ஹிஜ்ரத் – சீறாவின் மகத்தான பாய்ச்சல்

முஸ்லிம்களது மாபெரும் அணிதிரளலான ஹஜ் கிரியைக்குப் பின்பு இஸ்லாமிய உம்மத் ஹிஜ்ரத்தை நினைவுகூரத் தயாராகிவிடும்.

ஹிஜ்ரத் என்ற அறபு மொழிச்சொல் விட்டுச் செல்லல், துறந்து செல்லல் போன்ற கருத்துக்களைத் தரும். நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தாயக மண் மக்காவை விட்டும் பிற்காலத்தில் மதீனதுந் நபி எனப்பட்ட யத்ரிப் நகரை நோக்கிச் சென்றதை இஸ்லாமிய வரலாறு ஹிஜ்ரத் என்கிறது.

நபியவர்கள் ஹிஜ்ரத் புலம்பெயர்வதற்கு முன்பே ஏறத்தாழ மக்காவைச் சார்ந்த பெரும்பாலான நபித் தோழர்களும் மதீனாவை அடைந்திருந்தனர். நபித் தோழர்களது ஹிஜ்ரத் எட்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றிகொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்தது.

யத்ரிபுக்குச் செல்ல முன்பே ஹபஷா (இன்றைய எதியோப்பியா) பகுதிக்கு இரு தடவைகளில் நபித் தோழர்கள் அனுப்பப்பாட்டிருந்த போதிலும், யத்ரிப் (மதீனா) நோக்கிய புலப்பெயர்வு தான் ஹிஜ்ரத் என்பதன் மூலம் நாடப்படுகிறது.

இதனை விடவும் ‘ஹிஜ்ரத்’ எனும் புலப்பெயர்வு நபிமார்களுக்கு அல்லாஹ் விதித்த ஒரு நியதியாகவும் கருதப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பல நபிமார்களும் தமது பிறந்தகங்களை விட்டும் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு வஹி அருளப்பட்ட முதற்கணம் எழுந்த அச்சத்தால் துணைவியார் கதீஜா (ரழி) அவர்களுடன் அவரது உறவுக்காரரும் வேதங்கள் பற்றி அறிந்திருந்த வயோதிப மனிதரான வரகத் பின் நவ்பலிடம் சென்ற போது அவரும் “உமது ஊரார் உம்மை இவ்வூரை விட்டும் வெளியேற்றும் போது நான் உங்களுக்குத் துணையாக இருக்க உயிர்பிழைத்து வாழவேண்டுமே!” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்களும் பின்னணிகளும் நபிமார்களது வாழ்வில் ஹிஜ்ரத் என்பது நியதி எனப் புரியவைக்கின்றது. அது தஃவா இயங்கியலில் தவிர்க்க முடியாத அம்சம். எனவே ஹிஜ்ரத் என்பது உயிர்பிழைப்பதற்காகத் தப்பியோடுதல் அல்ல. மாற்றாக தஃவாவில் அதுவொரு மகத்தான மைல்கல்லாகும். உமர் (ரழி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட பொழுது ஹிஜ்ரத் நிகழ்வுதான் இறுதியில் தெரிவானது.

நபி (ஸல்) அவர்களது பிறப்பு, மரணம், நுபுவ்வத், மிஃராஜ், பத்ர் மற்றும் மக்கா வெற்றிகள் போன்ற இன்னோரன்ன முக்கிய நிகழ்வுகள் நபியவர்களது சீறாவிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இருந்தபோதும் ஹிஜ்ரத் உமர் (ரழி) அவர்களிடம் முதலிடம் பெற்று இஸ்லாமிய வருடக் கணிப்பீடு ஹிஜ்ரத்திலிருந்து
துவங்கியது. இதனால்தான் ஹிஜ்ரத்தை சீறாவின் மகத்துவம் பொருந்திய பாய்ச்சல் என்போம்.

ஹுனைன் யுத்தத்துக்குப் பின்பு ஃஙனீமத் பொருட்களைப் பங்குகொடுத்தது பற்றி அன்ஸாரி தோழர்கள் சிலர் மத்தியில் சிறு அதிருப்தி நிலை எழுந்து அதனை நபியவர்கள் சமாதானப்படுத்திவிடும் போது “ஹிஜ்ரத் என்ற சிறப்பு மாத்திரம் இல்லையெனின் தானும் அன்ஸாரிகளைச் சார்ந்தவராக மாறிவிட்டிருப்பேன்” என்று சொல்லும்போது ஹிஜ்ரத்துடைய உன்னதத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

நபியவர்கள் அலி (ரழி) அவர்களை தமது படுக்கையில் உறங்கச் சொல்லிவிட்டு அபூபக்ர் (ரழி) அவர்களோடு மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற பயணம், அதில் இடம்பெற்ற அற்புத சம்பவங்களையும் இறுதியாக ‘தலஅல் பத்று’ வரவேற்புப் நிகழ்வும் அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்களது வீட்டின் முன்னால் நபியவர்களது ஒட்டகம் தரித்தது வரைக்கும் சம்பவங்களாகவும் கதைகளாகவும் நமது நினைவுகளில் தங்கிவிட்டதற்கு அப்பால் நம்மத்தியில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய அம்சமாக ஹிஜ்ரத் இருக்க வேண்டும்.

ஏன் அவ்வாறான கவனம் அவசியமானது? ஹிஜ்ரத் என்பது முஸ்லிம்களது இருப்புக்கான போராட்டத்தின் முக்கிய தீர்மானம். ஏனெனில் முஸ்லிம்களது இருப்புத்தான் இஸ்லாத்தின் இருப்பாகும். இஸ்லாத்தின் இருப்புக்காக இஸ்லாத்தின் அடிநாதம் ‘தௌஹீத் – ஏக இறை’ கொள்கையை நிலைநாட்ட உலகில் கட்டப்பட்ட ஆலயம் கஃபாவை விட்டுவிட்டு வேறொரு நகருக்குச் செல்லும் தீர்மானத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொள்கிறார். அடுத்து, ஹிஜ்ரத்தினது திட்டமிடல்கள் காலத்தால் வெகுமுற்போக்கானவை.

ஹிஜ்ரத் நிகழ்வினது திட்டமிடல் நுணுக்கங்கள் பற்றி ஏராளம் ஆய்வுகள் அறபுலகிலும் மேற்கு நாடுகளிலும் வெளிவந்திருக்கின்றன. ஹிஜ்ரத்தில் திட்டமிடல் பற்றிய மேலோட்டமான பார்வையொன்றை இவ்வாறு நோக்க முடியும்:

1- நபியவர்கள் அல்லாஹ்வின்பால் முழுமையாக தவக்குல் வைத்ததோடு பயணத்தின் இலக்குகளை தெளிவாக வரையறுத்திருந்தார். அத்தோடு ஹிஜ்ரத்துக்கான முன்னேற்பாடுகள், சாதனங்கள், கூடவருகை தருவோர் என்பன முற்கூட்டி நிச்சயிக்கப்பட்டிருந்தன.

2- திடுதிப்பென ஓரிரவுக்குள் மேற்கொள்ளப்பட்டதல்ல ஹிஜ்ரத். அதற்கென இரவுபகலாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பலம்-பலவீனங்கள் ஆராயப்பட்டு ஒவ்வொரு இலக்கை அடைவதற்கும் பாதை வரையப்பட்ட பயணமாக ஹிஜ்ரத் அமைந்தது.

3- அவசியப்படும் மனித வளங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் சிறப்புறத் தயார்செய்யப்பட்டிருந்தது.

அப்துல்லாஹ் பின் அபூபக்ர் இரவில் மக்காவிலிருந்து செய்திகளைக் கொண்டுவந்து தருவார். ஆமிர் இப்னு புஹைரா எனும் இடையர் பாலைவன பாதை நெடுகிலும் மனிதர் பயணம் செய்துள்ளனர் எனக் காட்டிக் கொடுக்கும் பாதச் சுவடுகளைத் தனது மந்தை மூலம் தொடர்ந்து அழித்துக் கொண்டே வந்தார். அவர்களது வழிகாட்டியாக செயல்பட்ட அப்துல்லாஹ் பின் உரைகித் முஸ்லிம் அல்லாத ஒருவர்.

அஸ்மா பின்த் அபூபக்ர் உணவையும் ஏனைய கட்டுச்சாதனங்களையும் கொண்டுவருவார். இங்கு நபியவர்கள் பெண்களது பங்களிப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதை நோக்குகிறோம். எல்லாத் திட்டமிடலிலும் சாதுரியம், தந்திரோபாயத்துக்கு முக்கிய இடமுண்டு. அவ்வாறே உடற்பலத்துக்கும் முக்கிய இடத்தை நபியவர்கள் வழங்கி அலி இப்னு அபீதாலிபைத் தனது படுக்கையில் பாசாங்காக நித்திரைகொள்ளப் பணித்திருந்தார். ஏனெனில் அலி சாதுரியம் மிக்கவர் என்பதோடு எந்த சூழ்நிலையையும் துணிகரத்தோடு எதிர்நோக்கும் தீரம்கொண்டவர்.

4- ஹிஜ்ரத் மேற்கொண்டு செல்லப் போகும் யத்ரிப் நகர் குறித்த ஆழமான பார்வையை நபியவர்கள் கொண்டிருந்தார். மதீனாவை அடைந்தவுடன் அங்கு மத்திய தளமாக மஸ்ஜிதுந் நபவியை அமைத்ததோடு, அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவர் இடையில் நூற்றாண்டு காலப் பகையை மறக்கச் செய்து சினேகத்தைத் தோற்றுவிக்க முடிந்தது. மதீனா சாசனம் ஹிஜ்ரத்துடனான நிகழ்வுகளில் சிறப்பு மிக்கதாகும். யத்ரிப் பற்றி எந்தளவு ஆழமான பின்னணியை நபியவர்கள் கொண்டிருந்து பல கோத்திரங்கள், இனக் குழுக்களுக்கிடையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வைத்ததார் என்பது அவர்களது ஆளுமையின் சிகரத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. மதீனா சாசனம்தான் அதுவரை ‘தஃவா குழு’ வடிவொன்றில் இருந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக நிலைமாறுவதற்குண்டான அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது.

நபியவர்களது சீறாவில் நிகழ்ந்த மகத்தான ஹிஜ்ரத் நினைவுபடுத்தப்படும் போது நாமும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஏராளம் அம்சங்கள் உண்டு. நபிகளாரிடத்தில் எத்தகைய தவக்குல் இருந்திருக்க வேண்டும்! எத்தகைய பொறுமையும் தியாகமும் அர்ப்பண சிந்தனையும் இருந்திருக்க வேண்டும்! எவ்வளவு உளத்தூய்மை இருந்திருக்கவேண்டும்! கஷ்ட-இலகு நிலைகளில் தளம்பல் கொள்ளாது எந்தளவு நிலைத்து நின்றிருக்கவேண்டும்! இறுதி வெற்றி குறித்த மனவுறுதியின் பலம் எவ்வளவு இருந்திருக்கும்! விளைவாக இஸ்லாம் மகத்தான பாய்ச்சலொன்றை நிகழ்த்தியது. இன்று நமது தலைமுறை வரைக்கும் தூய்மையாக இஸ்லாத்தின் தூது கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

நபியவர்கள் மட்டுமல்ல அவர்தம் தோழர்களிடத்திலும் எத்தனை தியாகம் வெளிப்பட்ட தருணம் அது. பெரும் செல்வந்தர்களாக இருந்த நபித் தோழர்களும் அனைத்தையும் இஸ்லாத்தின் வாழ்வுக்காக இழக்கத் துணிந்து இழந்தனர். நபியவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டுப் பயணிக்கையில் கொண்டிருந்த அபார நம்பிக்கையைப் பார்த்து நாம் மெய்சிலிர்த்துப் போவோம். சொந்த ஊரில் இடமற்றிருக்கையில் சுராகா இப்னு மாலிக் என்பவனுக்கு அக்கால வல்லரசு கிஸ்ராவின் கிரீடத்தை அவனது தலையில் அணிவிப்பதாக வாக்குக் கொடுப்பது நபியவர்களது ஆழ்ந்த தூரநோக்கைக் காட்டிநிற்கின்றது.

இறுதித் தூதைக் கருவறுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் ஷைத்தான் கூட ஹிஜ்ரத்தைத் தடுத்து நபியவர்களைப் படுகொலை செய்துவிட தாருந் நத்வாவிலே நடந்த இணைவைப்போரின் கூட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்தான். குறைஷியரின் இறுதி முயற்சி சூறா யாஸீனின் சில வசனங்களின் முன்னால் தூசாய்ப் பறந்தது. நபியவர்கள் வீட்டை விட்டு வெளிச்சென்று தோழர் அபூபக்ரின் இல்லமேகுகையில் அவ்விராப்பொழுதிலும் நபிகளார் வருகைக்காக அவ்வில்லம் வாயில் கதவு திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. உற்ற தோழர் உடனிருப்பது தஃவாவின் வெற்றியின் முதல்படியாகிறது. தவ்ர் குகையில் எதிரிகள் மிக அருகே வந்துவிட்ட சூழலில் தோழர் அபூபக்ர் அச்சவயப்பட்டு நாமிருவர் மட்டுமே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் “இன்னல்லாஹ மஅனா – நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு இருக்கிறான்” என நபியவர்கள் மொழிகையில் முழு உலகமும் இஸ்லாத்தின் தூதினுள் கட்டுண்டுவிடுகிறது.

மக்கா வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பு ஹிஜ்ரத் என்று ஒன்றில்லை. ஆனால் அது எம்முன்னே விட்டுச் சென்றிருக்கும் பணி பாரியது! மகத்துவம் மிக்கது!!!

நமது பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன?

Problem-Solve-762x360

மனிதன் தனது கடமைகளைப் புறக்கணிக்கின்ற போது அல்லது தடுக்கப்பட்டவற்றில் பொடுபோக்காக இருகின்ற போது அனர்த்தங்களும் பிரச்சினைகளும் நிகழ்ந்து விடுகின்றன. பெரும்பாலும் அளவு மீறிய வேகத்தினால் அல்லது நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்துவதால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட பாதையை விட்டும் விலகுவதால் தான் வீதி விபத்துக்கள் நேர்கின்றன.

மனிதர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றியொழுகினால் அதிகமான தீங்குகளை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பான். எனினும், “மனிதர்கள் தங்கள் கரங்களினால் சம்பாதித்துக் கொண்ட (தீய)வற்றினால் தரையிலும் கடலிலும் குழப்பம் தோன்றின.” (அர்ரூம்: 41)

நாம் வெறுக்கின்றவற்றையும் எம்மீது திணிக்கும் சில பலமான சக்திகள் இங்கு உள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்த அனர்த்தங்களும் பிரச்சினைகளும் நமது விருப்பங்களுக்குள் புகுந்துவிடாமல் நாம் போராடுவோம்; அவற்றினுள் நாம் விழுந்துவிடவும் மாட்டோம். நாம் அவற்றை உறுதியோடும் நிதானத்தோடும் கையாள்வோம்; குழப்பமுற்றுக் கலவரமடைய மாட்டோம். ஏனெனில் அவை உலக வாழ்வில் நாம் கடக்க வேண்டிய சோதனைகள்தான்.

எனினும் நான் இங்கு குறிப்பிடப் போவது நான் அறிந்தமட்டில் பெரும்பாலும் மனிதர்கள் தங்களது கரங்களினால் உருவாக்கிக் கொண்ட சமகால உலகின் பெரும் பிரச்சினைகளைக் குறித்தாகும்.

அவை சரியான இறை நம்பிக்கையின்மையால், இறைவழிகாட்டலை வேண்டாமையினால், அழிவை விட்டும் பாதுகாக்கும் அடையாளங்களைத் தெரியாமையால் தோற்றம் பெறுகின்றன.

தமது வாழ்வாதாரங்களை மூர்க்கமாகத் தேடிக்கொண்டிருப்போரைத் தீவிரமான குழப்பம் பீடித்து சோதித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகையவர்கள் ஹலால்-ஹராம் விதிகளையும் கூட பாழாக்கிவிடுவார்கள். மட்டுமன்றி ஏனையோரை முந்திவிட வேண்டும் என்பதற்காக இயலாமையையும் பலவீனத்தையும் மிதித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

உலகம் முழுதும் நிரம்பியிருக்கும் ஆடம்பரங்களை நாம் எதன் மூலம் விவரிக்கிறோம்? அல்லாஹ் பற்றிய அறிவீனம், படைப்புக்களை சார்ந்திருத்தல், இலாபத்துக்கெனவே அல்லாது வேறு விளக்கம் இல்லை.

நான் இங்கு மார்க்கத்தின் எதார்த்தமாக இருக்கும் ஒரு வாக்கியத்தை நினைவுபடுத்துகிறேன். அது மடத்தனமான விளக்கங்களோ திரிபுபடுத்தல்களோ அற்றதொரு வாக்கியம்.

ஒரு மனிதனுக்கு உன்னத குணங்களும் இனிய உணர்வுகளும் நாணயமும் மிக்க நண்பனொருவன் வாய்க்கப்பெற்றால் அந்நண்பனை இவ்வுலக வாழ்வெனும் பாலைவெளியில் நிழல் தரும் தோப்பாக ஆக்கிக்கொண்டுவிடுவான். ஒருமுஃமினைப் பொறுத்தமட்டில் தனது இரட்சகனுடனான தொடர்பு இதைவிட நெருக்கமானதாக இருக்காதா என்ன? அவனது இரட்சகன் அன்பாளனும் கண்ணியம் மிக்கவனுமாவான். “அல்லாஹ்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவனுக்கென திருநாமங்கள் உள்ளன.” (தாஹா: 8)

நாங்கள் அவனது விசாலமான அருளாலும் குறைவற்ற அருட்கொடைகளாலும் நிறைந்த பரக்கத்துக்களாலும் ஜீவிக்கிறோம். எனினும் அவை அனைத்தும் ஒரு நாட்டுப்புறக் கவிதையொன்றில் கூறப்பட்ட ஆரோக்கியத்தை ஒத்திருக்கின்றது:

“ஆரோக்கியம் என்பது
சுகதேகிகளது சிரசுகளில்
அணிவிக்கப்பட்டிருக்கும் கிரீடமாகும்.
நோயாளிகள் தவிர்த்து
யாரும் அதனைக்
காணமாட்டார்கள்.”

இறைவனது அருளை இரவு பகலாக நாம் அசட்டை செய்துகொண்டிருப்பது துரதிஷ்டவசமான விடயமாகும். பின்பு தடுக்கப்பட்ட சிலவற்றை இழந்துவிட்டு அதனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதில் பல மடங்கு துணிகரமாக இருப்போம். அங்கே நாம் இழந்தவற்றை நமது வலியுறுத்தப்பட்ட நலன்கள் அல்லது தடுக்கப்பட்ட நலவுகள் என எண்ணிக்கொண்டிருப்பது விநோதமானது. இறை ஏற்பாட்டுடன் நமது நிலைப்பாடு மூஸா (அலை) அவர்கள் தனது அறிவுக்குப் புலப்படாததை ஃகிழ்ர் (அலை) செய்து காட்டிய போதான நிலைப்பாட்டை மீள ஞாபகப்படுத்துவதுதான்.

இக்கதையுடன் எனக்கு “பயனுள்ள தீங்கு” என்ற கூற்று ஞாபகம் வருகிறது. ஆம், சில விடயங்கள் இருக்கலாம். அதனை ஆரம்பத்தில் ஒதுக்கிப் புறக்கணித்து விட்டிருப்போம்; இறுதியில் அதனைப் புகழ்ந்திருப்போம். “(ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.” (அந்நிஸா: 19)

இங்கே ஈமானுக்கான சில அரிச்சுவடிகள் உள்ளன. அவற்றை நாம் அறிந்துகொண்டால் உலகைப் பீடித்திருக்கும் குழப்பம், பதற்றம்,  பிரச்சினைகள் நீங்கிவிடும். மனிதனது பொறாமை அல்லது மனித உணர்வுகள் தான் இப்பிரச்சினைகளுக்குப் பின்னணியில் இருக்கின்றன என நான் கருதுகிறேன்.

வரண்டு போயிருக்கும் அறிவியல் முன்னேற்றத்துடன் நாம் தான் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குபவர்களென்றும் இங்குள்ள எல்லாவற்றுக்கும் எம்மிடமே கடிவாளம் உண்டு எனவும் கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

மனிதனுக்கு மாத்திரம் எவ்வித உயர் வழிகாட்டலின் துணையும் இல்லாமல் அவனது இலக்கை அடைய முடியுமென நினைப்பது பெரும் மடத்தனமாகும்.

எமக்குள்ள நாட்ட சுதந்திரத்தின் மூலம் செயல்பட முடியுமான பரப்பு மிகவும் குறுகியது. அவ்வாறொரு பரப்பு உண்டு. எனினும் அது நமது பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்குமுள்ள சில கட்டங்களுக்கு தவிர வேறு நம்மால் நுழைய முடியாதளவு மட்டுப்பட்டது. கடல்களதும் சமுத்திரங்களதும் நீரை தானே உருவாக்குவதாக நினைத்துக்கொள்ளும் மீனொன்று எவ்வளவு மடத்தனம் மிக்கதாக இருக்கும்! அது உருவாக்குவது நீருக்குள்ளால் மூச்செடுப்பதற்கான செவுள்களாலான முறைமையை மட்டுமாக இருக்கலாம்.

நம்மில் ஆரம்பமானவரும் இறுதியானவரும் இடையிலிருப்போரும் அறிந்துகொள்ள வேண்டியது,
“எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.” (அல்முல்க்: 1) மேலும், “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.” (அல்முஃமினூன்: 88) மேலும், “அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.” (அல்கஸஸ்: 88)

இவற்றை அறியாதிருக்கும் மடத்தனம்தான் என்ன? எவ்வித பிரக்ஞையோ குறிக்கோளோ இன்றி இவ்வுலகத்திலே மூழ்கியதுதான் காரணம்.

அல்லாஹ்வையும் அவனது பண்புகளையும் விசுவாசிப்பதைத் தவிர்த்து பிரச்சினைகளுக்கு வேறு தீர்வு இல்லை. இஸ்லாம் மனிதர்களுக்கு அபூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க திருப்திகரமான, அமைப்பில் அவனது இரட்சகனை அறிமுகப்படுத்துகிறது.

பின்பு நிகழ்ந்த அனர்த்தம் எது? தவறுவிட்ட இடம் எது? என அறிந்தவராக நோக்குவார். இவற்றையெல்லாம் செய்தது யார்? பின்பு கூறுவார்: “இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்பதைத் கொடுப்பவரும் எவரும் இல்லை. எந்த செல்வருடைய செல்வமும் உனக்குப் பயனளிக்காது.

இந்த இறுதி வாக்கியத்துடன் சற்று நிறுத்துவோம். நல்லெண்ணமுடையவர்கள் இவ்வுலகில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அவ்வாறு அவர்கள் இருப்பது மட்டும் போதுமா? அவ்வாறிருப்பதால் மட்டுமே ஏனையோரிடத்தில் இவ்வுலகின் செல்வ வளங்களும் முன்னேற்றமும் சுபீட்சமும் ஏன் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி கேட்பாரா?

இந்த கண்டிப்பான குணம் மாத்திரம் எந்த வகையிலும் அதனை சார்ந்தோருக்கு எத்தகையதையும் தந்துவிட மாட்டாது என்பதனை இஸ்லாம் வலியோறுத்துகின்றது. அது ஒரு போதும் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் தந்துவிடாது. இதுதான் சிலர் மறுமைநாள் குறித்து வினவுவதாகும். இதுதான் சிலருக்கு மொத்தமாகவும் இன்னும் சிலருக்கு முழுமையாகவும் உள்ள அனுபவத்தின் பகுதியாகும். அதில் எந்தத் கெட்டித்தனமும் இல்லை. சிலவேளை அது உலகில் அலங்காரமாகவும் மறுமையில் அவலமாகவும் இருக்கலாம். மறுமை நாள் குறித்த நம்பிக்கையின் விளைவுதான் இது.

உலகமே முறைப்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் குடிகொண்டுவிட்டிருக்கும் வறுமைப் பிரச்சினை. இதற்குத் தீர்வுகளைக் கொடுக்க முன்னால் முதலில் இது பற்றிய விவரங்களை வரையறுத்துத் தர விரும்புகிறேன். நமது நாட்டின் நீதியமைச்சில் பணிபுரிந்து வந்த ஒரு வேலையாள் ஒரு பெரிய குடும்பத்திற்கே உணவு விடயங்களைக் கவனித்து வந்ததை நான் நன்கறிவேன். ஒரு முறை நான் அவரிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவர் உதவும் குடும்பத்துக்கு பயனளிக்குமென்றேன். எனினும் கண்ணியமிக்க ப்பணியாளர் அதனை மறுத்துவிட்டு சென்று தான் பசியோடிருந்து அவர்களுக்கு உதவினார்.

இந்த வகை ஏழைகளைப் பார்த்துத்தான் இம்மார்க்கம் கூறுகிறது: “இவர்கள் சுவனவாசிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.”

நமது தேச சுதந்திரப் போராட்டத் தியாகி முஹம்மத் பரீத், வெள்ளையருக்கு எதிராக ஆக்கிரமிப்பை விட்டும் விடுவிப்பதற்கான தனது சுதந்திரப் போராட்டப் பாதையில் தன்னிடத்தில் நிலத்தில் ஒரு துண்டு சொத்தினைக் கூடக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறுதான் நமது ஆரம்பப் பரம்பரையை சேர்ந்த முஹாஜிர்களும் அன்ஸார்களும் தாம் விசுவாசித்த கொள்கைக்காக வறுமைக்கு மத்தியிலும் தியாகம் மேற்கொண்டார்கள்.

இன்று நாம் அறிந்துள்ள பெரும் பெரும் தலைவர்களில் கொஞ்சம் சொத்துக்களை வைத்திருந்தவர்கள், அல்லது எதனையும் வைத்திருக்காதவர்களும் அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்றதும் செல்வம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அவர்களும் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் ஏழேழு பரம்பரைக்குமான அனைத்து வித சுகபோகங்களையும் உண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய செல்வந்தர்களைத் தான் இம்மார்க்கம் நரகத்தின் கூட்டத்தவர்கள், தீய முடிவைக் கொண்டவர்கள் என அழைக்கின்றது.

இங்கு மனிதகுலத்திலே இன்னொரு வகையான ஏழ்மையும் மூன்றாம் உலக நாடுகளில் பின்னடைந்த நகரங்களில் பரவிப் போயிருக்கிறது. அதனால் அஅங்கு குற்றச்செயல்கள் பரவிப்போயிருக்கின்றன. இவ்வகையான விடயங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு நலவின் பக்கம் இலேசுபடுத்திக் கொடுக்க வேண்டும். உண்மையில் இவ்வாறான பட்டினியும், உடுத்த ஆடைகளின்றியும் இருக்கும் நிலையில் ஒரு மனிதன் அல்லது மக்கள் கூட்டம் ஏதும் செய்யாமல் விடுமாயின் அவர்கள் பாவிகளே.

பெயரளவில் மாத்திரம் இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் சிங்கம் விட்டுப் போட்டுச் செல்லும் மீதத்தை சாப்பிடும் நரிகள் போன்றவர்கள். அவர்கள் எந்த வித நுணுக்கத்தையும் பெற்றிருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிவிடவும் மாட்டார்கள்.

ஏதாவது உதவி கிடைத்து விட்டால் வயிறு நிரம்புவார்கள். எப்புறமிருந்து தாக்கப்பட்டாலும் சிதறிவிடுவார்கள். ஒரு பொக்கிஷத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டாலும் அதனைத் நிர்வகிப்பதற்கு சக்தியற்றவர்கள். அவர்கள் முன்னால் அந்த கஜானாக்கள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும்.

உறுதியாக ஏழ்மைக்குத் தான் இத்தகையவர்கள் லாயக்கானவர்கள். தம்மை மாற்றிக் கொள்வதுதான் அவர்களுக்குத் தேவை. இவர்கள் பொருளாதார விடயத்தில் சுமைகளாக இருப்போராயின் அரசியல் விடயத்திலும் சுமையாகத்தான் இருப்பார்கள்.

பிலிப்பைன்ஸின் புரட்சி வீரர்களாக இருந்தவர்களது வாசகம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. “இங்கு அடிமைகள் இல்லாமல் இருந்தால், சர்வாதிகாரிகளுக்கு இடமிருக்காது.” எல்லாவற்றுக்கும் சாமரம் வீசும் அல்லக்கை ஆதரவாளர்களின்றி பிர்அவ்ன்கள் தோற்றம்பெற மாட்டார்கள்.

இத்தகைய ஏழைகள் எப்போதுமே நெருக்கடியின் போது தமது கரங்களை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். மனிதாபிமானத்தின் பெயரால் வசதி படைத்தவர்களும் தம்மிடம் மிஞ்சுவதில் கொஞ்சத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எது வரைக்கும் தான் தாழ்ந்திருக்கும் கரங்கள் தொடர்ந்தும் தாழ்ந்ததாகவும் உயர்ந்திருக்கும் கரங்கள் தொடர்ந்தும் உயர்ந்ததாகவும் இருப்பது?

வறுமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது ஒரு வேலைத் திட்டம். அது கேட்கும் போது கொடுக்க வேண்டிய உதவியல்ல. அதனை அல்லாஹ் கூறுவதுதான்: “(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.” (அல்அஃராஃப்:10)

அழிவுகளின் பக்கம் செல்லாது மனதுகள் எவ்வளவு மாறவேண்டியிருக்கின்றது. உதவிகள் அளிப்பது பூரணத்துவத்தை அடைவதற்கான ஏணி தான். அலி (ரழி) அவர்கள் கூறும் ஆச்சரியமான கூற்றைப் பாருங்கள்: “மனிதர்கள் எல்லோரையும் கஷ்டம் சூழ்ந்துகொள்ளுமாக இருந்தால் ஈகைக்குணம் அற்றுப் போய் சண்டைகளே எங்கும் இருக்கும்.”

மூன்றாம் உலக மக்கள் நட்சத்திரக் கணிப்புக்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியும் சுபீட்சமும் வருமென நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது முஸ்தபா அமீன் எழுதியுள்ளவாறு ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டு டீ ஆர்டர் பண்ணுவது போல “மனித உரிமை” , “சுதந்திரம்” , “சமூக நீதி” என ஆர்டருக்கு சொல்வது போல் சும்மா சொல்லிக்கொ ண்டிருக்கிறார்கள்.

நாம் வறுமைப் பிரச்சினை குறித்துத் தொடர்ந்தும் எழுதிக் கொண்டதோடு விட்டிருக்கிறோம். நமது அன்றாட வாழ்வில் அதன் கொடுமைகளை அனுபவித்ததில்லை.

இவ்வுலகின் இன்னும் பல பிரச்சினைகளை நாம் அவதானித்துப் பார்த்தால் அதில் ஒன்று தான் சமாதானம். உலகம் அதன் இருப்பையும் நாகரிகத்தையும் இழந்து போயிருக்கும் விடயம் தான் சமாதானம் குறித்த விடயம்.

உலகிலே சமாதானம் பற்றிப் பேசுவோரது தர்க்கங்கள் விநோதமாக இருக்கும். அவர்கள் பலஸ்தீனிலே அரபுகளது இருப்புக்கு வேட்டு வைத்துவிட்டு இஸ்ரேலை உருவாக்கி மஸ்ஜிதுல் அக்ஸா இருக்குமிடத்தில் சுலைமான் கோயில் உருவாக்க வேண்டுமென திட்டமிட்டுக்கொண்டே சமாதானம் பற்றிப் பேசுவார்கள்.

ரஷ்யர்கள் இஸ்லாமிய ஆப்கானை ஆக்கிரமித்து அங்கு இஸ்லாத்தை கருவறுக்கத் திட்டமிட்டுக் கொண்டு சமாதான கீதம் பாடுவார்கள்.

தென்னாபிரிக்க வெள்ளையர்கள் அங்குள்ள கறுப்பர்களுக்கு மனித அந்தஸ்தைக் கூட வழங்காது சமாதானம், அமைதி குறித்துப் பேசுவார்கள். அமெரிக்கர்கள் அரபுக்களுக்கெதிரான யூத ஆக்கிரமிப்பை ஆதரித்துக் கொண்டே சமாதானம் வேண்டுமெனக் கூவுவார்கள்.

உலகமே ஒருவித நயவஞ்சகத்தனத்தாலும் வெற்றுப் பேச்சாலும் போர்த்திக் கொண்டு இருக்கையில் எவ்வாறு இதனோடு சமாதானம் கூடவே வர சாத்தியமில்லை.

நீதி முதலில் வேண்டும். அடுத்து தான் மற்றவை.

உலகமெல்லாம் காட்டுச் சட்டம் ஆளும் போது சமாதானமும் அமைதியும் வருவது சாத்தியமற்றது.

அல்குர்ஆன் நம்பிக்கையாளர்களை நோக்கி சமாதானத்தில் கரிசனை காட்டுமாறு அறைகூவல் விடுக்கின்றது. “நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அமைதிக்குள் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்” (அல்பகறா: 208)

இந்த அறைகூவலைப் புறக்கணித்தால் என்ன நிகழும்? பூமியெல்லாம் துயரம் நிறைந்து பாழடைந்துவிடும். “(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ? இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.”
(முஹம்மத்: 23)

போர்களின் போது ஆண்களும் பெண்களும் சிறார்களுமாக அனுபவிக்கும் கொடுமைகளை குறித்த வேதனை மிக்க கதைகளையும் கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். உண்மையில் யுத்தங்கள் வெறுக்கத்தக்கவை. யுத்தத்தை மூட்டிவிடுவோருக்கு நாசம் உண்டாகட்டும்.

இறை வேதம் எதிலும் தாக்குதல் யுத்தத்துக்கு அனுமதி கொடுக்கப்படவே இல்லை. மாறாக மக்களையும், உரிமைகளையும், வழிபாட்டிடங்களையும் தற்காக்கும் யுத்தத்துக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: “மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்.” (அல்ஹஜ்: 40)

கஃபாவின் இரட்சகன் சமாதானம் வேண்டும் என்பதற்காக திருடர்களிடம் சரணடையச் சொல்லி ஏவவில்லை. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டை உடைய ஒரு மனிதன் அவ்வாறு இருந்துவிடவும் மாட்டான்.

தூய எண்ணமுடையவர்கள் ஒன்றிணையும் போது அமைதியைத் தோற்றுவித்துப் பேணும் உலகளாவிய அமைப்புக்கள் உருவாகும். உள்ளங்கள் வக்கிரங்களை விட்டும் தூய்மைப்படும் போதுதான் இது உருவாகும். முதலும் கடைசியுமாக இது அல்லாஹ்விடமிருந்தே துவங்கி அவனிலேயே முடிவடையும்.

ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)

சொத்துப் பங்கீட்டில் சமத்துவம் – ஆரம்பகால விவாதங்கள்

semeino-pravo

தமிழில்: ஸியாப் முஹம்மத் இப்னு ஸுஹைல்

கடந்த ஆகஸ்டு மாதம் தூனிசியா நாட்டு அதிபர் காஇத் சிப்ஸி பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் சமபங்கு அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தது தொடக்கம் அங்கும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது.

முக்கியமாக வாரிசுச் சொத்துப் பங்கீடு குறித்த விடயம் இஸ்லாத்திலே குறை கண்டுபிடிக்க விரும்புவோர் கையிலெடுக்கும் விவகாரமாகவும் காணப்படுகின்ற நிலையில் இப்போலிக் குற்றம் சுமத்தல்களுக்கு தகுதியான அறிஞர்களால் அந்தந்தக் காலத்தின் மொழியில் பதில் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம் குறித்த விடயம், மனித சிந்தனைக்கு இடம் வைக்கத் தேவையற்ற அளவுக்கு திட்டவட்டமான கருத்துடன் கூடிய அல்குர்ஆன் வசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. எனவே அந்த சட்டத்திலே மனித உற்பத்திகள் கைவைக்க இடமளிப்பது இறை வஹியை மாசுபடுத்தவும் அதிலே குறை காணவும் அனுமதிப்பதற்குச் சமமாகும். இதனாலேயே கடந்த மாதம் தூனிசிய அதிபரின் வேண்டுகோளின் போதும், இதற்கு முன்னரும் அநேக சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய அறிஞர்கள் ஆக்ரோஷமாக இதுபற்றிப் பேசி இஸ்லாத்தின் கருத்தை மிகத் தெளிவாக முன்வைத்து வந்திருக்கிறார்கள்.

இஸ்லாம் முன்வைக்கும் சொத்துப் பங்கீட்டு விவகாரம் தொடர்பிலான விவாதங்கள் அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் கிளப்பப்பட்டு இன்னும் ஒரு நூற்றாண்டு கூடக் கழியவில்லை. இக்கருத்துக்கள் தோன்றிய வரலாற்று வேர்களை நோக்கி நாம் பயணித்தால் 1928ம் ஆண்டு வாக்கில் எகிப்தின் புத்திஜீவித்துவ, பெண்ணிய மட்டங்களில் இடம்பெற்ற விவாதங்கள் முக்கியம் மிக்கவை. எனினும் இக்கருத்துப் பரிமாறல்களை நோக்குகையில் பெண்ணுக்கு சொத்துப் பங்கீட்டில் சமபங்கு அளிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை அக்கால சமூக மாற்றத்தினாலோ அல்லது முன்னேற்றகரமான சிந்தனைகளாலோ ஏற்பட்டதொன்றல்ல என்பது துலங்குகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அரபு-இஸ்லாமிய உலகில் மக்கள் இஸ்லாமியக் கருத்துக்களை விட்டும் தூரமாகி அவர்கள் மத்தியில் ஷோசலிஸக் கருத்துக்கள் அறிமுகமாகி செல்வாக்குச் செலுத்தத் துவங்கிய காலகட்டமாகும்.

முதன் முதலில் இக்காலப் பின்னணியில் எகிப்தின் கிப்தியக் கிறிஸ்தவ சிந்தனையாளர் மூஸா ஸலாமா ‘கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு’ நிகழ்வொன்றில் 1928இல் நிகழ்த்திய விரிவுரையில் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் சமபங்கு வேண்டும் என்பதை சமத்துவத்தின் அவசியம், சொத்துக்கள் இல்லாத பெண்களை ஆண்கள் விரும்பவில்லை என்பவற்றைக் காரணமாக முன்வைத்துப் பேசியிருந்தார்.

நிகழ்வுக்குப் பின்னர் எகிப்துப் பெண்ணிய அமைப்பின் நிறுவனரான ஹுதா ஷஃராவிக்கு எகிப்துப் பெண்களுக்கு இவ்விடயத்தில் நீதி கிடைக்கப் போராடுவதற்கும் அதனை அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைக்கவும் அழைப்பு விடுக்கும் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு எகிப்துப் பத்திரிகைகள் பெரும் இடம் கொடுக்க பரபரப்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதை நோக்கலாம். எகிப்து உட்பட அரபுலகின் புத்திஜீவித்துவ மட்டங்களை இஸ்லாம் அல்லாத சிந்தனைகள் நிரப்பிக் கொண்டிருந்த அக்காலப்பகுதியில் மூஸா ஸலாமாவின் கருத்துக்களை மறுத்துப் பதிலளிப்பதில் இலக்கிய விமர்சகரான முஸ்தபா ஸாதிக் ராபிஈ மற்றும் பெண்ணியவாதியாக பிரபலம் பெற்ற ஹுதா ஷஃராவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராபிஈ தனது கட்டுரையில் மூஸா ஸலாமா முற்றாக மேற்குலகின் சிந்தனைக்கு சார்ந்திருந்து அதனைக் கண்மூடிப் பின்பற்ற அழைப்பதை விமர்சித்திருந்ததோடு அவர் இஸ்லாத்தை அதன் சரியான புரிதலில் விளங்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அதனை அவர் சிறுபிள்ளைத்தனமான புரிதல் என வர்ணித்திருந்தார்.

ராபிஈயின் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு: “இஸ்லாமிய ஷரீஆவின்படி மகளுக்கான சொத்துப் பங்கீடு என்பது ஒன்று அல்ல. இங்கு திருமணம் என்ற ஒழுங்கொன்றும் உள்ளது. இரண்டும் ஒன்றிணைந்து தான் அவளது சொத்துரிமை உள்ளது. அதாவது பெண் ஒரு புறம் தனது பங்கினைப் பெற்றுக் கொண்டு இன்னொரு புறமாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்னொரு பங்கை விட்டுக் கொடுக்கிறாள்.” அதாவது அவளின் கணவனின் சொத்தில் அவளுக்குப் பங்கு இருக்கின்றது. கணவனுக்கு இந்தளவுக்கு மனைவியின் சொத்தில் பங்கு இல்லை என்பதனை அவர் தெளிவுபடுத்துகிறார். அத்தோடு அவளுக்கான செலவினத்துக்குரிய கடமையும் கணவனிடமே உள்ளது.

இதுப பற்றிய ஹுதா ஷஃராவியின் கட்டுரை “சியாஸா” என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. அவரது ஆக்கத்தில் மூஸா ஸலாமாவின் கருத்துக்களுக்கு இரு காரணிகளால் தனக்கு உடன்படு இல்லை என்பதை விளக்கியிருந்தார்.

(1) எகிப்தின் பெண்ணிய இயக்கம் மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தாலும் எல்லாவற்றிலும் மேற்கினைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அந்தந்த நாட்டுக்கென சட்டங்களும் வழக்காறுகளும் இருக்கும். ஒரு இடத்துக்குப் பொருந்துபவை இன்னொரு இடத்துக்குப் பொருந்த மாட்டாது.

(2) இவ்வாறு ஒரு வித்தியாசம் இருப்பதனால் பெண்கள் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை அவர் இரண்டாவதாக வலியுறுத்தியிருந்தார்.

அடுத்து, சொத்துரிமை இல்லாத பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் முன்வராமல் இருப்பது உண்மையெனின் கிழக்குலகை விடவும் வாரிசுரிமையில் சமத்துவம் பேணப்படுவதாகக் கூறப்படும் ஐரோப்பாவில் ஏன் பிரம்மச்சாரிகளது தொகை அதிகரித்திருக்கிறது என ஹுதா ஷஃராவி கேள்வி எழுப்பினார்.

அத்தோடு இவ்வாறு சமபங்கீடு அளிப்பது ஒரு கணவனுக்கு தனது மனைவி, குழந்தைகளுக்கு செலவளிப்பதை விட்டும் நீங்கிக் கொள்ளும் மனநிலையைத் தோற்றுவிக்காதா எனக் கேள்வியெழுப்புகிறார். குறிப்பாக இந்நிலை வறுமைப் பின்புலத்துடன் வரும் பெண்களுக்கு அதிக கஷ்டத்தை சுமக்கச் செய்யும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஹுதா ஷஃராவியின் எழுத்துக்கள் இறுதியில் இவ்வாறு நிறைவு பெறுகிறது: “பெண்ணுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தின் மூலம் நாம் நாடுவது சட்டத்தை மாற்ற அல்லது ஷரீஆவைக் கவிழ்த்து விடும் முயற்சி அல்ல. இந்த சட்டத்தில் நாம் ஆட்சேபமோ, சந்தேகமோ வைக்கவில்லை. எமது கோரிக்கை இறைவனும் அவனது சட்டமும் எந்நோக்குடன் உள்ளதோ அந்த நோக்கத்தை அடையும் வகையில் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தவே உழைக்கிறோம். அத்துடன் ஒரு சில பெற்றார் மார்க்கத்தின் பெயரால் பெண் பிள்ளைகளுக்கு சொத்துப் பங்கீட்டை மறுத்தால், நாம் அதற்கென மார்க்கத்தை பழித்துரைக்க மாட்டோம். இஸ்லாம் மார்க்கம் இந்த சூழ்ச்சிகளை விட்டும் தூய்மையானது.”

>மீண்டும் எழுந்த சர்ச்சை:

இந்த வாத-விவாதங்கள் நிறைவுற்று இரு வருடங்களில் எகிப்தின் அல்அஹ்ராம் பத்திரிக்கையில் மூஸா ஸலாமாவின் நண்பர் மஹ்மூத் அஸ்மி 1930 ஜனவரியில் எழுதிய கட்டுரை மூலம் மீளவும் மேலெழுந்தது. அதற்கு சிறிது காலத்தின் பின்னரேயே பஃக்ரி மீக்காயீல் என்பவர் அமெரிக்கப் பொதுக் கூட்டமொன்றில் பெண்ணுக்கு சொத்துரிமையில் சமபங்கு வேண்டுமென ஒரு விரிவுரை செய்கிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மீளவும் எகிப்திலே சர்ச்சை வெடிக்கின்றது; விவாதங்கள் தொடர்கின்றன. இவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஷெய்க் ரஷீத் ரிழா தனது பிரபலம் மிக்க “அல்மனார்” சஞ்சிகையில் கட்டுரை வரைகிறார். அதில் அவர் பெண்ணுக்கு சொத்துரிமையில் சமமாக வேண்டுவோரது கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறார். அதனது சாராம்சத்தை இவ்வாறு நோக்கலாம்:

(1) முஸ்லிம்கள் அநேக விவகாரங்களில் ஷரீஆ சட்டத்தில் தங்கியிருப்பதோடு அரசின் சட்டத்தையும் ஏற்றுள்ளனர். அவ்வாறிருக்க தனியார் சட்டப்பகுதிகள், வாரிசுரிமைச் சட்டப் பகுதிகளோடு தொடர்பான பகுதிகளில் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட  ஏன் உடன்படுவதில்லை?

(2) சில முஸ்லிம் அறிஞர்கள் கால மாற்றத்துக்கேற்ப மனித நலன்களும் மாறியிருப்பதைக் கருத்திற்கொண்டு உலக விடயங்களோடு தொடர்பான சட்டங்களை விட்டுவிடலாம் என்கின்றனர்.

(3) இன்று வாரிசுமையின் நிலை அதன் அடிப்படையை விட்டும் அகன்றிருக்கின்றமை.

(4) முழு உலகுமே சகோதரனுக்கும் சகோதரிக்கும் சம அளவில் சொத்துக் கிடைக்க வேண்டுமென சொல்கிறதே?

இறுதியில் ஷெய்க் ரஷீத் ரிழா தனது கருத்தைப் பதிவு செய்கிறார்: “ஷரீஅத் என்பது நாம் விரும்புகிற பகுதியை எடுத்துக் கொண்டு நமக்கு விருப்பமற்றதை விட்டுவிடக் கூடிய விடயமல்ல; இது மார்க்க விவகாரம். மார்க்கத்தைப் பூரணமாக ஏற்க வேண்டும். அதன் பயனை நாம் அறிந்து கொண்டாலும்தான் இல்லாவிட்டாலும்தான் பின்பற்றியேயாகவேண்டும். ஷரீஆவைப் பின்பற்றுவது தெரிவுச் சுதந்திரத்துக்குட்பட்டது என்பதை முன்சென்ற அறிஞர்களோ தற்கால அறிஞர்களோ எவரும் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, இஜ்மாஃ அனைத்துக்கும் முரணானது. அவ்வாறு சொல்வது தெளிவான நிராகரிப்பாகும்.அது இபாதத் பகுதியாகலாம் அல்லது முஆமலாத்தாக இருக்கலாம், ஆதாரம் உறுதியென்றால் கடைப்பிடிக்கத்தான் வேண்டும்.”

பெண்ணுக்கு சொத்துப் பங்கீட்டில் சமபங்கு வேண்டும் என்ற கருத்து மிகக் குறுகிய கால வரலாறு கொண்ட பலவீனமான வாதம். அக்காலத்திலேயே அதற்கு உரிய பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அரபு-இஸ்லாமிய உலகில் இக்கருத்தினை ஆதரிப்பவர்கள் நாற்பதுகளின் பின் அதிகரித்திருக்கிறார்கள்.

பின்நாட்களில் வந்த அறிஞர்கள் இன்னும் இதனை ஆழமாகத் தெளிவுபடுத்தியுமுள்ளார்கள். அவர்களது கருத்துக்கள் பெண்ணுடைய விவகாரத்தில் இஸ்லாத்தின் நீதித் தன்மையை இன்னும் பறைசாற்றுகிறது:
(1) ஆண் மஹர் கொடுப்பதின் மூலமும் ஆணே குடும்ப செலவினத்தைப் பொறுப்பேற்பதன் மூலமாகவும் பெண்ணுக்கு சொத்தும் அதனை அனுபவிக்கும் வாய்ப்பும் உள்ளது.
(2) பெண் போல இரு மடங்கு சொத்துப் பங்கீட்டினை ஆண் பெறும் சந்தர்ப்பங்கள் நான்குதான் உண்டு.
(3) சரிசமமான சொத்துப் பங்கீடே அதிகமாகும்.
(4) பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெண் ஆணை விட அதிகம் பங்குகள் பெறுகிறாள்.

இவை சில குறிப்புக்கள் மட்டுமேயாகும். கட்டுரையின் விரிவஞ்சி மேலதிக தகவல்களைத் தவிர்க்கிறோம். இறை சட்டத்தின் அற்புதத்துக்கு வாரிசுரிமை தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதனாலேயே அது குறித்த சட்டங்கள் அல்குர்ஆனில் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. தூதர் (ஸல்) அவர்களது எச்சரிக்கைப்படி பூமியை விட்டும் விரைவில் மறையும் அறிவாகவும் வாரிசுரிமைக் கலை குறிப்பிடுப்பட்டுள்ளது.

(குறிப்புக்கள்: கட்டுரை www.mugtama.com,  www.islamtoday.netwww.raialyoum.com ஆகிய இணையங்களிலிருந்து தொகுக்கப்பட்டது.
மேலே மேற்கோள் காட்டப்படும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஹுதா ஷஃராவியின் ஹிஜாப், குடும்ப அலகு பற்றிய கருத்துக்கள் இஸ்லாமிய அறிஞர்களால் மறுத்துப் பேசப்பட்டுள்ளன.)

இஜ்திஹாதும் அது பற்றிய நவீன சிந்தனைகளும்

تعريف_الاجتهاد

 

எல்லாக் காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் மனித நலன்களைப் பாதுகாத்து அவனது பிரச்சினைகள் சகலதுக்குமான தீர்வை வழங்குவதற்கு இஸ்லாமிய ஷரீஆ உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

“இன்றைய தினம் உங்களுக்காக நான் உங்களுடைய மார்க்கத்தைப் பரிபூரணமானதாக ஆக்கிவைத்துவிட்டேன்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்தியும் விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டுவிட்டேன்.” (அல்மாஇதா: 3)

அவ்வகையில் உலகில் இறுதியாக இறக்கியருளப்பட்ட தெய்வீக வெளிப்பாடான முஹம்மதிய ஷரீஆ மறுமை வாழ்வுக்கான வழிகாட்டல்களை வழங்குவது போலவே இவ்வுலகுக்கான வாழ்வியல் வழிகாட்டல்கள் அனைத்தையும் பொதிந்ததாக இருக்கிறது. அதேநேரம் இஸ்லாமிய ஷரீஆ சமூக வாழ்வின் தேவைகளிலும்தான் தனி மனித சார் பிரச்சினைகளிலும்தான் சமநிலையான வழிகாட்டல்களைத் திருப்திகரமாக முன்வைக்கிறது.

இதனால் இஸ்லாமிய சட்டவியல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் புதிதாய்த் தோன்றும் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் இயலுமை கொண்ட உயிரோட்டம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.

இப்பின்னணியில் இஸ்லாமிய சட்டவியலின் உயிரோட்டத் தன்மையையும் வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் பேணி இயங்கு நிலையில் வைத்திருக்கும் சாதனமாக இஜ்திஹாத் காணப்படுகிறது.

 

இஜ்திஹாத் என்பது

இஜ்திஹாத் என்ற பதத்தை இமாம் அபூஹாமித் அல்கஸ்ஸாலி அவர்கள் தனது ‘முஸ்தஸ்ஃபா’ எனும் நூலிலே மொழி ரீதியாகப் பின்வரும் அமைப்பில் விளக்குகிறார்கள். (அல்ஜீம் வல்ஹாஉ வத்தால்) ஆகிய எழுத்துக்களின் அடியாகத் தோன்றுகிறது. இதன் கருத்து முயற்சியை செலவளித்தல் என்பதாகும். அச்சொல் (அல்இஃப்திஆல்) வஸ்னைப் பெறுகையில் இன்னும் கருத்தூன்றிய சொல்லாக உருவாகிறது. அப்போது இஜ்தஹத எனும் சொல் ஜஹத வை விடவும் மேலான கருத்துக் கொண்டதாகிறது.

அடுத்து இஸ்லாமிய பரிபாஷை ரீதியில் இச்சொல்லைத் தெளிவுபடுத்தும் போது இமாம் ஆமிதி அவர்களது ‘அல்இஹ்காம் ஃபி உஸூலில் அஹ்காம்’  நூல் தரும் விளக்கம் அலாதியானது; போதுமானது. அவர் ‘ஷரீஆ சட்டமொன்றின் முடிவைப் பெறும் நோக்கில் இனி முடியாது எனக் உணரும் அளவுக்கு முயற்சியைப் பிரயோகித்தல்’ என்கிறார். இமாம் ஷவ்கானியின் ‘இர்ஷாதுல் ஃபுஹூல்’ நூலின் வரைவிலக்கணமும் குறிப்பிடக் கூடிய ஒன்றே. ‘இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களின் முடிவொன்றை நெருங்குவதற்காக முயற்சியை இயலுமான அளவின் உச்சகட்டத்திற்குப் பிரயோகித்தல்’ என வரையறுக்கிறார் இமாம் ஷவ்கானி.

ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் இஜ்திஹாத் என்பது குறிப்பிட்ட விவகாரங்களில் இஸ்லாமிய ஷரீஆ எடுக்கும் நிலைப்பாட்டைக் கண்டறிவதற்காக நிலையான அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆகிய ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பிரயோகித்து சரியான முடிவைக் கண்டடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல் எனலாம்.

இஸ்லாமிய அறிவுச் செயற்பாடான இஜ்திஹாதிற்கு நன்மைகள் உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. புகாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபிமொழியொன்றிலே “தீர்ப்புச் சொல்பவர் இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக இருந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. இஜ்திஹாத் செய்து அவரது முடிவு பிழையாக இருந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு.” என இஜ்திஹாதுக்குத் தூண்டுதல் வழங்கப்படுகிறது.

 

இஸ்லாமிய வரலாற்றில் இஜ்திஹாத்

நபித்துவ ஆட்சிக் காலத்திலேயே நபித்தோழர்களுள் முக்கிய ஒருவரான முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் யெமன் பிராந்தியத்திற்கான ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்போது மக்களுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்துத் தூதர்(ஸல்) அவர்கள் தோழரிடம் “உம்மிடம் பிரச்சினைகள் ஏதும் வந்தால் எவ்வாறு தீர்த்து வைப்பீர்?” என வினவிய போது, முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என பதில் கூறினார்கள். அப்போது தூதரவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” எனத் வினவிய போது, “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலிருந்து தீர்ப்பளிப்பேன்” என்கிறார்கள். அதன் பின்பு “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலும் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” என மீளவும் கேட்ட பொழுதில் “எனது அறிவிற்குட்பட்ட வரைக்கும் பூரணமாக இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன்” எனக் கூற தூதரவர்களும் ஆமோதித்து, அல்லாஹ்வையும் புகழ்ந்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க இடைக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதாக ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய அறிவுத்துறைகளின் தேக்கநிலை திறந்துவிடப்படுகிறது. இக்காலவெளிகளில் இஜ்திஹாத் பற்றிய மாற்றுச் சிந்தனையாளராக வரலாற்றுள் புரட்சிகரமாக ஊடுறுவுபவராக இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் காணப்படுகிறார்கள். இவ்வகையில் தேக்கம் மிகுந்து காணப்பட்ட வேளையொன்றில் இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களது பணி பிரமாண்டமானது. இதற்கு அன்னாரது 30 க்கும் மேற்பட்ட பாகங்கள்கொண்ட மஜ்மூஉல் ஃபதாவா மாத்திரமே போதிய சான்றாகும்.

இக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டமை குறித்து இமாம் யூசுப் அல்கர்ளாவி அவர்கள் “இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதே ஒரு இஜ்திஹாதின் முடிவுதான்; எனவே நாம் இன்னொரு இஜ்திஹாத் மூலம் பழைய இஜ்திஹாதை முறித்துவிடுகிறோம்” என அலாதியாக விமர்சனம் செய்கிறார்கள்.

இப்பின்னணியில் தாரிக் ரமழான் முன்வைக்கும் கருத்துக்களும் முக்கியமானவை. அவர் “இஜ்திஹாதின் வாயில்கள் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. இஸ்லாமின் பெயரால் அவ்வாறான முடிவொன்றைப் பிரகடனம் செய்ய எந்தப் புலமையாளருக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் இவ்வகையான பிரகடனங்கள் இயல்பாகவே இஸ்லாமுக்கு எதிரானது. உண்மையில் இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டவியலின் மூன்றாவது மூலாதாரமாக இருப்பதோடு அதுவே நீதித்துறையின் முழுப் பொறுப்பையும் சுமக்கிறது” என்கிறார்.

 

ஏன் தற்காலத்தில் இஜ்திஹாத் அவசியம்?

உண்மையில் இன்று ஒரு சாரார் வளம் கொழிக்கும் எம் முதுசங்களான ஃபிக்ஹுத் துறையின் மீதும் எம் முன்னோர்களான மகத்தான அறிஞர்கள் மீதும் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையின் விளைவால் இஜ்திஹாத் இக்காலத்திற்குத் தேவையற்றது; அவர்களது இஜ்திஹாத்களே எமக்கும் போதுமானது; என்ற நிலைபாட்டிலே இருந்து வருகின்றனர். என்ற போதிலும் அவர்கள் காலத்தை விட்டும் வித்தியாசப்பட்ட சூழலொன்றை எதிர்கொள்ளும் நாம் புதிய இஜ்திஹாதின் பால் தேவையுடையவர்களாக மாறுவோம் என்பது நிதர்சனமானது.

காலத்துக்குக் காலம் தோன்றும் பிரச்சினைகள் புதிதானவை; முன்னைய காலங்களை விட்டும் வேறுபட்டவை; புதிய தீர்வுகளை வேண்டி நிற்பவை என்பது இஜ்திஹாதின் தேவையை இன்னும் ஊன்றிச் சொல்கிறது. ஷெய்க் கர்ளாவி அவர்களுடைய வார்த்தைகளில் சொல்வதானால் கைத்தொழில் புரட்சியாலும் நவீன தொழிநுட்பத்தின் அபரிமித வளர்ச்சியாலும் தொடர்பு சாதனங்களின் தலைகீழ் மாற்றத்தாலும் அக்காலத்தோடு கற்பனைபண்ணிக் கூடப் பார்க்க முடியாத இக்காலத்தில் இஜ்திஹாத் என்பது முன்னைய இமாம்களின் காலத்தை விடவும் மிக அவசியமானது எனலாம். இதற்கு மிகச் சிறியதொரு உதாரணமாகக் குறுகிய கால மற்றும் இட பரிமாணங்களுக்கே தன் ஃபத்வாக்களை இமாம் ஷாபிஈ அவர்கள் மாற்றியமையைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

 

நாம் இன்று வேண்டி நிற்கும் இஜ்திஹாத்

இக்காலம் நம்மிடம் வேண்டிநிற்கும் இஜ்திஹாத் நம்மை இஸ்லாம் எனும் மார்க்கத்தைக் கொண்டு இவ்வுலகில் வாழ்வதனை நோக்கிய இஜ்திஹாதாகும். இது நம் முஸ்லிம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

அவ்வகையில் நாம் வேண்டும் இஜ்திஹாத் இரு வகை என்கிறார் இமாம் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள்:

முதலாவது வகை: ஏற்கனவே இமாம்களால் மத்ஹப்களுக்குட்பட்டும் வெளியாலும் செய்யப்பட்ட இஜ்திஹாத்களுக்கிடையில் ராஜிஹான கருத்தைப் பெறுவதற்கான இஜ்திஹாதாகும்.

இரண்டாவது வகை: புதிதாகத் தோற்றம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் இதற்கு முன்னர் தோன்றிய இமாம்கள் பேசாத பிரச்சினைகள் பற்றி ஆரம்பத்திலிருந்து இஜ்திஹாத் செய்வதனைக் குறிக்கும். அவ்வகையில் இப்பகுதியினுள் தீர்வு காணப்படாத அல்லது புதிய கோணத்தில் தீர்வு சொல்லப்பட வேண்டிய பழைய பிரச்சினைகளும் கூட உள்ளடங்கியிருக்கும்.

 

இக்காலத்தில் இஜ்திஹாதை வேண்டி நிற்கும் இரு புதிய துறைகள்:

இமாம் கர்ளாவி அவர்கள் இன்றைய கால இஜ்திஹாதைப் புதிதாக வேண்டி நிற்கும் இரு துறைகளாக பொருளாதாரம் மற்றும் வைத்தியத் துறையை அடையாளப்படுத்துகிறார். இவ்விரண்டு துறைகளும் இன்று கணத்துக்குக் கணம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே இருக்கும் துறைகளாகும். எனவே இத்துறைகளுக்கான இஸ்லாமியத் தீர்வுகளையும் இஸ்லாமிய மாற்றீடுகளையும் வழங்குவதற்கு இஜ்திஹாதின் தேவை துரிதமாக இருக்கிறது.

குலுக்கல் சீட்டு வியாபார முறைகள், உண்டியல் வியாபார முறைகள், கழிவு விற்பனை முறைகள் என சந்தேகங்களும் மறைமுகமாக ஹராம்கள் மலிந்தும் காணப்படும் புதிய பொருளாதார முறைமைகள் இஜ்திஹாதுக்கான பலமான அறைகூவலை முன்வைக்கிறது. இவற்றுள் ஹராம்-ஹலால் வேறுபாட்டைத் தெளிவாக முன்வைப்பதோடு உரிய மாற்றீடுகளையும் முன்வைக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இல்லாத பட்சத்தில் இஸ்லாமிய ஃபிக்ஹுத் துறையும் வலுவிழந்து போய்விடும்.

இவ்வாறுதான் அறிவியலின் துரித வளர்ச்சியால் வெகு முன்னேற்றம் கண்டிருக்கும் வைத்தியத் துறையும் இஜ்திஹாதின் பலமான தேவையை உணர்த்தும் பகுதியாகும். குடும்பக் கட்டுப்பாடு, உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் எனத் தினம் தினம் பிறக்கும் கேள்விகள் இன்று எம் அறிஞர்களைத் திணறடித்து புதிய அளவுகோல்களில் இஜ்திஹாத் நோக்கி நிர்ப்பந்திக்கிறது.

 

இக்கால இஜ்திஹாதின் வடிவங்கள்:

மூன்று வகைகளில் இஜ்திஹாத் இக்காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவது: மத்ஹப்களுக்குள்ளால் கருத்துக்களை ராஜிஹ் செய்வதில் தொடங்கி பின்னர் மத்ஹப்களுக்கிடையிலும் அதற்கு வெளியாலும் ஒப்பீடு செய்வது வரை சென்ற இஜ்திஹாத் ஆகும். இதன் ஆரம்பத் வடிவமாக இந்திய உபகண்டத்தில் தோன்றிய ‘மஜல்லத்துல் அஹ்காம் அல்அத்லிய்யா’ காணப்படுகின்றது.

இரண்டாவது: ஃபத்வாக்கள் வடிவில் இஜ்திஹாத் தோற்றம் பெற்றுள்ளமையை இரண்டாவது வகையாகக் குறிப்பிடலாம். அது இன்று பல்வேறு வடிவங்கள் பெற்றிருக்கின்றது. உத்தியோகபூர்வமாக அரசுகள், அறிஞர் குலாம்களின் ஃபத்வாக்கள் முதற்கொண்டு குறித்த துறைசார் நிறுவனங்கள், அமைப்புக்கள் தம்மோடு தொடர்பான ஃபத்வாக்களைத் தொகுத்து வெளியிடுவது வரைக்கும் விசாலித்திருக்கின்றது. இவற்றுக்கு உதாரணமாக சவூதியின் லஜ்னதுத் தாயிமா லில் ஃபதாவா, அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் லஜ்னதுல் ஃபத்வா முதற்கொண்டு சஞ்சிகைகளின் ஃபத்வாத் தொகுப்புக்கள் வரைக்கும் ஏராளம் கூறலாம்.

மூன்றாவது: ஆய்வுகள் மற்றும் கற்கைகளின் போதான இஜ்திஹாத் ஆகும். குறித்த துறைகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கொண்டுதரும் புதிதான சிறப்பான முடிவுகள் இப்பகுதிக்குள் உள்ளடங்கும். இவற்றின் மூலமே மிக உறுதியான, மிக மேலான, உண்மைக்கு மிக நெருக்கமான முடிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இஜ்திஹாத் தொடர்பான நவீன கருத்துக்கள் சில

இஜ்திஹாத் சிந்தனைப் பின்னணியில் மார்க்கம் சிந்தனா ரீதியாகப் புத்துயிர்ப்புச் செய்யபடவேண்டும் என்ற கருத்தை விளக்குகையில் இமாம் அல்கர்ளாவியின் கருத்துக்கள் முக்கியம் பெறுகின்றது:

“இஜ்திஹாத் உயிர்ப்பிக்கப்படல் வேண்டும். இஜ்திஹாத் இல்லாது ஷரீஆ உயிர்வாழ முடியாது. இஜ்திஹாத் ஆரம்ப கால அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்க முடியும் அல்லது ஆரம்ப காலம் அறிந்திராத நவீன கால இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். அதற்கும் அப்பால் சிறு கிளைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும் அல்லது பிரதான அடிப்படைப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். தனிநபர் அல்லது குழு அடிப்படையிலான இஜ்திஹாதாக அது இருக்கவும் முடியும். இஜ்திஹாதுக்கான அறிவு மற்றும் பண்பாடு ரீதியான நிபந்தனைகளைப் பெற்றவர்கள் மாத்திரமே இப்பகுதியில் தலையிடவேண்டும். பொருத்தமான இடங்களில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்படல் என்பதன் மூலம் கருதப்படுவது முழு உம்மத்தையும் ஒன்றிணைக்கும் நம்பிக்கை, சிந்தனை, உணர்வு, செயற்பட்டுப் பகுதிகளில் அல்லாமல் பல கருத்துக்களுக்கு இடம்பாடான ஏனைய பகுதிகளில் இஜ்திஹாத் செய்வதாகும். இஜ்திஹாத் செய்ய முடியாத திட்டவட்டமான பரப்புக்கள் (கத்இய்யத்) மிகச் சொற்பமானவை. எனினும் முக்கியமானவை. ஏனெனில் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றமுறா நிலையான பகுதிகள் அவை. நடுநிலைச் சிந்தனை ஒழுங்குபடுத்தப்பட்ட புனர்நிர்மாணத்தை நோக்கி அழைக்கிறது. நவீன காலத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சமநேரத்தில் தெளிவான‌ இலக்குகளையும் வழிமுறைகளையும் கொண்ட இஜ்திஹாதை நோக்கி அது அழைக்கின்றது. இஜ்திஹாதின் வாயிலை மூடி அனைத்து அறிஞர்களையும் கண்மூடி பின்பற்றும் நிலைக்கு தூண்டும் முறைமையை நடுநிலை சிந்தனை மறுக்கிறது. மறுபுறம் எவ்வித நிபந்தனையோ வரையறையோ இன்றி வருகின்றவர் போகின்றவர்களுக்கெல்லாம் இஜ்திஹாதின் வாயிலை திறந்து கொடுக்கும் நிலைப்பாட்டையும் அது மறுக்கிறது.”

நவீன உலக ஒழுங்கு எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூக பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமாயின் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை முறைமையில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் தாரிக் ரமழானின் கருத்துக்களும் இவ்விடம் மனங்கொள்ளத் தக்கவை. அவர் இரண்டு முக்கிய சிந்தனைகளை நவீன இஜ்திஹாத் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்:

  1. இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை மூலாதாரங்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படல். அவ்வகையில் குர்ஆன் , சுன்னா , இஜ்மா என தொடரும் மூலாதாரங்களில் ‘வாழும் சூழல்’ (Context) அல்லது உலகியற் கலைகள் முக்கிய இடத்தை பெற வேண்டும். உலகியற் கலைகள் என்பது இயற்கை விஞ்ஞானம் (Experimental Science)  மற்றும் சமூக விஞ்ஞானம் (Social Science)  ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்குகிறது. இயற்கை விஞ்ஞானத்தில் Chemistry, Physics, Biology, Neuroscience, Medicine  போன்ற பகுதிகள் உள்ளடங்கும். சமூக விஞ்ஞானத்தில் Sociology, Political science, Economy போன்ற பகுதிகள் அடங்குகின்றன.

 

  1. சமூக விஞ்ஞானக் கலைகளில் துறைபோனவர்கள் (Scholars of Context)  மார்க்க அறிஞர்களின் (Scholars of Text)  தரத்திற்கு சமமானவர்களாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தையும் தாரிக் ரமழான் விரிவாகப் பேசுகிறார். சட்ட அதிகாரம் இரு சாராருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்விரு வகையினரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதேநவீன காலம் எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூகவியல் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுமுன்வைக்கப்பட முடியும். குறிப்பாக ஷரீஆவின் இறுதி இலக்குகள் நோக்கி வாழ்வமைப்பை நகர்த்திச் செல்வதற்கு இவ்வகையான கருத்துப் பறிமாற்றம் அவசியம்.

 

இஜ்திஹாதின் இன்மையானது சிந்தனைத் தேக்கம் மற்றும் மனித இயல்பினைச் சிதைத்துவிடும் இயல்புடையது. அது மானிட  சிறப்பம்சமாகக் கருதப்படும் அறிவாற்றலைக் கொள்ளையிடுகிறது. அல்லாஹ்வுடைய ஆதாரங்களை விட்டும் மனிதனைத் தடுத்துவிடக் கூடியது. இன்னும் நவீன காலத்தில் இஸ்லாமிய உலகை நோக்கி இஜ்திஹாத் புத்துயிர்ப்பு சிந்தனையை  உரத்துப் பேசியோர்/பேசுவோர் ஏராளம் இருக்கின்றனர். அனைவரும் இஸ்லாமிய சிந்தனையை இக்கால மயப்படுத்தி இஸ்லாமை உயிரோட்டத்துடன் வழங்க உழைத்துக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களாவர்.

 

உசாத்துணைகள்:

  1. அல்இஜ்திஹாத் ஃபி அஷ்ஷரீஆ அல்இஸ்லாமிய்யா
  • கலாநிதி அல்லாமா யூஸுப் அல்கர்ளாவி
  1. அல்இஜ்திஹாத் அல்மஸ்லஹி
  • கலாநிதி அஹ்மத் அர்ரய்ஸூனி
  1. com
  2. org
  3. com
  4. hishamrazick blog

தவறுக்காக வருந்துதல்!!!

zundapp__zndapp_ks_50_wc_1978_1_lgw
1976ஆம் ஆண்டுகளில் நான் ஐக்கிய இராச்சியத்தின் பேர்முஸ் நகரில் கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது. நான் கல்லூரிக்குச் செல்வதற்காக அதனைப் பயன்படுத்தி வந்தேன்.

 

ஒரு நாள் நான் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை உரிய இடத்தில் காணவில்லை. உடனடியாக நான் பொலிஸில் முறைப்பாடு செய்தேன். ஒரு சில மாதங்களின் பின்னர் பொலிஸார், தாம் அதனைக் கண்டுபிடித்துவிட்டதாக எனக்கு அறிவித்தனர். எனினும், அது மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது.

 

இச்சம்பவம் இடம்பெற்று ஏறக்குறைய 32 வருடங்கள் கழிந்தன. நானும் அதனை முற்றாக மறந்துவிட்டேன். அச்சந்தர்ப்பத்தில் எனது நண்பர் ஒருவர் நாம் படிக்கின்ற காலப்பகுதியில், எமக்கு அயலில் வசித்த ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதாக அறிவித்தார். அத்தோடு அவரை நோய் விசாரிக்கச் செல்வதற்கும் எனக்கு அழைப்பு விடுத்தார்.

 

எனவே, நாம் இருவரும் அவரைப் பார்க்கச் சென்றோம். அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இருந்தது. அவர் எம்மை வரவேற்ற பின்பு கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம். அவர், என்னை அவரிடம் நெருங்கி வருமாறு சைகை செய்தார். பின்னர், எனக்கு ‘ஹலாலாக்கி விடுங்கள் நண்பரே!’ என்றார்.

 

‘யாருக்கு? எதனை?’ என நான் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் பிரித்தானியாவில் படித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன மோட்டார் சைக்கிளை ஞாபகமிருக்கிறதா?’ என்றார். நான் உடனே, ‘ஆம்’ என்றேன். அப்போது அவர், ‘அதனைத் திருடியது நான்தான். அதனை எனக்கு ஹலாலாக்கி, என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.’ என்றார். உடனே நான், ‘அது உங்களுக்கு ஹலாலாகிவிட்டது’ என்றேன்.

 

அங்கிருந்து திரும்பிய பின், 30 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட தனது பாவம் ஒன்றினை என் நண்பன் நினைவில் வைத்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன். அதனை அவரது நல்ல முடிவுக்கான சுபசோபனமாகவே நான் காண்கிறேன். அச்சந்திப்பிற்கு சிறியதொரு காலப்பகுதியின் பின் அவர் மரணித்து விட்டார்.

 

இவ்வாழ்வினை எத்தனை பேர் தாம் செய்த பாவத்தை ஓரிரு வருடங்களல்ல, ஒரு மாதமாவது நினைவில் வைத்திருக்கிறார்கள். சந்தேகமில்லை, அத்தகையோர் இருக்கிறார்கள். என்றாலும், அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. நாமும் அத்தகையவர்களாக இருக்க எதிர்பார்ப்பு வைப்போம்.

 

மூலம்: கலாநிதி அப்துல் ஹமீத் பிலாலி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

மீள்பார்வை -247(01 ஜூன் 2012)

திட்டமிடலே வெற்றியின் தொடக்கம்

11_15

இஸ்லாமின் எதிரிகள் இஸ்லாமைக் கவிழ்க்கும் நோக்கில் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் காலப் பகுதியாக நாம் சமகாலத்தை அடையாளப்படுத்தலாம். அதற்காக அவர்கள் முழுமையாகத் தம் மதிநுட்பங்களைக் கூர்தீட்டித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இஸ்லாமிய உம்மத் குறைபாடு கொண்டிருக்கும் பகுதியும் இதுவாகவே இருந்துகொண்டிருக்கிறது.

உண்மையில் தூயவன் அல்லாஹ் இஸ்லாமிற்குரித்தான கடமைகளையும் நற்செயல்களையும் ஆக்கித் தந்துள்ளான். ஈமானுக்கென்றே நல்விளைவுகளையும் ஆக்கிவைத்துள்ளான். அவ்விளைவுகள் தான் இவ்வுலகில் மனிதன் மேற்கொள்ளும் நற்செயல்களாகும். அவையே மறுமையில் மனிதனுக்கான கட்டுச்சாதனமுமாகும். எனவே மரணத்துடன் ஆரம்பித்து வெற்றியாளர்களுக்கு சுவனத்திலோ அல்லது பாவிகளுக்கு நரகத்திலோ முடியப் போகின்ற ஒரு நீண்ட பாதைக்காகவே இக்கட்டுச்சாதனத்தின் மீது அவன் எந்தளவுக்குத் தேவையானவனாக இருக்கிறான்??? அவர்கள் இவ்வுலகில் எந்தத் தரத்துடனோ அல்லது அந்தஸ்துடனோ இருந்தபோதிலும் சரியே… அல்லது அவர்கள் மனோ இச்சைகளுடன் புரண்டு கொண்டிருந்தாலும் சரியே… இந்த இச்சைகள் எவ்வளவு இழிவானவை? சுவனத்தின் அருட்கொடைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு பலவீனமானவை?

நற்செயல்கள் என்பவை…
நற்செயல்கள் என்பவை இஸ்லாமியப் பார்வையிலே தொழுகைகளுடனோ ஸகாத்துகளுடனோ நோன்புகளுடனோ ஹஜ்ஜுகளுடனோ சுருங்கி விடுபவை அல்ல. அவை இஸ்லாமின் அடிப்படைக் கடமைகள் தான்; இவற்றோடு இணைத்து அல்லாஹ் ஏவியிருக்கும் எல்லாவற்றையுமே பற்றுறுதியுடன் பின்பற்றுவதும் அவன் தடுத்திருப்பவற்றை முற்றாகத் தவிர்ந்துகொள்வதும் நற்செயல்கள் தான்… நாம் திருக் குர்ஆனை ஓதும்போது பல தடவைகளில் மனித தொடர்புகள் குறித்த விடயங்களில் ஏவல்களையும் விலக்கல்களையும் காணக்கூடியதாக இருக்கும். அவ்வாறே பொருளாதார-சமூகத் தொடர்புகள் குறித்தும் காண முடியுமாயிருக்கும். அவ்வகையில் ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுடன் நடந்துகொள்ள வேண்டிய முறைமைகள், முஸ்லிமல்லாத சகோதரருடன் நடந்துகொள்ள வேண்டிய முறைமைகள், அத்தோடு அவன் தன் வீட்டாரோடு நடந்து கொள்ளவேண்டிய முறைமைகள் மட்டுமல்லாது தான் வாழும் உலகில் தன்னைச் சூழவிருப்போருடன் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் அனைத்துக்கும் வழிகாட்டிவிடப்பட்டுள்ளன.

அறிஞர்கள் கூறுவார்கள் ‘நாம் திருக் குர்ஆனை ஓதும் போது அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புகளைச் சீராக்குவது குறித்த விடயங்களைத் விடவும் மனிதர்களுக்கு மத்தியிலான தொடர்புகளைச் சீரமைப்பது பற்றிய ஏவல்கள், விலக்கல்களை அதிகமாகக் கண்டுகொள்ள முடியும். இதற்குமப்பால் இவ்வகையான தொடர்புகளிலே வந்திருக்கும் ஏவல்கள், விலக்கல்கள் இபாத்த்துகளோடும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளன என்பதையும் அவதானிக்க முடியும். உதாரணத்திற்கு மகத்துவமிக்க இபாதத்தான தொழுகை இவ்வாறு இணைக்கப்படுகிறது: “நிச்சயமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்கவற்றை விட்டும் தடுக்கிறது.” இவ்வாறே மிக முக்கிய இபாதத்தாகிய ஸகாத்தும் ஆத்மாக்களைப் பரிசுத்தப்படுத்தி ஆசைகள், மோகங்கள், பொறாமைகளை விட்டும் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதனை இணைத்துக் கூறுகிறது: “நபியே! நீர் அவர்களின் செல்வங்களிலிருந்து ஸதகாக்களைப் பெறுவீராக; அது அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தமாக்கிவிடும்.” இவ்வாறுதான் அனைத்து இபாதத்துகளும் காணப்படுகின்றன.

உண்மையிலேயே மனிதனொருவன் எதனுடன் சம்பந்தப்பட்ட விடயமாயினும் சரி தனது எண்ணத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்று தூய்மைப்படுத்திக் கொண்டு செய்வானாயின் அது இபாதத்துதான். அவ்விடயங்கள் நமக்காகவோ அல்லது நாம் பிறருக்காகவோ செய்த போதிலும் அல்லாஹ்வின் ஏவல்-விலக்கல்களைப் பேணி அவனுக்குக் கட்டுப்படுவதை உத்தரவாதப்படுத்தினோமென்றால் நாம் இபாதத்துக்களாக அவற்றை அடைந்துகொள்வோம். அப்போது நவீன நாகரிகங்கள் எமக்குச் சொல்லித் தந்திருக்கும் உலக விவகாரங்களோ அல்லது துறவிகள் சொல்லித் தந்திருப்பது போன்று மறுமை விவகாரங்களோ எதுவாயினும் நாம் இரண்டுக்கும் இடையில் அற்புதமான இணைப்பைக் காண்போம். இஸ்லாமின் பார்வையில் அனைத்துமே நற்செயல்களுக்குள் உள்ளடங்கியவை தான்.

இப்பிணைப்பை நாம் ஏராளம் அல்குர்ஆனிய வசன்ங்களில் கண்டுகொள்ள முடியும். அவ்வகையில் சூரத்துல் ஜும்ஆவை நோக்கினால் உலக விடயங்களிலும் மறுமை விடயங்களிலும் அற்புதமான இணைப்பைக் காண முடியும்: “நீங்கள் (ஜும்ஆ) தொழுகைக்காக அழைக்கப்பட்டால்; அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகச் சென்றுவிடுங்கள்.” என்று சொல்லிவிட்டு, “வியாபாரத்தை விட்டுவிடுங்கள்” என ஏவுகிறது. பின்பு நேரடியாகவே “தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள்.” எனச் சொல்கிறது. இரண்டு வெவ்வேறுபட்ட விவகாரங்கள் இவை. முதலில் கூறிய இரண்டும் வரையறுக்கப்பட்ட நேரத்துக்குட்பட்டவை. அது ஜும்ஆத் தொழுகையுடைய நேரத்தோடு சம்பந்தப்பட்டவை. இவ்வாறிருக்க அதற்கடுத்துக் கூறப்பட்ட இரு விடயங்களும் மிகப் பெரும் நேரத்தைக் கொண்டவை; அதாவது தொழுகை முடிந்த பிற்பாடு உள்ள நேரம் அனைத்தும் அடங்கும். எனவே உடனடியாகவே பூமியில் பரவிச் சென்று எமது தொழில்துறவுகளில் ஈடுபட்டு எமது வாழ்க்கைக்கான உழைப்புக்களை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது. அதுமட்டுமல்லாது ‘அல்லாஹ்வுடைய அருள்களிலிருந்து தேடிக் கொள்ளுங்கள்’ என்றும் கூறப்படுகிறது. அவ்வகையில் எந்தத் துறையில் ஈடுபடுவதும் நற்கருமங்களாகவே அமையும். எனவே குறித்த நற்கருமங்கள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரக்கூடியதாக அமையவேண்டும். ஏனெனில் தஃப்ஸீர் ஆசிரியர்கள் பலரும் அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளும் நேரத்தை விளக்கும் போது நம் செயல்களால் விளையும் சாதக விளைவுகள், லாபங்கள் என்பவற்றையே குறிப்பிடுகிறார்கள்.

ஆனாலும் முஸ்லிம்களாகிய நாம் இவற்றைக் குறித்துப் பிரக்ஞயற்றவர்களாக இருக்கிறோம். எனவே நாம் குறித்த இலாபங்களை அடைவதற்கான திட்டமிடல்களை வேண்டியிருக்கிறோம். எனவே நாம் ஒரு வேலையை ஆரம்பிக்கையில் அல்லது உற்பத்தி செய்கையில் அல்லது பயிரிடலாயினும் சரி, அது அல்லாஹ் எமக்கு அருளியுள்ளவற்றைத் தேடிக் கொள்வதாக இருக்க வேண்டும். அது எமக்கோ அல்லது எம் சார்த ஏனையோருக்கோ இலாபங்களையும் சாதக விளைவுகளையும் தருவதாக இருக்க வேண்டும்.

கலாநிதி அலி முஹியுத்தீன் கரதாகி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

இஸ்லாமின் சாட்சியாளர்கள் எங்கே!

603913_504417309594902_1978525322_n

அல்லாஹ்வின் மார்க்கத்தை விசுவாசிக்கும் ஒரு முஸ்லிம் இம்மார்க்கத்திற்கான சாட்சியாளனாக இருக்கக் கோரப்படுகிறான். அது இம்மார்க்கத்தின் இருப்புக்கான உத்தரவாதத்தை நிறைவேற்றும் சாட்சியம்; அது இம்மார்க்கம் மனித குலத்திற்கு சுமந்து தரும் நலன்களைப் பிரதிபலிக்கும் சாட்சியம்… எனவே அவன் தன்னிலும் தன் பண்பாடுகளிலும் தனது நடத்தைகளிலும் தனது வாழ்வு முழுவதிலுமே இம்மார்க்கத்திற்கான‌ உயிரோட்டமான தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வரை இச்சாட்சியத்தை நிறைவேற்றியவனாக மாட்டான். அது மானிடர்கள் எல்லோரும் அவதானிக்கின்ற சாட்சியம்; அதிலே அவர்கள் ஓர் உயர்ந்த முன்மாதிரியைக் காண்பார்கள். அந்த சாட்சியமானது அதன் இருப்புக் குறித்த‌ உண்மையான பெறுமானத்தை வழங்கக் கூடியது… அந்த சாட்சியமானது இப்பூமியிலே உள்ள அனைத்து அரசுகள், அனைத்து சட்டங்கள், அனைத்துக் கோட்பாடுகளையும் விட இம்மார்க்கத்தின் நலவுகளையும் சிறப்புக்களையும் பிரதிபலிக்கும் சாட்சியமாகும்.

மேலும், இம்மார்க்கத்தை அவன் தன் வாழ்க்கைக்கான அளவுகோலாக; அவனது சமூகத்துக்கான வாழ்வொழுங்காக; தனக்கானதும் தன் சமூகத்துக்கானதுமான சட்டவாக்கமாக ஆக்கும் வரையில் இச்சாட்சியத்தை நிறைவேற்றியவனாக மாட்டான். எனவே அவன், தான் சார்ந்த சமூகத்தின் அனைத்து விவகாரங்களையும் இந்த அசாதாரண ஆற்றல் கொண்ட‌ தெய்வீக வாழ்வொழுங்கின்படி அமைத்து விடுவான்…

அவனது முழுப் போராட்டமும் இத்தகையதொரு சமூக ஒழுங்கை உருவாக்குவதில் இந்த தெய்வீக வழிகாட்டலை உத்தரவாதப்படுத்துவதில் தான் அமையும். அதன் விளைவாக; மனித குலத்தின் வாழ்வொழுங்கிலே அல்லாஹ்வின் வழிகாட்டல்களை உத்தரவாதம் தராத ஏனைய சமூகங்களின் நிழலில் வாழ்வதனை விடுத்து, இப்பாதையிலே மரணிப்பதனையே அடையப் பெறுவான். இம்மார்க்கத்துக்கான அவனுடைய சாட்சியமானது அதற்காக‌ வாழ்வதனை விட சிறந்ததாகும்.

அது உயிர்கள் அனைத்தும் விரும்பும் உயர் கண்ணியமாகும்…!!! அவ்வகையில் அவன் “ஷஹீத்” எனும் பதவியை அடைவான்.

இது தான் “ஹவாரிய்யூன்கள்” அல்லாஹ்விடம் தம்மை இம்மார்க்கத்தின் சாட்சியாளர்களாக ஆக்கச் சொன்னதன் தாத்பரியமாகும்… அல்லது இந்த மார்க்கத்தின் உயிரோட்டமான தோற்றங்களாக ஆக்கி அவர்களைப் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திததன்; அவர்களது வாழ்வில் இத்தெய்வீக வழிகாட்டல்களை உத்தரவாதம் செய்வதில் போராடுவதற்காக வேண்டியதன்; இந்த வழிகாட்டலை பிரதிபலிக்கும் சமூகமொன்றை உருவாக்க எத்தனித்ததன் தாத்பரியமாகும். அவர்கள் தம் வாழ்விலே அதன் பெறுமதியை நிறைவேற்றியிருப்பின் இம்மார்க்கத்தின் சாட்சியாளர்களாக ஆகியிருப்பர்.

இது, யாரெல்லாம் இஸ்லாமைத் தம்மளவில் உரிமை கோருகின்றனரோ அவர்கள் அனைவருக்கும் பொருந்தும் பிரார்த்திப்பாகும்… இது தான் ஹவாரியூன்கள் விளங்கியிருந்தது போன்று, பரிபூரணமான முஸ்லிம்களிடத்தில் உள்ளது போன்ற இஸ்லாம் மார்க்கமாகும்! யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கான இந்த சாட்சியத்தை மறைத்து வைக்கின்றாரோ அது அவரது உள்ளம் செய்யும் பாவமாகும். ஒருவர் இஸ்லாமை ஏற்றுவிட்டு  தன்பாட்டில் இருந்துவிடுகிறார். என்றாலும் அவர் பொதுத் தளத்தில் அதனை நிறைவேற்றாது விடுகிறார். வாழ்விலே சுபீட்சத்திற்காக அல்லாஹ்வின் திட்டமிடல்களை அமுல்படுத்த முயற்சிப்பதும் இல்லை. மார்க்கத்தை உயிரோட்டமாக்க முயற்சிப்பதும் இல்லை. அவர்கள் இம்மார்க்கத்தின் சாட்சியத்தைக் குறுக்கிக்கொண்டு விடுகின்றனர். அல்லது தமது சாட்சியத்தை இம்மார்க்கத்துக்கு எதிரானதாகவே ஆக்கி விடுகின்றனர். அது இம்மார்க்கத்தை விட்டும் ஏனையோரை விரட்டுகின்ற சாட்சியம். அவர்கள் இம்மார்ர்க்கத்துக்காக‌ அல்ல அதற்கு எதிராகவே சாட்சிபகர்கிறார்கள்! யாரெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மனிதர்களை விரண்டோடச் செய்கின்றார்களோ அவர்களுக்கு நாசமுண்டாகட்டும்.

இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் -5

good-deeds-386226

 

>ஜகாத் வறுமையை ஒழித்து இழிவைப் போக்குகிறது:

ஹன்பலி மத்ஹப் கூறுகின்றது: ஃபகீர் எனும் ஏழையானவன் தனக்குப் போதுமானதில் பாதியை விடக் குறைவாக இருப்பவனாவான். மிஸ்கீன் எனும் ஏழையானவன் தனக்குப் போதுமானதில் பாதியை விடக் கூடுதலான அளவு பெற்றிருப்பவன் ஆவான். ஆனாலும் அவனுக்குப் போதுமான அளவை சொந்தமாக ஆக்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். (பார்க்க: மாவர்தி, அல்இன்ஸாப், 3/196)

அதாவது அவனுக்குப் போதுமான அளவானது ஆயிரம் ரியால்கள் என வைத்துக் கொள்வோமாயின் அவனுக்கு எண்ணூறு ரியால்கள் மட்டுமே வருமானமாகக் கிடைக்கின்றது. அவனது தேவையைப் பூர்த்தியாக்க ஆயிரத்தை அடையவேண்டும். அவ்வாறுதான் பத்தாயிரம் ரியால்கள் தேவைப்படுபவனுக்கு எட்டாயிரம் ரியால்களே அவனும் இரண்டாயிரம் ரியால்கள் போதாமையில் இருக்கிறான். இவ்வாறுதான் ஒவ்வொருவருக்குமான போதுமை என்பது வித்தியாசப்பட்டது.

ஆனால், இமாம் ஷாபிஈ கூறுகிறார்: ஓர் ஏழைக்கு ஒரு வருடத்துக்கு மட்டும் தேவையான அளவு கொடுக்ககப்படக் கூடாது. மாறாக அவனது வாழ்வு முழுமைக்கும் போதுமான, அது போன்ற அளவுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவன் தன் வாழ்வு முழுவதற்கும் வேண்டுமான அளவுக்கு, அதன் பின்பு ஜகாத்துக்கு இன்னொரு தடவை தேவைப்படாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். (பார்க்க: நவவி, அல்மஜ்மூஃ, 6/194)

இங்கு அவரவர்க்கு உள்ளதில் வழமையான அளவொன்றை வழங்குவதன் மூலம் இஸ்லாம் வறுமை, ஏழ்மையை ஜகாத் மூலம் போக்குகிறது. இதனை எவ்வாறு சாத்தியமாக்குவது? ஒருவர் தொழிலகம் ஒன்றுக்கு உரிமையாளர் எனின், அவருக்குத் தேவையானதை நாம் ஏற்பாடு செய்யவேண்டும். தேவையெனின் கடையொன்று அல்லது தச்சு வேலை செய்பவராயின் தச்சு உபகரணங்கள், வியாபாரியாக இருந்தால் வியாபாரத்துக்குத் தேவையானதை ஏற்பாடு செய்வோம். மரக்கறி வியாபாரிக்கு சில நூறு ரூபாய்கள் போதுமாகும். இரத்தினக்கல் வியாபாரிக்கு அதுவே ஆயிரக்கணக்கில் தேவைப்படும். இரத்தினக்கல் வியாபாரி நட்டத்தை எதிர்கொண்டால் நாம் உதவ முடியாத அளவில் அபாயம் காணப்படும். (பார்க்க: நவவி, அல்மஜ்மூஃ, 6/194) இதன் கருத்து ஜகாத்தானது மனிதனை அவனது இழிவுகளை விட்டும் எழுப்பிவிட முயற்சிக்கிறது.

இங்கு ஜகாத்திலே ஒரு பங்கு இருக்கிறது; அது -ஃஙாரிமீன் الغارمين- எனும் மீளாக் கடனில் இருப்போருக்கானதாகும். இப்பங்கினைப் பற்றி சட்டத்துறை, மற்றும் குர்ஆனிய வியாக்கியான அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். வீடு பற்றியெரிந்தோர், ஆபத்துக்களில் சிக்கியோர், பணத்தைத் தொலைத்து விட்டவர்கள் அனைவரும் ஃஙாரிமீன் எனும் இதற்குள் உள்ளடங்குவர்.

 

 

>ஜகாத், காப்புறுதிக்கு இடையிலான வேறுபாடு:

காப்புறுதியின் பணியையும் ஜகாத் செய்துவந்திருக்கின்றது. அதாவது நமது காலத்தில் காப்புறுதி எனப் பெயர் சூட்டப்பட்ட ஒன்று மனிதர்களுக்குத் தெரியவர முன்பதாகவே ஜகாத் அப்பணியைச் செய்துள்ளது. ஆனால் ஜகாத் மேற்கொள்ளும் பணியானது காப்புறுதி மூலம் செய்யப்படும் பணியை விடவும் மகத்தானது, விசாலமானது, ஆழமானது.

காப்புறுதி என்பது அங்கத்துவம் பெற்று பணம் செலுத்துவோருக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகின்றது. காப்புறுதிப் பணம் செலுத்தி வராதோருக்கு அதில் எப்பங்கும் இருக்க மாட்டாது. ஆனால் ஜகாத்தானது முன்பு ஜகாத் கொடுத்துப் பின்னர் ஏழ்மை நிலையடைந்தவர்களுக்கும் வழங்கப்படும். ஒரு போதும் முன்பு வழங்காதோருக்கும் கொடுக்கப்படும். ஜகாத் கடமையாகாமல் ஜகாத் பெறத் தகுதியற்றவராக இருந்து கொடுக்கப்படாமல் இருந்தோருக்கும் வழங்கப்படும்.

காப்புறுதியைப் பொறுத்தமட்டில் தான் செலுத்திவரும் அளவுக்கேற்பவே ஒரு நபர் பெற்றுவருவார். பெரிய தொகையை செலுத்தி வந்தால் பெருந்தொகையைப் பெறுவார். ஒருவருக்கு தேவை குறைவாக இருந்தும் பெரிய தொகைக்குக் காப்புறுதி செய்துவிட்ட ஒருவர் பெரிதாகப் பெறுவார். அதே போல் பெரியளவு தேவையுள்ள ஒருவருக்கு குறைவான அளவே பங்கும் கிடைக்கலாம். அல்லது காப்புறுதி செய்யாதோருக்கு பங்கு எதுவும் இல்லாதிருக்கும்.

இங்கு, இஸ்லாம் சொல்லும் சமுதாய பாதுகாப்புத் திட்டத்திலே இவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அது அனைவரது பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக் கூடியது. இஸ்லாமிய பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையே அது அனைவரது பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக் கூடியது என்பதாகும். அது அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கும். மனிதத் தேவைகளை நிறைவு செய்யும். அன்றாடத் தேவைகளை, பாதையின் இடைநடுவில் பணமின்றித் தத்தளிக்கும் வழிப்போக்கர்களுக்குரியது போன்று அவ்வப்போதான தேவைகளை என அனைத்தையும் நிறைவு செய்யும்.

வழிப்போக்கனுக்குரிய பங்கையும் ஜகாத்திலே இஸ்லாம் பிரித்துவைத்திருக்கிறது. ஃஙனீமத்திலும் அவனுக்குப் பங்குள்ளது. இவையனைத்தும் இந்த ஒரு மனிதனுக்காகத்தான். இத்தனைக்கும் சிலவேளை தனது ஊரிலே செல்வந்தனாகக் கூட அவன் இருக்கலாம். என்றாலும் அவன் பணமின்றி நிர்க்கதியாயிருப்பவன். அதாவது முஸ்லிம்களிலே வீடற்றவர்கள், அகதிகள் போன்று எனலாம். அவர்கள் தமதூரிலே பணக்காரர்கள். எனினும் நெருக்கடிகள், உள்நாட்டு, வெளிநாட்டு யுத்தங்கள் அவர்களை நிர்க்கதியாக்கி விட்டிருக்கும். தம் செல்வங்களையும் சொத்துக்களையும் அவர்கள் கைவிட்டிருப்பார்கள். இவர்களனைவரும் வழிப்போக்கருக்குரிய இப்பிரிவுக்குள் வருவார்கள். இஸ்லாத்தின் சமுதாய பாதுகாப்புத் திட்டத்தில் ஜகாத்தானது இவர்கள் அனைவருக்குமான மகத்தான திட்டமாக அமையும்.

 

 

ஆறாவது: நாட்டின் வளங்களில் பாதுகாப்புத் திட்டம்:

பாதுகாப்புத் திட்டங்களில் அதனை சாத்தியமாக்கும் முறைகளில் ஒரு நாட்டினது வளங்களும் உள்ளடங்குகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கென அதன் அதன் சொத்துக்களில் விஷேடமான வளங்கள் அல்லது வருமான வழிகள் காணப்படும். நமது காலத்திலே கனிய எண்ணெய், இயற்கை வாயு போன்ற வளங்களைக் குறிப்பிட முடியும். அல்லது நிலவளமோ அது போன்ற இன்னுமின்னும் வளங்கள் இருக்கலாம்.

இவ்வாறு ஒரு தேசம் பிரத்தியேகமாகப் பெற்றிருக்கும் வளங்களிலும் சமுதாயப் பாதுகாப்புக்கான பங்குள்ளது. இதில் ஃஙனீமத் -போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்- என்பது ஒன்று. அல்லாஹ் கூறுவதை அவதானித்துப் பாருங்கள்: “(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும்.” (அல்அன்ஃபால்: 41)

இன்னும் ஃபய்உ என்பதையும் அல்லாஹ் கூறுகிறான்: “அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது)” (அல்ஹஷ்ர்: 7)

தேசத்தின் வளங்களில் ஜகாத் அறவிடப்படாது விடுபட்டிருந்தால் தேவையுடையவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்படும் விதத்தில் மக்களிடம் அதனை அறவிட நடவடிக்கை எடுப்பது அரசினது உரிமையும் கடமையுமாகும். இவ்வசனத்திலே அல்லாஹ் கூறுகிறான்: “நன்மை என்பது உங்கள் முகங்களைக் கிழக்குப் பக்கமோ மேற்குப் பக்கமோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் நன்மை என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி தீர்ப்பு நாளின் மீதும் மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல் (தனது) பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல், இன்னும் தொழுகையை நிலைநாட்டி, (ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக) ஜகாத் கொடுத்து வரல் (இவையே நன்மையாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும் (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும் (நோய், நொடிகள் போன்றவற்றின் கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள் இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)” (அல்பகரா: 177)

“(தனது) பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்” அதாவது மேலுள்ள பிரிவினருக்குக் கொடுப்பதனை “இன்னும் தொழுகையை நிலைநாட்டி, (ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக) ஜகாத் கொடுத்து வரல்”  என்பதனோடு அல்லாஹ் இணைத்துக் கூறுகிறான். இங்கு இணைத்துக் கூறப்பட்டிருப்பது அவற்றுக்கிடையிலான நேரடித் தொடர்பைக் காட்டத்தான். எனவே செல்வத்தின் முதற்கடமையே ஜகாத் தான். அது இறுதிக் கடமையல்ல.

செல்வத்தில் ஜகாத் தவிர்த்து இன்னும் கடுமைகள் உள்ளன. ஜகாத் அறவிடப்படாமல் விட்டாலும் இன்னும் பல வரி வகைகள் அரசினால் அறவிடப்படலாம். முக்கியம் எதுவெனில் மக்களுக்குத் தன்னிறைவு ஏற்படுத்தப்படுல் வேண்டும். மக்களில் சிலர் உயர் வருமானத்தில் ஆடம்பரமாக வாழ்கையில் மற்றவர்களை வறுமைக் கோட்டின் கீழே விட்டுவிட முடியாது. மானிடச் சுட்டிக்குக் கீழே விட்டுவிட முடியாது. இஸ்லாத்தில் இது ஆகுமாகாது. இஸ்லாம் அன்பினதும் பாதுகாப்பினதும் மார்க்கம். “முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியார்கள்” (அத்தவ்பா: 71)

 

>ஏழைக்கு உணவளிப்பதை வேண்டும் மக்கி வசனங்கள்:

ஆச்சரியமூட்டும் விடயம்தான் இப்பணி மக்கா காலத்திலிருந்தே, தஃவாவின் மிக ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது. எவர் அல்குர்ஆனின் மக்கி வசனங்களை ஓதுவாரோ அவரும் கூட மிகத் தெளிவாகவே அல்குர்ஆன் ஏழைகளுக்கு உணவளிப்பதைக் கட்டாயமாக்கியிருப்பதனைக் கண்டுகொள்வார். மக்கி ஸூராவான முத்தஸ்ஸிரில் மகத்துவம் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்; வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர. (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) -குற்றவாளிகளைக் குறித்து- விசாரித்தும் கொள்வார்கள். “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.” (அல்முத்தஸ்ஸிர்: 38-44)

அதாவது நாம் அல்லாஹ்வின் உரிமையை தொழுகையைப் பாழாக்குவதன் மூலம் வீணடிக்கிறோம்; மனிதர்களது உரிமையை ஏழைகளுக்கு உணவளிக்காமல் விடுவதன் மூலமாக வீணடிக்கிறோம். ஏழைக்கு உணவளிப்பது என்பது அவர்களது தேவைகள், அத்தியாவசிய விடயங்களைப் பேணுவதற்கான குறியீடாகும். அதாவது ஏழைக்கு வெறுமனே உணவை மட்டும் கொடுத்துவிட்டு அவனை நிர்வாணமாக ஆடையின்றி விட்டுவிட முடியாது; அல்லது உணவைக் கொடுத்துவிட்டு மருந்தின்றி நோயாளியாக விட்டுவிட முடியாது. உணவளிப்பது என்பது அவர்களது தேவைகளைப் பேணுவதென்பதற்கான குறியீடாகும்.

 

 

>ஏழைக்கு உணவளிப்பதைத் தூண்டுதல்:

இங்கு ஏழைக்கு உணவளிப்பதுடன் மாத்திரம் முஸ்லிமைப் போதுமாக்கிக் கொள்ள இஸ்லாம் சொல்லவில்லை என்பது ஆச்சரியமானது. ஆம், இஸ்லாம் இன்னொரு கட்டாயக் கடமையாக்குகிறது. இது சக்தி பெற்ற, இயலாமல் உள்ள எல்லோருக்குமான கட்டாயக் கடமை. ஏனெனில் இயலாதவர் மற்றவர்க்கு இதனைத் தூண்டிவிட முடியும். ஸூரத்துல் மாஊன் இதனைச் சுட்டிக்காட்டுகின்றது: “(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.” (அல்மாஊன்: 1-7)

ஏழைகளைப் புறக்கணித்து அவர்களது தேவைகளில் கவனமின்றி இருந்து ஏனையோரையும் அதற்கெனத் தூண்டாமல் இருப்பது மறுமை நாளைப் பொய்யாக்கும் பண்புகளுள் ஒன்றாகும்.

 

 

>ஏழைக்கு உணவளிப்பதைத் தூண்டாமலிருப்பது நிராகரிப்புக்குச் சமம்:

ஸூரத்துல் ஹாக்காவில் வலப்புறத்தினர், இடப்புறத்தினர்; வலக் கையில் தமது ஏடுகள் கொடுக்கப்பட்டோர், இடக் கையில் தமது ஏடுகள் கொடுக்கப்பட்டோர் என மறுமைக் காட்சிகளில் ஒன்றை அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது: ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! -அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- (நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே! (என்று அரற்றுவான்).” (அல்ஹாக்கா: 25-29)

அடுத்து இறை தீர்ப்பு வருகின்றது: “(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள். பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள் (என்று உத்தரவிடப்படும்).” (அல்ஹாக்கா:30-32)

இத்தீர்ப்புக்குக் காரணம் என்ன? அம்மனிதனது குற்றம் தான் என்ன? உண்மையாளன் உரைக்கிறான்: “நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான். அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.” (அல்ஹாக்கா:33-34)

இங்கு அல்குர்ஆன் இறை நிராகரிப்பையும் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டாமல் இருப்பதையும் ஒப்பிடுவதைக் காண்கிறோம்.

இதனாலேயே நரக நெருப்பை விட்டும் தம்மை பாதியளவு ஈமான் பாதுகாக்கும் எனக் கூறிய அபூதர்தா மறுபாதியையும் பாதுகாக்க ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுமாறு தன் மனைவியிடத்தில் கூறினார். அதே காரணியாலே ஜாஹிலிய்ய சமூகத்தையும் அல்குர்ஆன் இகழ்கின்றது: “அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.” (அல்ஃபஜ்ர்: 17-18) இங்கு ‘ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை’ என்பது ஒருவரையொருவர் தூண்டி விடாமல் இருப்பதையே குறிக்கின்றது.

(தொடரும்… இன்ஷா அல்லாஹ்)

 

டாக்டர் யூஸுப் அல் கர்ளாவி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி

இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் -4

charity_water_pouring

 

மூன்றாவது: கட்டாயமான செலவின திட்டம்:

அவ்வாறே இஸ்லாத்தில் பாதுகாப்புப் பொறுப்பை உறுதி செய்யும் வழிமுறைகளும் உள்ளன. செலவின ஒழுங்குகள், உறவினர்களுக்கான செலவினங்கள். இஸ்லாத்தில் உறவினர்கள் அல்லது குடும்பம் ஒன்றை ஒன்று பூரணப்படுத்துகின்ற அம்சங்கள்; ஒன்றையொன்று பாதுகாப்பளிக்கின்ற அம்சங்கள்; ஒன்றிலிருந்து மற்றொன்று வாரிசுரிமை பெறக் கூடியது. ஒருவர் மரணித்தால் அதற்கென நன்கறியப்பட்ட தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கொன்று உள்ளது. அல்லாமல் கட்டாயமாக எடுத்து அளிக்கப்படும் செலவுகளும் உண்டு; இதுதான் நீதி. கஷ்டமான நிலையில் உறவினர் ஒருவர் இருக்கின்றார்; அவருக்கு வாரிசுச் சொத்து பெறத் தகுமான நிலையிலுள்ள உறவினர் ஒருவர் வசதியான நிலையில் இருக்கிறார் எனில் அவர் இவருக்கு செலவளிக்க வேண்டும். உறவுகளுக்கு செலவளித்தல் குறித்துப் பல்வேறு மத்ஹபுகளும் வித்தியாசமான கருத்தில் இருந்த போதிலும் ‘செலவளித்தல்’ என்ற பொதுக் கருத்தில் அனைவரும் உடன்படுகின்றனர்.

 

 

>கட்டாயமான செலவளிப்பு ஒழுங்குமுறை இஸ்லாம் தவிர வேறெதிலும் இல்லை:

இது நெருங்கிய உறவுகளுக்கான செலவின ஒழுங்காகும். இது இஸ்லாம் தவிர வேறெதிலும் இல்லாத ஓர் ஒழுங்காகும். நமது ஆசானான டாக்டர் முஹம்மத் யூஸுப் மூஸா பிரான்சிலே டாக்டர் பட்ட மேற்படிப்பில் இருந்தார். அதுபற்றி ஒரு முறை நம்மிடம் கூறியதைக் கேளுங்கள்: நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு பிரான்சிய யுவதி நமது வேலைகளை செய்துதருவாள். நம்முடன் அங்கு இன்னும் பலரும் கூடத் தங்கியிருந்தனர். அந்த யுவதி வினைமையுடனும் ஈடுபாட்டுடனும் நம் வேலைகளை செய்வாள். அவள் விளையாட்டுத்தனமோ அல்லது பொடுபோக்குடனோ இருக்கும் யுவதி அல்ல; தனக்கு வழங்கப்பட்ட வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவாள்.

ஒருமுறை வீட்டுரிமையாளரான பெண்ணிடம் அந்த யுவதி குறித்து வினவிய போது “அவள் பிரான்சிலிருக்கும் மிகப் பெரும் குடும்பமொன்றைச் சேர்ந்தவள்.” எனக் கூறிவிட்டு “இன்ன பாதையிலிருக்கும், இன்ன வாடகை வீட்டுரிமையாளரைத் தெரியுமா?” என என்னிடம் வினவினார். நான் “ஆம்.” என்றதும், “அந்த வாடகை வீட்டு உரிமையாளர்தான் இப்பெண்ணின் மாமனார்.” என அவர் கூறியதும் நான் திகைத்து நின்றேன். பின் அவரிடம் “இவளது மாமனார் வாடகை வீட்டுரிமையாளர். அவரது சகோதரரின் மகளோ அந்நிய ஆண்களுக்குப் பணிவிடை செய்கிறாளே.” என்றேன். அதற்கவர் “நீ என்ன சொல்கிறாய்?” என்றார். அதற்கு நான் “அவளது மாமனார் அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் அவளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புக்களும் உள்ளனவே.” என்றேன். அதற்கவர் “இதனை அவர் விரும்பினால் மட்டும் உபரியாக செய்யலாம்.” என்றார்.

அதற்கு நான் சொன்னேன் “அவளுக்கு அவளது மாமனாருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்படவும் முடியும்.” கூறிமுடித்ததும் அவர் “யார் இந்த முறைப்பாட்டை செய்வது? இவ்வாறான முறைப்பாடு செய்யக்கூடிய ஏதும் நீதிமன்றங்கள் உள்ளனவா?” என்றுவிட்டு “இவ்வாறான ஏதும் உங்களிடம் இஸ்லாத்திலே உள்ளதா?” எனக் கேட்டார். நான் “ஆம். இவ்வாறான ஒருவர் நம்மிடம் இருந்தால், அவரிடத்தில் குழந்தைகள், அநாதைகள், ஏழைப் பெண்கள், அல்லது அதுபோன்ற எவரும் அவருடன் இருந்தால் அவர்களுக்கு குறித்த நபருக்கு எதிரான முறைப்பாட்டை நீதிமன்றிலே தொடுக்க முடியும். நீதிமன்றம் அதற்குரிய தீர்ப்பை வழங்கும்.” எனக் கூறினேன்.

அதற்கு அவர் “நம்மிடம் இவ்வாறு எவரேனும் இருப்பார்களாக இருந்தால்; அவர்களைத்தான் நீ காண்கிறாயே, அதிகாலையிலிருந்து தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும் மாடாய்த் தேய்ந்து உழைக்கும் பெண்களும் சிறுமிகளுமான தொழிலாளர் படை இவர்களேயாவர். அவர்கள் உழைக்கச் செல்லாவிட்டால் நிச்சயம் பட்டினியால் இறந்துவிடுவர்.” என்றார்.

உண்மையில் இங்கு வேலைக்கென பெண் வெளியிறங்கிச் சென்று தொழிற்சாலையில் வேலையில் மூழ்கிவிடுவதொன்றும் பெண்ணுக்கான அருள் அல்ல. இல்லை… பெண் அதனை செய்யாவிட்டால் அவள் அழிந்து சுக்குநூறாகிடுவாள். ஏனெனில் அவளிடம் கேட்பார் யாருமில்லை; பொறுப்பேற்பார் யாருமில்லை. நமது இஸ்லாத்திலே செலவளிக்கவென ஒழுங்குமுறையொன்று இருக்கின்றது. குடும்பங்களைப் பாதுகாப்பதற்கென, உறவினர்களைப் பாதுகாப்பதற்கென பாதுகாப்பு ஒழுங்கொன்று உள்ளது.

 

 

நான்காவது: அயலவர்களுக்கென பாதுகாப்புத் திட்டம்:

தகாஃபுல் எனும் பாதுகாப்புத் திட்டங்களில் அயலவர்கள், ஒருவரோடு ஒருவர் அண்டி வாழ்கின்றவர்களுக்கு இடையிலான பாதுகாப்புத் திட்டங்களும் உள்ளன. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வயிறார உண்டு அவரது அயலவர் அவர் அறியும் நிலையில் பசித்திருக்க விடுகிறாரோ அவர் என் மீது நம்பிக்கை கொண்டவர் இல்லை.” (தபரானி, 1/259)

இன்னோர் அறிவிப்பில், “எவரொருவர் வயிறார உண்டு அவரது அயலவர் அவர் அறியும் நிலையில் பசித்திருக்க இவர் உறங்கச் செல்கிறாரோ அவர் ஒரு விசுவாசி அல்ல.” (ஹாக்கிம், 2/15)

“முஸ்லிம்களின் தெருவில் ஒருவர் பட்டினியோடு உறங்க செல்வாராயின், அவர்களை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பு நீங்கிவிடுகிறது.” (அஹ்மத், 4880 -இந்த அறிவிப்பில் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.)

இப்னு ஹஸ்ம்(ரஹ்) கூறுகிறார்: ” ஜகாத் பணமோ ஏனைய வருமானங்களோ குறையும் போது ஒவ்வொரு ஊரினதும் செல்வந்தர்கள் தமது ஊரிலுள்ள ஏழைகளைப் பொறுப்பேற்பது -ஃபர்ழ்- கட்டாயமாகும். அதற்கு அங்குள்ள அதிகாரமுள்ளவர்கள் பலவந்தப்படுத்தவும் வேண்டும். அவர்களுக்கு அவர்களது அடிப்படை உணவு விடயங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும். உடைகளில் மாரி, கோடை காலங்களுக்குத் தேவையானவை கொடுக்கப்பட வேண்டும். மழை, வெயில், பாதசாரிகளின் பார்வையிலிருந்தும் விட்டும் பாதுகாக்கக் கூடிய இல்லம் கொடுக்கப்பட வேண்டும்.

இறந்தவை, பன்றியிறைச்சி போன்றவை நிர்ப்பந்தத்தினால் ஆகுமாகிடாது. அவன் தன்னிடத்தில் தனக்குரியதை விட மேலதிகமானதை ஒரு முஸ்லிமுக்கு அல்லது ஒரு திம்மிக்கென காணும் நிலையில் அது ஆகுமாகாது. ஏனெனில் உணவுடையவனுக்கு பசித்தோருக்கு உணவளிப்பது கட்டாயமானதாகும். அவ்வாறாயின் செத்தவை, பன்றி மாமிசத்துக்கு எவரும் நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள்.

அதற்கென அவன் போராட்டம் செய்யவும் முடியும். அவன் கொல்லப்பட்டால் கூலியுண்டு. மறுத்தவன் கொல்லப்பட்டால் அவனுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டு. ஏனெனில் அவன் ஒரு உரிமையை மறுத்தவன்; வரம்பு மீறியவன் அவன். அல்லாஹ் சொல்கிறான் ‘பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்’ (அல் ஹுஜுராத்: 9). உரிமையில் வரம்புமீறுபவன் தனது சகோதரனின் உரிமையை மறுக்கிறான். இதனால்தான் அபூபக்ர்(ரழி) ஜகாத் கொடுக்க மறுத்தோருக்கு எதிராக போரிட்டார்கள்.” (பார்க்க: முஹல்லா, 2/452-456)

பைஹக்கி ஹஸனிடமிருந்து அறிவிக்கிறார்: ஒரு மனிதர் நீருள்ள பிரதேசத்துக்கு வந்து நீர் புகட்டுமாறு வேண்டினார். அவர் தாகத்தால் மரணிக்கும் வரைக்கும் அவ்வூரார் நீர் புகட்டவில்லை. பின், உமர்(ரழி) அவர்களுக்கு எதிராக ஈட்டுப் பணம் அறவிட்டு தண்டம் விதித்தார். (பைஹக்கி, 2/153)

 

 

ஐந்தாவது: ஜகாத் மூலமாக சமூகத்தைப் பாதுகாத்தல்:

இங்கு ஜகாத் என்ற அல்லாஹ்வின் கடமைகளில் அதிசயிக்கத்தக்க ஒரு கடமை வருகின்றது. முன்னைய மார்க்கங்கள் சிலதிலும் இருந்த ஸதகா, நல்லுபகாரங்களை ஒத்த அறியப்பட்டவாறான அமைப்பில் காணப்பட்ட, கட்டாயமான ஒரு கடமையாகும். முன்னைய மார்க்கங்களைப் பின்பற்றிய மக்களிடமும் ஸதகா, மக்களுக்கு நல்லுபகாரம் செய்தல், நலன்புரி நன்கொடை செய்தல் விடயங்கள் இருந்திருக்கின்றது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. என்றாலும் அதனை எவ்வளவு கொடுப்பது? யாருக்குக் கொடுப்பது? எப்போது கொடுப்பது? போன்ற வழிமுறைகள்தான் காணப்படவில்லை. அதனால்தான் அதனை உரிமையை எடுப்பதற்குரிய கட்டமைக்கப்பட்ட முறைமை வரையறை செய்யப்படவில்லை. அதற்கான அளவீடுகளும் இருக்கவில்லை.

ஆனால் இதனை இஸ்லாம் உரிமையாக ஆக்கியது; மட்டுமல்லாது நிர்ணயிக்கப்பட்ட உரிமையாக ஆக்கியது. யார் மீது ஜகாத் கடமை? யாருக்குக் ஜகாத் கொடுக்க வேண்டும்? என்பவற்றைக் கற்றுக் கொடுத்தது. அதற்கென குறிப்பிட்டதொரு அளவு நிர்ணயிக்கப்பட்டது. ஜகாத் கொடுக்க வேண்டிய பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. நிஸாப் அளவு நிர்ணயிக்கப்பட்டது. நிஸாபிலிருந்து எவ்வளவு எடுக்கப்படவேண்டும் என்ற அளவை சுட்டிக்காட்டியது. நிஸாபிலிருந்து 10% அல்லது 5% அல்லது 2.5% ஐ செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்டது. இதனை செயற்படுத்துவதை அரசுக்குக் கடமையாக்கியது. அதனை கீழுள்ள மகத்துவமிகு வசனம் குறிப்பிடுகிறது: “(நபியே!) நீர் அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்துக்குரியதை எடுத்துக் கொண்டு உள்ளும் புறமும் அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக!” (அத்தவ்பா: 103)

நபியவர்கள் முஆதுடைய ஹதீஸில் “அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்றார்கள். (புகாரி: 1395)

அங்கே அல்குர்ஆன் ஜகாத்தில் ஒரு பங்கை ஆமில் -ஜகாத் சேகரிப்போர்- களுக்கென விதித்துள்ளது. அவர்களும் யாரிலும் தங்கியிருக்கத் தேவையில்லை. ஜகாத்தை உரியவர்களிடம் சேகரித்து உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் பணிக்கென எவரும் இருக்க மாட்டார்கள். அவ்வகையிலேயே ஜகாத் பெறும் எட்டுக் கூட்டத்தினரில் ஆமில்கள் தனிப்பிரிவினர்களாவர்.

 

>இஸ்லாமிய அரசு எளியவர்களின் உரிமைக்கென போராடும்:

வரலாற்றில் முதன் முறையாக ஏழை எளியவர்களின் உரிமைக்கென போராட்டம் நிகழ்த்திய அரசு, இஸ்லாமிய அரசேயாகும். அபூபக்ர்(ரழி) அவர்கள் பதினொரு படைப்பிரிவுகளைத் தயார்செய்து பதினொரு கொடிகளின் கீழ் போலி நபித்துவத்துக்கு உரிமை கொண்டாடிய முஸைலமா, ஸஜாஹ், அஸ்வத் அன்ஸி, துலைஹா அஸதி ஆகியோர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக போராடினார்கள். அதே பாதையிலே ஜகாத்தை மறுத்தவர்களுக்கு எதிராகவும் போராடினார்கள். அன்னாரது வரலாற்று வரிகளைப் பாருங்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஜகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்.” என்றார்கள். (புகாரி: 7284)

உலக வரலாற்றில் முதன் முறையாக ஏழைகளின் உரிமைக்காக போராட்டம் நிகழ்த்திய அரசாக இஸ்லாமிய அரசு திகழ்கிறது. இந்த ஜகாத்தானது மகத்துவம் மிக்க ஒரு கடமை. இஸ்லாம் மார்க்கம் அதனை மார்க்கத்துக்கு சாட்சிபகரும் இரண்டு ஷஹாதாக் வசனங்கள், தொழுகைக்கு அடுத்தபடியாக மூன்றாவது அடிப்படைக் கடமையாக வைத்திருக்கின்றது. அதனை அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையோடு ஒப்பிடுகின்றது. ஸுன்னாவிலே அவை இரண்டும் இன்னும் ஏராளம் இடங்களில் இணைந்து வருகின்றது. உள்ளவாறு முஸ்லிம்கள் அனைவரும் இந்தக் கட்டாயக் கடமையை நிறைவேற்றிவிட்டால் பட்டினியை முறைப்படுவோர் இங்கு இருக்கார்; நோயை முறைப்படுவோர் இருக்கார்; ஆடையை முறைப்படுவோர் இருக்கார்; அறியாமையை முறைப்படுவோர் இருக்கார்; நஷ்டத்தை முறைப்படுவோர் இருக்கார்; இருப்பிடத்தை முறைப்படுவோரும் இருக்கார்.

 

>நிராகரிப்பும் ஏழ்மையும் உற்ற தோழர்கள்:

நூற்றுக் கணக்கிலான பில்லியன்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் தற்போது அந்நிய வங்கிகளில் கிடக்கின்றன. இந்த பில்லியன்களுக்கு ஜகாத் கணக்கிடப்பட்டால்… எவ்வளவு வரும்? ஒரு பில்லியனுக்கே 25 மில்லியன் ஜகாத் வரும். அவ்வாறாயின் வெளியே போயிருக்கும் ஏராளம் பில்லியன்களுக்கு..? நம்மிடமே இருக்கும் ஏராளம் பில்லியன்களுக்கு..? இந்த செல்வங்களுக்கு ஜகாத் கொடுக்கப்பட்டால், நமது முஸ்லிம் மக்களிடையே ஷோசலிஸத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் பலவந்தமாகவும் கூட கொஞ்சமேனும் தேவையிருக்காது.

அசத்தியக் கோட்பாடுகளுக்கு வழிவிட்ட இவர்கள், அதாவது துரதிர்ஷ்டவசமாக நமது அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரீஅத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே அங்கு ஏழ்மை பரவி வேர்விட்டுவிடுகின்றது.

அபூதர்(ரழி) கூறுவதைக் கேளுங்கள்: ஓரிடத்துக்கு ஏழ்மை செல்லுமாக இருந்தால் அங்கே நிராகரிப்பும் -குஃப்ர்- கூடவே வந்து, ‘என்னையும் உன்னுடன் கூட்டிச் செல்’ என்று சொல்லுமாம். அதாவது கம்யூனிஸம் வந்து ‘என்னையும் உன்னுடன் கூட்டிச் செல்’ என்று சொல்லும். இவ்வாறுதான் ஏனைய அழிவுக் கோட்பாடுகளும் ஏழ்மை எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் கூடவே செல்லும்.

இமாம் அலி(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள், “ஏழ்மை என்பது ஒரு மனித உருவில் என்னிடம் வந்தால் அதனை நான் கொன்றுவிடுவேன்.”

இதனாலேயே நபியவர்கள்(ஸல்) குஃப்ர்-நிராகரிப்பு, ஃபக்ர்-ஏழ்மை இரண்டிலிருந்தும் பாதுகாவல் தேடினார்கள்; குறைவிலிருந்தும் இழிவிலிருந்தும் பாதுகாவல் தேடினார்கள். இதற்காகவே ஜகாத் காணப்படுகின்றது. உண்மையில் ஜகாத்தின் பணியானது மக்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதாகும். ஏழ்மையை முற்றாக ஒழிப்பது என்பது மட்டும் இதனுடைய கருத்து அல்ல. அவ்வாறு இருக்க மாட்டாது; ஏனெனில் ஏழைகள், எளியோர் ஆங்காங்கே இருப்பர்.

 

டாக்டர் யூஸுப் கர்ளாவி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி

(தொடரும்… இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் -3

 

6157979_orig

 

>பாதுகாப்புத் திட்டங்களின் வகைகள்:

நமது மூத்த சகோதரர் கண்ணியத்துக்குரிய உஸ்தாத் கலாநிதி முஸ்தபா ஸிபாஈ(ரஹ்) அவர்கள் தன்னுடைய இஷ்திராகிய்யத்துல் இஸ்லாம் -இஸ்லாத்தில் சமூக நீதி- என்ற நூலில் பத்து வகையான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுவார்கள். அவை அனைத்துமே இஸ்லாத்திலே ஃபர்ளான கட்டாயக் கடமை என்றும் கூறுவார்கள். இலக்கியம், அறிவியல், பாதுகாப்பு, மதம் என பல வகைகளில் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன. இஸ்லாத்தில் பாதுகாப்புத் திட்டம் என்பது சமுதாய நலனோம்பும் திட்டங்கள் மட்டுமல்ல.

 

1- பாதுகாப்புப் பொறுப்புக்கள்:

அதாவது ஒரு முஸ்லிம் நாடு தாக்கப்பட்டால் எதிர்க்கப்பட்டால் முஸ்லிம்கள் அனைவரும் அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக அயலவர்களாக இருப்போர் இதற்கு அதிக அக்கறை காட்டவேண்டியவர்கள். சக்தி பெற்றவர்களாக இருப்பின் அவர்கள் பதிலடி கொடுக்கவும் வேண்டும். அல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு அக்கடமை உரித்தாகும். அனைத்து முஸ்லிம்களையும் பொறுப்பு அடைய முன்பு மிக மிக நெருக்கமானோரே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியவர்களாவர். இது அனைத்து மத்ஹப்களிலும் உடன்பட்ட அம்சமாகும். இதுவே பாதுகாப்புப் பொறுப்புணர்வாகும்.

 

2- வாழ்வாதாரப் பாதுகாப்பு:

நாம் எப்போதும் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்களைக் குறித்துக் கூறிய போதிலும் அதன் மூலம் நாம் வாழ்வாதரம் குறித்த விடயங்களையும்தான் நாடுகின்றோம். இதன் கருத்தானது முஸ்லிம்கள் மத்தியில் பட்டினி கிடப்பவர்கள் இருப்பதாகாது என்பதுதான். இங்கு ஏனைய பலர் வயிறு நிரம்புவோர் இருக்கின்றனர். இந்நிலைமைகளில் இஸ்லாம் எங்கு இருக்கின்றது? நம்மில் ஒருவராவது வயிற்றில் கைவைத்துக் கொண்டு வயிற்றின் நெருக்கடி குறித்து முறைப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் தானே? இன்னொருவர் தனது வயிற்றில் கைவைத்து கடும் பட்டினியை முறைப்படுகிறார்.

இன்னும் மனிதர்கள் தமது உணவுத் தட்டுக்கள் முன்னால் இருந்துகொண்டு மாமிச வகைகள், ஸ்பூன் வகைகள், மரக்கறிகள், பேரீச்சம் பழவர்க்கங்கள், பொறித்த உணவுகள், பலகாரங்கள் என விதம் விதமான வகையறாக்களுடன் நாவு சுவைக்க ஆனந்தமடைகிறார்கள். பின் அல்சர் என்றும் வேறொன்றுமாக முறைப்படுவார்கள்.

இங்கு இன்னும் பலர் உள்ளனர். தமக்கென சாப்பிடுவதற்கும் எதனையும் கண்டுகொள்ளாதவர்கள் அவர்கள். இரு புனிதஸ்தலங்களுக்கும் கூட அதிகமான உணவுகளுடன் மனிதர்கள் வருவார்கள். பெரிதாக உணவு விரிப்பை பரப்புவார்கள். ஓரளவு எடுத்தும் உண்பார்கள். இறுதியில் உணவு வகைகளில் அதிகமானவை குப்பைத் தொட்டிகளில் வீசப்படுவதாகவே இருக்கும்.

ஸரஜீவோவிலிருந்து வந்த நமது சகோதரர் ஒருவர் அங்குள்ள நம் சகோதரர்கள் சிலரது போட்டோக்களைக் காட்டினார். அவர்கள் பசியின் கொடுமையால் குப்பைத் தொட்டிகளில் தானியமோ, அரிசியோ, எஞ்சிய உணவோ ஏதாவது பொறுக்கி எடுப்பதற்கு இருக்கிறதா என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உதவிகளில் தங்கி வாழ்பவர்கள். உதவிகள் வந்துசேராவிட்டால் அல்லது தாமதித்தால் இவ்வாறு செய்கிறார்கள். ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்க மாட்டாது. நம்மிடத்தில் ஏராளம் நலன்புரி நிறுவனங்கள் உள்ளன. அதைவிட நமது செல்வம் உள்ளோரிடத்தில் வீண்விரயமும் உண்டு. ஒருவர் பத்துப் பேரை விருந்துக்கு அழைப்பார். அங்கு நாற்பது பேருக்குப் போதுமான உணவு பரிமாறப்படும். அதிலும் கொஞ்சத்தை உண்பார்கள். எஞ்சும் அனைத்து உணவுகளும் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும்.

இஸ்லாம், முஸ்லிம் மக்களுக்கு, ஜமாஅத்துக்கு ஒருத்தருக்கொருத்தர் பொறுப்பாண்மையுடன் நடந்து கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது. அது முஸ்லிம் சமூகத்தினுள் அனைவருக்கும் போதுமானளவு ஒன்றுடன் ஒன்று பிணைந்த பொறுப்புக்களை வகிக்குமளவு இருக்கவேண்டும். செல்வத்தில் மிதமிஞ்சியளவு இங்கு இருக்காது. பசித்தோர் அனைவருக்கும் நாம் உணவளித்து முடிந்துவிடாது. ஆடையற்ற அனைவருக்கும் அணிவித்தும் முடிந்திடாது. வீடற்றவர்களுக்கும் போக்கிடம் வழங்கி முடியாது. அனைத்து நோயாளிகளுக்கும் மருந்தளித்தும் முடிந்திடாது. தேவையானோர் அனைவர்க்கும் உதவித் தொகை அளித்திடவும் முடியாது. அறியாமையிலிருப்போர் எல்லார்க்கும் கல்வியளித்தும் முடிந்திட மாட்டாது… இதுவே இஸ்லாம் கொண்டுவந்த திட்டமாகும். நமது காலத்திலுள்ள சில மனிதர்கள் நமது பேச்சை இடைமறித்து இது ‘சோஷலிஸம்’ பேசுகிறீர் என்கிறார்கள். சோஷலிஸம் எங்கே? இஸ்லாம் கொண்டுவந்த திட்டம் எங்கே?

இஸ்லாம் கொண்டுவந்த திட்டம் ஒரு மனிதனுக்கு குறைந்தபட்ச அளவுக்கான எல்லையொன்றை வைத்து அவன் அந்த அளவை எட்டியிருப்பதை அவனுக்குக் கட்டாயமாக்கியது. அதனையே அறிஞர்கள் கிஃபாயா -தன்னிறைவு- என்று சொல்கின்றனர். அவன் வெறுமனே தன்னிறைவு மட்டுமென்று சுருங்கிக் கொள்ளவுமில்லை. மாறாக முழுமையான தன்னிறைவென்பதையே அது குறிக்கின்றது. இங்கு செல்வத்துக்கான எல்லையானது அத்தியாவசிய எல்லை எனப்பட்டது. இங்கு அத்தியாவசியம் என்பது குறிப்பதைக் கீழ்வரும் இறை வசனத்தினூடாக விளங்கலாம்:

“ஆனால், எவரேனும் பாவம் செய்யாத நிலையிலும், வரம்பு மீறாத நிலையிலும் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமாகாது” (அல்பகரா:173)

அதாவது உயிரிழக்காமலான அளவிற்கு உணவு; பிடித்துக் கொள்ளும் அளவு காணப்பட வேண்டும்; உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அளவு; அதாவது அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்ற நிலை. இங்கு தன்னிறைவு என்பதன் அளவு முழுமையான தன்னிறைவு தான்.

 

>தன்னிறைவின் அளவு என்பதன் கருத்து:

இஸ்லாமிய சமூகத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிமுமே முழுமையான தன்னிறைவைக் கொண்டிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுவார்கள். தன்னிறைவு என்பது இமாம் நவவி மஜ்மூஃவில் கூறுகின்றவாறு “ஒரு விடயம் தன்னிறைவை அடைவதென்பது உணவு, உடை, உறைவிடம், அவனுக்கு அத்தியாவசியமான ஏனையவை, குறித்த தருணங்களில் தேவையானவை ஆகியன குறித்த மனிதருக்கும் அவரது பராமரிப்பில் இருப்போருக்கும் விரயமின்றியும் விடுபாடுகள் இன்றியும் இருப்பது என்பதே கருத்தாகும்”. (மஜ்மூஃ:6/191) இந்த அனைத்து துறைகளும் அதாவது உணவு, குடிபானம், உடை, உறைவிடம் ஆகியன அவனுக்கும் அவன் கீழ் இருப்போருக்கும் அவசியம் இருக்க வேண்டும் என்பதாகும்.

 

>புதுப்பிக்கப்படும் மனிதனுடைய தேவைகள்:

மனிதனுடைய தேவைகள் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டே இருக்கும். நம்முடைய காலத்தில் சில விடயங்கள் அவை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு மாறியிருக்கின்றன. குளிரூட்டி (Fridge) இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு மனிதன் மாறியுள்ளான். இது வெப்ப வலய நாடுகளில் விஷேடமானது. அங்கு கட்டாய அம்சமாக அது மாறிவிட்டது. அவ்வாறுதான் மின்சாரம்; மனிதர்கள் ஒரு காலத்தில் எண்ணெய் விளக்குகளோடு வாழ்ந்தார்கள். தற்போதைய நிலவரம் மின்சாரத்துக்கு மாறிவிட்டது. இவ்வாறு பல விடயங்கள் தேவையுடையனவாக மாறியிக்கின்றன…

நமது உலமாக்கள் கூறுகிறார்கள்: தன்னிறைவு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப இருக்கவேண்டியவையாகும். அறிவுசார் நூல்கள் அறிவுதேடும் மாணவர்களுக்குத் தேவைப்படும். அறிவுத் துறை சார்ந்தவர்கள் இருப்பின் அவருக்கு நூல்களையும் உசாத்துணைகளையும் ஏடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவர் திருமணம் செய்யாதவராக இருந்தால் அவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும். ஏனெனில் திருமணம் மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாகும். இவ்வாறு ஒவ்வொன்றுமே தேவைகளாகும்.

 

>பாதுகாப்புத் திட்டத்தை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள்:

இம்முழுமையான தன்னிறைவை சாத்தியப்படுத்துவதற்கென வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை வருமாறு:

முதலாவது: வேலை வாய்ப்பபைத் தயார்படுத்தல்

மனிதனுக்கு வேலைக்கான சந்தர்ப்பத்தை தயார்படுத்திக் கொடுக்க வேண்டும். வேலையைப் பழக்கிக் கொடுக்கும் தயார்படுத்தல் வேண்டும். அவ்வேலைக்கென கற்பித்தல் தேவைப்படுமாயின் நாம் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். ஏனெனில் அதிகமான வேலைகள் தயார்படுத்தப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது. உதாரணத்துக்கு எந்திரவியல் துறையில் ஒருவர் வேலைசெய்ய விருப்பப்படுவாராயின் அவருக்கு எந்திரவியலைக் கற்றுக் கொடுப்போம். நம்மிடம் தொழிற்துறைகளில் வேலை செய்வோர் குறைவாயின் தொழிற்கல்விக் கூடங்களை நாம் அவர்களுக்கெனத் துவக்குவோம். விவசாயத்திலும் அவ்வாறுதான்; பின்பு அவர்கள் வேலைசெய்ய வேண்டிய துறைகளைத் தயார்படுத்துவோம். அவருக்கான வேலை சாத்தியமாகும் வரைக்கும் இதனை செய்வோம்.

அடுத்து ஒவ்வொரு நபருக்கும் பொருத்தமான வேலையை தயார்படுத்த வேண்டும். வைத்தியராகப் பட்டம் பெற்ற ஒருவர் முனிசிப்பாலிட்டி தொழிலாளியாக வேலைபார்ப்பது அறிவுடைமையாகாதே..! எனவே இந்தக் கற்பித்தல்கள் எல்லாம் ஏன் இருக்கின்றன? அவ்வகையில் ஒவ்வொருத்தருக்கும் பொருத்தமான துறையில் வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். இதுவும் கூட அவசியமான பாதுகாப்புத் திட்டத்திலே உள்ளடங்கக் கூடியது. முழு சமுதாயத்திற்கும் பாதுகாப்புப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அதன் மேல் தளத்தில் இருக்கிறார்கள்.

ஏனெனில் இஸ்லாத்தில் அரசாங்கம் தான் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைசெய்யும் உச்ச தலைமையாகும். முதலாளித்துவ அரச ஒழுங்கிலே அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பு பாதுகாப்பு விடயம்தான். சிலர் அரசாங்கத்தை விளக்கும் போது “அரசாங்கமென்பது இல்லாதவர்களிடமிருந்து உள்ளவர்களைப் பாதுகாப்பதாகும்” என்றவாறு கூறும் அளவுக்கு அது சென்றுவிட்டது. அதாவது அரசாங்கம் பணக்காரர்களை ஏனைய மக்களை விட்டும் பாதுகாப்பதையே முக்கிய பணியாகச் செய்ய வேண்டும் என்பதே இதனுடைய கருத்தாகும்.

 

>பாதுகாப்புத் திட்டத்தை நிலைபெறச் செய்வதிலே அரசின் பொறுப்பு:

இஸ்லாத்திலே பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதே உண்மையாகும். மக்களுக்கான வேலைகளைத் தயார்படுத்திக் கொடுக்கின்ற வேலை வாய்ப்புக்களை இலகுபடுத்திக் கொடுத்து உதவுகின்ற பொறுப்பும் அதற்கு இருக்கின்றது. திட்ட வகுப்பாளர் எல்லா விடயங்களுக்கும் பொறுப்பாளராகவோ, எல்லா விடயங்களையும் எதிர்கொள்பவராகவோ ஒரு போதும் மாறிவிட முடியாது என்பதே சரியானதாகும். கம்யூனிஸம் அடிப்படையாகக் கொண்ட மத்திய திட்டமிடல் அமைப்பானது இஸ்லாத்தில் இல்லை.

உணவுக்கான, பிழைப்புக்கான முழுமையான சொந்தக்காரர்களாக அதிகாரம் செலுத்துவோராக அரசாங்கம் மாறுவதென்பது இஸ்லாத்தில் இல்லாததாகும். மக்களுக்கு வேலைக்கான வழியொன்றைக் காணும் வரைக்கும் அதற்கான சந்தர்ப்பங்களை தயார்படுத்திக் கொடுப்பதும் அதற்கு அவர்களுக்கு உதவுவதுமே ஒரு அரசாங்கத்திற்குரிய பொறுப்பாகும். அவ்வாறே ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான வேலையைத் தேடுவதும் அவசியமாகும். பாதுகாப்புத் திட்டத்திற்கான பல்வேறு வழிமுறைகளில் முதலாவது வழிமுறை வேலை வாய்ப்பேயாகும்.

 

இரண்டாவது: வேலை செய்யச் சக்தியற்றவர்களுக்கான பாதுகாப்புறுதி:

மேலே கூறப்பட்டவை எவ்வாறெனினும் இங்கு மனிதர்கள் சிலர் வேலை செய்ய சக்தி பெறாதவர்களாகவும் இருப்பார்கள். உதாரணமாக இயலாதோர், வயோதிபப் பெண்கள், முதியோர், சிறு குழந்தைகள், குறிப்பாக பெற்றோரை இழந்தவர்கள் அல்லது அங்கங்கள் பாதிக்கப்பட்டோர் அல்லது எந்த உறவினர்களோ உதவுனர்களோ அற்ற பெண்கள் எனப் பலவகைப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

அதேவேளை அநேக சமுதாயங்களிலே போன்று வேலை செய்ய இயலாதவரோ இயலுமானவரோ ஆனால் வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களும் உள்ளார்கள்.

ஆயிரக் கணக்கில் வேலைக்கு முடியுமானவர்கள் இருப்பார்கள்; ஆனால் வாய்ப்பொன்றைக் காணாமல் இருப்பார்கள். அல்லது வேலை வாய்ப்பு இருக்கும்; ஆனால் அதற்குப் போதுமான கூலியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பார்கள். நாம் கூறியவாறு ஒரு மனிதனுக்குத் பூரண தன்னிறைவானதை அளிக்கக் கூடிய வேலை வாய்ப்புக்கள் இங்கு உள்ளனவா? அத்தகையவற்றை உத்தரவாதப்படுத்துவதும் சமுதாயத்தின் மீதுள்ள கடமையாகும்.

டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி

தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப்

(தொடரும்… இன்ஷா அல்லாஹ்)