“பாரிசின் மஞ்சள் சட்டைக்காரர்கள்” -வீரியம்பெறும் மக்கள் திரள் அரசியல்-

ஜனவரி மாதம் 2011 உலக அரசியலின் போக்கில் மாபெரும் திருப்பங்களது பருவமாகும். தூனிசியாவில் ஆரம்பித்த மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் பாரிய மாற்றங்களுக்கு வித்திட்ட அரபு வசந்தமாகப் பரிணமித்தது. தூனிசியாவில் பூ அசீஸியின் மரணத்துடன் வடக்கு ஆபிரிக்க அரபு நாடுகள், மத்திய கிழக்கு அரபு நாடுகளெங்கும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்தனர். மக்களது எழுச்சி பல தேசங்களில் ஆட்சி மாற்றங்களாகியது. பல்லாண்டு காலம் மக்கள் விருப்பத்துக்குப் புறம்பாக ஆண்டுகொண்டிருந்த கொடுங்கோலர்கள் தூக்கி வீசப்பட்டு மக்கள் தெரிவுகள் தூனிசியாவிலும் எகிப்திலும் ஆட்சிக்கு வந்தன. இன்னும் சில நாடுகளில் விளைவுகளாக உள்நாட்டு யுத்தம் மூட்டிவிடப்பட்டு பிராந்திய வல்லாதிக்கங்களின் போட்டா போட்டிக் களமாகவும் தமது புதிய ஆயுதக் கண்டுபிடிப்புக்களைப் பரீட்சிக்கும் களமாகவும் ஆக்கிக் கொண்டன. அதில் யேமன், சிரியா, லிபியா முற்றாக சிதைக்கப்பட்டு துகளாக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தில் நிகழ்ந்த எதிர்ப்புரட்சியின் விளைவுகள் அங்கே முன்னின்று போராடிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை முற்றாக முடக்கிப் போட வேண்டுமென்ற கங்கணத்துடன் இன்னும் தீவிரமான கொடுங்கோன்மைக்கு அம்மக்களை ஆளாக்கியிருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பாத்திரம் களத்துக்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் விருப்பங்களுக்குத் தூக்குக் கயிறு இடப்பட்டது.

இன்றும் முழுமை பெறாது தொடர்ந்துகொண்டிருக்கும் அரபு வசந்தம் விரும்பியும் விரும்பாமலும் குறிப்பாக மத்தியகிழக்கிலும் பொதுவாக உலக ஒழுங்கிலும் சாதகமானதும் பாதகமானதுமான பல மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கின்றது.
அரபு வசந்தம் லிபியா, யேமன், சிரியா போன்ற நாடுகளில் வன்முறையாக மாற்றம் பெறுவதற்கு முன்னரும் துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளது மக்கள் மேற்கொண்ட போராட்ட முறைமையும் உலகின் கவனத்தை ஈர்த்தது. மக்கள் தன்னெழுச்சியாகத் தமது உரிமைகளைக் கோரியவர்களாக போராட்டத்தை நோக்கி உந்தப்பட்டுக் களத்துக்கு வந்தனர். அங்கு களத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற சமூக அடிமட்டம் வரைக்கும் ஆழமாக ஊடுருவிய பலமான அமைப்பொன்று இருந்தது போராட்டத்தை இன்னும் கச்சிதமாக்கியது.

போராட்டத்தை நோக்கி உந்தப்பட்ட மக்கள் திரளாக ஒன்று குவிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் போன்றவற்றுக்கு அப்பால் வித்தியாசமானதொரு போராட்ட சிந்தனையை இது உலகுக்குத் தந்தது. மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளைக் கூட போராட்டத் திடலில் மேற்கொள்ளும் சூழல் காணப்பட்டது. உணவு உட்கொள்ளல் துவக்கம் இறை வணக்கம் வரைக்கும் போராட்ட மைதானத்திலேயே மேற்கொண்டனர். இதனையும் தாண்டி சில திருமண நிகழ்வுகளும் கூட போராட்ட மைதானத்திலேயே மேற்கொள்ளும் அளவு மக்கள் போராட்டமயப்பட்டனர். பெண்களுக்கு அசௌகரியமான எந்த நிகழ்வும் போராட்ட மைதானத்தில் காணப்படவில்லை.

திரண்ட மக்களது கோரிக்கைக்கு முன்னால் அரசுகள் அடிபணிந்து கவிழ்ந்தன. மக்கள் திரளின் பலம் பிரமாண்டமானது.

இதே வகையில் மக்கள் திரளை ஒன்று சேர்த்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்து வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் என அமெரிக்கா உட்பட மேற்குலகில், நமக்கு அண்மித்த தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என பல்வேறு வடிவங்களில் மக்களது விருப்பங்களை நோக்கி அதிகார மையங்களைப் பணிந்து வரச்செய்தது.

மக்கள் திரள் அரசியல் போராட்டத்தின் இன்னொரு வடிவமாக பலஸ்தீனத்தின் The Great Return March என்ற சுலோகத்துடன் நீண்ட நாட்களாகத் தொடர்ந்துவரும் தம் தாயகத்துக்கு மீளத் திரும்பும் உரிமையை மீட்டெடுப்பதற்கான மாபெரும் நடைப் பயணத்தை நாம் பார்க்க முடியும். அங்கே பலஸ்தீனின் இன்றைய தலைமுறை வரைக்கும் அந்த நிலத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற உணர்வு கடத்தப்பட்டு வந்திருப்பதைக் காண்கிறோம். அந்த மக்கள் திரளின் சக்திக்கு முன்னால் சியோனிஸத்தின் முன்னேற்றகரமிக்க ஆயுதங்கள் செய்வதறியாது தவிக்கிறது. சில மரணங்களை நிகழ்த்த முடிந்ததல்லாது போராட்ட உணர்வை சியோனிஸத்தால் தோற்கடிக்க முடியவில்லை.

இன்று மக்கள் திரள் அரசியல் போராட்ட வடிவம் வெற்றிகரமாக பிரான்சிலே நிலைகொண்டிருக்கின்றது. இடதுசாரி-வலதுசாரி கோஷங்களுக்கு அப்பால் புதிய கோஷங்களுடன் இமானுவேல் மக்ரோன் பதவிக்கு வந்தார். ஐரோப்பாவின் இளம் தலைவராக அறியப்பட்ட அவர் இன்று போராட்டங்களைக் கட்டுப்படுத்தி, தீர்வுகளைக் கொடுக்கும் இயலுமையை இழந்து பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்களை சம்பாதித்தும் அவரது அரசியல் ஆளுமையை, இன்று மக்கள் திரளொன்று கேள்விக்குள்ளாகியும் இருக்கின்றது. பிரச்சினைகள் தீர்க்கப்படாது இரண்டு மாதங்களாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பிரான்சின் மக்கள் திரள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் “மஞ்சள் சட்டை இயக்கம்” உருவான பின்னணி விசித்திரமானது. (பிரெஞ்சில் Les gilets jaunes, ஆங்கிலத்தில்: The yellow vests) 2018 அக்டோபரில் இணையத்தில் எரிபொருள் விலைக்குறைப்புக்கும் வாழ்க்கைச் செலவுக் குறைப்புக் கோரிக்கைக்குமான மகஜரொன்று கையொப்பத்திற்கு விடப்பட்டது. அது எதிர்பாராதளவில் 300,000 கையெழுத்துக்களை எட்டியதும் ஆர்ப்பாட்டத்தை நோக்கி அழைப்புக்கள் விடுக்கப்படத் தொடங்கின. ஆரம்பத்தில் எரிபொருள் விலைக் குறைப்பு, வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, வரி அதிகரிப்புக்களை எதிர்த்தும் குழுமிய மக்கள் இன்று அதிபர் இமானுவேல் மக்ரோன் பதவி விலகும் வரைக்கும் ஓயப்போவதில்லை என அறிவித்திருக்கின்றனர்.

முதலில் நூறுகளாகவும் பின் ஆயிரங்களிலும் இருந்த எதிர்ப்பாளர்கள் நவம்பர் 17 துவக்கம் இலட்சக் கணக்கிலான மக்கள் திரளாகியிருக்ன்றனர். குழுமியுள்ள மக்கள் தீவிர வலது – தீவிர இடது அரசியலுக்கு அப்பாலானவர்கள் என பிரெஞ்சு அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலும் அநேகர் கடந்த அதிபர் தேர்தலில் புதிய கோஷத்தோடு வந்த மக்ரோனுக்கு வாக்களித்தவர்களாக அல்லது எத்தரப்புக்கும் வாக்களிக்காதோராக இருக்கின்றனர். இதுவரையிலும் பல்வேறு கட்சி, அமைப்புப் பின்னணிகளை உடையோர் போராட்டத்தில் இணைந்த வண்ணமே உள்ளனர். சனத்தொகையின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நடுத்தர வர்க்கத்தினரே போராட்டக்காரர்களாக காணப்படுகின்றனர். மக்கள் திரளின் போராட்டம் அடிமட்ட மக்களையும் உயர்வர்க்கத்தினரையுமே அதிகம் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இற்றை வரைக்கும் போராட்டத்தில் 10 ஐத் தாண்டிய இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. நூற்றுக் கணக்கில் கைதுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சூழல் மாசடைதலைத் தவிர்க்க எரிபொருள் விலையைக் கூட்டியதாகத் தெரிவித்த மக்ரோன் இப்போது எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை அநேகமாக ஏற்றுக் கொண்டும் விட்டார். இருந்த போதிலும் இன்னும் பல கோரிக்கைகளை அடையப்பெறும் வரைக்கும் போராடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

மஞ்சள் சட்டைக்காரர்கள் இப்போதும் வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களிலும் இலட்சங்களில் ஒன்றுகூடுகிறார்கள். ஆரம்பத்தில் சாத்வீக அணுகுமுறைகளில் பெரிதும் சார்ந்திருந்த மக்கள் திரள் போராட்டம் வன்முறை சார்ந்ததாக மாறியிருக்கின்றது. ஒன்று சேரும் மக்கள் பொதுச் சொத்துக்களை, குறிப்பாக பொலிஸ் வாகனங்கள் போன்றவற்றை முற்றாக எரித்தும் சேதப்படுத்தியுமிருக்கிறார்கள்; பாதைகளை மறித்தும் வாகனத் தடைகளை ஏற்படுத்தியும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். மஞ்சள் ஜாக்கெட்களை அணிவதைத் தமது எதிர்ப்பின் அடையாளமாகக் காண்பிக்கின்றனர். ஐரோப்பாவின் இரண்டாவது பெரும் பொருளாதாரமான பிரான்ஸ் நெருக்கடியிலிருந்து மீளாமல் தவிக்க பெரும் மக்கள் திரள் காரணமாகியிருக்கின்றது.

வன்முறைகளாக நிகழ்வுகள் மாறியதற்கு அரசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் என இரு தரப்புமே பொறுப்பேற்க வேண்டுமெனப்படுகிறது. மஞ்சள் சட்டை இயக்கத்தவர் தமது போராட்ட ஒழுங்குகளை நியாயப்படுத்துவதோடு அதிபர் மக்ரோன் தமது டிவிட்டரில் குடியரசுக்கும் அதன் பாதுகாவலர்கள், பிரதிநிதிகள், அதன் அடையாளச் சின்னங்களுக்கும் எதிரான மிகுந்த வன்முறை இது எனக் குறிப்பிட்டிருந்தார். பிரான்ஸினதும் ஐரோப்பாவினதும் அண்மைய வரலாற்றில் சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சமூக நீதிக்காக மாபெரும் மக்கள் தொகையினர் திரண்டுள்ளதை கடந்த வாரங்களில் காணமுடிகின்றது.

2017 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 40 வயதான இமானுவேல் மக்ரோன் இளம் தலைமுறையின் பிரதிநிதி என்ற சுலோகத்துடனும் புதிய கொள்கைகளுடன் பிரான்சின் சுபீட்சத்துக்கான ஒரே வழியாக தான் உருவாக்கிய தமது புது பிராண்ட் கட்சியை (La République En Marche – முற்போக்குக் குடியரசு என்பது மக்ரோன் 2016 இல் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பிரான்சில் ஆட்சிக்கு வந்தது) முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார். புளித்துப் போன பொருளாதாரக் கொள்கைகள், ஆட்சி முறைகளில் சோர்ந்து போயிருந்த பிரான்சியருக்கு புதிய உத்வேகத்தைத் இவர் தருவாரென்ற பிரசாரத்தை ஊடகங்கள் கச்சிதமாகச் செய்தன. இமானுவேல் மக்ரோனின் அணி மேற்கொண்ட சமூக ஊடகப் பிரசாரமும் பிறநாட்டு உளவு அமைப்புக்களது பிரசாரத் திட்டங்களை முறியடிப்பதில் மேற்கொண்ட வியூகங்களும் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டன.

மாற்றங்களின் தேவதூதனாகப் பார்க்கப்பட்ட இமானுவேல் மக்ரோன் விரைவிலேயே தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கினார். மக்ரோன் மக்களுக்கானவரல்ல; பெருமுதலாளிகளுக்கான அரசியல்வாதியாகவே இருப்பதாக வீதிகளில் திரளும் எதிர்ப்பாளர்ககள் கோஷமிடுகின்றனர். அதிபராகிய குறுகிய காலத்திலேயே பிரான்சில் ISF எனப்பட்ட பணக்காரர்களிடம் பெறப்பட்ட வரியை சில துறைகளுக்கு மட்டுப்படுத்தி தான் பணக்காரர்களின் ஜனாதிபதியென நிரூபித்தார்.

அதிபர் மக்ரோன் வாக்களித்தபடி மாற்றங்களும் நிகழவில்லை; தொழில்வாய்ப்புக்கள் உருவாகவுமில்லை; வாழ்க்கைத்தர உயர்வும் இல்லை. மக்ரோன் செய்தது மக்களை மாற்றம் என்ற மந்திரத்தால் இலகுவில் போதையூட்டி வெற்றியைத் தட்டிக் கொண்டது மட்டும்தான். அவர் பாரீஸின் மேட்டுக் குடிகளை விட்டும் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ளவே பெரிதும் உழைத்தார்; புதிய உலக ஒழுங்கொன்றின் முகவராகத் தன்னை அடையாளம் செய்தார். ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹொலாண்டே துவக்கிவைத்த மக்களுக்குப் பாதகமான திட்டங்களைக் கூட பெருமுதலாளிகளின் வேண்டுகோளின்படி தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

மக்ரோன் அரசியல்வாதி என்பதற்கு முன்பு பெரும் இலாபமீட்டும் கார்ப்பரேட் கம்பனிகளின் தனிப்பெரும் உரிமையாளர். அவர் தனது வர்க்க நலனை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்து இன்று சாயம் வெளுத்து மக்கள் திரளின் சக்திக்கு முன் கையாலாகா நிலையிலிருக்கின்றார்.

வரலாற்றின் மாபெரும் திருப்பங்களில் பாரீஸின் தெருக்களும் பிரான்ஸிய மக்களது உதிரங்களும் பெரும் பங்களிப்புக்களை நல்கியிருக்கின்றன. ஏழு கோடியை அண்மித்த மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் தனது ஐந்தாவது குடியரசைப் பிரசவிக்கும் போராட்டமாக இது வலுவடையலாம் என அரசியல் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியை ஆட்டங்காண வைத்திருக்கும் மஞ்சள் சட்டை இயக்கம் ஆரோக்கியமான மாற்றங்களை உலகுக்குத் தரவேண்டும். அப்படியாயின் அது மேற்கொள்ள வேண்டிய பயணம் நெடியது. மக்கள் திரளொன்றின் அரசியல் போராட்டத்துக்கு இன்னும் புதிய அர்த்தங்களைத் தரும்.

நன்றி: சர்வதேசப்பார்வை

Leave a comment