கேரளாவில் ஒரு புத்தக கிராமம்

கேரளாவை கடவுளின் சொந்த தேசம் என வர்ணனை செய்வதை அறிந்திருக்கிறோம். இந்தியாவின் நறுமணத் தோட்டம் எனவும் பலவிதமாகவும் மலையாள தேசத்தை போற்றுகிறார்கள்.

அந்த வர்ணனைகள் மறுக்க முடியாத உண்மைதான். அழகில் மட்டுமல்ல சில விஷயங்கள் கேரளாவில் மட்டுமே சாத்தியமாகி வருகின்றன என்பதனாலேயே அப்படிச் சொல்கிறோம்.

கலை, இலக்கியம், சினிமாவில் மலையாளம் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. புதிய பல விஷயங்களை கேரளா மூலம் நாம் அடைந்திருக்கிறோம் என்பதால் கேரளாவைப் போற்றும் எல்லா வர்ணனைகளும் அதற்குரித்தானதே.

அந்த வரிசையில் இணைந்த ஒரு புத்தாக்க விஷயத்தினையே நாம் இந்த வீடியோவில் உங்களிடம் சொல்லப்போகிறோம்.

பெரும்குளம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தே அமைந்திருக்கும் பசுமையான கிராமம். கொல்லம் நகரிலிருந்து கேரளாவின் பச்சைப் பசேலென்ற இயற்கைத் தோற்றம் மிக்க சாலைகளுக்கூடாகப் பயணம் செய்தால் ஓட்டுக் கூரை வேயப்பட்ட சிறு கண்ணாடிக் கூண்டுகள் குருவிக் கூடு போல சாலையோரம் இருப்பதைப் பார்ப்பீர்கள். அமர்வதற்கு அருகிலே அழகிய பலகை இருக்கையையும் காணலாம்.

கிராமத்து எல்லையிலேயே உங்களை வரவேற்கும் “புஸ்தக கிராமம்” என்ற பெயர்ப்பலகை. அந்தக் கிராமம்தான் கேரளாவின் முதல் புத்தகக் கிராமமாகிய பெரும்குளம்.

பெரும்குளம் வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இந்திய சுதந்திர காலம் முதல் பிரபலமானது. மகாத்மா காந்தி படுகொலைசெய்யப்பட்ட 1948ம் வருடம் இந்தியாவே கலவரங்களால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது கேரளாவில் பெரும்குளம் மாத்திரம் காந்தியின் நினைவாக கிராமத்தின் இளைஞர்கள் சேர்ந்து “பாபுஜி ஸ்மாரகா வாயனஸாலா” என்ற காந்தி நினைவு வாசகசாலையை உருவாக்கினர். காந்திஜியை கேரளத்தில் பாபுஜி என்கின்றனர் என்பது சுவாரசியமான தகவல்.

கேரளாவின் இந்த புஸ்தக கிராமத்தில் ஆங்காங்கே 10 புத்தகக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2017 ஜனவரியில் முதலாவது புத்தகக் கூடு அமைக்கப்பட்டது. அடுத்த வருடமே மேலும் ஒன்பது புத்தகக் கூடுகள் அமைக்கப்பட்டது. கேரளாவுக்கு இது முதல் புத்தகக் கிராமமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் பிளார் என்கிற மஹாராஷ்டிர மாநிலத்தின் கிராமத்தில் 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புத்தகக் கிராமமே இந்தியாவுக்கு முதலாவது புத்தகக் கிராமமாகும். அது பற்றி விரைவில் வேறொரு தருணத்தில் சொல்கிறோம்.

கடந்த வருடமே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இத்திட்டம் பற்றி அறிவித்திந்திருந்த போதிலும் இவ்வருடம் ஜூன் 19ம் தேதி மலையாளத்தின் மூத்த எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் புத்தகக் கிராமம் திட்டத்தைப் பிரகடனம் செய்தார். கேரளாவின் வாசகசாலை இயக்கத்தின் தந்தை எனப்படும் பி.என். பணிக்கர் நினைவாக ஜூன் 19 இந்தியாவின் தேசிய வாசிப்பு நாளாக நினைவுபடுத்தப்படுகின்றது.

பெரும்குளம் புத்தகக் கூடுகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 50 புத்தகங்கள் இருக்கும். இதில் சிறுவர் இலக்கியத்துக்கே முக்கிய இடம். மக்கள் தேவையான புத்தகங்களை எடுத்து வாசித்துவிட்டு திரும்ப வைக்கலாம். இந்த சேவை இலவசமானது. காசு கட்டித்தான் நூலக அங்கத்தவராக வேண்டிய தேவை கிடையாது.

புத்தகம் கொண்டு போவதும் திருப்பிக் கொண்டுவருவதும் சரியாக நடக்குமா? இதனை சரியாக நடாத்திக்கொண்டுசெல்ல முடியுமா என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தது. எனவே எந்தவொரு புத்தகத்தை எடுத்துச் செல்வதாக இருந்தாலும் வேறொரு புத்தகத்தை வைத்துவிட்டே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது என்கிறார் கிராமத்தின் பாபுஜி நூலக முன்னாள் செயலாளர் விஜேஷ். இந்தத் திட்டத்தால் எந்நேரமும் புத்தகங்கள் இருப்பதோடு புதிய புத்தகங்களும் கிடைக்கின்றன. திட்டம் வெற்றிபெற்றிருக்கிறது.

இதனால் சிறுவர்கள் மத்தியிலும் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போனிலிருந்து விடுதலை பெற்றிருக்கின்றனர். சிறுவர்கள் லாக்டவுன் காலத்தில் அதிகம் வாசிக்கக் கிடைத்ததாகப் பெருமிதப்படுகின்றனர். ஏறத்தாழ 4,000 மக்கள் தொகைகொண்ட இக்கிராமத்தில் 600+ க்கு மேற்பட்டவர்கள் இந்த வாசகசாலைத் திட்டத்திலே அங்கத்தினர்கள் என்பது பெரும் வெற்றிதானே?

வீடியோவுக்கு அப்பால் இந்தத் திட்டம் நமது எல்லாக் கிராமங்களுக்கும் பொருந்தக் கூடியது. நகரங்கள் என்றால் நமது தெருவுக்கு மாத்திரம் சரி இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம்.

பெரும்குளம் புஸ்தக கிராமம் பற்றிய வீடியோ கீழே 👇

Leave a comment