முப்பாய்ச்சல் இலங்கை சாதனையை விரைவில் முறியடிப்பேன் – ஸப்ரீன் அஹ்மத்

கடந்த வாரம் இடம்பெற்ற 97வது தேசிய மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகளில், ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டிகளில் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து தேசிய மட்ட முதலிடத்தைத் தனதாக்கியவர் மாத்தறை மாவட்டம், வெலிகாமத்தைச் சேர்ந்த ஸப்ரீன் அஹ்மத். தேசிய மட்டத்தில் சாதித்து, இன்று சர்வதேச களம் நோக்கி செல்வதற்காக தன்னைத் தயார்செய்து கொண்டிருக்கிறார். அவரோடு டொரிங்டன் மெய்வல்லுனர் பயிற்சி மைதானத்தில் நாம் உரையாடியதை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

உங்களைப் பற்றி விடிவெள்ளி வாசகர்களுக்குக் கூறுங்கள்.
Safreen:
நான் ஸப்ரீன் அஹ்மத். வெலிகமவைச் சேர்ந்தவன். எனது உம்மா பஃக்ரியா கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர். வாப்பா நஜிமுதீன் வெலிகமவைச் சேர்ந்தவர். எமது குடும்பத்தில் எனக்கு மூத்த சகோதரி ஒருவரும் சகோதரர் ஒருவரும் இளைய சகோதரர் ஒருவரும் உள்ளனர்.

தந்தை சிறிய வியாபாரமொன்றை மேற்கொள்கிறார். தாயாரும் மூத்த சகோதரியும் வீட்டுத் தலைவிகளாக உள்ளனர். நானா ஸதாம் விஞ்ஞானத் துறையில் கற்று தற்போது மருந்து உற்பத்தி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இளைய சகோதரர் சிபான் உணவியல் கலை தொடர்பான கற்கையொன்றை முடித்துவிட்டு அண்மையில் கத்தாரில் பணிபுரியத் துவங்கியிருக்கிறார். நான் மட்டுமே விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

படித்தது மற்றும் பாடசாலைக் காலங்களைக் குறித்துக் கூறுங்கள்.
Safreen:
நாம் குடும்பத்தோடு குறிப்பிட்ட காலப் பகுதி வரைக்கும் மல்வானையில் வசித்து வந்தோம். எனக்கு சுமார் பத்து வயதாகும் வரைக்கும் அங்கே இருந்தோம். எனவே ஆரம்பக் கல்வியை ஐந்தாம் தரம் வரை மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையில் கற்றேன்.

பின்பு எமதூரான வெலிகாமத்துக்கு வந்ததன் பின் இங்கு அறபா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரைக்கும் கற்றேன். படிப்பில் பெரியளவு ஈர்ப்பு இருக்கா விட்டாலும் உயர்தரத்தில் கலைப் பிரிவில் படிப்பை நிறைவுசெய்ய முடிந்தது.

விளையாட்டுத் துறையில் நுழைந்தது எப்படி?
Safreen:
விளையாட்டில் நுழைந்தது விளையாட்டாகத்தான். என்னால் விளையாட்டுக்களில் சாதிக்க முடியும் என அவ்வளவாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக நான்காம் ஆண்டு படிக்கும்போதே எமது பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் தம் திறமையைக் காட்டத் துவங்குவர். என்றாலும் நான் ஏழாம் வகுப்புவரைக்கும் வந்த பின்பே இல்ல விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன்.

அதற்கு முன்னோடி எனது நானா தான். அவர் அப்போதிலிருந்து நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், உயரம் பாய்தல் மற்றும் ஓட்டப் போட்டி நிகழ்ச்சிகள் எனப் பல மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் முதலிடங்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்குப் போட்டியாக வீட்டிலும் பாடசாலை மைதானத்திலும் பாய்ச்சல் நிகழ்ச்சிகளில் விளையாட்டாக ஈடுபடுவேன்.

அப்போதுதான் என்னாலும் விளையாட்டுக்களில் சாதிக்க முடியுமென பாடசாலைக் கால விளையாட்டு இல்லங்களின் மூத்த மாணவர்கள் என்னையும் போட்டிகளில் ஈடுபடுத்தினர். எனக்கும் எனது நானாவுக்கும் ஒரு வயது வித்தியாசமே இருந்ததனால் பெரும்பாலும் இருவரும் ஒரே பிரிவிலேயே போட்டியிடுவோம். அக்காலங்களில் நானாதான் எப்போதும் முதலிடம் பெறுவார். நான் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைத் தான் பெற்றுக் கொள்வேன்.

முப்பாய்ச்சல் என்ற துறையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
Safreen:
உண்மையில் நான் விளையாட்டுத் துறைக்குள் சாதாரணமாகத் தான் நுழைந்தேன். எனினும் திறமைகளைக் காட்டியதன் காரணத்தினால் பாடசாலை இல்ல விளையாட்டு மட்டத்திலிருந்து வலய, மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. உயர்தரம் கற்கும் போது ஒரு தடவை வலய மட்ட போட்டிக்கென சென்ற போது அன்றும் இன்றும் எனது பயிற்சியாளராகத் திகழும் வை.கே. குலரத்ன அவர்கள் தன்னிடம் நீளம் பாய்தலில் பயிற்சி பெற்றுவந்த சத்துரங்க அய்யா மூலம் என்னை அணுகி எனது பாய்ச்சல் நன்றாக உள்ளதாகவும் உரியமுறைப்படி பயிற்சிபெற்றால் சாதிக்க முடியுமெனக் கூறி பயிற்சிக் குழாமில் இணைய வற்புறுத்தினார். என்றாலும் விளையாட்டுத் துறையில் சென்றால் என்ன பெரிதாக சாதிக்க முடியும் என்றெண்ணி நான் அதனைக் கணக்கில்கொள்ளாது சும்மா இருந்துவிட்டேன்.

பின்பு மீண்டுமொருதடவை மாகாண மட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கென சென்றிருந்த போதும் மீண்டும் எனது பயிற்சியாளர் வை.கே. குலரத்ன அவர்கள் அப்போது எமது பிரதேசத்தில் வலைப்பந்து பயிற்சியாளராக இருந்துவந்த லஹிரு அய்யா மூலம், பயிற்சிபெற வருமாறு அழைத்திருந்தார். லஹிரு அய்யாவை ஏற்கனவே தெரிந்திருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையோடு வந்து வீட்டிலும் எனக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமும் தெரிவித்தேன். அதன் பின்பு நடந்தவைதான் இன்று தேசிய மட்ட சாம்பியனாக உங்களது முன்னிலையில் வெளிப்பட வைத்திருக்கிருக்கிறது.

முப்பாய்ச்சலின் நுணுக்கம் என்ன? ஏன் அந்த நிகழ்ச்சியை மட்டும் தேர்வு செய்தீர்கள்?
Safreen:
முப்பாய்ச்சலில் குறுகிய செக்கன்களுக்குள் எமது உடம்பின் முழு சக்தியையும் வெளிப்படுத்த வேண்டும். எமது முழுச்சகக்தியும் 200% அளவுக்கு வெளிப்படுத்தப்படும் போதுதான் எம்மால் சிறந்த பாய்ச்சலொன்றை நிகழ்த்த முடியும்.

தற்போது என்னுடைய சிறந்த பாய்ச்சல் 16.33 மீற்றர். இலங்கையின் அதிகூடிய பாய்ச்சல் 16.71 மீற்றர். அதனைப் பாய்ந்தவரும் எமது குழுவில் தற்போது இருக்கிறார். என்றாலும் அவரது பாய்ச்சல் தூரம் குன்றியிருப்பதால் என்னால் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைக்க முடிந்துள்ளது. எனினும் தொடர் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் என்னால் இலங்கை சாதனையான 16.71 ஐ முறியடிக்கலாம் என நம்புகிறேன். குறிப்பாக இவ்வருடத்துக்குள் அதனை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளேன். அவ்வாறு செய்ய முடிந்தால் சர்வதேச பதக்கமொன்றையும் இலகுவாக ஈட்ட முடியும்.

முப்பாய்ச்சலைத் தவிர என்னால் நீளம் பாய்தலிலும் குறுந்தூர ஓட்டத்திலும் தேசிய மட்டத்தில் பதக்கம் பெறும் அளவு சாதிக்க முடியும். என்றாலும் உடல் உபாதைகளைக் கருத்தில் கொண்டும் என்னால் அதிகூடுதலாக சாதிக்க முடியுமான துறையைக் கவனத்திலெடுத்தும் இத்துறையில் மட்டும் இருக்கிறேன்.

இதற்கென ஒவ்வொரு நாள் காலையில் 7.00-10.30 மணி வரைக்கும், மாலையில் 3.30-6.00 மணி வரைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவோம். ஒவ்வொரு நாளும் 15 பாய்ச்சல்களைப் பாய்வதற்கான பயிற்சி உள்ளடங்கியிருக்கும். இதற்கென நான் அதிகமாக களைப்படைந்து பயிற்சிகளை மேற்கொள்வோம்.

இந்தத் துறையில் எதிர்கொண்ட தடங்கல்கள் என்ன? சமூகத்திடமிருந்தான ஒத்துழைப்புகள் எப்படியிருந்தன?
Safreen:
தடங்கல்கள் என சொல்லும் போது உடல் உபாதைகளைத் தான் கூற வேண்டும். 2015 மற்றும் 2017 இல் கெண்டைக் காலில் எனக்கு நிகழ்ந்த உபாதைகளால் எனது பயிற்சிகளை நிறுத்திவிட்டு தொடர்ந்து 6 மாதங்கள் சிகிச்சைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. சில தடவைகளில் சிகிச்சைகள் உரிய பயனை முழுமையாகத் தராத போது ஊசி மருந்துவகைகள் மூலமாகவும் சில வலிநிவாரணிகளைப் பெற வேண்டியிருந்தது.

சமூகத்திடமிருந்து என்று சொல்லும் போது எனது சூழலிலிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு கிடைத்தது. என்றாலும் அங்கீகாரம் என்று பெரிதாக எதனையும் நான் எதிர்பார்த்துக்கொண்டு ஈடுபடவில்லை. ஏனெனில் இது எனது துறை நான்தான் முயற்சித்து அடைந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணத்துடன் தான் தொடர்ந்து பயிற்சிபெறுகிறேன். முயற்சித்தால் அல்லாஹ் தருவான் என்ற இறைவாக்கு அதைத்தானே சொல்கிறது.

தவிர, ஆரம்பத்தில் அனுசரணைக்கென எமது பிராந்தியத்தில் விளையாட்டுத் துறைக்கு உதவும் ஒரு தனவந்தரை உதவி பெறுவதற்கென நான் சந்திக்க சென்றேன். எனினும் அவரது உதவியாளரையே சந்திக்க முடிந்தது. எல்லா விவரங்களையும் பெற்று பின்னர் தொடர்புகொள்வதாகவும் தனவந்தருடன் பேசவருமாறு அழைப்பதாகவும் சொல்லி இறுதிவரை எப்பதிலும் சொல்லவில்லை. இதனை குறையாக சொல்லவில்லை. படிப்பினையாகத் தான் சொல்கிறேன்.

தேசிய மட்டத்தில் சாதித்துள்ளீர்கள். அடுத்த கட்டம் எவ்வாறு அமையும்?
Safreen:
அடுத்து தேசிய மட்டத்திலான இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகிறோம். அடுத்த டிசம்பரில் நேபாளம், கத்மண்டு நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எனது முதலாவது சர்வதேச நிகழ்ச்சி. இவற்றில் பதக்கம் வெல்வதற்கென கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சாதிப்பேன் என்ற முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. இன்ஷா அல்லாஹ்.

பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டத்தில் இன்று சாதிக்கும் வரைக்கும் உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்களைப் பற்றிக் கூறுங்கள்.
Safreen:
எனக்கு இந்தளவு உடல்பலத்தினையும் அருளையும் சொரிந்தவன் அல்லாஹ் தான். அடுத்ததாக எனது உம்மா, வாப்பாவை நினைவுபடுத்த வேண்டும். அவர்களே எனது நலவுகளுக்காக அதிகம் பிரார்த்தனை செய்பவர்கள். உயர்தரம் படிக்கும் காலத்தில் மேல் மட்ட பயிற்சிகளுக்கு செல்லும் போது அவர்கள்தான் அன்றாடம் எனதூரிலிருந்து மாத்தறை வரைக்கும் செல்வதற்கு, அனைத்துவிதக் கஷ்டங்களுக்கும் மத்தியில் பயண, உணவுச் செலவுகளுக்கு ஏற்பாடு செய்துதருவார்கள். வெற்றிபெற்று வரும்போது என்னுடன் இருப்பது போலவே தோல்வியடைந்து வரும்போதும் என்னுடனேயே இருந்து ஆறுதல் சொல்வோரும் அவர்களே.

எனது நானா எனக்கு எப்போதும் ஆலோசனை வழங்குவோரில் முதன்மையானவராக இருப்பார். பயிற்சி முறைகளில் புதிய முன்னேற்றகரமான விடயங்களைக் கடைபிடித்து வர வழிகாட்டல் வழங்குவதும் அவர்தான். ஏதும் கஷ்டங்கள், பயிற்சிகளில் தடங்கல்களை எதிர்நோக்கும் போது சகோதரர்கள் என்னை ஆறுதல்படுத்துவர்.

மற்றது நான் பாடசாலைக்கு வெளியில் பயிற்சிகளுக்கென அழைக்கப்பட்ட போது உடனே நான் எனது பொறுப்பாசிரியரான முஸ்னி ஆசிரியரிடம் கூறினேன். அவர்தான் எனக்கென முதன் முதலில் விளையாட்டு பயிற்சிகளுக்கு ஏற்ற ஆயிரக் கணக்கில் பெறுமதியான நவீன காலணியொன்றை கொள்வனவு செய்து தந்தது என்னை ஊக்கப்படுத்தியது. அவரது ஆரம்பகால வழிகாட்டல்களும் ஊக்கமூட்டல்களும் இல்லாவிட்டால் நான் இப்போதுள்ள நிலையை அடைந்திருக்கமாட்டேன். அவ்வாறுதான் உயர்தரம் கற்கும் காலத்தில் மாத்தறையில் பயிற்சிகளுக்கென செல்வதற்கு காலைநேர பாடசாலை வரவுக்கு சலுகையினைப் பெற்றுத் தந்து எனது விளையாட்டுத் துறைக்கு அங்கீகாரம் தந்தவர் எமது அறபா தேசிய பாடசாலையின் அப்போதைய அதிபர் வாரிஸ் அலி மௌலானா சேர் அவர்கள். மேலும் எமது ஊரிலிருந்து வந்த சர்வதேச ஓட்ட வீரரான ஸப்ரான் அவர்கள் எனக்கு பல வழிகாட்டல்களையும் பல்லின சூழலில் நல்ல பண்பாட்டோடு நடந்துகொள்ளவும் வழிகாட்டியவர்.

மற்றது எனது நண்பர்கள் பலரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக முதன்முதலாக தேசிய மட்ட போட்டிகளுக்கு சென்ற போது ஈட்டியெறிதல் போட்டிக்கென என்னோடு வந்த நண்பர் ரிமாஸ் இப்போது வரைக்கும் நல்ல நட்போடு எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் உறுதுணையாக இருக்கிறார். எல்லா நண்பர்களினதும் வாழ்த்துக்கள் நல்ல உற்சாகத்தையும் மோட்டிவேஷனையும் தரும்.

அடுத்து, கடைசியாக குறிப்பிட்டாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எனது பயிற்சியாளர் வை.கே. குலரத்ன ஆரம்ப காலம் முதலே எனது முன்னேற்றத்தில் என்னைவிடவும் அதிக கரிசனையுடன் இருப்பவர். அவர் இல்லாவிட்டால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. எனக்கு இலங்கை தேசிய குழாமில் இடம்பெறுவதற்கும் இராணுவ அணியில் இடம்பெறுவதற்கும் அதிக பங்களிப்பு செய்தவர். நான் பெரியளவு வெற்றிகளை ஆரம்பத்தில் பெறாவிட்டாலும் அவர்தான் என்னால் ஓர் உயர்ந்த இடத்தை அடைய முடியுமென இனங்கண்டு வழிகாட்டினார். மற்றது எமது விளையாட்டுக் குழாமில் உள்ள ஏனைய தேசிய வீரர்கள் பலரும் எனக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் உந்துசக்தியாக இருந்துவருகின்றனர். நான் தங்கியிருப்பதும் பல்லின சூழலில்தான். அங்கும் இன மதங்களைக் கடந்து நட்போடு செயல்படுகிறோம்.

தற்போதைய சூழலில் உங்களால் இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும்?
Safreen:
நாம் ஒரு முஸ்லிமாக இருந்து நாட்டுக்கு பதக்கங்களைக் கொண்டுவருவது பெருமைக்குரியது. எமது சமூகத்துக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்கும்.

அடுத்ததாக எமது சூழலில் விளையாட்டுத் துறையில் சாதிப்போரை இனங்கண்டு எதிர்காலத்தில் வழிகாட்டவும் பயிற்சியளிக்கவும் வேண்டுமென எண்ணியுள்ளேன்.

எமது சூழலில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புக்கள் அமைய வேண்டுமென எண்ணுகிறேன். பெற்றோர், பாடசாலை என எல்லா சூழலிலும் அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச தரமுள்ளவர்களை இனங்காணலாம்.

இங்கே பயிற்சியில் ஈடுபடுவோரைப் பாருங்கள். அதிகமானோர் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்களே. அதேநேரம் கொழும்பு பணக்கார பெற்றோர் பலரும் விளையாட்டுத் துறையில் தம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கவென காலையிலும் மாலையிலும் இங்கு காத்திருப்பது வழக்கம்.

விளையாட்டுத் துறையும் நல்ல துறைதான் என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். மேலும் சரியான வழிகாட்டலால் நல்லொழுக்கமான வீரர்களை உருவாக்கலாம். விளையாட்டுப் பயிற்சிகளது அடிப்படை நோக்கங்களில் நல்லொழுக்கம் முதலிடத்தைப் பெறும்.

விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதனால் கல்வியில் சாதிக்க முடியாது என நினைக்க தேவையில்லை. எமது துறையிலே நிறைய மேலே செல்லாம். உதாரணத்துக்கு என்னால் இராணுவ உயர் பதவிகளுக்கு முன்னேற முடியும். உரிய சம்பளமும் எமக்குக் கிடைக்கும். அனைத்தும் எமது முயற்சியிலும் எம் சூழலில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பிலுமே இருக்கிறது.

//நேர்கண்டவர்: எம்.எஸ். ஸியாப் முஹம்மத்//
நன்றி: விடிவெள்ளி 23-08-2019, எம்.பி.எம். பைரூஸ்

ஆன்மீகச் செயற்பாடுகள் மாணவர்களில் மாற்றத்தை விதைக்கும் என்றியங்கும் ஆசான்

இம்முறை பயணம் சஞ்சிகையின் சான்றோரை சந்திக்கும் ஸுஹ்பா ஸாலிஹா பக்கங்களை ஏறாவூரைச் சேர்ந்த ஸத்தார் ஆசிரியர் தனது ஆசிரிய உணர்வுகளால் நிரப்புகிறார்.

நாம் சந்திப்பவர்கள் அநேகர் பேட்டியளிப்பதற்குப் புதியவர்கள். சற்றுத் தயங்குவர். ஸத்தார் ஆசிரியர் அவர்களும் நமது பேட்டியின் நோக்கத்தை தெளிவாக முன்வைத்ததும் தயக்கம் கலைந்து நம்முடன் பேசிக்கொண்டே இருந்தார்.

பயணத்துக்காக ஸத்தார் ஆசிரியரை அறிமுகம் செய்து சந்திப்பிலும் கலந்துகொண்ட ஏறாவூர் ஷெய்க் ரமீஸ் (நளீமி) மற்றும் சந்திப்பில் நம்மோடு இருந்த ஆசிரியர்களான ஷாஹுல் ஹமீத், ஸுப்ஹான், நூகுலெவ்வை, ஸஈத் அஹ்மத் ஆகியோர் மற்றும் ஷெய்க் பைரூஸ் (நளீமி) அவர்களையும் நன்றியோடு நினைவுபடுத்துகிறோம்.

இனி பேட்டிக்குள் நுழைவோம். தாவூத் பவுண்டேஷன் நிலையத்தில் ஒரு முற்பகல் பொழுதில் பேட்டி தொடர்கிறது.

பயணம்:
உங்களை அறிமுகம் செய்வோமே!

ஸத்தார் ஆசிரியர்:
நான் மகுமூது லெவ்வை, ஆசியா உம்மா ஆகியோரின் ஐந்தாவது பிள்ளையாக 1964-01-12ம் திகதி பிறந்தேன். இப்போது 55 வயதாகின்றது.

என் தந்தை வண்டிமாடு வைத்து மண்வெட்டி ஏற்றி கூலித்தொழில், காட்டுத் தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டியவர்.

எனது சிறுபராயம் முதலே எனது உம்மாவின் உம்மாவிடம் என்னைக் கவனிக்கும் பொறுப்பை அளித்துவிட்டனர்.

எல்லாவற்றிலும் கண்காணிப்பு.
எங்குசென்றாலும் உம்மம்மா பின்னாலேயே வருவார். ஆத்தங்கரை ஓரங்களுக்கெல்லாம் செல்லவிடமாட்டார்.

சிறு வயதிலேயே நல்ல நண்பர்கள் அமைந்திருந்தனர். அவர்கள் என்னை நேசிப்போராகவும் நல்ல பழக்கங்களைக் காட்டித் தருவோராகவும் இருந்தனர்.
தீய பழக்கம் உள்ளோரை நான் நண்பராக்கிக்கொள்ளவில்லை.

நாங்கள் பிள்ளைகள் எட்டுப் பேர். ஐந்தாவது ஆளாக நான் இருந்தேன். என்றாலும் எந்த நல்ல நிகழ்வு, திருமணப் பேச்சுவார்த்தை, சாப்பாடு ஒன்றாக இருந்தாலும் எதிலும் ஆலோசனைக்கு என்னை முற்படுத்துவார்கள். எந்த நல்ல காரியத்திலும் என்னை முற்படுத்துவார்கள். சகோதரர்கள் எல்லோரும் என்னை நேசிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அவ்வாறொரு நல்ல நிலையை எனக்கு வைத்திருக்கிறான்.

பயணம்:
உங்களது சிறுவயது வாழ்க்கை நினைவுகள், படிப்பு போன்றவற்றைக் கதைப்போமே!

ஸத்தார் ஆசிரியர்:
படிக்கும் காலத்திலேயே வறுமைக்கோட்டுக்குக் கீழான சூழல்தான். காலையில் சாப்பிட்டால் பகலுணவு இருக்காது. இரவில் மயிர்க்கிழங்கோ பாணோ கிடைக்கும். ஏ/லெவல் படித்து முடிக்கும் மட்டும் இவ்வாறான நிலைதான் தொடர்ந்தது.

அப்போது வீட்டுச் சூழலைக் கருத்தில்கொண்டு நான் மயிர்க் கிழங்கை அவித்தும் பொறித்தும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் மக்கள் ஒன்றுசேரும் ஒரு மரத்தடியில் வைத்து விற்பேன். கச்சான்கொட்டை, கொய்யா போன்றதையும் விற்றுள்ளேன். இதனால் ஏறாவூரில் அநேகருக்கு என்னைத் தெரிந்திருந்தது. என்னை நம்பி எந்தப் பொறுப்பையும் மக்கள் தருவார்கள்.

இந்த சிறு வியாபாரத்தினால் குடும்பத்தின் சின்ன சின்னத் தேவைகளை நிறைவேற்ற முடிந்தது.

எனது ராத்தாவின் திருமணத்தின் போது தாலி ஆபரணம் செய்து அணிவிக்கவேண்டிருந்தது. அதற்கு இந்த வியாபாரம் மூலம் நான் அப்போது சின்னச் சின்னதாக சேமித்து வந்த காசுகளே பயன்பட்டன. இன்றுவரைக்கும் அந்த சேமிப்புப் பழக்கத்தைத் தொடர்கிறேன்.

நான் 5ம் ஆண்டுவரை ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபாவில் பெற்றேன். 6ம் ஆண்டிலிருந்து ஓ/லெவல் வரைக்கும் அலிகாரில் படித்தேன்.

அங்குபடிக்கும் போது முன்பு செய்துவந்த சின்னச்சின்ன வியாபாரங்களை செய்து உழைக்க முடியாமல் போனது. அப்போது சைக்கிள் திருத்தும் வேலை செய்துவந்த எனது மச்சானிடம் சேர்ந்து பாடசாலை விட்டுவந்து சைக்கிள் திருத்தம் செய்து சம்பாதித்தேன். அதன்மூலம் எமது குடும்பத்தின் இரவுச் சாப்பாட்டைத் தயார்செய்வோம். இப்போதுகூட சைக்கிளை முழுமையாகக் கழற்றப்பூட்டவும் திருத்தம் செய்யவும் முடியுமான பயிற்சி இருக்கிறது.

என் ஓ/லெவல் ரிசல்ட் டி-1, சீ-6, எஸ்-1. ஓ/எல் பெறுபேறு கிடைத்த அன்று நான் சைக்கிள் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒருவர் எனது பெறுபேற்றைக் கேட்டு விட்டு “ஒனக்கா?” எனத் திருப்பிக் கேட்டார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. சைக்கிள் கடையிலேயே எப்போதும் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பெறுபேறு எடுத்துள்ளாரே என்றுதான் அவர் உண்மையில் கேட்டிருக்கிறார். அது அல்லாஹ் தந்த பரிசென்றுதான் கூறுவேன்.

ஏ/லெவல் ஆரம்பத்தில் வர்த்தகப் பிரிவில் அலிகாரில் கற்றேன். பிறகு மைக்கல்ஸ் கல்லூரியில் கற்றேன். எனினும் எமது குடும்ப நிலைக்கு அங்கு கற்கும் செலவை சமாளிக்க முடியாது. அப்போது நானா தான் உதவிவந்தார்.

அப்போது அங்கு படித்துவருகையில் ஒரே வகுப்பிலே மிக நெருங்கிய நண்பராக அமைந்தவர்தான் இப்போதைய முகைதீன் சேர். இன்று அவர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபராக இருக்கின்றார். அவர் சாதாரண பயிற்றப்பட்ட ஆசிரியர். பல்கலைக்கழகப் பட்டத்தையும் வெளிவாரியாகவே முடித்தவர். அதிபர் சேவைத் தரத்தைக் கொண்டிருக்காத போதிலும் இன்று அப்பாடசாலையின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறார். அத்தகையவர் தான் நான் ஏலெவல் படிக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார். அவரும் என்னையொத்த பொருளாதாரக் கஷ்டங்களை அப்போது எதிர்கொண்டுவந்தார்.

நாமிருவரும் ஒன்றாகவே படிப்போம். சுற்றுவோம். ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். நாம் இருவரும் வழமையாக ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிடப் போகும் போது என்ன காரணமோ தெரியாது அக்கடையிலிருக்கும் பையன் நாம் கேட்பதை விடவும் அதிகமான உணவு தருவதுடன் மிகவும் குறைவாகவே எம்மிடம் பணமும் பெறுவார். அது ஏனென்று தெரியாது. இதனை எவ்வாறு இவருக்கு எடுத்துச் சொல்வது அல்லது முதலாளியிடம் சொல்வது என்ன்பது எமக்கு சங்கடமாக இருந்தது. நாம் சொல்வதை அவன் கேட்பதாகவும் இல்லை. அப்போது அதன் பாரதூரத்தை உணராத நாம் இதற்கென்ன பரிகாரம் தேடுவது என்று இன்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

பயணம்:
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர்ந்திருக்கிறீர்கள். உங்களது பக்கபலங்களாக இருந்தோரையும் நினைவுகூர்ந்துகொண்டே செல்வோம்.

ஸத்தர் ஆசிரியர்:
எமது ஊரைச் சேர்ந்த பிரபலமான ஆசிரியர்கள் பலர் அன்று இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கொழும்பில் இருந்ததால் அவர்களிடம் கற்க முடியவில்லை.

எனவே அன்றிருந்த யங் டியூஷன் சென்டர் என்ற கல்வி நிலையத்தில் கல்விபெறச் சென்றேன். அங்கு பொறுப்பாக இருந்த லோகநாதன் சேர் என்பவர் எனது திறமைக்கான அங்கீகாரமாக இலவசமாகக் கற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துதந்தார். அவர் எனக்கு நண்பராகவே பழகி வந்தார்.

பயணம்:
ஆசிரியராக மாறிய கதை…

ஸத்தார் ஆசிரியர்:
ஐந்தாம் ஆண்டு படிக்கும் போதே நான் நன்கு கணிதம் செய்வேன். அன்றிருந்த ஆசிரியர்களிடம் பாடங்களை சரியாக மேற்கொள்ளாதோர் கடுமையாக அடிவாங்குவர்.

பின் தங்கிய மாணவர்கள் அடிவாங்குவதை நான் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பேன். 11ம் வகுப்பு படிக்கும் வரைக்கும் இதனை அவதானித்து வந்தேன். எனக்கு மிக நெருக்கமான நண்பர்களும் அடிவாங்குவர்.

ஒருவருக்கு சுமக்க முடியாத பாரத்தை சுமக்கச் சொல்லி விட்டு அது முடியாத போது ஏன் அடிக்க வேண்டுமென எனக்கு யோசனையாக இருந்தது.

அந்தப் பின்னணியில தான் அப்போதிருந்தே மாணவர்களுக்கு சரியான முறையில் கணிதத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஓ/எல் எழுதி முடிந்த உடனேயே நான் மாணவர்களைச் சேர்த்து கற்பிக்க ஆரம்பித்தேன். முதலில் இரகசியமாகத்தான் கற்பித்தேன். ஹஸன், ஹம்சா ஆகியோர்தான் எனது முதல் மாணவர்கள். இவர்கள் இருவரும் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்.

பயணம்:
மாணவர்களுக்கு உயர்ந்த பிரதிபலனைத் தரும் ஆசானாக எப்படி உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஸத்தார் ஆசிரியர்:
ஓ/லெவல் பரீட்சையில் சித்தியடையத் தவறிய பல மாணவர்கள் என்னிடம் படிக்க வந்தனர். கணக்கில் பின்னடைவான மாணவர்கள் ஓ.எல் பரீட்சைக்கு சில மாதங்கள் இருக்கையில் என்னைத் தேடிவர ஆரம்பித்தனர். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டி இரவுபகல் பாராது வகுப்பெடுப்பேன்.

எவ்வாறு அந்த பின்தங்கிய மாணவர்களை கற்கச் செய்வது என உபாயங்களைத் திட்டமிடுவேன். உண்மையில் அந்த மாணவர்களை பின் தங்கியோர் எனக் குறிப்பிடாமல் மெல்லக் கற்போர் என்பதே பொருத்தமானது.

மெல்லக்கற்பவர்கள் யார், மீத்திறன் உள்ள மாணவர்கள் யாவர் என்பதை அறியவேண்டி அவர்களோடு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவேன்.

மெல்லக் கற்பவர்கள் தான் எனக்கு உற்ற நண்பர்களாக இருப்பர். அவர்களை இனங்கண்டு கொஞ்சங் கொஞ்சமாகப் பயிற்சிகள் வழங்கிவருவேன்.

இன்னும் உன்னிப்பாக அவதானிக்கும் போது அவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களும் அல்ல. ஏதும் சூழ்நிலைக் காரணத்தாலோ அல்லது கற்பிக்க வேண்டிய முறைமை வேறுபட்டதாலோ தான் அவர்கள் கணிதத்தில் பின் தங்கியிருந்தனர். கதைக்கக் கதைக்கத்தான் ஒவ்வொருவரையும் நன்கு கண்டறிந்து கற்பிக்க முடியும்.

பின்னர் அவர்களுக்குரிய அமைப்பில் நடைபழக்கி விட்டதும் அவர்களும் வேகமாகக் கற்கக் கூடியோராக மாறினர் என்பதுவே எனது அனுபவமாகும். அதில் ஓ.லெவலில் ‘ஏ’ தர சித்திபெற்றோரும் உள்ளனர். இவர்களை மெல்லக் கற்போர் என எவ்வாறு அழைப்பது? இவ்வாறு என்னிடம் வந்த அநேக மாணவர்கள் இன்று நல்ல நிலையிலிருப்பது மனதிற்குத் திருப்தியானதாகும்.

பயணம்:
சமூகத்தில் நல்ல மாணவர்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் உங்களது அனுபவம் இன்னும் நமக்குப் பயனளிக்கும். உரையாடுவோம்.

ஸத்தார் ஆசிரியர்:
போதைப் பொருள் போன்ற பாவனைகள் அதிகரித்துவிட்டு ஆண் மாணவர்கள் படிப்பில் ஆர்வமின்றி பெண்கள் மட்டுமே அதிகம் படிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது சமூகத்தில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கும்.

எனவே நான் அதிகம் ஆண்களது கல்வியிலேயே கரிசனை காட்டுகிறேன். எமது பாடசாலை அதிபரிடமும் ஆண் மாணவர்களது வகுப்பைப் பொறுப்பளிக்குமாறு தான் வேண்டுகிறேன். பெண் பிள்ளைகளது வகுப்புகள் குழப்படி இன்றி இருப்பதால் பலரும் அவ்வாறான வகுப்பைக்கோருவர்.

மாணவர் ஒருவர் ஒருமுறை சிகரட் பிடித்துக் கொண்டிருந்து என்னிடம் பிடிபட்டார். அவரது நிலை மாறி இன்று முன்மாதிரியான உத்தியோகம் ஒன்றில் இருக்கிறார். அவரோடும் அதிகம் அளவளாவிக் கதைத்ததன் மூலமே அவருக்குரிய மாற்றத்தைக் காண முடிந்தது. உண்மையில் சில நண்பர்கள் ‘இவர் படிப்பிப்பதை விடவும் கதைத்துக் கொண்டுதான் இருப்பார்’ என்று குறை சொல்லுமளவு நான் அதிகம் கதைப்பேன்.

அண்மைக்காலத்தில் ஓ.லெவல் எடுத்த வகுப்பொன்று என்னிடம் பொறுப்புத் தரப்பட்டது. அந்த வகுப்பு யாருக்கும் கீழ்ப்படியாத வகுப்பு எனப் பெயர் எடுத்திருந்தது. ஆனால் அவர்கள் குறுகிய காலத்துள்ளேயே நல்ல வகுப்பெனப் பெயர் எடுத்தனர். 80% முழுமையாக சித்திபெறும் வண்ணம் சிறந்த பெறுபேற்றையும் எடுத்தனர். அவர்கள் அனைவரும் அன்றாடம் ழுஹா தொழுகையைக் கூட தொழும் அளவு மிக முன்னேற்றமடைந்திருந்தனர்.

அவர்களது மாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. முதலில் வகுப்பு ஆரம்பிக்க முன்பு அல்ஹம்து மற்றும் குல் சூறாக்களை ஓதி ஆரம்பிப்போம். அவர்களுக்காக வேறு சில சூறாக்களும் பிரிண்ட் எடுத்து ஓத வைத்தோம். சில நாட்களில் நாம் எல்லோரும் இணைந்து ஒரேநேரத்தில் ஒரு குர்ஆனை பலரும் பிரித்தெடுத்து ஓதி முடிப்போம்.

அல்லாஹ்வுடன் மாணவர்களைத் தொடர்புபடுத்திவிடுவதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களில் மாற்றத்தை விதைத்துவிட முடியும்.

ஆசிரிய வாழ்வில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக்குக் காதுக்குக் கேட்டவரைக்கும் எந்த மாணவரும் எனக்குப் பட்டப்பெயர் சொன்னதுமில்லை. பெயரிட்டதுமில்லை.

பயணம்:
தொழில், தொழில் நியமனம் பற்றி…

ஸத்தார் ஆசிரியர்:
நான் படிப்பிக்கத் தொடங்கியது 1982 இல். மைக்கல்ஸில் படிக்கும் போது ஏறாவூர் அறபாவில் கற்பித்தேன். பெரிய ஆசிரியர்கள் பற்றிய பயம் இருந்ததால் இரகசியமாகத் தான் கற்பித்தேன்.

எனது வகுப்பு, ஸுபஹுக்குப் பின் சூரிய வெளிச்சம் வரும் நேரம் முதல் தொடங்கும். பாடசாலை நேரம் கிட்டியதும் முடித்துக் கொண்டு பின்பு மாலையில் தொடர்வோம்.

எனது ஏ/லெவல் சறுகியதற்கு அதுவும் காரணமாகியிருக்கலாம். படிப்பிப்பது அல்லாஹ் எனக்குத் தந்த அருள்.

நான் கற்பிக்க காசுவாங்க உடன்பாடில்லாதவன். பெரியளவு வருமானம் இன்றித் தான் கற்பிப்பேன்.

வாப்பா மௌத்தாகும் வரைக்கும் பெரிய வருமான எதிர்பார்ப்பு இன்றித்தான் கற்பித்தேன். வாப்பாவின் மௌத்தின் பின்பு குடும்பச் சுமை என் தலையில் விழுந்தது. அந்நேரம் மாணவர்கள் சேர்த்துத் தரும் தொகைதான் எனக்குதவியாக இருக்கும்.

நான் ஏ/லெவல் பரீட்சை எழுத நெருங்கும் போது பெரும் இனவன்முறைகள் நிகழ்ந்ததால் பரீட்சைக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே படிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

பல பகுதிகளைப் படித்து முடிக்கவுமில்லை. மூன்று முறை எழுதியும் என்னால் அடுத்த கட்டத்தை அடையமுடியவில்லை.

90ம் ஆண்டு தாண்டும் போது எமது தந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையால் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாம் அதிகம் பாதிக்கப்பட்டோம்.

அக்காலத்தில் அறபாவிலும் பின் அலிகாரிலும் தொண்டராகவே ஆசிரியப் பணிபுரிந்தேன். ஓ/லெவல் கணிதத்திலும் ஏ/லெவல் தூய கணிதப் பாடங்களையும் கற்பிப்பேன்.

அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்த அலகாரில் பெரியளவு வருமானங்களின்றி வாரத்திற்கு 42 பாடவேளைகளிலும் கற்பிப்பேன். எனவே 91ம் ஆண்டு என நினைக்கிறேன். அன்றைய பாடசாலை அதிபரும் நிர்வாகமும் பாடசாலையிலிருந்த சிற்றூழியர் நியமனத்தைப் பெற்றுத் தந்தது. அன்று நாள் சம்பளத்துக்குரிய தொழிலாக அது இருந்தது.

ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் பாடசாலை, என்னை சிற்றூழியராகப் பயன்படுத்தியதில்லை. நான் ஆசிரியராகவே அன்றும் இன்றும் இருக்கிறேன்.

பயணம்:
பாடசாலைக்கு வெளியிலான கல்விச் செயற்பாடுகள் மற்றும் தாவூத் பவுண்டேசன் பற்றிப் பேசுவோம்.

ஸத்தார் ஆசிரியர்:
நான் ஆரம்பத்திலே கணிதப் பாடத்தோடு விஞ்ஞானப் பாடத்தையும் கற்பித்து வந்தேன். அப்போது விஞ்ஞான முன்னேற்றக் கழகம் என்ற சங்கத்தை நிறுவி விஞ்ஞானக் கல்வியை ஊரிலே இன்னும் ஊன்றினோம். எமது ஊரிலிருந்து மருத்துவத் துறைகளுக்கு அதிகமதிகம் மாணவர்கள் இன்று தெரிவாவது சாத்தியமாகியிருக்கின்றது.

2001-02ம் ஆண்டாகும் போது ஊரிலே தாவூத் பவுண்டேசன் என்ற அமைப்பை நிறுவினோம். தொடக்கத்தில் நூகுலெப்பை சேர், முகைதீன் சேர் மற்றும் நானும் இணைந்து இத்திட்டம் கருக் கொண்டது.

அலிகாரில் அன்று ரோனியோ அச்சியந்திரம் எனது பொறுப்பில் இருந்தது. ரோனியோ அறையில் ஒரு தரம் பேசிக் கொண்டிருந்த போது கஷ்டப்பட்டு வேலைக்கும் சென்று படிக்கவும் செய்யும் மாணவர்களது நலனுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் நாம் ஓர் அமைப்பாகுவோம் எனத் திட்டமிட்டோம்.

இதனை அதிகமாக வலியுறுத்திப் பேசியதால் மற்ற இருவரும் என்னையே தலைவராக இருக்குமாறு கூறினர். அந்நாளன்றே அலிகாருக்கு மிகப் பெரும் கல்விப் பணிசெய்த கல்விமான், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட யூ.எல். தாவூத் அவர்களது பெயரிலே அமைப்பைத் துவக்கினோம்.

தாவூத் சேர் படுகொலை செய்யப்பட்டதற்கு அடுத்த நாள்தான் எஸ்.எல்.ஈ.எஸ். பெறுபேறுகள் வந்து எமதூரின் முதலாவது ஆளாக சித்திபெற்றிருந்தார். விடிந்தால் ஹஜ்ஜுப் பெருநாள். ஏறாவூரில் பெருந் துயரமும் சோகமும் நிறைந்திருந்த நாள்.

நாம் மூவரும் இன்னும் ரமீஸ், ரியாழ், பைரூஸ் எல்லாரையும் இணைத்து எமது சொந்த உழைப்பை சந்தாவாக செலுத்தி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றை தாவூத் பவுண்டேசன் ஊடாகக் கொடுத்துவந்தோம்.

பின்பு நிறைய வெளிநாட்டில் வசித்த நண்பர்கள் மூலம் கிளைகள் நிறுவி பொருளாதார ரீதியாக பல மாணவர்களுக்கு உதவினோம். மேலும் தவணைப் பரீட்சையொன்றை வலய மட்டத்திலே நடத்தலாம் எனச்செய்துகாட்டினோம்.

மேலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி கல்வியைத் தொடராது விட்டவர்களுக்கு வழிகாட்டிவிட்டோம். அத்தகைய வழிவந்தோரில் இன்று 20 க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகளாக உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஏறாவூரில் ஸகாத் கமிட்டியொன்றையும் அமைத்து அதன் மூலம் வீடமைப்பு போன்ற பெரிய திட்டங்களையும் வெற்றிகரமாக செயற்படுத்தினோம்.

காத்தான்குடியில் இயங்கிய பிஸ்மி குர்ஆன் மத்ரஸாவைப் போல அவர்களது ஆலோசனையையும் பெற்று இங்கு துவங்கினோம். இன்று ஸகாத் நிதியம் குர்ஆன் மத்ரஸா போன்றவை வேறு சகோதரர்கள் மூலம் சிறப்பாக இயங்குகின்றது. ஆங்கில வகுப்பு, நைட் ஸ்டடி செண்டர் என வேறு பல திட்டங்கள் மற்றும் சாதாரண தரம் சித்தியடையாதோருக்கான கல்வி வழிகாட்டல் என பரந்து செயற்படுகிறோம்.

பயணம்:
இறுதியாக…

ஸத்தார் ஆசிரியர்:
நான் எனது குடும்பம் பற்றி கடைசியாகக் கூறுவேன் என்றேன். எனது மனைவியும் பிள்ளைகளும் என நாம் ஆறு பேர். மூத்தவர் பெண் பிள்ளை. அடுத்த மூவரும் ஆண்கள்.

எனது பணிகளுக்கு எப்போதும் வீட்டில் பூரண ஆதரவு கிடைப்பதால்தான் என்னால் தொடர்ந்தும் இயங்கிச் செல்ல முடிகிறது. நான் சிலநாட்களில் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணியை நெருங்கி வீட்டுக்குச் சென்றாலும் மனைவி இன்முகத்தோடு வரவேற்பார். எனது இரண்டாவது மகன் நடக்கவியலாத நிலையில் நோயுற்றிருக்கிறார். அந்தப் பிள்ளையையும் கவனித்து என்னையும் எனது ஏனைய பிள்ளைகளையும் கவனிப்பதில் மனைவியின் தியாகம் அளப்பரியது. அவர்களுக்காக துஆ செய்யுங்கள். குறிப்பாக எனது நடக்க சிரமப்படும் மகனுக்காகப் பிரார்த்தியுங்கள். அவருக்காக பல மருத்துவச் சிகிச்சைகளுக்காகவும் முயற்சிக்கிறேன். எனது மாணவர்களில் உயர் உத்தியோகம் பார்க்கும் பலர் எனது பிள்ளையின் மருத்துவத்துக்காக பொருளாதாரம், நேரம், உழைப்பைத் தந்து உதவுகின்றனர். அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அடுத்து எனது தாய், தந்தையர் எனது உழைப்பிலிருந்து ஒரு சதத்தையேனும் அனுபவிக்காமல் காலம்சென்றுவிட்டனர். அவர்களுக்காகவும் நிறையப் பிரார்த்தியுங்கள்.

மேலும் எமது தாவூத் பவுண்டேஷன் மூலமாக தொழிநுட்பக் கல்லூரி உட்பட பல திட்டங்களைக் கொண்டிருக்கிறோம். அவை பெரியளவு முதலீடு தேவைப்படும் பெரும் திட்டங்கள். அதற்குதவுபவர்களைத் தெரிந்தால் அறிமுகம்செய்து வையுங்கள்.

(குறிப்பு: ஸத்தார் ஆசிரியர் அவர்கள் இன்னும் பலரது பெயரையும் சம்பவங்களையும் நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டே சென்றார். எனினும் பேட்டியின் விரிஞ்சி வரையறுத்தே இங்கு பகிர்ந்திருக்கிறோம்.)

சிறு துளிகளே பிரமாண்ட வெள்ளமாகிறது : சத்தமின்றி சமூகப் பணியாற்றும் அன்ஸார் ஆசிரியர்

இன்று பயணம் சஞ்சிகையின் ஸுஹ்பா ஸாலிஹா – சான்றோர் சந்திப்பில் திஹாரியில் வசித்துவரும் கேகாலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்ஸார் அவர்களை சந்திக்கிறோம். பயணம் மற்றும் மீள்பார்வையின் இதர வெளியீடுகளது நீண்ட கால வாசகராகத் தன்னை பரஸ்பர அறிமுகத்தின்போது கூறினார். தஃவா மற்றும் சமூக விவகாரங்களில் நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் அவர் நமக்கு ஒதுக்கித் தந்த நாளிலும் மார்க்க அறிஞர் ஒருவரோடு ஜும்ஆ தின ஃகுத்பாவுக்கென தூரப் பயணமொன்று மேற்கொண்டுவிட்டு களைப்பையும் பொருட்படுத்தாது நம்மை வரவேற்றார்.

ஆரம்பத்தில் தான் பேட்டியளிக்குமளவுக்குத் தகுதிபடைத்தவரல்ல என பணிவோடு தயங்கியபோதும் நமது பயணம் சஞ்சிகையின் பேட்டியின் நோக்கத்தைக் கூறியபோது ஆர்வத்தோடு எம்முடன் உரையாடினார். அவற்றை நாம் உங்களுக்கு இங்கு தொகுத்துத் தருகிறோம்.

★★★★★★★

பயணம்:
ஆரம்பமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை நமது வாசகர்களுக்காக வழங்குங்கள்!

அன்ஸார் ஆசிரியர்:
நான் அன்ஸார். ஓய்வுபெற்ற ஆசிரியர். 1947 நவம்பர் 7ம் திகதி பிறந்தேன். எனது சொந்த ஊர் கேகாலை. நான்காம் வகுப்பு வரைக்கும் அங்குதான் கல்விகற்றேன். பின்பு கஹட்டோவிட்ட அல்பத்ரியாவில் இணைந்து சாதாரண தரம் வரை கற்றேன். பின் உயர்தரத்தை மாவனெல்லை ஸாஹிராவில் தொடர்ந்தேன். 1980 இல் திஹாரியில் திருமணம் செய்து இதுவரை இங்கேயே வாழ்கிறேன். மனைவி காலம்சென்றுவிட்டார். எனது மனைவி ஒரு மௌலவியா. மூத்த மகளும் மௌலவியா கற்கையை நிறைவு செய்தவர். மகன் ஒரு பொறியியலாளர். ஸ்ரீலங்கா டெலிகொம் தலைமையகத்தில் பணியாற்றுகிறார். கடைசி மகன் பாடசாலையில் கற்றுவிட்டு தற்போது சொந்தமாக தனது வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

பயணம்:
ஆசிரியப்பணி எவ்வாறு அமைந்திருந்தது?

அன்ஸார் ஆசிரியர்:
21வது வயதில் முதலாவது ஆசிரிய நியமனம் கல்கமுவவில் கிடைத்தது. பின்பு பொல்கஹவெல அல்இர்பான் வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் கடமையாற்றினேன். பின்பு 1975-76 களில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து உடற்கல்விப் பிரிவில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரானேன். அக்காலப் பகுதியில் முஸ்லிம் மஜ்லிஸில் இணைந்து செயற்பட்டேன். அதன் தலைவராகவும் இருந்திருக்கிறேன். அதன் பின்பு ரம்புக்கன தாருல் உலூமில் கற்பித்தல் பணியை மேற்கொண்டேன். அங்கு ஐந்து வருடங்கள் கடமையாற்றிய பின் மாவனெல்லை ஸாஹிராவுக்கு வந்தேன். பின்னர் கேகாலை சென்.மேரிஸில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினேன். இறுதியாகக் கொழும்பில் மட்டக்குளிய ஹம்ஸா, கிரேண்ட்பாஸ் அல்நாஸர் வித்தியாலயம், புதுக்கடை சென்.செபஸ்டியன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணியாற்றினேன். கொழும்பிலிருக்கும் போது 1990 இல் அதிபர் பரீட்சையில் சித்திபெற்று அதிபராகவும் பணியாற்றியுள்ளேன். 2008ம் ஆண்டிலிருந்து அரசசேவையை விட்டும் ஓய்வுபெற்றேன்.

தாருல் உலூமில் எனது மாணவர்களாக இருந்த பலர் இன்று தஃவா செயற்பாட்டாளர்களாக உள்ளனர். மாவனெல்லை ஸாஹிராவில் எனது மாணவர்களாக இருந்தோருள் பலரும் இன்று சமூக அந்தஸ்துடன் உயர்பதவிகளில் உள்ளனர்.

பயணம்:
உங்களது தஃவா அனுபவங்களிலிருந்து…

அன்ஸார் ஆசிரியர்:
மாவனெல்லையில் கற்கும் காலப்பகுதியில் எனக்கு இஸ்லாமிய அமைப்புக்களின் அறிமுகம் கிட்டியது. ஆரம்பத்தில் தப்லீக் ஜமாஅத் பின்னர் ஜமாஅத்தே இஸ்லாமி என தொடர்புகள் ஏற்பட்டன. பெயரளவிலேயே தொழுகை போன்ற இபாதத்களில் அதுவரைக்கும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததும் இதன் பின்பே இஸ்லாத்தைக் கூடுதலாகக் கற்று அதில் ஈடுபாடு அதிகரிக்கத் துவங்கியது.

பயணம்:
நீண்ட கால அரசு ஆசிரியப் பணியின் பின்பும் தற்போதுவரை தஃவா மற்றும் சமூகப் பணிகளில் ஓயாமல் உழைக்கிறீர்களே! அந்த அனுபவங்களிலிருந்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்ஸார் ஆசிரியர்:
2008ம் ஆண்டுடன் ஆசிரிய, அதிபர் பணிகளை விட்டும் ஓய்வுபெற்றதன் பிற்பாடு தன்வீர் அகடமியை நிறுவுவதில் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவரராக இருந்த இப்ராஹீம் ஹஸரத்துடன் இணைந்து உழைத்தேன். மேலும் எம்மோடு பேராசிரியர் நாஜிம் அவர்களும் ஜமாஅத்தே இஸ்லாமி செயலாளராக இருந்த ஏ.டீ.எம். நவ்பர் மற்றும் நாவலப்பிட்டி எம்.எச்.கே. அப்துர்ரஹ்மான் ஆகியோரும் சேர்ந்து உழைத்தனர். நீண்ட காலம் தன்வீர் அகடமி நிர்வாக சபையின் செயலாளராக நான் இருந்ததோடு தற்போது வரையில் நிர்வாக உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன்.

தன்வீர் அகடமியை உருவாக்குவதில் எமது குறிக்கோளாக அமைந்தது சிங்கள மொழி மூல தாஈக்களை உருவாக்குவதில் ஒரு முன்னோடி கலாபீடமொன்றை ஆரம்பிப்பதாகும். எமது மாணவர்கள் பலர் இன்று பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்கின்றனர்.

குறிப்பாக தன்வீர் அகடமி போன்ற சிங்கள மொழியில் ஷரீஆக் கலாபீடமொன்றை நடாத்துவது பெரும் சிரமமிக்கது. சிங்கள மொழியில் கற்கும் மாணவர்கள் வேறு துறைகளில் கற்கத்தான் விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆகவே சிங்கள மொழிமூலம் ஷரீஆத் துறை மாணவர்களை உள்வாங்குவது மிகப்பெரும் சவாலான ஒரு விடயம். எனவே நாம் மாணவர்களைத் தேடிச் சென்றே உள்வாங்குகிறோம். மேலும் வித்தியாசமான பண்பாட்டுச் சூழலிலிருந்து அவர்கள் வருவதால் தர்பிய்யா பண்பாட்டுப் பயிற்சிகளை அதிகம் மேற்கொள்கிறோம்.

பயணம்:
நீங்கள் தஃவா மற்றும் சமூகப்பணி இரண்டையும் எவ்வாறு கடந்து வந்திருக்கிறீர்?

அன்ஸார் ஆசிரியர்:
நான் மாவனெல்லையில் கற்பித்த போது ஜமாஅத்தே இஸ்லாமி நிலையத்திலேயே ஒரு தொழிற்பயிற்சி கூடமொன்றை 1978 இல் துவங்கினோம். ஆரம்பத்தில் நீர்க்குழாய் இணைப்பு, தச்சுத் தொழில் ஆகிய பயிற்சிநெறிகளோடு தொடங்கியது. அதுதான் இன்று Mawanella Institute of Islamic Technologies (MIIT) என்ற பெயரில் பத்துக்கும் மேற்பட்ட கற்கைநெறிகளோடு விசாலமான இடப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மாவனெல்லையில் இருக்கும் போது அங்கே ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைப் பிரிவுக்கும் பொறுப்பாளராக நான் இருந்தேன். கொழும்புக்கு வந்ததும் ‘தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தைப் பொறுப்பேற்று 16 வருடங்கள் நடத்தினோம். ரமழானில் அல்குர்ஆனை ஓதுவோம்; அதனை விளங்குவோம்; அதன்வழி நடப்போம்; அதன்பால் அழைப்போம் என்று நாடளாவிய ரீதியில் சுவரொட்டிகள் ஒட்டியதோடு மாணவர்கள் மத்தியில் பெரும் கட்டுரைப் போட்டிகளை நடாத்தினோம். இவ்வாறு தஃவா ரீதியான, சமூக ரீதியான பணிகளுக்கென நாடளாவிய ரீதியில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன்.

பயணம்:
சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எவ்வாறுள்ளன? உங்களது உழைப்புக்களுக்கான அறுவடை எவ்வாறுள்ளது?

அன்ஸார் ஆசிரியர்:
இயக்கங்கள் இன்று பரந்த அமைப்பில் தஃவா செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. இயக்கங்கள் மற்றும் அதன் தலைமைகளுக்கிடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் ஏதோவொரு அமைப்பில் இயக்கங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும். இயக்கங்களும் அவர்களை வழிகாட்ட வேண்டும். போதைப் பொருள், பாலியல் பிறழ்வு நடத்தைகள், கல்வி-பண்பாட்டு வீழ்ச்சிகள் என இன்றுள்ள அபாய சூழலில் வழிகாட்டல் அத்தியாவசியமானது. பெற்றோரும் இதற்கு வழிகாட்டிவிட வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கும் சமூகத்திற்கும் பிரயோசனமுள்ளோரை உருவாக்கலாம்.

பயணம்:
விஷேடமாகக் குறிப்பிட விரும்பும் ஏதும் உள்ளதா?

அன்ஸார் ஆசிரியர்:
விஷேடமாகக் குறிப்பிட ஏதுமில்லை. இறுதிவரைக்கும் இறைதிருப்தியோடு இறைபணியாற்றி வீட்டுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பு: ஸியாப் முஹம்மத் (நளீமி)

நன்றி: பயணம் சஞ்சிகை

payanam@yahoo.com

கருவறை முதலே பிள்ளைகளைப் பயிற்றுவிக்கத் தொடங்கிவிட வேண்டும்

வரகாப்பொலையைப் பிறந்தகமாகக் கொண்ட ஸனூஸ் ஆசிரியர் அவர்கள் தற்போது பொல்கஹவலையில் வசித்து வருகிறார். ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய பின்பும் நீண்ட காலமாக கல்வித் துறைப் பணிகளோடும் சமூகப் பணிகளோடும் ஆரவாரங்களின்றி, ஆனால் முனைப்போடு தொழிற்பட்டு வருகிறார். ஓய்வு காலப் பகுதியை அடைந்த போதும் தற்போதும்கூட பயணங்களையும் துடிப்போடு மேற்கொண்டு தன் பணிகளை ஆற்றும் அவரது சுறுசுறுப்பு எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது.

அவரை இம்முறை பயணம் சஞ்சிகையின் சான்றோர் சந்திப்புப் பகுதியான “ஸுஹ்பா ஸாலிஹா” வுக்காக செவ்வி கண்டோம். நீண்டதொரு உரையாடலில் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றுள் சில துளிகளை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

பயணம்:
உங்களைப் பற்றி…

ஸனூஸ் ஆசிரியர்:
எனது சொந்த இடம் வரக்காப்பொலை. தந்தை வியாபாரம் செய்து வந்தவர். எமது குடும்பம் நடுத்தர வசதியுள்ள குடும்பமாகக் காணப்பட்டது.

ஆரம்பத்தில் வரக்காப்பொலை பாபுல் ஹஸனில் கல்வி கற்றேன். பின்பு உயர்தரக் கல்வியை நீர்கொழும்பு அல்ஹிலால் வித்தியாலயத்தில் கற்றேன். கற்கும் காலத்தில் தந்தையைத் திடீரென இழக்க வேண்டி வந்தனால் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

பின்பு அறுபதுகளின் ஆரம்பத்தில் மாணவ ஆசிரியர் பரீட்சை நடாத்தப்பட்டு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. நானும் அப்பரீட்சையில் சித்திபெற்று உயர்தரம் கற்றுவந்த காலத்திலேயே ஆசிரியப் பணியில் இணைந்தேன். பின் அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுக்கொண்டேன்.

எனது ஆவலின்படி ஆசிரியராகத் தொழில் புரிந்துகொண்டே உயர்தரப் பரீட்சைக்கு வர்த்தகப் பிரிவில் தோற்றி கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி, தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே மாலை நேரங்களில் விரிவுரைகளில் கலந்துகொண்டு வர்த்தகமானி (B.Com) பட்டத்தையும் பெற்றேன்

பின்பு இலங்கையின் பல பகுதிகளிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமைபுரிந்திருக்கிறேன்.

குடும்பத்தைப் பொறுத்தமட்டில் பொல்கஹவலையில் திருமணம் செய்து இங்குதான் தற்போதுவாழ்கிறேன். எனது மனைவியும் ஒரு பட்டதாரி ஆசிரியை. தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். ஓர் ஆணும் இரு பெண்களுமாக பிள்ளைகள் மூவர். இரு பெண்பிள்ளைகளும் ஆசிரியைகளாகப் பணிபுரிவதுடன் மகன் தகவல் தொழில்நுட்பத் துறையில் அரசபணியாற்றுகிறார்.

பயணம்:
உங்களது ஓய்வுக்குப் பிந்திய காலம் குறித்து…

ஸனூஸ் ஆசிரியர்:
ஓய்வுக்குப் பிந்திய காலங்களில் கூட கல்வித்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. கல்வியமைச்சோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தி கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பல மட்ட முயற்சிகளில் பங்கேற்று வருகின்றேன். மேலும் தேசிய ரீதியான வேலைத் திட்டங்களிலும் ஆலோசகராக இருக்கின்றேன்.

தற்போது என்னைப் பொறுத்தமட்டில் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை விரிவுரையாளராகப் பணி செய்கின்றேன்.

பயணம்:
வாழ்வில் உங்களுக்குக் கிடைத்த உன்னதமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே…

ஸனூஸ் ஆசிரியர்:
ஆம். அது 2002 ஆண்டு காலப் பகுதியாக இருக்கும். ஓய்வுபெற்ற பின் கல்வியமைச்சில் பணியாற்றுவதற்காக சென்றுவந்துகொண்டிருந்தேன். ஒருசமயம் காலைவேளையில் அவ்வாறு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு மாணவன் பாடசாலை சென்றுகொண்டிருந்தான். நான் அவனை அவதானித்துக் கொண்டிருக்கும் போதே அவனது பாடசாலைக்கு எதிர்த் திசை வீதியில் வெள்ளைப் பிரம்புடன் சென்றுகொண்டிருந்தவரை நோக்கிச் சென்று அவர் பாதைக்கு மறுபக்கம் மாறுவதற்கு உதவினார்.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த நான் உடனடியாக அம்மாணவனை அழைத்து அவனது செயலைப் பாராட்டினேன். மேலும் அம்மாணவன் கற்றுக்கொண்டிருந்த பாடசாலை விபரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு எனது அலுவலகம் வந்து எனக்கு மேலதிகாரியாக அப்போது இருந்த தாரா டி மெல்லிடம் விடயத்தைக் கூறி அம்மாணவனைப் பாராட்டி ஒரு உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்புவதற்கு ஆலோசித்தேன். அதற்கு அவரும் உடன்பட்டதோடு உடனடியாகவே அதற்குண்டான ஒத்துழைப்புக்களையும் செய்தார்.

அவன் கற்றுக் கொண்டிருந்த நாலந்தா பாடசாலைக்குக் கடிதம் சென்றதும், அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து நானே நேரில் வந்து பாராட்டுப் பத்திரத்தினை அளிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தனர். நான் முதலில் மறுத்துவிட்ட போதிலும் பின்பு அவர்களது தொடர்ந்த வேண்டுகோளின் பேரில் அவர்கள் குறித்து அழைத்திருந்த தினத்தில் சென்றேன். அங்கு குறித்த மாணவரின் பெற்றோரான ஆசிரியர் இருவரும் வந்திருந்தனர். அங்கு காலைக் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு நிகழ்வில் அம்மாணவன் கௌரவிக்கப்பட்டான்.

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அம்மாணவனை நான் நன்கறிவேன். இன்று அம்மாணவன் ஒரு வைத்தியராக நீர்கொழும்பு வைத்தியசாலையில் பணிபுரிகிறார். இதன் மூலம் நான் சொல்வது எதுவெனில் நல்ல விடயங்களை நாம் பகிரங்கமாகக் ஊக்குவிக்க வேண்டும். அப்போது ஏனையோரும் அதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். தீய விடயங்களை சுட்டிக் காட்டுவதாக இருந்தால் தனிப்பட்ட ரீதியில் கூறுவதுதான் நல்லது.

எமது பகுதியில் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் வசித்து வந்தார். அவர் வழமையாகவே பாதையில் செல்லும் போது மஞ்சள் கோடு இருந்தாலும் அதனையும் தாண்டிச் சென்று பாதைக்குக் குறுக்காலேதான் கடப்பார். தொடர்ந்தும் இதனை அவதானித்து வந்த நான் ஒரு முறை அவரிடம் தனியாகக் கூறினேன். என்றாலும் அவரால் சரியான பழக்கத்துக்கு வர முடியவில்லை. ஏனெனில் அவர் கிராமப்புறப் பகுதியில் தொடர்ந்தும் சிறு வயது முதலே இருந்து வந்தவர். இதன் காரணத்தால் இது போன்ற விழுமியங்களை அவரால் உள்வாங்க முடியவில்லை. நல்ல விடயங்கள் சிறு வயது முதலேயே உட்புகுத்தப்பட்டுவிட வேண்டும்.

பயணம்:
கல்வியியல் சிந்தனைகளில் பரிமாற விரும்புவது…

ஸனூஸ் ஆசிரியர்:
முன்பு கூறியவாறே நல்ல பழக்கவழக்கங்கள் சிறு வயது முதற்கொண்டு விதைக்கப்பட்டுவிட வேண்டும்.

உதாரணத்திற்கு எனது அனுபவத்தின்படி ஜப்பானில் கல்விபெற்ற சுமார் 7 வயதையொத்த ஒரு சிறுவன் நமது இலங்கை சூழலில் கல்விபெற்றவரை விடவும் விழுமிய ரீதியில் முன்னேற்றமான அடைவைப் பெற்றிருப்பார். அவ்வாறானவர்கள் சாதாரண ஒரு இனிப்புப் பண்டத்தின் எஞ்சிய கழிவு எவ்வாறு முகாமை செய்யப்பட வேண்டும் என்பதிலிருந்து நன்கு வழிகாட்டல் பெற்றிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

ஒரு முறை நாம் ஜப்பான் நாட்டுக்கு சென்ற சமயம் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தோம். அங்கு வீதியில் எவ்விதமான வாகனங்களும் போய்க்கொண்டிருப்பதைக் காணமுடியவில்லை. பாதை வெறிச்சோடியிருந்த நேரம் அது. என்றாலும் சிவப்பு சிக்னல் விளக்கு ஒளிர்ந்து க்கொண்டு இருந்த காரணத்தால் பச்சை விளக்கு ஒளிரும் வரைக்கும் காத்திருந்தே பாதையை மாறிச்சென்றனர். விழுமிய ரீதியிலான அடைவொன்றை நாம் இங்கு காண்கிறோம். இதுவும் கல்வியின் தாக்கமேயாகும்.

நவீன கல்வி உளவியலின்படி ஆளுமை உருவாக்கத்தில் சுமார் 50% தான் பரம்பரைத் தாக்கம் செலுத்துகிறது. எஞ்சிய 50% உம் சூழல் தாக்கத்தினாலேயே உருவாகிறது.

இது அமெரிக்காவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் கூட நிரூபிக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்த பிரபல திருடன் கலிகட்டின் பரம்பரையில் வந்த 6 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பல பிரதேசங்களில் வாழ்ந்துவந்தனர். அவர்களில் 50% இற்கும் அதிகமானோர் திருட்டுத் தொழிலையே மேற்கொண்டு வந்தனர் என அறியப்பட்டது.

பயணம்:
குழந்தைகளுக்குக் கல்வியூட்டல் குறித்து அதிகம் பேசுகிறீர்களா?

ஸனூஸ் ஆசிரியர்:
ஆம். அது பற்றிய ஆர்வம் உண்டு. பேசியும் இருக்கிறேன். முன்னர் கூறியவாறு ஒரு மனிதன் உருவாகுவதில் சுமார் 50% தான் பரம்பரைத் தாக்கம் செலுத்துகிறது. எஞ்சிய 50% உம் சூழல் தாக்கத்தினாலேயே உருவாகிறது. அத்தோடு சுமார் 6 வயது வரையான காலப்பகுதி பயிற்றுவிப்புக்கு முக்கியம் மிக்கது. மேலும் அந்தக் குழந்தையின் தாய்க்கும் பாரிய பங்கு உண்டு.

மனவெழுச்சி என்று ஒரு விடயம் உள்ளது. அது ஒரு கட்டுப்பாட்டோடு இருப்பது அத்தியாவசியமானது. அவ்வகையில் தாயிடத்தில் காருண்யம், ஏனையோரை மதித்தல் என ஒவ்வொரு விழுமியமும் வளர்ந்து செல்ல வேண்டும். அது குழந்தையில் பாரிய தாக்கத்தை செலுத்தவல்லது.

நாம் எல்லோரும் அறிந்ததொரு சம்பவம் தான். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடத்தில் ஒரு பெண்மணி வருகை தந்து தனது பிள்ளை வணக்க வழிபாடுகளில் சிறப்பாக இருப்பதாகவும் என்றாலும் அது திருடுகிறது என்ற கவலையை அப்பெண்மணி முன்வைக்கிறாள். அதற்கு இமாம் ஷாபிஈ அவர்கள் அப்பெண்ணிடம் “இக்குழந்தை வயிற்றில் இருக்கும் போது நீங்கள் ஏதும் தவறு செய்துள்ளீர்களா?” என வினவுகிறார்கள். அதற்கு அப்பெண் சிறிது சிந்தித்து விட்டு “ஆம். எமது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் விளையும் மாங்கனிகளை ஆசையின் காரணமாக அனுமதியின்றிப் பறித்துச் சாப்பிட்டுவிடுவேன்” எனப் பதிலளித்தாள்.

இதன் மூலம் இமாம் ஷாபிஈ அவர்கள் தாயின் நடத்தைகள் கருவறை வரைக்கும் தாக்கம் செலுத்தும் என்பதனை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். எனவே தான் கருவறையிலேயே கல்வி துவங்கிவிடுகிறது என்கிறார்கள்.

மேலும் ஒருவர் தனது வயதையொத்தவர்களுடன் பழகுவதே அவரது உள்ளமும் அதற்கேற்றது போல் வளர்வதில் தாக்கம் செலுத்தும். தன் வயதை விடப் பெரிய வயதுடையவர்கள் அல்லது குறைவான வயதுடையவர்களுடன் பழகுவதால் விளையும் கோளாறுகளை நாம் கண்டுவருகிறோம்.

பயணம்:
மேலும் கூற விரும்பும் ஏதாவது…

ஸனூஸ் ஆசிரியர்:
நாம் தற்போது கல்வியறிவு உச்சத்தை அடைந்த காலத்தில் இருக்கிறோம். எனினும் தொழில்நுட்ப அறிவுப் பகுதிகளிலே முன்னேற்றமடைந்த அளவுக்கு விழுமியப் பகுதியில் முன்செல்லவில்லை என்பதைக் காண்கிறோம். விழுமியம் மிகப் பிரதானமானது.

மேலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பேதம் பிரிக்காது நிறையக் கற்க வேண்டும். கல்வியறிவை விட்டும் தூரமாகியதால் மியன்மாரின் ரோஹிங்கிய மக்களுக்கு ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்டோம். எமக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் பாதுகாக்கப்பட அறிவாயுதம் முக்கியமானது.

சந்திப்பு: ஷெய்க் இக்ராம் நஸீர் (நளீமி), ஷெய்க் எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)

நன்றி: பயணம் சஞ்சிகை

தன் மாணவர்களுக்காகத் தினமும் பிரார்த்திக்கும் ஓர் ஆசிரியர்…

sssssss

இம்முறை பயணம் சஞ்சிகையின் ஸுஹ்பா ஸாலிஹா பக்கத்துக்கான சான்றோர் சந்திப்பாக திஹாரிய அல்அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் அதிபர் M.H.M. தவ்ஃபீக் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். பழகுவதற்கு இனிமையான, மிகுந்த மென்மையான மனிதரான அவர்கள் பேட்டியைப் பற்றிச் சொன்னதும் இஃக்லாஸ் குன்றிவிடக்கூடாது, பெருமை போன்றன வந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் சற்றுத் தயங்கினார். எனினும் அவரது நல்லனுபவங்களும் பண்புகளும் சமூகத்தைச் சென்றடைந்து அனைவரும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் நம்மோடு நிறைய விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். மஃங்ரிப் தொழுகைக்குப் பின்னரான அமைதியான மாலைப் பொழுதொன்றில் அவரோடு உரையாடியவற்றை இங்கு நம் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

ஏனையோருக்கு முன்மாதிரியான இந்த ஆசிரியர் அவர்களது விஷேடமான பண்பு ஒன்றினை இப்பேட்டியில் நாம் கட்டாயம் அறிமுகப்படுத்தித் தான் ஆக வேண்டும். தனக்கு நெருக்கமானவர்களுக்கென தன் தஹஜ்ஜத் உடைய நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் கூறி பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர் இந்த ஆசான் அவர்கள். அதற்காக விஷேடமாக கொப்பியொன்றினையும் வைத்து அதிலே தான் துஆ கேட்க வேண்டியவர்களின் பெயர்களையும் நீண்ட பட்டியலாக ஆசிரியர் அவர்கள் எழுதி வைத்திருந்ததைக் கண்டதும் மனத்துக்கு நிறைவைத் தரக் கூடிய ஒருவரை வாழ்வில் சந்தித்துவிட்டோமே என்ற உணர்வு ஏற்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்… புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

 

உங்களை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்?

நான் 1944 ஜனவரி 16 இல் திஹாரியில் பிறந்தேன்… எனது உம்மா, வாப்பா எல்லோரும் திஹாரிய பூர்வீகம்தான். ஒன்பது பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் நான் இரண்டாவது பிள்ளை, ஒரு மூத்த சகோதரியும் இளையவர்களாக நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உள்ளனர்.

கல்வியை முழுதுமாக திஹாரியிலேயே கற்றேன். இடையில் தர்கா நகர் அல்ஹம்ரா மற்றும் கம்பளை ஸாஹிரா போன்ற கல்லூரிகளில் ஏழாம், எட்டாம் வகுப்புகள் கற்கும் போது எனது தந்தையார் சேர்த்துவிட்டார். எனினும் இரு கல்லூரிகளிலுமே என்னால் தொடர்ந்து கற்க முடியாது போய்விட்டது. காரணம் என்னால் வீட்டைப் பிரிந்து இருக்க முடியவில்லை. நான் அங்கே விடுதியில் வீட்டு யோசனையில் அழுதுகொண்டிருப்பேன். இதனால் இரு பாடசாலைகளிலும் குறுகிய காலமே கல்வி கற்றேன். பின்பு திஹாரிக்குத் திரும்பி வந்து தொடர்ந்து கற்று க.பொ.த.சா/தரம், உ/தரம் ஆகிய பரீட்சைகளையும் இங்கேயே எழுதினேன்.

பின்னர் 1964 இல் ஆசிரியர் சேவைக்காக நாடாத்தப்பட்ட விஷேட பரீட்சையொன்றை எழுதி அதே ஆண்டில் ஆசிரிய நியமனம் பெற்றுக் கொண்டு அல்அஸ்ஹரிலேயே ஆசிரியராக இணைந்துகொண்டேன். அப்போது அது மாணவ ஆசிரியர் என அழைக்கப்பட்டது. அந்நேரம் நான் வெகு சிறு வயதினராக இருந்தோம். அந்நேரம் எம்மைப் பார்த்த ஆசிரியர்கள் ‘ஸ்கூல் பொடியன் ஒன்டு வார மாதிரி இருக்குது’ என நகைச்சுவையாகக் கூறுவர்.

எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்து இரு வருடங்களிலேயே (1966ம் ஆண்டு) எனது தந்தையார் வஃபாத்தாகி விட்டார். அதன் பின்பு மூத்த ஆண் பிள்ளை என்ற வகையில் நான் குடும்பச் சுமையைப் பொறுப்பேற்க வேண்டி வந்தது.

அப்போது எனது கடைசித் தங்கைக்கு வயது ஐந்தரை இருக்கும். அன்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது; எமது வாப்பாவின் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுத் திரும்புகையில் என் தங்கை என்னைப் பார்த்து ‘இனி நான் உங்களைத் தான் வாப்பா என அழைப்பேன்.’ எனக் கூறினார். அது எனக்கு என் பொறுப்பை நன்றாக உணர்த்தியது.

பின்பு 1970/71 களில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சிகளைப் பெற்றேன். அப்போது பயிலுனர்களுக்குத் தரப்படும் 225.00 ரூபாய் சம்பளத்தில் பெரும்பகுதியை மிச்சம் பிடித்து வீட்டுக்கே அனுப்பிவிடுவேன். குடும்ப உறுப்பினர் அனைவரும் அதிலேயே தங்கி வாழ்ந்தனர்.

நான் திருமணம் செய்தது குருணாகல் மாவட்டம், தெலியாகொன்னயில்… எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இருவர் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் இருவர். மூத்த மகன் இப்போது திஹாரிய அல்அஸ்ஹரில் அதிபராக இருக்கிறார்.

 

அதன் பின்னர் ஆசிரியர் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டீர்கள்?

ஆசிரியர் பயிற்சியின் பின்பு எமது கம்பஹா மாவட்டத்திலேயே நியமனம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்தேன். எனினும் நியமனம் அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் இருந்த உல்லை பகுதியில்தான் கிடைத்தது. அங்கு அக்காலம் பேருந்து வசதியும் இருக்கவில்லை. இருந்த ஒரு பேருந்தைத் தவறவிட்டால் விவசாயத்துக்குச் செல்லும் ட்ரக்டர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அங்கிருந்த பாடசாலைக்கு சீருடையல்லாமல் ‘சேலை’ அணிந்து வந்த மாணவிகளும் அன்று இருந்தனர். அந்தளவு பின்தங்கிய பிரதேசமாக அது காணப்பட்டது.

பின்பு குளியாப்பிட்டி, மல்வானை என பல இடமாற்றங்களுக்குப் பின்பு 1977இல் திஹாரிய பாடசாலையில் நியமனம் பெற்றேன். இறுதியாக 1996 இலிருந்து 2003ம் ஆண்டில் ஓய்வுபெறும் வரையில் அங்கேயே கற்பித்தல் பணிகளைப் புரிந்துவந்தேன்.

அல்அஸ்ஹரிலே ஆரம்பத்தில் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாகவும் பின்னர் அதிபராகவும் சேவையாற்றினேன். அல்அஸ்ஹரிலே ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த போது ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. அப்போது மிகக் குறைவான சம்பளத்தில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தோரது தியாகங்களைக் கட்டாயம் நினைவுபடுத்த வேண்டும்.

அப்போது இடைவிடாமல் கற்பிக்க வேண்டியிருந்தது. ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் அந்தந்த வகுப்புக்களுக்கும் சென்று கற்பிப்பேன். பல சந்தர்ப்பங்களில் காலை உணவைக் கூட சாப்பிட நேரம் கிடைக்காது அவற்றை மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிடுவேன். இதனால் வீட்டில் என்னைக் கடிந்துகொள்வார்கள்.

 

மாணவர்களுடனான உங்களது அந்யோன்னியம் எவ்வாறு அமைந்தது?

மாணவர்கள் எமக்கான பொறுப்புக்கள். நாம் பணத்தை முதலிட்டு ஹலாலான இலாபத்தை உழைப்பது போல ஆசிரியர்களான எமக்கு முதலீடுகள் மாணவர்கள்தான். அவ்வகையில் நாம் உருவாக்கும் மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினால்தான் எமது வருமானமும் ஹலாலானதாக அமையும். அவ்வாறல்லாமல் இருக்கும் போது எமது வருமானமும் கூடாததாகிவிடும். எனவே இந்த அமானிதத்தைப் பேணி நடந்துகொள்ளவேண்டும்.

எம்மிடம் கற்றலுக்காக வரும் மாணவர்கள் பல சூழல்களிலிருந்தும், பல்வேறுபட்ட பிரச்சினைகளோடும் தான் வருகின்றனர். நாம் ஒரு வியாபாரம் செய்வோமாயின் சிறந்த திட்டமிடல்களோடு செய்வோம். உற்பத்தித் தொழிற்சாலையொன்று வைத்திருப்போமாயின் அதிகபட்ச முயற்சியெடுத்து பூரணமான உற்பத்திகளைக் கொடுக்க முயற்சிப்போம். அவ்வகையில் எமது மாணவர்களைப் பூரணமாக உருவாக்க வேண்டுமாயின் மாணவர்களின் நிறை, குறைகள், பிரச்சினைகள்… என எல்லாவற்றையும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு பூரண ஆளுமை மிக்க கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களை உருவாக்கிட இயலும்.

பிள்ளைகள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் குறும்புத்தனமானவர்கள்தான். எனினும் நாம் அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளவேண்டும். எனக்குத் தெரிந்து பல உதாரணங்கள் இருக்கின்றன. மாணவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் கல்வியைக் கைவிட்ட சம்பவங்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பது மாத்திரம் போதாது. அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பதிலும் அவர்களது விருத்தியைக் குறித்து சிந்திப்பதிலும் கட்டாயம் ஈடுபட வேண்டும். (தான் துஆ கேட்கும் மாணவர்களின் நீண்ட பட்டியலொன்றைச் சொல்கிறார்.)

 

நீங்கள் உங்களது மாணவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் தஹஜ்ஜத்திலே அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது குறித்து சொல்லுங்கள்… அவ்வாறு துஆ கேட்கும் பழக்கம் எவ்வாறு ஏற்பட்டது?

அது உண்மையிலேயே தானாகவே ஏற்பட்ட பழக்கமொன்றுதான். தஹஜ்ஜத் தொழுதுவிட்டு நான் அவர்களுக்காக துஆ கேட்பேன். அவர்களுக்காக பட்டியலொன்றைத் தயார் செய்து எழுதிவைத்திருக்கிறேன். அவர்களது பெயர்களைக் கூறி  அல்லாஹ்விடம் அவர்களுக்காக இறைஞ்சுவேன்.

இப்பட்டியலில் 50-60 வயது தாண்டிய பெரியவர்களில் இருந்து 2-3 வயது குழந்தைகள் வரையும் இருக்கின்றனர்.

(பட்டியலில் 270 க்கும் மேற்பட்ட சகோதரர்களுக்காக ஆசிரியர் அவர்கள் துஆ கேட்பதை அறிய முடிந்தது. எவரது பெயரையும் கூற வேண்டாமென அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். பட்டியலில் சகல பருவ வயதுகளையும் உடையவர்கள் இருந்தனர். இத்தனை வயதிலும் ஒரு நீண்ட பெயர்ப்பட்டியலைத் துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பது உண்மையில் அல்லாஹ்வின் அருளாகவே இருக்கும்.)

2009 அளவில் இருந்துதான் நான் இந்த பழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறேன். அவர்களது பிரச்சினைகள், தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பவற்றுக்காக நான் பிரார்த்திக்கிறேன். சிலர் இப்போது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களாது ஆசிரியர்களுக்குத் தெரியாத பிரச்சினைகளைக் கூட என்னிடம் கூறி ஆறுதலும் பிரார்த்தனையும் வேண்டுபவர்களாக இருக்கின்றனர்.

இது மட்டுமன்றி அல்அஸ்ஹர் பாடசாலை மற்றும் ஃபாதிஹ் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்காகவும் அதன் ஆசிரியர்களுக்காகவும் அதன் கல்வி விருத்திக்காகவும் தஹஜ்ஜத்திலே துஆ கேட்பேன். எனது ஆசிரியர்களையும் எனது துஆக்களில் இணைத்துக் கொள்ள மறப்பதில்லை.

 

இறுதியாகக் கூற விரும்பும் ஏதாவது

பள்ளிவாசலுடனான எமது அன்றாட கொடுக்கல்-வாங்கல்கள் தொழுவதுடனும், பிள்ளைகளை மாலையில் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதோடும், மௌலவிக்கும் முஅத்தினாருக்கும் உணவு கொடுப்பதோடும் முடிந்துவிடுகின்றது. ஆனால் அவ்வாறல்ல முழு சமூகமும் மாறுவதற்கான தளமாக பள்ளிவாசல்கள் இருக்க வேண்டும். ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களது காலத்தில் அவ்வாறுதானே இருந்தது.

ஒரு புறம் நல்ல காரியங்கள் பரவலாகி வந்தாலும் சமூகத்தில் இன்னொரு பக்கம் வீழ்ச்சியும் சீர்கேடுகளும் பரவிக் கொண்டுவருவதையும் அவதானிக்கிறோம். இவற்றையும் இல்லாமல் செய்வதற்கு எமது புத்திஜீவிகள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்.

 

 

இப்லால் ஆசிரியரோடு சில பொழுதுகள்

image-b12860b855c0440e3a03a830873eca31c1aefcfcba26a033a624105647ccc643-V

1944ம் ஆண்டு பிறந்த இஃப்லால் ஆசிரியர் அவர்களது சொந்த ஊர் மாத்தறை மாவட்டத்தில் வெலிகாமம். ஆரம்பத்தில் கப்புவத்தை முஸ்லிம் பாடசாலையில் (தற்போதைய அந்நூர் பாடசாலை) கல்விகற்று பின்னர் சாதாரணதரக் கல்வியை தர்கா நகர் அல்ஹம்ராவிலும் உயர்தரக் கல்வியை வெலிகம அறபா மத்திய கல்லூரியிலும் கற்றார். பட்டப் படிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். பின்பு சிறிது காலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிவிட்டு பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் 1979-1996 வரை விரிவுரையாளராகக் கடமையாற்றினார். கல்வி வாழ்க்கைக்குப் பின்பு சொந்த வியாபாரம் ஆரம்பித்து இன்று பிள்ளைகளுக்கு அவற்றை ஒப்படைத்து விட்டு ஓய்வும் சமூகப் பணிகளுமென தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

சமூகத்தின் உயர் கல்வி நிலைகள் தொடர்பான பல்வேறு ஆதங்கங்களைச் சுமந்துகொண்டு அவற்றை சமூகத்துக்கு எத்திவைக்க வேண்டுமென்றிருந்த அவரிடம், பேட்டியின் நோக்கங்களைக் கூறியதும் தெளிவான பதில்களை நம் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் வழங்கினார்.

 

உங்கள் சிந்தனைப் பின்புலம் பற்றிய சிறு அறிமுகத்தை எங்களது வாசகர்களுக்கு வழங்குங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் சொந்த ஊரிலேயே கல்வி கற்றாலும் தர்கா நகர் அல்ஹம்ரா பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சை வரை கல்வியைத் தொடர்ந்தேன். அக்காலப் பகுதியில் இப்போதைய ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி போன்றோருடன் அறிமுகம் கிடைத்தது. அது பின் நாளில் ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வி வளர்ச்சியை திட்டமிட்டு உருவாக்குவதிலும் பாரிய பங்கு வகித்தது. எமது சீனியரான கலாநிதி சுக்ரி போன்றவர்கள் அன்று ஏற்பாடு செய்து வழங்கும் இஸ்லாமிய மஜ்லிஸ்கள் பெரும் பயனுடையனவாக இருந்தன.

கல்வி பெறுவதைப் பொறுத்த வரையில் வாழ்வில் கற்றுக் கொள்ள முடிந்த சகல கலைகளையும் கற்றேன். துறைகள் வாரியாக பலவற்றைக் கற்றுக் கொண்டேன். எனது அடிப்படைத் துறையான புவியியல் துறையை விடுத்து கவிதை, இலக்கியப் பகுதிகள், இஸ்லாமிய பகுதிகள், விஞ்ஞானம், வானியல், வரலாறு… எனப் பல பகுதிகளில் பரிச்சயம் உண்டு. ஒவ்வொரு துறையிலும் முடிந்தளவு ஆழமாகக் கற்றிருக்கிறேன். அதனால் எதனையும் புறக்கணிக்காது ரசித்துப் போகும் தன்மையும் ஆர்வமும் என்னிடம் இருக்கிறது. என்னால் கவிதைகளையும் ரசிக்க முடியும்; வீட்டுத் தோட்டம் கூட செய்து வருகிறேன்.

1976இல் திருமணம் செய்தேன். அதன் பின்பும் கூட கற்றலுக்கும் தேடலுக்குமான வாய்ப்புக்களைத் தொடர்ந்தும் ஏற்படுத்தி வந்தேன். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா செய்த போது எனது மனைவியையும் மொண்டிசூரி சிறுவர் கல்வி சம்பந்தமான கற்கைகளில் ஈடுபடுத்தினேன். பின்னர் அவராகவே ஒரு சிறுவர் பள்ளியை ஆரம்பித்து இன்று இருபத்தைந்து வருடங்கள் கடந்தும் அதனை நடத்தி வருகின்றார். நான் முடிந்த அளவு அவருக்கு உதவியாக இருந்து வருகின்றேன்.

 

உங்களது மாணவர்களை நீங்கள் உருவாக்கிய அனுபவங்கள் எப்படி? அவர்களை இன்று காணும் போது உங்களது உணர்வுகள் எவ்வாறு அமைகின்றன?

உண்மையில் அது மிக சந்தோசம் தரும்  அனுபவம். பாடசாலைக் காலங்களில் நான் இளவட்டங்களோடே இருந்தேன். பல்கலைக்கழகத்திலும் இளைஞர்களோடே பல பயனுள்ள வேலைகளில் ஈடுபட்டேன். பின் பல்கலைக்கழக விரிவுரையாளரான போதும் இளைஞர்களோடேயே இருந்து அவர்களை நெறிப்படுத்தக் கிடைத்தது.

பின்னர் அந்த அனுபவங்கள் அனைத்தையும் நளீமிய்யாவை அதன் ஆரம்ப காலத்தில் உருவாக்கும் பணியில் பயனைத் தந்தன. நளீமிய்யாவுக்கான கலாசாரம் ஒன்றை வடித்தெடுப்பதில் அவை உறுதுணையாக இருந்தது. அன்று மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக நாம் சிறு சிறு விடயங்களில் கூட கரிசனையோடு இருந்தோம். உதாரணத்திற்கு அவர்களது சட்டைப் பொத்தான்களைக் கூட எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தோடும் இருந்தோம். சிலர் எதிர்த்தார்கள், எனினும் இன்று அவர்கள் கோட் சூட் என்று நாம் சொன்ன பொத்தானுக்கும் மேலால் கழுத்துப் பட்டியும் அணிந்து (நகைச்சுவையோடு கூறுகிறார்) உயர் தொழில்களிலும் முக்கிய சமூகப் பொறுப்புக்களிலும் ஈடுபட்டு வருவதைக் காணும் பொழுது மகிழ்ச்சி மேலிடுகிறது.

உண்மையில் கற்பித்தல் என்பது ஒரு ஸதகா அதனை நாம் உளப்பூர்வமாகச் செய்யவேண்டும். வாழ்க்கைத் தேவைகள் அதிகரிக்கும் போது அதற்கேற்ப பேரம் பேசி கல்வியை வியாபாரமாக்கும் நிலைக்குப் போகக் கூடாது. அவ்வாறான மனநிலையுடன் நான் இருந்தேன். அதனாலேயே வாழ்க்கைத் தேவைகள் அதிகரித்த போது கற்பித்தலைக் கைவிட்டு வியாபாரத் துறைக்குள் நுழைய வேண்டியதாயிற்று.

எனினும் நளீமிய்யாவிலிருந்து வெளிவாரியாக உதவுவதற்கு அன்று நளீம் ஹாஜியாரிடம் உறுதிபூண்டிருந்தேன். அத்தோடு கற்பித்தலிலிருந்து நின்றுவிட்ட போதிலும் அறிவுச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

 

அவ்வாறான அறிவு, தஃவா செயற்பாடுகள் பற்றி

ஆம். குறிப்பாக வானியல் தொடர்பான ஆய்வுகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன். வானியல் தொடர்பான குறிப்புக்களையும் அனுபவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவிலும் அங்கம் வகிக்கிறேன். மேலும் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடனும் நீண்ட காலத் தொடர்பு இருக்கின்றது. சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களும் பிறை விவகாரம் தொடர்பான வழிகாட்டல்களை நாடி வந்திருக்கின்றனர்.

முன்பொரு காலம் இருந்தது; அ.இ.ஜ.உ. மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை விவகாரங்களில் முற்று முழுதாக வளிமண்டலவியல் திணைக்களத்திலேயே தங்கியிருந்தது. பிறையின் இஸ்லாமிய, விஞ்ஞான பரிமாணங்களை அறிந்திருந்தோம் என்ற வகையில் நாம் அவ்விவகாரத்தில் ஈடுபட்டோம்.

பிறையின் திசை, இடம், கோணம்,கால அளவு போன்ற அறிவியல் பகுதிகள் அன்றைய மௌலவிமார்களை அடைந்திருக்கவில்லை. பூமி உருண்டை வடிவுடையது; அவ்வகையில் கோணத் தொடர்புகள் முக்கியமானவை. இத்தகைய அறிவுகளோடு அணுகும் போதுதான் மிகச் சரியாகப் பிறையைக் கண்டடைய முடியும்.

நாம் இதுதொடர்பான அறிவுகளைப் பெற்றிருந்த போதும், அக்கால உலமாக்களை விட வேறுபட்ட சிந்தனைப் போக்கில் நாம் இருந்தோம். எனினும் எம் கருத்தை ஏற்று எம்மை அங்கீகரிக்கும் நிலையில் அவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்பாடுகள் மிக்க அன்றைய சூழலில் இதுவொரு அரிதான நிகழ்வாகும்.

வானியல் தொடர்பான ஆய்வுகள் காரணமாக சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டிக்கான அமைப்பு (International Islamic Calendar Society) நடாத்திய மலேசிய சர்வதேச மாநாட்டிலும் பங்குகொண்டிருக்கிறேன்.

இவ்வகையில் அறிவைப் பரவலாக எடுத்துக் கொள்வது பல வகைகளில் சமூகத்துக்குப் பங்களிக்க உதவும். வாழ்க்கை அநியாயமாகப் போகாது. அறிவோடு தொடர்பாக இருக்கும் போது தான் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. வயது செல்லச் செல்ல எம்மை சமநிலைப்படுத்தி நிதானத்தோடு இருக்க முடிவது அப்போதுதான். நான் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற போதும் என் தொடர்ந்தேர்ச்சியான அறிவுத் தேடல்கள் என்னை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க உதவுகின்றது.

 

உங்களில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள்சம்பவங்கள்நிகழ்வுகளை எங்கள் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளலாமே

அறிஞர்கள், தாக்கம் செலுத்திய ஆளுமைகளுள் அறிஞர் தாஸிம் நத்வி அவர்கள் மிக முக்கியமானவர். நளீமிய்யாவின் முதல் அதிபராக இருந்த அன்னவர்களது ஒவ்வொரு அசைவும் என்னில் தாக்கம் செலுத்தியது எனலாம். நளீமிய்யாவுக்காக ஏராளம் தியாகம் செய்தவர் தாஸிம் நத்வி; நம்மால் நினைக்க முடியாத தியாகங்களையும் செய்தவர்.

தாஸிம் நத்வி தனிப்பட்ட வாழ்விலும், அறிவு வாழ்விலும் நீதம் நிரம்பியவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த அன்றாட உதாரணங்கள் சிலதைக் கூறுகிறேன். நாம் நளீமிய்யாவில் இருக்கும் போது ஒவ்வொரு நாள் மாலையிலும் எமக்காக டீ ஊற்றிக் கொண்டு வருவார். அப்போது நாம் ஆசிரியர்கள் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றாகக் கதைத்துக் கொண்டிருப்போம். அப்போது ஊற்றிய டீயை கோப்பைகளில் ஊற்றுவார். அதன் போது நீண்ட நேரமும் கவனமும் அதற்கென எடுத்துக் கொள்வார். மிகச் சமமான அளவில் டீ எல்லொருக்கும் ஊற்றப்பட்டிருக்கிறதா எனக் கவனத்துடன் அவதானித்து விட்டுத்தான் பரிமாறுவார்.

நளீமிய்யாவிலிருக்கும் சாதாரண கல்விசாரா தொழிலாளிகளோடும் அன்போடு பேசிப் பழகுவார். ஏதும் தவறுகள் தொடர்பாக யாரும், ஏனையோர் பற்றி முறைப்பட்டால் முதலில் அது ஞாபக மறதியாகவோ அல்லது வேறு ஒரு நோக்கத்திலோ தான் அவ்வாரு இடம்பெற்றிருக்கும் என்ற கோணத்திலேயே அதனை அணுகுவார். இவ்வாறு அவரிடம் பல அற்புத குணாதிசயங்களை அவரிடம் கற்றிருக்கிறேன்.

இவ்வாறுதான் மஸ்ஊத் ஆலிம் அவர்களும் என்னில் தாக்கம் செலுத்திய முக்கிய ஆளுமை. என்னைப் பொறுத்தமட்டில் நான் ஒவ்வொரு விடயத்திலும் எனக்கான பாடம் என்ன என்பது குறித்து யோசிப்பேன். ஒரு நபரோ அல்லது நிகழ்வோ நடந்தால் அது எனக்கு தரும் பாடத்தை நிச்சயம் பெற்றுக்கொள்வேன்.

 

அக்கால மாணவர்கள் மற்றும் இன்றைய மாணவர்களின் கல்வி தேடலில் எத்தகைய மாற்றங்களை உணர்கிறீர்கள்.

இன்று விரிவான தேடல் மானவர்களுக்கு அவசியம் தேவை. அதர்கான வாய்ப்புக்களும் நிறைந்திருக்கின்றன. அறிவு பெறுவதற்கான வாய்ப்புக்கள் நவீனமடைந்திருப்பது போலவே பன்முகப்பட்டும் இருக்கின்றது.

முன்னர் சிங்களப் பெற்றோர் இருந்தது போன்றே இன்று முஸ்லிம் பெற்றோரும் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் ஆசிரியருடன் பிள்ளைகளின் கல்வியில் பற்றி விசாரிக்கின்றனர். கல்வியிலும் கல்விச் சூழலிலும் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அறிவு நிறைந்த அளவிற்கு அறிவின் பயன் நிறைந்து விடவில்லை. அதனால் பல பாதகமான விளைவுகளை நாம் காண்கிறோம். அவற்றை நாம் மாற்ற வேண்டும்.

 

உங்களது நாளாந்த செயற்பாடுகள் பற்றி

ஓவ்வொரு நாளும் ஏன் கைத் தொலைபேசியில் 3.45 அலாரம் வைத்து எழும்பி விடுகிறேன். காலையிலேயே ஒரு ஸதகாவோடு வேலைகளை ஆரம்பிக்க விரும்பி… வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸதகாவாக ஒரு கோப்பியை ஊற்றிக் கொடுத்து விடுகிறேன்… அதுவொரு பத்து நிமிட வேலை. இலகுவாக நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது. ஸுபஹ்க்கு பின் ஸலவாத், அவ்ராத்களொடு தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கத்தை வாசித்துவிட்டு மனைவியுடனும் அது பற்றிக் கருத்துப் பரிமாரிக் கொள்வேன்.

6.30 க்கு எல்லாம் பத்திரிகை செய்திகள் வாசிப்பேன். பின்னர் நடைப்பயிற்சி… தோட்டம் சுத்தப்படுத்தல், தோட்ட வேலைகள்… நூல்கள் வாசித்தல்.. பிற்பகலானதும் பேரப்பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்…. பிற்பகலில் கொஞ்சம் தூக்கம்… இரவில் மீண்டும் குர்ஆன் ஓதல்… என ஒவ்வொரு நாளும் செல்கிறது.

இடைக்கிடை வியாபார விடயங்களைக் கவனித்தல், முஸ்லிம் உயர்கல்வி விவகாரங்களிலும் ஈடுபாடு காட்டுகிறேன். கட்டாயம் இரவு 9.30 செய்திகள் பார்த்துவிட்டுத்தான் உடன் படுக்கைக்கு செல்வேன். நான் நாளாந்தம் உலக நிகழ்வுகளை அவதானித்து உலகத்தோடு ஒன்றியிருக்க விரும்புகிறேன்.

 

இறுதியாக கூறிவைக்க விரும்பும் விடயம்...

நான் அடிக்கடி கூறும் விடயம் இதுதான். அறிவுப் பகுதியில் முன்னோக்கிச் செல்வோர் மார்க்கப் பணியில் பின்தங்கி விடுகின்றனர்… இங்கு நாம் எம் அடிப்படைப் பணியை மறந்துவிட்டிருக்கின்றோம். இதற்கு தீர்வு எம்மிடம்தான் இருக்கின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுமளவு செல்வம் எம்மிடம் இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பது போதுமானது. அவ்வாறிருப்பின் தான் தஃவா வெற்றிகரமாகும்.

அன்றாடம் பிழைக்கும் அளவு வருமானம் இருப்போரால் வெற்றிகரமான தஃவாவை மேற்கொள்ள முடியாது. வாழ்வில் அதற்கான திட்டமிடல் இருக்கவேண்டும். தஃவா என்பது பிறருக்கு அறிவூட்டல் மட்டும் அல்ல. பல்வேறு வழிகாட்டல்களை உள்ளடக்கியது அது.

மத்ரஸாக்களை இலக்கு வைத்து எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. சிந்தனை மாற்றத்துக்காக பல்வேறு முயற்சிகள் வேண்டும். சமூகத்தின் பல்வேறு முகாம்களுக்கும் இடையில் நெருக்கம் வேண்டியிருக்கிறது. பல்வேறு மட்டங்களுக்கும் கீழிறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.

ஒன்றிணைவு என்பது எல்லாத் தரப்பிலும் அவசியத் தேவை… அது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… வீட்டுச் சூழலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற சூழல் வருமாயின் அது நிச்சயம் சமூகத்திலும் தாக்கம் செலுத்தும்.

மார்க்கத்தைப் படித்தவர்கள் குர்ஆனின் அறிவை எங்கும் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் இது கொழும்போடு மாத்திரம் சுருங்கி விடுகிறது. தலைநகரில் ஆங்காங்கே சில வகுப்புக்கள் நடக்கின்றன. எம் நாட்டின்  குக்கிராமங்களுக்கு இது எப்போது செல்லப் போகிறது?

எம் வீட்டில் வேலை செய்த இஸ்லாமைத் தழுவிய பெண்ணுக்கு அவள் விலகிச் செல்லும் போது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை அன்பளிப்பாக கொடுத்தேன். சிறிது காலத்தில் அவள் ஒரு முறை எம்வீடு வந்த போது அதனைத் திருப்பி தந்துவிட்டு போய்விட்டாள். ஏன்? குறைந்தபட்ச அல்குர்ஆனிய அறிவு கூட இல்லாது போய்விட்டது. அதற்கான தேவை நாட்டின் மூலைமுடுக்க்கெங்கும் பரவிவிட்டிருக்கின்றது. நாம் உணராததாலேயே இப்பணியை மறந்துவிட்டிருக்கின்றோம்.

நன்றி: பயணம் ஸுஹ்பா ஸாலிஹா