ஆன்மீகச் செயற்பாடுகள் மாணவர்களில் மாற்றத்தை விதைக்கும் என்றியங்கும் ஆசான்

இம்முறை பயணம் சஞ்சிகையின் சான்றோரை சந்திக்கும் ஸுஹ்பா ஸாலிஹா பக்கங்களை ஏறாவூரைச் சேர்ந்த ஸத்தார் ஆசிரியர் தனது ஆசிரிய உணர்வுகளால் நிரப்புகிறார்.

நாம் சந்திப்பவர்கள் அநேகர் பேட்டியளிப்பதற்குப் புதியவர்கள். சற்றுத் தயங்குவர். ஸத்தார் ஆசிரியர் அவர்களும் நமது பேட்டியின் நோக்கத்தை தெளிவாக முன்வைத்ததும் தயக்கம் கலைந்து நம்முடன் பேசிக்கொண்டே இருந்தார்.

பயணத்துக்காக ஸத்தார் ஆசிரியரை அறிமுகம் செய்து சந்திப்பிலும் கலந்துகொண்ட ஏறாவூர் ஷெய்க் ரமீஸ் (நளீமி) மற்றும் சந்திப்பில் நம்மோடு இருந்த ஆசிரியர்களான ஷாஹுல் ஹமீத், ஸுப்ஹான், நூகுலெவ்வை, ஸஈத் அஹ்மத் ஆகியோர் மற்றும் ஷெய்க் பைரூஸ் (நளீமி) அவர்களையும் நன்றியோடு நினைவுபடுத்துகிறோம்.

இனி பேட்டிக்குள் நுழைவோம். தாவூத் பவுண்டேஷன் நிலையத்தில் ஒரு முற்பகல் பொழுதில் பேட்டி தொடர்கிறது.

பயணம்:
உங்களை அறிமுகம் செய்வோமே!

ஸத்தார் ஆசிரியர்:
நான் மகுமூது லெவ்வை, ஆசியா உம்மா ஆகியோரின் ஐந்தாவது பிள்ளையாக 1964-01-12ம் திகதி பிறந்தேன். இப்போது 55 வயதாகின்றது.

என் தந்தை வண்டிமாடு வைத்து மண்வெட்டி ஏற்றி கூலித்தொழில், காட்டுத் தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டியவர்.

எனது சிறுபராயம் முதலே எனது உம்மாவின் உம்மாவிடம் என்னைக் கவனிக்கும் பொறுப்பை அளித்துவிட்டனர்.

எல்லாவற்றிலும் கண்காணிப்பு.
எங்குசென்றாலும் உம்மம்மா பின்னாலேயே வருவார். ஆத்தங்கரை ஓரங்களுக்கெல்லாம் செல்லவிடமாட்டார்.

சிறு வயதிலேயே நல்ல நண்பர்கள் அமைந்திருந்தனர். அவர்கள் என்னை நேசிப்போராகவும் நல்ல பழக்கங்களைக் காட்டித் தருவோராகவும் இருந்தனர்.
தீய பழக்கம் உள்ளோரை நான் நண்பராக்கிக்கொள்ளவில்லை.

நாங்கள் பிள்ளைகள் எட்டுப் பேர். ஐந்தாவது ஆளாக நான் இருந்தேன். என்றாலும் எந்த நல்ல நிகழ்வு, திருமணப் பேச்சுவார்த்தை, சாப்பாடு ஒன்றாக இருந்தாலும் எதிலும் ஆலோசனைக்கு என்னை முற்படுத்துவார்கள். எந்த நல்ல காரியத்திலும் என்னை முற்படுத்துவார்கள். சகோதரர்கள் எல்லோரும் என்னை நேசிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அவ்வாறொரு நல்ல நிலையை எனக்கு வைத்திருக்கிறான்.

பயணம்:
உங்களது சிறுவயது வாழ்க்கை நினைவுகள், படிப்பு போன்றவற்றைக் கதைப்போமே!

ஸத்தார் ஆசிரியர்:
படிக்கும் காலத்திலேயே வறுமைக்கோட்டுக்குக் கீழான சூழல்தான். காலையில் சாப்பிட்டால் பகலுணவு இருக்காது. இரவில் மயிர்க்கிழங்கோ பாணோ கிடைக்கும். ஏ/லெவல் படித்து முடிக்கும் மட்டும் இவ்வாறான நிலைதான் தொடர்ந்தது.

அப்போது வீட்டுச் சூழலைக் கருத்தில்கொண்டு நான் மயிர்க் கிழங்கை அவித்தும் பொறித்தும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் மக்கள் ஒன்றுசேரும் ஒரு மரத்தடியில் வைத்து விற்பேன். கச்சான்கொட்டை, கொய்யா போன்றதையும் விற்றுள்ளேன். இதனால் ஏறாவூரில் அநேகருக்கு என்னைத் தெரிந்திருந்தது. என்னை நம்பி எந்தப் பொறுப்பையும் மக்கள் தருவார்கள்.

இந்த சிறு வியாபாரத்தினால் குடும்பத்தின் சின்ன சின்னத் தேவைகளை நிறைவேற்ற முடிந்தது.

எனது ராத்தாவின் திருமணத்தின் போது தாலி ஆபரணம் செய்து அணிவிக்கவேண்டிருந்தது. அதற்கு இந்த வியாபாரம் மூலம் நான் அப்போது சின்னச் சின்னதாக சேமித்து வந்த காசுகளே பயன்பட்டன. இன்றுவரைக்கும் அந்த சேமிப்புப் பழக்கத்தைத் தொடர்கிறேன்.

நான் 5ம் ஆண்டுவரை ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபாவில் பெற்றேன். 6ம் ஆண்டிலிருந்து ஓ/லெவல் வரைக்கும் அலிகாரில் படித்தேன்.

அங்குபடிக்கும் போது முன்பு செய்துவந்த சின்னச்சின்ன வியாபாரங்களை செய்து உழைக்க முடியாமல் போனது. அப்போது சைக்கிள் திருத்தும் வேலை செய்துவந்த எனது மச்சானிடம் சேர்ந்து பாடசாலை விட்டுவந்து சைக்கிள் திருத்தம் செய்து சம்பாதித்தேன். அதன்மூலம் எமது குடும்பத்தின் இரவுச் சாப்பாட்டைத் தயார்செய்வோம். இப்போதுகூட சைக்கிளை முழுமையாகக் கழற்றப்பூட்டவும் திருத்தம் செய்யவும் முடியுமான பயிற்சி இருக்கிறது.

என் ஓ/லெவல் ரிசல்ட் டி-1, சீ-6, எஸ்-1. ஓ/எல் பெறுபேறு கிடைத்த அன்று நான் சைக்கிள் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒருவர் எனது பெறுபேற்றைக் கேட்டு விட்டு “ஒனக்கா?” எனத் திருப்பிக் கேட்டார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. சைக்கிள் கடையிலேயே எப்போதும் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பெறுபேறு எடுத்துள்ளாரே என்றுதான் அவர் உண்மையில் கேட்டிருக்கிறார். அது அல்லாஹ் தந்த பரிசென்றுதான் கூறுவேன்.

ஏ/லெவல் ஆரம்பத்தில் வர்த்தகப் பிரிவில் அலிகாரில் கற்றேன். பிறகு மைக்கல்ஸ் கல்லூரியில் கற்றேன். எனினும் எமது குடும்ப நிலைக்கு அங்கு கற்கும் செலவை சமாளிக்க முடியாது. அப்போது நானா தான் உதவிவந்தார்.

அப்போது அங்கு படித்துவருகையில் ஒரே வகுப்பிலே மிக நெருங்கிய நண்பராக அமைந்தவர்தான் இப்போதைய முகைதீன் சேர். இன்று அவர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபராக இருக்கின்றார். அவர் சாதாரண பயிற்றப்பட்ட ஆசிரியர். பல்கலைக்கழகப் பட்டத்தையும் வெளிவாரியாகவே முடித்தவர். அதிபர் சேவைத் தரத்தைக் கொண்டிருக்காத போதிலும் இன்று அப்பாடசாலையின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறார். அத்தகையவர் தான் நான் ஏலெவல் படிக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார். அவரும் என்னையொத்த பொருளாதாரக் கஷ்டங்களை அப்போது எதிர்கொண்டுவந்தார்.

நாமிருவரும் ஒன்றாகவே படிப்போம். சுற்றுவோம். ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். நாம் இருவரும் வழமையாக ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிடப் போகும் போது என்ன காரணமோ தெரியாது அக்கடையிலிருக்கும் பையன் நாம் கேட்பதை விடவும் அதிகமான உணவு தருவதுடன் மிகவும் குறைவாகவே எம்மிடம் பணமும் பெறுவார். அது ஏனென்று தெரியாது. இதனை எவ்வாறு இவருக்கு எடுத்துச் சொல்வது அல்லது முதலாளியிடம் சொல்வது என்ன்பது எமக்கு சங்கடமாக இருந்தது. நாம் சொல்வதை அவன் கேட்பதாகவும் இல்லை. அப்போது அதன் பாரதூரத்தை உணராத நாம் இதற்கென்ன பரிகாரம் தேடுவது என்று இன்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

பயணம்:
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர்ந்திருக்கிறீர்கள். உங்களது பக்கபலங்களாக இருந்தோரையும் நினைவுகூர்ந்துகொண்டே செல்வோம்.

ஸத்தர் ஆசிரியர்:
எமது ஊரைச் சேர்ந்த பிரபலமான ஆசிரியர்கள் பலர் அன்று இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கொழும்பில் இருந்ததால் அவர்களிடம் கற்க முடியவில்லை.

எனவே அன்றிருந்த யங் டியூஷன் சென்டர் என்ற கல்வி நிலையத்தில் கல்விபெறச் சென்றேன். அங்கு பொறுப்பாக இருந்த லோகநாதன் சேர் என்பவர் எனது திறமைக்கான அங்கீகாரமாக இலவசமாகக் கற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துதந்தார். அவர் எனக்கு நண்பராகவே பழகி வந்தார்.

பயணம்:
ஆசிரியராக மாறிய கதை…

ஸத்தார் ஆசிரியர்:
ஐந்தாம் ஆண்டு படிக்கும் போதே நான் நன்கு கணிதம் செய்வேன். அன்றிருந்த ஆசிரியர்களிடம் பாடங்களை சரியாக மேற்கொள்ளாதோர் கடுமையாக அடிவாங்குவர்.

பின் தங்கிய மாணவர்கள் அடிவாங்குவதை நான் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பேன். 11ம் வகுப்பு படிக்கும் வரைக்கும் இதனை அவதானித்து வந்தேன். எனக்கு மிக நெருக்கமான நண்பர்களும் அடிவாங்குவர்.

ஒருவருக்கு சுமக்க முடியாத பாரத்தை சுமக்கச் சொல்லி விட்டு அது முடியாத போது ஏன் அடிக்க வேண்டுமென எனக்கு யோசனையாக இருந்தது.

அந்தப் பின்னணியில தான் அப்போதிருந்தே மாணவர்களுக்கு சரியான முறையில் கணிதத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஓ/எல் எழுதி முடிந்த உடனேயே நான் மாணவர்களைச் சேர்த்து கற்பிக்க ஆரம்பித்தேன். முதலில் இரகசியமாகத்தான் கற்பித்தேன். ஹஸன், ஹம்சா ஆகியோர்தான் எனது முதல் மாணவர்கள். இவர்கள் இருவரும் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்.

பயணம்:
மாணவர்களுக்கு உயர்ந்த பிரதிபலனைத் தரும் ஆசானாக எப்படி உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஸத்தார் ஆசிரியர்:
ஓ/லெவல் பரீட்சையில் சித்தியடையத் தவறிய பல மாணவர்கள் என்னிடம் படிக்க வந்தனர். கணக்கில் பின்னடைவான மாணவர்கள் ஓ.எல் பரீட்சைக்கு சில மாதங்கள் இருக்கையில் என்னைத் தேடிவர ஆரம்பித்தனர். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டி இரவுபகல் பாராது வகுப்பெடுப்பேன்.

எவ்வாறு அந்த பின்தங்கிய மாணவர்களை கற்கச் செய்வது என உபாயங்களைத் திட்டமிடுவேன். உண்மையில் அந்த மாணவர்களை பின் தங்கியோர் எனக் குறிப்பிடாமல் மெல்லக் கற்போர் என்பதே பொருத்தமானது.

மெல்லக்கற்பவர்கள் யார், மீத்திறன் உள்ள மாணவர்கள் யாவர் என்பதை அறியவேண்டி அவர்களோடு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவேன்.

மெல்லக் கற்பவர்கள் தான் எனக்கு உற்ற நண்பர்களாக இருப்பர். அவர்களை இனங்கண்டு கொஞ்சங் கொஞ்சமாகப் பயிற்சிகள் வழங்கிவருவேன்.

இன்னும் உன்னிப்பாக அவதானிக்கும் போது அவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களும் அல்ல. ஏதும் சூழ்நிலைக் காரணத்தாலோ அல்லது கற்பிக்க வேண்டிய முறைமை வேறுபட்டதாலோ தான் அவர்கள் கணிதத்தில் பின் தங்கியிருந்தனர். கதைக்கக் கதைக்கத்தான் ஒவ்வொருவரையும் நன்கு கண்டறிந்து கற்பிக்க முடியும்.

பின்னர் அவர்களுக்குரிய அமைப்பில் நடைபழக்கி விட்டதும் அவர்களும் வேகமாகக் கற்கக் கூடியோராக மாறினர் என்பதுவே எனது அனுபவமாகும். அதில் ஓ.லெவலில் ‘ஏ’ தர சித்திபெற்றோரும் உள்ளனர். இவர்களை மெல்லக் கற்போர் என எவ்வாறு அழைப்பது? இவ்வாறு என்னிடம் வந்த அநேக மாணவர்கள் இன்று நல்ல நிலையிலிருப்பது மனதிற்குத் திருப்தியானதாகும்.

பயணம்:
சமூகத்தில் நல்ல மாணவர்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் உங்களது அனுபவம் இன்னும் நமக்குப் பயனளிக்கும். உரையாடுவோம்.

ஸத்தார் ஆசிரியர்:
போதைப் பொருள் போன்ற பாவனைகள் அதிகரித்துவிட்டு ஆண் மாணவர்கள் படிப்பில் ஆர்வமின்றி பெண்கள் மட்டுமே அதிகம் படிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது சமூகத்தில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கும்.

எனவே நான் அதிகம் ஆண்களது கல்வியிலேயே கரிசனை காட்டுகிறேன். எமது பாடசாலை அதிபரிடமும் ஆண் மாணவர்களது வகுப்பைப் பொறுப்பளிக்குமாறு தான் வேண்டுகிறேன். பெண் பிள்ளைகளது வகுப்புகள் குழப்படி இன்றி இருப்பதால் பலரும் அவ்வாறான வகுப்பைக்கோருவர்.

மாணவர் ஒருவர் ஒருமுறை சிகரட் பிடித்துக் கொண்டிருந்து என்னிடம் பிடிபட்டார். அவரது நிலை மாறி இன்று முன்மாதிரியான உத்தியோகம் ஒன்றில் இருக்கிறார். அவரோடும் அதிகம் அளவளாவிக் கதைத்ததன் மூலமே அவருக்குரிய மாற்றத்தைக் காண முடிந்தது. உண்மையில் சில நண்பர்கள் ‘இவர் படிப்பிப்பதை விடவும் கதைத்துக் கொண்டுதான் இருப்பார்’ என்று குறை சொல்லுமளவு நான் அதிகம் கதைப்பேன்.

அண்மைக்காலத்தில் ஓ.லெவல் எடுத்த வகுப்பொன்று என்னிடம் பொறுப்புத் தரப்பட்டது. அந்த வகுப்பு யாருக்கும் கீழ்ப்படியாத வகுப்பு எனப் பெயர் எடுத்திருந்தது. ஆனால் அவர்கள் குறுகிய காலத்துள்ளேயே நல்ல வகுப்பெனப் பெயர் எடுத்தனர். 80% முழுமையாக சித்திபெறும் வண்ணம் சிறந்த பெறுபேற்றையும் எடுத்தனர். அவர்கள் அனைவரும் அன்றாடம் ழுஹா தொழுகையைக் கூட தொழும் அளவு மிக முன்னேற்றமடைந்திருந்தனர்.

அவர்களது மாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. முதலில் வகுப்பு ஆரம்பிக்க முன்பு அல்ஹம்து மற்றும் குல் சூறாக்களை ஓதி ஆரம்பிப்போம். அவர்களுக்காக வேறு சில சூறாக்களும் பிரிண்ட் எடுத்து ஓத வைத்தோம். சில நாட்களில் நாம் எல்லோரும் இணைந்து ஒரேநேரத்தில் ஒரு குர்ஆனை பலரும் பிரித்தெடுத்து ஓதி முடிப்போம்.

அல்லாஹ்வுடன் மாணவர்களைத் தொடர்புபடுத்திவிடுவதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களில் மாற்றத்தை விதைத்துவிட முடியும்.

ஆசிரிய வாழ்வில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக்குக் காதுக்குக் கேட்டவரைக்கும் எந்த மாணவரும் எனக்குப் பட்டப்பெயர் சொன்னதுமில்லை. பெயரிட்டதுமில்லை.

பயணம்:
தொழில், தொழில் நியமனம் பற்றி…

ஸத்தார் ஆசிரியர்:
நான் படிப்பிக்கத் தொடங்கியது 1982 இல். மைக்கல்ஸில் படிக்கும் போது ஏறாவூர் அறபாவில் கற்பித்தேன். பெரிய ஆசிரியர்கள் பற்றிய பயம் இருந்ததால் இரகசியமாகத் தான் கற்பித்தேன்.

எனது வகுப்பு, ஸுபஹுக்குப் பின் சூரிய வெளிச்சம் வரும் நேரம் முதல் தொடங்கும். பாடசாலை நேரம் கிட்டியதும் முடித்துக் கொண்டு பின்பு மாலையில் தொடர்வோம்.

எனது ஏ/லெவல் சறுகியதற்கு அதுவும் காரணமாகியிருக்கலாம். படிப்பிப்பது அல்லாஹ் எனக்குத் தந்த அருள்.

நான் கற்பிக்க காசுவாங்க உடன்பாடில்லாதவன். பெரியளவு வருமானம் இன்றித் தான் கற்பிப்பேன்.

வாப்பா மௌத்தாகும் வரைக்கும் பெரிய வருமான எதிர்பார்ப்பு இன்றித்தான் கற்பித்தேன். வாப்பாவின் மௌத்தின் பின்பு குடும்பச் சுமை என் தலையில் விழுந்தது. அந்நேரம் மாணவர்கள் சேர்த்துத் தரும் தொகைதான் எனக்குதவியாக இருக்கும்.

நான் ஏ/லெவல் பரீட்சை எழுத நெருங்கும் போது பெரும் இனவன்முறைகள் நிகழ்ந்ததால் பரீட்சைக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே படிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

பல பகுதிகளைப் படித்து முடிக்கவுமில்லை. மூன்று முறை எழுதியும் என்னால் அடுத்த கட்டத்தை அடையமுடியவில்லை.

90ம் ஆண்டு தாண்டும் போது எமது தந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையால் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாம் அதிகம் பாதிக்கப்பட்டோம்.

அக்காலத்தில் அறபாவிலும் பின் அலிகாரிலும் தொண்டராகவே ஆசிரியப் பணிபுரிந்தேன். ஓ/லெவல் கணிதத்திலும் ஏ/லெவல் தூய கணிதப் பாடங்களையும் கற்பிப்பேன்.

அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்த அலகாரில் பெரியளவு வருமானங்களின்றி வாரத்திற்கு 42 பாடவேளைகளிலும் கற்பிப்பேன். எனவே 91ம் ஆண்டு என நினைக்கிறேன். அன்றைய பாடசாலை அதிபரும் நிர்வாகமும் பாடசாலையிலிருந்த சிற்றூழியர் நியமனத்தைப் பெற்றுத் தந்தது. அன்று நாள் சம்பளத்துக்குரிய தொழிலாக அது இருந்தது.

ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் பாடசாலை, என்னை சிற்றூழியராகப் பயன்படுத்தியதில்லை. நான் ஆசிரியராகவே அன்றும் இன்றும் இருக்கிறேன்.

பயணம்:
பாடசாலைக்கு வெளியிலான கல்விச் செயற்பாடுகள் மற்றும் தாவூத் பவுண்டேசன் பற்றிப் பேசுவோம்.

ஸத்தார் ஆசிரியர்:
நான் ஆரம்பத்திலே கணிதப் பாடத்தோடு விஞ்ஞானப் பாடத்தையும் கற்பித்து வந்தேன். அப்போது விஞ்ஞான முன்னேற்றக் கழகம் என்ற சங்கத்தை நிறுவி விஞ்ஞானக் கல்வியை ஊரிலே இன்னும் ஊன்றினோம். எமது ஊரிலிருந்து மருத்துவத் துறைகளுக்கு அதிகமதிகம் மாணவர்கள் இன்று தெரிவாவது சாத்தியமாகியிருக்கின்றது.

2001-02ம் ஆண்டாகும் போது ஊரிலே தாவூத் பவுண்டேசன் என்ற அமைப்பை நிறுவினோம். தொடக்கத்தில் நூகுலெப்பை சேர், முகைதீன் சேர் மற்றும் நானும் இணைந்து இத்திட்டம் கருக் கொண்டது.

அலிகாரில் அன்று ரோனியோ அச்சியந்திரம் எனது பொறுப்பில் இருந்தது. ரோனியோ அறையில் ஒரு தரம் பேசிக் கொண்டிருந்த போது கஷ்டப்பட்டு வேலைக்கும் சென்று படிக்கவும் செய்யும் மாணவர்களது நலனுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் நாம் ஓர் அமைப்பாகுவோம் எனத் திட்டமிட்டோம்.

இதனை அதிகமாக வலியுறுத்திப் பேசியதால் மற்ற இருவரும் என்னையே தலைவராக இருக்குமாறு கூறினர். அந்நாளன்றே அலிகாருக்கு மிகப் பெரும் கல்விப் பணிசெய்த கல்விமான், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட யூ.எல். தாவூத் அவர்களது பெயரிலே அமைப்பைத் துவக்கினோம்.

தாவூத் சேர் படுகொலை செய்யப்பட்டதற்கு அடுத்த நாள்தான் எஸ்.எல்.ஈ.எஸ். பெறுபேறுகள் வந்து எமதூரின் முதலாவது ஆளாக சித்திபெற்றிருந்தார். விடிந்தால் ஹஜ்ஜுப் பெருநாள். ஏறாவூரில் பெருந் துயரமும் சோகமும் நிறைந்திருந்த நாள்.

நாம் மூவரும் இன்னும் ரமீஸ், ரியாழ், பைரூஸ் எல்லாரையும் இணைத்து எமது சொந்த உழைப்பை சந்தாவாக செலுத்தி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றை தாவூத் பவுண்டேசன் ஊடாகக் கொடுத்துவந்தோம்.

பின்பு நிறைய வெளிநாட்டில் வசித்த நண்பர்கள் மூலம் கிளைகள் நிறுவி பொருளாதார ரீதியாக பல மாணவர்களுக்கு உதவினோம். மேலும் தவணைப் பரீட்சையொன்றை வலய மட்டத்திலே நடத்தலாம் எனச்செய்துகாட்டினோம்.

மேலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி கல்வியைத் தொடராது விட்டவர்களுக்கு வழிகாட்டிவிட்டோம். அத்தகைய வழிவந்தோரில் இன்று 20 க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகளாக உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஏறாவூரில் ஸகாத் கமிட்டியொன்றையும் அமைத்து அதன் மூலம் வீடமைப்பு போன்ற பெரிய திட்டங்களையும் வெற்றிகரமாக செயற்படுத்தினோம்.

காத்தான்குடியில் இயங்கிய பிஸ்மி குர்ஆன் மத்ரஸாவைப் போல அவர்களது ஆலோசனையையும் பெற்று இங்கு துவங்கினோம். இன்று ஸகாத் நிதியம் குர்ஆன் மத்ரஸா போன்றவை வேறு சகோதரர்கள் மூலம் சிறப்பாக இயங்குகின்றது. ஆங்கில வகுப்பு, நைட் ஸ்டடி செண்டர் என வேறு பல திட்டங்கள் மற்றும் சாதாரண தரம் சித்தியடையாதோருக்கான கல்வி வழிகாட்டல் என பரந்து செயற்படுகிறோம்.

பயணம்:
இறுதியாக…

ஸத்தார் ஆசிரியர்:
நான் எனது குடும்பம் பற்றி கடைசியாகக் கூறுவேன் என்றேன். எனது மனைவியும் பிள்ளைகளும் என நாம் ஆறு பேர். மூத்தவர் பெண் பிள்ளை. அடுத்த மூவரும் ஆண்கள்.

எனது பணிகளுக்கு எப்போதும் வீட்டில் பூரண ஆதரவு கிடைப்பதால்தான் என்னால் தொடர்ந்தும் இயங்கிச் செல்ல முடிகிறது. நான் சிலநாட்களில் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணியை நெருங்கி வீட்டுக்குச் சென்றாலும் மனைவி இன்முகத்தோடு வரவேற்பார். எனது இரண்டாவது மகன் நடக்கவியலாத நிலையில் நோயுற்றிருக்கிறார். அந்தப் பிள்ளையையும் கவனித்து என்னையும் எனது ஏனைய பிள்ளைகளையும் கவனிப்பதில் மனைவியின் தியாகம் அளப்பரியது. அவர்களுக்காக துஆ செய்யுங்கள். குறிப்பாக எனது நடக்க சிரமப்படும் மகனுக்காகப் பிரார்த்தியுங்கள். அவருக்காக பல மருத்துவச் சிகிச்சைகளுக்காகவும் முயற்சிக்கிறேன். எனது மாணவர்களில் உயர் உத்தியோகம் பார்க்கும் பலர் எனது பிள்ளையின் மருத்துவத்துக்காக பொருளாதாரம், நேரம், உழைப்பைத் தந்து உதவுகின்றனர். அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அடுத்து எனது தாய், தந்தையர் எனது உழைப்பிலிருந்து ஒரு சதத்தையேனும் அனுபவிக்காமல் காலம்சென்றுவிட்டனர். அவர்களுக்காகவும் நிறையப் பிரார்த்தியுங்கள்.

மேலும் எமது தாவூத் பவுண்டேஷன் மூலமாக தொழிநுட்பக் கல்லூரி உட்பட பல திட்டங்களைக் கொண்டிருக்கிறோம். அவை பெரியளவு முதலீடு தேவைப்படும் பெரும் திட்டங்கள். அதற்குதவுபவர்களைத் தெரிந்தால் அறிமுகம்செய்து வையுங்கள்.

(குறிப்பு: ஸத்தார் ஆசிரியர் அவர்கள் இன்னும் பலரது பெயரையும் சம்பவங்களையும் நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டே சென்றார். எனினும் பேட்டியின் விரிஞ்சி வரையறுத்தே இங்கு பகிர்ந்திருக்கிறோம்.)

Leave a comment