாட்டல்களை உள்ளடக்கியது அது.

மத்ரஸாக்களை இலக்கு வைத்து எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. சிந்தனை மாற்றத்துக்காக பல்வேறு முயற்சிகள் வேண்டும். சமூகத்தின் பல்வேறு முகாம்களுக்கும் இடையில் நெருக்கம் வேண்டியிருக்கிறது. பல்வேறு மட்டங்களுக்கும் கீழிறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.

ஒன்றிணைவு என்பது எல்லாத் தரப்பிலும் அவசியத் தேவை… அது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… வீட்டுச் சூழலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற சூழல் வருமாயின் அது நிச்சயம் சமூகத்திலும் தாக்கம் செலுத்தும்.

மார்க்கத்தைப் படித்தவர்கள் குர்ஆனின் அறிவை எங்கும் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் இது கொழும்போடு மாத்திரம் சுருங்கி விடுகிறது. தலைநகரில் ஆங்காங்கே சில வகுப்புக்கள் நடக்கின்றன. எம் நாட்டின்  குக்கிராமங்களுக்கு இது எப்போது செல்லப் போகிறது?

எம் வீட்டில் வேலை செய்த இஸ்லாமைத் தழுவிய பெண்ணுக்கு அவள் விலகிச் செல்லும் போது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை அன்பளிப்பாக கொடுத்தேன். சிறிது காலத்தில் அவள் ஒரு முறை எம்வீடு வந்த போது அதனைத் திருப்பி தந்துவிட்டு போய்விட்டாள். ஏன்? குறைந்தபட்ச அல்குர்ஆனிய அறிவு கூட இல்லாது போய்விட்டது. அதற்கான தேவை நாட்டின் மூலைமுடுக்க்கெங்கும் பரவிவிட்டிருக்கின்றது. நாம் உணராததாலேயே இப்பணியை மறந்துவிட்டிருக்கின்றோம்.

நன்றி: பயணம் ஸுஹ்பா ஸாலிஹா