சவூதி அரேபிய மகளிரின் ஜனநாயகப் பங்கேற்பு

 

gettyimages-485949932-21

ரஷ்ய-துருக்கி, சிரியா-ஐ.எஸ். போன்று சமகாலத்தில் சர்வதேச அரசியலில் முக்கியதுவப்படுத்தப்படும் பல விவகாரங்கள் காரணமாக உலகின் முக்கிய நிகழ்வுகள் பல எம் கவனத்தை விட்டும் தூரப்பட்டு விடுகின்றன. கடந்த மாதங்களில் அரபு நாடுகள் கூட கள்ள மௌனம் காத்தவேளை பலஸ்தீனுக்காகக் குரல்கொடுத்த இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளான ஆர்ஜெண்டினாவிலும் அதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவிலும் தேர்தல்களில் இடதுசாரிகள் தோல்வியுற்று அங்கு அமெரிக்க மற்றும் மேற்கு சார்பு அரசுகளுக்கான அத்திவாரங்கள் இடப்ப்பட்டமை எம் கவனங்களை ஈர்த்திருக்க மாட்டாது. இதேபோன்றுதான் கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி இடம்பெற்ற சவூதி அரேபியாவின் உள்ளூராட்சித் தேர்தல்களும் நம் கவனத்துக்கு பெரியளவில் வந்துவிடவில்லை.

பழைமைவாதப் போக்கின் உச்சகட்டமாக இன்னும் மன்னராட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் சவூதியில் இருக்கும் ஒரே குறைந்தபட்ச ஜனநாயகப் பொறிமுறை அங்குள்ள மிகக் குறைந்த அதிகார வலுவுள்ள உள்ளூராட்சி சபைகளே. 1965 முதல் 2005 வரையான 40 வருட காலப்பகுதிக்குள்ளால் எந்தத் தேர்தல்களையும் சந்தித்திராத சவூதி மக்கள் முதன் முறையாக 2005 இல் உள்ளுராட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலோன்றை எதிர்கொண்டனர். இதற்கு முன்பு 2005 மற்றும் 2011 ஆண்டுகளை விட இம்முறை நடந்து முடிந்த தேர்தல் சர்வதேச அளவில் கவன ஈர்ப்புக்களைப் பெற விசேட காரணமொன்றிருக்கிறது. சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதன் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வேட்பாளராகத் தேர்தலில் நிற்கும் உரிமையும் கிடைத்திருக்கிறது. கனியவள எண்ணெய் வயல்கள் கொடுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களால் அதி நவீனரக பாதைகளை அமைத்திருக்கும் சவூதியில் பெண்களுக்கு வாகனம் செலுத்தும் அனுமதி கூட இல்லை என்பது காலாகாலமாக சர்வதேச ஊடகங்களும் சர்வதேச சமூகமும் எழுப்பி வந்த கேள்வியாகும்.

இந்நிலையில் பெண்களின் பங்கேற்புடன் நிகழ்ந்த கடந்த டிசம்பர் 12 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தேர்தல்களில் முக்கிய மாற்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மொத்தப் பிரதிநிதிகளில் அரைவாசியிலிருந்து (1580 ஆசனங்கள்) மூன்றில் இரண்டு பங்காக (2016 ஆசனங்கள்) உயர்த்தப்பட்டிருந்தது. ஏனைய பிரதிநிதிகள் மன்னரால் நியமிக்கப்படுவர்.

நடைபெற்ற தேர்தலின் பின் முழு சவூதியினதும் முதலாவது பெண் ஜனநாயகப் பிரதிநிதியாக; தேர்தலுக்கு மறுநாள் மாலையிலே இறுதித் தூது துவங்கிய இடமான ‘மக்கா’ மாநகர சபைக்கான உறுப்பினராக ஸல்மா பின்த் ஹுஸாம் அல்உத்தைபி அறிவிக்கப்பட்டு வரலாற்றில் இடம்பிடிக்கிறார். அவர் தனது மத்ரபா தொகுதியில் தன்னோடு போட்டியிட்ட ஏழு ஆண் வேட்பாளர்கள் மற்றும் இரு பெண் வேட்பாளர்களைத் தோற்கடித்துத் தான் இந்த வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் மொத்தமாகப் போட்டியிட்ட 5,938 வேட்பாளர்களில் 978 பெண்கள் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தகுந்ததாகும். அவர்களில் சுமார் 20 பெண்கள் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளாக முதல்தடவையிலேயே தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தகுந்த சாதனையாகும். எனினும் முதல் தடவையாக பெண்களுக்கான பங்கேற்பு உரிமை வழங்கப்பட்டிருந்த இத்தேர்தலில் ஆண்களில் பத்தில் ஒரு பங்கினரான பெண்களே தம்மை வாக்காளராகப் பதிவு செய்து தேர்தல்களில் பங்கேற்றனர். அதாவது 1.35 மில்லியன் ஆண் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வெறுமனே சுமார் 130,000 பெண்களே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தமை இன்னும் எவ்வளவோ அடையவேண்டியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. (சவூதி மக்கள் தொகை 21 மில்லியனில் 18 வயது தாண்டிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க.) இத்தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு எவ்விதத்திலும் ஆண்கள் மத்தியில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சுவரொட்டிகளில் புகைப்படங்களைப் பிரசுரிப்பதும் வேட்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. பெண் வேட்பாளர்களில் பெருமளவானோர் தம் தேர்தல் பிரசாரங்களுக்காக சமூக ஊடகங்களையே பயன்படுத்தினர்.

2015ம் ஆண்டு மன்னர் அப்துல்லாஹ் மரணிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் அடுத்த தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அவர் காலத்திலேயே பெண்களை மன்னருக்கு ஷூரா-ஆலோசனை வழங்கும் சபைக்குள் உள்வாங்கியமை, பெண்களுக்கு வாகனம் செலுத்தும் அனுமதி உட்பட சவூதியைப் பொறுத்தவரைக்குமான பல புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் மகளிரின் தேர்தல் பங்கேற்புரிமை குறித்த அறிவிப்பு வந்து நான்கு வருடங்கள் கடந்தும் பெண்களின் செயற்பாடுகள் மிக மந்தமாகவே இருந்தமை கவனத்துக்குரியது. மொத்தமாகப் பதிவு செய்யப்பட்ட பெண் வாக்காளர்களில் 80% வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பஹா பிராந்த்தியத்தில் மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட 1,146 பெண் வாக்குகளில் 946 (82.5%) அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுவாக ஒரு சாரார் மத்தியில் மட்டுமே தேர்தல் தொடர்பான பிரக்ஞை இருப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது.

சவூதி போன்ற பழங்குடித் தன்மை நிறைந்த நாடொன்றில் தேர்தல் வாய்ப்பு அளிக்கப்பட்டதே பெரும் சாதனையாக அறியப்படும் நிலையில்; அங்கு தேர்தலில் 20 பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை மிகப் பெரும் மாற்றமொன்றுக்கான அறிகுறியாகும். இதனால்தான் த கார்டியன் செய்திப் பத்திரிகை தேர்தல் தினத்தன்றைய செய்தித் தலைப்பாக ‘It will be enough even if one woman wins’ என இட்டிருந்தது. ஆம்… ஒரு பெண்மணி வெற்றிபெற்றிருந்தால் கூட சவூதி சூழலில் அது பெரும் சாதனைதான். அதையும் தாண்டி அங்கு சுமார் 20 மகளிர் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டமை மிகப் பெரும் பாய்ச்சலாகும்.

அடுத்து தேர்தல் குறித்துக் கருத்துக்களைக் கூறிய வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களிலும் பெரும் முதிர்ச்சி காணப்பட்டமை குறிப்பிட்டுக் கூறத்தக்கது. கிழக்குப் பிராந்திய செயற்பாட்டாளரும் கதிஃபா நகராட்சிப் பிரிவை சேர்ந்தவருமான நஸிமா அல்ஸதா “பெண்கள் பெண்களுக்கேதான் வாக்களிக்க வேண்டும் என்பது கவனிக்க வேண்டியதொன்றல்ல. ஆனால் நாம் நல்ல நபரொருவரை ஆதரித்துத் தெரிவு செய்கிறோமா என்பதே மிக முக்கியமானதாகும்” என்கிறார்.

மக்கள் பிரதிநிதிகளுள் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட கலாநிதி லிமா ஸுலைமான் அல்ஜஸீராவுக்குக் கருத்துத் தெரிவித்த போது “தற்போது மக்களின் பொதுக் கருத்தும் மக்களின் தேவைகளும் பெண்ணின் ஜனநாயகப் பங்கேற்பை கட்டாயப்படுத்துகின்றது. எனினும் தற்போதைய பங்களிப்பு மிகக் குறைவானது. இந்நிலையை இல்லாது செய்ய உள்ளூராட்சி அமைச்சு முன்வரவேண்டும்” என்றார்.

தேர்தல் முடிவுகள் பற்றி சமூகவியல் துறைப் பேராசிரியர் கலாநிதி ஃகாலித் ரதீஆன் சாதகமான கருத்துக்களைக் கூறினார். “மொத்தத்தில் 20 பிரதிநிதிகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருப்பது சிறிய அடைவு தான் எனக் கருதினாலும், ரியாத் போன்ற 6 மில்லியன் பேர் வாழும் முன்னேற்றமுற்ற பெரு நகரொன்றில் 3 பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அடைவுக்கான அடையாளமாகும்” என்றார்.

எது எவ்வாறிருந்த போதிலும் இனிவரும் படிகளையும் சவூதி மகளிர் கடக்கவேண்டுமென்றால்; அவர்கள் மிக்க் கடினமான பாதையொன்றைக் கட்டாயம் கடந்துதன் ஆகவேண்டும். உண்மையில்  இஸ்லாத்தின் இறுதித் தூது துவங்கிய மக்கா அமைந்துள்ள சவூதி பூமியில் இத்தகைய பெண் குறித்த பிற்போக்கான சிந்தனைகள் இன்னமும் கோலோச்சிக் கொண்டிருப்பது ஆச்சரியமும் ஆத்திரமும் ஒருங்கே தரக் கூடியது. இஸ்லாமின் பூரணத்துவமிக்க தூது பெண்ணை ஒரு மகத்தான இடத்தில் வைத்திருக்க, இக்கால முஸ்லிமின் சிந்தனைகள் இன்னும் நிலத்துக்குக் கீழ்மட்டத்திலேயே இருப்பது அபத்தம் நிரம்பியது. இந்நிலையில் சவூதி எடுத்திருக்கும் இந்த புரட்சிகரமான மாற்றங்கள் எப்பின்னணியைக் கொண்டவை என்பது நோக்கத்தக்கதாகும். அது பாரம்பரிய பழங்குடிச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு இஸ்லாம் பெண்ணுக்கு அளிக்கும் விழுமியமிகு அந்தஸ்தை உணர்ந்த அறிவுப் பின்னணியினாலானதா? அல்லது மேற்குலகு கூறிவரும் போலிப் பெண்ணியத்தினதும் சுதந்திரத்தினதும் முகவர்களின் வற்புறுத்தல்களின் காரணமாகவா? அல்லது தம் மன்னராட்சியைத் தக்க வைப்பதற்கும் ஒருசில கவனச் சிதறல்களுக்குமான பூச்சாண்டியா…? என்பதைப் பொறுத்தே அதன் எதிர்கால விளைவுகளைக் கணக்கிட முடியும். ஆரோக்கியமான மாற்றங்களுக்கும் இஸ்லாம் உயர்வு பெறவுமான சிந்தனை கொண்ட சமூகமொன்று இன்னும் உருவாகவில்லை. அந்நிலை வரும்போதுதான் இஸ்லாம் அவாவும் உயர்ந்தபட்ச சுபீட்சமும் சமத்துவமும் கொண்ட உமரிய யுகத்தை அரேபிய தீபகற்பம் மீளவும் அடையமுடியும்.