ஹிஜ்ரத் – சீறாவின் மகத்தான பாய்ச்சல்

முஸ்லிம்களது மாபெரும் அணிதிரளலான ஹஜ் கிரியைக்குப் பின்பு இஸ்லாமிய உம்மத் ஹிஜ்ரத்தை நினைவுகூரத் தயாராகிவிடும்.

ஹிஜ்ரத் என்ற அறபு மொழிச்சொல் விட்டுச் செல்லல், துறந்து செல்லல் போன்ற கருத்துக்களைத் தரும். நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தாயக மண் மக்காவை விட்டும் பிற்காலத்தில் மதீனதுந் நபி எனப்பட்ட யத்ரிப் நகரை நோக்கிச் சென்றதை இஸ்லாமிய வரலாறு ஹிஜ்ரத் என்கிறது.

நபியவர்கள் ஹிஜ்ரத் புலம்பெயர்வதற்கு முன்பே ஏறத்தாழ மக்காவைச் சார்ந்த பெரும்பாலான நபித் தோழர்களும் மதீனாவை அடைந்திருந்தனர். நபித் தோழர்களது ஹிஜ்ரத் எட்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றிகொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்தது.

யத்ரிபுக்குச் செல்ல முன்பே ஹபஷா (இன்றைய எதியோப்பியா) பகுதிக்கு இரு தடவைகளில் நபித் தோழர்கள் அனுப்பப்பாட்டிருந்த போதிலும், யத்ரிப் (மதீனா) நோக்கிய புலப்பெயர்வு தான் ஹிஜ்ரத் என்பதன் மூலம் நாடப்படுகிறது.

இதனை விடவும் ‘ஹிஜ்ரத்’ எனும் புலப்பெயர்வு நபிமார்களுக்கு அல்லாஹ் விதித்த ஒரு நியதியாகவும் கருதப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பல நபிமார்களும் தமது பிறந்தகங்களை விட்டும் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு வஹி அருளப்பட்ட முதற்கணம் எழுந்த அச்சத்தால் துணைவியார் கதீஜா (ரழி) அவர்களுடன் அவரது உறவுக்காரரும் வேதங்கள் பற்றி அறிந்திருந்த வயோதிப மனிதரான வரகத் பின் நவ்பலிடம் சென்ற போது அவரும் “உமது ஊரார் உம்மை இவ்வூரை விட்டும் வெளியேற்றும் போது நான் உங்களுக்குத் துணையாக இருக்க உயிர்பிழைத்து வாழவேண்டுமே!” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்களும் பின்னணிகளும் நபிமார்களது வாழ்வில் ஹிஜ்ரத் என்பது நியதி எனப் புரியவைக்கின்றது. அது தஃவா இயங்கியலில் தவிர்க்க முடியாத அம்சம். எனவே ஹிஜ்ரத் என்பது உயிர்பிழைப்பதற்காகத் தப்பியோடுதல் அல்ல. மாற்றாக தஃவாவில் அதுவொரு மகத்தான மைல்கல்லாகும். உமர் (ரழி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட பொழுது ஹிஜ்ரத் நிகழ்வுதான் இறுதியில் தெரிவானது.

நபி (ஸல்) அவர்களது பிறப்பு, மரணம், நுபுவ்வத், மிஃராஜ், பத்ர் மற்றும் மக்கா வெற்றிகள் போன்ற இன்னோரன்ன முக்கிய நிகழ்வுகள் நபியவர்களது சீறாவிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இருந்தபோதும் ஹிஜ்ரத் உமர் (ரழி) அவர்களிடம் முதலிடம் பெற்று இஸ்லாமிய வருடக் கணிப்பீடு ஹிஜ்ரத்திலிருந்து
துவங்கியது. இதனால்தான் ஹிஜ்ரத்தை சீறாவின் மகத்துவம் பொருந்திய பாய்ச்சல் என்போம்.

ஹுனைன் யுத்தத்துக்குப் பின்பு ஃஙனீமத் பொருட்களைப் பங்குகொடுத்தது பற்றி அன்ஸாரி தோழர்கள் சிலர் மத்தியில் சிறு அதிருப்தி நிலை எழுந்து அதனை நபியவர்கள் சமாதானப்படுத்திவிடும் போது “ஹிஜ்ரத் என்ற சிறப்பு மாத்திரம் இல்லையெனின் தானும் அன்ஸாரிகளைச் சார்ந்தவராக மாறிவிட்டிருப்பேன்” என்று சொல்லும்போது ஹிஜ்ரத்துடைய உன்னதத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

நபியவர்கள் அலி (ரழி) அவர்களை தமது படுக்கையில் உறங்கச் சொல்லிவிட்டு அபூபக்ர் (ரழி) அவர்களோடு மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற பயணம், அதில் இடம்பெற்ற அற்புத சம்பவங்களையும் இறுதியாக ‘தலஅல் பத்று’ வரவேற்புப் நிகழ்வும் அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்களது வீட்டின் முன்னால் நபியவர்களது ஒட்டகம் தரித்தது வரைக்கும் சம்பவங்களாகவும் கதைகளாகவும் நமது நினைவுகளில் தங்கிவிட்டதற்கு அப்பால் நம்மத்தியில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய அம்சமாக ஹிஜ்ரத் இருக்க வேண்டும்.

ஏன் அவ்வாறான கவனம் அவசியமானது? ஹிஜ்ரத் என்பது முஸ்லிம்களது இருப்புக்கான போராட்டத்தின் முக்கிய தீர்மானம். ஏனெனில் முஸ்லிம்களது இருப்புத்தான் இஸ்லாத்தின் இருப்பாகும். இஸ்லாத்தின் இருப்புக்காக இஸ்லாத்தின் அடிநாதம் ‘தௌஹீத் – ஏக இறை’ கொள்கையை நிலைநாட்ட உலகில் கட்டப்பட்ட ஆலயம் கஃபாவை விட்டுவிட்டு வேறொரு நகருக்குச் செல்லும் தீர்மானத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொள்கிறார். அடுத்து, ஹிஜ்ரத்தினது திட்டமிடல்கள் காலத்தால் வெகுமுற்போக்கானவை.

ஹிஜ்ரத் நிகழ்வினது திட்டமிடல் நுணுக்கங்கள் பற்றி ஏராளம் ஆய்வுகள் அறபுலகிலும் மேற்கு நாடுகளிலும் வெளிவந்திருக்கின்றன. ஹிஜ்ரத்தில் திட்டமிடல் பற்றிய மேலோட்டமான பார்வையொன்றை இவ்வாறு நோக்க முடியும்:

1- நபியவர்கள் அல்லாஹ்வின்பால் முழுமையாக தவக்குல் வைத்ததோடு பயணத்தின் இலக்குகளை தெளிவாக வரையறுத்திருந்தார். அத்தோடு ஹிஜ்ரத்துக்கான முன்னேற்பாடுகள், சாதனங்கள், கூடவருகை தருவோர் என்பன முற்கூட்டி நிச்சயிக்கப்பட்டிருந்தன.

2- திடுதிப்பென ஓரிரவுக்குள் மேற்கொள்ளப்பட்டதல்ல ஹிஜ்ரத். அதற்கென இரவுபகலாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பலம்-பலவீனங்கள் ஆராயப்பட்டு ஒவ்வொரு இலக்கை அடைவதற்கும் பாதை வரையப்பட்ட பயணமாக ஹிஜ்ரத் அமைந்தது.

3- அவசியப்படும் மனித வளங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் சிறப்புறத் தயார்செய்யப்பட்டிருந்தது.

அப்துல்லாஹ் பின் அபூபக்ர் இரவில் மக்காவிலிருந்து செய்திகளைக் கொண்டுவந்து தருவார். ஆமிர் இப்னு புஹைரா எனும் இடையர் பாலைவன பாதை நெடுகிலும் மனிதர் பயணம் செய்துள்ளனர் எனக் காட்டிக் கொடுக்கும் பாதச் சுவடுகளைத் தனது மந்தை மூலம் தொடர்ந்து அழித்துக் கொண்டே வந்தார். அவர்களது வழிகாட்டியாக செயல்பட்ட அப்துல்லாஹ் பின் உரைகித் முஸ்லிம் அல்லாத ஒருவர்.

அஸ்மா பின்த் அபூபக்ர் உணவையும் ஏனைய கட்டுச்சாதனங்களையும் கொண்டுவருவார். இங்கு நபியவர்கள் பெண்களது பங்களிப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதை நோக்குகிறோம். எல்லாத் திட்டமிடலிலும் சாதுரியம், தந்திரோபாயத்துக்கு முக்கிய இடமுண்டு. அவ்வாறே உடற்பலத்துக்கும் முக்கிய இடத்தை நபியவர்கள் வழங்கி அலி இப்னு அபீதாலிபைத் தனது படுக்கையில் பாசாங்காக நித்திரைகொள்ளப் பணித்திருந்தார். ஏனெனில் அலி சாதுரியம் மிக்கவர் என்பதோடு எந்த சூழ்நிலையையும் துணிகரத்தோடு எதிர்நோக்கும் தீரம்கொண்டவர்.

4- ஹிஜ்ரத் மேற்கொண்டு செல்லப் போகும் யத்ரிப் நகர் குறித்த ஆழமான பார்வையை நபியவர்கள் கொண்டிருந்தார். மதீனாவை அடைந்தவுடன் அங்கு மத்திய தளமாக மஸ்ஜிதுந் நபவியை அமைத்ததோடு, அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவர் இடையில் நூற்றாண்டு காலப் பகையை மறக்கச் செய்து சினேகத்தைத் தோற்றுவிக்க முடிந்தது. மதீனா சாசனம் ஹிஜ்ரத்துடனான நிகழ்வுகளில் சிறப்பு மிக்கதாகும். யத்ரிப் பற்றி எந்தளவு ஆழமான பின்னணியை நபியவர்கள் கொண்டிருந்து பல கோத்திரங்கள், இனக் குழுக்களுக்கிடையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வைத்ததார் என்பது அவர்களது ஆளுமையின் சிகரத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. மதீனா சாசனம்தான் அதுவரை ‘தஃவா குழு’ வடிவொன்றில் இருந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக நிலைமாறுவதற்குண்டான அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது.

நபியவர்களது சீறாவில் நிகழ்ந்த மகத்தான ஹிஜ்ரத் நினைவுபடுத்தப்படும் போது நாமும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஏராளம் அம்சங்கள் உண்டு. நபிகளாரிடத்தில் எத்தகைய தவக்குல் இருந்திருக்க வேண்டும்! எத்தகைய பொறுமையும் தியாகமும் அர்ப்பண சிந்தனையும் இருந்திருக்க வேண்டும்! எவ்வளவு உளத்தூய்மை இருந்திருக்கவேண்டும்! கஷ்ட-இலகு நிலைகளில் தளம்பல் கொள்ளாது எந்தளவு நிலைத்து நின்றிருக்கவேண்டும்! இறுதி வெற்றி குறித்த மனவுறுதியின் பலம் எவ்வளவு இருந்திருக்கும்! விளைவாக இஸ்லாம் மகத்தான பாய்ச்சலொன்றை நிகழ்த்தியது. இன்று நமது தலைமுறை வரைக்கும் தூய்மையாக இஸ்லாத்தின் தூது கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

நபியவர்கள் மட்டுமல்ல அவர்தம் தோழர்களிடத்திலும் எத்தனை தியாகம் வெளிப்பட்ட தருணம் அது. பெரும் செல்வந்தர்களாக இருந்த நபித் தோழர்களும் அனைத்தையும் இஸ்லாத்தின் வாழ்வுக்காக இழக்கத் துணிந்து இழந்தனர். நபியவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டுப் பயணிக்கையில் கொண்டிருந்த அபார நம்பிக்கையைப் பார்த்து நாம் மெய்சிலிர்த்துப் போவோம். சொந்த ஊரில் இடமற்றிருக்கையில் சுராகா இப்னு மாலிக் என்பவனுக்கு அக்கால வல்லரசு கிஸ்ராவின் கிரீடத்தை அவனது தலையில் அணிவிப்பதாக வாக்குக் கொடுப்பது நபியவர்களது ஆழ்ந்த தூரநோக்கைக் காட்டிநிற்கின்றது.

இறுதித் தூதைக் கருவறுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் ஷைத்தான் கூட ஹிஜ்ரத்தைத் தடுத்து நபியவர்களைப் படுகொலை செய்துவிட தாருந் நத்வாவிலே நடந்த இணைவைப்போரின் கூட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்தான். குறைஷியரின் இறுதி முயற்சி சூறா யாஸீனின் சில வசனங்களின் முன்னால் தூசாய்ப் பறந்தது. நபியவர்கள் வீட்டை விட்டு வெளிச்சென்று தோழர் அபூபக்ரின் இல்லமேகுகையில் அவ்விராப்பொழுதிலும் நபிகளார் வருகைக்காக அவ்வில்லம் வாயில் கதவு திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. உற்ற தோழர் உடனிருப்பது தஃவாவின் வெற்றியின் முதல்படியாகிறது. தவ்ர் குகையில் எதிரிகள் மிக அருகே வந்துவிட்ட சூழலில் தோழர் அபூபக்ர் அச்சவயப்பட்டு நாமிருவர் மட்டுமே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் “இன்னல்லாஹ மஅனா – நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு இருக்கிறான்” என நபியவர்கள் மொழிகையில் முழு உலகமும் இஸ்லாத்தின் தூதினுள் கட்டுண்டுவிடுகிறது.

மக்கா வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பு ஹிஜ்ரத் என்று ஒன்றில்லை. ஆனால் அது எம்முன்னே விட்டுச் சென்றிருக்கும் பணி பாரியது! மகத்துவம் மிக்கது!!!

சொத்துப் பங்கீட்டில் சமத்துவம் – ஆரம்பகால விவாதங்கள்

semeino-pravo

தமிழில்: ஸியாப் முஹம்மத் இப்னு ஸுஹைல்

கடந்த ஆகஸ்டு மாதம் தூனிசியா நாட்டு அதிபர் காஇத் சிப்ஸி பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் சமபங்கு அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தது தொடக்கம் அங்கும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது.

முக்கியமாக வாரிசுச் சொத்துப் பங்கீடு குறித்த விடயம் இஸ்லாத்திலே குறை கண்டுபிடிக்க விரும்புவோர் கையிலெடுக்கும் விவகாரமாகவும் காணப்படுகின்ற நிலையில் இப்போலிக் குற்றம் சுமத்தல்களுக்கு தகுதியான அறிஞர்களால் அந்தந்தக் காலத்தின் மொழியில் பதில் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம் குறித்த விடயம், மனித சிந்தனைக்கு இடம் வைக்கத் தேவையற்ற அளவுக்கு திட்டவட்டமான கருத்துடன் கூடிய அல்குர்ஆன் வசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. எனவே அந்த சட்டத்திலே மனித உற்பத்திகள் கைவைக்க இடமளிப்பது இறை வஹியை மாசுபடுத்தவும் அதிலே குறை காணவும் அனுமதிப்பதற்குச் சமமாகும். இதனாலேயே கடந்த மாதம் தூனிசிய அதிபரின் வேண்டுகோளின் போதும், இதற்கு முன்னரும் அநேக சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய அறிஞர்கள் ஆக்ரோஷமாக இதுபற்றிப் பேசி இஸ்லாத்தின் கருத்தை மிகத் தெளிவாக முன்வைத்து வந்திருக்கிறார்கள்.

இஸ்லாம் முன்வைக்கும் சொத்துப் பங்கீட்டு விவகாரம் தொடர்பிலான விவாதங்கள் அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் கிளப்பப்பட்டு இன்னும் ஒரு நூற்றாண்டு கூடக் கழியவில்லை. இக்கருத்துக்கள் தோன்றிய வரலாற்று வேர்களை நோக்கி நாம் பயணித்தால் 1928ம் ஆண்டு வாக்கில் எகிப்தின் புத்திஜீவித்துவ, பெண்ணிய மட்டங்களில் இடம்பெற்ற விவாதங்கள் முக்கியம் மிக்கவை. எனினும் இக்கருத்துப் பரிமாறல்களை நோக்குகையில் பெண்ணுக்கு சொத்துப் பங்கீட்டில் சமபங்கு அளிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை அக்கால சமூக மாற்றத்தினாலோ அல்லது முன்னேற்றகரமான சிந்தனைகளாலோ ஏற்பட்டதொன்றல்ல என்பது துலங்குகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அரபு-இஸ்லாமிய உலகில் மக்கள் இஸ்லாமியக் கருத்துக்களை விட்டும் தூரமாகி அவர்கள் மத்தியில் ஷோசலிஸக் கருத்துக்கள் அறிமுகமாகி செல்வாக்குச் செலுத்தத் துவங்கிய காலகட்டமாகும்.

முதன் முதலில் இக்காலப் பின்னணியில் எகிப்தின் கிப்தியக் கிறிஸ்தவ சிந்தனையாளர் மூஸா ஸலாமா ‘கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு’ நிகழ்வொன்றில் 1928இல் நிகழ்த்திய விரிவுரையில் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் சமபங்கு வேண்டும் என்பதை சமத்துவத்தின் அவசியம், சொத்துக்கள் இல்லாத பெண்களை ஆண்கள் விரும்பவில்லை என்பவற்றைக் காரணமாக முன்வைத்துப் பேசியிருந்தார்.

நிகழ்வுக்குப் பின்னர் எகிப்துப் பெண்ணிய அமைப்பின் நிறுவனரான ஹுதா ஷஃராவிக்கு எகிப்துப் பெண்களுக்கு இவ்விடயத்தில் நீதி கிடைக்கப் போராடுவதற்கும் அதனை அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைக்கவும் அழைப்பு விடுக்கும் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு எகிப்துப் பத்திரிகைகள் பெரும் இடம் கொடுக்க பரபரப்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதை நோக்கலாம். எகிப்து உட்பட அரபுலகின் புத்திஜீவித்துவ மட்டங்களை இஸ்லாம் அல்லாத சிந்தனைகள் நிரப்பிக் கொண்டிருந்த அக்காலப்பகுதியில் மூஸா ஸலாமாவின் கருத்துக்களை மறுத்துப் பதிலளிப்பதில் இலக்கிய விமர்சகரான முஸ்தபா ஸாதிக் ராபிஈ மற்றும் பெண்ணியவாதியாக பிரபலம் பெற்ற ஹுதா ஷஃராவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராபிஈ தனது கட்டுரையில் மூஸா ஸலாமா முற்றாக மேற்குலகின் சிந்தனைக்கு சார்ந்திருந்து அதனைக் கண்மூடிப் பின்பற்ற அழைப்பதை விமர்சித்திருந்ததோடு அவர் இஸ்லாத்தை அதன் சரியான புரிதலில் விளங்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அதனை அவர் சிறுபிள்ளைத்தனமான புரிதல் என வர்ணித்திருந்தார்.

ராபிஈயின் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு: “இஸ்லாமிய ஷரீஆவின்படி மகளுக்கான சொத்துப் பங்கீடு என்பது ஒன்று அல்ல. இங்கு திருமணம் என்ற ஒழுங்கொன்றும் உள்ளது. இரண்டும் ஒன்றிணைந்து தான் அவளது சொத்துரிமை உள்ளது. அதாவது பெண் ஒரு புறம் தனது பங்கினைப் பெற்றுக் கொண்டு இன்னொரு புறமாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்னொரு பங்கை விட்டுக் கொடுக்கிறாள்.” அதாவது அவளின் கணவனின் சொத்தில் அவளுக்குப் பங்கு இருக்கின்றது. கணவனுக்கு இந்தளவுக்கு மனைவியின் சொத்தில் பங்கு இல்லை என்பதனை அவர் தெளிவுபடுத்துகிறார். அத்தோடு அவளுக்கான செலவினத்துக்குரிய கடமையும் கணவனிடமே உள்ளது.

இதுப பற்றிய ஹுதா ஷஃராவியின் கட்டுரை “சியாஸா” என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. அவரது ஆக்கத்தில் மூஸா ஸலாமாவின் கருத்துக்களுக்கு இரு காரணிகளால் தனக்கு உடன்படு இல்லை என்பதை விளக்கியிருந்தார்.

(1) எகிப்தின் பெண்ணிய இயக்கம் மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தாலும் எல்லாவற்றிலும் மேற்கினைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அந்தந்த நாட்டுக்கென சட்டங்களும் வழக்காறுகளும் இருக்கும். ஒரு இடத்துக்குப் பொருந்துபவை இன்னொரு இடத்துக்குப் பொருந்த மாட்டாது.

(2) இவ்வாறு ஒரு வித்தியாசம் இருப்பதனால் பெண்கள் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை அவர் இரண்டாவதாக வலியுறுத்தியிருந்தார்.

அடுத்து, சொத்துரிமை இல்லாத பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் முன்வராமல் இருப்பது உண்மையெனின் கிழக்குலகை விடவும் வாரிசுரிமையில் சமத்துவம் பேணப்படுவதாகக் கூறப்படும் ஐரோப்பாவில் ஏன் பிரம்மச்சாரிகளது தொகை அதிகரித்திருக்கிறது என ஹுதா ஷஃராவி கேள்வி எழுப்பினார்.

அத்தோடு இவ்வாறு சமபங்கீடு அளிப்பது ஒரு கணவனுக்கு தனது மனைவி, குழந்தைகளுக்கு செலவளிப்பதை விட்டும் நீங்கிக் கொள்ளும் மனநிலையைத் தோற்றுவிக்காதா எனக் கேள்வியெழுப்புகிறார். குறிப்பாக இந்நிலை வறுமைப் பின்புலத்துடன் வரும் பெண்களுக்கு அதிக கஷ்டத்தை சுமக்கச் செய்யும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஹுதா ஷஃராவியின் எழுத்துக்கள் இறுதியில் இவ்வாறு நிறைவு பெறுகிறது: “பெண்ணுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தின் மூலம் நாம் நாடுவது சட்டத்தை மாற்ற அல்லது ஷரீஆவைக் கவிழ்த்து விடும் முயற்சி அல்ல. இந்த சட்டத்தில் நாம் ஆட்சேபமோ, சந்தேகமோ வைக்கவில்லை. எமது கோரிக்கை இறைவனும் அவனது சட்டமும் எந்நோக்குடன் உள்ளதோ அந்த நோக்கத்தை அடையும் வகையில் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தவே உழைக்கிறோம். அத்துடன் ஒரு சில பெற்றார் மார்க்கத்தின் பெயரால் பெண் பிள்ளைகளுக்கு சொத்துப் பங்கீட்டை மறுத்தால், நாம் அதற்கென மார்க்கத்தை பழித்துரைக்க மாட்டோம். இஸ்லாம் மார்க்கம் இந்த சூழ்ச்சிகளை விட்டும் தூய்மையானது.”

>மீண்டும் எழுந்த சர்ச்சை:

இந்த வாத-விவாதங்கள் நிறைவுற்று இரு வருடங்களில் எகிப்தின் அல்அஹ்ராம் பத்திரிக்கையில் மூஸா ஸலாமாவின் நண்பர் மஹ்மூத் அஸ்மி 1930 ஜனவரியில் எழுதிய கட்டுரை மூலம் மீளவும் மேலெழுந்தது. அதற்கு சிறிது காலத்தின் பின்னரேயே பஃக்ரி மீக்காயீல் என்பவர் அமெரிக்கப் பொதுக் கூட்டமொன்றில் பெண்ணுக்கு சொத்துரிமையில் சமபங்கு வேண்டுமென ஒரு விரிவுரை செய்கிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மீளவும் எகிப்திலே சர்ச்சை வெடிக்கின்றது; விவாதங்கள் தொடர்கின்றன. இவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஷெய்க் ரஷீத் ரிழா தனது பிரபலம் மிக்க “அல்மனார்” சஞ்சிகையில் கட்டுரை வரைகிறார். அதில் அவர் பெண்ணுக்கு சொத்துரிமையில் சமமாக வேண்டுவோரது கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறார். அதனது சாராம்சத்தை இவ்வாறு நோக்கலாம்:

(1) முஸ்லிம்கள் அநேக விவகாரங்களில் ஷரீஆ சட்டத்தில் தங்கியிருப்பதோடு அரசின் சட்டத்தையும் ஏற்றுள்ளனர். அவ்வாறிருக்க தனியார் சட்டப்பகுதிகள், வாரிசுரிமைச் சட்டப் பகுதிகளோடு தொடர்பான பகுதிகளில் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றுவதை விட்டுவிட  ஏன் உடன்படுவதில்லை?

(2) சில முஸ்லிம் அறிஞர்கள் கால மாற்றத்துக்கேற்ப மனித நலன்களும் மாறியிருப்பதைக் கருத்திற்கொண்டு உலக விடயங்களோடு தொடர்பான சட்டங்களை விட்டுவிடலாம் என்கின்றனர்.

(3) இன்று வாரிசுமையின் நிலை அதன் அடிப்படையை விட்டும் அகன்றிருக்கின்றமை.

(4) முழு உலகுமே சகோதரனுக்கும் சகோதரிக்கும் சம அளவில் சொத்துக் கிடைக்க வேண்டுமென சொல்கிறதே?

இறுதியில் ஷெய்க் ரஷீத் ரிழா தனது கருத்தைப் பதிவு செய்கிறார்: “ஷரீஅத் என்பது நாம் விரும்புகிற பகுதியை எடுத்துக் கொண்டு நமக்கு விருப்பமற்றதை விட்டுவிடக் கூடிய விடயமல்ல; இது மார்க்க விவகாரம். மார்க்கத்தைப் பூரணமாக ஏற்க வேண்டும். அதன் பயனை நாம் அறிந்து கொண்டாலும்தான் இல்லாவிட்டாலும்தான் பின்பற்றியேயாகவேண்டும். ஷரீஆவைப் பின்பற்றுவது தெரிவுச் சுதந்திரத்துக்குட்பட்டது என்பதை முன்சென்ற அறிஞர்களோ தற்கால அறிஞர்களோ எவரும் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, இஜ்மாஃ அனைத்துக்கும் முரணானது. அவ்வாறு சொல்வது தெளிவான நிராகரிப்பாகும்.அது இபாதத் பகுதியாகலாம் அல்லது முஆமலாத்தாக இருக்கலாம், ஆதாரம் உறுதியென்றால் கடைப்பிடிக்கத்தான் வேண்டும்.”

பெண்ணுக்கு சொத்துப் பங்கீட்டில் சமபங்கு வேண்டும் என்ற கருத்து மிகக் குறுகிய கால வரலாறு கொண்ட பலவீனமான வாதம். அக்காலத்திலேயே அதற்கு உரிய பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அரபு-இஸ்லாமிய உலகில் இக்கருத்தினை ஆதரிப்பவர்கள் நாற்பதுகளின் பின் அதிகரித்திருக்கிறார்கள்.

பின்நாட்களில் வந்த அறிஞர்கள் இன்னும் இதனை ஆழமாகத் தெளிவுபடுத்தியுமுள்ளார்கள். அவர்களது கருத்துக்கள் பெண்ணுடைய விவகாரத்தில் இஸ்லாத்தின் நீதித் தன்மையை இன்னும் பறைசாற்றுகிறது:
(1) ஆண் மஹர் கொடுப்பதின் மூலமும் ஆணே குடும்ப செலவினத்தைப் பொறுப்பேற்பதன் மூலமாகவும் பெண்ணுக்கு சொத்தும் அதனை அனுபவிக்கும் வாய்ப்பும் உள்ளது.
(2) பெண் போல இரு மடங்கு சொத்துப் பங்கீட்டினை ஆண் பெறும் சந்தர்ப்பங்கள் நான்குதான் உண்டு.
(3) சரிசமமான சொத்துப் பங்கீடே அதிகமாகும்.
(4) பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெண் ஆணை விட அதிகம் பங்குகள் பெறுகிறாள்.

இவை சில குறிப்புக்கள் மட்டுமேயாகும். கட்டுரையின் விரிவஞ்சி மேலதிக தகவல்களைத் தவிர்க்கிறோம். இறை சட்டத்தின் அற்புதத்துக்கு வாரிசுரிமை தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதனாலேயே அது குறித்த சட்டங்கள் அல்குர்ஆனில் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. தூதர் (ஸல்) அவர்களது எச்சரிக்கைப்படி பூமியை விட்டும் விரைவில் மறையும் அறிவாகவும் வாரிசுரிமைக் கலை குறிப்பிடுப்பட்டுள்ளது.

(குறிப்புக்கள்: கட்டுரை www.mugtama.com,  www.islamtoday.netwww.raialyoum.com ஆகிய இணையங்களிலிருந்து தொகுக்கப்பட்டது.
மேலே மேற்கோள் காட்டப்படும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஹுதா ஷஃராவியின் ஹிஜாப், குடும்ப அலகு பற்றிய கருத்துக்கள் இஸ்லாமிய அறிஞர்களால் மறுத்துப் பேசப்பட்டுள்ளன.)